கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 4,388 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4

உள்ளே வண்ண விளக்குகள் பளிச் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தன. சின்னச் சின்ன டெண்டுகள் முன்னால் மக்கள் கும்பலாக கூடியிருந்தார்கள். வழி தெரியாதவன் போல் பிரகாஷ் அப்படியே நின்று விட்டான். ஒரு பக்கம் ஒலிபெருக்கியில் சினிமா பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. 

“வாங்க தம்பீ. இந்தப் பக்கம் வாங்க” என்ற குரல் கேட்டு அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். மக்கள் குறுக்கே இருந்ததால் ஒன்றும் புலப்படவில்லை. தன்னை யும் அறியாமல் அந்தப் பக்கம் நடந்தான். கும்பலை விலக்கிக் கொண்டு உள்ளே போனான். பெரிய மேஜை ஒன்று நடுவில் இருந்தது. அதில் ஆறு நிறங்கள் இருந்தன. மேஜைக்கு மறுபக்கம் அவற்றில் ஒரு பலகை இருந்தது. பலகையின் மீது சிறிய கட்டங்கள் இருந்தன. கட்டங்களில் இந்த ஆறு நிறங்களும் மாறி மாறி இருந்தன. 

பிரகாஷ் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினான். அந்த டெண்டுக்கு உரிமையாளன் அம்பு போன்ற மூன்று குச்சிகளை ஒருவனிடம் தந்தான். மக்கள் தங்களுக்கு பிடித்த நிறங்கள் மீது பெட் கட்டினார்கள். பிறகு அம்புகள் வீசப்பட்டன. முதலாவது அம்பு மஞ்சள் கட்டத்திலும், இரண்டாவது சிவப்பு மற்றும் மூன்றாவது நிலத்திலும் போய் தைத்துக் கொண்டன. அந்த மூன்று நிறங்கள் மீது பெட் கட்டியவர்களுக்கு இருமடங்கு பணம் தந்துவிட்டு மீதி பணத்தை கல்லாப் பெட்டியில் போட்டுக் கொண்டான். 

பிரகாஷுக்கு ஆட்டம் என்னவென்று புரிந்து விட்டது. ஏதாவது மோசடி வேலை இருக்குமோ என்று கூட யோசித்தான். எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பது ஆறு நிறங்கள். மூன்று அம்புகளை வீசப் போகிறான். வெற்றி தோல்விக்கு வாய்ப்பு சரிபாதி. அதிர்ஷ்டத்தைத் தவிர இதில் ஏமாற்று வேலை எதுவும் இல்லை. 

இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிகையில் ‘லாட்டரி யில் அதிர்ஷ்டம் கிடைக்கும்’ என்று வார பலன் படித்தது நினைவுக்கு வந்தது. பெட் கட்டுவோமா வேண்டாமா என்று தயங்கினான். சட்டைப் பையைத் தடவிப் பார்த் தான். சில்லறைக் காசுகள் தட்டுப் பட்டன. மாதக் கடைசி என்று நினைவுக்கு வந்தது. 

ஆட்டம் மேலும் தொடர்ந்தது. பிரகாஷ் ஒரு விஷயத்தைக் கவனித்தான். ஒவ்வொரு முறையும் சிவப்பு நிற கட்டத்தில் அம்பு தைத்தது. பச்சையிலும், நீலத்திலும் படவே இல்லை. வெளியே வந்து சில்லறையை எண்ணினான். ஒன்பது ரூபாய் வரையில் இருந்தது. நான்கு ரூபாய்க்கு உண்டான சில்லறையை மறுபடியும் உள்ளே வைத்துக் கொண்டு ஐந்து ரூபாய்க்கு டோக்கனை வாங்கித் கொண்டான். பிரகாஷ் உள்ளே வந்த போது மேலும் ஒரு ஆட்டம் முடிந்திருந்தது. இந்த முறை சிவப்பு நிறத்தில் அம்பு தைக்கவில்லை. அடுத்த முறை சிவப்பு நிறத்தில் கட்டாயம் தைக்கும் என்று பிரகாஷ் பலமாக நம்பினான். 

முதலாளியிடம் டோக்கனை கொடுத்துவிட்டு “சிவப்பு” என்றான். 

டோக்கன்கள் வசூல் செய்யப்பட்டன. கோட் சூட் அணிந்த ஆசாமி ஒருவன் நீலநிறத்தின் மீது பெட் கட்டி விட்டு ஐம்பது ரூபாய்க்கான டோக்கனை கொடுத்தான். அம்புகளை வீசுவதற்காக கையில் எடுத்துக் கொண்டான். 

பிரகாஷ் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவன் சட்டென்று முதலாளியிடம் சென்று “மஞ்சள் மீது கட்டியிருந்த என் பத்து ரூபாயை நீலத்திற்கு மாற்றி விடு” என்றான். 

பிரகாஷ் அவனை வியப்புடன் பார்த்ததை கவனித்த முதலாளி “அந்த ஆசாமி நன்றாக அம்பு வீசுவார். சாதாரணமாக அவருடைய குறி தப்பாது” என்றான் முறுவலுடன். 

இன்னும் நாலைந்து பேர் நீலத்தின் மீது பந்தயம் கட்டினார்கள். ஆட்டம் தொடங்கியது. அம்பு மஞ்சள் கட்டத்தில் போய்த் தைத்தது. பிரகாஷ் தலையைத் திருப்பி பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்தான். இரத்தம் வற்றி விட்டாற்போல் அவன் முகம் வெளிறியிருந்தது. 

ரூட் ஆசாமி குறிபார்த்து இரண்டாவது அம்பை வீசினான். நேராக சிவப்பு கட்டத்தில் தைத்தது. பிரகா ஷின் கண்கள் மின்னின. மூன்றாவது அம்பு மறுபடியும் மஞ்சள்.

பிரகாஷுக்கு பத்து ரூபாய் டோக்கன் தரப்பட்டது. ஐந்து ரூபாய் லாபம்.

டோக்கனை மாற்றிக் கொள்ளும் எண்ணத்துடன் திரும்பும்போது “உங்களுக்கு இன்னிக்கு அதிர்ஷ்ட நாள் போலிருக்கே” என்றான் பக்கத்தில் இருந்தவன். 

பிரகாஷ் கூச்சத்துடன் சிரித்தான். உள்ளூற பெருமை யாக உணர்ந்தான். அடுத்த ஆட்டம் தொடங்க இருந்தது. “இந்த முறை எந்த நிறத்தில் சுட்டப் போறீங்க?” என்று கேட்டான் அவன். 

‘இல்லை கிளம்பப் போகிறேன்’ என்று சொல்ல நினைத்தாலும் பிரகாஷால் ஏனோ சொல்ல முடிய வில்லை. “பார்ப்போம்” என்றான் மையமாக. 

டோக்கன் தருபவன் அருகில் வந்ததும் ஐந்து ரூபாய் கொடுத்து ‘மஞ்சள்’ என்றான். பக்கத்தில் இருந்தவன் பிரகாஷை வித்தியாசமாகப் பார்த்தான். டோக்கன்காரன் நகர்ந்ததும் “நீங்க டோக்கன் வாங்கயில்லையே?” பிரகாஷ் கேட்டான். 

“இந்த ஆட்டம் வெறுமே வேடிக்கை பார்க்கப் போகிறேன்” என்றான் அவன். 

சூட் ஆசாமி மறுபடியும் அம்புகளை வீசினான்; இரண்டாவது வெள்ளை நிறத்திலும், முதலாவதும் மூன்றாவதும் மஞ்சளிலும் தைத்தன. பக்கத்தில் இருந்தவன் பிரகாஷ் 

கையைப்பற்றி பலமாக குலுக்கினான். “இன்னிக்கு உண்மையிலேயே அதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கம் இருக்கிறாள்” என்று சொல்லிவிட்டு சட்டைப் பையிலிருந்து ஐம்பது ரூபாய்க்கு டோக்களை எடுத்து “உங்கள் விருப்பம் போல் ஆடுங்கள் எனக்காக” என்றான். 

பிரகாஷுக்குக் கூச்சமாக இருந்தது- “எனக்கு எது வும் தெரியாது. சும்மா ஆடினேன். இவ்வளவு பணத்தை என்னை நம்பி -” என்று மேலும் ஏதோ சொல்ல முயன்ற போது பாதியிலேயே நிறுத்தி “அதுதான் சார் அதிர்ஷ்டம். வந்தால் வரட்டும். இல்லையா சட்டைப் பையை Rதறிக் கொண்டு போய்விடலாம்” என்றான் பக்கத்தில் இருந்தவன். 

டோக்கன் ஆள் அருகில் வந்ததும் பிரகாஷ் தயங்கிக் கொண்டே அவன் கையில் ஐம்பத்தைந்து ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கிக் கொண்டு “வெள்ளை” என்றான். 

டோக்கன்காரன் நகர்ந்ததும் “நாம் சொன்ன நிறத்தில் அம்பு தைக்கவில்லை என்றால் நம் முகம் மாறப் போகும் நிறம் அதுதான்” என்று கிண்டலடித்தான் பக்கத்தில் இருந்தவன். 

பிரகாஷும் சிரித்து விட்டான். அவன் உரிமையாக பழகுவது பிரகாஷுக்குப் பிடித்திருந்தது. 

“ஊத்திக்கிச்சு சார்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு பலகையின் பக்கம் பார்த்தான். அம்பு கருப்பு நிற கட்டத் தில் தைத்திருந்தது. பிரகாஷ் சூட் ஆசாமியைப் பார்த் தான். அவன் முகம் சந்தோஷத்தால் மலர்ந்திருந்தது. அவன் கருப்பு நிறத்தின் மீது பெட் கட்டியிருந்தான். இரண்டா வது அம்பு வீசப்பட்டது. அதுவும் கருப்பு நிறத்தில்தான் பதிந்தது. 

இருவரின் முகங்களும் வெளிறிவிட்டன. “வாங்க சார் போகலாம். இனி காத்திருக்க வேண்டியதில்லை” என்றான் அவன். 

பிரகாஷுக்கு வருத்தமாக இருந்தது, தன்னை நம்பி அவன் பணத்தை இழந்து விட்டானே என்று. சூட் ஆசாமி மூன்றாவது அம்பு வீசினான், 

திடீரென்று பிரகாஷின் முகம் மலர்ந்தது. வெள்ளை நிற கட்டத்தில் அம்பு குத்தியிருந்தது. பக்கத்தில் இருந்தவனும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான், 

“இனி பெட் கட்ட வேண்டாம். கிளம்புவோம்” என்றான் பிரகாஷ், 

டோக்கனை மாற்றிக் கொண்டு நூற்றிப்பத்து ரூபாயை பெற்றுக்கொண்டு வெளியே வந்தார்கள். 

“ரொம்ப தாங்க்ஸ் சார். கடந்த மூன்று நாட்களில் இருநூறு ரூபாய் வரையில் விட்டேன்” என்றான். 

“இதில் நான் செய்தது என்ன இருக்கு. ஏதோ பிசினாஸ் லக்” என்றான் பிரகாஷ், 

அதற்குள் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. “வாங்க. ஒரு ஷோ பார்த்துவிட்டு போகலாமே” என்றாள் அவன். 

பிரகாஷுக்குப் புரியாவிட்டாலும் மௌனமாக அவனைப் பின் தொடர்ந்தான். பிரகாஷ் டிக்கெட்டுகளை வாங்கப் போனபோது தடுத்துவிட்டு அவனே வாங்கினான். இருவரும் டெண்டுக்குள் நுழைந்தார்கள். 

உள்ளே சின்ன மேடை இருந்தது. திரையால் மறைக்கப்பட்டிருந்தது. ஹால் ஏறத்தாழ நிரம்பியிருந்தது. சற்று நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. அதை நாட்டியம் என்று சொல்ல முடியாது. முதலில் கழுத்தில் மத்தளத் தைத் தொங்கப் போட்டுக் கொண்டு குதித்துக் கொண்டே ஒருவன் மேடை மீது தோன்றினான். அவனுக்குப் பின்னால் இரண்டு பெண்கள் குட்டை பாவாடையும் ரவிக்கையுமாக வந்தார்கள். அவர்களுக்கு வயது முப்ப துக்குக் குறையாது. முகத்தில் திட்டு திட்டாக அரிதாரம் பூசியிருந்தார்கள். பாட்டு போடப்பட்டது. பாட்டுக்குத் தகுந்தாற்போல் மூவரும் டான்ஸ் ஆடினார்கள். 

பாட்டின் பல்லவியைக் கேட்டதும் “எங்கேயோ கேட்டாற்போல் இருக்கே” என்றான் பிரகாஷ். 

அவன் சிரித்துவிட்டு ஒரு சினிமாவின் பெயரை குறிப்பிட்டு “இந்தப் பாட்டு அதில் வருவதுதான்” என்றான். 

கூர்ந்து கேட்கும் போது பிரகாஷுக்கு மறைந்திருந்த அர்த்தம் புரியத் தொடங்கியது. “இவ்வளவு ஆபாசமாக இருக்கே” என்றான். 

பார்வையாளர்களிடமிருந்து விசில் சத்தம் அதிகரித்தது. பிரகாஷ் ஸ்டேஜ் பக்கம் பார்வையைத் திருப்பினான். பாட்டின் வேகத்திற்கு தகுந்தாற் போல் இரு பெண்களும் வேகமாக சுழன்றபடி ஆடிக் கொண்டிருந் தார்கள். அப்படி ஆடும் போது அவர்களுடைய உடையும் காற்றில் பறந்து கொண்டிருந்தது. பிரகாஷ் சங்கடமாக இருக்கையில் நெளிந்தான். டான்ஸை விட பின்னால் ஒலிக்கும் பாட்டை சகித்துக் கொள்வது இன்னும் அருவருப்பாக இருந்தது. மக்களின் மனம் இப்படி திசை மாறிப் போவானேன்? 

திடீரென்று பக்கத்தில் இருந்தவன் பிரகாஷின் கையைப் பற்றி எழுந்துகொண்டே “வாங்க சீக்கிரம்” என்றான். மேற்கொண்டு பேசவும் வாய்ப்பு தராமல் ஏறத்தாழ இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். அதற்குள் ஹாலுக்குள் அல்லகல்லோலம் ஏற்பட்டது. எல்லோரும் கும்பலாக ஒரே சமயத்தில் வெளியேற நினைத்ததில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டன. இருவரும் ஒரு நிமிஷம் முன்னாடி கிளம்பிவிட்டதால் சுலபமாக வெளியேற முடிந்தது. 

வெளில் வந்து பார்த்தவன் திகைத்துப் போய் விட்டான். சுற்றிலும் போலீசார் லட்டியால் அடித்தபடி கைக்கு அகப்பட்டவர்களை வேனில் ஏற்றிக் கொண்டிருந் தார்கள். எங்கும் ரகளையாக இருந்தது. 

“இந்தப் பக்கமாக வாங்க” என்றபடி டெண்டுக்கு பின் பக்கமாக அழைத்துச் சென்றான். ஒரே இருட்டு. இரண்டு நாட்களுக்கு முன்னால் மழை பெய்ததில் தரை முழுவதும் சேறாக இருந்தது. 

*கவனமாகத் தாண்டுங்க. முள் வேலி இருக்கு” என்றான் அவன், பிரகாஷும் தாண்டிக் குதித்தான். இரு வரும் சற்று தூரம் நடந்து விட்டு நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டார்கள். 

“நாம் எங்கே இருக்கிறோம்?” பிரகாஷ் கேட்டான், “சினிமா ஹாலின் பின்புறம்,” அவனுக்கு இன்னும் மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது. 

“என்னதான் நடந்தது?” பிரகாஷ் கேட்டான். 

“அவன் லைசென்ஸ் வாங்கியிருக்க மாட்டான். இது போன்ற விஷயங்களில் போலீஸாரின் மாட்டினால் முன்பின் விசாரிக்கமாட்டார்கள். நூறோ, இருநூறோ தண்டம் அழுதால் தவிர விட மாட்டார்கள்” என்றான். 

சினிமா ஹாலைவிட்டு வெளியே வந்தார்கள். “இது போன்றவற்றுக்கு அரசாங்கம் லைசென்ஸ் கூட தருமா?” வியப்புடன் கேட்டான் பிரகாஷ். 

“இது போன்ற விஷயங்களில் அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருக்கும்.* 

இருவரும் பெட்டிக் கடை அருகில் வந்தார்கள். “சிகரெட் பிடிப்பீங்க இல்லையா” என்று கேட்டபடியே” வில்ஸ் பாக்கெட் ஒன்று” கடைக்காரனின் சொன்னான். பணம் கொடுப்பதற்காக சட்டைப் பையைத் தடவிக் கொண்டே “அடடா” என்றான். 

“என்ன விஷயம்?” பிரகாஷ் பதட்டத்துடன் கேட்டான். 

பேண்ட் பேக்கட்டுகளையும் தேடிக் கொண்டே. “பர்ஸ் காணும். எங்கேயோ விழுந்துவிட்டது போலியிருக்கு” என்றான். 

பிரகாஷ் மேலும் பதட்டமடைந்து “சரியா பாருங்க” என்றான். 

கடைக்காரன் சிகரெட் பேக்கட்டை நீட்டிக் கொண்டே “எவ்வளவு பணம் வெச்சிருந்தீங்க சார்?” என்று விசாரித்தான். 

“கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும்.” சிகரெட் பேக்கெட்டுக்கு பிரகாஷ் பணம் கொடுத்து விட்டான். 

“சாரி. நீங்க கொடுக்கும்படியாக ஆகிவிட்டது” என்றான் அவன். 

“பரவாயில்லை. நாம் வந்த வழியில் போய் பார்த்தால் கிடைக்குமோ என்னவோ” என்று திரும்பப் போனான். 

அவன் தடுத்து விட்டான். “இந்த இருட்டில் எங்கே என்று தேடுவோம்? இந்நேரம் எவன் கையிலேயாவது கிடைத்திருக்கும் போகட்டும் விடுங்க.” 

பணம் தொலைந்து போனாலும் அவன் பதட்டப் படாமல் இருந்தது பிரகாஷுக்கு வியப்பாக இருந்தது. அதை உணர்ந்தவன் போல் அவன் முறுவலித்தான். “இதில் வருத்தப்பட என்ன இருக்கு? ஆட்டத்தில் இழந்தோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்றான். 

“உண்மைதான் என்றாலும் எல்லோராலும் உங்களைப் போல் இந்த விஷயத்தை இவ்வளவு லேசாக எடுத்துக் கொள்ள முடியாது” என்றான் பிரகாஷ். 

“இனி அந்த விஷயத்தை மறந்து விடுவோம். மறு படியும் இங்கேயே சந்தித்துக் கொள்வோம். நீங்க எங்கே வேலை பார்க்கறீங்களோ சொல்லவே இல்லையே?” என்று கேட்டான். 

அதுவரையில் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. என்பதை உணர்ந்து, “என் பெயர் பிரகாஷ். இன்கம்டாக்ஸ் ஆபீஸில் வேலை பார்க்கிறேன். நீங்க?” என்றான். 

“என் பெயர் கோபாலஸ்வாமி. லேபர் சைக்காலஜி யில் ரிசெர்ச் செய்து வருகிறேன்” என்றான் அவன். 


மறுநாள் காலையில் ஏழு மணிக்கு விழிப்பு வந்தது பிரகாஷுக்கு. வழக்கமாக ஆறு மணிக்கே விழிப்பு வந்து விடும். ஆனால் உடனே எழுந்து கொள்ளமாட்டான். காலை வேளையில் வேறு வேலை எதுவும் இல்லாதது போல் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் நடமாடும் மக்களை வேடிக்கை பார்க்கும் மாமா. வேலைக்காரி பத்து பாத்திரம் தேய்க்கும் சத்தம், தூசி நிறைந்த சூழ்நிலை. இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்க அவனுக்கு விருப்பம் இல்லை. 

பிரகாஷ் அறையை விட்டுவெளியே வந்ததும் சீதா எதிரே வந்தாள். “அத்தான்! கிரோஸின் தீர்ந்து விட்டது. கடைக்குப் போய் வாங்கி வரணும்” என்றாள். 

திடீரென்று பிரகாஷை சோர்வு ஆட்கொண்டது. காலையில் எழுந்ததும் காபி குடித்துக்கொண்டே பேப்பரை படித்துவிட்டு, நிம்மதியாக குளித்துச் சாப்பிட்டு விட்டு நிதானமாக ஆபீசுக்குப் போகணும் என்பது அவனுடைய விருப்பங்களில் ஒன்று. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த குற்றத்திற்காக அதுவும் தகுதிக்கு மிஞ்சிய விருப்பமாகிவிட்டது. 

அவன் முகத்தில் தென்பட்ட மாற்றத்தை கவனித்த சீதா “காமாட்சி வீட்டிலும் கேட்டு விட்டேன். அவர்கள் வீட்டிலும் இல்லையாம்” என்றாள். 

“திரும்பத் திரும்ப அவர்களிடம் கடன் கேட்பது, நன்றாக இருக்காது. கடைக்குப் போகிறேன்.” பிரகாஷ் சொன்னான். 

கிரோஸின் வாங்குவதற்கு கேனை எடுத்துக் கொள்ளும் போது “அப்படியே அரிசியும் வாங்கிக் கொள்ளுங்கள். கொஞ்சமாகத்தான் இருக்கு” என்று பையை நீட்டினாள் சீதா. 

நேற்று இரவு கையில் இருந்த பணத்தை சிகரெட் டுக்காசு கொடுத்தது நினைவுக்கு வந்தது “அவ்வளவு பணம் என்னிடம் இருக்காதே” என்றான். 

சீதா பையைக் கீழே வைத்துவிட்டு “அப்பாகிட்டே இருக்கோ என்னவோ. கேட்டுப் பார்க்கிறேன்” என்று உள்ளே போனவள் உடனே திரும்பு வந்தாள். “அவரிட மும் இல்லையாம்.” 

பிரகாஷுக்கு எரிச்சலாக இருந்தது. இந்தப் பெண்கள் ஏன் இவ்வளவு பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள்? மாதக் கடைசியில் பணம் பற்றாக்குறை இருக்கும் போது அப்படியாவது அந்த சினிமாவுக்கு போகாவிட்டால் என்ன? 

திடீரென்று அவனுக்கு இன்னொரு எண்ணம் தோன்றியது. தான் மட்டும் நேற்று காஸிநோவுக்குப் போவானேன்? பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கம்தானே. பிரச்னைகள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்ட பிறகு ரொம்ப பாதிக்காதோ என்னவோ. கிரோஸின் இல்லாமல் போவது, பிடித்த சினிமா பார்க்க நினைக்கும் போது கையில் காசு இல்லாமல் போவது, கூட வேலை பார்க்கும் குப்புசாமி ஒவ்வொரு நாளும் புதுப் புது சட்டையில் வருவது…. எல்லாமே பிரச்னைகள்தான். வாழ்க்கையுடன் பிணைந்து விட்ட பிரச்னைகள். நடுத்தர வர்க்கத்திற்கே உண்டானவை. இவர்கள் பிரச்னையிலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசிக்க மாட்டார்கள். எப்படித் தள்ளிப் போடுவது என்று தான் யோசிப்பார்கள். மாதக் கடைசியாக இருக்கும் போது சீதா சினிமாவுக்கு போனதும், தான் காஸினோ வுக்குப் போனதும் அப்படித்தான். இதில் அவளைக் குறை சொல்ல எதுவும் இல்லை. 

டின்னையும், பையையும் எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்குத் கிளம்பினான். அரிசிக்குப் பணம் போறாது என்றாலும் மளிகைக் கடையில் கடன் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தான். ரேஷன் கடையின் முன்னால் நின்றிருந்த மக்கள் வரிசையைப் பார்த்ததும். அவனுக்கு சோர்வு ஏற்பட்டது. க்யூ ரொம்ப நீளமாக இருந்தது. போய் கடைசியில் நின்று கொண்டான். முன்னால் நின்று கொண்டிருந்தவன் கையில் டிரான் ஸிஸ்டருடன் நின்றிருந்தான். 

காலை வெயிலாக இருந்தாலும் கசகசவென்று இருந்தது. டிரான்ஸிஸ்டரில் பாட்டு முடிந்து விளம்பரங்கள் ஒலிக்கத் தொடங்கின. 

“டிங் டிங்- குருவி பிராண்ட் டூத் பேஸ்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.” 

“டிங் டாங்… இந்தியாவிலேயே சிறந்த ஜவுளிக்கடை எங்களுடையதுதான்.” 

பிரகாஷுக்கு தலைவலி வரும் போல் இருந்தது. நல்ல வேளையாக அவனே ஆஃப் செய்து விட்டான். க்யூ மெதுவாக நகர்ந்தது, 

வாசையில் இருக்கும் எல்லோருக்கும் கிரோஸின் கிடைக்குமா? ரேஷன் கடைகள் இருப்பதே பொருட்கள் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். என்பதற்காகத்தானே. 

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தங்களுக்கு வேண்டியதை யூனியன் மூலமாக சாதித்துக் கொள்கிறார் கள். இளைஞர்கள் தலைமுடி வளர்ப்பதிலும், புதுப்புது ஃபேஷன்களைத் தேடுவதிலும் மூழ்கியிருக்கிறார்கள். 

உண்மையிலேயே நலித்து போகிறவன் சராசரி மனிதன்தான். இதற்கு தீர்வுதான் என்ன? புரட்சி வந்தால் தான் இந்த சமுதாயம் சீர்படுமோ என்னவோ. பிரகா ஷுக்கு சிரிப்புதான் வந்தது. ரேஷன் கடை க்யூவில் நின்று கொண்டு புரட்சி பற்றி யோசிப்பதாவது? 

கடைவாசலில் ஏதோ ரகளை சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான். கஸ்டமர் ஒருத்தன் கடைக்காரனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். பிரகாஷுக்கு எரிச்சலாக இருந்தது. மேலும் தாமதமாகி விடுமோ என்ற எண்ணம்தான் மேலோங்கியது. 

யாரோ நடுவில் புகுந்து சமாதானப்படுத்த முயன்றார்கள். ஆனால் பலன் இருக்கவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும் போதே சண்டை அதிகரித்து விட்டது. வரிசையில் நின்றுகொண்டிருந்தவளை விட்டு விட்டு நடுவில் வந்தவனுக்கு மண்ணெண்ணையை ஊற்றி விட்டானாம். அதுதான் தகராறு. 

*நடந்தது நடந்துவிட்டது. இனியாவது கொடுக்கத் தொடங்கினால் இந்தேரம் எல்லோருக்கும் கிடைத் திருக்கும் இல்லையா?” யாரோ சொல்லிக் கொண்டிருந் தார்கள். 

உண்மைதான் என்றாலும் அதியாயத்தை சகித்துக் கொள்ளும் பொறுமை நம் இரத்தத்திலேயே ஊறி விட்டதோ. 

“அடடா, என்ன இது? 

யாரோ கத்தியதைக் கேட்டு அந்தப் பக்கம் பார்த் தான். கடைக்காரன் ஷட்டர்களை இறக்கிக் கொண்டிருந்தான். 

“என்ன தம்பி? எங்களுக்கெல்லாம் கிரோஸின் கொடுக்க வேண்டாமா?” யாரோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். கடைக்காரன் எதுவும் பேசாமல் பூட்டிவிட்டு கிளம்பி விட்டான். 

“போலீஸில் புகார் கொடுக்கணும்,” 

“கடைக்காரனே முன் கட்டி கம்பிளைண்ட் தருவான்.” 

“நடுவில் புகுந்து வாங்கிக் கொண்டவனுக்கு புத்தி யிருக்க வேண்டாமா? இத்தனை பேர் வரிசையில் நிற்கும் போது அவனுக்கு மட்டும் என்ன அவசரம்?” 

“அந்த மாதிரி யோசித்தால் பிரச்னையே இருக்காதே” நொந்து கொண்டே வெறுங்கையுடன் வீட்டுக்கு வந்தான் பிரகாஷ். வாசற்படி ஏறும்போது அரிசி இல்லை என்று சீதா சொன்னது நினைவுக்கு வந்தது. மளிகைக் கடைக்காரனிடம் கடன் சொல்லி வாங்கி வரலாம் என்று எண்ணியிருந்தான். கையில் இருக்கும் பணத்தை செலவு செய்துவிட்டால் இன்னும் மூன்று நாட்களை எப்படி தள்ளுவது? 

சீதாவிடம் வெறும் பையைத் தந்து விட்டு, “எனக்கு நேரமாகி விட்டது. ஆபீசுக்குக் கிளம்புகிறேன்” என்றான்.

“பின்னே சாப்பாடு?” வியப்புடன் கேட்டாள் சீதா.

“வெளியில் பார்த்துக் கொள்கிறேன்.” கையில் இருந்த சில்லறைப் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, “இதுதான் இருக்கு. இன்னிக்கு எப்படியாவது சமாளித்துக் கொள்” என்றான். 

சீதா பணத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போய் விட்டாள். பிரகாஷ் உடைகளை மாற்றிக் கொண்டு ஆபீசுக்குக் கிளம்பினான். யார் மீது என்று தெரியாத எரிச்சல், மாலை வரையில் எதுவும் சாப்பிடக்கூடாது என்ற வைராக்கியம். 

– தொடரும்…

– எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ரிஷி என்ற நாவல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்தது. 

– ரிஷி (நாவல்), முதற் பதிப்பு: 2004, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *