கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2025
பார்வையிட்டோர்: 2,636 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6

அதற்குள் ஹாலில் சலசல வென்று ஓசை எழும்பியது. ஒரு பக்கமாக இருந்த மேடையின் மீது வெளிச்சம் விழுந்தது. அந்த வெளிச்சத்தில் பாம்பு போல் நெளிந்து கொண்டே ஒரு பெண் நாட்டிய மாடத் தொடங்கினாள். பின்னால் வாத்திய இசை உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தது. 

பிரகாஷ் ஆர்வத்துடன் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான், 

“பிரகாஷ்!” குமார் அழைத்தான். 

திடுக்கிட்டுத் திரும்பினான் பிரகாஷ், குமார் தன்னு டைய ஆர்வத்தை கவனித்து விட்டிருக்கக் கூடும் என்ற கூச்சம் அவனை ஆட்கொண்டது. 

குமார் முறுவலுடன் நண்பனின் கையை அழுத் தினான். “இதில் இவ்வளவு கில்டீயாக ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இந்த அளவுக்காவது ஆர்வம் இல்லை என்றால் வாழ்க்கையே வியர்த்தம்.” 

பிரகாஷின் முகம் வெட்கத்தினால் மேலும் சிவந்தது. 

“அந்தந்த வயதில் அனுபவிக்க வேண்டியதை அந்த வயதில் அனுபவித்தால்தான் அழகு” குமார் குரலில் திடீரென்று வருத்தம் வெளிப்பட்டது. “இந்த விஷயத்தில் நான் ரொம்ப துரதிர்ஷ்டசாலி, சிறு வயது முதல் ரொம்ப மோசமான சூழ்நிலையில் வளர்ந்து வந்தேன். என் தந்தை எவ்வளவு கயவன் என்றால் மகளைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வரும் சினேகிதிகளை கூட விட்டு வைக்க மாட்டார். குணத்திலும், நடத்தையிலும் பாதை மாறிப் போன தாய். என் தங்கை அப்படியே அம்மாவைக் கொண்டிருந்தாள். இவர்களை எல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ந்து வந்ததில் உலகத்தின் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பதிமூன்று வயதிலேயே சிகரெட் பிடித்தேன். பதினாறு வயதில் குடியும், சீட்டாட்டமும் சேர்ந்து கொண்டன. ஆனால் இவை எதுவும் பழக்கமாக தொடராமல் இருப்பதற்குக் காரணம் வளர்த்து வந்த சூழ்நிலையின் மீது எனக்கு இருக்கும் வெறுப்பு.” 

“அவ்வளவு வெறுப்பவன் இவற்றை முற்றிலும் துறந்து விட்டிருக்கலாம் இல்லையா?” பிரகாஷ் கேட்டான். 

“என்றாவது அதில் மகிழ்ச்சி கிடைக்கக் கூடும் என்ற பலவீனம்தான். உலகையே மறந்து போகும் அளவுக்கு குடி மயக்கத்தில் ஆழ்ந்து போகிறவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். ஏன் என்றால் அந்த நிலையை என்னால் என்றைக்குமே அடைய முடியாது. குடி வரைக்கும் போவானேன்? சிகரெட்டை புகைப்பதில் மற்றவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி எனக்கு கிடைத்த தில்லை. இதை புகைத்தால் உண்மையிலேயே மகிழ்ச்சி கிடைக்குமா என்ற சந்தேகம் மனதைத் துளைத்துக் கொண்டே இருந்தால் அதில் இருக்கும் சந்தோஷத்தை எப்படி அனுபவிக்க முடியும்? 

மனதில் ஏற்பட்ட அதிருப்தியை போக்கிக் கொள் வதற்காக நண்பர்களுடன் ஊரைச் சுற்றினேன். நள்ளிரவு வரையில் பார்களில் குடித்துவிட்டு, லாட்ஜில் பணம் கொடுத்து ஒரு மணி நேரம் அந்த சுகத்தையும் அனுபவித்து இப்படியே ஒரு வருடம் கழிந்துவிட்டது. ஆனால் இதிலே யும் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் தனிமை என்னை ஆட்கொண்டது. 

இந்த நிலையிலிருந்து என்னை நானே மீட்க முயற்சி செய்தேன். புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். கீட்ஸ் முதல் பாரதியார் வரை எல்லோருடைய படைப்பு களையும் படித்தேன். நமக்கு என்று ஏதாவது ஒரு ரசனை இருப்பது ரொம்ப நல்லது. யாரையாவது காதலிக்கணும். மல்லிகையின் தூய்மையை, ரோஜா மலரின் மென்மையை மாலையாக கோர்த்து அவள் என் கையில் கொடுக்க வேண்டும் என்றும், செயற்கையான இந்தச் சூழலை மறந்து விட்டு அவள் மடியில் இளைப்பாற வேண்டும் என்றும் தவித்தேன். எவ்வளவு சின்ன விருப்பம் இது? 

அந்த நாட்களில் ஒரு பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. பெயர் அவ்வளவு முக்கியம் இல்லை. அந்தப் பெண்ணிடம் என் கனவு சுந்தரியை அடையாளம் காணத் தொடங்கினேன். அகலமான கண்கள், தங்கப் பதுமை போன்ற தோற்றம். ரொம்ப அழகாக இருந்தாள். நாள் ஆக ஆக எங்கள் அறிமுகம் வளரத் தொடங்கியது. என் கனவுகளை, ரசனைகளை அவளிடம் சொல்ல வேண்டும் என்றும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் தவித்தேன். கனவுகளில் ஊகித்துக்கொண்ட அனுபவம் யதார்த்தத் திற்கு வரும் போது சில சமயம் ஏமாற்றம்தான் மிஞ்சும். 

என்னுடைய படிப்பு முடிந்து விட்டது. அப்பாவுக்கு இருந்த செல்வாக்கினால் என் பிராக்டீஸ் சீக்கிரமாகவே சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கொள்கைகளுக்கும், வாஸ்தவத்திற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது பார்த்தாயா? அப்பாவை அவ்வளவு தூரத்திற்கு வெறுக் கும் நான், வாழ்க்கையில் முன்னேறுவதற்காக அவரிடமே உதவி பெற வேண்டியதாகி விட்டது. எனக்கு இருக்கும் தகுதிக்கு ஏதாவது வேலை கிடைக்காமல் போகாது. ஆனால் இந்த பங்களா, கார் இதெல்லாம் இருக்காது. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சமாதானமாகப் போக வேண்டிய கட்டாயம். 

தொடக்கத்தில் அவளுடைய நட்பு நன்றாகத்தான் இருந்தது. நாள் ஆக ஆக ஏதோ அதிருப்தி. ‘இவள் எதற்காக என்னை காதலிக்கிறாள்? திருமணம் ஆகாமல் ஒரு ஆணுடன் இப்படி பழகுவது தவறு இல்லையா?’

அவளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறும் தருணம் வந்தது. நண்பன் ஒருவன் உதவி செய்தான். தன்னுடைய அறையின் சாவியை என்னிடம் தந்தான். 


கதவைச் சாத்தியதும் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பௌர்ணமி இரவில், காவேரி நதியின் மீது படகில் பயணம் செய்யும் போது கிடைக்கும் சந்தோஷம் ஒன்றே போதும், வாழ்க்கையை நிம்மதியாக கழித்து விட முடியும். 

“என்ன யோசிக்கிறாய்?” படுக்கையின் மீது ஒய்யார மாக சாய்ந்துகொண்டே கேட்டாள். “வெறுமே பார்த்துக் கொண்டே நேரத்தை கழித்து விடப் போகிறாயா?” செல்லமாக கோபித்துக் கொண்டாள். 

மேலும் ஒரு அடி முன்னால் வைத்தேன். விளக்கை அணைப்பதற்காக அவள் கை நீண்டது. தடுத்து விட்டேன். விளக்கை அணைத்து விட்டால் என்ன இருக்கும்? வெறும் இருட்டு. 

இந்த உலகத்தில் உள்ள வேதனையை, வருத்தங்களை எல்லாம் மறந்து போய் அவளுடைய அணைப்பில் நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறேன். இந்த உதவியை செய்ததற்காக வாழ்நாள் முழுவதும் தான் அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன், தன் இதய சிம்மா சனத்தின் மீது அவளை அமரவைத்து, இணை பிரியாத தோழமையுடன்- 

ஒரு நிமிடம்,” அவள் முறுவலுடன் சொன்னாள்.

“வேண்டாம். ஒரு நிமிடம் கூட உன் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.”

“ரொம்பவும் குறும்புக்காரனாக இருப்பீங்க போலிருக்கே.” அவள் ஹேண்ட் பேக்கை திறந்து எதையோ எடுத்து அவன் உள்ளங்கையில் வைத்து மூடினாள். 

குழப்பத்துடன் பிடியைத் திறந்து பார்த்தான். காண்டோம் பாக்கெட்! 


காரில் போகும் போது அவர்கள் இருவரும் ரொம்ப நேரம் பேசிக் கொள்ளவில்லை, பிரகாஷ் தன்னுடைய வீடு இருக்கும் இடத்தைச் சொன்னான். குமார் காரை அந்தப் பக்கம் ஓட்டினான். 

“நிறுத்து நிறுத்து” என்றான் பிரகாஷ், காரை ஒரு ஓரமாக நிறுத்தினான் குமார், “அதுதான் எங்க வீடு”. பிரகாஷ் சுட்டிக் காட்டிக்கொண்டே இறங்கினான். 

“போய் வருகிறேன். நாளை மறுபடியும் சந்திப்போம். பொன்னம்பலம் வீட்டில் எப்படியும் சந்தித்துக் கொள்ளப் போகிறோமே. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? சுஜாதா நினைவு இருக்கிறாளா?” 

பிரகாஷ் திடுக்கிட்டாற்போல் பார்த்தான், “நம் கிளாஸ்மேட் சுஜாதாதான் பொன்னம்பலத்தின் மனைவி”. 

பிரகாஷ் மௌனமாக இருந்தான். 

“மனதில் தோன்றியதை பேசிவிட்டேன். அதைப் பற்றி எல்லாம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாதே. வரட்டுமா?“ காரை முன்னோக்கி செலுத்தினான் குமார். 

இரவு பத்து மணியாகி விட்டது. தெரு முழுவதும் ஆளரவமற்று இருந்தது. பிரகாஷ் கதவை தன் பக்கம் இழுத்ததும் மேலே போட்டிருந்த போல்ட் கீழே விழுந்தது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான். முன் அறை யில் மாமாவும், சீதாவும் படுத்திருந்தார்கள். கதவைத் திறந்த சத்தம் கேட்டு சுவாமிநாதன் புரண்டு படுத்தார். பிரகாஷ் தன்னுடைய அறைக்குச் சென்று புடவையின் பாக்கெட்டை மேஜை மீது வைத்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டான். தானே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடும் போது அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது. 


“ஹலோ!” குமார் சொன்னான்.

“பொன்னம்பலம் ஹியர்.” 

“நான்தான் குமார்.”- 

“இந்த இரவு வேளையில் ஃபோன் செய்கிறாயே. என்ன விசேஷம்?” 

“அந்த கிளார்க் பிரகாஷ் யாரோ இல்லை. என்னுடன் காலேஜில் ஒன்றாகப் படித்தான். நெருங்கிய நண்பன்.” 

“அப்படியா,” பொன்னம்பலத்தின் குரலில் வியப்பு தென்பட்டது. “ஐயம் சாரி. அவனைப் பற்றி உன்னிடம் கிண்டலாக பேசிவிட்டேன்.” மன்னிப்பு கேட்டுக் கொள்வது போல் சொன்னார். 

“பரவாயில்லை. ஆனால் உண்மையிலேயே அவன் ஒரு அப்பாவி.” 

பொன்னம்பலம் ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு பிறகு சொன்னார். “அப்பாவியாக இருப்பது ஒரு தகுதி இல்லை. அப்படிப் பார்த்தால் இந்த உலகில் யாரை யும் அப்பாவி என்று சொல்ல முடியாது. குடிப்பழக்கம் இல்லாதவனைப் பார்த்து இரக்கப்படக் கூடும். அப்பாவி யாக இருந்தாலும், சீரழிந்து போனவனாக இருந்தாலும் தான் நம்பிய கொள்கையை ஸ்திரமாக கடைபிடிப்பவன் தான் உயர்ந்தவன். இரவு நேரத்தில் இந்த வேதாந்த சொற் பொழிவு எதற்கு? நாளைக்கு வருகிறாய் இல்லையா?” 

“கட்டாயம்” என்றான் குமார். 

பொன்னம்பலம் ஃபோனை வைத்துவிட்டு, சுஜாதா வின் பக்கம் திரும்பினார். “உன் கிளாஸ் மேட் இன்னொருத் தன் நம் வீட்டு பார்ட்டீக்கு வரப் போகிறான்” என்றார்.

கையில் இருந்த ஃபிலிம் ஃபேர் பத்திரிகையிலிருந்து தலையை உயர்த்திய சுஜாதா “ஃபோன் செய்தது யாரு?” என்று கேட்டாள். 

“குமார்.” 

“புதிதாக வரப்போவது யாராம்?” என்று கேட்டான். 

“அவன் பெயர் பிரகாஷாம். உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 

ஒரு நிமிடம் யோசித்தாள். “நிறைய பேர் இருந்தாங்க. இந்தப் பெயரில் யாரையும் நினைவு இல்லை” என்றாள். 


பிரகாஷ் உள்ளே வந்தது சுவாமிநாதனுக்குத் தெரியாது. ஆனால் சமையலறையில் சாப்பாடு பரிமாறிக் கொள்ளும் சத்தம் கேட்டதும் விழிப்பு வந்தது. வயதான பிறகு தூக்கமே கலைந்து போனால் மறுபடியும் உடனே உறக்கம் வராது. 

சுவாமிநாதன் மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து கொண்டார். கொக்கியில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு ஓசைப்படுத்தாமல் கதவைத் திறந்து வெளியே இருளில் மறைந்து விட்டார். 

பிரகாஷ் நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பசியாக இருந்ததால் ருசியாக இல்லாவிட்டாலும் சாப்பாடு உள்ளே போய்க் கொண்டிருந்தது. தான் சாப் பிடும் போது யாராவது பக்கத்தில் அமர்ந்து கொண்டு உணவு பரிமாற வேண்டும் என்பது அவனுடைய விருப்பங் களில் ஒன்று. 

தன்னுடைய தாய் மட்டும் இன்று உயிரோடு இருந்தால்? சிறுவயதிலேயே தாய் இறந்து விட்டதால் இப்படி நினைக்கிறானோ. உயிரோடு இருந்தால் எப்படி இருந்திருப்பாளோ யாருக்குத் தெரியும்? குமார் பற்றிய நினைவு வந்தது. எல்லாம் இருந்தும் இல்லாத நிலை அவனுடையது. அவனுடன் ஒப்பிட்டால் தன்னுடைய நிலைமை எவ்வளவோ தேவலை. 

சீதாவுக்கும் தனக்கும் திருமணம் ஆன பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான். 

ஒரு நாள் இரவு தாமதமாக வீட்டுக்கு வருகிறான். கதவைத் தட்டியதும் சீதா ஓடி வந்து கதவைத் திறக்கிறாள். “இன்னும் தூங்கவில்லையா?” அவளுடைய சிவந்த கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்பான். 

தூக்கக் கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்து முறுவலிப்பாள்.  

“இதென்ன? நீ இன்னும் சாப்பிடவில்லையா?” இரண்டு தட்டுகள் போடப்பட்டிருப்பதை பார்த்துவிட்டு வியப்புடன் கேட்பான். 

“ஊஹும்” தலையை குறுக்காக அசைப்பாள். 

“ஏன்?” 

அந்தக் கேள்விக்கு பதில் இல்லை. உனக்காக, நீ என்னிடம் காட்டும் அன்பிற்காக, உன் அருகாமையில் எனக்குக் கிடைக்கும் நிம்மதியான உணர்வுக்காக அந்த மௌனத்தில் இத்தனை அர்த்தங்கள் மறைந்திருக்கும். 

யோசனைகளுக்கு இடையில் சாப்பிட்டு முடித்து கையை அலம்பி கொண்டான். தன்னுடைய அறைக்கு வந்ததும் மேஜைமீது இருந்த பாக்கெட் தென்பட்டது. அதை எடுத்துக் கொண்டு முன் அறைக்கு வந்தான். ஜன்னல் வழியாக வந்து விழுந்த வெளிச்சம் அறை முழு வதும் பரவியிருந்தது. சீதா ஒருக்களித்து படுத்திருந்தாள். 

எழுப்பி புடவையை கொடுப்பதற்கு கூச்சமாக இருந்தது. எழுந்ததுமே கண்ணில் படுவது போல் வைத்து விட்டு அறைக்கு திரும்பினான். தொலைவில் எங்கேயோ பதினோரு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. படுக்கையில் படுத்துக் கொண்டவன் தலையைத் திருப்பிப் பார்த்தாள். ஒரு மூலையில் தோய்க்க வேண்டிய துணிகளை போடும் மரப்பெட்டி இருந்தது. அதன் மீது சரியாக மூடப்படாத டப்பாக்கள் இருந்தன. எலி ஒன்று குறுக்கே புகுந்து ஓடியது. துணிகளை உலர்த்தும் கொடியில் அவிழ்த்து போட்ட புடவைகள், உள்ளாடைகள் தாறுமாறாக தொங்கிக் கொண்டிருந்தன. 

போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டான். கொசு ஒன்று காது அருகில் சுற்றிச் சுற்றி வந்தது. முகத்தை யும் சேர்த்துப் போர்த்திக் கொண்டதால் மூச்சு முட்டியது. ஜன்னல் கதவைத் திறக்கவும் முடியாது. சாக்கடை நாற்றம். புரண்டு படுத்தான். தலையணைக்கு உறை இருக்கவில்லை, எண்ணெய் பிசுக்குடன் அருவருப்பை ஏற்படுத்தியது. திடீ ரென்று ஏமாற்றம் அவனை சூழ்ந்து கொண்டது. காரணம் தான் தெரிய வில்லை. 

இன்னும் சில மாதங்களில் தனக்கும் சீதாவுக்கும் திருமணம் நடக்கும். இத்தனை நாளும் ஹாலில் படுத்துக் கொண்டிருப்பவள், இந்த அறைக்கு வந்து படுத்துக் கொள்வாள். அதுதான் வித்தியாசம். அழுக்கு உடைகள் தொங்கிக் கொண்டிருக்கும் இதே அறையில் அவளுடன் குடும்ப வாழ்க்கை நடத்துவான். அடுத்தடுத்து குழந்தைகள் பிறப்பார்கள். குழந்தைகள் கடவுளால் கொடுக்கப்பட்ட செல்வம் என்பதால் முற்றுப் புள்ளி வைக்க சீதா சம்மதிக்க மாட்டாள். தொடர்ந்து ஏற்பட்ட பிரசவங்களால் சீதாவின் உடல் பலவீனமடைந்துவிடும். பாலும், பழமும் வாங்கிக் கொடுக்கணும் என்று டாக்டர் சொல்லுவார். சின்னவனுக்கு மாறி மாறி ஏதாவது ஒரு நோய் படுத்திக் கொண்டே இருக்கும். பெரியவனை பள்ளியில் சேர்க்கணும். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். 

சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ யோசனைகள். சீதா வுடன் தன்னுடைய முதல் இரவு எப்படி இருக்கும்? 

இதே அறைதான். அறை முழுவதும் பரவிய ஊதுபத்தி யின் நறுமணம். தட்டில் இனிப்புகளுடன், தலையில் மல்லி கைப் பூவுடன் உள்ளே வந்தாள் சீதா. கதவு அருகிலேயே நின்று விடாமல் உள்ளே வந்ததும் கதவைச் சாத்திவிட்டு, “ரொம்ப புழுக்கமாக இருக்கு இல்லையா?” என்றாள். தான் வெறும் பார்வையாளனாக இருந்தான். 

“காமாட்சி வீட்டிலிருந்து டேபிள் ஃபேனை இரவல் வாங்கியிருக்கணும்.” மன்னிப்பு கேட்பது போல் விளக்கம் தந்தாள் சீதா. 

“சீதா! ஜன்னல் கதவை சரியாக சாத்திக்கொள்.” வெளியே இருந்து யாரோ ஒரு மாமி குரல் கொடுத்தாள், 

சட்டென்று எழுந்து ஜன்னல் கதவை சாத்தப் போனான். தாழ்ப்பாளை போட முடியவில்லை. பலமாக அழுத்தி சாத்தப் போனான். 

“தாழ்ப்பாள் சரியாக இல்லை. அந்த கல்லை எடுத்து வையுங்க.* பக்கத்திலேயே இருந்த கல்லை சுட்டிக் காட்டினாள். 

பிரகாஷின் நெற்றியில் வியாவை அரும்பியிருந்தது. எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டதால் ஊதுபத்தி புகை யில் மூச்சு முட்டுவது போல் இருந்தது. ஒரே நேரத்தில் அத்தனை இனிப்புகளை பார்த்ததும் வெறுப்பு ஏற்பட்டது போல் எதையுமே சாப்பிட பிடிக்கவில்லை. முதலிரவில் இருக்க வேண்டிய உற்சாகமோ, ஆர்வமோ இருக்க வில்லை. இங்கிருந்து வெளியேறி கடற்கரையில் தனிமை யில் இனிமையான இசையில் கரைந்து போக முடிந்தால். 

“அத்தான்! என்ன யோசிக்கிறீங்க?” 

சீதாவின் குரலைக் கேட்டு இவ்வுலகிற்றுக்கு மீண்ட வனாய், இயந்திர கதியில் பால் டம்ளருடன் சீதாவையும் சேர்த்து அணைத்துக் கொள்ளப் போனான். 

தடாலென்று சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். எலி ஒன்று பெட்டி மீது இருந்த டப்பாவை கீழே தள்ளி விட்டு ஓடியது. பிரகாஷ் தலையை உதறிக் கொண்டான், பிரயோஜனமில்லை. தன்னால் கனவில் கூட சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. 


பதினோரு மணியாகிவிட்டது. சுஜாதாவுக்கு உறக்கம் வரவில்லை. மல்லாக்க படுத்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். 

விடிவிளக்கின் வெளிச்சம் அறை முழுவதும் நீல வண்ணத்தில் பரவியிந்தது. மேஜைமீது இருந்த ஓவியத்தை அந்த வெளிச்சத்திலும் பார்க்க முடிந்தது. அந்த ஓவியம் என்றால் சுஜாதாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதை பொன்னம்பலம்தான் வரைந்திருந்தார். 

சுஜாதா பக்கத்தில் படுத்திருந்த கணவரைப் பார்த்தாள். மங்கலான வெளிச்சத்தில் அவருடைய முகம் அமைதியாக இருந்தது. அந்த நேரத்தில் அவரைப் பார்த் தால் லட்சக் கணக்கில் வியாபாரம் செய்பவர் என்ற யாரா லும் சொல்ல முடியாது. 

சுஜாதா யோசித்துக் கொண்டிருந்தாள். பணத்திற் காகத்தான் பொன்னம்பலத்தை அவள் திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அதற்குப் பிறகு அவரிடம் இருக்கும் ஓவியக் கலையை விரும்பத் தொடங்கினாள். ஆனால் இளைஞர்களிடம் இருக்கும் வேகமோ, துடிப்போ அவரிடம் இல்லாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. பரிபூர்ணமான காதலை வெளிப்படுத்தும் செயல்தான் செக்ஸ். தனக்கு அந்த நிலை எப்போதும் கிடைக்காது. 

சுஜாதா கணவருக்கு விழிப்பு வராதபடி ஓசைப் படுத்தாமல் பக்கத்து அறைக்குச் சென்றாள். சூட்கேஸை திறந்து புடவைகளுக்கு அடியில் இருந்த பழைய டைரி களை எடுத்து டேபிள் லைட்டை போட்டுக் கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினாள். 

ஒரு இடத்தில் அவள் பார்வை பதிந்தது. பிரகாஷ் என்ற பெயர் எழுதப்பட்டு சிவப்பு பேனாவால் சுழிக்கப் பட்டிருந்தது. பழைய நினைவுகளில் மூழ்கிய சுஜாதாவின் இதழ் களில் முறுவல் படர்ந்தது. 

டிசம்பர் பதினாலு: வழக்கம் போல் பிரகாஷ் இன்னிக்கும் வெள்ளை ஷர்ட் அ ணிந்திருநதான். வெள்ளையைத் தவிர அவனிடம் வேறு கலரில் ஷர்ட்கள் இல்லையோ. காலர் அருகில் இருந்த கிழிசலை அவன் கவனிக்கவில்லை போலும். அந்த அலட்சியமே அவனுக்கு தனி அழகை கொடுத்தது. லெக்சரர் ஏதோ கேள்வி கேட்டதும் எழுந்து நின்றுகொண்டேன். பாடத்தில் மனம் பதியாதபோது என்ன கேள்வி கேட்டாரோ யாருக்குத் தெரியும்? பிரகாஷை நான் காதலிக்கிறேனா? 

ஜனவரி மூன்று: உண்மையிலேயே பிரகாஷ் ஒரு முட்டாள். கல்லூரி முழுவதும் என்னுடைய புன்னகைக் காக தவம் கிடக்கும் போது இவன் மட்டும் இப்படி இருப்பானேன்? ஊஹும், விருப்பம் இல்லாமல் இல்லை. என்னைப் பார்க்கும் ஒரு வினாடி நேரத்திற்குள் அவன் கண்களில் தெரியும் எண்ணங்களை புரிந்துகொள்வது கஷ்டமான விஷயம் இல்லை. 

சுஜாதா பக்கங்களை நிதானமாக புரட்டினாள் பெரும்பாலும் பிரகாஷ் பற்றியே எழுதப்பட்டிருந்தது. பதினெட்டு வயதில் மலரும் காதல் ரொம்ப நேர்மையாக இருக்கும் போலும், பொன்னம்பலத்தை திருமணம் செய்து கொண்டதற்கு அவள் ஒரு நாளும் வருத்தப்பட வில்லை. அவருடைய பணத்திற்காக மட்டுமே அல்லாமல், வியாபார திறமையை, ஓவியக்கலையை விரும்பத் தொடங்கினாள். 

“தூக்கம் வரவில்லையா?” 

மென்மையான குரலைக் கேட்டதும் தலையைத் திருப்பிப் பார்த்தாள். அறைவாசலில் பொன்னம்பலம் நின்று கொண்டிருந்தார். 

சுஜாதா வெறுமே முறுவலித்துவிட்டு டைரிக்களை உள்ளே வைத்தாள். கணவருடன் சேர்ந்து மறுபடியும் படுக்கை அறைக்குள் வந்தாள். 

“சுஜாதா!” தெளிவற்ற குரலில் அழைத்தார். திரும்பி கணவன் பக்கம் பார்த்தாள். அவர் அவள் பக்கம் திரும்பாமலேயே கேட்டார். “என்னை கல்யாணம் செய்து கொண்டதில் அதிருப்தியாக உணருகிறாயா?” 

“எதற்காக கேட்கிறீங்க?” 

“இந்த நள்ளிரவு வேளையில் பழைய நினைவுகளை புரட்டி பார்க்கிறாய் என்றால்…” 

சுஜாதாவின் முகம் வெளிறிப்போய்விட்டது. “ஊஹும். அப்படி எதுவும் இல்லை.” முணுமுணுத்தாள். 

“உண்மைதான் சுஜாதா. யாராவது நம்முடைய கதையை நாவலாக எழுதினால் முதல் பக்கத்திலேயே என்னை வில்லன் ஆக ஆக்கியிருப்பார்கள். நான் அழகாக இல்லை என்பது ஒரு காரணம். எதையும் வெளிப் படை யாக, முகத்திற்கு நேராக பேசுவது இரண்டாவது காரணம்.” திடீரென்று அவருடைய குரல் கம்மியது. “ஒருக்கால் உன்னால் என்னிடம் அன்பாக இருக்க முடிய வில்லை என்றாலும் பரவாயில்லை. கொஞ்சம் இரக்கம் காட்டினால் அதுவே போதும். அந்த பற்றுக்கோலுடன் வாழ்நாளை கழித்து விடுவேன்.” 

சுஜாதா சட்டென்று கணவரின் வாயை பொத்தி விட்டு மெளனமாக அவருடைய மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள் பொன்னம்பலம் அவளுடைய கேசத்தைவருடிக்கொண்டே “சில நாட்கள் வெளியே எங்கேயாவது போய் விட்டு வருவோம். பிசிநெஸ் விவகாரங்களிலிருந்து எனக்கும் மாறுதல் தேவையாக இருக்கு” என்றார் தாழ்ந்த குரலில். 

சரி என்பது போல் தலையை அசைத்தாள் சுஜாதா.

– தொடரும்…

– எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ரிஷி என்ற நாவல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்தது. 

– ரிஷி (நாவல்), முதற் பதிப்பு: 2004, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *