முழுநிலவில் முதலிரவு!
கதையாசிரியர்: பி.டி.சாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 240
(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-26
25. ஆசை நாயகியின் கண்ணீர்!

காந்தா மிகவும் ஆடம்பரமானதொரு வீட்டில் வசித்து வந்தாள். அந்த வீட்டுக்கு ராஜாமணியின் ஏற்பாட்டின்படி மீனா மட்டுமே அனுப்பப்பட்டாள்.
ராஜாமணியும், சாதாரண உடையுடன் கூடிய பத்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும் அந்த வீட்டைப் பார்க்கும்படியான தூரத்தில் உள்ள ஒரு வீட்டினுள் ஒளிந்துகொண்டிருந்தார்கள்.
அவளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனே சிவப்பு சிப்பனை அந்த வீட்டின் ஜன்னல் கம்பியில் கட்டவேண்டும். அந்த ரிப்பனைப் பார்த்து விட்டால் உடனே மறைந்திருக்கும் போலீசாரும் ராஜாமணியும் அவளுடைய உதவிக்கு வந்துவிடுவார்கள்.
மீனா அங்கே வந்தபோது காந்தா மட்டுமே இருந்தாள். குபேரனோ மற்றவர்களோ வீட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அவளிடம் எந்தவிதமான பதட்டமும் இல்லாததால் குபேரன் வந்திருக்க முடியாது என்று மீனா எண்ணிக் கொண்டாள்.
“மீனாவா…? நீ இன்றைக்கு வேலைக்குப் போகவில்லையா?” என்று கேட்டாள் காந்தா, வழக்கத்தைப் போன்ற துருதுருப்பு அவளுடைய பேச்சில் இல்லை.
ராஜாமணியும், போலீஸ் அதிகாரியும் ‘எப்படி எப்படி நடந்து மொள்ளவேண்டும்’ என்று பாடம் சொல்லிக் கொடுத்திருந்ததால் அவள் அதன்படியே நடக்க முன்வந்தாள்.
“கம்பெனியில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியாது போலிருக்கிறதே.”
அவள் திகைப்புடன் பார்த்தாள். “என்ன நடந்தது? அவருக்கு மறுபடியும் பைத்தியம் பிடித்து ஏதாவது செய்துவிட்டாரா?” என்று கேட்டாள்.
பைத்தியமா? குபேரன் அடிக்கடி வெறிபிடிக்கும் தன்மை கொண்டவர்தானா?
“அவருக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. என் பின்னாலேயே சதாவும் சுற்றிக்கொண்டு திரிந்தார் அல்லவா. ராஜாமணி என்ற வாலிபர். அவரும், மாலினியும் சேர்ந்து கம்பெனியைக் கவிழ்த்து விட்டார்கள். குமார் சதி செய்துவிட்டார். போலீஸார் கம்பெனியைச் சுற்றி வளைத்து குபேரனைத் தவிர மற்ற எல்லோரையும் கைது செய்து விட்டார்கள்.”
மீனா இப்படிக் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த காந்தா, குபேரனை போலீஸார் கைது செய்யத் தவறி விட்டார்கள் என்பதை அறிந்தவுடன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானாள். அவளை நோக்கி வந்து கொண்டிருந்த மகிழ்ச்சி எந்தத் திக்கை நோக்கிப் போனதோ என்று தெரியவில்லை.
அவள் நீரூற்றுபோல் பொங்கிக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, “மீனா, அவர் இங்கே வந்தாலும் வரலாம், அதனால் தயவு செய்து உடனே ஓடிப்போய்விடு.” என்று படபடத்தாள்.
“அவர் இங்கே வந்தால் எனக்கு ஆபத்து வரும் என்று பயப்படுகிறாயா? இல்லாவிட்டால் உனக்கே ஏதாவது…?”
“மதில்மேல் இருக்கும் பூனை எந்தப் பக்கம் குதிக்கும் என்பதை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? நாம் கூட்டுச் சதி செய்வதாக நினைத்து நம் இரண்டு பேர்களுக்குமே ஆபத்தை உண்டு பண்ணலாம்”.
மீனா அவளுக்கு ஆறுதல் சொன்னாள். தைரியம் உண்டு. பண்ணினாள். “உன் மேல் சிறு துரும்புகூட விழ அனுமதிக்க மாட் டேன்.” என்று சொன்னாள்.
“இருந்தாலும் எனக்குப் பயமாகவே இருக்கிறது.” என்றாள் காந்தா. “என்மேல் நம்பிக்கை வை.” என்று சொன்ன மீனா, சுவரில் காணப்பட்ட போட்டோவைப் பார்த்துவிட்டு, “இது…இது…இந்தப் பெண், உன் பக்கத்தில் இருப்பவள் யார்?” என்று கேட்டாள்.
காந்தா அந்தப் போட்டோவைக் களற்றி எடுத்துப் பார்த்தாள். அவள் கண்களிலிருந்து வழிந்தக் கண்ணீர் போட்டோவின் கண்ணாடியை நனைத்தது.
“என் தங்கையை உனக்குத் தெரியுமா?” என்று காந்தா, தொண்டை அடைத்துக்கொள்ள கேட்டாள்.
போட்டோ பில் காணப்படும் பெண்மணிதான், ஆரம்பத்தில் மீனா வேலைக்குச் சேர்ந்தபோது கொதிக்கும் நீரில் தூக்கிப்போட்டு பதைக்கப் பதைக்க படுகொலை செய்யப்பட்டவள்.
இவள் அவளை தங்கை என்று சொல்கிறாளே, அதன் பொருள் என்ன? கொல்லப்பட்டவள் காந்தாவின் உண்மையான தங்கை தானா?
அவளும் காந்தாவும் ஜோடியாக எடுக்கப்பட்ட போட்டோ அது!
காந்தாவுக்கு எதுவுமே தெரியாதா? அவள் படுகொலை செய் யப்பட்ட துயரக் கதையை அப்படியே மறைத்து விட்டாரா?
“இப்பொழுது உன்னுடைய தங்கை எங்கே? வீட்டில்தான் இருக்கிறாளா?” என்று அவள் கேட்டாள்.
மீண்டும் ‘பொல பொல’ வென்று கண்ணீர் அவளுடைய கண்களிலிருந்து தெறித்து விழுந்தது. “வேலை செய்துகொண்டிருந்த போது அவள் கொதிக்கும் எண்ணெயில் தவறுதலாக விழுந்து இறந்து விட்டாளாம்.” என்று சொன்னாள்.
அவளிடம் உண்மை மறைக்கப்பட்டு பொய்க்கதை கட்டிவிடப் பட்டிருக்கிறது என்பதை மீனா தெரிந்து கொண்டதும், இதுதான் அவளுடைய மனத்தைக் கலைப்பதற்குத் தக்க தருணம் என்பதை என்பதை உணர்ந்து, “உங்கள் தங்கையின் உயிர் பிரிந்தபோது நானும் பக்கத்தில்தான் இருந்தேன். அவளிடைய கொடூர மரணத்தைப் பார்க்க நேர்ந்த துர்ப்பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.” என்று சொன்னாள்.
“கொடூர மரணமா?” அவள் பதறினாள்.
“எந்த மனிதனாலுமே நினைத்துப் பார்க்க முடியாத கொடூரமான தண்டனை தான் அது. அவள் கம்பெனியின் ரகசியத்தை வெளியிட முயன்றாள் என்ற குற்றத்துக்காக அவளுடைய கைகளையும் கால்களையும் கட்டி அப்படியே கொதிக்கும் தண்ணீரில் தூக்கிப் போட்டு பொரித்து எடுத்து விட்டார்கள்.” என்றாள் மீனா.
“நீ சொன்னதில் பொய் எதுவும் இல்லையே…” என்று காந்தா சிறிது நேரம் கழித்து, பொங்கி வழிந்து கொண்டிருந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கேட்டாள்.
“நான் கண்ணால் பார்த்தேன். அப்பொழுதெல்லாம் படுகொலை செய்யப்பட்டவள் உன்னுடைய தங்கைதான் என்ற உண்மை எனக்குத் தெரியாமல் போய்விட்டது.” என்றாள் மீனா.
இதுவரையிலும் அந்த போட்டோ பழைய படங்களுடன் கூடிய பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்ததாகவும், சிறிது நேரத்திற்கு முன்னால்தான் ஏதோ ஒரு ஞாபகத்துடன் சுவரில் எடுத்து மாட்டியதாகவும் சொன்னாள்.
“என் தங்கையைக் கொலை செய்துவிட்டு இதுவரையிலும் என்னை ஆசைநாயகியாக வைத்திருந்த அந்த அயோக்கியனை விடவே கூடாது. பழிக்குப்பழி வாங்கியே தீரவேண்டும்.” என்று காந்தா கர்ஜனை செய்தாள். உடன் பிறந்த இரத்தம் அழிக்கப்பட்டதே என்ற ஆவேசம் உடலெங்கும் காட்டுத் தீயாகப் பரவி நின்றது.
“எனக்கும் அதே எண்ணம்தான். குபேரனை இனிமேல் இந்த உலகத்தில் நடமாடவே விடக்கூடாது. கொடுமை செய்வதைம் பொழுது போக்காகக் கொண்ட அவனை அழித்தேதான் ஆக வேண்டும்.” என்று மீனாவும் பதிலுக்கு முழங்கினாள்.
ஆனால் குபேரன் எங்க இருக்கிறான் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டுமே! அவர் இங்கே வருவார் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?
“மறுபடியும் குபேரன் இங்கே வருவார் அல்லவா?”
“எதையும் உறுதியாகச் சொல்லமுடியாது”
“இந்த வீட்டைத் தவிர வேறு எங்கேயாவது அவர் போவாரா?”
“அவன் மிகவும் மட்டரகமான மிருகம். கேவலமான மனித} பிறவி. இழிவான சாக்கடையோரமாகக் குடியிருக்கும் பெண்களிடம் கூட தொடர்பு வைத்திருப்பான்.”
அவள் வேதனையுடன் இப்படிக் குமுறிய போது அதே அறையினுள் வைக்கப்பட்டிருந்த டெலிபோன் ஓங்காரச் கூச்சல் போடுவதைப் போல் அலறியது.
குபேரன் தான் எங்கேயாவது இருந்து அவசரம் அவசரமாக அவளுக்கு டெலிபோன் செய்கிறாரா? ஆசைநாயகியான அவளுடன் எங்கேயாவது ஓடிப்போய்விடவும் திட்டம் போட்டிருக்கலாம்.
மீனா, டெலிபோன் செய்திருப்பது குபேரனாக இருக்கக்கூடுமோ என்பதை நினைவுபடுத்தி, “பக்குவமாக நடந்து கொள். அது குபேரனாக இருந்தால் நான் இங்கே இருப்பதையோ, உன் தங்கை கொலை செய்யப்பட்டாள் என்பவை நீ கண்டுபிடித்து விட்டதையோ சொல்லி விடாதே.” என்று சொன்னாள்.
சிற்றின்ப வேட்கையின் காரணமாக தங்கையையே இழந்து விட்ட காந்தா கொஞ்சம்கூட தன் பழிவாங்கும் உணர்ச்சிகளைக் குறைத்துக் கொள்ளவில்லை.
அவள் ‘விருட்டென’ எழுந்து சென்று ரிசீவரை எடுத்தும் “ஹலோ யார் பேசுவது?” என்று கேட்டாள்.
மறுமுனையிலிருந்து பேசுவது குபேரன்தான் என்பதைத் தெரிந்து கொண்டதும், மீனா எல்லாவற்றையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, “யார் குபேரன் அத்தானா? எங்கிருந்து பேசிகிறீர்கள்? லஸ்முனையில் உள்ள பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்தா…?” என்று அவள் பேச்சைத் தொடர்ந்துகொண்டே போனாள்.
குபேரன் லஸ்முனையிலிருந்து பேசுகிறார் என்பதை அவருடைய பேச்சு மூலம் கிரகித்துத் தெரிந்து கொண்ட மீனா, “காந்தா… நீண்ட நோம் நேரம் பேசிக்கொண்டிரு. ஒரு நொடியில் நாங்கள் போய் வளைத்துப் பிடித்துக் கொள்கிறோம்.” என்று சொன்னவள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.
26. கொள்ளையோ கொள்ளை!
குபேரன் பப்ளிக் டெலிபோன் பூத்தைவிட்டு வெளியே வருவதற்கும் போலீஸார் விரைந்து வந்து அவரைச் சுற்றி வளைத்துக் கொள்வதற்கும் சரியாக இருந்தது.
பாதைகளின் நாற்புறமும் பெரும் கூட்டம் கூடிவிட்டது. குபேரன் வெலவெலத்துப் போய் விட்டார்.
போலீஸார் அவருடைய கைகளை விலங்கினுள் திணித்தார்கள். அவர் கொடூரமான மனிதர் என்பதால் கால்களையும் இரும்புச் சங்கிலியால் இணைக்கப்பட்டது.
“என்ன முதலாளி… நீங்கள் எங்கே போனாலும் உங்களை விடமாட்டோம். என்றைக்கு நீங்கள் தூக்குமேடையில் தொங்குகிறீர்களோ, அன்றைக்குத்தான் சென்னை நகரமக்களுக்கெல்லாம் நல்ல காலம்.” என்று ராஜாமணி முன்னால் வந்து சொன்னான்.
குபேரன் அவனைப் பார்த்த பார்வை இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல. எரிக்கும் சக்தி கண்களுக்கு உண்டென்றால் எப்பொழுதோ அவன் கருகிச் சாம்பலாகி இருப்பான்.
“நீங்கள் இவ்வளவு விரைவில் பிடிபட உதவி செய்தது யார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அவள் இன்னும் சில விநாடிகளில் இங்கே வந்துவிடுவாள்.”
ராஜாமணி சொல்லிக் கொண்டிருந்த போதே அம்பாசிடர் காரை அநாயசமாக ஓட்டிக்கொண்டுவந்த காந்தா ஓரமாக நிறுத்திவிட்டு பரபரப்புடன் ஓடிவந்தாள்.
“மதிப்பிற்குரிய குபேரன் அவர்களே! அந்தப் பெண் யார் என்பதை இப்பொழுதே நீங்கள் நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.”
அவன்தான் இதையும் சொன்னான்.
காந்தாவும் தனக்குத் துரோகம் செய்துவிட்டாள் என்பதைத் தெரிந்து கொண்டு அவர் குமுறினார்.
வேறு என்னதான் அவரால் செய்ய முடியும்?
மீனாவின் தாயாரைக் கொலை செய்துவிட்டு அவளைக் கடத்திக்கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த கண்ணபிரானின் கையாள் போலீஸாரிடம் நடந்ததைச் சொல்லி அப்ரூவராக மாறினான்.
குபேரனுக்குத் தூக்குத்தண்டனை கிடைத்தது.
அவனுடைய ஆட்களில் பலர் ஆயுள் தண்டனை அடைந்தார்கள்.
மீனா தன்னைப் பற்றிய ரகசியங்கள் எதையுமே தன் காதலன் ராஜாமணியிடம் மறைக்கவில்லை. தன் உணர்வை அழித்து ரகசியமான முறையில் கண்ணபிரான் கழுத்தில் தாலி கட்டியதையும், அதன் பிறகு ஏற்பட்ட அல்லல்களையும் விளக்கினாள்.
ராஜாமணி கடந்த காலத்தை கெட்ட கனவாக நினைத்து அவளை – மீனாவை அன்புக்குரிய மனைவியாக ஏற்றுக்கொண்டான்.
குமார் – மாலினி, ராஜாமணி – மீனா தம்பதிகளுக்கு ஒரே மேடையில் வைத்தே திருமணம் நடந்தேறியது.
மீனா இப்பொழுது ராஜாமணியின் சட்டரீதியான மனைவி.
அன்றிரவுதான் அவர்களுக்கு முதல் இரவு!
இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால் அன்றிரவும் முழு நிலவு உதயமாகியிருந்தது.
அன்றொரு நாள் வந்த முழு நிலவு நெருப்பாக மீனாவைச் சுட்டது. அதைச் சபித்தான்.
ஆனால் இன்றிரவு வந்திருக்கும் முழு நிலவு அப்படி அல்ல. அந்த நிலவிலிருந்து புது ஜோடிகளுக்குத் தேவையான குளிர் அருவி கொட்டியது. அதன் குளுமையை அவர்கள் ஆசை ஆசையாக அனுபவிக்கிறார்கள்.
இரு ஜோடிகளும் முழு நிலவின் குளுமையான ஒளியுடன் முதல் இரவின் மகிழ்ச்சியைத் பரிபூரணத் திருப்தியுடன் அனுபவித்தார்கள்.
அந்த முழு நிலவுக்கும், இந்த முழு நிலவுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!
நேராக முழு நிலவுக்கே பயணம் செய்டி கொண்டிருந்ததைப் போன்ற மனப்பூரிப்பு எல்லோருக்கும்.
இதுவரையிலும் அவர்கள் அனுபவித்துவந்த தொல்லைகள் அகன்றன. எங்கு பார்த்தாலும் கொள்ளையோ கொள்ளை!
ஆம்!
அது இளம் தம்பதிகளுக்கு இன்பக் கொள்ளை!
(முற்றும்)
– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை.