கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2025
பார்வையிட்டோர்: 665 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7

இனி உறக்கம் வராது என்று நிச்ச யித்துக் கொண்ட பிறகு பிரகாஷ் படுக்கையை விட்டு எழுந்து கொண் டான். பதினொன்றரை ஆகியிருந் தது. மீட்டாபான் போட்டுக் கொள்ளணும் போல் தோன்றியது. செருப்பை மாட்டிக் கொண்டு கதவை அழுத்தி சாத்திவிட்டு வெளியே வந்தான். 

எப்போதும் செகண்ட் ஷோ வரையில் திறந்திருக்கும் பெட்டிக்கடை மூடியிருந்தது. சந்று நேரம் நடப்போம் என்று மெயின் ரோட் வரையில் சென்று மீட்டா பான் வாங்கிப் போட்டுக் கொண்டான். 

கார்னிவாலுக்கு போனால் என்ன? சட்டைப் பையில் பத்து ரூபாய் இருந்தது. அப்படியே நஷ்டம் வந்தாலும் பத்து ரூபாய்தானே. இந்த வாரம் முழுவதும் அதிர்ஷ்டம் தன் பக்கம் இருப்பது நேற்றே புரிந்து விட்டது. இந்த பத்து ரூபாயை வைத்து கொண்டே முப்பது ரூபாயை சம்பாதித்து விடலாம். 

உற்சாகத்துடன் கார்னிவால் பக்கம் போனான். விளக்குகளின் வெளிச்சம் கண்களைப் பறிப்பது போல் இருந்தது. உள்ளே போகும் போது கதவு அருகில் நின்று கொண்டிருந்த இஸ்மாயில் “வணக்கம் சார்” என்றான். 

பிரகாஷுக்கு காரணம் இல்லாமல் குற்ற உணர்வு ஏற்பட்டது. இஸ்மாயில் முகத்தை கூர்ந்து பார்த்தான். அனுபவங்களை கரைத்துக் குடித்திருக்கும் அந்த வயோதி கனின் முகத்தில் ஏதோ சொல்ல வேண்டும் என்ற தவிப்பை அடக்கி வைப்பது புரிந்தது. 

“ஹலோ சார். வாங்க… வாங்க. உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கிறேன். தாமதமாகி விட்டதே ஏன்?” என்ற குரல் கேட்டு அந்தப் பக்கம் பார்த்தான். 

அவனேதான். 

பிரகாஷ் முறுவலித்துவிட்டு “இன்னிக்கும் நான் வருவேன்னு எப்படி நினைச்சீங்க?” என்று கேட்டான். 

“இங்கே ஒருமுறை வந்தவர்கள் மறுபடியும் வராமல் இருப்பதாவது?” என்று சொல்லிக்கொண்டே முன்னால் நடந்தான். “வாங்க போகலாம். ஏற்கெனவே தாமதமாகி விட்டது.” 

யாரோ கன்னத்தில் அறை விட்டாற்போல் இருந்தது பிரகாஷுக்கு. 

கோபால் பின்னால் திரும்பினான். பிரகாஷ் அதே இடத்தில் நிற்பதை பார்த்துவிட்டு “வாங்க, ஏற்கெனவே நிறைய லாஸ் ஆகிவிட்டது” என்று வற்புறுத்தினான். 

பிரகாஷ் அவனுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான். 

“நூறு ரூபாய் வரையில் போய்விட்டது. இனி பிரயோஜனமில்லை என்று கிளம்பும்போது அதிர்ஷ்ட வசமாக நீங்க வந்தீங்க” என்றான். 

“என்னை நம்பி பணத்தை கட்டினால் ஏற்கெனவே போனது போறாது என்று இதுவும் போய் விடப் போகிறது” என்றான் பிரகாஷ். 

“உங்களுக்குத் தெரியாது. ராசியான கை உங்களு டையது. எந்த நிறத்தின் மீது பணம் கட்டணுமோ சொல்லுங்க. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.” 

இருவரும் போர்ட் அருகில் வந்தார்கள். 

“மேலும் யாராவது பந்தயம் கட்டப் போறீங்களா?- கல்லாவில் இருப்பவன் கத்திக் கொண்டிருந்தான். 

பிரகாஷ் ஐந்து ரூபாயை எடுத்து “மஞ்சள்” என்றான். கோபாலும் ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து மஞ்சள் நிறத்தின் மீது பந்தயம் கட்டினான், 

“ஐம்பது ரூபாயா?” 

“உங்க அதிர்ஷ்டத்தை பற்றி உங்களுக்கே தெரியாது. பார்த்துக்கிட்டே இருங்க. நாம் ஜெயிக்கப் போவது நிச்சயம்.”

“இருந்தாலும் இவ்வளவு பணம்…” பிரகாஷ் சொல்லிக் கொண்டிருந்தபோதே யாரோ அம்பை வீசினார்கள். 

அம்பு மஞ்சள் கட்டத்தில் போய்த் தைத்தது. நம்ப முடியாதவன் போல் பிரகாஷ் பார்த்துக் கொண்டே இருந்தான். “நான்தான் சொன்னேனே” என்பது போல் பார்த்தான் அவன். 

மூன்றாவது அம்பும் மஞ்சளில் தைத்தது. கோபால் பிரகாஷின் கையைப் பற்றி வேகமாக குலுக்கினான். “விட்டதை பிடித்து விட்டோம் சார். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்” மகிழ்ச்சி கலந்த குரலில் சொன்னான். 

பிரகாஷ் முறுவலித்து விட்டு பேசாமல் இருந்தான். உள்ளூற பெருமையாகத்தான் இருந்தது. 

பந்தயத்திற்கான பணம் கிடைத்துவிட்டது. அடுத்த ஆட்டம் தொடங்கவிருந்தது. 

“இந்த முறை எந்த நிறம்?” கோபால் கேட்டான்.

“வெள்ளை.” 

பணம் வசூல் செய்பவன் அருகில் வந்தான் கோபால் நூறு ரூபாயை எடுத்துக்கொடுத்து “வெள்ளை” என்றான். 

பிரகாஷ் பத்து ரூபாயை எடுத்து “இதுவும் வெள்ளை” என்று கொடுக்கப்போன போது கோபால் கையைப் பிடித்து தடுத்தான். “எத்தனை நாட்களுக்கு ஐந்து பத்து என்று ஆடுவீங்க? தம்பீ! இதில் ஐம்பது ரூபாயை அவர் பெயரில் போட்டுக் கொள்” என்றான். 

பிரகாஷ் ஏதோ சொல்லுவதற்குள் ஆட்டக்காரன் போய் விட்டாள். பிரகாஷ் பதட்டத்துடன் கோபால் பக்கம் திரும்பினான். 

“ஏதோ ஆபீஸில் வேலை செய்வதாக சொன்னீங்களே. எந்த ஆபீஸ்?” கோபால் முந்திக்கொண்டு கேட்டான். 

பிரகாஷ் ஆபீஸின் பெயர் சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. “நாளைக்குத்தான் சம்பளம் வந்து விடுமே” என்றான். தான் கொடுத்தது கடன்தான் என்ற தொனி அதில் வெளிப்பட்டது. 

முள் மீது நிற்பது போல் இருந்தது பிரகாஷுக்கு தொடர்ந்து அம்புகள் வீசப்பட்டன. முதல் இரண்டும் சிவப்பு நிறத்தில், மூன்றாவது கருப்பு கட்டத்தில். 

இரத்தம் சுண்டிவிட்டது போல் பிரகாஷின் முகம் வெளிறிவிட்டது. உள்ளங்கையில் வியர்த்துக் கொட்டியது. பார்த்துக் கொண்டிருந்த போதே ஐம்பது ரூபாய் கையை விட்டு போய்விட்டது. கோபால் முகத்தில் அவ்வளவு வருத்தம் தென்படவில்லை. 

“ஆட்டத்தில் இதெல்லாம் சகஜம்தான்” என்றான். 

ஆட்டக்காரன் அருகில் வந்தான். விட்டதை பிடிக்க வேண்டும் என்றால் மறுபடியும் ஆடத்தான் வேண்டும். வேறு வழியில்லை. 

பலவீனமான குரலில் “நீலம்” என்றான், பத்து ரூபாயை கொடுத்துவிட்டு. 

அம்புகள் வீசப்பட்டன. மூன்றாவது அம்பு நீலத்தில் தைத்தது. பிரகாஷ் முகத்தில் கொஞ்சம் களை திரும்பியது. மறுபடியும் நம்பிக்கை வந்தது. 

ஆட்டக்காரன் இருபது ரூபாயைக் கொடுத்தான். இந்த முறை கருப்பு நிறத்தின் மீது கட்டினான். உள்ளதும் போய்விட்டது. மறுபடியும் மஞ்சள். இருபது ரூபாய் வரவு. 

சரியாக அரை மணி நேரம் கழித்து சட்டைப் பையைத் தடவிய போது இருவரிடமும் எதுவும் இல்லை. கணக்கு பார்த்த போது பிரகாஷ் கோபாலுக்கு முன்னூறு ரூபாய் தர வேண்டும் என்று தெரிந்தது. பிரகாஷ் வாங்கும் சம்பளத்தில் கணிசமான தொகை அது. தாராளமாக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி யிருக்கலாம். 

நெற்றி மீது படிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான். பின்னால் திரும்பிப் பார்த்த போது எல்லோரும் மேஜை சுற்றிலும் சூழ்ந்திருப்பது தென்பட்டது. இங்கே தொலைத்ததை சம்பாதிக்க வேறு வழியைத் தேடிக்கொள்வார்களாய் இருக்கும். பேப்பரை மேலிடத்திற்கு அனுப்புவதற்கு குமாஸ்தா லஞ்சம் வாங்கு வான். பியூன் ஆக இருப்பவன் இனாம் என்ற பெயரில் கையை நீட்டுவான். நேர்மையாக வேலை செய்பவனுக்கு மதிப்பு இருக்காது. 

பிரகாஷ் மெயின் ரோட்டுக்கு வந்தான். சுரண்டல் லாட்டரி கடை அருகில் மக்கள் கூடியிருந்தார்கள். இந்த நாட்டின் சராசரி மனிதர்கள். 


பொலபொலவென்று விடியும் போது சீதாவுக்கு விழிப்பு வந்தது. எழுந்ததுமே பாக்கெட் கண்ணில் பட்டது. ஆர்வத்துடன் பிரித்துப் பார்த்தாள். வெள்ளை நிற ஷிஃபான் புடவை. ஒரு நிமிடம் அவளுக்கு எதுவும் புரிய வில்லை. அதை அப்படியே எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள். பிரகாஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இரவு ரொம்ப நேரம் கழித்து வந்திருக்கிறான் என்றும், யாரை யும் எழுப்பவில்லை என்றும் புரிந்து கொண்டாள். புடவையை அவன் தான் வாங்கி வந்திருக்கிறான். திடீ ரென்று அவள் மனம் முழுவதும் உற்சாகம் பரவியது. வேகமாக அறையை விட்டு வெளியே வந்தாள். வேலைக் காரி வந்ததும் பாத்திரங்களை தேய்க்கப் போட்டு விட்டு தலைக்குக் குளித்து விட்டு வந்தாள். புதுப் புடவையை நேர்த்தியாக உடுத்திக் கொண்டு தளர்வாக ஒற்றைப் பின்னலை போட்டுக் கொண்டாள். சினிமா பாட்டை முணுமுணுத்துக் கொண்டே மையை இட்டுக் கொண் டாள். பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. மறு படியும் பிரகாஷின் அறைக்கு வந்தாள். அவன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அப்படியே பார்த் துக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் கூட ஒளி வீசும் முகம், நெற்றியில் படித்த கேசக்குழல்கள், வெற்றிலை போட்ட தால் சிவந்த இதழ்கள். 

ஓரடி முன்னால் வைத்து அவனை எழுப்பப் போனாள், கொல்லையிலிருந்து வேலைக்காரியின் குரல் கேட்டது. சட்டென்று அறையை விட்டுவெளியே வந்தாள். 

காதல் என்பதே அழகான ஆத்ம வஞ்சனைதான். இத்தனை வருடங்களாக அவள் மனதில் குடியிருந்த காதல் திடீரென்று இன்று வெளிப்படுவதற்குக் காரணம் ஒரு புடவை. தங்க நகை, புது சினிமா, புதுப்புடவை இவை யெல்லாம்தான் மனதில் இருக்கும் காதலை வெளியில் கொண்டு வருவதற்கு காரணமாக இருக்கின்றன என்பது எவ்வனவு வேடிக்கையான விஷயம்? இந்த கேடுகெட்ட உலகில் அன்பை வெளிப்படுத்த இதை விட வேறு வழி யில்லை. இது மட்டும் உண்மை இல்லை என்றால் எத்தனையோ சுணவன்மார்கள் தங்களுடைய மனைவி யரை மனப்பூர்வமாக நேசித்து உண்மையான அன்பை வெளிப்படுத்துவார்கள். வெறுமே பரிசுகளை வாங்கித் தந்து மனைவியரை ஏமாற்றிக் கொண்டு இருக்க மாட்டார்கள். 

வேலைக்காரியிடம் துணிகளை தோய்ப்பதற்கு பார் சோப்பை எடுத்துக் கொடுத்துவிட்டு வராண்டாவுக்கு வந்தாள். கட்டிலில் தந்தையைக் காணவில்லை, அவ்வளவு சீக்கிரமாக அவர் எழுந்து கொள்ள மாட்டார் என்று அவளுக்குத் தெரியும், கிணற்றடிக்குச் சென்று தேடினாள். வேலைக்காரி துணிகளை தோய்த்துக் கொண்டிருந்தாள். தந்தையை எங்கும் காணாததால் பதட்டமடைந்த சீதா பிரகாஷின் அறைக்குச் சென்றாள். 

“அத்தான்… அத்தான்” என்று அழைத்துக் கொண்டே தட்டி எழுப்பப் போனாள். 

பிரகாஷுக்கு விழிப்பு வந்தது. கண்களைத் திறந்து பார்த்தபோது சீதாவின் முகம் ரொம்ப அருகில் தென் பட்டது. தலைக்குக் குளித்ததில் காற்றில் அலை பாய்ந்த கூந்தல். நெற்றியின் நடுவில் நேர்த்தியாக வைக்கப்பட்ட பொட்டு. 

சட்டென்று எழுந்துகொள்ளப் போனான். அவளு டைய பின்னால் அவன் முகத்தை தாக்கியது. சீதா சட் டென்று பின்னால் நகரப் போனாள். எதிர்பாராத வித மாக பிரகாஷ் அவள் இடுப்பைச் சுற்றிலும் கையை போட்டு அருகில் இழுத்துக் கொண்டு என்ன நடக்கிற தென்று புரியும் முன் அவள் இதழ்கள் மீது ஆழமாக முத்தம் பதித்தான். 

ஒரு நிமிடம் அவள் திகைத்துப் போனாள். உடனே வெட்கம் சூழ்ந்துகொள்ள அவனைத் தள்ளிவிட்டு அறையை விட்டு ஓட்டமெடுத்தாள். 

அறை முழுவதும் நிசப்தம் பரவியது. கடியாரத்தின் டிக் டிக் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் இருக்க வில்லை. 

என்ன காரியம் செய்து விட்டான். விழிப்பு வந்ததும் சீதாவின் முகம் தென்பட்டது. ஏதோ மயக்கம் ஆட் கொண்டது போல் செயல்பட்டு விட்டான். தவறு செய்ல தில் இருக்கும் குற்ற உணர்ச்சி முதல் தடவையாக அவனுக்குப் புரிந்தது. 


ஆபீசுக்கு நேரமாகி விட்டதால் அவன் சீக்கிரமாக கிளம்பமுற்பட்டான். சீதா அவன் கண்ணில்படாமல் மறைவாகவே நடமாடினாள். அதை அவன் கவனித் தாலும் அதைப்பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. அவள் மனம் முதல்நாள் காஸினோவில் ஏற்பட்ட நஷ்டத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. அந்தக் கடனை எப்படி தீர்க்கப் போகிறான்? யாரிடம் கடன் வாங்க முடியும்? 

ஒரு விஷயத்தில் சந்தோஷப்பட்டுக் கொள்ளத்தான் வேண்டும். மற்ற எல்லோரையும் போல் விட்ட இடத்திலேயே மறுபடியும் ஜெயித்து விடலாம் என்று மட்டும் அவன் நினைக்கவில்லை. இனி எந்தச் சூழ்நிலை யிலும் அந்தப் பக்கம் போகக் கூடாது என்று முடிவு செய்தான். அந்த முடிவில் அவன் எத்தனை காலம் நிலைத்து இருக்கப் போகிறான் என்று காலம்தான் சொல்ல வேண்டும். 

ஆபீசுக்கு வரும் போதே தாமதமாகிவிட்டது. அவனிடம் இருக்கும் நல்ல குணம் என்னவென்றால். இருக்கையில் அமர்ந்து கொண்ட பிறகு மற்ற விஷயங் களை எல்லாம் மறந்து போய்விடுவான். 

பதினோறு மணி ஆகிவிட்டது. வெளியில் வெயில் ரொம்ப கடுமையாக இருந்தது. ஆபீஸ் முழுவதும் சந்தடியாக இருந்தது. வராண்டாவில் நின்றபடி பேசிக் கொண்டிருந்த ஆடிட்டர்களின் சிரிப்பு ஒலி அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களுக்கு என்று தனியாக அறைகள் இல்லாததால் க்ளயண்டுகள் யாரோ ஆடிட்டர் கள் யாரோ புரியவில்லை. 

பிரகாஷ் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஃபைல்க்கு தேவையான நோட்ஸ் எழுதி முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தபோது எதிரே ராகவன் நிற்பது தென்பட்டது. எதிர் வீட்டில் இருப்பவன். பிரகாஷ் அவனைப் பலமுறை பார்த்திருக்கிறானே ஒழிய அதிகமாகப் பேசியதில்லை. வியப்பை மறைத்துக்கொண்டு “உட்காருங்க” என்றான். 

“உங்களுடன் கொஞ்சம் பேசணும்.”

“என்னிடமா?” 

“ஆமாம். இங்கே வேண்டாம். வெளியே போய் பேசுவோம்”. 

பிரகாஷ் எழுந்து அவனுடன் சென்றான். இருவரும் மரத்தின் அடியில் நின்றுகொண்டார்கள். 

“சொல்லுங்கள்” என்றான் பிரகாஷ், 

ராகவன் ஒரு நிமிடம் பேசவில்லை. பிறகு தயங்கிக் கொண்டே “உங்க மாமா” என்று ஆரம்பித்தவன் பாதியி லேயே நிறுத்தினான். 

பிரகாஷ் பதட்டமடைந்து “மாமாவுக்கு என்ன ஆச்சு? ப்ளீஸ்… சொல்லுங்களேன்” என்றான். 

“பதட்டப்படாதீங்க. ஒன்றும் ஆகலை. நேற்று இரவு உங்க மாமாவை போலீசார் விபசார சட்டத்தின் கீழே பிடித்து வைத்திருக்கிறார்கள்.” 

பிரகாஷுக்கு நினைவு தப்பிவிடும்போல் இருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு, “நீங்க சொல்வது உண்மையா?” என்றான். 

“ஆமாம். நேற்று இரவு இரண்டு மணிக்கு ரெயிடிங் நடந்தது. அதில் பிடிபட்டார்.” 

பிரகாஷின் முகம் வெளிறிப் போயிற்று. “இப்போ.. இப்போ என்ன செய்வது?” என்றான் பதட்டத்துடன். 

“கவலைப்படாதீங்க.” ஆறுதல் தருவது போல் ராகவன் சொன்னான். 

இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற பிரகாஷுக்குப் புரியவில்லை. இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்தால் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்? மாமாவுக்கென்ன? இது போன்ற அவமானங்களை எத்தனை சந்தித்தாலும் உதறித் தள்ளிவிட்டு வளையம் வருவார். ஊருக்குப் புதுசு என்பதால் அவரைப் பற்றி இங்கே யாருக்கும் அதிகமாகத் தெரியாது. இதற்கு முன்பு இருந்த ஊரில் பக்கத்து மாமியிடம் வம்பு செய்த போது நடந்த ரகளையை தன்னால் எப்படி மறக்க முடியும்? 

“இப்போ என்ன செய்வது? ஜெயிலில் போடுவார்களா?” 

“அது வரைக்கும் விஷயம் போகாமல் செய்து விடலாம்”. 

“எப்படி?” 

“போலீஸ் ஸ்டேஷனில் எனக்குத் தெரிந்த நபர் இருக்கிறார். அவரைப் பார்க்கத்தான் காலையில் போயிருந்தேன். அப்பொழுதுதான் உங்க மாமாவைப் பார்த்தேன். அந்த நபரிடம் பேசி விட்டேன். கேஸ் எதுவும் இல்லாமல் உங்க மாமாவை வெளியே கொண்டு வருவது கஷ்டமான விஷயம் இல்லை. கொஞ்சம் பணம் செலவாகும். அவ்வளவுதான். நூறு ரூபாயாவது கொடுக்க வேண்டியிருக்கும்.” 

பெரிய பாரம் நீங்கி விட்டாற்போல் மூச்சு விட்டுக் கொண்டான் பிரகாஷ். ஆனால் மாதக் கடைசியில் நூறு ரூபாய் எங்கிருந்து கிடைக்கும்? 

“உள்ளே போய் உட்காருவோம் வாங்க” என்று ராகவனையும் அழைத்துக் கொண்டு போனான். பணத்தை எப்படி புரட்டுவது என்ற கேள்வி மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது. 

“மாதக் கடைசி என்பதால் என்னிடமும் இல்லை.” நொந்து கொள்வது போல் சொன்னான் ராகவன். 

“இவ்வளவு தூரம் நீங்க சிரமம் எடுத்துக் கொண்டு வந்ததே பெரிய விஷயம்.” பிரகாஷ் சொன்னான். 

குமாரிடம் கேட்டுப் பார்த்தால் என்ன? சந்தித்த அடுத்த நாளே கடன் கேட்பது நன்றாக இருக்காது. இருந்தாலும் பரவாயில்லை. நாளைக்கு சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிடலாம். 

எழுந்துபோய் குமார் வீட்டுக்கு ஃபோன் செய்தான். குமார் வீட்டில் இல்லை என்றும், எங்கே போனானோ தெரியாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வாடிப் போன முகத்துடன் இருக்கைக்கு வந்தான். 

“என்ன ஆச்சு?” ராகவன் கேட்டான், 

“நண்பனிடம் கேட்கலாம் என்று பார்த்தேன். அவன் வீட்டில் இல்லையாம். இப்போ என்ன நடக்கும்?” 

“ஃபைன் போடுவார்களாக இருக்கும். கட்டவில்லை என்றால் ஜெயில்…” என்று பாதியில் நிறுத்தினான். 

கடைசி முயற்சியாக பக்கத்து சீட்டில் இருந்த ராமனிடம் சென்றாள். 

“வா வா. நானே உன்னைத் தேடி வருவதாக இருந்தேன். நீயே வந்து விட்டாய்,” ராமன் உற்சாகத்துடன் வரவேற்றான். 

“என்ன விஷயம்?” பிரகாஷ் கேட்டான். 

“இவர் மிஸ்டர் சமன்லால்” என்று எதிரே இருந்த நபரை அறிமுகப்படுத்தினான். 

பிரகாஷ் அந்த நபருடன் கையைக் குலுக்கிவிட்டு ராமன் பக்கம் திரும்பி “சின்ன உதவி தேவை” என்றான்.

“சொல்லு, பரவாயில்லை” என்றான் ராமன். 

சமன்லால் அங்கே இருந்தது சங்கடமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் “எனக்கு நூறு ரூபாய் தேவைப் படுகிறது” என்றான். 

“இப்பொழுதேவா?” 

“ஆமாம். உடனே தேவை.” 

ராமன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “இரண்டு நிமிடங்களில் நானே கொண்டு வந்து தருகிறேன்” உறுதி அளிப்பது போல் சொன்னான். 

பிரகாஷ் நிம்மதியாக மூச்சுவிட்டபடி தன் இருக்கைக்கு வந்தான். ராகவன் தன்னையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்து “கிடைத்து விட்டது” என்றான். 

“காலையிலேயே வந்து உங்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டேன். சாரி,” 

“ப்ளீஸ். அப்படிச் சொல்லாதீங்க. இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு வந்து தகவல் தெரிவித்ததற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.” 

அதற்குள் ராமன் வந்து பணத்தைக் கொடுத்தான். அதை ராகவனிடம் கொடுத்துவிட்டு “நானும் வர வேண்டுமா?” என்று கேட்டான். 

“தேவையில்லை. நானே பார்த்துக் கொள்கிறேன்.” ராகவன் எழுந்துகொண்டான். பிரகாஷ் அவனை வழியனுப்ப வெளியில் வந்தான். 

“தயவு செய்து இந்த விஷயத்தை யாரிடமும்.”

ராகவன் முறுவலித்தான். “இதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா? நீங்க இனி இந்த விஷயத்தைப் பற்றி யோசிக்காதீங்க” என்றான் சைக்கிளில் ஏறிக் கொண்டே. “மனிதப் பிறவி எடுத்தாலே பலவீனங்கள் இருப்பதை தவிர்க்க முடியாது இல்லையா” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். 

ராகவன் போன திசையைப் பார்த்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டான் பிரகாஷ், பலவீனங்கள் இருப்பது தவிர்க்க முடியாது என்றாலும் வேதாந்தம் பழக வேண்டிய வயதில் மாமா இப்படி நடந்துகொண்டது அவர்பால் வெறுப்பை ஏற்படுத்தியது. 

பிரகாஷ் மறுபடியும் தன் இருக்கைக்கு வந்தபோது ராமனும் மேன்மேலும் அங்கே இருப்பதைப் பார்த்து வியப்படைந்தான். “என்ன விஷயம்?” என்று விசாரித்தான். 

“பிரகாஷ்! மிஸ்டர் சமன்லாலுக்கு டாக்ஸ் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் அவசரமாக வேண்டுமாம்” ராமன் சொன்னான். 

“அப்ளிகேஷன் கொடுக்கச் சொல்லு. பார்ப்போம்!” பிரகாஷ் சாதாரணமான குரலில் சொன்னான். 

ராமன் சிரித்தான். “வழக்கமான புரொஸிஜரில் அது கிடைக்கணும் என்றால் எத்தனை நாளாகுமோ உனக்குத் தெரியாதா? இவருக்கு அவசரமாக தேவைப்படுகிறது. நீ நினைத்தால் அது ஒன்றும் கஷ்டமான விஷயம் இல்லை.” 

“ஆனால்…” 

“பிரகாஷ்! இதில் எந்த தவறும் இல்லை. வழக்கமாக சர்டிஃபிகேட் கிடைக்க மூன்று நாட்கள் ஆகும். கொஞ்சம் முன்னாடி கொடுக்கச் சொல்கிறார். அவ்வளவுதான். நீ கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும். அந்த சாடிஃபிகேட்டை காண்பிக்கவில்லை என்றால் கோடவுனில் பொருட்களை ரிலீஸ் செய்ய மாட்டார்களாம்”. 

தனக்கு கஷ்டம் வந்தபோது உதவி செய்தவன் இந்த அளவுக்கு கெஞ்சும் போது தான் மேலும் பிடிவாதமாக இருப்பது சரியில்லை என்று தோன்றியது. “ஆகட்டும் பார்க்கிறேன்” என்றான் அரை மனதுடன். 

சமன்லாலின் முகம் மலர்ந்தது. “தாங்க்ஸ். மாலையில் வருகிறேன்” என்றார். அவர் கிளம்பிப் போன பிறகு பிரகாஷ் ராமன் பக்கம் திரும்பி “சமயத்திற்குப் பணம் கொடுத்து உதவி செய்தாய். சம்பளம் வந்ததும் திருப்பித் தந்துவிடுகிறேன்” என்றான். 

“என் பணமாவது? அதை அந்த சமன்லால்தான் கொடுத்தார். கிளியரென்ஸ் சர்டிஃபிகேட் வாங்க நம் ஆபீஸில் ரேட் அதுதானே.” 

“என்ன?” பிரகாஷ் குரலில் வியப்பு கலந்திருந்தது. அதிர்ச்சியாக மட்டும் இருக்கவில்லை.

– தொடரும்…

– எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ரிஷி என்ற நாவல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்தது. 

– ரிஷி (நாவல்), முதற் பதிப்பு: 2004, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *