மேகம் கறுக்கையிலே
கதையாசிரியர்: மா.பிரபாகரன்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 79
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வைகறைப் பொழுது. பெரிய மேகம் ஒன்று தான் இருந்த நிலப்பரப்பில் மழை தர எண்ணி சற்றுக் கீழிறங்கி வந்தது. ஒரு வீட்டின் கூரை மீத நின்றிருந்த சேவல் ஒன்று மேகத்திடம் “என்ன செய்யப் போறே?” என்று கேட்டது.
“மழை பெய்யப் போறேன்!” சொன்னது மேகம்.
“ஒவ்வொரு நாள் காலையிலும் கூவி சூரியனை எழுப்பறதே நான்தான்! நீ இப்ப வந்து வானத்தை மறைச்சுக்கிட்டேன்னா எல்லோரும் இன்னும் பொழுது விடியலைன்னு நினைச்சுக்குவாங்க….அப்புறம் நான் எப்படி என் கடமையைச் செய்யறதாம்?….நீ வேறொரு சந்தர்ப்பத்துலே வந்து பெய்!” என்றது சேவல்.
மேகம் யோசித்தது. தினமும் காலையில் சூரியனை எழுப்புவது தான் சேவலின் வேலை. அந்த சமயத்தில் நான் வந்து குறுக்கிட்டால் அது என்ன செய்யும் பாவம்? மேகத்திற்கு சேவலின் மீது பரிதாபம் வந்தது.
“சரி, நான் இன்னொரு சந்தர்ப்பத்துல வந்து மழை தர்றேன்!” என்றபடி அங்கிருந்து நகர்ந்து போனது. இரவுப்பொழுது அந்த மேகம் மீண்டும் அந்த இடத்திற்கு வந்தது. மழை தர இது உகந்த நேரம் என அது எண்ணியது. அப்போது ஒரு சிறு குட்டையில் தலையை மட்டும் வெளியே நீட்டி ‘கொர்…கொர்…’ என சத்தம் இட்டுக் கொண்டிருந்த தவளைக் கூட்டம் மேகத்திடம் “என்ன செய்யப்போறே?” என்ற கேட்டது.

“இப்பத்தான் நாங்க எல்லாம் ஒண்ணாக்கூடி ராப்பாட்டுப் பாடிக்கிட்டிருக்கோம்!…. பூச்சிகளும் வண்டுகளும் எங்க பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுதுங்க!……இந்த நேரத்துலே நீ மழை பெஞ்சேனா அந்த இரைச்சல் சத்தத்துல எங்க எசப்பாட்டு காணாமப் போயிரும்!” என்றன தவளைகள்! மேகம் யோசித்தது. ‘பகல் நேரம் முழுவதும் வெயிலுக்குப் பயந்து மண்ணுக்குள்ள புதைஞ்சு கிடந்துட்டு இப்பதான் வெளியிலே தலைகாட்டுது இந்தத் தவளைங்க….இதுக ஒண்ணாக் கூடிப் பாடிக்கிட்டுருக்கும்போது இதுகளோட சந்தோஷத்தைக் கெடுக்கறதா? ….வேண்டாம்!…’ என முடிவு செய்து கலைந்து சென்றது மேகம்.
மறுநாள் பகற்பொழுது….சூரியன் ‘சுள்’ எனச் சுட்டுக் கொண்டிருந்தது. இதுதான் மழை பெய்ய சரியான சமயம் என்றெண்ணிய மேகம் அந்தப் பகுதியில் மீண்டும் திரண்டது! அப்போது எங்கிருந்தோ மயில் ஒன்று மேகத்திடம் ஓடிவந்தது.
“என்ன செய்யப்போறே?”
“மழை பெய்யப் போறேன்!…”…என்றது மேகம்!
மாலைப்பொழுதுலதான் நான் மொட்டைப் மேலே நின்னு தோகை விரித்தாடுவேன் – நான் ஆடுனாலே அது மழை வருவதற்கான அறிகுறின்னு எல்லாரும் சொல்லுவாங்க… கீழ்திசையில் ஒருபுறம் வானவில் தோன்ற, புறம் வானம் பூத்தூவலாய்த் தூற, மாலை இளம் மஞ்சள் வெயிலின் பின்னணியில் ஒரு மயில் ஆடுவதைக் காண்பது கொள்ளை அழகல்லவா?…. நீ மாலையில் வந்து பெய்!…” என்றது மயில்.
மேகம் யோசித்தது. ‘மாலைப்பொழுது தானே ஆடல், பாடல் முதலான மனதை மயக்கும் கலைகளுக்கான நேரம்?….மயில் சொல்வதும் சரிதானே!….’ ….மேகத்திற்கு மயிலின் மீது பரிவு வந்தது. “சரி….. மாலையில் வந்து பெய்கிறேன்”….என்றபடி அங்கிருந்து நகர்ந்து சென்றது.
மாலையில் மழை பெய்ய எண்ணி மேகம் அந்தப் பகுதியில் மீண்டும் திரண்டது. அப்போது மைனா, புறா, கிளி, காகம் முதலான பறவைகள் அந்த மேகத்தை வழி மறித்தன. “என்ன செய்யப் போறே?”

“மழை பெய்யப்போறேன்” ….என்று மேகம் சொன்னது!
“பகல் பூராவும் இரை தேடிவிட்டு இப்பத் தான் திரும்பிப் போய்க்கிட்டிருக்கிறோம்!…. இப்ப நீ மழை பெய்ஞ்சால் எங்களால் மழைக்குள்ள பறக்க முடியாது! அங்கங்க அடையற மாதிரிதான் இருக்கும்!….இறக்கையெல்லாம் நனைஞ்சுடும்! பறக்கக் கஷ்டமாயிருக்கும்!…. நாங்க பாதுகாப்பா கூடு போய்ச் சேர வேண்டாமா?….” என்று கேட்டன அவைகள்.
மேகம் யோசித்தது. ‘இந்த பெரிய பறவைகளின் வருகையை எதிர்பார்த்துக் குஞ்சுகள் எல்லாம் – ஆவலாய்க் காத்துக்கிட்டு இருக்கும்!….. அதுக்கு நான் இடைஞ்சலா இருக்கலாமா?’ அந்தப் பறவைகளின் வார்த்தைகளிலும் நியாயம் இருப்பதாகப் பட்டது!
“சரி….நான் அப்புறமா வந்து பெய்யறேன்…” என்றபடி அங்கிருந்து நகர்த்து சென்றது மேகம்!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் வந்து மழை பெய்யச் சொன்னால் நான் எங்கே போவது? மேகத்திற்குக் குழப்பம் வந்து விட்டது. அது வருண பகவானிடத்தில் கேட்டது.
“எல்லோருக்கும் மழை தேவையா இருக்கு… இருந்தாலும் தங்களோட அற்ப சந்தோஷங்களை விட்டுக் கொடுக்க மனமில்லாம மழை வேண்டாங்கிறாங்க….இது தப்பு!…..நீ அவங்க வார்த்தைகளைப் பொருட்படுத்தாதே!….உனக்கு எப்பப் பெய்யணும்னு தோணுதோ, அப்பப் பெய்!” என்ற வருண பகவான் மறைந்து போனார்.
மேகம் இப்போது யார் வார்த்தைகளையும் பொருட்படுத்துவதில்லை… அதற்கு எப்போது பெய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது பெய்கிறது.
சில சமயம் பகலில்….சில சமயம் இரவில்…. என்று பருவம் பார்த்துப் பெய்கிறது…… சில சமயங்களில் பெய்யாமலும் இருந்து விடுகிறது.
அது பெய்யாமல் இருந்து விடும்போது உயிரினங்கள் அதன் அருமையை நன்கு உணர்ந்து கொள்கின்றன. மழையை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றன.
மழையின் சிறப்பை அவை நன்கு உணர்ந்து கொண்டன.
மேகம் எப்போது மழை பெய்தாலும் அதை அவைகள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் ஏற்றுக்கொள்கின்றன.
– தினமணி, சிறுவர்மணி 29-9-2018.
![]() |
எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க... |
