முரண் தொடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 49 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதுகில் தொங்கிய மூட்டையை தூக்கி எறிந்தாள் சுகுணா. 

‘கான்வெண்ட் பாடங்கள் ஒரு கழுதைச்சுமை, பாவம், குருவி பனம் பழத்தைச் சுமக்கிறது,’ என்று தாத்தா முனகியவாறே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். 

பள்ளி அசடுகள் தீர, முகம் கழுவி-பவுடர் போட்டு முகம் மலர்ந்து வந்த சுகுணா தாத்தாவை அன்புடன் அணைத்தவாறு சோபாவில் தொப்பென்று விழுந்தாள். 

மெட்ரிகுலேஷன் பள்ளியில் மூன்று படிக்கும் சுகுணா படு சுட்டி, பயங்கர அறிவு, மண்டை முழுசும் மூளை, வாயில் ஆங்கிலம் துள்ளி நடம் புரியும். 

‘டி.வியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பாடப்புத்தகங்கள் இலவச முட்டை, இலவச பஸ் பாஸ்…’ 

‘போரடிக்கு தாத்தா…. இங்கிலீஸ் மீடியம் பிள்ளைகளுக்கு ஒண்ணும் இலவசம் கிடையாது…’ என்றவாறே டி.வி. பக்கம் போகவும் ‘நுழைவுத்தேர்வு ரத்து’ என்ற செய்தியை வாசிக்கவும் தாத்தா கைதட்டி வரவேற்றார். 

‘போங்க தாத்தா, அதெல்லாம் மண்டுப்பிள்ளைங்களுக்கு நல்ல செய்தி எங்களுக்கெல்லாம் கெட்ட செய்தி’ என்று கூறியவாறு சேனலை மாற்றினாள். 

‘கும், கும்… டமால் டுமீல்’ முட்டைகள் உருண்டு உடைந்தன. பாத்திரங்கள் பறந்தன். நாற்காலிகள் எட்டுக்கால்களாக உடைந்தன… 

‘ஐய்… ஐய்…. ஜர்லி கண்ணா ஜாலி….’ என்று கைகொட்டிக் குதித்தாள். 

சுகுணாவிற்கு சண்டைப்படம் ரொம்பப் பிடிக்கும். கதாநாயகன் வேட்டி அவிழாமலே எட்டுபேரை அடித்து வீழ்த்தினான். வில்லன் விழுந்து விழுந்து எழுந்தான். கும்மாங்குத்தில் ஒரு பல்கூட உடையாமல் வாயிலிருந்து சிவப்புமை இரத்தம் சிந்தியது. 

‘அயோக்கியப் பசங்க, சண்டை போட்றானாம் – ஊர் உலகத்தை ஏமாத்துறான்க’ தாத்தா தம் ஆதங்கத்தைக் கொட்டினார். 

சுகுணா எழுந்தாள். ‘தாத்தா…’ என்று நீட்டி முழக்கி சுட்டு விரலால் அழகு காட்டி, ‘இவங்க, நீதிமான்கள் தத்தா’ என்றாள். 

‘நீதிமான்களையே கொச்சைப் படுத்துறீயே குட்டி – இங்கிலீஷ் மீடியம் இப்படித்தான் இருக்கும் சண்டைப் படத்துல நடிக்கிற இவங்க அயோக்கிய ராஸ்க்கல்கள் தாத்தாவின் மீசை துடித்தது. 

‘தாத்தா…’ என்று நளினம் காட்டி எழுந்த சுகுணா, ‘இவங்க நீதிமான்கள்ன்னு நா சொல்லலை தாத்தா… உங்க பைபிள் சொல்லுது. நீதிமொழிகள் புத்தகம் இருபத்து நாலாம் அதிகாரம், இருப்பத்தாராம் வசனத்தை நான் வாசிக்கிறேன் தாத்தா’ 

‘நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திருப்பான்’. 

‘இந்த வாரம் சண்டே கிளாஸ்ல மனப்பாட வசனம் தாத்தா, இவங்க எத்தனை தடவை செத்து விழுந்தாலும் எழுந்திருப்பாங்க தாத்தா’ என்று சொல்லி டீவியை சத்தமாக வைத்தாள். 

தாத்தாவிற்கு ஒரே சிரிப்பு, அவரின் கட்டுமானப் பற்கள் குலுங்கி ஆடின.

ஆயினும் கவலை கொண்டார். 

சினிமாச் சண்டையையும், பைபிள் வசனத்தையும் ஒன்றாகக் குழப்பி அவள் பிஞ்சு உள்ளத்தில் முரண் தொடையாகப் பதிந்திருக்கிறதை நினைத்து தாத்தாவின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சொட்டுச் சொட்டாய் விழுந்தன. 

– அக்டோபர் 2005 விண்ணரசு.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *