முகாந்திரம்
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பத்மாவும் நானும் போனபோதுதான் உடலை அந்த அறைக்கு எடுத்து வந்திருந்தார்கள்.
உடலைப் பெறுவதற்கு செல்லம்மாவின் பெரியப்பா மட்டும்தான் அங்கு இருந்தார். அவரிடம் சில கையெழுத்துகளை வாங்கிக்கொண்டு அவர்கள் உடலை விட்டுச் சென்றார்கள்.

அவர்கள் போனபின்னர் உடல் கிடத்தப்பட்டிருந்த மேசைக்கு தனிச்சையாகத் திரும்பினேன்.
முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் திடீரென ஒரு கொடூர மான வலி. எந்தக் கணத்தில் வலிக்கத் தொடங்கியது என்று தெரியவில்லை.
நடுக்கம், தடுமாற்றம், பதற்றம்… ம்ஹூம் எதுவுமே இல்லை. ஒரே வீச்சில் குத்தி, உருவியெடுத்த வலி. சவச்சாலையின் கடுங் குளிரையும் மீறி வியர்க்கத் தொடங்கியது.
‘நான் உனக்கு அனுப்பும் கடைசிச் செய்தி’ என்பதாக எத்தனையோ முறை கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி யிருக்கிறாள். ஒரு செய்திகூட அனுப்பாமல், ஒரு வார்த்தைகூடப் பேசாமல்… எப்படி… ஏன்…
பத்மாவின் விசும்பல் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டி ருந்து. கைக்குட்டையால் முகத்தை அழுத்தி அழுத்தித்துடைத்துக் கொண்டிருந்தார் செல்லம்மாவின் பெரியப்பா. பத்மா பக்கத்தில் போய் நிற்பதா அல்லது அவர் அருகில் செல்வதா என குழம்பிக்கொண்டிருந்தபோது, செல்லம்மாவின் பெரியம்மா வந்தார். செல்லம்மாவின் உடல்மீது விழுந்து ஓவெனக் கதறி அழத் தொடங்கினார். பத்மாவின் விசும்பலும் பேரழுகையாக வெடித்தது. செல்லம்மாவின் பெரியப்பா வெளியே நடக்க, நான் அவரைத் தொடர்ந்தேன்.
“எப்போ வீட்டுக்குக் கொண்டு போகப் போறீங்க…”
“நேரே காஸ்கெட் கம்பெனிக்குக் கொண்டு போகச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன். நாளைக்கே எடுத்திட வேண்டியதுதான். இனி எதுக்கு வச்சிருந்து…”
“எடுக்கிற நேரத்தை முடிவு செஞ்சிட்டோன்ன போன் போடுங்க.”
மிகத் தெளிவோடு பேசுபவரிடம் சொல்ல எதுவும் இருக்க வில்லை. அவர் பதில் சொல்லவில்லை. என்மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். ஆனால் செல்லம்மாவுக்கும் எனக்கும் இல்லை.
செல்லம்மாவின் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். எடுக்கும் நேரத்தைத் தவறாமல் தெரிவிக்கும்படி செல்லம்மாவின் பெரியப்பாவுக்கு மீண்டும் நினைவுபடுத்தி விட்டு, கார்ப்பேட்டையில் காத்திருப்பதாக பத்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.
“சின்னா, உன்கிட்ட சொல்ல நிறைய இருக்கு. ஆனா எதை யும் பேசற மனநிலையில நான் இப்ப இல்ல. என்ன செய்றே, சாப்பிட்டியா, வேலைக்குக் கிளம்பிட்டிருக்கியா…”
“இல்ல செரீன். காய்ச்சலா இருக்கு. லீவு எடுக்கலாம்னு நினைக்கிறேன். நேரமாயிட்டுது. நீ இன்னும் தூங்கலியா?”
“அடுத்த முறை நீ வரும்போது நேரில பேசலாம்னு இருந்தேன். ஆனா அதுவரை பொறுமை இல்ல சின்னா.”
“முக்கியமா எதுவும் பேசணுமா… செரீன்…”
“ரெண்டு நாளா ‘பிளாக்’கில நீ எதுவும் அப்டேட் செய்யல சின்னா.”
ரொம்ப வேல செரீன். தேவாரங்களைத் தொகுத்தாச்சு. அதை டைப் செய்யணும். அதுக்குக்கூட நேரமில்லை.”
“நான் செய்து தரலாம். ஆனால் நீங்க ஒத்துக்க மாட்டீங்க…”
“உனக்கு என்ன ஆச்சு செரீன்…”
“திடீர்னு ரொம்ப பயமாயிருக்கு சின்னா…”
“செல்லம்மாவாலயா…”
‘அவ ஏன் இப்படிச் செய்தான்னு தெரியல சின்னா. ஒரு போன்கூடப் போடாம போயிட்டா.’
“இப்ப எதுவும் யோசிக்காத செரீன். காலையில பாத்துக்கலாம். மணி இரண்டாச்சு. போய்ப்படு.”
“குட் டே சின்னா…”
கணினியை அடைத்து விட்டு மெத்தையில் தலை சாய்த்த போது நினைவு வந்தது. எழுந்து குளியலறைக்குச் சென்றேன். காலையில் இருந்து மழை பெய்து கொண்டிருப்பதால் குழாய் நீர் சில்லென்று இருந்தது. ஹீட்டரைப் போடலாமா என ஒரு கணம் யோசித்தேன். குளிர் நீர் இதமாக இருக்கும் எனத் தோன்றியது. குழாயை முழுதாகத் திறந்து விட்டேன். உடலின் அனைத்து வாசல்களையும் ஒன்வொன்றாகப் பொறுமையாகக் கழுவினேன்.
கம்பில் தொங்கிய துணியை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டிருக்கும்போது… மீண்டும் அதே சுருக்கென்று வலி. இனிமேலும் அடக்கினால் வாந்தி வந்துவிடும்போல் இருந்தது.
வாந்தி எடுப்பது என்றால் எனக்கு ரொம்பவும் பயம். ஒரு தடவை சாப்பாடு கோளாறாகி, வாந்தி எடுத்ததில் ஒரு வாரத்துக்கு மேலாக தொண்டையும் தலையும் வலித்தது. அப்போது செல்லம்மா பக்கத்தில் இருந்தாள்.
சட்டென்று கண்ணீர் கொட்டியது. மீண்டும் முகத்தையும் காதுகளையும் தேய்த்துக் கழுவினேன். சொட்டும் ஈரத்துடன் வாசிப்பறைக்குள் நுழைந்து தனியாக மடித்து வைத்திருந்த சின்னக் கம்பளத்தை விரித்தபோது ஈரானில் இருந்து பூரிப்போடு திரும்பிய செல்லம்மா நிழலாடினாள்.
“இதோ… உனக்கே உனக்கு மட்டும்தான் பரிசு வாங்கியாந்தேன். விலையக் கேட்டின்னா மயக்கம் போட்டுறுவ. ஆனா எவ்வளோ அழகா இருக்கு பார். இனிமே நீ இதிலதான் தொழுவணும். என்னோட கட்டள. என்ன…” கழுத்தைக் கட்டிக்கொண்டுக் கொஞ்சிய செல்லம்மாவை மெல்லக் கழற்றி விட்டு. ஓதத் தொடங்கினேன்.
ஓ நிலையில் நல்ல தேர்ச்சி பெற்று, ஏ நிலை படிக்கத் தகுதி இருந்தபோதும் பாலிடெக்னிக்தான் போகப்போகிறேன் என்று செல்லம்மா அடம்பிடித்தபோது அவளது பெரியப்பா மிகவும் கோபப்பட்டார். எல்லா விஷயத்திலும் அடம்பிடித்தே அவள் வீணாகப்போவதாகக் குற்றம் சாட்டினார்.
செல்லம்மா சாதாரண மாக அழ மாட்டாள். அன்றைக்கு அவளையும் மீறி அழுகை வெடித்தது. அவள் அழுதால் பெரியம்மாவுக்குத் தாங்காது. தாய் தகப்பன் இல்லாத பிள்ளையை அழ வைப்பதாகக் கணவனைக் கோபித்துக்கொண்டாள்.
அந்தச் சமயத்தில்தான் செரீனின் அப்பா தீன் அங்கு வந்தார். அவருக்குச் செல்லம்மாவின் பெரியப்பா தமிழரசன் மீது மதிப்பு அதிகம். தன்னைவிட அதிகம் படித்தவர், அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர் என்பதால். ஜாலான் காயு கம்போங் மேம்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தமிழரசன் இயோ சூ காங்கில் தனி வீடு வாங்க முடிவு செய்தார். அப்போது தனி வீடு வாங்கும் சக்தி இல்லாத போதும் பலரிடம் கடன் வாங்கி அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே தானும் வீடு வாங்கினார் தீன்.
சிங்கப்பூரில் சொத்து வாங்க வேண்டாம் என சொந்த பந்தம் அத்தனையும் தீனைத் தடுத்தது. அவர் மனைவிக்கும் இஷ்டமில்லை. சிறிது சிறிதாக தான் சேர்த்து வைத்திருந்த அத்தனை நகையையும் வீட்டுக்காகத் தன் கணவர் விற்றதை அவரால் தாங்க முடியவில்லை. சண்டை போட்டார், பேசாமல் இருந்து பார்த்தார். சாப்பிடாமல்கூட இருந்தார். எதற்கும் தீன் மசியவில்லை. பிடித்த பிடியில் நின்று வீட்டை வாங்கினார். தமிழரசன் வார்த்தைமீது அவருக்கு அவ்வளவு மதிப்பு.
செல்லம்மாவுடன் செரீனையும் பாலிடெக்னிக்கிலேயே சேர்த்து விடலாம் என்று தீன் சொன்னதை தமிழரசனால் நம்ப முடிய வில்லை.
“பொண்ணக் கட்டிக்கொடுக்கப்போறதா சொன்ன…”
“வூட்டில சொல்லிட்டுத்தான் இருக்காக. ஆனா செரீன் நல்லா படிக்கிற புள்ள. எனக்கிருக்கிறது அது ஒண்ணுதான். அது ஆசைக்கு இன்னும் கொஞ்சநாள் படிக்கவைக்கலாம்னு யோசிக்கிறேன்…”
“பிறகு பாதில படிப்பை நிறுத்தி, கல்யாணம் அது இது குழப்பாம படிப்பு முடியிற வரையில செரீன படிக்க வைப்பேன்னு சொல்லு, நான் யோசிக்காம செல்லம்மாவையும் பாலிடெக்னிக்கிலேயே சேர்த்திடறேன்…”
“உம்ம பேச்ச மீற முடியுமா தமிழரசன்… இப்பவே உறுதிதாரன். படிப்ப முடிச்ச பின்னாடிதான் செரீனுக்குக் கல்யாணம். போதுமா…”
அந்த பாலிடெக்னிக்கில் முதல் முயற்சியாக இந்திய கலாசார அமைப்பைத் தொடங்கிய பின்னர் செல்லம்மா, சின்னா, சிவா, பத்மா, நான் எல்லாரும் மிகவும் நெருக்கமாகிவிட்டோம்.
முதன்முதலாக தீபாவளி கலையிரவை பெருமையோடு பிரமாண்டமாக நடத்தினோம். தொடர்ந்து பல நிகழ்ச்சிகள்.
கொஞ்சக் காலத்திலேயே எங்களது “தி கிரேட் ஃபைவ்” மிகவும் பிரபலமாகி விட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்யாணம், பிறந்தநாள், விருந்து நிகழ்ச்சிகள் என்று மட்டுமல்லாமல் பெரிய அளவில் நடைபெறும் இந்திய நிகழ்ச்சிகளிலும் “தி கிரேட் ஃபைவ்” முக்கிய இடம்பெறத் துவங்கியது.
நாளாவட்டத்தில் இந்தப் புகழும் பேரும் சலிக்கத் தொடங்க, ஆடல், பாடலில் ஆர்வம் குறைந்து தொண்டூழியத்தில் தீவிரம் ஏற்பட்டது. விடுமுறை நாட்களெல்லாம் தொண்டூழியத்தில் கழிந்தது. துயர் துடைப்புத் தொண்டூழி நிறுவனம் ஒன்றுடன் இந்தோனீசியா போன போதுதான் சின்னாமீது தனக்கு உள்ள ஈர்ப்பைச் சொன்னாள் செல்லம்மா. இதுநாள் வரை உடல் பற்றியோ உறவுகள் பற்றியோ பெரிதாக யோசிக்காமல் வளர்ந்துவிட்டிருந்த எனக்கு அவர்களது காதல் பெருத்த கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் சின்னாவின் கைகளைப் பிடித்துக்கொள்வது பற்றிச் சொல்லத் தொடங்கிய செல்லம்மா, அந்த ஒரு வார முகாம் முடிவதற்குள் இருவருக்கும் இடையில் அதுவரை நடைபெற்றிருந்த பேச்சுப் பரிமாற்றங்களையும் உடல் பிணைப்புகளையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்திருந்தாள்.
பத்மாவை வேலையில் இருந்து நீக்கியது எந்தவிதத்திலும் நியாயமற்றது என்பது எல்லாருக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் எவரும் வாய்திறக்கத் தயாராக இல்லை. இத்தனைக்கும் பத்மாவின் அண்ணன் சிதம்பரம் பெயர் பெற்ற வக்கீல்.
“‘எதுவும் செய்ய முடியாது. எங்கள் வாடிக்கையாளர்கள் சீனர்கள். மாண்டரின் சரளமாகப் பேசுபவர்தான் எங்களுக்கு வேண்டும்’ என்கிறபோது நாம என்ன செய்ய முடியும்” என்று அவர் வாதம் பேசினார்.
செல்லம்மா கொதித்துப் போனாள்.
“எப்படி அப்படிச் சொல்லலாம், பத்மா பத்து மாசமாக வாடிக்கையாளர்களுடன் பேசிக்கொண்டுதானே இருக்கிறாள். அவள் பேசும் மாண்டரின் புரியவில்லை என்று இதுவரை எந்த வாடிக்கையாளரும் புகார் கொடுக்கவில்லை. அவர்கள் சொல்வது காரணமேயில்லை. அந்த மானேஜர் இனவாதி. அவனுக்குச் சீனர் களைத் தவிர வேறு எவரையுமே பிடிக்காது. அதுவும் இந்தியர் களை அறவே பிடிக்காது. அதுதான் வேறு ஆள் கிடைத்ததும் பத்மாவைக் கழற்றி விட்டுவிட்டான். பத்மாவின் உழைப்பு சாதாரணமானதில்லை. இந்த பத்து மாதத்தில் பத்மா எவ்வளவு வேலை செய்திருக்கிறாள் என்பது எல்லாருக்கும் தெரியும். வாங்கிய சம்பளத்துக்கு அதிகமாகவே உழைத்திருக்கிறாள். கான்டிராக்ட் இல்லையென்றாலும் அவளுக்கு வேலையில்லை என்று சொன்னது எந்த வகையிலும் நியாயமானதில்லை. இதைச் சும்மாவிடக்கூடாது.”
“சும்மா இரு செல்லா. வம்பை விலைக்கு வாங்காதே.”
யார் சொன்னதையும் செல்லம்மா கேட்கவில்லை. அந்த நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், அரசாங்கத்துக்கும் பத்திரிகைகளுக்கும் கடிதம் மேல் கடிதம் எழுதினாள். விஷயம் பெரிதாகி கடைசியில் அந்நிறுவனம், பத்மாவைப் பதவி உயர்வு கொடுத்து வேலையில் சேர்த்துக் கொண்டது. ஆனாலும் சீனாவில் இருக்கும் துணை நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தது.
பல வருஷங்களுக்குப் பிறகு பத்மா சீனா கிளம்புவதற்கு முதல் நாள் எல்லாரும் செல்லம்மாவின் பெரியப்பா வீட்டில் சந்தித்தோம்.
அவள் பெரியப்பா வீடு விருந்துகளுக்கு மிகவும் வசதியானது. பழைய வீட்டை எந்த மேம்பாடும் செய்யாமல் அப்படியே அவர்கள் வைத்திருந்ததால் சுற்றிலும் நிலம் நிறைய இருந்தது. பெரிய தோட்டம், மீன்கள் நிறைந்த ஒரு சின்னக் குளம். அந்தக் குளத்தோரமாகக் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு வட்ட மேசையும் குந்துகளும் இருக்கும். சற்றுத் தள்ளி இரண்டு நீளமான மர வாங்குகள் இருக்கும். அந்தத் தோட்டத்தில்தான் நாங்கள் அடிக்கடி கூடுவோம். விடிய விடிய பேசிக்கொண்டிருக்கலாம். யாருக்கும் தொந்தரவு இருக்காது. அதெல்லாம் இப்போது வெறும் நினைவுகளாக ஆகிவிட்டன. பெரியப்பா வீட்டுக்கு செல்லம்மா வருவதே வெறும் கடமையாக ஆகிவிட்டது.
செல்லம்மா ஜெர்மன் போனபோது டேனியலை மணம் செய்து கொண்டாள். டேனியல் ஆப்பிரிக்க வம்சா வளியில் வந்தவன் என்பதோடு, விவாகரத்து ஆனவன் என்பதால் செல்லம்மாவின் பெரியப்பா திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. அதற்காக அவர்கள் உறவு முறிந்துவிடவில்லை என்றாலும் உறவில் இருந்த உரிமை இருவருக்குமே குறைந்துபோனது. அந்த விரிசலில் எல்லாே ம விடுபட்டுப் போனது.
மீண்டும் பழையபடி பெரியப்பா வீட்டில் ஒன்றுகூட வேண்டும் என்று செல்லம்மாதான் சொன்னாள்.
வழக்கம்போல எங்கள் பேச்சில் அதிகம் கலந்துகொள்ளாமல் அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் பெரியப்பா. தேநீர் கலந்துகொடுத்த கையோடு பெரியம்மா சமையலில் இறங்கி விட்டார். அது அவர் வழக்கம்.
பல ஆண்டுகள் கழிந்திருந்தபோதும் வீட்டின் பொருட்களும் அமைப்பும் செயல்பாடுகளும் அப்படியேதான் இருந்தன. ஊதுபத்தி வாசனையும் செம்பருத்தி அலங்காரமுமாக கம்பீரமாக வீற்றிருக்கும் வாசல் பிள்ளையார், சஞ்சிகைகள் நிறைந்திருக்கும் கூடத்து மேசை, வீட்டுக்குள் படர்ந்து மணம் பரப்பும் சன்னலோரத்துக் கொடி மல்லிகை, வெள்ளை லேஸ் துணியினாலான திரைச் சீலைகள் எதிலும் மாற்றமில்லை.
பள்ளிக்காலத்து உற்சாகத்துடன் வெளித் தோட்டத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். செல்லம்மாவும் அவளுக்கே உரிய வேகத்தோடும் துடிப்போடும்தான் பேசினாள்.
சாப்பாடு ஆறிப்போகிறது என்று செல்லாவின் பெரியம்மா ஐந்தாவது தடவையாக அழைத்த பிறகும் பல நிமிடங்கள் கழித்துத்தான், வீட்டுக்குள் வந்தோம். எப்போதும் இப்படித்தான். சில நேரம் இரண்டு, மூன்று மணிகூட ஆகிவிடும்.
பெரியப்பாவும் பெரியம்மாவும் அன்று எங்களுக்காகக் காத்திருந்தார்கள். ஒருபோதும் அவர்கள் அப்படிக் காத்திருப்ப தில்லை. பலநாள் கழித்து எல்லாரும் வந்திருந்தபடியால் ஒருவேளை காத்திருந்திருக்கலாம்.
உள்ளே நுழைந்ததும் எல்லாரையும் நேரே சாப்பாட்டு மேசைக்கு விரட்டினார் பெரியம்மா. வரவேற்பறையில் மீண்டும் ஒரு பேச்சுத் தொடங்கி விடுமோ என்ற பயம் அவருக்கு. பெரியப்பா பேசிக்கொண்டே தட்டுகளை எடுத்து வைத்தார். எல்லாமே இயல்பாகத்தான் இருந்தது.
சமையலறைக்குள் சென்று உணவை எடுத்து வந்த போதெல் லாம்கூட செல்லம்மா ஒன்றும் சொல்லவில்லை. சிடி பிளேயரை எடுக்க சாமியறைக்குள் போனபோதுதான், அவசரமாக வந்து தடுத்தாள்.
“பெரியம்மா தைப்பூசத்துக்கு விரதம் இருக்கிறார். நீ உள்ளே போக வேண்டாம்.”
“நான் சுத்தம்தான்.”
“அதுக்கில்ல நீ வா. தண்ணி எடுத்து வை. நான் பாட்டுப் போடுறேன்.”
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. செல்லம்மா ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்று புரியவில்லை.
அவள் வீட்டுச் சமையலறைக்குள் சென்று தண்ணீர் எடுத்து வர ஏனோ திடீரென்று சங்கடமாக இருந்தது. எதுவும் சொல்லாமல் நேராக மேசையில் வந்து அமர்ந்தேன். எத்தனை முயன்றும் இயல்பாக இருக்க முடியவில்லை.
“எல்லாருக்கும் சோறு வை” என்று பெரியப்பா பாத்திரத்தைக் கையில் கொடுத்தபோது, கை தடுமாறியது. நல்லவேளை டேனியல் பிடித்துக்கொண்டார். இல்லாவிட்டால் அத்தனை சோறும் தரையில் கொட்டியிருக்கும்.
இந்தச் சாமி அறைக்குள் எத்தனையோ முறை நான் போயிருக்கிறேன். திடீரென்று இன்று என்ன வந்தது… எதுவும் விளங்கவில்லை. அன்று எதையும் யோசிக்கும் மனநிலையிலும் நான் இல்லை.
செல்லம்மாவுக்கு என்ன நடந்தது…
பத்மாவிடம் பதில் இல்லை. சின்னாவிடமும் பதில் இல்லை.
பிறகு ஒருநாள் அப்பா சாதாரணமாகச் சொன்ன விஷயம் என்னைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“அந்தப் பிள்ள என்னம்மா, வீட்டுக்குள்ள வர மாட்டேன் னுட்டுது. புது மனுசாள் மாதிரி வாசல்லியே நின்னு ஃபைல வாங்கிட்டு போயிட்டுது. அம்மா அம்மான்னு உங்கம்மா காலயே சுத்திக்கிட்டு திரிஞ்ச பிள்ள. என்ன ஆச்சுன்னு தெரியல. உங்கம்மாவும் எவ்வளவோ கூப்பிட்டுப்பாத்தா. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க, ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டுப்போன்னு. ம்ஹூம். கேட்கவே இல்லை. ஏன் நீ ஏதாவது சொன்னியா?”
நான் சொன்னேனா… ம்ஹூம். மண்டையை எவ்வளவு குடைந்து பார்த்தும் ஒன்றும் பிடிபடவில்லை. செல்லம்மாவைத் தெரிந்த இத்தனை வருஷத்தில் அப்படி எதுவுமே பேசியதாக ஒரு சின்ன ஞாபகம்கூட இல்லை.
நானோ அவளோ எங்கள் வழக்கங்கள், வழமைகள் குறித்து சாதாரணமாகக்கூட பேசியதில்லை என்பதை பல நாள் யோசித்து மிகத் தெளிவாக எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், செல்லம்மாவிடம் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே கேட்டேன்,
“தைப்பூசத்துக்கு பெரியம்மா எத்தன மணிக்கு கோயிலுக்கு போவாங்க… அவங்க பால்குடம் எடுக்கும்போது கூடவே நடக்கலாம்ன்னு இருக்கிறேன்.”
“உங்க வீட்ல கோயிலுக்குப் போக விடுவாங்களா…”
“என்ன புதுசா கேட்கிற செல்லா…”
“உங்க அம்மாவும் இப்ப புதுசா முக்காடு போட்டுக்கிறாங்க.”
“அவங்க இப்ப அடிக்கடி ஊருக்குப் போயிட்டு வர்றாங்கல்ல… அதான்.”
“திடீர்னு பழக்கம் வந்திடுமாக்கும்…”
“அவங்களுக்கு வயசு வேற ஆயிடுச்சு…”
“என்னமோ நீ சொல்லு நானும் கேட்கிறேன்…”
“என்ன செல்லா பேசற…”
“நானாவது பேசறேன் செரீன்… நீங்க செய்கையில இல்ல காட்டறீங்க…”
“இப்படிப் பூடகமா பேசாத செல்லம்மா. யாரு இப்ப என்ன செய்திட்டாங்க. நீ எதையோ மனசுக்குள்ள வைச்சிட்டு பேசற…”
“செரீன், உங்கூட வாக்குவாதம் செய்யிற மூடில நான் இல்ல.”
எதுவும் பேசாமல் வெடுக்கென்று காரில் ஏறிப் போய் விட்டாள்.
எங்கே எதைப் பொருத்திப் பார்ப்பது என்றே புரியவில்லை. அவசர வேலைகள் குவிந்து கிடந்தாலும் எதையும் செய்ய முடிய வில்லை. எவருடனும் பேசவும் பிடிக்கவில்லை.
கணினியில் அமர்ந்து கை போன போக்கில் இணையத் தளங் களில் அலைந்தேன். தனிச்சையாக எங்களது வலைப் பக்கத்தை மவுஸ் திறந்தது.
செல்லா ஆரம்பித்த வலைப்பூ. ‘பிளாக்’ கலாசாரம் பரபரப்பா வதற்குப் பல காலம் முன்னர் தொடங்கப்பட்ட எங்களது இணையக் குறிப்பேடு. பழைய பக்கங்களைப் புரட்டியபோது, செல்லாவின் லண்டன் கடிதம் கண்ணில்பட்டது. ஏற்கனவே படித்ததுதான். மீண்டும் படித்தேன்.
லண்டன் ரயில் குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதம் கழித்து, ஆகஸ்ட் மாதம் செல்லா லண்டன் போனாள். பயணங்கள் செல்லாவுக்கு மிகவும் பிடிக்கும். உலகம் முழுக்க பயணம் செய்யும் விருப்பத்தில்தான் அந்த ஆய்வு அமைப்பில் அவள் வேலைக்குச் சேர்ந்தாள்.
இயற்கைப் பேரிடர்கள், போர் அவலங்கள் நிகழ்ந்த இடங்களில் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகள் குறித்து ஆய்வு செய்வது செல்லா வேலை செய்யும் அமைப்பின் பணி. எத்தனையோ பேரிடர்கள். எத்தனையோ பயணங்கள். ஆனால் ஏனோ இந்த லண்டன் பயணத்தை செல்லா மிகவும் வெறுத்தாள். அதுபற்றி அவள் எழுதியிருந்ததை இப்போது படித்தபோது ஏதோ சரியாக இல்லை என தோன்றியது.
முன்னர் படித்தபோது, அதிகப்படி சோதனைகளால் ஏற்பட்ட பயணச் சங்கடங்களைத்தான் அவள் எழுதியிருந்தது போலிருந் தது. இப்போது படிக்கும்போது அதற்கும் அப்பால் மனிதர் களோடு அவளுக்கு ஏற்பட்ட கசப்புகளின் கசிவுகள் பளிச்சென்று தெரிந்தன. அவளைச் சங்கடப்படுத்தும் அளவுக்கு எதுவும் நிகழ்ந்ததாக அவள் அதில் சொல்லியிருக்கவில்லை. எதுவும் நடந்திருந்தால் யாரிடமாவது உடனே கொட்டித் தீர்த்திருப்பாள். அதுதான் செல்லா. ஆனால் அப்படி எந்த அனுபவத்தையும் அந்தக் கடிதத்தில் அவள் குறிப்பிடவில்லை. பிறகு ஏன் இந்தக் கசப்பு…
9/11 இலிருந்து அவளது பழைய பதிவுகளைத் தேதி வாரியாக பொறுமையாக வாசிக்கத் தொடங்கினேன்.
“வேலைக்குச் சேர்ந்து நான்கே மாதத்தில் உலகம் தலைகீழாக மாறிவிடும் என நான் எண்ணியிருக்கவில்லை” என்று ஒரு பதிவில் குறிப்பொன்று இருந்தது.
நியூயார்க் சம்பவம் நடப்பதற்கு முதல் மாதம், அக்டோபரில் ஜெர்மன்போனபோதுதான் செல்லா டேனியலை சந்தித்தாள் என்பது ஏதேச்சையாக நினைவுக்கு வந்தது.
டேனியலைச் சந்தித்தது, சில நாட்களிலேயே திருமணம் செய்ய முடிவு செய்தது, யாருக்கும் சொல்லாமல் பதிவு செய்தது, சிங்கப்பூர் திரும்பிய அன்று விமான நிலையத்துக்கே பத்மாவையும் சின்னாவையும் என்னையும் வரச் சொல்லி விருந்துகொடுத்துக் கொண்டாடியது. ஒவ்வொன்றாக வரிசையாக மனதில் படம் ஓடியது.
அதற்கு அடுத்த வருஷம் பத்மாவின் கல்யாணம் நடந்தது. பத்மா தனது திருமணத்தை ஜாவாவில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தாள். மேற்கு ஜாவா கடற்கரையில் அழகான பெரிய விடுதியை வாடகைக்கு எடுத்திருந்தாள்.
ஜாவா போய் இறங்கிய அன்று மாலை எல்லாரும் கடலோரம் அமர்ந்து பாடினோம். தீ வளர்த்து இறைச்சி வாட்டிச் சாப் பிட்டோம். களைக்க களைக்க பந்தடித்து விளையாடினோம். பிறகு கடல்காற்றை அனுபவித்தபடி மணலில் பொம்மை செய்து கொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.
படிக்கும் காலத்தில் இந்தோனீசியாவுக்கு தொண்டூழியப் படையுடன் வந்தது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, பாலி குண்டுவெடிப்பு பற்றி செல்லாவுக்குத் தகவல் வந்தது. உடனடியாக பணியைத் தொடரவேண்டி இருந்ததால், அவள் உடனே பாலி கிளம்பிவிட்டாள்.
அடுத்த நாள் திட்டமிட்டிருந்த எரிமலை பயணம் ரத்தானது குறித்துமட்டுமே அப்போது செல்லா கவலைப்பட்டதும், பல காலம் முன்னர் இப்படி ஒரு கடற்கரை இரவில், செல்லா சின்னாவைப் பற்றிக் கூறியதை நான் மீண்டும் எண்ணிப் பார்த்ததும் மட்டுமே துல்லியமாக நினைவிருக்கிறது.
பாலி குண்டு வெடிப்புப் பற்றி நாங்கள் பெரிதாக எதுவும் பேசவில்லை. அதுகுறித்து செல்லா பேசியதாக எனக்கு நினைவே இல்லை. பிறகு நடந்த மும்பை குண்டு வெடிப்பு குறித்த செல்லாவின் பதிவு, ஒற்றைப் பரிமாணத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக இருப் பதாக பத்மா சொல்லியிருந்தாள்.
அந்தச் சமயத்தில் எங்களது வலைப்பக்கப் பதிவுகள் குறித்து செல்லாவுக்கும் பத்மாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தது. செல்லாவும் சின்னாவும் தமிழ் வழிபாடுகள் குறித்து நிறைய எழுதியதோடு, சைவ சமய இலக்கியங்களையும் எங்கள் பக்கத்தில் ஆவணப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.
வலைப் பக்கம் பொதுவானதாக இல்லாமல், மதச் சார்பான பக்கமாக மாறிவிட்டதாக பத்மா வாதிட்டாள். அதனால் எனக்கு மனவருத்தம் ஏற்படலாம் என்றும் சொன்னாள்.
ஆனால் எனக்கு அப்படி எதுவும் இருக்கவில்லை. மதத்தில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை. வழிபாடுகள் மன. அமைதிக்கான மருந்தாக மட்டுமே எனக்கு எப்போதும் இருக்கின்றன. மேலும் செல்லாவையும் சின்னாவையும் வேறாகப் பார்க்கவும் எனக்குத் தோன்றவில்லை.
அந்த நேரத்தில், எனக்கு அப்படி எந்தக் கருத்தும் இருக்க முடியாதென்றும், பத்மாதான் தேவையில்லாமல் பயப்படத் தொடங்கிவிட்டாள் என்றும் செல்லா சண்டைபோட்டாள். அந்தச் சண்டை காரணமாக பத்மாவின் கருத்தை அப்போது நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, செல்லாவின் எழுத்தில் இனம்தெரியாத ஒரு கோபத்தைப் பார்க்க முடிந்தது.
அவளது எழுத்துக்களில் எதையோ உறுதிப்படுத்திக்கொள்ள தடயங்களை நான் வலிந்து தேடுவதுபோல் தோன்றவே கணினியை அடைத்து விட்டு எழுந்தேன்.
செல்லாவின் பெரியப்பா வீட்டுக்குப்போனபோது வீடு அப்படியேதான் இருந்தது. பொருட்கள் எல்லாம் அந்தந்த இடத் திலேயே இருந்தன. வாசல் பிள்ளையார் செம்பருத்திப் பூ சூடியிருந் தார். ஊதுபத்தி எரிந்துகொண்டிருந்தது. முன்தரை கழுவிய தண்ணீர் எப்போதும்போல் மண்ணில் தேங்கி நின்றது. என்றாலும் அந்த வீட்டின் துடிப்பும் வாசனையும் தொலைந்திருந்தன.
வழக்கமாக மாலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருக்கும். அன்று சத்தமில்லாமல் இருந்தது. முன்மேசையில் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பிரிக்கப்படாமல் கிடந்தன. பெரியப்பா தனது அறை நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந் தார். புத்தகங்கள் விரிபடாமல் அவர் அருகில் கிடந்தன. பெரியம்மா வீட்டின் பின்புறம் துணிகளை காலாகம்பில் கோர்த்துக் கொண்டிருந்தார்.
“என்னம்மா வீடு ஒரே அமைதியா இருக்கு. பாட்டு போடல.”
“என்ன கும்பிட்டு என்ன பிரயோசனம். இருந்த ஒண்ணும் போயிட்டுது. இனி என்ன…”
அவர் மனதைத் திசை திருப்பும் நோக்கில் வேறு ஏதேதோ பேசினேன். எதைப்பற்றிப் பேசினாலும் சுற்றி வந்து இருவருமே கடைசியில் செல்லாவிடமே நின்றோம்.
“நல்லாத்தான் பேசிட்டு இருந்தா. சாப்பிட்டா. தூங்கினா. அர்த்த ராத்திரில எழும்பி தூக்குமாட்டிக்கணும்னு ஏன் தோனிச்சோ. கண்ட கண்ட நேரத்தில வெளியில சுத்தாதன்னா கேட்கிறதில்லை. ஏதாவது பிடிச்சுத்தான் இருக்கணும். இல்லன்னா ரொம்ப வருஷம் கழிச்சு மாசமான சந்தோஷத்தில இருந்த பிள்ளைக்குத் தூக்குமாட்டிக்கத் தோனுமா. பாவம் அந்தப் பிள்ள டேனியல். பெண்டாட்டி செத்த துக்கத்த இன்னும் அதால ஜீரணிக்க முடியல. இங்க வந்திருன்னாலும் கேட்க மாட்டேங்குது. அந்த வீட்டிலேயே தனியா கிடந்து வேதனைப்படுது.”
“நானும் பத்மாவும் நேற்று அவரைப் போய்ப் பார்த்தோம். அவர் ரொம்ப மனசு உடைஞ்சு போயிருக்கிறார். அந்த வீட்டிலேயே இருக்கிறதால செல்லாவோட நினைவு அவர ரொம்ப வாட்டுது. எங்க வீட்டுக்கு வரச் சொல்லிப் பார்த்தோம். அவர் வர்றமாதிரி தெரியல.”
கூட்டுவதற்குக்கூட செல்லா அறைப் பக்கம் தாம் போவதில்லை என்றார் பெரியம்மா. மேல் மாடியில் இருந்த செல்லா அறைக்குப் போக வேண்டும்போல் இருந்தது.
மாடிப்படி வரை வந்துவிட்டேன். திடீரென்று ஏதோ கால்களைக் கட்டிப்போட்டதுபோல் இருந்தது.
நானும் செல்லாவும் நடந்து நடந்து தேய்ந்துபோன படிகள்.
அந்த வீட்டில் இரண்டு சிடி பிளேயர்கள்தான் இருக்கின்றன. ஒன்று சாமியறையில் இருக்கும், மற்றது செல்லா அறையில் இருக்கும். நாங்கள் எப்போதும் செல்லா அறையில் இருக்கும் பிளேயரில்தான் பாட்டுக் கேட்போம். நானும் செல்லாவும் மணிக் கணக்காக அவள் அறையில் பாடம் செய்திருக்கிறோம், அரட்டை அடித்திருக்கிறோம், புரோஜெக்டுகள் தயாரித்திருக்கிறோம். அவளது மெத்தையில் கணக்கற்ற இரவுகளை நாங்கள் தூங்காமலே கொண்டாடியிருக்கிறோம்.
வீட்டுக்குள் நுழைந்ததுமே இந்தப் படிகளில் தாவியோடும் கால்கள் ஏனோ இன்று தயங்கின.
“பெரியம்மா… மேல அறைக்கு நான் போகலாமா…”
பெரியம்மா எதுவும் சொல்லவில்லை. அவர் முகத்தைத் தவிர்த்தபடி மெல்ல படியேறினேன்.
அறை போட்டது போட்டபடியே கிடந்தது. போலிஸ்காரர்கள் சோதனைசெய்து போன பிறகு யாரும் அறைப்பக்கம் வரவில்லை என்பது தெரிந்தது. இந்த அறையில்தான் அவள் தூக்குமாட்டித் தொங்கினாள்.
கூரையில் தொங்கிய காற்றாடியில் எப்படிக் கயிற்றைக் கட்டி யிருப்பாள் என்று யோசித்துப் பார்த்தேன். கழுத்தில் கயிற்றை இறுக்கும்முன் கடைசியாக என்ன நினைத்திருப்பாள் என யோசித்தேன். மீண்டும் அதே வலி.
தன் முடிவுக்கான காரணத்தைச் சொல்லும் ஒரு சின்ன அடையாளத்தையாவது விட்டுச் சென்றிருக்கக்கூடாதா என்ற ஆதங்கம் வெறிபோல் என்னை ஆக்கிரமித்தது. அறையெங்கும் பொறுமையாக அலசினேன். எதுவுமே கண்ணில்படவில்லை. களைப்போடு பால்கனிச் சுவரில் சாய்ந்தேன்.
எத்தனை நேரம் அப்படி நின்றிருப்பேன் என்று தெரியவில்லை. பெரியம்மாவின் குரல் கனவில் ஒலிப்பதுபோல் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பினேன்.
“என்னம்மா சொன்னீங்க…”
‘விளக்கு வைக்கிற நேரமாயிட்டுது. மோப் போடணும்…”
“நான் மோப் செய்றேம்மா…”
“என்ன நீ துடைக்கிறியா…” பெரியம்மா குரலின் தொனி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“ஏன்… எனக்கு மோப் செய்யத் தெரியுமே…” என் பதில் எனக்கே கேவலமாக இருந்தது.
அவர் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ, தொண்டையைச் செருமிக்கொண்டு குரலை உயர்த்திப் பேசினார்.
“செரீன் நீ கிளம்பு. நீ போன பிறகுதான் நான் துடைக்க முடியும். இன்னும் முப்பது முடியல. சாம்பிராணி போடணும். இன்னிக்கு இந்த அறையையும் துடைக்கணும்.” அவர் கீழே இறங்கிச் சென்றுவிட்டார்.
யாரோ என்னை ஓங்கி அறைந்தது போலிருந்தது.
கீழே வந்தபோது, அவர் எதுவும் சொல்லவில்லை. எப்போதும்போல் வாழைப் பழம் எடுத்து வந்தார்.
“சாமிக்கு வச்ச பழம். சாப்பிடுவதானே?”
“என்னம்மா, உங்க வீட்டில நான் சாப்பிடாததா…” சகஜமாக இருக்க முயன்றபடி பதில் சொன்னேன்.
“இல்ல… இப்ப நீ ரொம்ப மாறிட்டதா செல்லா சொல்லிச்சு. நீ மட்டுமா…. எல்லாரும்தான் மாறிட்டாங்க…”
பழத்தை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.
“டேனியல்ட பேசினியா சின்னா, ஏதாவது சொன்னாரா…”
“அவரு பாவம். ஒண்ணுமே புரியாம இருக்காரு. செல்லா தன் கிட்டகூட சொல்லாம எதையோ மனசில வைச்சு புகைஞ்சிட்டு இருந்திருக்கா என்கிறத அவரால இன்னும் தாங்கிக்க முடியல. செல்லாவின் மரணத்தைவிட, தங்களுக்குள்ள இருக்கிறதா அவர் நம்பிட்டிருந்த நெருக்கம் இருந்திருக்கவே இல்ல என்கிறததான் அவரால ஏத்துக்க முடியல. அமெரிக்கா போகப்போறாராம்.
வீட்ட விற்கவும் ஏற்பாடு செய்தாச்சு.”
“ஏன் சின்னா, மாசமானதுக்குப் பிறகு செல்லம்மா மாறிப் போயிட்டதா எனக்குப் படுது. நீ என்ன நினைக்கிற?”
“செரீன், நான் செல்லாவை நேரில பார்த்து, பேசி ஒரு வருஷத் துக்கு மேல ஆச்சு. நான் பார்த்தபோது எனக்கு எந்த மாற்றமும் தெரியல. எங்கிட்ட எப்போதும்போலத்தான் பேசினா. சண்டை போட்டா.”
“டேனியல் சொன்னார். குழந்தையை இந்துவா வளர்க்கப் போறேன்னு செல்லா சொன்னாளாம். குழந்தை வளர்ந்த பிறகு தனக்குப் பிடிச்ச பாதையைத் தேர்வு செய்யட்டும் என்றாளாம். அதற்குத்தான் ஒத்துக்கொண்டதாவும் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமா என்கூட பேசறத செல்லா குறைச் சிட்டே வந்திருக்கா சின்னா. அதுவும் மும்பை குண்டு வெடிப்புக்குப் பிறகு என்கூட பேசறத ரொம்பவே குறைச் சிட்டா. வரிசையா எல்லாத்தையும் யோசித்து பார்க்கும் போது புரியுது.”
“உன்கூட பேசறதுக்கும் மும்பை குண்டு வெடிப்புக்கும் என்ன சம்பந்தம் செரீன்.”
“ஒருவேளை நான் செரீனா இருக்கிறது காரணமா இருக்கலாம்.”
“உளறாத செரீன். செல்லம்மா அப்படி நினைக்கிறவ இல்ல.”
“இல்லைதான் சின்னா. அது உண்மைகூட. ஆனா அவளுக்கு என்மேல ஏதோ வருத்தம் இருந்திருக்கலாம். அத அவ இந்தத் தீவிரவாதத்தோட சம்பந்தப்படுத்தியிருக்கலாம். ஆனா அப்படி வருத்தம் இருந்தாலும் நேரா கேட்டு சண்டபோடுறதுதானே செல்லாவோட குணம்… அப்படி உள்ளுக்குள்ள புகையிற அளவுக்கு எனக்கும் அவளுக்கும் எதுவும் ஏற்பட சாத்தியமே இல்ல. அதவிடு. சின்னா… உங்கிட்ட வேறு ஒரு விஷயம் பத்தி முக்கியமா பேசணும்.”
“என்ன சொல்லு…”
“நீ மதம் மாறப் போறதா பேசிக்கிறாங்க…”
“உனக்கு என்ன பைத்தியமா செரீன்…”
“எனக்கும் ஆச்சர்யமாத்தான் இருக்கு சின்னா. உங்க அம்மா காலையில போன் போட்டாங்க. அவங்களுக்கு யார் சொன் னாங்கன்னு தெரியல. செல்லம்மா காரியத்தின்போது அவங்க கூடத்தான் இருந்தேன். அப்பகூட அவங்க இதுபத்தி பேசல.”
“யாரு சொன்னாங்களாம் அவங்களுக்கு?”
‘அவங்ககிட்ட கேட்கிறாங்களாம்.”
“அதான் செரீன்… யாரு கேட்கிறாங்களாம்?”
‘தெரியல சின்னா. பெரியம்மாவா இருக்குமோன்னு தோணுது…”
“நான் எதுக்கு மதம் மாறனும்?”
“நீ இஸ்லாத்தில சேரப் போறியாம்…”
“வாட்….”
“…ஏன் சின்னா…. நீயும்…. என்கிட்ட கத்தற…”
“மன்னிச்சிடு செரீன்…கத்திட்டேன். சாரி.. அத விடு…உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். நீயும் செரீனும் -ஏன் “ கல்யாணம் செய்துக்கக்கூடாதுன்னு செல்லா கடைசியா போட்டிருந்த…”மெயில்ல கேட்டிருந்தா…”
“எப்ப சின்னா…”
“ஒரு மாசமிருக்கும்…”
“ஏன் என்கிட்ட நீ சொல்லல…”
“என்ன செரீன்… அவ அப்படி கேட்கிறது புதுசா… செல்லா என்கிட்ட எப்பவும் கேட்கிறதுதானே. அவ இப்ப இல்லாததால, அவ கடைசியா எழுதின வார்த்தையா அது இருக்கிறதால… இப்ப அது முக்கியமாயிட்டுது…”
“அவ மனசில என்னமோ இருந்திருக்கு சின்னா…”
“என்ன…”
“தெரியல…”
– ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.
– 2006, நான் கொலை செய்யும் பெண்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 2007, கனகலதா வெளியீடு, சிங்கப்பூர்.
![]() |
லதா எனப்படும் கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். இவர் எழுதிய நான் கொலை செய்த பெண்கள் என்ற புத்தகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா…மேலும் படிக்க... |