முகவரி தேடும் காற்று

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 218 
 
 

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் 16 – பூனம் தில்லான்

எல்லோரும் அந்தச் சிறிய அலுவலக அறையில் வேகமாக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மூலையில் ‘லேப் டாப்’ கம்ப்யூட்டரோடு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவளைக் காட்டிய திலக், “இதுதான் பூனம். என் தங்கை. ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே… அமெரிக்க மாப்பிள்ளையோடு மூன்று மாத திருமண வாழ்க்கை நடத்தி விட்டு… அவனை விபத்தில் பறி கொடுத்து விட்டு வந்தவள்.” என்றவன் “ஹாய் பூனம். மீட் மிஸ்டர் அரசு” என்றான் திலக்.

அரசு அவளைப் பார்த்துக் கும்பிட, “கமான் யார்” என்று கை நீட்டினாள் பூனம்.

அவன் வேறு வழியில்லாமல் அவளுடைய கையைப் பற்றிக் குலுக்கிக் கொள்ள “ஹாய் ஹேண்ட் சம். என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா?” என்று சொல்லி விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் பூனம்.

“அரசு ஏதோ வேற்றுக் கிரகத்துக்கு வந்து விட்டதைப் போல உணர்வு வந்ததா? கவலைப் படாதீர்கள். அவள் அவ்வளவு ஜாலியாகப் பழகக் கூடியவள். தப்பா அவளிடம் வாலாட்டினால்….”

“அய்யோ இன்னும் பக்கத்து வீட்டுக் காரன் விந்தி விந்திதான் நடக்கிறான். எவ்வளவு அழகாக இருக்கிறாளோ… அவ்வளவு வலிமையானவள்” என்றான் திலக்.

“பொய்… சும்மா புகழாதே. அரசு. நீங்கள் சொல்லுங்கள் நான் எப்படி இருக்கிறேன்.”

“தவறாக எடுத்துக் கொள்ள் மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு சினிமா ஹீரோயின் பூனம் தில்லான் இருந்தாளே… அவள் மாதிரியே இருக்கிறீர்கள். ஒரு கணம் எனக்கு அந்தக் கதாநாயகிதானோ என்று கூட சந்தேகம் வந்து விட்டது.”

காதைப் பொத்திக் கொண்டவள் “புளித்துப் போய்விட்டது. பார்க்கிறவர்கள் எல்லோரும் பூனம் தில்லான் மாதிரி இருக்கிறேன் என்றுதான் சொல்கிறார்கள்.”

“வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமானால்… ம்… முழு நிலா..மழையில் நனைந்தது போல…”

“ஓ… பெரிய கவிஞர் போல இருக்கிறது.”

“ஏய் இதென்ன வந்த விசயத்தை விட்டு ஏதோதோ பேசிக்கொண்டு …. பூனம் இவரு உன்னுடைய பார்ட்னர். இனி இந்த பூனம், திலக் அனிமல் பீட் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு ஒரு டைரக்டர்.”

“உனக்கு ஆட்சேபனை இல்லையே.”

“என் அண்ணாவே… நீதான் இந்தக் கம்பெனிக்கு எல்லாம். இதிலே என்னை ஏன் கேட்கிறாய்.? அதோடு ஒரு அழகிய இளைஞன் பார்த்தாலே கொஞ்சம் விசயம் தெரிந்த ஆள்மாதிரி இருக்கிறார். கண்டிப்பாக கம்பெனியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வேண்டுமானால் நான் மற்ற வேலையாட்களோடு இருந்து கொள்கிறேன். அவர் இந்தக் கேபினுள்ளே அமரட்டும்.” என்றாள் பூனம்.

“அதெல்லாம் வேண்டாம்.” என்ற திலக் அரசு உங்களைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டாம். அனுபவத்திற்கு முயற்சி செய்யுங்கள். கொஞ்ச நாள் கம்பெனியைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் வரும் அனுபவத்தில் கூடிய விரைவில் நீங்களே என்ன செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வரலாம்” என்றான்.

“என்னிடம் என்ன மறைக்கப் பார்க்கிறீர்கள்? என்னைப் பற்றி தெரியுமில்லை. எந்த அளவிற்கும் இறங்கக் கூடியவள். நான்… நீ எதையாவது மறைத்தால் அதைத் தெரிந்து கொள்ள உன்னை விழத்தட்டக் கூட தயாராக இருப்பவள் நான்.” என்று பூனம் சொல்ல, “ஆம்… அரசு. இவளிடம் கொஞ்சம் கவனமாக இருந்து கொள். ஒரு மாதிரி டைப்” என்ற திலக்கிடம் “என்ன அண்ணன் தங்கை மாதிரியா பேசிக்கொள் கிறீர்கள்?” என்று கேட்ட போது, “என்ன செய்வது அப்படியே பழகி விட்டோம். ஆமாம் இவருக்கு தங்க இடம் …உணவு எல்லாம்… “என்று பூனம் கேட்டபோது “நீயிருக்கும் வரை நம் வீடு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்” என்று சிரித்தான் திலக்.

“போடா தடியா! எல்லாவற்றிற்கும் சிரிப்புதான். சீரியஸாக இரேன்” என்று கத்தினாள் பூனம்.

“சரி..சரி… நம்முடைய ஆச்சி… மெட்ராஸ் காரங்க பக்கத்திலே இருக்காங்களே…அங்கே தங்க வச்சிடலாமுன்னு முடிவு செய்திருக்கிறேன்” திலக் சொன்னான்.

“ஒன்று மட்டும் மனதில் வைத்துக் கொள். தவறு நடக்க வேண்டுமென்றால்…” என்று பூனம் சொல்வதற்குள் அரசு இடை மறித்து “ஒருசில சொந்த காரணங் களுக்காக தான் அந்த காஞ்சனா ஆச்சி வீடு. நீங்கள் வேறு விதமாக நினைக்க வேண்டாம்.” என்று சொன்னான் அரசு.

அத்தியாயம் 17 – காஞ்சனா ஆச்சி வீடு

மாலையில் அரசுவை ஆச்சியின் வீட்டில் சொல்லி இறக்கி விட்டுக் கிளம்பினார்கள் திலக்கும் அவன் தங்கைகள் இருவரும்.

ஆச்சி மல்லிப்பூப்போல இட்லி சாப்பிட கொடுத்தார்கள். சாப்பிட்டு விட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் வந்து படுத்துக்கொண்டான்.

நடந்ததெல்லாம் நினைக்கும் போது சிரிப்பு வந்தது. அரசு அப்பாவிடம் சவால் விட்டு வெளியே வந்ததிலிருந்து ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான்.

‘நான் எதற்காக….’ என் அப்பாவிடம் சவால் விட்டு இப்படி வேதனைப்பட வேண்டும்.

‘சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைவது போல, எல்லோரும் – நண்பர்கள் வட்டம் அனைவருமே அப்பாவின் சம்பாத்தியத்தை பெருக்கிக் கொண்டிருக்க…. நான் மட்டும் ஏன் பிடிவாதம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறேன்.சொந்தக் காலில் நிற்பது என்பது என்ன? என் தந்தையிடம் என்ன இல்லை…. நான் இப்படி அவர்களிடமிருந்து ஒதுங்கி ஓடிக் கொண்டிருப்பது தவறோ?’ என்று நினைத்துக் கொண்டே தூங்கிப்போனான்.

மறுநாள் அலுவலகம் போனபோது மாட்டுத் தீவனம் தயாரிப்பதற்கான முறைகள், அவைகள் எப்படி கலந்து உருவாக்கப் படுகிறது என பூனம் அவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தாள்.

அரசு மிகக் கவனமாக வேலை செய்தாலும் நினைவில் அம்மா வந்து கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் முடிந்து விட்டது. நாட்கள் ஓடியது கூடத் தெரியவில்லை. ஆச்சியின் உபசரிப்பு மிகமிக மகிழ்வைக் கொடுத்தது.

அன்று சாயங்காலம் பேசிக் கொண்டிருக்கும் போது திலக் “நான் நாளை மும்பைத் திரும்பி விடலாம் என்றிருக்கிறேன். அரசு…. நீங்கள் இங்கே எப்படி…? தொடர்கிறீர்களா?

“திலக்.. நீ மும்பைக்குத் திரும்பப் போகிறாய்… நான் இங்கே உனக்கு உழைத்துப் போடவோ… இல்லைக் கணவனை இழந்த தங்கைக்கு உதவி செய்யவோ வரவில்லை. ஏற்கனவே மும்பையிலிருந்து கிளம்பிய போதே நான் சொன்னவைகள் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.” நகத்தைக்கடித்துக் கொண்டே ரொம்ப டென்சனாக சப்தமிட்டான் அரசு.

“என்ன சூடாகி விட்டாய்… நான் உன் நிலமையைப் பயன்படுத்திக் கொண்டு உன்னை உபயோகப் படுத்தி ஆதாயம் தேடிக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயா? கூல் டௌன் மைடியர். நான் சொல்வதற்காக வருத்தப் படாதே. இந்தப் பணக்காரவீட்டுப் பசங்களுக்கு பொறுமையும் கிடையாது…. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி அக்கறையும் கிடையாது.”

“யேய்… என்னை வீணாக வெறுப்பேற்றுகிறாய்?”

“புரியாமல் …சும்மா வீணாக கூவாதே”

“சாரி… ரியலி ஸாரி” தணிந்தான் அரசு.

“மஹாராஷ்டிரா இண்டஸ்ரிஸ் டெவலெப்மெண்ட் கார்பொரேஷன் காரன் ஒருவனை கைக்குள் வைத்துக் கொண்டு உன் வியாபாரத்திற்கான லோனுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இன்று நாம் அவனை போய்ப் பார்க்கப் போகிறோம்.”

“நான் இப்படிச் சொல்வதில் உனக்கு எதுவும் கோபமில்லையே.”என்றான் திலக்கின் முதுகில் தட்டிய அரசு.

‘டோண்ட் ஒர்ரி, அரசு. பழகி கொஞ்ச நாளாக நல்லதொரு நண்பனாகி விட்டாய். ஏதோ முன்பிறவியில் நீயும் நானும் இணை பிரியாத நண்பர்களா இருந்திருப் போமோ என்று தோன்ருகிறது.”

“ஏதோ சொல்ல வந்தாயே…?”

“அது.. அது.. வந்து.. திலக்.”

“சும்மா தயங்காமல் சொல்லப்பா.”

“இல்லை… உன்னிடம் உதவி கேட்டு வந்து விட்டு உன் வியாபாரத்திலேயே உனக்கு போட்டிப் போட நினைக்கிறேன்.”

“இந்த வியாபாரம் என்பது ஒரு கடல்மாதிரி. யார் மூழ்கி முயற்சி செய்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக முத்தெடுக்க முடியும்.”

“நீ உன் வழியில் உன் வியாபாரத்தை விரிவாக்கு. சரி…சரி.. நேரமாகி விட்டது. அந்த எம்.ஐ.டி.சி. ஆபீசரை போய்ப் பார்க்க வேண்டும்” என்று கூறி திலக் எழுந்த போது “அண்ணா டீ கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள் அனாமிகா.

“அதெப்படி… சாயா குடிக்க வேண்டும் என்று நான் நினைக்கும்போது நீ டீ தரட்டுமா என்கிறாய்..” என் மனதைப் படிக்கிறாயா?” என்றான் அரசு அனாமிகாவிடம்.

“போங்கள்.. உங்களுக்கு எப்போதும் குறும்புதான்.” என்றவாறு இரண்டு கப்களில் சாயா ஊற்றினாள் அனாமிகா.

“அரசு நீ கப்போலி வந்ததிலிருந்து என் வீடே மாறிப் போயிருக்கிறது. என் மூத்த தங்கை பூனம் வியாபாரத்தில் உன்னோடு போட்டி போட புதிய ஆர்டர்கள் தேடி அலைய ஆரம்பித்திருக்கிறாள்.”

“இந்த அனாமிகவோ தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கறாள். ஒன்று தெரியுமா? என் வீட்டிலே முப்பது நாளில் தமிழ் படிப்பது எப்படி என்ற மராத்தி புத்தகம் கூட நடந்து வந்திருக்கிறது.”

“நீ தங்கி இருக்கும் ஆச்சியிடம் ஒவ்வொரு மராத்தி வார்த்தைக்கும் தமிழ் அர்த்தம், உச்சரிப்பு, அதனோடு ஒத்த வார்த்தைகள்… என்று கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறாள். இது எங்கே போய் முடியுமோ?” என்று ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சிரித்தான் திலக்.

கன்னங்கள் சிவந்து போய் “நீ சும்மா இருக்க மாட்டாயா?” என்று அண்ணனிடம் சிணுங்கினாள் அனாமிகா.

“உண்மையிலே அனாமிகா சிணுங்கும்போது இன்னும் அழகாக இருக்கிறாள்.” என்று அரசு சொல்ல “சீ…” என்று சொல்லிக்கொண்டே ஓடினாள் வெளியே.

“நல்ல பெண், இந்த நூற்றாண்டில் இப்படி வெட்கப் பட்டுக் கொண்டு… ஆனாலும் ஆச்சரியமான பெண். அது போகட்டும் திலக், வீணாக கற்பனைகளை வளர்த்துக் கொள்ளச் சொல்லாதே. அப்புறம் மிகவும் கஷ்டமாகி விடும்.”

என் அம்மா ரொம்ப தமிழ் தெரிந்த ஓரளவு அழகான அலட்சியமான பெண்ணை எனக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னாலே சிக்கல்கள் எதுவும் வந்து விடக்கூடாது.”

“நீ ஒன்றும் இந்தச் சிக்கல்களில் விழாமல் இருந்து கொள் அரசு. எனக்குத் தெரியும் இந்த வயதில் வரும் ஒரு வகையான மன லயம் அப்புறம் ஒருமனப்பட்டு பக்குவப் படும் போது சரியாகி விடும்.”

“ஆமாம் அரசு இ..மெயிலில் ஏதோ ஆர்டர் கிடைத்திருக்கிறதென்று சொன்னாயே.. என்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்.. எத்தனை பேக் ஆர்டர்கிடைத்திருக்கிறது.”

“நம்ப மாட்டாய் திலக். முப்பத்தேழு லட்ச ரூபாய்க்கான ஆர்டர் கிடைத்திருக்கிறது. உன் மும்பை தொழிற்சாலையும் இந்த பூனத்தின் கப்போலி தொழிற்சாலையும் ஒரு மாதம் இரவு பகலாக எனக்காக தயாரித்தால் மீதியை வெளியிலே இருந்து வாங்கி அனுப்பி விடுவேன். எல்லாம் எல்.சி. போட்டு அனுப்புவதால் பணம் பிரச்சினையுமில்லை.”

“அத்தோடு நீபார்த்திருக்குமிடத்தில் என்னுடைய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி ஒரு சிறிய கட்டிடம் கட்டிட இந்த ஆர்டர் முடிந்ததென்றால் பண உதவி அதிகமாக இருக்கும்.”

“வெரிகுட் அரசு. உன் தீவிரம் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வியாபாரத்திலே பத்து வருடமாக உருளுகிற எனக்கு, போன மாதம் தான் ஒரு சிறிய வெளிநாட்டு எக்ஸ்போர்ட் ஆர்டர் கிடைத்தது.”

“நீ கப்போலி வந்து உடனே கொடி நாட்ட ஆரம்பித்து விட்டாய். அது சரி, ஏதோ சொல்ல வந்தாயே..”

“ம்… என் நண்பன் குட்டி ஒரு சின்ன ஷிப்பிங் கம்பெனி வைத்திருக்கிறான். அதை விரிவடையச் செய்ய என்னைக் கூப்பிட்டான். நவசேவாவில் அவனோடு அதையும் ஒரு பகுதியாக செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.”

“வா.. மவனே… உன் காட்டில் மழை பெய்கிறது. அப்படியே நீ அன்று சொன்ன மாதிரி கன்டெய்னர் பிஸினசையும் ஒரு வழி பார்த்து விடு.”

“ஆமாம். அங்கே நுழைந்து விட்டால் லாஜிஸ்டிக் ஃபிரைட் ஃபார்வார்டிங்… கஸ்டம்ஸ் க்ளீயரன்ஸ் இப்படி எத்தனையோ இருக்கின்றன.”

“அதையும் தாண்டி, கண்டைய்னர் ஃபிரைட் ஸ்டேஷன், வேர் ஹவுசிங், க்ரேன், ஃபோர்க்லிப்ட், டிரான்ஸ்போர்ட் என்று ஒரு பெரிய வியாபார சாம்ராஜ்யம் காத்துக் கிடக்கிறது.”

“பரவாயில்லை அரசு. இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறாயே. அது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அன்று என்னோடு என் வீட்டிலேயே காந்திவிலியில் பார்த்த அரசு தானா என்று சந்தேகம் கூட வருகிறது. கண்டிப்பாக சுயமாக காலூன்றி விடுவாய்… சரி… சரி… சாயா ஆறுது பார். குடி. எம்.ஐ.டி.சி. அலுவலகம் புறப்பட வேண்டும்.”

“நான் தனியே ஆரம்பிக்கிறவரை உன் தங்கை பூனத்தோடு உன் தொழிற் சாலையின் உற்பத்தியில் பங்கெடுத்து கொள்ளலாமா?”

“உனக்கு அடிக்கடி சில்லியான சந்தேகங்கள் வருகிறது அரசு. அதற்காகத்தானே நான் உன்னை கப்போலி அழைத்து வந்ததே.”

“மேலும் என் தொழிற்சாலையில் நீ பணிபுரியும் போது பலனடையப் போவது நான் தானே… மேலும் உன் சுய தொழிலுக்கு ஒரு புது அனுபவமாகவும் இருக்கும்.”

“ஆனால் நான் உன்னிடம் சொல்லக் கூடாதுதான். இருப்பினும் நான் மும்பைத் திரும்புவதால் சொல்லித்தான் ஆகவேண்டும்.”

“முந்தாநாள் பூனம் உன் மேல் சரிந்து விழுந்தது வேண்டுமென்றே செய்தது போல் எனக்குப் பட்டது. நீ அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அவளைத் தூக்கி விட்டாய். திரும்பவும் அவளுடைய அண்ணன் என்று மட்டுமல்ல.. உன் வெல் விசராகவும் சொல்கிறேன். இந்தப் பெண்கள் விஷயத்தில் வீணாக சிக்கிக் கொள்ளாதே. உன் கொள்கைகள், நீ கொண்டிருக்கும் லட்சியம் எல்லாம் காணமல் போய் விடும்.”

“கவலையே படாதே. நானே இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன். இவ்வளவு இருந்தும் இங்கே உன் தங்கையோடு வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளச் சொகிற உன் மனசுஇமயம் திலக்.” கண்ணீர் மல்கச் சொன்னான் அரசு.

“அப்பா பசிக்குதுண்ணு நினைக்கிறதுக்கு முன்னாலே வந்து நிற்குது பாரு சாப்பாடு” என்று திலக் சொல்ல திரும்பிப்பார்த்தான் அரசு.

கையில் தூக்கு சாப்பாட்டுடன் நின்றாள் அனாமிகா, திலக்கின் அடுத்தத் தங்கை.

‘கொஞ்சம் சுவரசியமானவள்’ என்று நினைத்துக் கொண்டான் அரசு.

அத்தியாயம் 18 – ஓடுகிற குதிரை

திலக்கும், அரசும் அந்த மஹாராஷ்டிரா தொழிற்சாலைகளுக்கு உதவி செய்யும் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் தளர்ச்சியோடு இறங்கி வந்தனர்.

“இவ்வளவு பணம் லஞ்சமாக கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் என் தந்தையாக இருந்தால் ஒரு வேளை கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற வேண்டும் என்ற கோணத்தில் செயல்பட்டிருப்பார். இவ்வளவு பணம் லஞ்சமாக கொடுப்பதிருக்கட்டும் முதலில் வியாபாரம் செய்யத் தொடங்குமுன்னே லஞ்சம் கொடுத்து லோன் வாங்கி, கட்டிடம் போட்டு ம்கூம்… திலக். சரி வரும் என்று தோன்ற வில்லை.” என்றான் அரசு.

“அரசு நீ ஓடுகிற குதிரை. உனக்கு கடிவாளம் போட்டு கண்களை இருபுறமும் மறைத்து நேரே பார்க்க ஓட விட்டிருக்கிறது. இந்த வாழ்க்கை.! இப்போது உன் குறிக்கோள் சுய சம்பாத்தியம், அதற்காக சில நிப்பந்தங்களுக்குக்கட்டுப் பட்டுத்தான் ஆகவேண்டும்.”

“உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஒன்றைப் பெறுவதற்கு ஒன்ற இழந்துதான் இழந்துதான் தீர வேண்டும். இது வாழ்வின் விதி. அந்த விதியை மீற முடியாத சூழ்நிலை. நீ செய்யப் போகும் வியாபாரத்திற்கு இந்த லஞ்சம் முதலீடாக இருக்கட்டும்.” என்றான் திலக்.

“சரி சொல்லி விடலாம் என்கிறாயா?” என்று கேட்டான் அரசு.

“ஆம்” என்று தலையாட்டினான் திலக்.

திரும்ப வேக வேகமாக மாடியேறி வந்து “லோன் சாங்ஷன் செய்து விடு” என்றான் அந்த எம்.ஐ.டி.சி. கிளார்க்கிடம்.

அவன் கொஞ்சம் கூட கூசாமல் “என் பணம் …” என்று கேட்டான்.

“எனக்கு லோன் வந்து சேர்ந்த மறுநிமிடம்..”

“ஏமாற்ற மாட்டாயே?”

“கண்டிப்பாக என் வாழ்வில் யாரையும் ஏமாற்றியதில்லை.”

“சரி. நாளைக்கு காலையில் உன் வங்கி கணக்கு எண் கொண்டு வா. அங்கே எங்கள் செக் போய் விடும்.” என்றான் கிளார்க்.

கீழே இறங்கி வந்து “தாங்க்யூ திலக். நான் கொஞ்சம் கொஞ்சமாக இனி சமாளித்துக் கொள்கிறேன். நீ காந்திவிலி போக வேண்டுமென்றாயே… இனி கிளம்பு” என்றான்.

“வெரிகுட், அரசு. உனக்கு இவ்வளவு தன்னம்பிக்கை வந்து குறித்து மிக்க சந்தோசம்.”

“இந்தக் கட்டிடம் வளர ஆரம்பிக்கும்போதே நான் பெங்களூர் போய் மெஷினரிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வரலாமென்று நினைக்கிறேன்.”

“சொல்லாதே, செய். மேலும் இந்தியன் மெஷினரிக்கு இணையாக ஜப்பான் கம்பெனியொன்று போட்டி போட்டு இந்தியாவில் பாதி விலைக்கு மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. அதையும் கவனி.”

ஜப்பான் மெஷினுக்கு கஷ்டம்ஸ் டியூட்டி, ஆக்ட்ராய் எல்லாம் கட்டும்போது அதிமாகத்தானிருக்கும் திலக்.”

“நோ அரசு. எல்லா டியூட்டி, வரி எல்லாம் சேர்த்து குறைந்த விலைக்குத் தருகிறான்.”

“அப்புறம் அந்த எக்ஸ் போர்ட் ஆர்டர் என்னாயிற்று எல்.சி. ஓப்பன் பண்ணியாகி விட்டதா? திலக் ஞாபகம் திரும்ப நினைவுக்குக் கொண்டுவந்தான்.

“ம் கூம். ஒரு மாதமிருக்கிறது. உன்னிடமும் உன் தங்கையிடமும் வருகின்ற புரொடக்‌ஷன் போக மீதி வெளியே வாங்க வேண்டியதற்கு ஆர்டர் கொடுத்தாகி விட்டது.”

“இன்னும் கம்பெனிக்கு பெயர், முகவரி, பேங்க் அக்கவுண்ட் எதுவுமே இல்லாததால் ஒரு வாரத்திற்குள் எல்லாம் ஆரேஞ்ச் பண்ணி இ .. மெயில் அனுப்புகிறேன். போனுக்கே நாலாயிரத்து நானூற்றுக்கு மேலாகி விட்டது.”

“சரி விடு. சம்பாதிக்கிற பணம் தானே. உடனடியாக பெயர்…. வைத்து… ஆமாம் என்ன பெயர் வைக்கலாம் என்று ஆசைப் படுகிறாய்?”

“எனக்கு உதவி செய்த திலக் ஞாபகமாக ‘திலகர் எக்ஸ்போர்ட் ஏஜென்ஸி’ என்று நினைத்துள்ளேன்.”

“நோ.நோ.. அது தவறு. உன் அம்மா பெயர் வைக்கலாமே. அவர்கள் பெயர் என்ன?”

“ராணி”

“‘ராணி எக்ஸ்போர்ட்ஸ்’ என்று பெயர் சூட்டலாம்” என்று திலக் சொன்னதற்கு ஆமோதித்தான் அரசு.

– தொடரும்…

– முகவரி தேடும் காற்று (நாவல்), முதல் பதிப்பு: 2020, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *