முழுநிலவில் முதலிரவு!
கதையாசிரியர்: பி.டி.சாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 89
(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
13. இறுதி எச்சரிக்கை!
மறுநாள் முக்கியமான வேளையில் ராஜாமணி உட்கார்ந்த படியே தன் சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்தான். இரவில் தன்னைக் கொலைக்காரர்கள் கொலை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாததால், அவனுக்கு எந்தவிதமான கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை.
அப்போது மாலினி வாசற்பக்கமாக வந்து நின்றுகொண்டு, “உள்ளே வரலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள். குறுஞ்சிரிப்பு அவள் உதடுகளில் மினுமினுத்தது.
ராஜாமணி நிமிர்ந்து பார்த்தான். அவள் எதனால் தயங்குகிறாள் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது. இரவில் நடைபெற்ற ரகசியமான நிகழ்ச்சியின் விளைவுதான் அது.
“நீங்கள், அனுமதி கேட்ட பிறகுதான் இங்கே வரவேண்டும் என்பது இல்லை. இது உங்கள் வீடு. எப்பொழுது வேண்டுமாலும் வரலாம். போகலாம்” என்றான் ராஜாமணி.
உள்ளே வந்து நின்ற மாலினி “நேற்றிரவு உங்கள் மனம் புண்ணாகும்படி ஏதேதோ பேசிவிட்டேன். காலைபில் வந்து மன்னிப்புக் கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் பேப்பர் போடுவதற்குப் போய்விட்டீர்கள்.” என்றாள்.
“இரவில் நடைபெற்றதை நீங்கள் பெரிய நிகழ்ச்சியாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் அதை அப்பொழுதே மறந்து விட்டேன்.” என்றான் ராஜாமணி, நெஞ்சு நெகிழ.
“அதிருக்கட்டும் நேற்றிரவு எதற்காக வீட்டிற்கு வந்தீர்கள் என்பது நானாவது தெரிந்து கொள்ளலாமா?”
“தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்சமயம் முடியாது, நேரம் வந்தால் நான் உங்களை அழைத்து விளக்கமாகச் சொல்கிறேன்”
“உங்களையேதான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.”
“என்னை நம்பிய யாருமே இதுவரையிலும் கெட்டுப்போனதில்லை.”
ராஜாமணி இப்படிச் சொன்ன அதே நேரத்தில் “ஆமாம் அவனை நம்பிய யாருமே கெட்டுப்போனதில்லை. அதனால் நீ அவனை தாராளமாக நம்பு” என்று கத்திக்கொண்டு குமார் மாப்பிள்ளை அங்கே வந்தான். அவன் கோபத்துடன் வந்திருக்கிறான் என்பதை சிவந்து போயிருந்த அவனுடைய முகம் பளிச்சென்று எடுத்துக் காண்பித்தது.
“வாருங்கள் குமார் மாப்பிள்ளை!” என்று சிரித்த ராஜாமணி, “நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் ‘சிடுசிடு’வென்று எரிந்து விழுகின்றீர்கள். அதிகப்படியான கோபம் ஆரோக்கியமான உடம்புக்கு நல்ல தல்ல என்று கூறுவார்கள்” என்றான் குறும்புத்தனமாக.
அதைக் கேட்டதும் குமார் மாப்பிள்ளைக்கு இன்னும் கடுமையான கோபம் வந்துவிட்டது. “பார்த்தாயா மாலினி, உன்னை எதிரில் வைத்துக்கொண்டே கேலி செய்து விளையாடுகிறான். இவனை இலேசில் விடலாமா! நீயே சொல்.”
“இலேசில் ஏன் விடப்போகிறீர்கள்! கடைசியில் என்னைப் பாராட்டி பொன்முடிப்பு வேண்டுமானாலும் கொடுங்களேன்.”
“பார்த்தாயா? பார்த்தாயா திரும்பவும் என்னைக் கேலி செய்கிறான். டேய் பேப்பர் பையா? நான் யார் என்று தெரியுமா? இரண்டு பேர்களுமே எதிர்காலத் தம்பதிகள். ஆழம் தெரியாமல் காலைவிட்டால் நொறுக்கி விடுவேன், ஜாக்கிரதை.”
குமார் மாப்பிள்ளை இரைந்து கத்தியதும் மாலினி இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு, “எதனால் இப்படியெல்லாம் மனக் கோட்டை கட்டுகிறீர்களோ என்றுதான் தெரியவில்லை. ஒரு நிமிடம் கூட வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டீர்கள் போலிருக்கிறதே” என்று கடிந்துரைத்தாள்.
”மாலினி” என்று சீறினான் குமார் மாப்பிள்ளை.
“உங்கள் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் இந்த மாலினி பயப்படமாட்டாள். பணியவும் மாட்டாள், அதனால் தயவு செய்து இந்த இடத்தைவிட்டுப் போய் விடுகிறீர்களா?”
மாலினி இப்படி மிரட்டியதும் குமார் மாப்பிள்ளே “இதை விடவும் அவமானம் வேறென்ன வேண்டும்! இந்த ராஜாமணி உயிருடன் இருக்கின்றான் என்ற திமிரில் தானே இப்படி எல்லாம் பேசுகிறாய்? விரைவில் என்ன நடக்கப்போகிறது என்பதை நீயே தெரிந்துகொள்வாய். ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் மாலினி! நான் பார்ப்பதற்கு அப்பாவியைப் போல் இருக்கலாம். ஆனால் பாய்ந்தால் புலிதான் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் மறந்துவிடாதே! ராஜாமணியின் மயக்கத்தில் என்னை எடுத்தெறிந்து பேசுகிறாய். அந்த மயக்கம் விரைவில் தெளியத்தான போகிறது.” என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
“அத்தான் ரொம்பவும் கோபித்துக்கொண்டு போய்விட்டார். எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது.” என்றாள் மாலினி, கவலையோடு.
“ஏன்..? உங்கள் அத்தான் என்னைக் கொலை செய்துவிடுவாரோ என்று பயப்படுகிறீர்களா? அதைப பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஈட்டி எட்டிய மட்டும்தான் பாயும். அதைப்போல் உங்கள் அததானும் எவ்வளவு தூரம் பாய்வார் என்பது எனக்குத் தெரியும்” என்று சிரித்தான் ராஜாமணி.
“உங்களுக்கு எல்லாமே விளையாட்டாகத்தான் இருக்கிறது.” என்று பயத்துடன் சொன்ன மாலினி, “நான் கொடுத்த பத்திரங்கள் எங்கே இருக்கின்றன?” என்று கேட்டாள்.
“எங்கே இருக்கவேண்டுமோ, அங்கே மிகவும் பத்திரமாக இருக்கின்றன. தேவைப்படும்பொழுது தாமாகவே அப்பத்திரங்கள் வரும்”
“நான்கூடவா பத்திரங்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்துக் கொள்ளக்கூடாது?”
“நீங்கள் மட்டுமல்ல; வேறு யாராக இருந்தாலும் பத்திரங்கள் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ளக்கூடாது. நான் அவற்றை எடுத்துக்காட்டி முட்டாள்தனமாக நடந்து கொள்ளவும் மாட்டேன்.”
மாலினி சைக்கிளின் உட்காரும் ஆசனத்தைப் பிடித்தபடியே நின்று கொண்டிருந்த போதிலும் அந்தப் பத்திரங்கள் உள்ளேதான் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
“நீங்களாக விரும்பாவிட்டால் உங்களை நான் துன்புறுத்த வில்லை. ஆனால் அந்தப் பத்திரங்களை கைப்பற்றுவதற்கு என் சித்தப்பாவும், மூக்கனும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.”
“என்னைப்பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பயந்து பயந்து பேசமாட்டீர்கள்.”
“நான் பயப்படவில்லை. உங்கள் மீது எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு. இந்த உலகத்திலேயே உங்கள் ஒருவரைத்தானே நம்பியிருக்கிறேன்.”
மாலினி இப்படிச் சொன்ன அதே நேரத்தில் மீனா அவள் சொன்ன வார்த்தைகளைக் காதுகளில் வாங்கிக்கொண்டு அங்கே வந்தாள்.
மீனா எதிர்பாராத நேரத்தில் ‘தடுதிப்’பென்று வந்து நிற்பதைக் கண்டதும் இரண்டு பேர்களுமே திடுக்கிட்டார்கள். பத்திரங்களைப்பற்றி பேசியது அவளுடைய காதுகளில் விழுந்திருக்குமே என்பதை நினைத்தபோது அச்சமாக இருந்தது,
“பொருத்தமில்லாத நேரத்தில் வந்துவிட்டேன் போலிருக்கிறது, ராஜாவை எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்து நேருக்கு நேராகப் பார்த்த பிறகுதான் அவர் யார் என்பது தெரிகிறது. நான் இந்த உலகத்தில் துர்ப்பாக்கியதிகளின் கடைசி வரிசையில் நிற்கக் கூடியவள், என் வாழ்க்கை முழுவதுமே கடைசியில் ஏமாற்றமாக முடியவேண்டியதுதானா?” என்று பொருமிய மீனா, கேவினாள். கண்ணீரைக் கொட்டினாள்.
மாலினி திடுக்கிட்ட போதிலும், சமாளித்துக்கொண்டு, “மீனா ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? இங்கே எதுவும் நடந்துவிட வில்லையே” என்று அமைதியாகச் சொன்னாள்.
அவள் இப்படிச் சொன்னது வெந்த புண்ணில் ஊசியைச் சொருகுவது போல் ‘சுருக்’கென்று குத்தியது. தனக்குச் சொந்தமான ராஜாமணியை அவள் பணத்தைக் காட்டி பறித்துவிட்டாள் என்றே எண்ணினாள்.
“எதுவுமே நடந்து விடவில்லை என்று என்னைப் பார்த்தா சொல்கிறீர்கள்? இதை விடவும் வேறென்ன வேண்டும்? பரவாயில்லை. நான் வந்து ஏன் உங்கள் மகிழ்ச்சிக்கு இடைஞ்சலாக இருக்கவேண்டும். நீங்கள் இரண்டு பேரும் சாதாரணமாக வாருங்கள்.” என்று வாழ்த்துவதைப்போல் சொன்ன மீனா, பொங்கி வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ராஜா, அபாயம் காட்டாற்று வெள்ளம்போல் பொங்கி வந்துகொண்டிருக்கிறது. உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளாவிட்டால் அழிந்து விடுவீர்கள்.” என்று சொன்னவள் கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.
அந்தக் கடிதத்தை விடியற் காலம் நான்கு மணியளவில் கருப்பு உருவம் வந்து கொடுத்துவிட்டுப் போயிற்று. அந்தக் கடிதத்தில் மூக்கன் ராஜாமணியைக் கொலை செய்யப்போகும் திட்டம்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தைப் படித்துப் பார்த்த ராஜாமணி வாய்விட்டுச் சிரித்துவிட்டு, “எல்லாமே வேடிக்கையான கதைகள் போல்தான். இருக்கின்றன.” என்று சொன்னான்.
“என் கடமையைச் செய்து விட்டேன். இனிமேலாவது ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.” என்று சொன்ன மீனா, அழுது கொண்டே ஓடினாள்.
“ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைப் பார்த்தால் பொறாமை ஏற்படும் என்று சொல்லுவார்கள், அது மீனாவைப் பொறுத்த வரையில் எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா?”
மாலினி சொன்னதைக் கேட்டு ராஜாமணி சிரித்துக்கொண்டான். அவனுடைய முழுக்கவனமும் கடிதத்தின் மீதே இருந்ததால் சிரிப்பதற்கு மட்டும் தான் அவனால் முடிந்தது.
“கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது. லவ் லெட்டரா? அதை தான் பார்க்கலாமா?” என்று சிரித்தாள் மாலினி. குறும்புக்காரி அல்லவா!
ஒருவருக்கு வரும் காதல் கடிதத்தை இன்னொருவர் படித்துப் பார்க்கலாமா? அது தப்பல்லவா?
“அபாயம் காட்டாற்று வெள்ளம்போல் வருகிறது என்றும் அவள் சொன்னாளே.”
“சுமுகமாக நடைபெறும் காரியங்கள்கூட அபாயகரமானவை யாகத்தான் தோன்றும். ஆனால் என்னைப், பொறுத்தவரையில் இந்தக் கடிதம் மிக மிகச் சாதாரணமானது.” என்று சொன்ன ராஜாமணி கடிதத்தை மடித்து முழுக்கால் சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டு மறுபடியும் சைக்கிளைத் துடைப்பதில் ஈடுபடலானான்.
அவன் எதைப் பற்றியுமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மினா கண்ணீர்வடித்துக் கதறியதுதான் நெஞ்சை உறுத்தியது.
14. பாதி இரவில்…?
நள்ளிரவு!
மணி பன்னிரண்டு அடிப்பதற்கு இன்னும் சில நிமிடங்களே தான் இருந்தன. ராஜாமணியைக் கொலை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் முக்கனும் அவனுடைய அடியாட்களான சின்னசாமி, பெரியசாமி ஆகியோரும் ஆளுக்கொரு கத்தி சகிதம் ஓசைப்படாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
“சின்னசாமி, பெரியசாமி, கவனமாகக் கேளுங்கள். அவன் சாதாரணமானவனாயிற்றே என்று நாம் அலட்சியமாக நினைக்கக் கூடாது. கதவை நான் மெதுவாகத் திறப்பேன். உடனே நீங்கள் இரண்டு பேர்களும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவனைக் குத்திக் கொன்று விடவேண்டும். உங்கள் குத்தில் உடனடியாக அவன் சாகா விட்டால் உடனே நானும் என் கைவரிசையைக் காட்டுகிறேன்.” என்று மெல்லிய குரலில் சொன்னான் மூக்கன்.
மூன்று பேர்களுமே மதுபானத்தில் நீந்தியிருந்ததால் ராஜாமணியைக் கொலை செய்யவேண்டும் என்ற ஒரே வெறியுடனேயே இருந்தார்கள்.
“நீங்கள் கவலைப்படவேண்டாம் வாத்தியாரே! அந்தப் பொடியனை நானே கவனித்துக் கொள்கிறேன்.” என்றான் சின்னசாமி.
“நான் என்று சொல்லி நம்மிடையே இருக்கும் ஒற்றுமையைக் குலைக்காதேடா, நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று பெருமையுடன் சொல்.” என்று திருத்தினான் இன்னொரு ரௌடியான பெரியசாமி.
“நாங்கள் கொலை செய்கிறோம் பாஸ், உங்களுக்குத் தூக்கம் வந்தால் நீங்கள் போய் தூங்குங்கள் பாஸ். நாங்கள் அவனைக் கொலை செய்துவிட்டு அதன்பிறகு தூங்குவதற்கு வருகிறோம்.”
தூக்கத்தைப் பிரச்னையாக எடுத்துக்கொண்டதும் மூக்கனுக்கு கோபம் வந்துவிட்டது. தலையில் ஆளுக்கொரு குட்டு குட்டி, “அதிகப் பிரசங்கிகளா? நான் சொன்னதைச் செய்யுங்கள்.” என்று சொன்னான்.
உடனே கதவு ‘விரிசோ’வென்று திறந்துகொண்டது.
மூக்கன் இன்னும் அவன் தூங்கவில்லையோ என்று நினைத்துப் பதறியபோதிலும் நிலைமையைச் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் மெதுவாக தலையை நீட்டிப் பார்த்தான்.
உடனே அவனுடைய முகத்தில் திகிலடைந்தது. அவன் பின்னால் வந்து கொண்டிருந்த சின்னசாமியும், பெரியசாமியும் திடுக்கிட்டு திறந்த வாயை மூட முடியாமல் அப்படியே மரம்போல் நின்றார்கள்.
அங்கே ராஜாமணி ஒரு நாற்காலியில் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான். அவனுடைய நெஞ்சிலிருந்து இரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவன் இறந்துவிட்டான் என்பதைத் தொங்கிப்போயிருந்த தலையும், வெளியே நின்றிருந்த நாக்கும் பளிச்சென்று எடுத்துக் காண்பித்தன.
“ராஜாமணி இறந்துவிட்டான். அவனுக்கு பல எதிரிகள் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. நாம் அவனை கொலை செய்வதற்குள் எதிரிகளே முந்திவிட்டார்கள். நமக்கு கொலை செய்ய வேண்டிய சிரமம் குறைந்துவிட்டது.” என்று சொன்ன மூக்கன், தன் கையாட்களையும் அழைத்துக்கொண்டு நேராக குபேரன் மாளிகையினுள் நுழைந்தான்.
குபேரன், ராஜாமணி கொலை செய்யப்பட்டான் என்ற நல்ல செய்தியைக் காதுகுளிர கேட்கவேண்டும் என்ற ஆவலினால் ஒரு இடத்திலும் நிற்கமுடியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார். கால்கள் தரையில் பற்ற மறுத்தன.
“வெற்றி – வெற்றி கொஞ்சமும் எதிர்பார்க்காத மகத்தான வெற்றி. உடம்பை அலட்டிக் கொண்டிருந்த ராஜாமணி பரிதாபமாக இறந்து விட்டான்.” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டே ஓடி வந்த மூக்கன், குபேரனை இறுகத் தழுவிக்கொண்டான்.
“சபாஷ்! இப்போதுதான் எனக்கு பாதாம்கீர் குடிப்பது போல் இனிப்பாக இருக்கிறது. நல்ல செய்தியைத் தந்தீர்கள். உங்களை எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பாராட்டலாம்.” என்று சொன்ன குபேரன் சின்னசாமி பெரியசாமி ஆகியோரின் கைகளையும் பிடித்துக் குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
“ஆனால் ஒரு மாற்றம் முதலாளி. அவனை நாங்கள் கொலை செய்யவில்லை. எங்களுக்கு முன்னால் வேறு எவனோ ஒருவன் போட்டி போட்டு முந்திக்கொண்டு அவனைக் கொலை செய்துவிட்டான்.” என்றான் மூக்கன்.
“ஆச்சரியமாக இருக்கிறதே! என்னால் இதை நம்பமுடியவில்லை. அனாலும் என்ன? எந்த வழியிலும் அவன் செத்துத் தொலைந்தால் சரிதான்.” என்று வெறுப்புடன் சொன்ன குபேரன்; “அதிருக்கட்டும், பிணத்தை என்ன செய்தீர்கள்? அப்புறப்படுத்தி விட்டீர்களா? ஏனென்றால் கொலை நடந்திருக்கும் இடம் நம்முடைய அவுட் ஹவுஸ்.” என்று நினைவுபடுத்தினார்.”
“இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் உங்கள் காதுகளில் போடவேண்டும் என்பதால் பிணத்தைப்பற்றி ஒன்றும் சிந்திக்காமல் வந்துவிட்டோம். விடிவதற்குள் அந்தப் பிணத்தை ஒரு சாக்குப் பையினுள் அடைத்து எடுத்துச்சென்று கடலில் போட்டுவிட்டு வந்து விடுகிறோம். நீங்கள் எந்தவிதமான கவலையும் இல்லாமல் அமைதியாகத் தூங்குங்கள்.” என்று சொல்லி அவரை உற்சாகப்படுத்தினான் மூக்கன்.
உடனே குபேரன் தயாராக எடுத்து வைத்திருந்த சில ரூபாய் நோட்டுக்களை அவன் கையில் வைத்து அழுத்தி, ”காரியத்தை கச்சிதமாகச் செய்துமுடி. ராஜாமணி இறந்துவிட்டான் என்பதோ, அவன் பிணம் அப்புறப் படுத்தப்பட்ட விஷயமோ எக்காரணத்தைக் கொண்டும் மாலினிக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் உடனே நம் எல்லோரையுமே போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவாள்’ என்று நினைவூட்டினார்.
இதைப் போன்றக் கொலைகளைச் செய்வதும், இரவோடு ரவாக பிணத்தை எடுத்துச் சென்று ம றப்பதும் எங்களுடைய தொழில், அதனால் பாம்புக் குட்டிகளுக்கு எதுவுமே கற்றுக்கொடுக்க வேண்டாம்.” என்று சொன்ன மூக்கன், தன் அடியாட்கள் சகிதம் வெளியே போனான்.
ராஜாமணியின் அறைக்கதவு திறந்தபடியே கிடந்தது. ஆனால் இதுவரையிலும் எரிந்துகொண்டிருந்த விளக்கு மட்டும் அணைந்து ஒரே இருட்டாக இருந்தது.
“வாத்தியாரே! விளக்கு அணைந்திருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ராஜாமணியைக் கொலை செய்த கொலைகாரன் வீட்டினுள்ளே பதுங்கியிருப்பான் போலிருக்கிறதே.” என்று நடுங்கினான் சின்னசாமி.
பெரியசாமியும் அதையேதான் எதிரொலித்தான். பொதுவாக இரண்டு கொலைகாரர்கள் ஒருவருடன் ஒருவர் மோத தயங்குவார்கள்.
மூக்கன் இரண்டு பேர்களுக்கும் ஆளுக்கொரு உதை கொடுத்து விட்டு, “தொடை நடுங்கிப் பசங்களா, கையில் கத்தி வைத்திருப்பதை மறந்து விட்டீர்களா?” என்று சீறியவன் வீட்டினுள் சென்று சுவரைத் தடவி சுவிட்ச் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விளக்கை எரிய விட்டான்.
அதே சமயத்தில் சின்னசாமியும், பெரியசாமியும் கூச்சல் போட்டார்கள்.
அவர்களுடைய செய்கையில் மேலும் ஆத்திரமடைந்த மூக்கன், பிணம் கிடந்த நாற்காலியைப் பார்த்தான், அவனும் அதிர்க்சியால் தாக்குண்டான்.
நாற்காலியில் கயிறு மட்டும்தான் இருந்தது. ஆனால் ராஜா மணியின் பிணம் அங்கே காணப்படவில்லை.
“பிணத்தையும் கொலை செய்தவனே எடுத்துக்கொண்டு போய் விட்டான் போலிருக்கிறது. ஒருவிதத்தில் இதுவும் நமக்கு நல்லது தான். சிறிதளவு வேலைப்பளு குறைந்தது” என்று சொன்ன மூக்கன், பிணம் வீட்டின் மற்ற அறைகளில் இருக்கக்கூடுமோ என்று சந்தேகத்துடன் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தான்.
ராஜாமணியின் பிணம் எந்த அறையிலுமே இல்லை.
“ஆச்சரியமாக இருக்கிறது வாத்தியாரே! பிணம் எப்படியோ மாயமாக மறைந்துவிட்டதே.” என்றான் சின்னசாமி.
“எல்லாம் நம்முடைய நல்ல நேரத்திற்கு அறிகுறிதான்.” என்று சொன்ன பெரியசாமி. வாத்தியாரே! பிணம் மாயமாக மறைந்துவிட்ட செய்தியையும் குபேரன் ஐயாவின் காதுகளில் போட்டு வைக்கலாமா?” என்று கேட்டான்.
“முட்டாள்! இந்த விஷயத்தைக் குபேரனிடம் சொன்னால் நிலைமை என்னாகும் தெரியுமா? காணாமல் போன பிணத்தைத் தேட வைத்து நம்மையும் பிணமாக்கிவிடுவான். அதனால் பிணத்தை நாமே அப்புறப்படுத்தி விட்டதாக பொய் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் கைநிறைய பணமும் கிடைக்கும்” என்று சொன்ன மூக்கன், அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான்.
சின்னசாமி யும், பெரியசாமியும் அவனுடைய நிழலைப்போல் பின்தொடர்ந்தார்கள். எந்த வழியைக் கையாண்டாவது பணத்தை அடைந்தால் அதுவே அவர்களுக்குப் போதுமானது.
15. பேயின் ஆர்ப்பாட்டம்!
வீட்டினுள் சென்று எதையாவது உளறி கையில் கிடைப்பது வரையில் சுருட்டிக்கொண்டு போகலாம் என்று எண்ணிய மூக்கன் வீட்டின் அருகில் வந்ததும் மிகவும். உரத்த குரலில் பாடும் ஒரு பாட்டு கேட்டது. அங்கேயே நின்று வீட்டினுள் பாடிக்கொண்டிருப்பது யார் என்று கவனித்தான்.
அந்தக் குரல் ராஜாமணியினுடையதைப் போல் இருந்தது. இறந்துபோன அவன் ஆவியாய் அலைந்து பாடிக்கொண்டிருக்கிறானா? யாரையாவது பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த ஆவி வீட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறதா?
“புன்னகை வீசும் பூங்கொடி கன்னியே நாணம் ஏனடி…?”
இந்த ஒரே ஒரு வரி மட்டும்தான் மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருந்தது; ராஜாமணியினுடைய குரல்தானா அது?
“வாத்தியாரே இறந்துபோன அந்தப் பேப்பர்காரன் பாடுகிறான்போல் தோன்றுகிறதே…? இறந்து போன அவனால் மறுபடியும் எப்படி உயிர்பெற முடிந்தது? எனக்குப் பயமாக இருக்கிறது. நாம் அவனைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் என்பதாலே நமக்கும் ஆபத்து ஏற்படலாம் ” என்றான் சின்னசாமி.
“அந்த பாட்டின் வரிகள் உங்கள் காதுகளில் விழுகிறதா வாத்தியாரே! காதலன் காதலியை நினைத்துப் பாடுவதைப் போலவே அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது.” என்று சொன்ன பெரியசாமி, “நாம் வேறு வழியாக நம்முடைய ஜாகைக்குப் போகலாமே” என்று நினைவுபடுத்தினான்.
“வாங்கடா தொடை நடுங்கிப் பசங்களா… பேயாவது பிசாசாவது? என்னவென்று நேரிலேயே பார்த்துவிடலாம்” என்று துணிந்து விட்ட மூக்கன் ஹாலினுள் நுழைந்தான்.
அந்த ஹாலினுள் இருட்டாக இருந்தது. நடுவே இருந்து தான் அந்தப் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பாட்டைக் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வந்த மாலினி, விளக்குகளை எரிய விட்டுவிட்டு கோபத்துடன் பார்த்தாள்.
சோபாவின் மீது ராஜாமணி சாய்ந்து கிடந்தவாறு பாடிக் கொண்டிருக்க, குமார் மாப்பிள்ளை, குபேரன், மூக்கன், சமையல்காரன் வாசு ஆகியோர் ஆளுக்கொரு மூலையில் நின்று கொண்டிருந்தார்கள்.
இறந்து போன ராஜாமணி பேயாக வந்திருக்கிறானோ என்று நினைத்துப் பதறிய குபேரன் “பேய் பேய்..” என்று அலறியவாறு ஓடிச்சென்று குமார் மாப்பிள்ளையைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
“பேய வது மண்ணாவது, எல்லாம் பித்தலாட்டம். இந்த பேப்பர் பயலை இப்பொழுதே கிழித்தெறிந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு முன்னால் பாய்ந்த குமார், ராஜாமணி “ஹா..ஹா..” என்றவாறு எழுந்து நின்று சிரித்ததும் சற்றுப் பின்வாங்கினான். அவன் சிரிந்தச் சிரிப்பு உயிரை உறிஞ்சும் பேயின் சிரிப்பாக இருந்தது.
“மிஸ்டர் ராஜாமணி, என்ன இதெல்லாம்…? உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? ஏன் இப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்?” என்று மாலினி கண்டித்தாள்.
“பைத்தியம் பிடிக்கவில்லை மாலினி தங்கச்சி. அவனுக்கு பேய் பிடித்திருக்கிறது” என்று அலறினான் மூக்கன். அவன் குரல் ஊளையாக மாறியது.
“பேயாக இருந்தால் யாருமே பக்கத்தில் போகாதீர்கள்” என்றான் சமையல்காரன் வாசு.
அவர்கள் சொல்லுவதையெல்லாம் காதுகளில் வாங்கிக் கொண்ட ராஜாமணி, “ஹோ..ஹோ” என்று அடித்தொண்டை யிலிருந்து கத்திச் சிரித்துவிட்டு அங்கிருந்து வெளியே போனான்.
அதன்பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசினார்களே தவிர, எந்தவிதமான பயனும் கிட்டவில்லை.
மாலினியும், குமாரும், சமையல்காரன் வாசுவும் தூங்கச் சென்ற பின்பு, குபேரன் மூக்கனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு மாடிக்குப் போனார்.
“ஏ மூக்கன்! இதற்கு நீ என்ன சொல்லுகிறாய்? அவன் நம் எல்லாரையும் முட்டாள்களாக்கிவிட்டு தன்னை யாரும் அசைக்க முடியாது என்று சவால் விடுபவனைப்போல் நடந்துகொள்வதைப் பார்த்தாயா?” என்று அவனை கண்டிப்பதைப் போல் சொன்னார், குபேரன்.
மூக்கன் தனக்கு மகத்தான தோல்வி கிடைத்துவிட்டதைப் போல் வேதனையுற்று விழித்தான். ராஜாமணியை கற்பனையில் நினைத்துப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது.
“ராஜாமணி தப்பிவிட்டான் போல்தான் தெரிகிறது. அவன் செத்துக் கிடப்பவனைப்போல் பாவனை செய்து எல்லோரையுமே ஏமாற்றிவிட்டான்” என்றான் மூக்கன்.
“அவன் மிகவும் சாமர்த்தியசாலியாக இருப்பதால் பத்திரங்கள் அவனிடம்தான் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் நான் முழு சக்தியையும் பிரயோகித்து முதலில் பத்திரத்தைத் தேடிப் பார்க்க வேண்டும் நாம் இந்த விஷயத்தில் ஏமாந்துவிட்டால் அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து உடனே நம்மை ஓட ஓட துரத்தி விடுவார்கள். எனக்கு இந்த வீட்டில் எந்தவிதமான பிடிப்புகளும் இல்லை.” என்று வருத்தத்துடன் சொன்ன குபேரன் அடுத்து என்னென்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்திக்கலானார்.
ராஜாமணி தன் வீட்டின் கதவைத் தள்ளி திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும்,”என்னங்க…” என்று கூப்பிட்டுக்கொண்டே மாலினி வந்தாள்.
“வாருங்கள் மாலினி, இந்த வேடிக்கையான கதையை உங்களிடம் சொல்லித்தான் சிரிக்கவேண்டும் என்று நினைத்தேன்” என்றான் ராஜாமணி.
“நீங்கள் சிரிப்பதற்கு நினைக்கிறீர்கள். அதே நேரத்தில் உங்கள் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதும் மறந்துவிட் டீர்கள். இனிமேல் நீங்கள் ஒரு வினாடி நேரம்கூட இங்கே இருக்கக் கூடாது.”
“இங்கே இருக்கவேண்டாம் என்றால் வெளியேபோய் பேசுவோம். எனக்கு இங்கே இருப்பதும், வெளியே போவதும் ஒன்று தான்.”
ராஜாமணியும் மாலினியும் வெளியே வந்தார்கள். ராஜாமணி சைக்கிளை மறக்காமல் தள்ளிக்கொண்டே வந்தான்.
“இங்கு சைக்கிளையும் ஏன் தள்ளிக்கொண்டு வருகிறீர்கள்? வீட்டின் ஒரு மூலையில் போட்டு வைத்தால் அங்கேயே கிடக்காதா?” என்று பேச்சோடு பேச்சாகக் கண்டித்தாள் மாலினி.
“இதை நீங்கள் வெறும் சைக்கிள் என்ற கண்ணோட்டத்துடன்’ பார்க்கிறீர்கள். ஆனால் அதை நான் என் உயிரை விடவும் மேலாக மதிக்கிறேன். நானும் இந்த சைக்களும் ஒரு வினாடி நேரம்கூட பிரிந்திருக்கத் தயாராக இல்லை.”
“கல்யாணம் செய்துகொண்ட பிறகுகூட சைக்கிளை பிரிய மாட்டீர்களே?” என்று சிரித்தாள் மாலினி.
“கல்யாணம் செய்துகொண்ட பிறகல்லவா நாம் அதைப் பற்றிப் பேசவேண்டும். இப்பொழுது நான் பிரம்மச்சாரி. நீங்களும்…” என்று நிறுத்திய ராஜாமணி, “நாம் இப்பொழுது எதற்காக கள்ளக் காதலர்களைப்போல் தனியாக வருகிறோம்? உங்கள் குமார் மாப் பிள்ளை பார்த்தால் அவ்வளவுதான்.” என்று கண்களைச் சிமிட்டினான்.
“அவருக்கு வேறு வேலையே இல்லை. எப்பொழுது பார்த்தாலும் நான் என்ன செய்கிறேன், எங்கே போகிறேன் என்றெல்லாம் பார்ப்பது தான் அவருடைய வேலை. சித்தப்பாவுடன் சேர்ந்து கொண்டு அவர் நடந்து கொள்ளுகிற முறை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. கல்யாணமே வேண்டாம் என்றுகூட சொல்லிவிடலாமா என்று தோன்றுகிறது.”
இரண்டு பேர்களும் இருட்டோடு இருட்டாக புல்வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“குமார்மீது நீங்கள் வெறுப்புக் கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். பொதுவாக ஓயாமல் குறுக்கிட்டு தொல்லைகள் கொடுக்கக்கூடிய வாலிபர்களை பெண்களுக்குப் பிடிக்காது. என்னைப் போல் இங்கிதம் தெரிந்து நடந்துகொள்பவர்கள் தான் பெண்களுக்குத் தேவை” என்று சிரித்தான் ராஜாமணி.
“போதும் ராஜாவே! உங்கள் குறும்புத்தனம்! முதலில் நாம் இங்கே எதற்காக வந்திருக்கிறோம் என்பதைப்பற்றிப் பேசுவோம்” என்றாள் மாலினி.
“மற்றவர்களுடைய இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பதற்காக நாம் இங்கே தனியாக வந்திருக்கிறோம்” என்று சொன்ன ராஜாமணி, தான் இறந்து விட்டவனைப் போல் நடித்து அவர்களுடைய கொலைத் திட்டத்தை முறியடித்த விஷயத்தையும் சொன்னான்.
“கொலை செய்வதற்குக்கூட என் சித்தப்பா தயாராகி விட்டாரா? இனி நாம் எச்சரிக்கையுடன் இருந்தேதான் ஆக வேண்டும்”. என்று சொன்ன மாலினி “உங்களைக் கொலை செய்ய நினைத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?” என்று பதறினாள்.
“அந்த ஆதாரம் நாளை கிடைத்துவிடும். உடனே சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம்” என்று சொன்ன ராஜாமணி, “மாலினி, உங்கள் உயிருக்கும் எந்த நிமிடமும் ஆபத்து நேரிடலாம். அதனால் விழிப்பாகவே இருங்கள்” என்று எச்சரித்தான்.
மாலினி உண்மையிலேயே பயந்தாள். தன் சித்தப்பா பணத்துக்காகவே அப்படிப்பட்ட பஞ்சமா பாதகங்களை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருப்பவர் என்பது அவளுக்குத் தெரியும். மேலும் அவருடைய கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பதற்கு மூக்கன் இருக்கிறானே!
“என்னைக் கொலை செய்யவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்த போதிலும் பத்திரங்கள் கிடைப்பது வரையில் என்னை ஒன்றுமே செய்யமாட்டார்கள். அதனால் நான் தைரியமாக இருக்கலாம்.” என்றாள் மாலினி, ஒரு மன உறுதியுடன்
“அப்படியானால் நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணருகிறேன். என்னை அவர்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்வதற்கு முயற்சி செய்யலாம்” என்றான் ராஜாமணி.
“ஆமாம், அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு போதுமே மறந்து விடாதீர்கள்” என்று மாலினி சொல்லிக்கொண்டிருந்தபோது “அதைக் கவனித்தீர்களா! மனிதனைப் போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு கருப்பு உருவம் போகிறது” என்று கூறி சுட்டிக் காட்டினாள்.
ராஜாமணி நிமிர்ந்து பார்த்தான் பரபரப்போடு.
மங்கலான நிலா வெளிச்சத்தில் ஒரு கருப்பு உருவம் வேகமாகப் போய்க்கொண்டிருப்பது அவனுடைய பார்வையில் பளிச்சிட்டது.
“இந்தக் கருப்பு உருவம் உங்கள் மாளிகையிலிருந்துதான் வெளியே போகிறது போல் தோன்றுகிறது. உடனே இதைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். அந்த உருவம் யார் என்பதைத் தெரிந்து கொண்டால் சில பயன் தரக்கூடிய மாறுதல்கள் ஏற்படலாம்” என்று சொன்ன ராஜாமணி பத்திரமாக அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டு தன் சைக்கிளில் ஏறி விரைந்தான்.
ஆனால் அதற்குள் அந்த உருவம் எங்கேயோ, மறைந்து சென்றுவிட்டது.
மீணாவைத் தேடிக்கொண்டு அந்த உருவம் போயிருக்குமோ!
இப்படியொரு எண்ணம் எழுந்ததும் ராஜாமணி சைக்கிளை வெகு வேகமாக ஓட்டிச் சென்று மீனாவின் வீட்டின் எதிரில் உள்ள மரத்தின் அடியில் மறைந்து நின்றுகொண்டு கவனித்தான்.
கருப்பு உருவம் விடிவது வரையிலும் அந்தப் பக்கமாக வரவே இல்லை.
– தொடரும்…
– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை.