முழுநிலவில் முதலிரவு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 108 
 
 

(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

22. பேய்மகனின் விபரீத ஆசை!

மாலினி சொல்லச் சொல்ல ராஜாமணியின் உடலெங்கும் நெருப்பு பற்றிக்கொண்டது போலிருந்தது. 

“உங்கள் சித்தப்பாவுக்கு இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. என் கையினால்தான் அவன் சாகப்போகிறான்” என்று ராஜாமணி முழங்கினான். 

பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி அவள் வேண்டினாள். அவசரப்பட்டு எதையாவது செய்தால் அதுவே பெரும் ஆபத்தைக் கொண்டு வந்துவிடும் என்று சொன்னாள். 

“என்னைப்பற்றி நீங்கள் அஞ்சவேண்டாம். நல்லதொரு சந்தர்ப்பத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று ராஜாமணி சொல்லிவிட்டு, “அதோ பார்…” என்று கையை நீட்டிச் சுட்டிக் காண்பித்தான். 

தூரத்தில் குமார் நின்றுகொண்டிருந்தான். 

“அத்தான் நான் எங்கே போனாலும் விடமாட்டார்போலிருக்கிறதே. என் பின்னாலேயே நிழல்போல் தொடர்ந்து கொண்டே இருப்பாரா?” 

மாலினி அதற்குமேல் அங்கே நின்று பேசிக்கொண்டிருக்க விரும்பாதவளாக கைகளை வீசியவாறு ‘விசுக் விகக்’ என்று நடந்து சென்றாள். 

ராஜாமணி சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தான். 

சைக்கிள் அங்கே இல்லை. 

நெஞ்சு பக்கென்று அடித்துக்கொள்ள சைக்கிள் என்னவாயிற்று என்பதை அறிய விரும்பி நாலாப்பக்கமும் பார்த்தான். 

சைக்கிள் எங்கும் இல்லை. 

கூவம் நதிக்கரையில்தான் அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். 

ஒருவேளையில் சைக்கிள் நதியில் விழுந்து கிடக்குமோ? 

இப்படி அவன் நினைத்துக்கொண்டதும் நதியில் குதித்து மூழ்கி நாலாப் பக்கமும் தேடிப் பார்த்தான். 

சைக்கிள் கிடைக்கவில்லை. 

யாராவது அதை எடுத்துச் சென்றுவிட்டார்களா? 

இப்படி நினைத்ததும் ராஜாமணி, தன் உயிரையே பறிகொடுத்ததைப் போல் துடிதுடித்துப் போய்விட்டான். 

சைக்கிள் எங்கே? 

பத்திரங்கள் – மாலினிதான் சொத்துக்களுக்கு உரியவள் என்பதை நிரூபிக்கும் பத்திரங்கள் – சைக்கிளினுள் இருக்கும் விஷயத்தை எதிரிகள் தெரிந்துகொண்டு அதைத் தந்திரமான முறையில் எடுத்துச் சென்றுவிட்டார்களா? 

ராஜாமணி தன் கடமையிலிருந்து தவறிவிட்டதைப்போல் தவித்தான். மாலினிக்கு மீண்டும் ஏமாற்றத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் கொடுத்து விட்டோமே என்று நினைத்து வருந்தினான். சைக்கிளை இழந்து விட்டாலும் அதற்குப் புதிய சைக்கிள் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பத்திரங்களைப் பொறுத்த வரையில் அப்படி யில்லையே! அந்த நிஜப்பத்திரங்கள் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க முடியாதே! அவளுடைய எதிர்காலம் பத்திரத்தில் அடங்கியிருக்கிறது, 

கலவரமடைந்த ராஜாமணி, வீட்டின் நாலாபக்கமும் சுற்றிப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் சிறிது தூரம் நடந்தான். 

அங்கே சைக்கிள் ஒன்று அனாதை போல் கிடந்தது. அதன் உட்காரும் ஆசனம் தனியாகக் கழற்றிவைக்கப்பட்டிருந்தது. 

அய்யோ… இதென்ன அக்கிரமம்! 

அவை தன்னுடைய சைக்கிள் பாகங்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டதும் ராஜாமணி ஓடிச்சென்று முதல் வேலையாக குழாயைப் பார்த்தான். 

சுருட்டி சுருட்டி வைக்கப்பட்டிருந்த பத்திரங்கள் இல்லை. ஆனால் பட்டை நாமம் திருப்பதி நாமம் போடப்பட்டிருந்த ஒரு சாதாரண காகிதம் மட்டும் அங்கே இருந்தது. 

ராஜாமணி என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை யூகித்துத் தெரிந்து கொண்டான். பத்திரங்களை குபேரன் ஆட்கள்தான் கொண்டு போய் விட்டார்கள் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை. அவரிடம் அந்தப் பத்திரம் இருக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. 

தன் சைக்கிளை தூக்கி சரிசெய்து கொண்ட ராஜாமணி அதில் ஏறி விர்ரென்று குபேரன் வீட்டை அடைந்தான். 

உள்ளே குபோனும், மாலினியும் தங்கள் உறவுகளை மறந்து காரசாரமாகப் பேசி சண்டை போடும் குரல் இடிஇடிப்பதுபோல் கேட்டது. மாலினி கத்தினாள் – பதிலுக்கு அவரும் இரைந்தார். 

“வீட்டினுள், அதுவும் இரும்புப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த பத்திரங்கள் காணாமல் போயிருக்கின்றன. அதைப்பற்றி விசாரித்தால் ‘எனக்கென்ன தெரியும்’ எனறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறாயே! இதற்காகவா உன்னை கஷ்டடபட்டுப் படிக்க வைத்தேன் சித்தப்பாவாயிற்றே என்ற மரியாதையும் பயமும் கொஞ்சமாவது உனக்கு இருக்கிறதா!” என்று இரைந்து கத்தினார் குபேரன். 

“நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?” மாலினி பின்வாங்கவில்லை. அவள்தான் சண்டைக் கோழியாகவே தன்னை தயார் செய்துகொண்டிருக்கிறாளே! அஞ்சாநெஞ்சனாகிய ராஜாமணி பக்கத்துணையாக இருக்கும்போது அவள் மட்டும் பயந்து விடுவாளா என்ன? அவளும் பாயத்தானே செய்வாள். 

“பத்திரங்களை நீ தான் எடுத்து யாரிடமாவது கொடுத்து மறைத்து வைத்திருக்க வேண்டும். சில முக்கியமான விஷயங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக இப்பொழுது அந்தப் பத்திரங்கள் வேண்டும்.” என்றார் அவர். 

“என்னிடம் எந்தப் பத்திரமும் இல்லை.” என்று மறுத்தாள் மாலினி. 

“அந்தப் பத்திரங்களை நீ யாரிடம் கொடுத்து மறைத்து வைத்திருக்கிறாய் சொல்லட்டுமா? பொடிப்பயல் ராஜாமணி இருக்கிறானே; அவனிடம்தான் பத்திரங்கள் இருக்க வேண்டும்.” 

அந்தச் சமயம் பார்த்து ராஜாமணி வந்து, “என்னையும் பத்திரங்களையும் ஒன்றாக இணைத்துப் பேசுவதைப் போல் தெரிகிறதே நான் மட்டும் பத்திரமாக இருக்கிறேனே தவிர, வேறு எந்தவிதமான பத்திரங்களும் என்னிடம் கிடையாது.” என்று சொன்னான் கிண்டலாக. 

அவனைப் பார்த்ததால் இன்னும் கடுமையான ஆவேசம் வந்து விட்டது. “நீ மறுபடியும் இங்கே ஏன் வந்தாய்? மூன்று எண்ணுவதற்குள் இந்த இடத்தைவிட்டு எங்கேயாவது ஓடிப்போய்விடு. இல்லாவிட்டால் துப்பாக்கியைத் தூக்கி வந்து சுட்டுத் தள்ளிவிடுவேன்.” 

பத்திரங்களைக் காணாமல் அவர் தேடுவதால், குபேரனிடம் அந்தப் பத்திரங்கள் சிக்கவில்லை என்பதை ராஜாமணி தெரிந்து கொண்டான். அப்படியானால் மூக்கன் அந்தப் பத்திரங்களை யாருக்குமே தெரியாமல் அபகரித்துச் சென்று விட்டானா? 

ஒரு பயங்கர சதிக்கும்பல் வேலை செய்துகொண்டிருக்கிறதா? 

ராஜாமணி ஒன்றும் புரியாமல் குழம்பிய போதிலும் பத்திரங்களைப் பற்றிய எண்ணங்களைப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன், “ஏன் ஸார், துப்பாக்கிப் பிடித்துக்கூட உங்களுக்குச் சுடத் தெரியுமா?” என்று அலட்சியமாகக் கேட்டான். 

“என்னைப் பார்த்தா இப்படிக் கேட்கிறாய்? ராஸ்கல். இந்த அளவுக்குத் திமிர்பிடித்த உன்னை என்ன செய்கிறேன் பார். பல வழிகளிலும் எனக்குத் தொந்தரவு கொடுக்கும் உன்னை ஒழித்துக்கட்டினால் தான் கொஞ்சமாவது மன அமைதி கிடைக்கும்.” என்று சொன்ன குபேரன் வேகமாக வீட்டினுள் ஓடினார். 

அபாயம் வரப்போகிறது என்பதைத் தெரிந்துகொண்டதும் ராஜாமணியும் மாலினியும் நடுங்கினார்கள். 

ராஜாமணி தன்னிடமிருந்து பத்திரங்கள் காணாமல் போய் விட்ட விபரத்தை சில வார்த்தைகளிலேயே கூறிவிட்டு, “முதலில் நாம் பத்திரங்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அதுவரையிலும் இங்கே எந்தவிதமான தவறுகளையும் வைத்துக்கொள்வது நல்லதல்ல” என்று சொன்னான். 

பேரிடி ஒன்று மண்டையினுள் இறங்கியதைப்போல் இருந்த போதிலும் மாலினி சுதாரித்துக்கொண்டு, “நிலைமை மோசமாகி விட்டது. அதனால் நானும் இனி இந்த வீட்டில் இருப்பது நல்லதல்ல. அதனால் நானும் உங்களுடன் வருகிறேன்.” என்றாள். 

அவள் சொன்னது ராஜாமணிக்கும் திருப்தியாக இருந்தது. ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து அங்கியிருந்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றி ஆணித்தரமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று எண்ணினான். 

குபேரன் துப்பாக்கியும் கையுமாக ஓடிவந்து, “இன்னும் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? மூன்று எண்ணுவதற்குள் ஓடிப் போய்விட்டால் பிழைத்துக் கொண்டாய். இல்லை யென்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கிவிடுவேன்” என்று கனத்த தொண்டையில் உறுமினார். 

“சித்தப்பா, அவள் இங்கிருந்து போவதாக இருந்தால் நானும் கூடவே போக நேரிடும்” என்று மிரட்டினாள் மாலினி. அவள் பயப் படவில்லை. 

அவள் இப்படிப் பேசுவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத குபேரன் தனக்கு வெற்றி கிடைத்து விட்டதைப் போல் மகிழ்ச்சியடைந் ர் அவள் இந்த வீட்டை விட்டுப் போய் விட்டால் அதன் பிறகு எந்தவிதமான சிரமமும் இல்லாமல் அமைதியாக இருக்கமுடியும் அல்லவா? தட்டிக் கேட்பதற்கு கூட யாருமே இருக்க மாட்டார்கள். 

“நீதான் பெண்ணாகிவிட்டாயே உன் சுதந்திரமான வாழ்க்கையில் குறுக்கிடும் உரிமை எனக்கேது? நீ என்ன நினைக்கிறாயோ, அதைத் தாராளமாகச் செய்யலாம்.”. என்றார் குபேரன். 

மாலினி மூகத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு, “வாருங்கள் மிஸ்டர் ராஜா, இந்த வீட்டில் இருப்பதைவிட வேறு எங்கேயாவது போய் நாம் குடியேறலாம்” என்று அழைத்துச் சென்றாள். அவர்களைக் கடந்து வந்த முக்கன், “காதல் ஜோடிகள் கோபித்துக் கொண்டு பறந்து விட்டார்கள் போலிருக்கிறதே” என்று சிரித்தான். 

“ஆமாம் மாலினி தோல்வியடைந்து விட்டாள். ராஜாமணி ஒரு பரதேசி: அவளிடமும் கையில் காசு கிடையாது. இரண்டு பேர்களுமாகச் சேர்ந்து தெருத்தெருவாகச் பிச்சையெடுத்துக்கொண்டு திரிவதை விரைவிலேயே நாம் பார்க்கலாம்.” என்றார் குபேரன் பெருமையுடன். 

“முதலாளி, இப்போதுதான் எனக்கு ஓர் அருமையான யோசனை உதயமாகிறது. ராஜாமணியையும் மாலினியையும் உடமையாகத் தீர்த்துக் கட்டுவதற்கு பொருத்தமான ஒரு ஆளை தேர்ந்தெடுத்து விட்டேன்.” 

“என்ன உளறுகிறாய்? ஏன்… உன்னால் அந்தக் காரியத்தைச் செய்ய முடியாதா? இதைப் போன்ற கொலைகளைச் செய்வதற்குத் தானே சின்னசாமி பெரியசாமி என்ற இரு கையாட்களையும் கூடவே காட்டிக்கொண்டு அலைகிறாய்?” 

“நீங்கள் சொல்லுவது வாஸ்தவம்தான் முதலாளி. ஆனால் ராஜாமணியைக் கொலை செய்ய முயன்று படுதோல்வியடைந்து விட்டதால் தற்சமயம் சகுனம் சரியாக இல்லை. மீண்டும் அவன் தப்பித்துக் கொள்வதுடன் போலீசார் முதல் சில சில்லரைத் தொந்தரவுகளையும் உண்டு பண்ணலாம். அதனால்தான் ஆவேசத்துடன் அவர்களைக் கொலை செய்வதற்கு ஒரு பொருத்தமானவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.” 

”யார் அந்தப் பொருத்தமானவன்?’ 

“இதைக்கூட உங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லையா பாஸ்? நம்முடைய குமார் மாப்பிள்ளையைத்தான் சொல்லுகிறேன். மாலினியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் குட்டிப்போட்ட பூனையைப்போல் இந்த வீட்டினுள்ளேயே வளையவளைய வந்துகொண்டிருக்கிறார். ராஜாமணி மாலினியைக் கடத்திக்கொண்டு போய்விட்டான் என்ற விஷயத்தை இலேசாக காதுகளில் போட்டாலே போதும். உடனே எரிமலையைப் போல் சீறுவார். இரண்டு பேர்களையும் கொலைசெய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வெறி உணர்ச்சிதான் பொங்கும். ஒரே திட்டத்தில் மூன்று உயிர்கள் பலி! நாம் எந்தவிதமான சிரமங்களையும் அனுபவிக்காமல் வெற்றி தேடலாம். என் திட்டங்கள்எப்பொழுதுமே அபாரமான வெற்றியைத் தேடித்தரும்.” 

முக்கன் சொன்ன இந்த போசனை குபேரனுக்கு பரமதிருப்தியாக இருந்தது. உற்சாக மிகுதியினால் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, “நமக்கு எதிரியாக முளைப்பவர்கள் எல்லாம் விரைவில் அழிந்து ஒழிந்தாலே போதும்” என்று சொன்னார். 

அப்போது குமார் மாப்பிள்ளை வேகமாக அங்கே வந்தார், 

அவரைப் பார்த்ததும் மூக்கன் அதிர்ச்சிய அடைந்தவன் போல், குரலை நீட்டி முழக்கிக் கொண்டே “சீக்கிரம் வாருங்கள் மாப்பிள்ளே! உங்க மானம், மரியாதை எல்லாம் ஒரே வழியாக கப்பலேறிவிட்டது. பெருத்த அவமானம்! நானாக மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் எங்கேயாவது தூக்குப் போட்டுக்கொண்டு தொங்கியிருப்பேன்” என்று ஓலமிட்டான். 

என்னவோ, ஏதோ என்று பதறிய குமார் மாப்பிள்ளை “என்ன மூக்கு விஷயத்தைச் சொல்லாமல் ஒப்பாரி வைக்கிறாய்?” என்றான். “வாட் ஈஸ் தி மேட்டர்… கமான் டெல் மி?” 

“அதை என் வாயால் எப்படிச் சொல்வேன் குமார் மாப்பிள்ளை! மனிதனுக்கு மானம்தான் பெரியது. அந்த பெரிய மானம் போய்விட்டால் அதன் பிறகு மனிதன் வாழ்ந்துதான் என்ன பயன்?” என்று சொன்ன மூக்கன், “உங்களுக்கும், மாலினி அம்மையாருக்கும் திருமணம் நடைபெறும், வயிறாரச் சாப்பாடு போடுவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது அந்த நினைப்பின் இடி விழுந்து விட்டதைப்போல் ஆகிவிட்டது” என்று அங்கலாய்த்தான் வயிற்றிலும் அடித்துக் கொண்டான். 

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? உங்கள் பேச்சைக் கவனிக்கும்போது எனக்கும் மாலினிக்கும் திருமணம் நடைபெறாது போல் அல்லவா தோன்றுகிறது.” என்று விழித்தான் குமார் மாப்பிள்ளை. 

“தோன்றுவது மட்டுமல்ல; நிச்சயமாக உங்களுக்கும் மாலினி அம்மையாருக்கும் திருமணம் நடைபெறாது. காத்திருந்தவன் மனைவியை நேற்று வந்தவன் கொண்டு போய்விட்டான் என்ற கதையைப் போல் எங்கிருந்தோ வந்தப் பேப்பர்காரபயல் நம்முடைய மாலினி அம்மையாரை தந்திரமாக ஏமாற்றிக் கடத்திக்கொண்டு போய்விட்டான். அதாவது தங்களுக்குச் சொந்தமான மாலினியை ராஜாமணி கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான். இதைவிடவும் ஓர் ஆண் பிள்ளைக்கு வேறென்ன அவமானம் வேண்டும்? வெட்கக்கேடு- வெட்கக்கேடு. மானம் மட்டும் அல்ல; எல்லாமே போய்விட்டது.” 

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் குமார் மாப்பிள்ளை இரண்டொரு நிமிடங்கள் வரையிலும் அதுவும் பேசாமல் அப்படியே நின்றான். பிறகு திடீர் என்று வெறிபிடித்தவன்போல் “இப்பொழுது அவர்கள் இரண்டு பேர்களும்?” என்று கத்தினான். 

குமார் மாப்பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிட்டது என்பதையும், அதன் விளைவு மிகமிக பயங்கரமாக இருக்கும் என்பதையும் குபேரனும் மூக்கனும் புரிந்து கொண்டார்கள், அவர்கள் உள்ளத்தில் பொங்கிக்கொண்டிருந்த மகிழ்ச்சியைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் கடுகடுப்புடன் முகத்தை வைத்துக் கொண்டார்கள். 

“உங்களிடம் சொன்னால் அவர்களைச் சுட்டுக்கொன்று விடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் முன்கோபக்காரர்.” என்று கோபத்தை மெதுவாகத் தூண்டிவிட்டான் மூக்கன். 

:நான் முன்கோபக்காரன்தான்! எனக்குத் துரோகம் செய்த மாலினியையும், அவளுடைய கள்ளக்காதலனான ராஜாமணியையும் சுட்டுக் கொல்லத்தான் போகிறேன். அவமானச் சின்னங்களான அவர்கள் இனிமேல் இந்த உலகத்தில் உயிர் வாழவே கூடாது.” என்று கத்திய குமார் மாப்பிள்ளை, குபேரனின் கையில் இருந்த கைத்துப்பாக்கியைப் பிடுங்கி எடுத்துக் கொண்டான். 

உடனே பதறுவதைப் போல் பாவனை செய்த குபேரன், “குமார் மாப்பிளே! சுடும்போது மெதுவாகச் சுடுங்கள். ஏனென்றால் மாலினி பாவம்.” என்று சொன்னார். “ஒரே குண்டில் அவள் செத்துவிடக்கூடாது” 

குமார் அவர் சொன்னதைக் காதுகளில் வாங்கிக் கொள்ளாமல் ஆவேச வெறிபிடித்தவனைப்போல் பாய்ந்தோடினான். 

அவன், கண்பார்வையிலிருந்து மறைந்ததும், “நம்முடைய எதிரிகள் எல்லோருமே தொலைந்தார்கள். இனிமேல் நமக்கு நிரந்தாமான வெற்றிதான்.” என்று சிரித்தார் குபேரன். 

”உங்கள் வெற்றிக்குக் காரணமானவன் அடியேன்தான் என்பதை மறந்து விடாதீர்கள். ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை கீழே விழச்செய்து விட்டேன் பார்த்தீர்களா?” 

“இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் உன்னிடம் சொல்லம் போகிறேன். அதாவது நான் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.” 

குபேரன் சொன்னதைக் கேட்டு மூக்கன் வியப்படைந்து, “நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?” என்று கேட்டான். “உங்களுக் கென்றும் ஒருபெண் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறாளா?” 

“ஆமாம் இப்பொழுது நான் கல்யாணம் செய்துகொண்டு அதன் சுவையைபும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. மணப்பெண் யார் என்பதைத் தெரிந்துகொள்ளவில்லையே. என்னுடைய அந்தரங்கக் காரியதரிசியான மீனாவையேதான் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன்”. என்றார் குபோன் மீசையைத் தடவிக் கொண்டே. 

“மீனாவையா…? மீனாவையா..?” என்று வியப்புடன் அலறிய மூக்கன், “இதற்கு மீனா சம்மதித்து விட்டாளா?” என்று. ஓலமிட்டான். 

“இப்பொழுது நான் எதையுமே சொல்லக்கூடாது. நாங்கள் இரண்டு பேர்களும் மண மேடையில் உட்கார்ந்திருக்கும் காட்சியை நீயே விரைவில் தெரித்து கொள்வாய்.” என்று சொன்ன குபேரன் உற்சாக மிகுதியினால் பழத்தட்டில் வைக்கப்பட்டிருந்த ஓர் ஆப்பிஸ் பழத்தை எடுத்து வெற்றி பெருமிதத்துடன் கடித்துச் சுவைத்தார். 

23. துப்பாக்கி வேட்டை! 

மாலினியும் ராஜாமணியும் வீடுகள் அதிகமில்லாத பகுதி வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் அவர்கள் இருவரையும் சைக்கிள் தனித்தனியாகப் பிரித்திருந்தது. 

“ஏன் மாலினி பேசாமல் வருகிறார்கள்? நீங்கள் கொடுத்த பத்திரங்களை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்று நினைத்து வருத்தப்படுகிறீர்களா?” என்று ராஜாமணி கவலைப் வட்டான். 

உடம்பைச் சிலிர்த்துக்கொண்ட மாலினி, “அப்படி ஒன்றும் இல்லை. நம்மை விடவும் எதிரிகள் ஜாக்கிரதையாக இருக்கும்போது நம்மால் என்ன செய்ய முடியும்? பத்திரங்களை இழந்துவிட்டதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் இழந்த பத்திரங்களை எப்படி மீட்பது என்பதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றாள். 

பத்திரங்கள் காணாமல் போனதைப் பற்றி உடனடியாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிடவேண்டும். அப்பொழுதுதான் பத்திரிங்களை எடுத்துச் சென்றிருக்கும் எதிரிகளுக்கு புத்தி வரும் அந்த பத்திரங்களை வைத்துக்கொண்டு அவர்களாலும் எதையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.” என்று சொன்னான் ராஜாமணி. 

அவன் சொன்ன யோசனை மாலினிக்குத் திருப்தியாக இருந்தது. “நாம் நாளைக்கே பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று விளம்பரம் கொடுத்துவிடலாம்.” 

சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு, “மாலினி நாம் இனி மேல் எங்கே தங்குவது? புரட்சிகரமான திட்டத்துடன் நீங்கள் வெளியே வந்துவிட்டீர்கள். அந்தத் திட்டத்தை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது.” என்று சொன்னான் ராஜாமணி. 

“ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலாகப் பார்த்து அதில் தங்கலாம்.” என்று மாலினி சொன்னாள். அதேநேரத்தில் யாரோ வேகமாக ஓடிவரும் காலடியோசைக் கேட்டுத் திரும்பினாள். 

வேகமாக வந்து நெஞ்சில் மோதியதைப்போல் இருந்தது கையில் துப்பாக்கியுடன் குமார் மாப்பிள்ளை ஓடிவந்துகொண்டிருந்தான். 

அவனைக் கண்டதும் மாலினி பயந்து போய், “ராஜா வேகமாக ஓடுங்கள். நம்மைச் சுட்டுக் கொல்ல குமார் ஓடி வருகிறார்” என்று அலறினாள். 

ஆனால் ராஜாமணி பயந்துபோய் ஓடிவிடவில்லை. அமைதியாக நின்று பின்னால் திரும்பிப் பார்த்தான். சிரிப்பு முகமெங்கும் பரவியிருந்தது. 

மிகவும் சமீபமாக குமார் மாப்பிள்ளை வந்துவிட்டான். அவன் சுட்டுக் கொன்று விடுவானோ என்று பயந்த மாலினி, அவன் முன்னால் போய் நின்றுகொண்டு மறைத்து அவன் மீது சாய்ந்து நின்று, “அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுக்கும் வந்துவிடாதீர்கள் அத்தான். நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப்போல் நாங்கள் சுட்டுக் கொல்லப் படவேண்டியவர்கள் அல்ல. நான் உங்களுக்குத் துரோகம் செய்து விடவில்லை. ஒரு நல்ல காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே ராஜாமணியுடன் வந்திருக்கிறேன்” என்று கெஞ்சும் தோரணையில் சொன்னாள். ராஜாமணிக்காக தன் உயிரை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருந்தாள். 

ராஜாமணி சரணாகதி அடைபவன் போல இரண்டு கைகளையும் மேல்நோக்கித் தூக்கியவாறு நின்றுகொண்டிருந்தான். 

“நல்ல காரியத்தை நிறைவேற்றுவதற்காக ராஜாமணியுடன் வந்திருக்கிறாயா? பேஷ்! பேஷ்! உன்னைப் போன்ற கன்னியை நான் வேறு எங்குமே பார்த்ததில்லை. உங்கள் இரண்டு பேர்களையுமே சுட்டுக் கொன்றால்தான் என் மனம் ஆறும். உங்கள் சாவில்தான் எனக்கு மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது.” என்று உறுமிய குமார் மாப்பிள்ளை துப்பாக்கியை நீட்டி குறி வைத்தவாறே நெருங்கினான். 

மாலினி கதறினாள் தன்னால்தானே ராஜாமணி உயிரை இழந்து விடப்போகிறான் என்பதை நினைத்தபோது உடலெங்கும் நெருப்பு பற்றி எரிவதைப் போல் இருந்தது. குமார் மாப்பிள்ளையின் கோபத்தைத் தணித்து அவனை எப்படிக் காப்பாற்றுவது என்பதும் தெரியவில்லை. 

“அதோ குமார் மாப்பிள்ளை சுடுவதற்குத் தயாராகிவிட்டானே! ஒன்று ..இரண்டு அவனுடைய விரல் துப்பாக்கியினுடைய குதிரையைப் பிடித்து இழுக்கப்போகிறது. 

இனியும் அவனிடமிருந்து மீளமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட மாலினி இரண்டு கண்களையும் முடிக்கொண்டு, “எங்களைச் சுட்டுவிடாதீர்கள். நாங்கள் இறந்தபிறகு உண்மையைத் தெரிந்து கொண்டு நீங்களே வருந்துவீர்கள். கொலை செய்த குற்றத்திற்காக போலீஸார் உங்களை விடவும் மாட்டார்கள். அநியாயமாக நீங்களும் உயிரை இழந்துவிடுவீர்கள்.” என்று கதறினாள். 

ஆனால் குமார் மாப்பிள்ளை அவள் சொன்ன எதையுமே காது காதுகளில் போட்டுக்கொள்ளாதவனைப் போல் “ஹா… ஹா…” என்று சிரித்துவிட்டு, “இந்தா ராஜா துப்பாக்கி” என்று கூறி தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியையின் ராஜாமணியின் கையில் கொடுத்தான். 

ஒன்றுமே தோன்றாமல் விளங்கிய மாலினி கண்விழித்துப் பார்த்துவிட்டு விலகி நின்றாள். குமார் மாப்பிள்ளை எதனால் இப்படி நடந்துகொள்கிறான் என்பதை அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை, 

ராஜாமணியும் குமாரும் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் கட்டித் தழுவிக்கொண்டார்கள். கேளிக்கை வெடித்தது. 

“எப்படி என்னுடைய நடிப்பு? பொருத்தமாக இருந்ததா? நீங்கள் சொன்னது போல் இதுவரையிலும் சரியாக நடித்துவிட்டேனா!” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் குமார். 

“குமார் மாப்பிள்ளை சாதாரணமான ஆளா என்ன? அருமையாக நடித்துவிட்டீர்கள். மாலினி பயந்து நடுநடுங்கும் அளவுக்கு உங்கள் நடிப்பு இயற்கையாகவும் தத்ரூபமாகவும் இருந்தது” என்று பாராட்டிய ராஜாமணி, “என்ன மாலினி விழிக்கிறீர்கள்? நாங்கள் இரண்டு பேர்களும் முன்கூட்டியே திட்டம் போட்டுக்கொண்டு தான் வேலை செய்து வருகிறோம். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்து விட்டது.” என்று சிரித்தான். 

மாலினி சிணுங்கின்வளாய், “கடைசியில் என்னைக்கூடவா ஏமாற்ற வேண்டும்! நான் பயந்துபோய்…” என்று நிறுத்தினாள். 

“பயப்படாதே, நான் உன் அருகில் தானே இருக்கிறேன்” என்று உற்சாகமாகச் சொல்லி அவளுடைய முதுகில் தட்டிக் கொடுத்த குமார் மாப்பிள்ளை, “உங்கள் இரண்டு பேர்களையும் சுட்டுக் கொல்வதற்காக கிழட்டு குபேரனும், அந்தப் பயல் மூக்கனும் என்னை இங்கே அனுப்பினார்கள்,” என்று சொன்னான். 

“இப்பொழுது சுட்டுவிட்டீர்கள் அல்லவா? இந்த வெற்றிச் செய்தியை அவர்களிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று கூறி ராஜாமணி சிரித்ததும் மாலினியும் குமார் மாப்பிள்ளையும் சேர்ந்து சிரித்தார்கள். 

“அதிருக்கட்டும் ராஜா, எனக்கும் மாலினிக்கும் எப்பொழுது திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள்? இன்னும் நான் பிரம்மச்சாரியாக நாட்களை எண்ண வேண்டியதுதானா?” என்று பெருமூச்சு விட்டான் குமார் மாப்பிள்ளை. 

நாணத்தினால் மாலினி தலையைத் தாழ்த்திக்கொள்ள, ராஜாமணி, “திருமணம் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. திருமணம் நடைபெறுவதும் நடைபெறாமல் இருப்பதும் ஆண்டவன் செயல்” என்று சிரித்தான். 

உடனே குமார் மாப்பிள்ளை, “இப்பொழுதே நீங்கள் எனக்கு வாக்களித்தால் இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் தெரியப்படுத்துவேன். அதைக் கேட்டு நீங்களும் மாலினியும் பூரித்துப் போய் விடுவீர்கள்.” என்று சொன்னான். 

“முதலில் அந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரியப்படுத்துங்கள்” என்றான் ராஜாமணி. 

“நீங்கள் சைக்கிள் சீட்டுக்கு அடியில் பத்திரங்களை மறைத்து வைத்திருந்தீர்களே, அது என்னவாயிற்று?” 

குமார் மாப்பிளை இப்படிக் கேட்டதும், அந்தப் பத்திரங்கள் அவனிடம்தான் இருக்கின்றன என்பதை ராஜாமணி தெரிந்து கொண்டான். 

“நீங்கள் தான் அந்தப் பத்திரங்களை எடுத்து வைத்திருக்கிறீர்களா?” 

“ஆமாம், உங்கள் சைக்கிள் மீது கேடி முக்கனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. நீங்கள் சைக்கிள் ‘சீட்டை’ அசைத்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்து விட்டானாம். இதைத் தெரிந்து கொண்ட நான் முன்கூட்டியே வந்து பத்திரங்களை எடுத்துச் சென்று போலீஸ் பாதுகாப்பில் வைத்திருக்கிறேன்.” 

குமார் மாப்பிள்ளையின் புத்திசாலித்தனமான செய்கைகளைக் கண்டு ராஜாமணி பெருமையடைந்தான். அவனை இறுகத் தழுவிக் கொண்டு, “உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன்.” 

குமார் மாப்பிள்ளையின் புத்திசாலித்தனமான செய்கைகளைக் கண்டு ராஜாமணி பெருமையடைந்தான். அவனை இறுகத் தழுவிக் கொண்டு, “உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். மாலினியை வாழவைக்கும் தகுதி நிச்சயமாக உங்களுக்கு இருக்கிறது. விரைவில் இரண்டு பேர்களும் மணமக்களாகக் காட்சியளிப்பீர்கள்.
என் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு.” என்று கூறியவன் உற்சாக மிகுதியினால் குமார் கன்னத்தில் ஒரு முத்தமிட்டான். 

அந்த முத்தக் காட்சியைப் பார்த்ததும் மாலினி ‘களுக்’ கென்று சிரித்துவிட்டாள். கன்னங்கள் இரண்டும் சிவப்பு ஆப்பிள் பழங்களைப்போல் குவிந்துக் சிவந்தன. 

24. உண்மை வெடித்தது! 

மீனா பலவிதமான சிந்தனைகளுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். கவலைகள் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தன. நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத்தான் அவளுக்குத் தூக்கமே வந்தது. 

கதவு தட்டப்படும் சப்தம் இலேசாக ஒலித்தது. 

பயங்கரக் கனவு கண்டவளைப்போல் மீனா திடுக்கிட்டு விழித்து எழுந்து உட்கார்ந்தாள். ஒருவினாடி நேரம்கூட அமைதியாக இருக்க முடியவில்லையே என்ற கவலை அவளை வாட்டியபோதிலும், தன்னுடைய கடமையைச் செய்துதானே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுந்து சென்று கதவைத் திறந்து பார்த்தாள். 

அவள் எதிர்பார்த்ததைப்போல் முகமூடி அணிந்த நிழல் மனிதன் ஒருவன் வெளியே நின்றுகொண்டிருந்தான். அந்த உருவம் சட்டென்று அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தது. 

கதவைத் தாளிட மறந்த மீனா, “இங்கே எக்காரணத்தைக் கொண்டும் வரவே கூடாது. என்று எத்தனையோ முறை சொல்லி விட்டேன். நீங்கள் கேட்கவே இல்லை, இனிமேல் நான் இறந்தால் தான் அமைதியுடன் இருக்க முடியுமா!” என்று கூறிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். 

“உஸ்..ஸ்” என்று இரைந்துவிட்டு அவளை அடக்கிய அந்த உருவம் ஒரு காகிதத்தை அவள் கையில் திணித்துவிட்டு அமைதியாக நின்றது. 

மீனா கடிதத்தை பரபரப்புடன் விரித்துப் படித்தாள். அதில் கீழ்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது. 

அன்புள்ள மீனா, 

இப்படியொரு முடிவைத் தேர்ந்தெடுப்பதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். மற்றவர்களைப்போல் நானும் இந்த உலகத்தில் தலைநிமிர்ந்து வாழுவேன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வாழவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. 

மீனா, எத்தனை நாட்களுக்குத்தான் உன்னை நான் திருட்டுத்தனமாக சந்தித்துக்கொண்டிருக்க முடியும்? என்னால் உனக்கும் நிம்மதி இல்லை. எனக்கும் நிம்மதி இல்லை. இந்த நிலையில் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கும் நான் வாழத்தான் வேண்டுமா? சொல் மீனா. 

எனக்கு வாழ்க்கை கசந்துவிட்டது. உன்னை கண்ணபிரானிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவரைக் கொலை செய்தேன். அன்றைக்கே நானும் என் உயிரை மாய்த்திருக்க வேண்டும். ஆனால் பொல்லாத பாவம் வந்து என்னை எதையும் செய்யவிடாமல் தடுத்துவிட்டது. 

மீனா நான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இனிமேல் உனக்கு எந்த விதமான தொந்தரவுகளும் ஏற்படாது. நான் ரகசியமாக வந்து சந்திக்கும் சந்திப்பு இதுதான் கடைசி முறையாக இருக்கும். 

இப்போது நான் உன்னிடமிருந்து விடைபெற்றுச் செல்ல வந்திருக்கிறேன் மீனா. உன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு என்னை வழியனுப்பிவை. நான் எங்கே யாவது இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தால் அந்தப் பிணத்துக்கு உரிமை கொண்டாடி என்னைப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்யாதே. அனாதைப் பிணமாகவே இந்த உலகத்தை விட்டுப் போய்விடுகிறேன். 

செய்வாயா மீனா! தைரியத்தை இழந்துவிடாதே. 

ராஜாமணி நல்லவன். உன்னை வாழவைப்பதற் கேற்ற மனப்பக்குவம் அவனுக்கு உண்டு. அவனையே திருமணம் செய்துகொண்டு நல்லவிதமாகக் குடும்பம் நடத்த முயற்சி செய். கடவுள் உங்கள் இரண்டு பேர்களையும் இணைத்து வைப்பார் என்று நம்புகிறேன். 

வருகிறேன் மீனா. எனக்கு விடை கொடுத்து அனுப்பிவை. 

இப்படிக்கு, 
……

கடிதத்தைப் படித்து முடித்த மீனா, “அண்ணே.. நீங்கள் சாகவே கூடாது. அப்படியே சாகத்தான் வேண்டும் என்றால் நாம் இரண்டு பேர்களும் ஒன்றாகவே சாவோம். உங்களை இழந்துவிட்டு நான் மட்டும் எதற்காக அண்ணே கல்யாணமும் செய்து கொண்டு சந்தோஷமாக வாழவேண்டும். வேண்டாம் அண்ணே! இந்த பயங்கர உலகம் நம்மை வாழவிடாது, நாம் கடலில் விழுந்தாவது உயிரை மாய்த்துக் கொள்ளலாம்.” என்று அழுதாள். 

அதே சமயத்தில் இன்னொரு முகமூடி உருவம் வேகமாக ஓடிவந்து “தங்கச்சி இங்கே நான் இருக்கிறேன். இவன் யாரோ ஒருவன். கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம், அதனால் ஏமாந்து விடாதே.” என்று எச்சரிக்கை செய்தது 

மீனா திடுக்கிட்டுப் பார்த்தாள் அடிவயிற்றிலிருந்து நெருப்புப் பற்றிக்கொண்டு எரிவதைப்போல் அவளுக்குத் தோன்றியது. ஒரே உயரத்தில் இரண்டு கருப்பு உருவங்களா? அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, குழம்பினாள். 

இரண்டு உருவங்களில் தன்னுடைய அண்ணன் யார் என்று அவளுக்குப் புரிய வில்லை; திகைத்தாள். 

அதே சமயத்தில் அந்த இரண்டு உருவங்களும் மிகமிகப் பயங்கரமாக மோதி தரையில் கிடந்து உருண்டன. 

மீனா வாயடைத்துப்போய் நின்றுகொண்டிருந்தாள். யாரைக் காப்பாற்றுவது என்றும் புரியவில்லை. இரண்டுங் கெட்டான் நிலை என்று சொல்லுவார்களே அதைப் போன்றதொரு நிலை. “முருகா, என்னை ஏன் இப்படியெல்லாம் சோதிக்கிறாய்? என் தலையில் விழுந்த இடிகள் எல்லாம் போதாதா? இன்னும் நான் அணுஅணுவாகத் துடித்துச் சாகத்தான் வேண்டுமா?” என்று கதறிய மீனா ஓர் உருவத்தின் முகமூடி அகற்றப்பட்டதும், அது ராஜாமணியாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். 

ராஜாமணி இரண்டு கைகளையும் உதறியவனாய் வெற்றிப் பெருமிதத்துடன் எழுந்து நின்றான். இன்னொரு உருவம் மௌனமாக நின்றுகொண்டிருந்தது. 

“நீங்களா? ராஜா…? நீங்களா கடிதம் எழுதி…?” என்று தயங்கினாள் மீனா. குலை நடுக்கம் உண்டாயிற்று. 

“நான்தான் கடிதம் எழுதினேன். எல்லாமே எனக்கு விளங்கிட்டது. கண்ணபிரானைக் கொலை செய்தது உன் அண்ணன் தான் என்பதை இந்தச் சிறிய சோதனையின் மூலம் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டேன். இனியாவது உன் அண்ணன்தான் கண்ணபிரானைக் கொலை செய்தார் என்பதை ஒத்துக்கொள்கிறாயா?” என்று கேட்டான் ராஜாமணி. 

மீனா பதில் பேசாமல் கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள். உடன் பிறந்த அண்ணனைக் காட்டிக் கொடுப்பதற்கு எப்படி அவளுக்கு மனம் வரும்? 

அதே சமயத்தில் இன்ஸ்பெக்டர் சாரங்கனும் ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்களும் ‘திமுதிமு’வென்று அங்கே வந்தார்கள். 

போலீஸ்காரர்கள் ஒருவர் மூகமூடியுடன் நின்றுகொண்டிருந்த மீனாவின் அண்ணன் என்று கருதப்படும் ஆசாமியின் கருப்பு உடைகளை கழற்றினார். 

என்ன ஆச்சரியம்! அது குபேரனின் வீட்டு வேலைக்காரன் வாசுதான்! 

வாசு தலையைத் தொங்கவிட்டபடியே நின்றுகொண்டிருந்தான். மற்றவர்கள் நிமிர்ந்து பார்ப்பதற்கு அவனுக்கு என்னவோ போலிருந்தது. 

“நாங்கள் மறைவாக இருந்து நீங்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தோம்.” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் சாரங்கன், “கொலையைப்பற்றி என்ன சொல்லுகிறாய்? கண்ணபிரானைக் கொலை செய்தது நீதான் என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறாயா?” என்று கேட்டார். 

“நிலைமை இந்த அளவுக்கு வந்த பின்பு உண்மையை ஒத்துக் கொள்ளாமல் வேறென்ன செய்வது? கண்ணபிரானை நான் கத்தியால் குத்திக் கொன்றேன். ஆனால் அவரை திட்டமிட்டுக் கொல்லவில்லை. உணர்ச்சி வேகத்தினால் உந்தித் தள்ளப்பட்டு ஓர் ஆவேச வெறியுடன் அவரைக் குத்தி கொன்றுவிட்டேன்.” என்று வியர்த்து விறுவிறுத்த நிலையில் மனம் திறந்து பேசிய சமையல்காரன் வாசு, பேச்சைத் தொடர்ந்தான். 

“எனக்கென்றிருப்பது இந்த ஒரே தங்கைதான். ஆனால் நானும் என் தங்கையும் அண்ணன் தங்கை என்று காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தோம். நாங்கள் இரண்டு பேர்களுமே இலங்கையில் பிறந்து வளர்ந்த இலங்கைத் தமிழர்கள். நாங்கள் அகதிகளாக வந்தோம். என் தங்கையை என் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு நான் மட்டும் சென்னை வந்தேன். எனக்கு வேலை கிடைத்தது. கடைசியில் தான் நாங்கள் இரண்டு பேரும் ஒரே முதலாளியிடம் வேலைக்கு அமர்ந்திருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டோம். என் தங்கையை எங்கள் முதலாளி எப்படியோ வேலைக்கு வைத்துக் கொண்டார். 

“இந்த நிலைபில் என் தங்கை அவளுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் பயங்கரமான வேலையை என்னிடம் சொல்லி அந்த வேலையை முழுங்கான முறையில் செய்து முடிக்காவிட்டால் குபேரனின் ஆட்கள் தன்னைக் கொலை செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரியப்படுத்தினாள். அந்த வேலையை விட்டு விலகினாலும் அவள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எதிர்த்துப் பேசினாலும் கொன்றுவிடுவார்கள். அவள் ஓர் அனாதை என்று நினைத்துக்கொண்டிருந்ததால் அந்த வேலையை துணிச்சலாக அவளிடம் ஒப்படைத்திருந்தார்கள். அனாதையாக இருந்தால் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு தட்டிக் கேட்க யாருமே வரமாட்டார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். 

“நான் நிலைமை தெரிந்ததும் வருந்தினேன். நான்தான் அவளுடைய சொந்த அண்ணன் என்பது குபேரனுக்குத் தெரிந்தால் முதல்வேலையாக என்னைக் கொலை செய்யலாம். அதனால் நானும் என் தங்கையும் தனித்துப் பேசி ஐந்து வருட ஒப்பந்தம் முடியும் வரையில் ஒன்றும் தெரியாதவர்களைப் போலவே நடந்துகொள்வது என்ற முடிவுக்கு வந்தோம். எப்பொழுதாவது அவளைச் சந்திக்கவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் நள்ளிரவு நேரத்தில் முகமுடி அணிந்து வருவேன். இப்படியாக எங்கள் துயரத்துக்குரிய நாட்கள் வேதனையுடன் கழிந்தன. 

“இந்த நிலையில் என் தங்கை இதோ நின்றுகொண்டிருக்கும் ராஜாமணியை காதலிக்கிறாள் என்பதையும் அவர் இரண்டு பேர்களும் கல்யாணம் செய்துகொள்ள விரும் கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன். என் உள்ளம் அவர்களை வாழ வாழ்த்தியது, என் தங்கையின் வாழ்க்கையாவது வளமாக அமையட்டும் என்று இறைவனை வேண்டினேன். 

“ஒருநாள் மத்தியானத்துக்குப் பிறகு நான் மார்க்கட்டுக்கு போய் காய்கறி வாங்கிக்கொண்டு ராஜாமணி பின் வீட்டு வழியாக வந்துகொண்டிருந்தேன். அப்பொழுது ராஜாமணியின் வீட்டினுள் ஒரு பெண் வீரிட்டுக் கத்தும் கூச்சல் கேட்டது. உடனே நான் பதறிய நிலையில் அங்கே ஓடிச் சென்று பார்த்தேன். 

“அந்த வீட்டினுள் கண்ணபிரான் என் தங்கையின் கைகளை பற்றி இழுத்துக்கொண்டு பலவந்தம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்ததும் என் இரத்தம் கொதித்தது. மீண்டும் இரத்தக் கொதிப்பு அடங்கவேண்டும் என்ற ஆவேசம் பொங்கியது. அவனுடைய கெட்டவேளை பாருங்கள். அப்பொழுது தான் காய்கறி நறுக்கும் கத்திக்கு சாணை பிடித்துக்கொண்டு வந்திருந்தேன். ஆத்திரம் பொங்கியதால் அந்தக் கண்ணபிரானைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டேன் ஸார். என் தங்கை நிரபராதி அவள் தப்பு செய்திருந்தாலும் பயத்தின் காரணமாகவே செய்யப்பட்டதாகும். அதனால் அவளை மன்னித்து விடுங்கள்.” 

இவ்விதம் சொன்ன வாசு, “ராஜாமணி ஸார், என் தங்கை பயங்கரவாதியைப்போல் உங்கள் கண்களுக்குத் தோன்றலாம். ஆனால் அவள் எடுப்பார் கைப்பிள்ளைப் போன்றவள். மிரட்டினால் பணிந்து விடும் சுபாவம் கொண்டவள். அதனால் அவள் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து அவளை உங்கள் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். மறுபடியும் என் தங்கையை அந்த வெறிபிடித்த மிருகங்களுக்கு இரையாகி விடாதீர்கள்.” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டவன், மீனாவின் கையைப்பற்றி இழுத்து அவன் கையில் ஒப்படைத்தான். 

போலீசார் வாசுவைக் கைது செய்தார்கள். 

“மீனா செய்து வந்த பயங்கரமான வேலை என்ன? இதுவரை சொல்லவில்லையே!” என்றார் இன்ஸ்பெக்டர் சாரங்கன். 

“நான் என்ன வேலை செய்தேன் என்பதை நேரடியாகவே காட்ட விரும்புகிறேன். அதனால் எல்லோரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குபேரன் அண்டு கோவுக்கு வாருங்கள்.” என்று கூறி அழைத்தாள் மீனா. 

அவள் எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டாள். தன் அண்ணன் கொலைகாரனாகிவிட்ட பிறகு யாரையுமே அவள் காப்பாற்ற விரும்ப வில்லை. 

குபேரன் அண்டு கோ நிறுவனத்தில் காம்பவுண்டு வாசலில் நின்று கொண்டிருந்த கூர்க்கா, கார்களில் போலீஸார் இறங்கி வருவதைக் கண்டதும் பதறியவனாய், “குபேரன் ஐயா இங்கே இல்லை”. என்று சொன்னான். 

“அது எங்களுக்குத் தெரியும்”. முதலில் கேட்டைத் திறந்து விட்டதும் போலீஸார் அவன் கைகளில் விலங்கிட்டார்கள். 

பின்னர் இன்ஸ்பெக்டர் சாரங்கன் முன்னேறி வந்து பேக்டரியிலுள்ள எல்லா பூட்டுகளையும் உடைத்தெறிந்துவிட்டு ஒவ்வொரு அறைகளாக சோதனையிட்டுக் கொண்டே சென்றார். பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்த அறையின் கதவு மூடிக்கிடப்பதைக் கண்டதும் நின்றார். 

“இந்த அறையினுள்தான் எல்லா மர்மங்களும் இருக்கின்றன. இது மின்சாரத்தினால் இயங்கும் ஒரு விசைக்கதவு இந்தக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனால் எதிர்பாராத சில நிகழ்ச்சிகளைச் சந்திக்கலாம்” என்று சொன்னான் ராஜாமணி. 

மீனா உயரத்தில் இருந்த பொத்தானை அழுத்தியதும் அந்த விசைக்கதவு தானாகவே திறந்து கொண்டது. 

போலீஸ் அதிகாரிகளும் மற்றவர்களும் உள்ளே போனார்கள். அந்த அறை விசாலமான ஹால்போல் காட்சியளித்தது. அங்கே அதிகமான பொருட்களும் இல்லை. 

உடனே மீனா அவர்களுடைய குழப்பத்தைப் போக்க முன் வந்தாள் “பச்சை விளக்கு எரியும்போது இங்கே வந்தால் இந்த அறை இப்படியேதான் இருக்கும். ஆனால் சிவப்பு விளக்கு எரியும் போது இங்கே வந்தால் பல மாற்றங்களையும் காணலாம்.” 

மீனா இவ்விதம் சொல்லிவிட்டு ஒரு பொத்தானை பிடித்து அழுத்தினாள். சிவப்பு விளக்கு உட்புறமாகவும் எரிந்தது. 

உடனே ‘கிர்ர்’ என்ற ஒலியுடன் தரை சமசதுர வடிவத்தில் கீழே இறங்கி ஓரிடத்தில் போய் நின்றது. 

“எல்லோரும் என்னுடன் இறங்கி வாருங்கள்.” என்று கூறி அழைத்த மீனா அந்த பாதை வழியாக இறங்கிச் சென்றாள் மற்றவர்களும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். 

அது ஒரு பாதாள அறை. அங்கே சிறு சிறு பெட்டிகளில் கஞ்சா, அபின் போன்ற வஸ்துக்களும், ஆயிரக்கணக்கான ஊறுகாய் பாட்டில்களும் காணப்பட்டன. 

இன்ஸ்பெக்டர் சாரங்கனும், ராஜாமணியும் வியப்புடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். 

“என்னுடைய வேலை என்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

வெளுநாடுகளுக்கு ஊறுகாய் புட்டிகளை பார்சல் செய்வது என்னுடைய வேலை.. ஆனால் நான் ஊறுகாய்களுக்குப் பார்சல் செய்வதற்குப் பதில் கஞ்சா, அபின் போன்றவற்றையே பாட்டில்களில் அடைத்து ஊறுகாய் லேபிளுடன் பார்சல் செய்வேன். அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தினால்தான் என் மனச் சாட்சிக்கு விநோதமான இந்தக் காரியங்களையெல்லாந் செய்தேன். இப்பொழுதுதான் என் தலையில் சுமத்தப்பட்டிருந்த பெரும் பளு இறங்கியதைப் போல் இருக்கின்றது.” என்று சொன்ன மீனா தலையைத் தாழ்த்திக்கொண்டாள். 

“யாரோ வருவதுபோல் தோன்றுகிறது.” என்று ஒரு போலீஸ் காரர் எச்சரிக்கை செய்தார். 

உடனே இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும விரைந்து வந்தார்கள். 

சுமார் நூற்றுக்கும் மேலான தடியர்களும், குபேரன், மூக்கன் ஆகியோரும் ஆளுக்கொரு கைத்துப்பாக்கி சகிதம் நின்றுகொண்டிருந்தார்கள். 

குபேரன் அவர்களைப் பார்த்தவுடன் சற்றும் தாமதிக்காமல், “கமான்! சுட்டுத் தள்ளுங்கள் ” என்று இரைந்தார். 

உடனே எல்லோரும் ஒரே நேரத்தில் சுட்டார்கள். ஆனால் வெடியோசைதான் கேட்கவில்லை. போலீஸ் தரப்பைச் சார்ந்த யாரும் குண்டடி பட்டுக் கீழே விழவும் இல்லை. 

குபேரன் எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளாகி ஒன்றும் புரியாமல் தத்தளித்தார். குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை என்பது புரிந்து கொள்ளமுடியாத பெரும் புதிராக அவருக்குத் தோன்றியது. 

“என்ன மாமா விழிக்கிறீர்கள்?” என்ற குரல் கேட்டது. 

எல்லோரும் அந்த குரல் வந்த திசைப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார்கள். குபேரன் கூடத்தான். 

அங்கே, மாலினியும், குமார் மாப்பிள்ளையும் கைகோர்த்தபடி சிரித்த முகத்துடன் வந்துகொண்டிருந்தார்கள். 

”கோபித்துக்கொள்ளாதீர்கள் மாமா. நானும் மாலினியும்தான் துப்பாக்கிகளில் இருந்த எல்லா குண்டுகளையும் எடுத்துவிட்டோம். அதனால் இந்தத் துப்பாக்கிகளினால் யாரையுமே ஒன்றும் செய்ய முடியாது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.” என்று குமார் சொல்லிவிட்டு அமோக வெற்றி பெற்றுவிட்டவனைப்போல் எல்லா பற்களையும் வெளியே காட்டியவாறு சிரித்தான். 

குபேரன் பற்களை ‘நறநற’ வென்று கடித்துவிட்டு சுவர் ஓரமாகப் பதுங்கிச் சென்றார். யாரும் எதிர்பாராத அவர் சுவரை ஒட்டியுள்ள பொத்தானை அழுத்தியதும் சட்டென்று பெட்டி போன்ற ஒன்று வாயைப் பிளந்தபடி வந்து அவரைத் தூக்கிக்கொண்டு சென்றது. கண் இமைக்கும் நேரத்திற்குள் பழையபடி சுவர் மட்டுமே இருந்தது. குபேரன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. 

“என் மாமனார் தாவி விட்டாரே! அவரை விட்டுவிடாதீர்கள்! அடிபட்டுச் சென்ற பாம்பு நிச்சயமாக வஞ்சம் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யும்.” என்று குமார் படபடத்தான். 

போலீஸ் அதிகாரிகள் முதல் வேலையாக எதிரிகளைக் கைது செய்துவிட்டு குபேரனைத் தேடிக்கொண்டு ஓடினார்கள். 

குபேரன் அந்தக் கூட்டத்தில் இல்லை. அவர் எப்படியோ தப்பிவிட்டார். 

மாலினி கொடூரமான தன் சித்தப்பாவின் நடவடிக்கைகளைக் கண்டு குலைநடுங்கியவளாய் என்ன செய்வது என்று தோன்றாமல் விழித்துக் கொண்டிருந்தாள். 

அவளுடைய கையைப் பற்றியவாறு குமார் அழைத்துச் சென்றான். 

தன் அண்ணன் வாசு கைது செய்யப்பட்ட நிலையில் நிற்பதைக் கண்டு மீனா அழுதாள். கொடிய செயல்களுக்கெல்லாம் மூல காரணமாக விளங்கும் குபேரன் தப்பிவிட்டதைக் கண்டு என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்து அதிகக் கவலையடைந்தாள். அவனால் யாருக்கு என்ன ஆபத்து ஏற்படும் என்று முன்கூட்டியே யாராலும் சொல்ல முடியாது. 

மீனா பயங்கரமான செயல்கள் செய்வதற்கு உடந்தையாக இருந்தபோதிலும், அவள் போலீசாருடன் ஒத்துழைக்க முன்வந்ததால் மன்னிக்கப்பட்டாள். 

“மீனா, குபேரன் வழக்கமாக எங்கே போவார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று ராஜாமணி கேட்டான். 

”எனக்குச் சரிவரத் தெரியாது. ஆனால் அவரைப் பார்ப்பதற்காக காந்தா என்ற ஒரு பெண் இங்கே அடிக்கடி வந்து போவாள்.” என்று சொன்னாள், மீனா. 

ராஜாமணி அவள் சொன்னதை பெரிய போலீஸ் அதிகாரியிடம் தெரியப்படுத்திவிட்டு, “காந்தாவின் வீடு எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் ஒருவேளை குபேரனை நாம் அங்கே சந்திக்க முடியும்.” என்று சொன்னான். 

“அந்த வேலையை உங்கள் இரண்டு பேர்களிடமும் ஒப்படைக்கிறேன். உங்களுக்குத் துணையாக பல ரகசியப் போலீஸ்காரர்கள் வருவார்கள்.” என்று அதிகாரி சொன்னார். 

மீனா, அவள் இங்கே இங்கே வேலைக்கு வந்து சேர்ந்த புதிதில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட ரூபவாணி என்ற பெண்ணைப் பற்றியும் விளக்கினாள். 

இதுநாள் வரையிலும் அவள் இதை மறைத்து வைத்தது குற்றம்தான். 

ஆனால் சொன்னால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாக மறைத்து வைத்திருந்ததால் அந்தக் குற்றத்தைப் பெரிதாக போலீசார் எடுத்துக் கொள்ளவில்லை. 

“இப்பொழுது நமக்குத் தேவை குபேரன் மட்டும்தான். அவன் எங்கிருந்தாலும் உடனே கைது செய்யப்பட வேண்டும்.” என்று போலீஸ் அதிகாரி சொன்னார். 

ராஜாமணியும் மீனாவும் அங்கிருந்து விரைவாக வெளியேறினார்கள்.

– தொடரும்…

– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *