ரங்கதாசி…

திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின் வெள்ளை கோபுர வாசலில் அந்த கார் வந்து வந்து நின்றது.
எதிராஜ் பின் இருக்கையினின்றும் நகர்ந்து கதவைத் திறந்து வெளியே இறங்கினார். மாலைநேரக் காற்று இதமாக வீச ஆரம்பித்தது.
“ஐயா! இந்த கிழக்குவாசல்வழியே உள்ளேபோனால் அதிக நெரிசல் இல்லாமல் போகலாம்னு கேள்விப்பட்டுருக்கேன் அதான் இந்த வழில கொண்டுவிடறேன்” என்ற அந்த வாடகைக்காரின் ட்ரைவர், கேட்டதற்கு அதிகமாகவே எதிராஜ் பர்சிலிருந்து பணத்தை எடுத்துக்கையில் கொடுக்கவும் அதை கண்ணில் ஒற்றிக்கொண்டான்.
எதிராஜ் தலையாட்டினார்.
அவருக்கு இது ஒரு எதிர்பாராத பயணம். அறுபதுவருஷ வாழ்க்கையில் எதுதான் அவர் எதிர்பார்த்தபடி நடந்திருக்கிறது?
எதிராஜிற்கு ஸ்ரீரங்கம் என்ற ஊருக்குள் நுழைந்ததும் நினைவுகள் பின்னோக்கிப்போக காரணம் இருக்கிறது.
பள்ளிநாட்களில் எதிராஜிற்கு ஓவியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. கண்காண்பதை விரல் அப்படியே சித்திரமாய் தீட்டும் ஓவியக்கலை அவரிடம் ஏழுவயதிலேயே ஒட்டிக்கொண்டது. ரியலிஸ்டிக் ஓவிய முறையில் அப்போதே நிறைய வரையத்தொடங்கினான் சிறுவன் எதிராஜ். வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்களை பத்துநிமிஷத்திற்குள் படமாய் வரைந்துவிடுவான். பள்ளிக்கூடத்தில் டீச்சர் வீணாபடேல் சொல்லுவாள். ”எதிராஜ் நீ பள்ளிப்படிப்பு முடித்ததும் ஓவியக்கல்லூரில சேர்ந்து படிக்கணும் உனக்கு இந்தக்கலை கைவசமாய் இருக்கிறது!”
ஆனால் அவன் அப்பா இதை ஆரம்பத்தில் எதிர்த்தார்..
“நாமெல்லாம் மிடில்கிளாஸ் நமக்கெல்லாம் படிப்புதாண்டா நல்லது. வேலை, உத்யோகம், சம்பாத்தியம்னு கொடுக்கும் ,இதெல்லாம் பைசா காசுக்கு பிரயோசனம் கிடையாது. ..’என்று முளையிலே அவர் கிள்ளி எறிய முற்பட்டாலும் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரக்கிளையாய் ஓவிய ஆர்வம் எதிராஜை டில்லியில் பாங்க்பணிக்கு சென்ற அந்த இருபத்தி இரண்டுவயதில் மாலைநேரத்தில் ஓவியக்கல்லூரிக்கு செல்ல வைத்தது. அதற்கு அவன் அம்மா சுசீலாவின் பெருமுயற்சி உதவியது. சுசீலா அந்த நாளிலேயே தமிழ் இலக்கியம் படித்தவள்.பாரதியையும் கம்பனையும் கரைத்துக்குடித்தவள். கலைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவள்.
“அவந்தான் வேலைக்குப்போக ஆரம்பிச்சிட்டானே இன்னமும் அவனை சின்னப்பையன் மாதிரி நினச்சி விரட்டறீங்க, உங்க சொல்லுக்கே கட்டுப்படணும் என்கிறீங்க… ஒவ்வொருத்தன் மாதிரி சிகரெட் சினிமான்னு அலையறானா எதிராஜ்? அவன் ஆசைக்கு இனியும் தடை சொல்லாதீங்க” என்று சற்று இயல்பைமீறி கணவரிடம் கூச்சலிட்டாள்.
ஓவியக்கல்லூரியில் சேர்ந்தவனுக்கு சிறுவயதிலிருந்து மனித உருவங்களையே வரைந்திருந்ததாலும் கல்லூரில் சேர்ந்தபிறகுதான் அனாடமி பற்றி முழுமையாக அறியமுடிந்தது. கண்களையே ஸ்கேல் ஆக வைத்துக்கொண்டு மனித உடலை வரையக் கற்றுக்கொண்டான். அனாயாசமாக போர்ட்ரைட்டுகளை வரைந்துதள்ளினான்.
பிறந்தது வளர்ந்தது எல்லாம் வடக்கே டில்லியில்தான் என்றாலும் எதிராஜின் அப்பாவிற்கு பூர்வீகம் சேலம் அருகே ஒரு கிராமம்தான்.அம்மா சுசீலாவிற்கும் கிருஷ்ணகிரி என்பதால் இரண்டுதாத்தாபாட்டிகளும் உயிரோடு இருந்தவரை அடிக்கடி தென்னக விஜயம் செய்திருந்தான் எதிராஜ்.. வீட்டில் சரளமான தமிழ் பேசியும் தமிழ் புத்தகங்கள் வாங்கி வைத்திருந்ததாலும் எதிராஜுக்கு தமிழ்மீது ஈடுபாடு இருந்தது. அம்மாவிடம் நிறைய பாசுரங்களைக் கற்றுக்கொண்டிருந்தான். தென்னகத்துக் கோயில்களைப்பற்றி அவைகளின் சிற்ப ஓவியப்பெருமைகளைப்பற்றி அவன் அம்மா சுசீலா விவரமாய் சொல்லி இருந்தாள்.
அதனால் தென்னகத்துக்கோயில்களைப் பார்த்துவர ஆவலானது.”போய்வா எதிராஜ்..பாங்கில் லீவ் கொடுக்கும்போது யோசிக்காம உடனே புறப்பட்டுடணும்..எனக்குத்தான் உன்கூட வரமுடியவில்லை..உன் அப்பா உடம்பு அலைய அனுமதிக்காதபோது அவரை நான் கூட இருந்து பார்த்துக்கணும்.அதனால நீ மட்டும் போய்ப்பார்த்துவா…” என்று சுசீலா மகனை அனுப்பிக்கொடுத்தாள்.
முதலில்மதுரையை முடித்துவிட்டு அங்கே கண்ட அந்தபிரமிப்பு அகலாமல் திருச்சி வந்தவனை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சித்திமகன் திவாகர் பிடித்துக்கொண்டான்.
”ஹேய் எதிராஜா நீ எங்க இந்தப்பக்கம்? தாத்தா பாட்டிகள் இறந்து போனதும் நாலுவருஷமா நீ சேலம் கிருஷ்ணகிரி பக்கம்கூடவரலையே?”
”ஆமா திவாகர்….என்னவோ முடியாமல்போய்ட்டது. பிகாம் முடிச்சதும் டில்லிலயே வேலை கிடச்சிருத்து எனக்கு. இப்போ பாங்க்ல வேலை”
”ஓ வெரிகுட் !பாங்க் வேலைன்னா நிரந்தரமான சம்பளம்டா! எனக்கும் ஆசைதான் ஆனா எனக்கு அரியர்ஸ் பாக்கி இருக்கு உன்னை மாதிரி நான் அழகனும் இல்லை;அறிவாளியும்இல்லையே அதோட நீ அதிர்ஷ்டக்காரனும்கூட! சரிசரி திருச்சில என்ன வேலை விஷயமா வந்திருக்கே?”
”வேலை விஷயமாக ஏதுமில்லை…. சும்மா கோயில் பார்க்கதான்..மலைக்கோட்டைபோய் தாயுமானவர் தரிசனம், உச்சிப்பிள்ளையாருக்கு கும்பிடு போட்டு அப்புறம் ஸ்ரீரங்கம் போய்ட்டு மறுபடி மெட்ராஸ் வழியா க்ராண்ட் ட்ரக் எக்பிரஸ் ரயிலைப் பிடிச்சி டில்லிக்குப்போகணும்”
”அப்போசரி உனக்கு மலைக்கோட்டை ஸ்ரீரங்கம்லாம் நான் சுத்திக்காட்றேன்..திருச்சில தங்கை வரன் விஷயமா ரயில்வேஸில் ஒர்க் பண்ற ஒருத்தரை பார்க்க வந்தேன் அவர் ஊர்ல இல்லையாம். அதனால உன்கூட கொஞ்சநேரத்துக்கு சுத்தறேன்..எனக்கு ராத்திரிதான் கிருஷ்ணகிரிக்குப் போகணும்”
”திவா, உனக்கு எதுக்குடா சிரமம்?”
”அதெல்லாம் ஒண்ணுமில்ல….சௌத் பக்கம் வந்தவன், இப்படி கிருஷ்ணகிரி வராமயே போறே நீ………அம்மாக்கு தெரிஞ்சா கண்டிப்பா தன் அக்காவை அதாவது உன் அம்மாவை திட்டுவாங்க?”
”இன்னொரு சமயம் கண்டிப்பா வரேன்னு சொல்லு திவா ”
திருச்சியில் மலைக்கோட்டைமேல் நின்று இயற்கைகாட்சிகளை ரசித்த எதிராஜ் கையோடு கொண்டுபோன ட்ராயிங் உபகரணங்களை அங்கே பரப்பிவைத்தான் மடமடவென வரைய ஆரம்பித்தான் ..கோயிலுக்குவந்தவர்கள் எல்லாம் வியந்து பாராடடிப்போனார்கள். சிலர் அவனை போட்டோ எடுத்துக்கொண்டுபோனார்கள்.
”அடேயப்பா! அச்சு அசலாய் அப்படியே பார்த்ததை தத்ரூபமாய் வரைந்திருக்கியே எதிராஜ்! கலைகளிலே ஓவியம்தான் சிறந்ததுன்னு சொல்வாங்க …ஓவியத்திறமை உன்கிட்ட அபாரமாய் இருக்குடா… சரி , அடுத்தது ஸ்ரீரங்கம் கோயில் போகலாம் வா..” திவாகர் உற்சாகமாய் அவனை உடன் அழைத்துக்கொண்டு போனான்.
ஸ்ரீரங்கம்!.
கோயிலுக்குள் நுழையும்போதே திவாகர் உரத்தகுரலில் விவரிக்க ஆரம்பித்துவிட்டான்.” நான் அடிக்கடி வரும் ஊருடா…இதுபூலோக வைகுண்டம்டா எதிராஜ்! இங்க எல்லாமே பெரிதுதான்..பெரியகோயில்,பெரியபெருமாள் பெரியபிராட்டியார் பெரிய கருடன் பெரிய அவசரம்(தளிகை) அப்படீன்னு சொல்வழக்கம் உண்டு. சேஷராயர் மண்டபத்துலநீ ரசிக்க அபாரமான சிற்பங்கள் இருக்கும்,பார்க்கலாம் வா”
அங்கிருந்த சிற்பங்களைப் பார்த்து அப்படியே நெக்குருகி நின்றான் எதிராஜ். சிலமணிநேரங்கள் அங்கே அந்தக்கல்மண்டபத்திலும் எதிரே மணல்வெளியிலும் அமர்ந்து படங்களை வரைய ஆரம்பித்தான். அருகில் அமைதியாய் நின்று கொண்டிருந்த வெள்ளைகோபுரத்தின் வரலாற்றினையும் கேட்டபடி கோபுரத்தை அட்டகாசமாய் வரைந்துமுடித்தான்.
“அடுத்து உள் ஆண்டாள் சந்நிதில உள்ள வெளி மண்டபத்துலெல்லாம் அட்டகாசமான சிற்பங்கள் இருக்கும் அதை நீ பார்த்தபடியே அங்கேயே வாசலில் உக்காந்து வரையலாம் !”
எதிராஜ் ஆசைதீர எல்லா இடங்களையும் பார்த்து பலவற்றை வரைந்து சிலவற்றை மனதில் படம்பிடித்துக்கொண்டான்.
”திவா! ஸ்ரீரங்கம்கோயில்ல ஏதோ ஆகர்ஷணம் இருக்கு என்னை இது மறுபடி இழுக்கப்போகிறது” என்றான் உணர்ச்சி நிறைந்த குரலில்.
“சரிடா நீ நிதானமா இன்னும் சிற்பங்களையும் ராமானுஜர் சந்நிதில இருக்கிற ஓவியங்களையும் பார்த்துவா…எனக்கு நேரமாறது,.நான் கிளம்பறேன் என்ன?”
திவாகர் விடைபெற்றுக்கொண்டான்.
எதிராஜ் உள் ஆண்டாள் சந்நிதியின் வாசலுக்கு வந்தபோது கையில்பூத்தட்டுடனும் துளசி மாலையுடனும் ஒரு சிறுமி எதிர்ப்பட்டாள்.பன்னிரண்டுவயதிருக்கும்.சீட்டித்துணியில் பாவாடையும் அதேதுணியில் பெரிதான சட்டையும் அணிந்திருந்தாள்.உடம்பு ஊசிபோலிருந்தது பார்வையில் ஏதோ வசீகரம் தெரிந்தது.’’அண்ணே அண்ணே துளசிவாங்கிப்போங்கண்ணே மொழம் ரெண்டணாதான்” என்றாள் கெஞ்சுதலான குரலில்..
கேட்டபடியே எதிராஜின் கையிலிருந்த பென்சில்ஸ்கெட்ச் ஓவியங்களைப்பார்த்துவிட்டாள்.விழிமலர,”நீங்களா வரைஞ்சீங்க? ரொம்ப ஜோரா இருக்கே…அதிலயும் அந்த குதிரைவீரன் அப்டியே கோவில் உள்ளாற இருக்குற சிலைபோலவே இருக்குதே…அண்ணே நானும் படம் வரைவேன்…வீட்ல வச்சிருக்கேன்…”என்றாள் மகிழ்ச்சியான குரலில்.
“அப்படியா? ‘
“ஆமா..ஆனா வீட்ல நான் வரையத்தொடங்கினாலே நாலு சாத்துசாத்துவாங்க …’அனாதைதுக்கிரிக்கு ஓவியம் கேக்குதோ, போடி போயி வெராட்டிதட்டி பூவு பறிச்சி தொடுத்து வியாபாரம் செஞ்சி துட்டு சம்பாரிச்சிவாடி’ன்னு திட்டுவாங்க…நான் யாருக்கும் தெரியாம கோவில் உள்ள எங்காச்சும் ஓரமா உக்காந்து வரைஞ்சிடுவேன்….”
“பாவம்..ஆமா ஏன் உன்னை வீட்லதிட்றாங்க?”குழப்பமாய் கேட்டான் எதிராஜ்.
“அதான் சொன்னேனே நான் அனாதையாம் குப்பைத்தொட்டில கெடச்சவளாம்..”
“அய்யோ பாவம்…படிக்கலயா பள்ளிக்கூடம் போகலையா?
“ம்ம் போனேன் அஞ்சாவதுவரை படிச்சேன்.ஐஸ்கூலெல்லாம் அனுப்பலண்ணே….வெரட்டி தட்டவும் பூக்கட்டவும்தானே நேரம் சரியா இருக்குது?”
எதிராஜிற்கு அந்தப்பெண்ணைப்பார்க்கவே பரிதாபமாகிவிட்டது… “படிக்க உனக்கு ஆசை இருக்கா?” என்று கேட்டான்.
“ம் இருக்குண்ணே…”
“உன் பேர் என்னம்மா?”
“பூங்கோதை”
“ஒருநிமிஷம் இரு… இங்க வெளில கடைல போன் இருக்கா ஊருக்கு எங்கம்மாகிட்ட பேசணும் உன்னைப்பத்தி..”
“இருக்குண்ணே…தெற்குவாசல்ல கடைல போன் இருக்கு..வாங்க கூட்டிப்போறேன்..”
ஒடிசலான உடம்பு துறுதுறுவென்ற கண்கள் சுருட்டையான கேசம் என்றிருந்த பூங்கோதை விறுவிறுவென முன்னே நடக்க எதிராஜ் தொடர்ந்தான்.
போனில் சுசீலா,”நல்ல காரியம்டா எதிராஜா…அன்ன சத்திரம் ஆயிரம் வைக்கிறதைவிட ஒரு ஏழைக்கு கல்விக்கு உதவறதை பாரதி சிலாகிச்சி பாடி இருக்காரே! சென்னைல என் சிநேகிதி ஒருத்தி சமூக சேவகி. நகரில் பிரபல புள்ளி அவள் கண்டிப்பா நமக்கு உதவுவா..நான் இப்போவே அவகிட்ட விவரம் சொல்லிடறேன்…பூங்கோதையை அவளை வளர்த்தவங்ககிட்ட நல்லபடி சொல்லி சென்னைக்கு கூட்டிப்போயி சேர்த்துடு. தேவையான பணம் அந்த ஏழைக்குடும்பத்துக்குக் கொடுத்துட்டு வா…எல்லாம் நல்லபடியா முடியட்டும் அந்த ரங்கன் க்ருபைல..” என்றாள் நிறைவான குரலில்.
விட்டது சனி என்பதுபோல பணத்தை வாங்கிக்கொண்டு பூங்கோதையை வளர்த்தவர்கள் அவனோடு அனுப்பிவைத்தார்கள்.
சென்னையில் அந்த அனாதைகளுக்கான பள்ளியில் பூங்கோதை ஆறாம்வகுப்பில் சேர்ந்தாள். நாலைந்துவருடங்கள்வரை டில்லிக்கு எதிராஜனுக்கு தவறாமல் கடிதம்போடுவாள். நன்றி தெரிவித்துக்கொண்டே இருப்பாள் ஒவ்வொரு கடிதத்திலும். அவளது ஓவியத்திறமையை பள்ளியில் ஊக்கப்படுத்தி பலபோட்டிகளுக்கு அவளை அனுப்பியதில் பரிசுகள் வாங்கியதை எல்லாம் எழுதுவாள். திடீரென மாரடைப்பில் எதிராஜின் அப்பா இறந்துபோனதற்குக்கூட மிகவும் வருத்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி இருந்தாள்.
பத்தாம்வகுப்புபடிக்கிறபோது திடீரென அவள் பள்ளியிலிருந்து ஒருநாள் தந்திவந்தது. பள்ளிக்கூட உல்லாசப்பயணமாய் இரவு ரயிலில் திருச்சிக்குப்போகிறபோது வேடிக்கைபார்க்க கதவருகில் நின்ற பூங்கோதை காவிரிப்பாலத்தில் கால்தடுக்கி விழுந்து ஆடிமாத வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டாள் என்று.
எதிராஜிற்கு அப்போதுதான் கல்யாண நிச்சயம் ஆகி இருந்தது.பூங்கோதையை தன் தங்கையாய் கல்யாணத்தில் தாலிமுடிக்கு அழைத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தான் சுசீலா அவளுக்கு பட்டுப்புடவையெல்லாம் வாங்கிவைத்திருந்தாள்.இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்திவந்ததும் தாயும் மகனும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடினார்கள். ஒருவாரம் தேடியும் பூங்கோதை உடல் அகப்படவே இல்லையாம்..புதைமணலில் சிக்கி உள்ளே போயிருக்கும் என்று முடிவுகட்டினார்கள்.
அவ்வளவுதான் பூங்கோதை என்பவளின் சரித்திரமே முடிந்துவிட்டது என நினைத்து பெருமூச்சுவிட்டார்கள் சுசீலாவும் எதிராஜும்.
அடுத்த ஒருமாதத்தில் எதிராஜுக்கு திருமணம் நடந்துவிட அவன் மனைவி மீராவிற்கு எந்தக்கலைகளிலும் நாட்டமுமில்லை சராசரிப்பெண்ணாக குடும்பம் நடத்தவும் முடியவில்லை. எதிராஜ் பல நேரங்களில் ஓவியம் மற்ரும் தூரிகையுடன் இருப்பது கண்டு கோபம்வர அது ஹிஸ்டீரியாவில் கொண்டுவிட வீட்டில் எப்போதும் சண்டைதான், சச்சரவுதான். எதிராஜ் வெறுப்பில் வரைவதையே நிறுத்திவிட்டான்.
சுசீலாவுடன் அவன் மனைவி மீரா ஒத்துப்போகவில்லை. ‘நீயாவது அவளோட சந்தோஷமாய் இருப்பா நான் காசி ராமேஸ்வரம்னு சுத்தப்போறேன்’ என்று சுசீலா புடவைமற்றும் புத்தகப்பையுடன் கிளம்பிவிட்டாள். காசிபோகும் வழியில் பஸ் விபத்தில் இறந்தும் போனதாய் தகவல் வந்தபோது எதிராஜ் நிலைகுலைந்துபோனான்.
ஆயிற்று பல வருஷம் கழித்து அரவிந்தன் பிறந்தான் .அம்மாவைப்போல இல்லாமல் அவன்பாட்டியைப்போல வளர்ந்தான்.அப்பாவின் மனதை அவன் புரிந்துகொண்டிருந்தான்.அதனால்தான் அன்று .”அப்பா உங்களோட சஷ்டியப்தபூர்த்தியக் கொண்டாடவேண்டாம்னு சொல்லிட்டீங்கப்பா… அம்மா மட்டும் உயிரோட இருந்தா ஜாம் ஜாம்னு கொண்டாடி இருப்பேன். . ஆனா அம்மா கான்சர்ல தன்னோட முப்பதிஅஞ்சுவயசுலெயே போவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லயே. அப்பா! நேத்து உங்க பழைய ஓவியங்களை எல்லாம் பார்த்தேன் அதுல அரங்கன் கோயில் சிற்பங்களை நீங்க அனுபவிச்சி வரைந்த விதமே சொல்லுகிறது உங்க மனம் அங்கயே இருக்கிறதென்று. இதை நான் எப்போதோ செய்திருக்கணும் இப்போ உங்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நீங்க தெற்கே சிலகோயில்கள் போய்ட்டுவர ஏற்பாடு செய்துட்டேன்….டில்லியைவிட்டு நாம் சென்னைக்கு வந்த இந்த ஒருவருஷமா நீங்க வீட்லயே முடங்கி இருக்கீங்க..உங்கள் தாயாரின் படத்தைப்பார்த்துப்பார்த்து கண்கலங்கறீங்க….உங்க மனசு வயசானகாலத்தில் உற்சாகமாக இல்லை.. அதுக்கு ஓவியக்கலையை நீங்கமறுபடி ஆரம்பிக்கணும்ப்பா… அதுக்கு அரங்கன்கோயில் போய்வந்தா அது ஒரு உந்துதலா இருக்கும் உங்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். ஆபீஸ் வேலைகாரணமா நானும் உடன் வரமுடியாத சூழ்நிலை..நீங்கள் அவசியம் போய்வாங்கப்பா மனமாறுதலாகவும் இருக்கும் இந்தப்பயணம்!” என்று ரயிலுக்கு டிக்கட் வாங்கி கையில்கொடுத்தான்.
எதிராஜனுக்கும் எப்போதும் எதையோ இழந்ததுபோன்ற உணர்வாகவே இருந்தது. யாருடனான போட்டிக்காக நினைவுகளை அசைபோடாமல் தனிமையில் உழன்று எதிலும் பற்றில்லாத நிலையில் இருக்கிறோம்? ஜீவிதம் என்பது போட்டியல்ல. சேர்ந்தும் சார்ந்தும் வாழ்வதே ஜீவிதம். என்று தோன்றியது. நல்ல நினைவுகள் என்பது வியர்க்கிறபோது வீசுகிற காற்று மாதிரிவிரும்புகின்ற மணம் மாதிரி.வீணையை யாராவது போகிற போக்கில் மீட்டிவிட்டுப்போனால் வீசும் இளந்தென்றலில் மெல்லியதாய் அதன் அதிர்வு கேட்டுக்கொண்டே இருப்பதுபோல மகனின் பேச்சு எதிராஜனை யோசிக்க வைத்தது.
எதிராஜ் புறப்பட்டுவிட்டார்.
வெள்ளை கோபுர வாசலில் நுழைந்ததுமே பின்னோக்கிப்போன நினைவுகளை மணல்வெளியில் அடித்த காற்றின் ஸ்பரிசம் மீட்டுக்கொண்டுவந்தது.
வலப்புறம் எதிரே சேஷராயர்மண்டபம் கண்ணில்படவும், அந்த இடத்தில் முன்பு திவாகருடன் நின்று ரசித்த சிற்பங்களையும் உடனே ஓவியம்வரைய மணல்வெளியில் உட்கார்ந்ததையும் நினைத்துக்கொண்டார் அப்படியே உடையவர் சந்நிதியில் உட்பிராகாரத்து ஓவியங்களில் மனதைசெலுத்தினார் .பாதி ஓவியங்கள் சிதிலமாகி இருந்தன.
அரங்கனை தரிசிக்க கருடமண்டபம் வழியே உள்ளேபுகுந்தார் . தர்ம தரிசன க்யூவில் அரங்கனின் அன்பர்களோடு அன்பராய் கால்கடுக்க நின்று பின் க்யூ நகர்ந்து சென்றதில் கடைசியாய் கண்குளிர அரங்கனை தரிசித்துக்கொண்டார். தங்க
விமானத்தைப்பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார். கிளிமண்டபம் வழியே வெளியே வந்தார்.
தாயாரை சேவித்து ரங்கவிலாசக்கடைகளை நோட்டமிட்டபடி உள் ஆண்டாள் சந்நிதியை நெடுங்கினார்.
சந்நிதி உள் அடங்கி இருந்தது. ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியமாகும்வரை பிரவாகமாய்பொங்கினாள். மேகத்தை,மழையை,மயிலைக்குயிலை என்று அனைத்தையும் அரங்கனின் காதலுக்கு தூதுவிட்டாள். அவன் கோயில் வந்தபிறகு அவனுக்கு உடையவளானதும் சந்நிதியின் உள்பக்கமாய் அடங்கி அமைதியாய் இருக்கிறாள். ஆழ்வார்களில் ஆண்டாள் சந்நிதிக்கு மட்டுமே இத்தனை பெரிய வெளிவாசல்!
எதிராஜ் சென்றது வார நாள் ஆனதால் வெளி வாசலில் அதிகம்கூட்டமில்லை. அதனாலேயே அமைதியாய் அனைத்தையும் ரசித்து ஆழ்ந்து அனுபவித்துப்பார்த்தபடி வந்தவருக்கு, ஆண்டாள் சந்நிதி நுழைவு வாசலில் மெல்லியகுரலில் பாசுரம் கேட்கவும் நின்றார்..
‘பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்..’
குரல் வந்த திசையைப்பார்த்தார். அங்கே சிறு மரஸ்டூலில்மூங்கில்கூடையை வைத்து அதில் பரவி இருந்த உதிரிப்பூக்களை வாழைநாரினால் குனிந்ததலை நிமிராமல் தொடுத்துக்கொண்டிருந்த அந்தப்பெண்மணியை நெருங்கினார்.
“பூக்காரம்மா நல்லா பாசுரம் சொல்றீங்களேம்மா…காதுக்கும் இனிமை ஆழ்வார்பாசுர வரிகள் மனசுக்கும் இனிமை” என்றார் .
‘கோரமாதவம் செய்தனன் கொல்…’என்று பாடிக்கொண்டேவந்த அந்தப்பெண்மணி சட்டென பாட்டை நிறுத்திவிட்டு நிமிர்ந்தாள்
. ஐம்பதுவயதிருக்கலாம் மெலிந்த உடல்வாகாய் தெரிந்தது. அரக்கிலும் மஞ்சளிலுமாய் கட்டம் போட்ட நூல் புடவையை தோளோடு இழுத்துப்போர்த்தி இருந்தாள். நரைத்த அடர்த்தியான சுருட்டைத்தலைமயிரை அழுந்தவாரிக்கொண்டை போட்டிருந்தாள்.நெற்றியில் சிவப்பு நிறத்தில் நீளத்திலகம். மருவும் கனகாம்பரமும் மல்லிகையும் சேர்ந்து கட்டிய பூச்சரத்தை கையிலெடுத்தவள்.”பூ வேணுமா சாமீ?” என்று கேட்டாள்.
வயதானாலும் துறுதுறுவென்றிருந்த அந்த விழிகளைப் பார்த்த எதிராஜ் சட்டென அதிர்ந்தார். அதற்குள் அவளும் அவரைக்கூர்ந்து பார்த்துவிட்டு,”அ அண்ணே எதிராஜ் அண்ணனா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்
பூ பூங்கோதை நீ நீ,,,,,,?” என்று சந்தேகமும் வியப்புமாய் கேட்கும்போதே ‘ குப்’பென வியர்த்தது, எதிராஜனுக்கு. அதே குரல்! அதே முகம்!எத்தனை வருடங்கள் ஆனால் என்ன நெஞ்சில்பதிந்த சில முகங்களின் நினைவு வற்றுவதே இல்லைதான்.
”பூங்கோதை…. நீ,,,, நீ…. இ்றந்துட்டதா…?” குழப்பமும் திகைப்புமாய் எதிராஜன் கேட்டார்.
பூங்கோதை பூச்சரத்தை கூடையில் போட்டுவிட்டு எழுந்து நின்று கைகுவித்தாள். கண்கள் கலங்க ஆரம்பித்தன. கை நடுக்கத்தை மறைத்தபடி பேச ஆரம்பித்தாள்.
” அண்…அண்ணே…எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஆமாண்ணே. நன்றி மறந்தவளா நான் உயிரைவிட்டுவேனோன்னு நினச்சேன்…நல்லவேளை என் அரங்கன் என்னை அந்த பாதகத்திலிருந்து காப்பாத்திட்டான். நான் இறந்துட்டதா ஊர் உலகம் நம்பினதை நீங்களும் நம்பி இருப்பீங்க…ஆனா அன்னிக்கு உல்லாசப்பயணம் போன ரயிலில் பாதிராத்திரி அந்தபள்ளி ட்ராயிங் மாஸ்ர் என்கிட்ட தவறா நடக்கவந்தாரு…அதுக்குமுன்னாடி பலதடவை அவர் பள்ளிக்கூட ஹாஸ்டல்ல தனியா என்னைப்பார்க்கவரப்போ நான் அவரை எச்சரிச்சிருக்கேன் ஆனா அவருக்கு நான் அனாதை கேட்க யாருமில்லை என்கிற தைரியம். அரசியலில் செல்வாக்குள்ள மனுஷன் ஒருத்தர்கிட்ட நான் தாசியாப்போகணும்னு மிரட்டினாரு. திட்டம்போட்டு தனக்கு சாதகமான சூழ்நிலையை ரயிலில் ஏற்படுத்திட்டு என்னை நெருங்க வந்தாரு…. அப்போதான் நான் ஒரு முடிவெடுத்தேன்.அரங்கன் காலடிலபோய் சேர்ந்துடலாம்னு அந்த அயோக்கியனிடமிருந்து என்னைக்காப்பாத்திக்கொள்ள வேற வழிதெரியாம காவிரில பாய்ஞ்சிட்டேன்..ஆனா காவிரி என்னைக்கொண்டுபோயி ஒருநல்லவர் கைலஒப்படைச்சிட்டா… ஆமாம்…அந்த நடுஇரவுல காவிரியின் மறுகரைல அதன் அழகை ரசிச்சி கவிதை பாடிக்கொண்டிருந்த ஒரு காஷ்மீரத்து மனிதர் நான் மிதந்துவருவதைப்பார்த்து நீர்ல பாய்ந்து என்னை உடனே காப்பாத்தினார் .பக்கத்துல ஒரு நர்சிங்ஹோம்ல சேர்த்து சாகக்கிடந்த உயிரை மீட்டார்.அவர்கிட்ட நான் நதியில் குதித்த காரணத்தை சொன்னேன்..என்னால திரும்ப சென்னைக்குப்போக முடியாத நிலைமையை விவரிச்சேன். என்னை அவர் ஓசைப்படாமல் காஷ்மீருக்குக்கூட்டிப்போனார். அன்பான குடும்பம் அவருடையது அங்கே நான் அவருக்கு இன்னொரு மகளா வளர்ந்தேன்.‘.பூ’ என்ற புனைபெயரில் சித்திரங்களை வரைந்தேன். வெளிநாட்டில் எல்லாம் என் சித்திரங்கள் விலைபோனது. நிறைய சம்பாதித்தேன்..அந்த காஷ்மீரத்து மனிதர் எட்டுவருஷம் முன்பு இறந்ததும் அந்தக்குடும்பத்திடம்விடைபெற்று மறுபடி இங்க வந்தேன் …அண்ணா…உங்க டில்லிவீட்டுமுகவரி எல்லாம் நினைவில் இல்லாமல்போய்விட்டது. மேலும் நான் இறந்துவிட்டதா எல்லாரும் நினச்சிட்டு இருக்கிறதை உயிர்ப்பித்து குழப்பம் உண்டாக்கவேண்டாம்னு நினச்சேன்..ஆனால் உங்களுக்கு நான் ஏதோ துரோகம் செய்துவிட்டதாகவே உறுத்தல் இருந்தது. உயிர்போவதற்குள் என்றாவது உங்களை சந்திக்க அரங்கன் வாய்ப்பளிப்பான் என்று நம்பித்தான் இங்கே உங்களை நான் முதலில் சந்திச்ச இதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறேன்…..”
நிதானமாய்ப்பேசினாலும் உணர்ச்சிவசப்பட நீண்ட நேரம் பேசியதில் பூங்கோதைக்கு மூச்சிறைத்தது.
எதிராஜிற்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் எதுவும் பேச இயலாதவராய் அமைதியாய் அப்படியெ நின்றார்.
”கோபமா அண்ணா என் பேர்ல?”
“இல்லையம்மா…என்ன பேசறதுன்னே தெரியல…..” என்றவர் அவள் கழுத்தில்தெரிந்த மஞ்சள் சரடினைப்பார்க்கவும் பூங்கோதை மெலிதாய் சிரித்தாள்.
“அண்ணா! இது அந்தரங்கத்தாலி! ஆமாம் அந்தட்ராயிங் மாஸ்டர் அன்னிக்கு யார்யாருக்கோ தாசியா இருக்கச்சொல்லி மிரட்டினான். நான் என்னிக்கும் அரங்கனுக்குதான் தாசி. அரங்கனையே மானசீகப்புருஷனாய் நினைச்சி நானே எனக்கு ஒரு பாதுகாப்பாய் தாலியைக்கட்டிக்கொண்டேன். ”
பூங்கோதை இப்படிச்சொல்லி முடிக்கவும் யாரோ இரண்டு இளைஞர்கள் அங்கே வந்தார்கள்.
குனிந்து ஏதோ ஃபைலைத்திறந்து காட்டி அவளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்..
அவர்களிடம் பூங்கோதை எதிராஜை தான்முதலில் சந்தித்தது முதல் எல்லாவற்றையும் சொல்லி அவரை அறிமுகப்படுத்தினாள்.
உடனே அவர்கள் எதிராஜைப்பார்த்து பணிவுடன்,”ஐயா! டவுனில் இருக்கிற நம்முடைய எதிராஜ் அனாதை இல்லம், சுசீலாம்மா ஓவியப்பள்ளி இவை இரண்டையும் நீங்க அவசியம் வந்து பார்த்துப்போகணும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.
எதிராஜ் சட்டென பூங்கோதையை ஏறிட்டுப்பார்க்க அவள் புன்னகையை பதிலாக்கி அமைதியாய் நின்றாள்.
“ஒவியப்பள்ளியை பார்ப்பது மட்டுமல்ல பூங்கோதை, இனிமே என் பணி அங்கே தான்” என்ற எதிராஜின் முகத்தில் நீண்ட நாளைக்குப்பிறகு சிரிப்பு மலர்ந்தது.