யார் ஏழை – யோகியா, அரசனா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: February 3, 2025
பார்வையிட்டோர்: 9,952 
 
 

ஓர் அரசன் அண்டை நாட்டின் மீது படை எடுப்பதற்காக நாட்டு எல்லையிலுள்ள உயர்ந்த பனிமலையைக் கடந்து தனது படையோடு சென்றுகொண்டிருந்தான். தாங்க முடியாத குளிர் மிகுந்த அந்தப் பனிமலையின் சிகரங்கள் ஒன்றில் ஒரு யோகியை அவன் காண நேர்ந்தது. மேலாடைகள் எதுவும் அற்று இருந்த அவர் குளிரைப் பொறுத்துக் கொள்வதற்காக முழங்காலை மடித்தபடி கூனிக் குறுகி அமர்ந்திருந்தார்.

அதைக் கண்ட அரசன் அவர் ஏழை என்று நினைத்துக்கொண்டான். எனவே தனது பணியாட்களிடம் ஓர் அங்கியைக் கொண்டுவரச் செய்து அதை அவருக்குக் கொடுப்பதற்காக நீட்டினான்.

யோகி அதை வாங்கவில்லை. “எனக்கு போதுமான ஆடை இருக்கிறது.”

அரசன் வியந்து, “ஆனால் நீங்கள் மேலாடை இல்லாமல் இருக்கிறீர்களே!” என்றான்.

“வெயிலையும் மழையையும் தாங்கிக்கொள்ளும்படியான ஆடையை கடவுள் நான் பிறந்தபோதே நெய்துவிட்டார். அது எனது பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் இருக்கும் இந்த ஆடைதான்!” என்று தனது தோலைச் சுட்டிக் காண்பித்த அவர், “அந்த அங்கியை ஏதேனும் ஏழைகளுக்கோ பிச்சைக்காரர்களுக்கோ தேவைப்பட்டால் அவர்களுக்குக் கொடு” என்றார்.

அரசன் அங்கிருந்து நகர்ந்தான்.

அப்போது யோகி அவனிடம், “நீ எங்கே செல்கிறாய்?” என்று கேட்டார்.

“அண்டை நாட்டுக்கு.”

“எதற்காக?”

அரசன் பெருமையோடு சொன்னான். “போரிடுவதற்காக.”

“எதற்காக அண்டை நாட்டோடு போரிடப் போகிறாய்?”

அவன் இன்னும் பெருமையோடு சொன்னான். “எனது ராஜ்ஜியத்தின் எல்லையை விரிவு படுத்துவதற்காக.”

யோகி சொன்னார். “ஏற்கனவே நீ ஒரு நாட்டின் அரசன். போதுமான செல்வம், சௌகரியங்கள், சுகபோகங்கள், அதிகாரம் ஆகியவை உனக்கு இருக்கின்றன. அப்படி இருந்தும் அதில் திருப்தி வராமல் ஆயிரக் கணக்கான

படைவீரர்களின் உயிரைப் பணயம் வைத்து அண்டை நாட்டினரோடு போரிடச் செல்கிறாய். போர் என்று வந்தால் இரு தரப்பிலும் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்படும். அப்படி மனித உயிர்களை பலி வாங்கி, உனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாய். ஆகவே, என்னை விடவும் நீதான் பெரிய பிச்சைக்காரன். அதனால் அந்த அங்கி உனக்குத்தான் தேவைப்படும்!”

இருப்பதை வைத்துத் திருப்திப்படுவதுதான் மிகப் பெரிய செல்வம் என்பதை அரசன் உணர்ந்துகொண்டான். அவன் யோகிக்கு நன்றி கூறிவிட்டு தனது போர்த் திட்டத்தைக் கைவிட்டு நாடு திரும்பினான்.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *