கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 5,715 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3

“நான்சென்ஸ்!” எரிச்சலுடன் சொன்னார் பொன்னம்பலம். 

குமார் பதில் சொல்லவில்லை. 

“நாம் எவ்வளவு கட்ட வேண்டி யிருக்கும்?” 

“ஐயாயிரம் வரையில் இருக்கலாம்.” 

“ஒரு சின்ன தவறுக்கு ஐயாயிரம் ரூபாய் பெனால்டியா?” 

குமார் மௌனமாக இருந்தான். 

“பெனால்டி கட்டத் தேவையில்லாமல் நீதான் ஏதாவது வழி சொல்லணும்.” 

“வழியா?” வியப்புடன் கேட்டான் குமார். 

“பின்னே? சார்டெட் அக்கவுண்டெண்டுகளை நாங்க வைத்துக் கொள்வது இது போன்ற ஆபத்துகளில் உதவி செய்யத்தான்.” பொன்னம்பலம் சிரித்தார். 

குமார் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “ஒரு வழி இருக்கு” என்றான். 

“என்ன?” ஆர்வம் கலந்த குரலில் கேட்டார் பொன்னம்பலம். 

“அந்த ஆபீஸில் உங்க பைலில் இருக்கும் ஒரு பேப்பரை நீக்கி விட்டால் போதும்?” 

“இந்தக் காரியத்தை யாரால் செய்யமுடியும்?”

“அந்த ஃபைலை செய்யும் குமாஸ்தாவால் முடியும். அவன் மட்டும் இந்த வேலையை முடித்தால் உங்களுக்கு இந்த பெனால்டி கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.” 

பொன்னம்பலம் உற்சாகத்துடன் எழுந்து கொண்டார். “அந்த குமாஸ்தா யாரோ கொஞ்சம் விசாரித்துச் சொல்லு. இந்த உலகத்தில் பணத்திற்கு விலை போகாதவன் யாரு?” என்றார். 

“ஒரு நிமிடம்” என்று ஃபோனை எடுத்து யாருடனோ பேசினான் குமார். பிறகு ஃபோனை வைத்துவிட்டு பொன்னம்பலம் பக்கம் திரும்பி “யாரோ பிரகாஷாம்” என்றான். 


“நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும்” சுஜாதா சொன்னாள். 

என்ன என்பதுபோல் பார்த்தான் பிரகாஷ். 

“என் மீது எப்படி இரக்கம் காட்டுவது என்ற யோசிக்கிறாய். சரிதானே?” 

தன் மனதில் இருக்கும் எண்ணங்களை ஒன்றாகக் கூட்டினால் அந்த அர்த்தம் தான் வருமோ என்று தோன்றியது பிரகாஷுக்கு. 

மறுபடியும் அவளே சொன்னாள். “அதுதான் உண்மை என்றால் அதைப்பற்றி யோசிக்காதே. என் மீது இரக்கம் காட்டுபவர்களை நான் வெறுக்கிறேன்.” 

ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. கார் எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் வயல்கள் மீதிருந்து வீசும் காற்று குளிர்ச்சியாக இருந்தது. 

“உனக்கு ரொம்ப வியப்பாக இருக்கு இல்லையா?” 

“எது?” 

“உன்னை இப்படி வழியில் நிறுத்தி காரில் ஏற்றிக் கொண்டது. முக்கியமாக ஒருமையில் உன்னை விளிப்பது?” 

பிரகாஷ் மௌனமாக இருந்தான். 

“நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் பிரகாஷ். ரொம்ப நாட்களுக்குப் பிறகு உன்னைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி நம்முடன் படித்த எல்லோரையுமே ஏறத்தாழ மறந்துவிட்டேன், ஆனால் உன்னை மட்டும்..” என்று நிறுத்தினாள், “தேர்வுகளில் எனக்கு முதல் வகுப்பு கிடைக்காமல் போனதற்குக் காரணம் நீயேதான்.” 

புரியாதவன் போல் பார்த்தான் பிரகாஷ். 

“உனக்கு நினைவு இருக்கோ இல்லையோ. நீ எப்போதும் இரண்டாவது பெஞ்சில் கடைசியாக அமர்ந்திருப்பாய். ரொம்ப கவனமாக பாடத்தைக் கேட்டுக் கொண்டிருப்பாய். நான் உன்னையே பார்த்துக் கொண்டிருப்பேன். நாளுக்கு நாள் உன்னிடம் ஈர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் அதை என் மனதிலேயே புதைத்துக்கொண்டு விட்டேன். காரணம் என்ன தெரியுமா? அந்த நாட்களில் காதலை விட பணம் தான் முக்கியம் என்று பலமாக நம்பினேன்.” 

பிரகாஷ் வியப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“என் விருப்பத்திற்கு ஏற்ப பொன்னம்பலத்துடன் என் திருமணம் நடந்தது. இப்பொழுது என்னைச் சுற்றிலும் பணம்தான். ஆனால் அது கிடைத்த பிறகுதான் புரிந்தது, மனிதனுக்கு தேவை பணம் மட்டுமே இல்லை என்று ஒருபக்கம் இப்படி என்றால் இன்னொரு பக்கம் என் மீது இரக்கம் காட்டுபவர்கள், என் கணவரின் வயதைப் பார்த்து என்னை நெருங்க முயற்சி செய்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். அப்படிப்பட்ட ஆண்களைத் தள்ளி வைப்பதற்கு நான் என் மனதுடன் போராட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தில் ரொம்ப களைத்துப் போய் விட்டேன். இந்த நிலையில் அடிக்கடி உன் நினைவு வரத் தொடங்கியது. ஒரு முறை நீ தென் பட்டால் போதுமென்றும் என் மனதில் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அன்றே நான் உன்னிடம் சொல்லியிருந்தால், நமக்குத் திருமணமும் முடிந்திருந்தால் இந்த அளவுக்கு உன்னை நேசித்திருக்க மாட்டேன், அப்போது பணத்தின் மதிப்பு புரிந்திருக்கும்.” சற்று நிறுத்தினாள். 

“உனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கு இல்லையா. எனக்கு மட்டும் சந்தோஷமாக இருக்கு. ஒருமுறை தவறு செய்து உன்னை இழந்து விட்டேன். இன்னொருமுறை அந்தத் தவறைச் செய்யமாட்டேன். உன்னை எப்போதாவது சந்திப்பேன் என்றும், இதை யெல்லாம் உன்னிடம் சொல்லணும் என்றும் எத்தனை முறை மனதிலேயே ஒத்திகை பார்த்துக் கொண்டேன் தெரியுமா?” களைத்துப் போனவள் போல் பின்னால் சாய்ந்து கொண்டாள். 

“இப்போ நாம் எங்கே போகிறோம்?” நிதானமான குரலில் கேட்டான். 

“இங்கே எங்களுக்கு ஃபார்ம் ஹவுஸ் இருக்கு. சமீபத்தில்தான் வாங்கினோம்.” 

“காரை நிறுத்து.” 

சுஜாதா திடுக்கிட்டு அவன் பக்கம் பார்த்தாள். பிரகாஷின் முகம் ரொம்ப சீரியஸாக இருந்தது – தன்னையும் அறியாமல் சாலை ஓரமாக காரை நிறுத்தினாள். பிரகாஷ் கீழே இறங்கி கார் கதவை பலமாக சாத்தினான், “குட்பை சுஜாதா” என்ற சொல்லிவிட்டு வந்த வழியே நடக்கத் தொடங்கினான். 

இந்தச் சம்பவம் இப்படி முடிவதற்குக் காரணம் பிரகாஷின் தனித்தன்மை என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் இது போன்ற சமயத்தில் எந்த இளைஞனுக்கும் குழப்பம் இருக்கத்தான் செய்யும். இந்த நிகழ்ச்சி இப்படி முடியாமல் வேறு விதமாக நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று பின்னால் நினைத்துப் பார்ப்பதும் சகஜம்தான். 

ஆனால் பிரகாஷ் விஷயத்தில் கதை இதோடு முடிய வில்லை. சுஜாதா காரைப் பின்னால் திருப்பி பிரகாஷ் பக்கத்தில் நிறுத்தினாள். 

“பிரகாஷ்! காரில் ஏறிக்கொள். உன்னை அதே இடத்தில் இறக்கி விடுகிறேன்” என்றாள். 

பிரகாஷ் அவள் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்தான். 

“என் மீது இருக்கும் கோபத்தில் உன்னை நீயே வருத்திக் கொண்டு மூன்று மைல்கள் நடப்பானேன்?” என்றாள் முறுவலுடன். 

பிரகாஷ் பதில் சொல்லவில்லை. அவனுடைய நிலைமை சங்கடமாக இருந்தது. தான் என்ன செய்யணும் என்றோ, தன்னுடைய கொள்கைகள் என்னவென்றோ, அவளுடைய காரில் ஏறுவதால் அந்தக் கொள்கைகளுக்கு எந்த விதமான இழுக்கு நேருமோ அவனால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. கெட்டுப் போவதைப் பற்றி, சமுதாயத்தில் மனிதனுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றி, சூழ்நிலையைப் பற்றி அவன் ஒரு நாளும் யோசித்தது இல்லை. அவன் மேதாவி ஒன்றும் இல்லை. தன்னைப் பற்றியும், தன்னுடைய நிலைமை பற்றியும் தர்க்க ரீதியில் யோசிக்கும் திறமை அவனுக்கு இல்லை, 

சாலையில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவன் தங்களையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போவதை பிரகாஷ் கவனித்தான். 

“ப்ளீஸ்!” என்றாள் சுஜாதா. 

“காரில் ஏறிக்கொண்டு திரும்பவும் பழைய இடத்தில் இறங்கி விடப் போகிறோம். இதில் தவறென்ன இருக்கு?” சிறிய அத்ம வஞ்சனையுடன் பிரகாஷ் காரில் ஏறிக் கொண்டான். சின்ன குலுக்கலுடன் கார் புறப்பட்டது. 

ரொம்ப நேரம் வரையில் இருவரும் பேசிக் கொள்ள வில்லை. அந்தக் கொஞ்ச நேரத்தில் அவன் நன்றாக தேறிக் கொண்டு விட்டான். சுஜாதா மௌனமாக காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள். பிரகாஷுக்கு இந்த சூழ்நிலை வேதனை தரக் கூடியதாக இருந்தது. இது போல் அவள் தன்னை வெறுமே இறக்கி விட்டு போய் விடாமல் ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சராசரி மனிதனுக்கு இருக்கும் பலவீனங்களுக்கு அவன் அப்பாற்பட்டவன் ஒன்றும் இல்லையே! 

அதற்குள் அவனுடைய ஆசை நிறைவேறியது. ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டே மறு கையை அவன் கை மீது பதித்து “என்னை மன்னித்து விடு பிரகாஷ்” என்றாள். அந்தக் குரலில் தென்பட்ட தெளிவற்ற நடுக்கம் அவன் இதயத்தை உலுக்கி விட்டது. 

அவன் இறங்க வேண்டிய இடம் வந்ததும், “இங்கே நிறுத்தட்டுமா?” என்றாள். 

அவன் தலையை அசைத்ததும் ஓரமாகக் காரை நிறுத்தினாள். காரிலிருந்து இறங்கிய பிரகாஷ் அவள் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்துக் கொண்டே “சுஜாதா! நீதான் என்னை மன்னிக்க வேண்டும். நீயே யோசித்துப் பாரு. சீதாவைத் திருமணம் செய்து கொள்ளும் பொறுப்பு. என் மீது இருக்கும் போது உன்னை எப்படி காதலிக்க முடியும்?” என்றான். 

தன்னுடைய செயலை நியாயப்படுத்திக் கொள்ளும் விதமாக அவளிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்று ரொம்ப நேரமாகத் தவித்துக் கொண்டிருந்தான் தன்னுடைய எண்ணங்களை (அவளுடைய பார்வையில்) தன்னுடைய பலவீனங்களை மறைக்கும் விதத்தில் சொல்லி முடித்த பிறகு நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டான். 

ஆனால் அவனுடைய நிம்மதி ரொம்ப நேரம் நீடிக்க வில்லை. சுஜாதா காரை ஸ்டார்ட் செய்து கொண்டே “பிரகாஷ்! ஒரு சின்ன விஷயம்” என்றாள், “நம் இருவருக்கும் இடையே காதல் என்ற பெரிய வார்த்தை எதுக்கு?” என்று சொல்லிவிட்டு காரை ஓட்டிக்கொண்டு போய்விட்டாள். 

பிரகாஷ் ரொம்ப நேரம் வரையில் கார் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்று விட்டான். எவ்வளவுதான் சமாதானப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் சுஜாதாவின் நேர்மையின் முன்னால் தன்னுடைய செயல் அற்பமானதாகத் தோன்றியது. ரொம்ப உயர்ந்தவன் போல் நடந்து கொண்டாலும் உள்ளூற ஏதோ அபசுரம் ஒலிப்பது போன்ற உணர்வு. தான் மறுப்பு தெரிவித்து இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் உடனே அவள் போய் விடாமல் தன்னை மேலும் கெஞ்சியிருக்கலாமே என்ற எதிர்பார்ப்பு. இது பலவீனம் அல்லாமல் வேறு என்ன? 

கோவிலுக்குச் சென்று கடவுளை மனம் உருக தியானம் செய்துவிட்டு திரும்பி வரும்போது எதிரே வரும் இளம் பெண்களைக் கண்ணிமைக்காமல் பார்க்கும் பக்தன் தன்னுடைய செயலை எப்படி நியாயப்படுத்திக் கொள்வான்? பெண்களைப் பார்ப்பதை விட்டுவிட வேண்டும் இல்லையா? கோவிலுக்கு போவதையாவது விட்டுவிடணும். ‘அது வேறு இது வேறு’ என்று மனதை ஏமாற்றிக் கொள்வதுதான் மனிதனின் இயல்பு. இரட்டை மனப்பான்மை. 

‘சுஜாதாவை எங்கேயாவது சந்திக்க நேர்ந்தாலும் இனி பேசவே கூடாது. அவளுடைய காரில் ஏறவும் கூடாது’ என்று உடனுக்குடன் ஒரு முடிவுக்கு வந்தவனாக இரண்டடி நடந்தான். சட்டென்று அப்படியே நின்று விட்டான். எதிரே தாய் மாமன்! 

ரொம்ப நேரமாக தன்னையே கவனித்து வருவது போல் கண்களை இடுக்கிக் கொண்டு நின்றிருந்தார். 

“யார் அந்தப் பெண்?* அவருடைய குரலில் சந்தேகம் வெளிப்படையாகத் தென்பட்டது. 

பிரகாஷின் முகம் வெளிறிப்போய் விட்டது. “என்னுடைய சினேகிதி. கல்லூரியில் என்னுடன் சேர்ந்து படித்தவள்” என்றான். 

‘உண்மைதானா?’ என்பது போல் பார்த்துவிட்டு “இனி வீட்டுக்குத்தானே” என்றார். 

இருபது வருடங்களாக தான் கடைபிடித்து வந்த நல்லதனத்தை, தனித்தன்மையை மாமா தன்னுடைய ஒரே பார்வையில் அஸ்திவாரத்துடன் தகர்த்து விட்டாரே. நல்ல தனத்திற்கு அர்த்தம்தான் என்ன? பிரகாஷ் முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தான். 

இயலாமைக்கும், அப்பாவித்தனத்திற்கும், தனித் தன்மை இல்லாமல் இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு பிரகாஷுக்கு அனுபவம் போறாது. இன்னும் ஒரு படி மேலே யோசித்து இருந்தால் பிரகாஷுக்கு மாமாவிடம் குறை தென்பட்டிருக்காது. 

மகன் முதல்முறையாக குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று தெரிந்தால் ஏதோ நண்பர்களுடன் ஜாலியாக கிளப்புக்குப் போயிருக்கக்கூடும் என்று எந்த தந்தையும் நினைக்க மாட்டார். தேவதாஸ் போல் பாட்டிலும் கையுமாக அலையப் போவதாக நினைத்து பயந்து விடுவார். வேடிக்கை என்னவென்றால் இந்த உலகத்தில் அடுத்தவனின் சுயக்கட்டுப்பாடு விஷயத்தில் நம்பிக்கை வைப்பது ரொம்பக் குறைவு. அதிலும் நெருங்கியவர்கள் விஷயத்தில் ரொம்பவே. 

ஒரு காலத்தில் தான் செய்த அல்லது இப்போதும் செய்துகொண்டு இருக்கிற கீழ்த்தரமான செயல்களை அடுத்தவன் செய்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது சிலரால். தான் எப்படியும் ஒழுக்கத்தைக் கடை பிடிக்காமல் போய்விட்டோம்- அடுத்தவனாவது நல்ல வழியில் நடக்கட்டும் என்று மனதை ஏமாற்றிக் கொண்டு இலவசமாக அறிவுரை வழங்க முயற்சி செய்வார்கள். 

பெரியவர்களாக இருப்பவர்கள் தங்களுடைய ஆளுமையில் இருக்கும் சிறியவர்கள் மீது தங்களுடைய அபிப்பிராயங்களை திணிப்பதற்காக ‘தலைமுறை இடைவெளி’ என்ற பெயரில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள். 


பிரகாஷ் மாமாவுடன் சேர்ந்து வீட்டுக்கு வந்த போது வாசலில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. பிரகாஷ் பக்கத்து வீட்டிற்குப் போய் சாவி வாங்கி வந்து கதவைத் திறந்தான். உள்ளே இருட்டாக இருந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டே சுவிட்சைப் போட்டான். அந்த அறையில் இருந்த நிசப்தம் அவன் மனதிலும் பரவுவது போல் இருந்தது. 

“சொல்ல மறந்து விட்டேன்” அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தாற்போல் சுவாமிநாதன் சொன்னார். “இன்றுதான் கடைசி நாளாம். அடுத்த வீட்டு காமாட்சியுடன் சினிமாவுக்குப் போகப் போவதாக சீதா சொல்லி யிருந்தாள்.” 

பிரகாஷ் சட்டை பட்டன்களை கழட்டிக் கொண்டே “எந்த சினிமா?” கேட்டான். 

“காட்டு ராணியோ ரவுடீ ராணியோ ஏதோ சொன்னாள்.” 

பிரகாஷ பதில் சொல்லவில்லை. கிணற்றடியில் கை கால்களை அலம்பிக்கொண்டு அப்படியே திண்ணையில் அமர்ந்து கொண்டான். குளிர்காலம் என்பதால் சீக்கிரமாகவே இருட்டிவிட்டது. வாதாம் மரத்தின் மீதிருந்து காற்று அலை அலையாக வீசிக் கொண்டிருந்தது. 

திடீரென்று அவனை ஏமாற்றம் சூழ்ந்து கொண்டது. ஏதோ இழந்து விட்டாற் போன்ற உணர்வு. இனம் புரியாத அதிருப்தி. 

அவன் சுஜாதாவைக் காதலிக்கிறானா? இல்லை இல்லை. அது வெறும் ஈர்ப்புதான். பின்னே சீதா? இந்த விஷயத்தில் காதல் என்ற புனிதமான சொல்லை பயன் படுத்துவானேன்? தான் அவளைக் கல்யாணம் செய்து கொள்வான். அவளுடன் குடித்தனம் நடத்துவான். அவள் குழந்தைகளைப் பெற்றுத் தருவாள். காதல் என்றால் இந்த பந்தம்தானா? 

அவனுக்குத் திடீரென்று தன்னுடன் படித்த குமாரின் நினைவு வந்தது. ஏறத்தாழ நான்கு வருடங்களுக்கு முன்னால் பிரிந்த நண்பனின் நினைவுகள் அவனை சூழ்ந்து கொண்டன. அந்தக் காலத்தில் குமார் எழுதிய கதையில் சில வரிகள் இன்னும் அவன் மனதில் பசுமை யாக இருந்தன. 

‘மாலை ஐந்து மணி ஆனதும் பால்கனியில் நின்று கொண்டு உனக்காக காத்திருப்பதில் இருக்கும் சந்தோஷம் எப்படிப்பட்டதோ. உனக்கு எப்படி தெரியும் – திடீரென்று தெருமுனையில் உன் உருவம் தென்படும். தலை குனிந்த படி வேக வேகமாக நடந்து வந்து கொண்டிருப்பாய், தெரு வரையில் வந்தவன் வீட்டுக்குள் வராமல் இருக்கப் போவ தில்லை. இருந்தாலும் உன் நடையில் அந்த வேகத்தை, சீக்கிரமாக வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற தவிப்பை உணரும் போதும், உன் வருகை என்னுள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகவும் எத்தனை யுகங்கள் வேண்டுமானாலும் என்னால் காத்திருக்க முடியும். எதிர் பார்ப்பில் உள்ள சுகம் உனக்கு எப்படி தெரியும்?’

இந்தக் கதையை எத்தனை முறை படித்திருப்பான்? குமார் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று நினைக்கத் தோன்றியது. கல்லூரியில் படிக்கும் போது அடுத்தடுத்து உட்கார்ந்து கொண்டதால் குமாரின் பாதிப்பு பிரகாஷ் மீது அதிக மாகவே இருந்தது. வார்த்தைகளில் சொல்லி விட முடியாத அளவுக்கு.

மாமாவின் அழைப்பைக் கேட்டு பிரகாஷ் உள்ளே சென்றான். தட்டைப் போட்டு பரிமாறிக்கொண்டே “அவர்கள் வருவதற்கு நேரமாகிவிடும். நாம் சாப்பிடுவோம்” என்றார் சுவாமிநாதன். 

விருப்பம் இல்லாவிட்டாலும் தட்டின் முன்னால் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டதாக பெயர் பண்ணி விட்டு எழுந்துகொண்டான். 

சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பும் போது “மறுபடியும் எங்கே போகிறாய்?” சுவாமிநாதன் கேட்டார். 

“சும்மா கடைத்தெரு வரையில் போகிறேன், சீக்கிரம் வந்துவிடுவேன்.” சொல்லிக்கொண்டே கதவை வெறுமே சாத்திவிட்டுப் புறப்பட்டான். உண்மையிலேயே எங்கே என்று அவனுக்குத் தெரியவில்லை. நிதானமாக நடக்கத் தொடங்கினான். எதிரே கோவில் துவஜஸ்தம்பம் இந்த உலகில் நடக்கும் பாபச் செயல்களை பார்ப்பதற்காக என்பதுபோல் உயரமாக இருந்தது. உள்ளே போகலாமா என்ற நினைப்பை உடனே மாற்றிக் கொண்டான். பாட்டி துணையுடன் கோவில் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த தாசில்தாரின் மகள் பிரகாஷை கடைக் கண்ணால் பார்த்தும் பார்க்காதது போல் முன்னால் நடந்தாள். அவள் இதழ்களில் மலர்ந்த முறுவலை தெரு விளக்கு வெளிச்சத்தில் பிரகாஷ் கவனித்தான். ஏனோ அந்தக் காட்சி அவன் மனதை நெகிழ்த்தி விட்டது- அதில் வேறு எந்த எண்ணமும் இருக்கவில்லை. பதினாறு வயது பிராயத்தில் இருக்கும் பெண் ஒருத்தி உலகத்தில் இருக்கும் அப்பாவித்தனத்தை கண்ணிமைகளுக்கு பின்னால் மறைத்துக் கொண்டு முறுவல் பூக்கும் போது வெறுமே அப்படியே பார்த்துக் கொண்டிருப்பது கூட ஒரு இனிமையான அனுபவம்தான். 

மறுபடியும் பின்னால் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் திரும்பிப் பார்க்கவில்லை. தொலைவில் நடந்து போய்க் கொண்டே தெருமுனையில் திரும்பிவிட்டாள். மேலும் பத்தடிகள் நடந்து பிரதான சாலைக்கு வந்தான். சாலையைத் தாண்டி அந்தப் பக்கமாக இருக்கும் குறுகலான தெருவுக்குள் நுழைந்தான். தொலைவில் வண்ண வண்ண மின் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. பெரிய பெரிய பேனர்ஸ் கட்டப்பட்டிருந்தன. பிரகாஷ் என்றுமே அந்த இடத்திற்குப் போனதில்லை. உள்ளே என்ன நடக்கிற தென்றும் அவனுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் விருப்பமும் இல்லை. தனக்குள் ஏதோ யோசித்தபடி நடந்து கொண்டிருந்தான். 

“வணக்கம் சார்” என்ற சொல் காதில் விழுந்ததும் அந்தப் பக்கம் பார்த்தான். 

இஸ்மாயில், பிரகாஷ் ஆபீஸில் ப்யூன் ஆக இருப்பவன். கேட் அருகில் ஸ்டூல் மீது அமர்ந்திருந்தவன் எழுந்து அருகில் வந்தான். “என்ன சார்? இந்தப் பக்கமாக வந்திருக்கீங்க?” என்று கேட்டான். 

“சும்மாதான்.” 

“உங்களை இந்தப் பக்கம் என்றுமே பார்த்தது இல்லையே. அதான் கேட்டேன்” என்றான் இஸ்மாயில். 

“அது போகட்டும். நீ இந்த இடத்தில் இருக்கிறாயே, ஏன்?” சுற்றிலும் பார்த்துக்கொண்டே கேட்டான். 

“இரவு நேரத்தில் இங்கே வேலை பார்க்கிறேன் சார்.” 

பிரகாஷ் வியப்படைந்தான். அவன் வியப்பை புரிந்து கொண்டாற்போல் “இரவு ஏழு மணியிலிருந்து பதினோரு மணி வரையில் வேலை பார்த்தால் இருபது ரூபாய் தருவாங்க சார். இரண்டு மாதமாக இங்கே வேலை பார்க்கிறேன்” இஸ்மாயில் சொன்னான். 

“பகல் முழுவதும் ஆபீஸிலும் இரவில் இங்கேயும் வேலை பார்த்து வருகிறாயா?” மேலும் வியப்புடன் கேட்டான் பிரகாஷ். 

“அறுநூறு ரூபாய் வரையிலும் கிடைக்கும். அனாவசியமாக அதை விடுவானேன்.” 

பிரகாஷ் இஸ்மாயிலைக் கூர்ந்து பார்த்தான். அவன் வயது நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் நடுவில் இருக்கக்கூடும். கன்னத்தின் அருகில் தலைமுடி நரைத்திருந்தது. குளிருக்கு ஸ்வெட்டரும், கழுத்தைச் சுற்றிலும் மஃப்ளரும் அணிந் திருந்தான். முகத்தில் இருந்த சுருக்கங்கள் வாழ்க்கையில் அவன் பட்ட கஷ்டங்களை, அனுபவங்களை பறைச் சாற்றுவது போல் இருந்தன. 

“உனக்கு எத்தனை குழந்தைகள்?” பிரகாஷ் கேட்டான்.

“ஐந்து குழந்தைகள் சார், பெரியவன் பிளஸ் டு படிக்கிறான். அவனுக்குப் பிறகு இரண்டு பெண் குழந்தைகள்” என்றவன் சினிமா ஹால் பக்கத்தில் பெட்டிக் க்கடை அருகில் நின்று கொண்டிருந்த பையனை சுட்டிக்காட்டி, “அதோ சார். அவன்தான் மூத்தவன்” என்றான். 

பிரகாஷ் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். நெற்றியில் விழும் கேசத்தை ரஜனி ஸ்டையில் பின்னால் தள்ளியபடி யாருடனோ பேசிக்கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தான். 

“நீ இந்தக் குளிரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உன் மகன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறானா?” கோபம் கலந்த குரலில் கேட்டான். 

இஸ்மாயில் சிரித்துவிட்டான். “இல்லை சார். இரவு பத்து மணி வரையில் அந்தக் கடையில் ‘மட்கா’ வியாபாரம் நடக்கும். அந்த கணக்கு வழக்குகளை பார்ப்பான்” என்றான். 

பிரகாஷுக்கு யாரோ கன்னத்தில் அடித்தாற்போல் இருந்தது “பின்னே படிப்பு?” என்றான். 

“நானும் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன் சார். அவன் கேட்க மாட்டான். பத்து மணிக்குப் பிறகு வீட்டுக்குப் போய் பன்னிரெண்டு வரையிலும் படிப்பான். கிளாஸில் முதல் மார்க் அவனுக்குத் தான்” சொல்லிவிட்டு ஏதோ வேலையாக இஸ்மாயில் உள்ளே போனான். 

பிரகாஷ் மறுபடியும் அந்த இளைஞனைப் பார்த்தான். அலட்சியமாக வாரப்பட்ட தலை. ஜீன்ஸ் பேண்ட் வெளி தோற்றத்திற்கும் உள் மனிதனுக்கும் எவ்வளவு வேறுபாடு? இவ்வளவு சின்ன வயதிலேயே குடும்பக் கஷ்டத்தை உணர்ந்துகொண்டு எவ்வளவு பொறுப்பாக செயல்படுகிறான்? 

பிரகாஷுக்கு இஸ்மாயிலை நினைக்கும் போது இரக்கம் தான் ஏற்பட்டது. இந்தக் குளிரில் தந்தையும், மகனும் கஷ்டப்பட்டு உழைத்து நாள் ஒன்றுக்கு முப்பது ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தங்கள் ஆபீஸிலேயே வேலை செய்யும் ராஜு நினைவுக்கு வந்தான். அவனும் ப்யூன் தான். எந்த கிளயிண்டும் அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டு போய்விட முடியாது. யாராக இருந்தாலும் பத்து ரூபாய்க்குக் குறைவாக வாங்க மாட்டான். 

நேர்மைக்கு மதிப்பு கொடுத்து தந்தையும் மகனும் குளிரையும் பொருட்படுத்தாமல் உழைத்துச் சம்பாதிக்கும் பணம், ஒரு சின்ன ஆத்ம வஞ்சனையின் மூலம் (இன்னும் சில நாட்கள் போனால் அதுவும் இருக்காது.) மனச்சாட்சியைப் புதைத்து விட்டு கையை நீட்டினால் சுலபமாக கிடைத்து விடுகிறது. மனிதன் சீரழிந்து போகாமல் எது அவனை பாதுகாத்து வருகிறது? 

ஆபீஸில் எல்லோருக்கும் இஸ்மாயில் என்றால் கௌரவம். மேலதிகாரி கூட அவனை மதிப்புடன் நடத்துவார். அவனுடைய நேர்மை எல்லோருக்கும் தெரியும். 

ராஜு ஏற்கெனவே இடம் வாங்கிவிட்டான். வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தான். ரிடையராகும்போது எதிர்காலத்தைப் பற்றி அவனுக்கு எந்தக் கவலையும் இருக்காது. 

சமுதாயத்தில் மாற்றம் வரவேண்டும். புரட்சி வந்தால் தான் இது சாத்தியம். தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்றாலும், மகனை பள்ளியில் சேர்க்கணும் என்றாலும், குடும்ப வாழ்க்கை பிரச்னைகள் இல்லாமல் நிம்மதியாக கழிய வேண்டும் என்றாலும் பணம் தேவை. மனிதனின் அன்றாட வாழ்க்கை பணத் துடன் முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது. பணமானது எப்போதும் மனிதனின் நேர்மையைச் சோதித்துக் கொண்டே இருக்கும். 

“இங்கேயே நிற்கறீங்களே?” இஸ்மாயில் வந்து கொண்டே கேட்டான். 

பிரகாஷ் தடுமாறினாள், “சும்மாதான். கிளம்புகிறேன்” என்றான். 

“உள்ளே போய் பாருங்க சார்” என்றான் இஸ்மாயில், 

உடனே வீட்டுக்குப் போய் எதுவும் செய்யப் போவதில்லை. உள்ளே என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று நினைத்தபடி உள்ளே போனான் பிரகாஷ். 

– தொடரும்…

– எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ரிஷி என்ற நாவல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்தது. 

– ரிஷி (நாவல்), முதற் பதிப்பு: 2004, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *