முகவரி தேடும் காற்று





அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் 7 – யாதவ் இல்லையா?

பத்மினி அத்தை வீட்டிற்கு போவதை அறிந்தால்…. எங்கே உன் காலில் நிற்கப் போவதாகச் சொல்லிவிட்டு அத்தையின் முந்தானையில் போய் முழந்தாள் போட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அப்பாகண்டிப்பாக கேலியாக கேட்பார்.என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது போரிவிலி ரயில் நிலையம் தாண்டி யாதவ் டெய்ரி சென்டருக்கு வந்தான். கடை வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. யாதவின் தந்தை லால்
கல்லாவிலிருந்து சிரித்துக் கொண்டே “க்யா அரசு ..க்யா சாஹியே” என்று கேட்டார்.
”யாதவ் இல்லையா?” என்றன் அரசு.
“அவனுக்கு இன்றைக்கு பொண்ணு பார்க்க எல்லோருமாகச் சேர்ந்து பத்லாபூருக்குப் போயிருக்காங்க. ஏதாவது அவசரமென்றால் மொபைலிலே பேசு. நம்பர் இருக்குதா? இந்த மொபைலிலே டயல் பண்ணித் தரட்டுமா?” என்று கேட்டார்.
“சும்மா அவனைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று தான் வந்தேன்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் யாதவின் தந்தையின் மொபையில் சப்திக்க “யாதவ் உன் நண்பன் அரசு வந்திருக்கிறான். பேசுகிறாயா?” என்று கேட்டார்.
“ஹாய் அரசு. என்னைத் தேடி வந்தது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. உன் பண பலம் எங்கே…. காலேஜிலே திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாய். வசாயிலிருந்து போரிவிலிக்கு எப்படி வந்தாய் என்பதே எனக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது. சரி என்ன விஷயம் சொல்லுப்பா?” என்றான் எதிர் முனையில் யாதவ்.
“யாதவ் நீ ஒருமுறை யார் வேண்டுமனாலும் தொழில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னாயே நினைவிருக்கிறதா?”
“ஆமாம்…”
“அத்தோடு ஃபாஸ்ட் ஃபுட் தொழில் ஆரம்பிப்பது மிகவும் சுலபம். முத்லீடு மிகக் குறைவு கூட என்று கூறினாய். ஞாபகம் இருக்கிறதா?”
“ஆமாம்.அதற்கென்ன?”
“நான் செய்யலாமென்றிருக்கிறேண்டா” என்று அரசு சொன்னதும் எதிர் முனையில் விழுந்து விழுந்து சிரிக்கும் சப்தம் கேட்டது.
“ஏன் சிரிக்கிறாய்?” முகம் சிவந்தவாறு கேட்டான் அரசு.
“உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?” என்றான் எதிர்முனையில் யாதவ்.
“ஏண்டா… ஒரு சிறிய வியாபாரம் ஆரம்பிக்கலாம் என்று சொன்னால் பைத்தியம் பிடித்து விட்டதா என்கிறாய்?”
“நீ கோடி கோடியாக பணம் போட்டு தொழில் செய்ய வேண்டியவன். இங்கே வந்து எங்கள் தொழிலிலே கை வைக்கப் பார்க்கிறாய்.”
“அரசு இன்றைக்கு ஜே.கே. இன்டஸ்டிரீஸ் ஒரு நாளைக்கு முழுக்க இயங்காமல் போனால் மும்பை மாநகராட்சிக்கு ஏறக்குறைய நாலரைக்கோடி நட்டம் ஏற்படும். அப்படிப்பட்ட கம்பெனியின் அதிபர் நீ…. இங்கே வந்து ஃபாஸ்ட் புட் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு…போ… போ…போய் வேலையைப் பார். யாரிடமும் இப்படி பேசாதே. நாளைக்கே டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் ஜே.கே.இண்டஸ்ட்ரீஸ் அதிபரின் மகன் தமிழரசுவிற்கு மூளைக் குழம்பி விட்டது என்று செய்தி போட்டு விடுவார்கள்.” என்றது எதிர்முனை.
அரசு அமைதியாகி விட “நான் இங்கே பொண்ணு பார்க்க வந்திருக்கிற காரணமே அப்பவினுடைய சம்பாத்தியத்தை நம்பித்தான். எல்லா அப்பாவும் பிள்ளைகளுக்காகத் தான்டா சம்பாதிக்கிறாங்க. போ, போய் உங்க அப்பாவோடு சேர்ந்து ஜப்பானில் ஏதோ ஒரு மின்காந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறதா சொன்னாங்களே … அதை ஒழுங்காக கவனிக்கப் பாரு. கோடி கோடியா புரளும்.
“சும்மா அஞ்சிக்கும் பத்துக்கும் அடிச்சிக்கிற இந்த வியாபாரத்திற்கு ஏண்டா நீங்களெல்லாம் வரணும். சரி, நேரிலே பேசலாம். அப்ப நிறைய பேசலாம்.” என்று ஹிந்தியிலே சொன்ன எதிர்முனை “போனை அப்பவிடம் கொடு “ என்றது.
லால் பேசி முடித்து விட்டு “என்ன அரசு ஏதாவது சாப்பிடுகிறாயா? யேய் பாய்… சாப்கோ ஏக் சிக்கன் சூப் தோ” என்று ஆர்டர் கொடுத்தார்.
சாப்பிடலாம் போல வயிறு பசித்தது. இருந்தாலும் “ஒன்றும் வேண்டாம் லால் சாப். அப்புறமாக யாதவ் இருக்கும் சமயத்தில் வருகிறேன்.” என்று சொல்லி விட்டு வெளியே வந்து வாசுதேவனின் காரில் ஏறிக்கொண்டான்.
“எங்கே நேரே வீட்டுக்குத்தானே” என்று கேட்டான் வாசு.
ஏதோ எண்ணத்திலிருந்த அரசு “என்ன என்ன வாசு.. என்ன கேட்டாய்” என்று கேட்டான்.
“என்னடா பகல் கனவு காண்கிறாய்? நேரே வீட்டுக்குத்தானே போக வேண்டும்” என்று கேட்டான்.
“அது.. வந்து… இல்லை என்னை வசாய் ரெயிவே ஸ்டேசனிலே இறக்கி விட்டுவிடு. ஒரு சின்ன வேலை இருக்கிறது” என்றான் தமிழரசு.
ஸ்டேசன் வந்ததும் அரசு இறங்கிக் கொள்ள கார் புறப்பட்டுச் சென்றது.
வயிறு பசியால் துடித்தது. எங்கே போவது என்று யோசித்தபோது “சாப்…” என்று ஒரு பிச்சைக்காரன் வந்து கைநீட்ட அவனை அறியாமல் சடைப் பையில் கையை விட ஒரு ரூபாய் நாணயம் தட்டுப் பட்டது. எடுத்துப் பிச்சைக்காரனிடம் போட “நீ மகராசனா இருக்கணும்” என்று வாழ்த்தி விட்டுப் போக, தமிழரசுக்கு சிரிப்பு வந்தது.
ஒரு கணம் ’வீடு திரும்பிவிடலாமா?’ என்று கூடத்தோன்றியது. ‘ம்கூம் ஒருமுறை கங்கணம் கட்டி தனியாக என் காலில் நின்று வென்று காட்டவேண்டுமென்று முடிவெடுத்தாகி விட்டது.
முன் வைத்தக் காலை பின்னால் வைப்பது முறையாகாது. என்ன செய்யலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ‘’என்ன அரசு யோசனை பலமாக இருக்கிறது” என்று கேட்டான் தீபக் சிவ்டே.
அத்தியாயம் 8 – யோசனை பலமாக இருக்கிறது?
தீபக், வசாய் ரோட்டில் ஸ்டேசன் அருகே ஒரு கோழிக்கடையும் ஒரு சிறிய பான் மசாலா கடையும் வத்திருப்பவன். தமிழரசுவிற்கு சிறு வயதிலிருந்தே பழக்கமானவன். அவனுடைய பான் கடையும் அவனுடன் மராத்தி பேசுவதற்கும் தமிழரசுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வளவு அழகாக இலக்கணம் கலந்து மராத்தி பேசும் தீபக் சிவ்டே, அரசு சொல்லும் தமிழின் மகத்துவத்தைக் கேட்டு மிகுந்த நல்ல சொற்கள் உள்ள பைந்தமிழ் என்று தமிழைப் பாராட்டக் கூடியவன்.
அரசு முதலில் ’தீபக்கிடம் சொல்லலாமா?’ என்று யோசித்தான். கண்டிப்பாக இவனும் போய் உன் தந்தையின் வியாபாரத்தைக் கவனி, இப்படி இளமையையும் நேரத்தையும் வீணாக்காதே என்றுதான் அறிவுரை சொல்ல போகிறான். இவனிடம் என்ன சொல்வது என்று நினைத்தப் போது “என்ன? எப்போதும் வெளிநாட்டு பிராண்ட் சிகரெட் வைத்திருப்பாய், ஒரு சிகரெட் தரக் கூடாதா?” என்று தீபக் கேட்டப்போதுதான் தான் இன்று முழுவதும் சிகரெட் பிடிக்க வில்லை என்பதை உணர்ந்தான்.
சுதாரித்துக் கொண்டு, “ஸாரி தீபக் சிகரெட்டை விட்டு விட்டேன்” என்றவன் “உன் வியாபாரம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.
“அது ஓடிக்கொண்டிருக்கிறது. வா சாயா குடிக்கலாம்.” என்றான்.
‘இவனுக்கு நான் சாயா வாங்கித் தர முடியாத நிலையில் எப்படி இவனோடு நான் டீ குடிக்க போவது… மறுத்து விடலாமா? ‘ என்று யோசித்தப்போது “என்ன முழிக்கிறாய், என்ன பர்சை எடுத்து கொண்டு வர மறந்து விட்டாயா? சரி, பராவாயில்லை நான் வாங்கித்தருகிறேன்” என்று அரசுவை இழுத்துக் கொண்டு சென்றான்.
சூடாக தேநீர் உள்ளே சென்றதும் கொஞ்சம் தெம்பு வந்தது. “ம்…தீபக்…உன்னிடம் கேட்பது ..” என்று இழுத்தான் அரசு.
“என்ன சொல்லு?”
“எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும். திருப்பித் தந்து விடுவேன். ஆனால் திரும்பத் தர கொஞ்ச நாளாகும்.
‘’க்யா… அரசு…விளையாடுகிறாயா? உன் வீட்டில் இல்லாத பணமா?” சிரித்தான் தீபக்.
“வீட்டில் பணம் இருக்கட்டும். நீ எனக்கு கொஞ்ச நாளைக்கு கைமாற்றாக தரமுடியுமா? நான் சம்பாதித்தவுடன் திருப்பித் தந்து விடுகிறேன்.”
“என்னது நீ சம்பாதித்து தரப்போகிறாயா? என்னாச்சு அரசு. ஏதாவது பிரச்சினையா?”
தீபக் பையிலிருந்து எடுத்து அறுநூறு ரூபாய் இருக்கிறது போதுமா?” என்று கேட்டான்.
வாங்கிக் கொண்டு “மிக்க நன்றி தீபக்” என்று எழுந்தான்.
“என்ன அரசு எனக்கு நன்றி சொல்கிறாய். என்னிடம் கடன் வாங்குகிறாய். என்ன விஷயம்?”
”அப்புறமாகச் சொல்கிறேனே?”
“இரு, வீட்டிலே ஏதாவது சண்டைப் போட்டுக்கொண்டு வந்தாயா அரசு?”
“சண்டை ஏதுமில்லை. நான் அடிக்கடி நமக்குள் பேசிக்கொள்ளும் போது சொல்வேனே, என் காலில் நிற்க முயற்சி செய்து வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.”
“உனக்கு சரியாகத் தெரிகிறதா?”
“ஏன் அப்படிக் கேட்கிறாய்?”
“உன் தந்தைக்கு நீ ஒரே மகன். அவர் உழைத்து சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் இந்த பிஸினஸ் உலகமே உனக்காகத்தான். அதை பகிர்ந்து கொள்ளக்கூட உன் வீட்டில் அண்ணன், தங்கைகள் யாரும் கிடையாது. இந்த நிலையில் அவர்களை நீ தனியாக விட்டு விட்டு வெளியேறியது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.”
“அதற்காக நான்…. தனியாக நின்று என் சுய சம்பாத்தியத்தில் முன்னேற நினைப்பது தவறா? என் அப்பாவிற்கு யாராவது சேர்த்து வைத்தார்களா? அவர் இந்த அளவிற்கு இந்த மும்பையின் அசைவில் பங்கு கொள்ள வில்லையா? அவரால் முடியும் போது ஏன் என்னால் முடியாதென்று நினைக்கிறாய்?”
“அரசு பேசுவது எளிது. உன் தந்தையின் வளர்ப்பு முறை.. நீ பிறந்து வளர்ந்த முறை…இடையே எத்தனை வித்தியாசங்கள்?. அவர் மனதில் தீப்பிழம்போடு பணம்…பணம்.. என சம்பாதிக்க ஆரம்பித்தவர். அவருக்கு அன்று கண் முன்னால் வியாபாரக் குதிரையின் கடிவாளம் தவிர எதுவும் தெரியவில்லை. ஆனால் உன் நிலை… உன் கொள்கையை நான் மறுக்க வில்லை, நீ விரும்பினால் கார், எந்தப் பக்கம் தொட்டாலும் பணம். … என்ற நிலையில் வளர்ந்தவன். உன்னால்… சரி..விடு, உன்னை நான் நோகடிக்க விரும்ப வில்லை. நீ வீடு போக விரும்ப வில்லை என்றால் என்னோடு தங்கலாம். எனது சொப்டா(குடிசை)யில் உனக்கு
எப்போதும் இடமுண்டு. நான் சாப்பிடும் சப்பாத்தியும் சப்ஜியும் உனக்குத் தருகிறேன்.”
“ஸாரி… தீபக். வசாயிலிருந்து கொண்டு நான் வீடு போகவில்லை என்றால் என் அப்பாவின் பெயர் கெட்டுப் போவிடும். நான் தாராவிக்குப் போய் நண்பர்கள் மூலம் அல்லது சுன்னாபட்டியிலிருக்கும் கஸின் பிரதர் மூலம் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.”
“உன் விருப்பம்.”
“வரட்டுமா?”
“இரு அரசு,இந்த முகவரியை வைத்துக் கொள். என் அண்ணாவின் மாமனார் பையன் ஒருவன் நம்ம காந்திவிலி பொய்சரில் பி.இ.எஸ்.டி.(பெஸ்ட்) பஸ் ஸ்டாப்புக்கு அடுத்தாற்போல ஒரு சின்ன தொழிற்சாலை வைத்திருக்கிறான். பெயர் திலக். கோழி தீவனம் தயாரித்து எக்ஸ்போர்ட் பண்ணுகிறான். போய்ப் பார்த்து பேசிப் பார்.” என்று ஒரு விசிட்டிங் கார்டைநீட்டினான்.
“சரி, இருக்கட்டும்.” எனக் கிளம்பியவனை மராத்தியில் திரும்பவும் அழைத்து “அரசு தீர்மானித்து விட்டாயா? “ கேட்டான் என்று தீபக் சிவ்டே.
“மாற்றமில்லை தீபக்.”
“பெஸ்ட் ஆஃப் லக்.” கையைக் குலுக்கி அனுப்பி வைத்தான்.
அத்தியாயம் 9 – தீர்மானித்து விட்டாயா?
தாராவிக்கு வந்த போது இருட்டி விட்டது. உள்ளுக்குள்ளே மெல்ல பயம் வந்தது. பசிக்க ஆரம்பித்தது. நண்பர் ஒருவர் வைத்திருந்த பிரிண்டிங் பிரஸ். அந்த இடத்தில் அச்சகம் இல்லாததால், அருகிலிருந்த ‘பான்’ கடையில் “இங்கே பிரஸ் வைத்திருந்த வில்சன் எங்கே இருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டான்.
“அது… அவர் பிரஸை மூடி தான் ஆறுமாதமாகி விட்டதே. நீங்கள் பக்கத்து வீட்டில் கேட்டுப் பருங்களேன்” என்றார் கடைக்காரர்.
‘’கடையைத்தாண்டி பக்கத்து வீட்டு வாசலில் இருந்த மூதாட்டியிடம் விசாரித்த போது, அடுத்த கல்லி( சிறிய முடுக்கு) யிலே மூணாவது வீட்டிலே இருக்கிறார்” என்றார்.
அந்த வீட்டில் கதவைத் தட்டியபோது ‘’யாரு…..’’ வில்சன் வெளியே போயிருக்காங்க. நீங்க யாரு? உள்ளே வாங்களேன்’’ என்றாள் வில்சனின் மனைவி திவ்யா.
உள்ளே போகவா வேண்டாமா? எனது தீர்மானிக்க முடியாமல், ”நான் வந்ததாகச் சொல்லுக்கள்.’’ என்றான்.
‘’உங்கள் பேர்?’’
‘’அரசு வசாயிலிருந்து வந்திருந்தார் என்று சொல்லுங்கள்.” அவன் கிளம்ப எத்தனித்த போது வசாயிலிருந்து வந்திருக்கிறீர்கள் இருங்கள். இப்போது வந்து விடுவார்கள். மொபைல் போனைக் கூட வீட்டிலே வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இல்லையென்றால் மொபைலிலேயாவது கூப்பிட்டு விடலாம் என்றாள்.” திவ்யா.
“பரவாயில்லீங்க, நான் அப்புறமாக வருகிறேன்.” என்று சொல்லி விட்டு திரும்பவும் தொண்ணூறு அடிச்சாலைக்கு வந்த போது அவனை யாரோ தொடர்வது போல அவனுடைய பிடரியில் உணர்ந்தான்.
உடனடியாகத் திரும்பிப் பார்க்காமல் மெதுவாக அருகிலிருந்த பெட்டிக் கடைக்கு வந்து ஒரு டிரிபிள் வைவ் சிகரெட் கொடுங்கள் என்று சொல்லி விட்டு தற்செயலாக ’பின்னால் யாராவது நிற்கிறார்களா’ என்று திரும்பிப்பார்த்தான்.
கொஞ்சம் தள்ளி கையில் சிகரெட் மினுங்க பாபு சிரித்துக் கொண்டு நின்றார்.
அரசுக்கு ஆச்சரியமாக இருந்தது. ’அப்பாவின் ஆத்ம நண்பர் என்னைத் தொடர்கிறாரா? அப்பாவின் எந்தச் செயலுக்கும் பக்க பலமாக நிற்கும் பாபு என்னைத் தொடர்கிறார் என்றால்…’ அவனுக்குள் சிலிர்த்தது.
நான்… அப்பாவின் அடையாளங்களிலிருந்து தப்ப வேண்டுமெனில் என் இருப்பிடம் அவர்களுக்குத் தெரியக் கூடாது.
சிகரெட்டை வாங்கியவன் பற்ற வைக்காமல் திரும்ப பையில் போட்டுக் கொண்டு வேகமாக அடுத்தடுத்தக் கல்லிகளுக்குள்
(சிறிய முடுக்குத்தெருக்கள்) நுழைந்து தொடர்பவர் தன்னை பார்க்கும் முன்னரே அடுத்தடுத்தக் கல்லிக்குள்(சிறிய
முடுக்குத்தெருக்கள்) நுழைந்து பாந்திரா குர்லா லிங்க் ரோட்டிற்கு வந்து ‘ஆட்டோ’ என்று கைத்தட்டி கூப்பிட்டு ஏறி அமர்ந்து
” சுன்னா பட்டி ஜாவ்…” என்றான்.
திரும்பப் பார்த்து யாரும் தொடராததால் ஆட்டோ டிரைவரிடம் தீப்பெட்டி வாங்கி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு “சுன்னாப்பட்டி ஸ்டேஷன் தாண்டி ஒரு சிக்னல் வருமே அதிலே இறங்கி விடு “என்றான்.
சுன்னாப்பட்டி வந்ததும் இறங்கி அங்கிருந்து “சாய் பாலாஜி” பில்டிங் தேடி மூன்றாவது மாடி ஏறி அறை எண் 301 ல் மணி அடித்தபோது… “கோன்…”? என்ற சப்தத்தோடு கதவை திறந்த கிருஷ்ணன் “ஹே! என்னாச்சரியம்!! அரசு எங்க வீட்டிற்கு வந்திருக்கிறான். வா….வா…” என்றான்.
“நண்பர்கள் எல்லோரும் எங்கே?”
‘’அரோராவில் விஜயின் திருப்பாச்சி, படம்பார்க்கப் போயிருக்காங்க. வா.. உள்ளே வாப்பா… என்ன சாப்பிடுகிறாய்? இது பாச்சிலர்ஸ் ரூம்… அப்படி இப்படித் தானிருக்கும்” என்று கீழே கிடந்த டெபோனைர் புத்தகத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டு நாற்காலியில் கிடந்த ஜட்டி, பனியனை எடுத்து விட்டு அவனை அமரச்சொன்னான்.
தமிழரசு ஏதோ ஒரு உணர்வில் ஜன்னல் வழியாக எட்டிப் பர்த்தப்போது ரோட்டில் பாபு ”அரசு இங்கே சுன்னாப்பட்டியில் நண்பர்கள் அறையில் இருக்கிறார். ஒன்றும் பிரச்சினையில்லை” என்று போன் பண்ணிக்கொண்டிருந்தார்.
பெரும்மூச்சு விட்ட தமிழரசு “கிருஷ்ணா இந்தப் பில்டிங்கிலேயிருந்து வெளியே போவதற்கு வேறே வழியிருக்கிறதா?” என்று கேட்டான்.
“பின்னாலே வழியிருக்கிறது. அந்த வழியிலே போகலாம். என்ன விஷயம்”? என்று கேட்டான் கிருஷ்ணா.
“அப்புறம் சொல்கிறேன்.” என்று கிளம்பிய அரசு, பின் வழியாக வெளியே வந்து ஆட்டோ பிடித்து “பாந்திரா போப்பா” என்றான். பாந்திரா மே… கிதர் ஜானேகா?” என்றான் ஆட்டோகாரன். “ரயில்வே ஸ்டேஷன்” என்றான் அரசு.
– தொடரும்,,,
– முகவரி தேடும் காற்று (நாவல்), முதல் பதிப்பு: 2020, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |