கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 47 
 
 

(2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற திவாகர், விபத்தில் சிக்கி தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டான். திவாகரின் சுற்றமும், நட்பும் என்று நலம் விரும்பிகள் நிறைய குழுமியிருந்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியில் வந்த மருத்துவர், திவாகர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், ஆனால் உடனடியாக மூளை மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட மூளை பொருத்துவதா அல்லது பெண்ணிடமிருந்து பெறப்பட்ட மூளை பொருத்துவதா என்பதைப் பெற்றோர் முடிவு செய்து சொல்ல வேண்டும் என்றார்.

என்ன வித்தியாசம் என்று கேட்டதற்கு, ஆண் மூளை கொள்முதல் செய்ய ஐந்து லட்சம் செலவாகும் என்றும், பெண் மூளை இரண்டு லட்சத்திற்கு கிடைக்கும் என்றும் விவரித்தார். பெண்கள் தலை குனிய, ஆண்கள் “நாம் என்றுமே தலையானவர்கள்” என்ற இறுமாப்புடன் பார்த்தார்கள்.

ஆவலை அடக்க முடியாத ஓர் இளைஞன் கேட்டான்.”விலையில் ஏன் இத்தனை வித்தியாசம்” மருத்துவர் அந்த இளைஞனிடம் கேட்டார் “சார், நீங்கள் பழைய நான்கு சக்கர வாகனம் வாங்கச் செல்கிறீர்கள். நீங்கள் பார்த்த காரில் ஒன்று மூன்று வருடத்தில் இருபத்தையாயிரம் கிலோ மீட்டர் தூரம் ஓடியிருக்கிறது. மற்றொன்று மூன்று வருடத்தில் மூன்று லட்சம் கிலோ மீட்டர் சென்றிருக்கிறது. எதற்கு அதிக விலை கொடுப்பீர்கள்? ஏன்?” என்று கேட்டார்.

அந்த இளைஞன் சொன்னான் “நிச்சயமாக குறைந்த தூரம் ஓடிய காருக்குத் தான் அதிக விலை கொடுப்பேன். வண்டியின் பாகங்கள் அதிக உபயோகம் செய்யாததால் புதியது போல இருக்கும்”

“அதாவது நன்கு உபயோகப்படுத்திய பொருளுக்கு விலை குறைவு. அதிகம் உபயோகம் செய்யாமல் புதியது போல இருப்பதின் விலை அதிகம் இல்லையா” என்றார்.

யாருடைய தலை தாழ்ந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?

– 26-03-2022, மங்கையர் மலர்.

கே.என்.சுவாமிநாதன் பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *