கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம் முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 67 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – காமனை வென்றவன் 

“ஓஹோ! யார், சங்கரனா? என்னை வழியனுப்பவும் என் பிரயாணம் சுகமாக அமைய வேண்டுமென்று சொல்லவும் இன்றைக்கே வந்துவிட்டாயா?” -சங்கரனுடைய நெருங்கிய நண்பன் கோபாலன் அவனை இவ்விதமாக அன்போடு வரவேற்றான். 

“என்ன செய்வது? நாளைக்குச் சரியாக அதே சமயத்துக்கு என் பிரசங்கம் இருக்கிறது; அதனால் இன்றே வரவேண்டியதாயிற்று. மேலும், நாளைக்கு நாம் இவ்வளவு ஓய்வோடு பேசவும் முடியாது.” 

பல ஆண்டுகளாகவே சங்கரனுக்கும் கோபாலனுக்கும் இருந்த நட்பு வரவர வளர்ந்து, இப்பொழுது அவர்கள் தம்மை அண்ணன் தம்பிகளாக மதிக்கும் அளவுக்கு வந்திருந்தது. இவ்விரு நண்பர்களின் மன அமைப்பில் பெருத்த வித்தியாசம் இருந்தது. இவர்களுடைய நட்புக்கு எவ்வித இடையூறும் நேராமலிருந்ததற்கு அது ஒருவேளை காரணமாக இருக்கலாம். கோபாலனுக்கு விளையாட்டுப் பந்தயங்களில் ஆசை. டென்னிஸ், கிரிக்கெட், நீச்சு முதலிய விளையாட்டுக்களிலும் தேகப் பயிற்சிகளிலும் அவன் வல்லவன். ஒழுங்கோ சட்டமோ இல்லாமைதான் அவனுடைய ஒழுங்கு சட்டம். அவன் கற்பனை உலகில் உலாவுவான். மனம் போனபடி நடப்பான். நாளையைப்பற்றிக் கவலைப்படுவது அவனுடைய சுபாவமல்ல. அவன் இன்றைக்காக வாழ்ந்தான்-அதில்தான் அவனுக்கு முழுச் சுவையும் இருந்தது. கஸரத் செய்பவர்களிடத்தில் வழக்கமாக உள்ள அழகும் கவர்ச்சியும் அவனிடமும் இருந்தன. கலாசாலையில் படித்ததிலிருந்து இன்றுவரையில் இந்த நாற்பது வயதை அவன் ஒரு வண்டைப்போல ரசிகனாகவே கழித்திருந்தான்; இனி அவனுடைய இந்தச் சுபாவம் மாற வழியில்லை. இதனிடையே அவன் கல்யாணமும் செய்து கொண்டான்! எட்டு ஒன்பது வருஷங்கள் மண வாழ்க்கையையும் அநுபவித்தான். பிறகு மனைவி இறந்துபோனாள்; 

குழந்தை குட்டியும் இல்லை. மறுபடி மணம் செய்துகொள்ள அவன் விரும்பவில்லை; அதில் ஏதும் பயன் இருப்பதாகவும் அவனுக்குத் தோன்றவில்லை. பட்டம் பெற்றதும், அவன் ஒரு வியாபாரக் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தான்; இன்றுவரையில் அதே இடத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கிறான். உலகின் எந்தக் கோடிக்குப் போக நேரிட்டாலும் அவன் சந்தோஷமாகப் போவான்; முகத்தைச் சற்றும் சுளித்துக்கொள்ள மாட்டான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது அவனுடைய கொள்கை. நாளைக்கே அவன் ஐரோப்பாவுக்குப் புறப்படப் போகிறான். ஐந்தாறு ஆண்டுகள் அங்கே இருப்பான். 

சங்கரனுக்கும் ஏறக்குறைய நாற்பது வயதுதான் இருக்கும் ஆனால் அவன் சுபாவத்துக்கும் கோபாலனுடைய சுபாவத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருந்தது. கோபாலனைப் போலவே சங்கரனும் ஐந்து வயதுவரைக்கும் குழந்தையாகத்தான் இருந்தான்; அதன் பிறகு அவன் ஒரேயடியாகப் பெரியவனாகிவிட்டான். அவனுக்கு விளையாட்டோ, கஸரத்தோ ஏதும் பிடிக்காது. குழப்பம், கூச்சல், களியாட்டம் என்றாலே தொலைவில் ஓடிவிடுவான். ஒழுங்கு மட்டுமே அவனுடைய வாழ்க்கையில் தனி இடத்தை ஏற்றுக்கொண்டது கோபாலன் தன் கற்பனைக்குச் சீடனாக இருந்தான்; சங்கரன் தன் பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தான். பி.ஏ. பட்டம் பெற்றதும் முதலில் அவன் கலாசாலையில் விரிவுரையாளரானான்; மெல்ல மெல்லப் பேராசிரியரானான். இருபதாவது வயதில் அவன் திருமணம் புரிந்துகொண்டான்; அயினும் அவன் மனைவி ஒரு பெண் குழந்தையை விட்டுப் போய்ச் சேர்ந்தாள். அண்ணனுக்குக் குழந்தை இல்லாததால், சங்கரன் தன் பெண் கலாவை அண்ணியிடம் வளர்க்க ஒப்பித்துவிட்டான். அந்தப் பெண் இப்பொழுது பி.ஏ. வகுப்பில் படிக்கிறாள். ஜனங்கள் அவளைச் சங்கரனுடைய பெண்ணாக நினைப்பதில்லை; அவனுடைய அண்ணன் மகள் என்றே எண்ணுகிறார்கள். அமைதியையும் ஒழுங்கையும் போற்றுபவனாகிய சங்கரன் மறுபடி மணம் செய்துகொள்ளவில்லை. சித்திரங்கள் வரைவது அவனுக்குப் பொழுதுபோக்கு; தனிமையில் நிறையப் படிப்பதில் அவனுக்குக் காதல். இவ்விரண்டிலும் ஈடுபட்டு, அவன் மானிட அன்பையே மறந்துவிட்டான். அவனுடைய உடலழகையும் புலமையையும் கண்டு பல பெண்மணிகள் அவனை நெருங்கினார்கள். அவன் அவர்களோடு உலாவுவான், பேசுவான், சிரிப்பான்; ஆயினும் அவனிடத்தில் விந்தையான நடுநிலைமை ஒன்று இருந்தது. சித்திரகாரனாதலால் அவன் எழிலை ஆராய்ந்து வந்தான். அழகிய பெண்மணிகளோடு பேசுவதனால் அவன் மகிழ்ச்சியடைந்தான்; அமைதியையும் ஆரோக்கியத்தையும் உணர்ந்து வந்தான். 

பேசும் கலையிலும் அவன் நிபுணன். ஒருத்தி சேலையுடுத்திருக்கும் அழகு, இன்னொருத்தியின் புடைவைத் தலைப்பு அலையலையாகக் காற்றில் மிதக்கும் காட்சி, பின்னுமொருத்தி, கிழிந்துபோனாலும் தேவலை என்று எண்ணியவள்போல், அழுத்தி இறுக்கிக் கட்டிய ரவிக்கையின் விம்மிதம், ஓர் இளம் பெண்ணின் கூந்தல் காற்றோடு போட்டியிட்டு விளையாடும் விந்தை, இன்னொருத்தியின் அழகிய வளைந்த புருவம், இன்னொரு யுவதியின் மதர்த்த கண்கள், தேனைப் பாய்ச்சும் ஒரு மோகினியின் இதழ்கள், அங்கையற்கண்ணி ஒருத்தியின் வனமுலைகள், கண்ணைக் குளிர்வித்து யானைபோல நடக்கும் ஒருத்தியின் நிதம்பங்கள், ரோஜா வதனமுள்ள மற்றொருத்தியின் அழகிய செந்நிறச் சீரடிகள்- இப்படியாகப் பலவித எழில் சிருஷ்டிகளைப்பற்றி மணிக்கணக்காகப் பேசி அவன் தன் நண்பர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதோடு, தானும் அந்த ஆனந்தத்தை அநுபவிப்பான். இப்படியிருந்துங்கூட, அவனுக்குப் பெண்களைப்பற்றி இருவிதமான மாறுபட்ட கொள்கைகள் இருந்தன என்பதைக் கூர்ந்து பார்ப்பவர்கள் அறிய முடியும். சில சமயம் அவன் பெண்களைத் தெய்வமாக மதித்துப் போற்றுவான்; மற்றும் சில சமயம் அவர்களை அரக்கிகள் என்று திட்டுவான். இவ்விரு மாறுபட்ட அலைகளின் காரணமாக, அவனுக்குப் பெண்களிடம் பற்றை விடப் புறக்கணிப்பே மிகுந்து இருப்பதாகத் தோற்றியது. வெவ்வேறு இயல்புள்ள ஆண்களும் பெண்களும் இந்த அசட்டைக்குப் பலவிதமாக அர்த்தம் செய்துகொண்டார்கள்; ஆயினும் இயல்புக்கும் ஒழுங்குக்கும் பழக்கத்துக்கும் அடிமையான சங்கரன் எப்போதுமே அதைப் பொருட்படுத்தவில்லை. 

அவ்விரு நண்பர்களும் மணிக்கணக்காகப் பேசினார்கள். சங்கரன் கோபாலனிடம் தனக்கு வேண்டிய புத்தகங்களின் ஜாபிதாவை எழுதிக்கொடுத்து அவற்றை இங்கிலாந்துக்குச் சென்றதும் வாங்கி அனுப்பச் சொன்னான். அவனுக்குச் சில சித்திரங்களின் நகல்களும் வேண்டியிருந்தன; அதையும் விவரித்துச் சொன்னான். கடைசியில் பேச்சு ஒருவாறு முடிந்தது. சங்கரன் திரும்பிப்போகப் புறப்பட்டான். 

புறப்படும்பொழுது சிரித்துக்கொண்டே, “இம்மாதிரியான சமயத்தில் ஒவ்வொருவனும் உன்னிடம், ‘உடம்பைப் பார்த்துக்கொள்” என்றுதான் சொல்வான். நான் அதோடு பின்னும் கொஞ்சம் சேர்த்து, ‘உடம்போடு மனத்தையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்’ என்று சொல்லுகிறேன் என்றான். 

கோபாலன் கலகலவென்று நகைத்து “சரியான பேச்சுத்தான் ! உடலையும் மனத்தையும் குறித்து இதுவரையில் நான் கவலைப்பட்டதே இல்லை; இனிமேலா கவலை கொள்ளப்போகிறேன்? சங்கரா, நான் மனம் போனபடி நடப்பவன்; உடல் என்ன சொல்கிறதோ அதன்படி அதைச் செய்யவிடுவதும், மனம் எங்கெல்லாம் போக விரும்புகிறதோ அங்கெல்லாம் அதைப் போகவிடுவதுமே என் கொள்கைகள். உனக்கும் சொல்லுகிறேன்; நான் இல்லாத சமயத்தில் நீயும் உன் மனத்தையும் உடலையும் கொஞ்சம் கவனித்துக்கொள்!” என்றான். 

சங்கரன் சிறிது அசட்டை கலந்த புன்னகையோடு, “ஹூம்! வயது நாற்பதாகிவிட்டது. இதுவரையில் அவை இரண்டும் என்னை ஏமாற்றியதில்லை” என்றான். சற்றுக் கழித்து மீண்டும், “நீ மனம் போனபடி நடப்பவன்; நான் அப்படி அல்ல, பழக்கத்தையும் ஒழுங்கையும் போற்றுகிறவன். ஊகும், என்னைப்பற்றி நீ சிறிதும் கவலைப்படவேண்டாம்” என்றான். 

நீண்ட பிரிவை நினைந்தோ அல்லது வேறு எந்தக் காரணத்தினாலே, கோபாலன் தன் இயல்புக்கு மாறாகக் கம்பீரப் பான்மையோடு பேசலானான்: ‘எதைக் குறித்துமே நான் கவலைப்படுவதில்லை. ஆனால் உன்னைப்போன்ற சிந்தனை யாளன் இவ்வளவு கர்வத்தோடு பேசுவது அழகாக இல்லை. சங்கரா, காமனுடைய அம்புக்கு இலக்காகாத வரைக்குந்தான் இந்த வீறாப்பெல்லாம் செல்லும்! ஒரு மெல்லியலாளின் கூரிய கடைக்கண் நோக்கை உதவியாகக் கொண்டு, மன்மதன் அம்பை எய்யும் கணத்திலே, உன் வாழ்க்கை முழுவதிலுமுள்ள பழக்கங்களும் ஒழுங்குகளும் சிதைந்துபோகும்; உன் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். காமனை வெல்ல முடியாது என்பது உனக்குத் தெரியாதா? 

சிந்தனையிலே ஆழ்ந்த சங்கரன், ‘காமனை வெல்ல முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் அவன் உன்னைப்போல மனம்போனபடி நடப்பவனல்ல என்பதும் தெரியும். காமன் தன் தொழிலில் கெட்டிக்காரனாகத்தான் இருப்பான். எனவே, வெற்றி எளிதாகத் தென்படும் இடத்தில்தான் அவன் தன் அம்பை எய்வான். என்வரைக்கும் அவன் பார்வை எட்டுவது, நடக்கக்கூடிய செயலாக எனக்கு தோன்றவில்லை” என்றான். 

பிறகு சிறிது நேரம் வரையில் விவாதம் நடந்தது. முடிவில் இரு நண்பர்களும் பிரிந்தனர். 

2 – அவனிடம் இருந்தது 

தனஞ்சயன் தன் அறையில் தனியே உட்கார்ந்திருந்தான். அண்ணனுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தனிக் கட்டிடத்தில் அவன் வசித்து வந்தான். அவன் உட்கார்ந்திருந்த தாழ்வாரத்தை உயரமான அடர்ந்த மரங்கள் மதிள் சுவரைப்போல மறைத்திருந்தன. சாலையில் செல்லும் எவனும் அங்கே ஒரு வீடு இருப்பதாகவே எண்ண மாட்டான். தாழ்வாரத்தில் அருகில் புது மாதிரியான ஸ்நான அறை; பின்கட்டில் சமயலறை; விருந்தாளிக்குத் தனி அறை; அதற்குப் பக்கத்தில் சாமான்கள் நிறைந்த அறை; எதிரே பெரிய காலரி. விருந்தாளிகளுள் கோபாலனைப் போன்ற சில நண்பர்கள் எப்போதாவது அவன் வீட்டுக்கு வருவார்கள். சில சமயம் அவன் பெண் கலா அந்த வீட்டை முற்றுகையிடுவாள். அவளோடு தற்காலத்திய இளைஞர்களும் யுவதிகளும் சேர்ந்த ஒரு சேனை இருக்கும். இளமையின் இந்த எதிர்ப்பைத் தனஞ்சயன் பெருமையும், வருத்தமும், வியப்பும், ஆவலும் கலந்த உணர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருப்பான்; கடைசியில் அவர்கள் செய்துள்ள அமர்க்களத்தைச் சரிப்படுத்தி ஒழுங்காக்கும் வரையில் அவனுக்கு நிம்மதி ஏற்படாது. 

முன்கட்டு அறையில்தான் தனஞ்சயனுடைய நடமாட்ட மெல்லாம். அறையின் ஒரு புறமாக, மேலிருந்து இழுத்து மூடும் கதவுள்ள அவனுடைய மேஜை இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியும், எதிரே இரண்டு மூன்று நாற்காலிகளும் இருந்தன. ஒரு மூலையில் விலையுயர்ந்த மரக்கட்டில் இருந்தது. அதனருகில், சுமார் ஐம்பது ரூபாய் பெறுமானமுள்ள சாய்வு நாற்காலி இருந்தது. சில அலமாரிகள், ஒரு புறத்துச் சுவர் முழுவதையும் மறைத்துக் கொண்டு நின்றன. அதுதான் தனஞ்சயனுடைய வாசகசாலை. மற்றொரு மூலையிலும் அதன் பக்கத்துச் சுவர்களிலும் ஓவியங்களும், ஓவியம் வரைவதற்கு வேண்டிய கருவிகளும் இருந்தன. இரண்டு மூன்று சித்திரப் பலகைகள், வர்ணம் பெட்டிகள், தூலிகைகள், ‘பிளேட்டு’ புதிய கிழிவெற்றுக் காகிதம் முதலியவை ஒழுங்காக வைக்கப் பட்டிருந்தன. ஒரு சிறு மேஜையில் ‘மாடலு’க்கு உதவும் ஓவியங்கள் இருந்தன. இவற்றைத் தவிர, ‘ரோடீன்’ வரைந்த ஓவியங்களின் இரண்டொரு நகல்களும் சில வர்ண ஓவியங்களும் விளங்கின. 

தனஞ்சயன் சிந்தனையில் ஆழ்ந்தவனாய், பாதி வரைந்த ஒரு சித்திரத்தின் முன்னால் நின்றிருந்தான். அவன் கடிகாரத்தைப் பார்த்தான்; இரண்டரை மணி. சமையற்காரனைக் கூப்பிட்டுத் தேநீர் தயாரிக்கச் சொன்னான். சிறிது நேரம் யோசித்தான்; பிறகு, ‘இல்லை, இன்று ஏனோ படம் எழுத மனம் சரியாக இல்லை. ஊகும்!’ என்று முணுமுணுத்தான். மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்தான். ஒரு சிகரெட்டை வாயில் பற்றவைத்துக்கொண்டு, காலரியில் சாய்வு நாற்காலியில் போய்ச் சாய்ந்தான். 

சிகரெட்டின் புகையைப் பார்த்துக்கொண்டே, சாய்வு நாற்காலியில் படுத்திருந்த அவன், கற்பனையுலகில் பறக்கலானான். கோபாலன் ஐரோப்பாவுக்கு போய் ஐந்து ஆண்டுகள் கடந்துபோயின. அடிக்கடி அவன் கடிதங்கள் வரும். அவற்றில் அநேகமாக ஐரோப்பிய வாழ்க்கையைப்பற்றி ரசமான வர்ணனைகள் இருக்கும். தனஞ்சயன் மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தான். மேலே பத்து நிமிஷங்கள் கூட ஆகவில்லை என்பதைக் கண்டதும் அவன் பெருமூச்சு விட்டான்; அவனுடைய முகத்தில் ஒரு விசித்திரச் சிரிப்புத் தோன்றியது. 

‘தனஞ்சயா! உனக்கா இந்த நிலைமை வரவேண்டும்! இந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக எந்தப் பெண்ணும் உன் அமைதியைக் குலைத்ததில்லை; உன் தினசரி வேலைத் திட்டங்களுக்குத் தடை விளைவித்ததில்லை. உன்னோடு பழகிய பெண்கள்தாம் எப்படிப் பட்டவர்கள்! பெரிய விதூஷிகள் சிலர்; சங்கீதத்தில் தேர்ந்தவர்கள் சிலர்; சித்திரவேலையைப்போல ஓவியம் வரைய வல்லவர்கள் சிலர்; பளிங்குச் சிலைகளைப்போன்ற அழகிகள் சிலர்! ஆம்; இவர்கள் யாவரும் என்னோடு நட்புரிமை கொண்டவர்கள்; சிநேகிதிகள். ஆனால் என் உள்ளத்தில் இவர்களுக்குத் துளியாவது இடம் இருந்ததா? விஷமமுள்ள அந்த அதிகப்பிரசங்கி குஸுமா! குயிலைப்போலக் கூவும் ஸரயூ! ஆழ்ந்த மதர்த்த கண்களையுடைய அலகா! இப்படி எனக்கு எத்தனையோ தோழிகள். இவர்கள் யாவரும் என் வாழ்க்கைச் சோலையின் முகப்பிலே விளையாடுகின்றனர். என் வாழ்க்கைக் கடலை இவர்களில் ஒருத்தியும் கலக்க முடியவில்லை’ என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். திடீரென அவன் சிந்தனை நின்றது. அவனுடைய முகம் மாறியது. அவன் கைகள் நடுங்கின. அவன் கண்கள் மூடின. மூன்று ஆண்டுகளுக்கு முந்திய சம்பவம் அவனுக்கு ஞாபகம் வந்தது. 

முழு நிலவு எங்கும் பரந்திருந்தது. விசாலமான அழகிய பங்களா வாசலில் பெண்கள் கும்மியடித்தனர். அக்கம் பக்கத்தில் நாற்காலிகளிலும் ஜமக்காளத்திலுமாக நிறையப் பேர் உட்கார்ந்திருந்தனர். அந்த நாற்காலிகளில் ஒன்றில் தனஞ்சயனும் பக்கத்தில் அவனுடைய நண்பன் ஒருவனும் அமர்ந்திருந்தனர். இடையிடையே சில பெண்களும் இளைஞர்களும் வந்து அவனிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு போனார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் அவன் நண்பனும் வீட்டுக்குத் திரும்பிவிட்டான். எழுந்து வேறு இடத்தில் உட்காரச் சோம்பிய தனஞ்சயன் அங்கேயே பாதி இருட்டில் இருந்தான். சில சமயம் தலை தூக்கிக் குதிக்கும் அந்தப் பெண்மணிகளை அவன் ஒரு கணம் கவனித்துப் பார்ப்பான். தன் பெண் கலாவின் அபிநயத்தைச் சற்றுப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் பார்த்துவிட்டு, அவன் வேறுதிசையில் முகத்தைத் திருப்புவான். கும்மி முடிந்தது; மறுபடியும் மற்றோர் ஆட்டத்துக்கு வேறு பெண்கள் வந்தனர். அதிக குள்ளமும் அதிக உயரமும் இல்லாத, நடுவயதுள்ள பெண்மணி ஒருத்தி அந்த வட்டத்தில் கலந்து கொண்டாள். கும்மி ஆரம்பித்தது. கலா சற்று இளைப்பாறுவதற்காக வேறிடம் சென்றிருந்தாள். கும்மியில் வட்டமிட்ட பெண்களின் அபிநயத்திலோ குரலிலோ ஒன்றும் கவர்ச்சி தென்படாமையால் தனஞ்சயன் வேறு கவனமாக இருந்தான். அதற்குள் அந்தப் புதிய பெண்மணி வந்ததும் அவளை அவன் பார்த்தான்; உடனே அவன் உடலில் மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுள்ளே வேற்று நினைவோடு சேர்ந்திருந்த கலைஞனின் அம்சம் மறுபடி விழித்துக் கொண்டது. அந்த வட்டத்தில் அந்தப் பெண் இடையிடையே தெளிவாகத் தென்படுவாள்; பிறகு மெல்ல மெல்ல மறைவாள். சற்று வயதாகியிருந்தும் அவள் மற்றப் பெண்களை ஒளியிழக்கச் செய்துவிட்டாள். பொங்கும் எழில் இல்லாவிட்டாலும், தன் தனி அழகினாலும், வேதனை நிரம்பிய அபிநயத்தினாலும், துன்பம் தேங்கிய கண்களில் வீசிய தழல்களினாலும் அவள் மற்றவர்களைத் தோற்கடித்தாள். அவன் அந்தப் பெண்மணியின் வடிவத்தை உற்றுப் பார்க்க லானான். அந்த விளக்கு வெளிச்சத்தில் அவளுடைய உடலின் உண்மை நிறத்தை அறிவது சிரமமாக இருந்தது. ஆனால் அந்த நிறத்தைச் சிவப்பு என்று சொல்ல முடியாது என்று மட்டும் அவன் அறிந்துகொண்டான். ஓவியத்துக்கும் சிற்பத்துக்கும் வேண்டிய அளவுக்கு, அவள் உயரமாகவும் இல்லை. கவிகள் அடிக்கடி வர்ணிக்கும் யானைமத்தகத்தைப் போன்ற வனமுலைகளும் அவளுக்கு இல்லை. 

அப்படியானால் அவளிடம் என்ன இருந்தது? அவன் இருந்த அத்தனை தொலைவிலிருந்து, விளக்கு வெளிச்சத்தில் வட்டமிடும் கொடிபோன்ற அவள் தேகத்தைத் தனித்தனியே பிரித்துப் பார்ப்பது இயலாதகாரியம். ஆயினும் கும்மியடித்த அந்தப் பெண்களின் வட்டத்திலே அவளை விட அதிக அழகிகள் இருந்தும், அவளிடம் இருந்தது போன்ற கவர்ச்சி மட்டும் வேறு எவரிடமும் இல்லை என்பதிலே சந்தேகத்துக்கு இடமில்லை. தன்னைப் போலவே மற்ற ஆண்களும் பெண்களுங்கூட இந்த உண்மையை உணர்ந்திருப்பதை அவனுடைய கூரிய பார்வை கண்டுகொண்டது. அந்த உண்மையை அறிந்தபின்பும், தனக்கு ஏன் அவ்வித அதிர்ச்சி ஏற்பட்டது என்பது அவனுக்கு விளங்கவில்லை. சற்று நேரம் இந்தச்சிந்தனையிலேயே மூழ்கி யிருந்தான். அதற்குள் இரண்டு மூன்று பாட்டுகள் முடிந்தன. அவன் அவளை புறக்கணிக்க, அவன் பார்வை முன்பின் தெரியாத அந்தப் பெண்ணின் நுட்பமான அபிநயத்தையும் தனிப் பண்புகளையுமே கவனிக்க ஆரம்பித்தது. 

பிறகு அந்தப் பெண் வெளியே வந்தாள். தனஞ்சயன் இப்படி எத்தனையோ கும்மியாட்டங்களை பார்த்திருக்கிறான். இனிய குரலில் பாடும் எத்தனையோ ரமணிகளின் பாட்டுகளை அவன் கேட்டிருக்கிறான். ஆனால் இப்படித் திடீரென்று ஒரு பெண் கும்மியடிக்க வந்து பிறகு மறைந்துபோவது அவனுக்குப் புதிதாக தோன்றியது. அற்புதமான அழகு அவன்முன் தென்பட்டு மறைந்தாற்போல் இருந்தது. இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் மனசில் தோன்றக்கூடிய இனியதும் பயங்கரமான கலவரம், அன்று தனஞ்சயனுடைய உள்ளத்திலும் தோன்றியது. ‘இதற்கு முன்னால் இது நிகழ்ந்ததில்லை. இன்று மட்டும் இப்படி நடப்பானேன்?’ என்பது அவனுக்கு விளங்கவில்லை. கடைசியில் அவனுக்கு முன்பின் பழக்கமில்லாத அந்தப் பெண்ணின்மீது கோபம் வந்தது. அவனுடைய அறிவு அவளுடைய அபிநயத்திலும் உடலழகிலும் இருந்த குற்றங்களை ஆராயத் தொடங்கியது. ஆனால் அவனுடைய உள்ளம் இந்தக் காரியத்தில் அவனோடு ஒத்துழைக்க மறுத்தது. 

3 – வேதனை 

அவன் இம்மாதிரியான அமைதியற்ற மனநிலையில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருக்கையில், அவனுடைய பெண் கலா, முன்பின் அவனுக்குப் பழக்கமில்லாத அந்தப் பெண்மணியையே அழைத்துக்கொண்டு அவனிடம் வந்தாள். அந்தப் பெண்மணியின் கையில் ஒன்றும், கலாவின் கையில் இரண்டுமாகப் பால்நிறைந்த கோப்பைகள் இருந்தன. 

கலா தனஞ்சயனை நோக்கி ஒரு கோப்பையை நீட்டியவண்ணம், “சிற்றப்பா, நீங்கள் இவ்வளவு இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்களே, இன்றைக்கு உங்களுக்குப் பாலே கிடைத்திருக்காது! நல்ல வேளை, எனக்கு ஞாபகம் வந்தது” என்றாள். 

தன் கூச்சத்தை மறைப்பதற்காக அந்த அறிமுகமில்லாத ஆரணங்கு, ‘அவருடைய பெண்ணாக இருக்கும் நீ இவ்வளவு கூடவா ஞாபகத்தோடு செய்யக்கூடாது?” என்று இடையிலேயே பேசினாள். 

கலாஅருகிலிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு “சித்தி, நீங்கள் ஏன் நிற்கிறீர்கள்? இந்த நாற்காலியில் உட்காருங்கள். சிற்றப்பா, உங்களை உட்காரச் சொல்லுவாரென்று எண்ணவேண்டாம்” என்று கூறிவிட்டுத் தனஞ்சயனிடம் “சிற்றப்பா, இதோ உங்களிருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவர் என் சிற்றப்பா தனஞ்சயர்; புரொபஸர், ஓவியர். மீனா சித்தி நாட்டியங்களிலும் கும்மியாட்டத்திலும் தேர்ந்தவர்; ஓவியம் எழுதமுயன்று வருகிறார். அவ்வளவுதான், என் வேலை முடிந்துவிட்டது. நான் போகிறேன்” என்றதும், அங்கிருந்து விர்ரென்று போய்விட்டாள். 

கலா சென்றதும் அவ்விருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர். தனஞ்சயனைப்போன்ற பிரசித்தி பெற்ற ஆடவனோடு இவ்வளவு சுலபமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தும், மீனாட்சிக்கு எப்படிப் பேச்சைத் துவக்குவது என்று தோன்றவில்லை. எனவே, பால் குடிப்பதிலேயே அவள் தன் கவனத்தைச் செலுத்தினாள். ஆனால் தனஞ்சயனுக்கு இம்மாதிரி அறிமுகமில்லாத பெண்களோடு பேசிப் பழகுவது புதிதாக இல்லை; ஆயினும் அன்று அவன் நெஞ்சம் ஏனோ திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அந்தக் கணத்தில் உண்டான தன் பலவீனத்தைக் கண்டு சினங்கொண்ட தனஞ்சயன், பேசும் கருத்தோடு மீனாட்சியைப் பார்த்தான். மீனாட்சியும் அந்தக் கணத்திலேயே அவனைப் பார்த்தாள். அவன் மீண்டும் ஒரு முறை அதே மின்னதிர்ச்சியை உணர்ந்தான். அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மீனாட்சிக்கும் ஏறக்குறைய அவ்வண்ணமே தூக்கிவாரிப்போட்டது. அவன் கைகள் நடுங்கின. கோப்பையிலிருந்து பால் தளும்பி அவள் சேலையில் சிந்தியது. 

அதற்குள் தனஞ்சயன் தன்னைச் சமாளித்துக்கொண்டான். அவன் மீனாட்சியின் கையிலிருந்து கோப்பையையும் தட்டையையும் வாங்கித் கீழே வைத்துவிட்டு, அவள் கைக் குட்டையை எடுக்குமுன்பே, வெட்டிவேர் அத்தர் மணம் வீசிய தன் பட்டுக் கைக்குட்டையை அவளிடம் கொடுத்தான். 

மீனாட்சி கலவரத்தோடு, “வேண்டாம், வேண்டாம்; இந்த உயர்ந்த கைக்குட்டை கெட்டுப்போகும்’ என்றாள். ‘பரவாயில்லை’ என்று சொல்லியபோது தனஞ்சயன் முகம் சிவந்தது. பெண்களுக்கு மரியாதை செலுத்தும் இந்த எண்ணம் திடீரென்று உதித்ததற்குக் காரணம் அவனுக்கு விளங்கவில்லை. உள்ளுக்குள்ளே அவன் மனம் குமுறியது; அவன் தன் உதடுகளை மடித்துக் கொண்டான். கைக்குட்டை விஷயத்தில் அதிகமாக ஏதும் சொல்ல அவளுக்குத் துணிவு இல்லை. அவள் அந்தக் கைக்குட்டையாலேயே தன் சேலையில் சிந்திய பாலைத் துடைத்தாள்; அதே வேகத்தில் தன் கைகளையும் முகத்தையுங்கூடத் துடைத்துக்கொண்டாள். பிறகு கைக்குட்டையைத் திருப்பிக் கொடுத்துக்கொண்டே. “நிரம்ப வந்தனம். வெட்டிவேர் அத்தர் மிகவும் உயர்ந்ததென்று தெரிகிறது” என்றாள் 

தனஞ்சயன் தன்னைச் சமாளித்துக்கொண்டு, கைக்குட்டையைத் திரும்பப் பெற்று, “இந்தக் காலத்துக்கு வெட்டி வேரைவிடச் சிறந்த அத்தர் வேறு ஏது?” என்றான். பிறகு சாதாரணமாக விசாரிப்பவன் போல, “நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்? இங்கேதானோ? என்று கேட்டான். 

இதனிடையே மீனாட்சி தன் சுய நிலையை எய்தினாள். “ஆமாம், உங்களைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வெகுநாளாக இருந்தது. ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இன்று நீங்கள் வந்தது நல்லதாயிற்று என் அக்காள் பெண்ணுக்கும் கலாவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அதனால் தான் இன்று எல்லா வேலைகளையும் நான் கலாவிடம் ஒப்பித்திருந்தேன்” என்றாள். 

தனஞ்சயன் தனக்கு இயல்பான பற்றற்ற தன்மையோடு, அமைதியாக, “எனக்கு நாட்டியம் கும்மி எல்லாம் பிடிக்கும். அதனால் உங்கள் பெயரை நான் ஏற்கனவே பல தடவை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இதுவரை எங்கும் உங்களைப் பார்க்க முடிந்ததில்லை” என்றான். சிறிது நேரம் கழித்து, “ஓகோ! உங்கள் அக்கா பெண்ணுக்கு கலா தோழியானதால் நீங்கள் அவளுக்குச் சித்தி ஆனீர்களோ? ஹும்! கலாவுக்கு இம்மாதிரி உறவு முறையை ஜோடிக்கும் கலை நன்றாகத் தெரியும்; வரவர அவள் அதில் தேர்ச்சியும் பெற்றுவருகிறாள். சரி, ஒரு விஷயம் கேட்கிறேன்: நான் சிகரெட் பிடிப்பதில் உங்களுக்கு ஏதும் தடை இல்லையே?” என்றான். 

“எனக்கு ஒரு தடையும் இல்லை” என்று கூறி, அவள் புன்முறுவல் பூத்தாள். அந்த முறுவலிலிருந்த இனிமை அவனைத் திகைக்கச் செய்தது. 

தனஞ்சயன் மீனாட்சியை ஒரு பார்வை பார்த்தான். குளிர்காலத்து ரோஜாக் குளுமையில் ஹீனா அத்தரினால் கிடைக்கும் இன்பம் அந்த முறுவலில் அவனுக்குத் தென்பட்டது. அதே சமயத்தில் அவன் பார்வை அவளுடைய கண்களின் மீது விழுந்தது. மிதப்பு, சஞ்சலம், வெறி ஆகியவற்றுக்குப் பதிலாக, விவரிக்க முடியாத துன்பத்தின் ஆழத்தையும் கூட்டில் அடைபட்டு விடுபடத்துடிக்கும் ஜீவனின் தவிப்பையும் அவன் அவற்றில் கண்டான். 

அதற்குள் மீனாட்சி, “எனக்கு ஓவியக்கலையில் பிடிப்பு உண்டு, எப்பொழுதாவது, உங்களுக்கு ஓய்வு இருக்கும் பொழுது, நான் உங்களிடம் வரலாமா? மாணவியாகி உங்களைத் தொந்தரவு படுத்த நான் வரவில்லை; நீங்கள் சித்திரம் வரைவதைப் பார்க்கத்தான் வருவேன்’ என்றாள். 

அந்தக் குரலின் இன்னிசை அவனுடைய உள்ளத்தில் ஒரு தனி உணர்ச்சியை உண்டாக்கிவிட்டது. நிரந்தரமான அமைதியையே வாழ்க்கை நோக்கமாகக் கொண்டிருந்த அவனுடைய வாழ்க்கையில், அமைதியின்மை ஒரு கடலாகப் பொங்கியது என்றால் அவனுடைய வேதனை எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள் அப்பொழுது அவன் அந்தத் தெளிவற்ற வேதனையைத் தான் உணர்ந்தான். 

சிறிது நேரம் அவன் சற்று அச்சமும் கொண்டான். ஆனால் இம்மாதிரி விஷயங்களில் அவன் பெரிதும் தன்மதிப்பு உள்ளவன். வருஷக்கணக்காக அவன் தன் ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் காத்துவந்தவனாதலால் அவனிடத்தில் எங்கும் காண்பதற்கரிய பற்றற்ற தன்மை இருந்தது. அவன் மிகவும் அமைதியாக, ‘கட்டாயம் வாருங்கள்’ வந்து ஏதோ கற்றுக்கொண்டு போங்கள். நீங்கள் வர விரும்பபும்போது கலாவிடமாவது வேறு யாரிடமாவது முன்னதாகத் தகவல் அனுப்புங்கள் என்றான். 

“வந்தனம்” என்று சொல்லிக்கொண்டே மீனாட்சி எழுந்தாள். தன் கோப்பையோடு அவனுடைய கோப்பையையும் அவள் எடுத்துக்கொண்டாள். அப்பொழுது அவளுடைய சிறு கைக்குட்டை அங்கே விழுந்துவிட்டது. அவள் அதைக்கவனிக்காமல் தனது இயல்பான புன்முறுவலுடன் அங்கிருந்து நகர்ந்தாள். ஆனால் தனஞ்சயன் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தான்; தாவி அதை எடுத்தான்; அறிவு அவனைச் செயலுக்குத் தூண்டு முன்பே, அவன் தன் கைக்குள் அந்தக் கைக்குட்டையை இறுக்கி அழுத்தினான். அந்தச் செயலோடுகூடவே அவன் வாயினின்று சினமும் வியப்பும் துயரமும் கலந்து ஓர் ஆனந்தக் குரல் வெளிப்பட்டது. 

அவன் மெதுவாக. “மீனாட்சி” ! என்று கூப்பிட்டான். 

அவள் திரும்பிப் பார்த்தாள். 

“இதோ உங்கள் கைக்குட்டை விழுந்துவிட்டது” மீனாட்சி இரண்டடி திரும்பி, இரு கோப்பைகளையும் ஒரே கையில் வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கைக்குட்டையை வாங்கிக்கொண்டாள். பின்பு குறுநகையோடு அவள் போய்விட்டாள். 

தனஞ்சயன் இந்தக் காட்சி முழுவதையும் தன் உள்ளத்தில் திரும்பப் பார்த்துக்கொண்டான். மூன்று வருஷங்களுக்கு முன்னால் அவன் கண்ட காட்சி அது. அவனுடைய அமைதியான வாழ்க்கையில் அன்று முதன் முதலாக மீனாட்சி கலவரமாக வந்து முளைத்தாள். அவன் சற்றுத் தவிப்போடு மறுபடி கைக்கடியாரத்தைப் பார்த்தான். நாலரை அடிக்க இன்னும் சிறிது நேரம் இருந்தது. அவன் ஏமாற்றத்தோடு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். 

அவனுக்குப் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அந்த முதற் சந்திப்புக்குப் பிறகு ஏழெட்டு நாட்கள் வரையில் அவன் மீனாட்சியைப் பார்க்கவில்லை. பின்பு ஒரு நாள் திடீரென்று அவள் அவன் வீட்டுக்கு வந்தாள். ஓவியம் சங்கீதம், இலக்கியம் முதலிய பல விஷயங்களைப்பற்றி அவர்கள் பேசினார்கள். தேநீர் அருந்தினார்கள், ஊர்ப் பேச்சுக்களைக் கொட்டி அளந்தார்கள். 

அதற்குப் பிறகு தனஞ்சயனும் சில சமயம் மீனாட்சியின் வீட்டுக்குப் போவான்; ஆனால் பெரும்பாலும் அவள்தான் அவனிடம் வருவாள். 

4 – மாறுதல் 

ஆரம்பத்தில் தனஞ்சயன் மற்றப் பெண்களோடு சகஜமாகப் பேசிப் பழகுவதுபோலவே மீனாட்சியிடம் பழக முயன்றான். ஆனால் மீனாட்சியோடு அதிக நேரம் அவன் அப்படிப் பழக முடிய வில்லை. கிண்டலும் பரிகாசமுமாய் பேச்சைத் தொடங்கினாலுங்கூடச் சற்று நேரத்துக்கொல்லாம் அவன் கம்பீரமாகி விடுவான். மெல்ல மெல்ல அவர்கள் பழக்கம் வளர்ந்தது. மீனாட்சி அவனிடமிருந்து ஓவியக் கலையிலும் இலக்கியத்திலும் சிறிது பயிற்சி பெற்றாள். ஆயினும் சில நாட்களுக்குப் பிறகு, அறிவைப் போதிக்கும் எண்ணத்திலிருந்து மாறுபட்ட, வல்லமை வாய்ந்த சிந்தனையொன்று தனஞ்சயனிடத்தில் உதித்தது. மீனாட்சியின் அறிவைவிட, அவளுடைய தேக எழிலைவிட மேலான அவளுடைய ஆத்மாவின் அழகும், அவளுடைய வாழ்க்கையில் அறிய இயலாமலிருந்த ஆழமும் அவன் கவனத்தை மேன்மேலும் கவர்ந்தன. அப்பொழுதும் அவன் மீனாட்சியின் உள்ளத்தை உள்ளூற அவளுக்கு இருக்கும் விருப்பத்தை அறிய முடியவில்லை. அவளுடைய உள்ளத்திலும் தான் நினைப்பதுபோன்ற எண்ணங்களே தோன்றியிருக்கும் என்று அவன் சில சமயம் எண்ணுவான்; உடனே, தான் அப்படி எண்ணியது தவறு என்று உணருவான். 

ஒரு சம்பவம் இப்போது அவன் கண்முன்னால் நின்றது. மீனாட்சி சுமார் இரண்டு மணிநேரமாக அவனோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். சமையற்காரனும் வேலையாட்களும் வராமையால் அன்று மீனாட்சியே தேநீர் தயாரிக்கவேண்டியிருந்தது. இருவரும் தேநீர் அருந்தினார்கள். மீனாட்சி வீட்டுக்குத் திரும்புவதற்கு எழுந்தாள். தனஞ்சயன் வாசல்வரையில் அவளோடு வந்தான். வாசற்படிக்கு வெளியே கால் வைத்ததும், “நான் போய்வருகிறேன்” என்று அவள் சொன்னாள். 

அவன் பதிலுக்கு உணர்ச்சி ததும்பிய குரலில், ‘சரி போய் வருகிறீர்களா? மறுபடி எப்போதாவது வாருங்கள், எப்போது வருகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே கைகுலுக்குவதற்காகத் தன் கையை நீட்டினான். 

மீனாட்சி முதலில் திடுக்கிட்டாள்; பிறகு வேறு புறமாகப் பார்த்துக்கொண்டே தன் கையை நீட்டினாள். அவன், சாதாரண்மாகக் கைகுலுக்கும்போது அழுத்துவதைவிடச் சற்றுப் பலமாகவே அவள் கையை அழுத்தினான். அவள் போய்விட்டாள். பெண்களோடு இப்படிக் கைகுலுக்கும் பழக்கம் அவனுக்கு இல்லை. ஆயினும் இந்தத்தடவை அவன் கைகுலுக்கினான். ஏன் அப்படிச் செய்தான்? தனஞ்சயனுடைய உள்ளமும் அறிவும் இந்தக் கடுகை மலையாக்கி, மணிக்கணக்காக அதைப்பற்றிச் சிந்தித்தன. இந்தச் சிறு சம்பவத்தை மறக்க அவன் அடிக்கடி முயன்றான்; அது முடியவில்லை. இதற்குப் பிறகு இம்மாதிரியான சந்திப்புகளின் முடிவில் அவன் தன் கையை நீட்டுவான்; அவளும் பதிலுக்குக் கை கொடுப்பாள். இதன் பயனாக இருவருக்கும் நெருங்கிய ஸ்பரிசம் ஏற்பட்டது. ஆனால் இம்மாதிரியான தருணங்களில் தனஞ்சயன் மீனாட்சியை நேரே பார்ப்பதில்லை; அவளும் அவனை நேராகப் பார்ப்பதில்லை. 

அதற்குப் பிறகு மற்றொரு சம்பவம் நேர்ந்தது. மீனாட்சி வந்தாள்; கால்மணிநேரமே இருந்தாள். அவளுக்கு அவசரமாக எங்கோ போகவேண்டியிருந்தது. இதைத் தவிர, இரண்டொரு மாதங்களுக்குத் தான் வெளியூர் போவதாகவும் அவள் சொன்னாள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவன் அவளோடு பழகிவருகிறான். இதனிடையே அவன் வெளியூருக்குச் சென்ற நாட்களும் உண்டு; அவளும் வெளியூர் போனது உண்டு. எனவே மீனாட்சி வெளியூருக்குப் போய்வருவது புதுமையான செய்தி அல்ல. அப்படியிருந்தும் இந்தத் தடவை அந்தச் செய்தியைக் கேட்டதும் தன் உடல் நடுங்குவானேன் என்பது அவனுக்கு விளங்கவில்லை. 

“நீங்கள்-நீங்கள் தேநீர்கூட அருந்தமாட்டீர்களா?” என்று அவன் நடுங்கிய குரலில் கேட்டான். 

“தயாராக இருந்தால், அருந்தாமலென்ன?” ரகசியமான, வேதனை நிரம்பிய, லேசான புன்னகையோடு மீனாட்சி பதில் சொன்னாள். பிறகு, ‘தன் பரபரப்பை மறைத்துத் தன்னைச் சமாளித்துக் கொள்வதற்காக, முகத்தில் துளித்த வேர்வையைத் துடைத்துக்கொள்ளும் சாக்கில் தன் கைக்குட்டையை எடுத்தாள். தனஞ்சயனுடைய கண்கள் மீனாட்சியின் அந்தச் சிறு கைக்குட்டையில் சிக்கின. அவன் சிறிதும் சிந்திக்காமலே, ‘எனக்கு ஒரு வஸ்து கொடுப்பாயா?” என்று கேட்டுவிட்டான். அந்தக் கேள்வியில் மறைந்திருந்த வேதனையினால் திகைத்துப்போன மீனாட்சி, “என்ன வஸ்து?” என்று கேட்டாள். 

“இந்த – இந்தக் கைக்குட்டை.” 

தனஞ்சயனுடைய உள்ளத்தில் துயரம் வளர்ந்தது. இது வரைக்கும் தொலைவில், எதிலும் சாராமல், பெண்களின் உள்ளத்தையும் அழகையும் ஆராய்ந்துவந்த தனஞ்சயனுக்கு இது முன்பின் தெரியாத, பழக்கமில்லாத வழியாக இருத்தது, அவனுக்குச் சற்று வெறுப்பாகவும் இருந்தது. ஆயினும் வேறுவழி இல்லை. அன்று தன் உள்ளத்தின் ஆணையை மீறிச் செல்ல அவனால் அடியோடு முடியவில்லை. 

ரகசியமான, வேதனை நிரம்பிய அதே முறுவலோடு மீனாட்சி மறுபடியும் பேசினாள்: “இந்தக் கைக்குட்டையில் பூவேலை செய்து நான் உங்களுக்குத் தருகிறேன்’ 

இந்தப் பதில் இந்த முறுவல், இதில் மறைந்திருந்த தெளிவற்ற ஆசை நேர்மையையும் அமைதியையும் விரும்பும் தனஞ்சயனைக் கிளறிவிட்டது. அவன் உடல் குலுங்கியது. 

“நீங்கள் வேண்டுமென்றே இப்படிச் சொல்லுகிறீர்களா? அல்லது, இம்மாதிரி வழியில் தாங்கள் பழகியதில்லையா?” இப்படிச் சொல்லும்போது அவன் முகத்தில் பொறுத்தற்கரிய துயரம் நிழலிட்டது. அவன் மறுபடியும், “இந்தக் கைக்குட்டை எனக்குத் தேவை. கொடுப்பீர்களா?” என்றான். 

தாழ்வாரத்துக்கும் அறைக்கும் நடுவில் மீனாட்சி நின்றிருந்தாள். புகலுதற்கரிய, வருணிக்க இயலாத நம்பிக்கையும், ஆசையும் உருவெடுத்த பதுமைபோல அவள் ஒரு கணம் கண்ணிமையால் அவனைப்பார்த்தாள், அவள் கண்களிலிருந்தும், அவளுடைய முழு உடலின் அபிநயங்களிலிருந்தும், அவளுடைய உள்ளத்து உணர்ச்சிகளை அறிய அவன் முயன்றான். ஏமாற்றந்தான் பலன். அவன் வெறிபிடித்தவன் போல நாற்காலியை விட்டு எழுந்து நின்றான். மீனாட்சி அதே முறுவலோடு, “நீங்கள் இந்தக் கைக்குட்டையைப் பறித்துக்கொள்ளப் போகிறீர்களா?” என்று கேட்டாள். 

தனஞ்சயன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஆவேசமும் அசட்டையும் தென்பட்டன, “நான் எப்பொழுதும் எந்தப் பொருளையும் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டதில்லை; எடுத்துக்கொள்ளும் எண்ணமும் இல்லை. சொல்லுங்கள், கொடுப்பீர்களா?” என்றான் 

அவள் வேறு புறமாகப் பார்த்துக்கொண்டே, “ஓகோ! வெகு நேரமாகிவிட்டதே! பேச்சில் நேரமானதே தெரியவில்லை. சரி, நான் போய்வருகிறேன்” என்றாள் 

அவன் ஏதும் சொல்வதற்கு முன்பே, அவனருகில் வந்து அந்தக் கைக்குட்டையை வைத்துவிட்டு, அவள் அவசரமாகப் போய்விட்டாள். 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தனஞ்சயனுடைய உள்ளம் கலங்கியது. மீனாட்சியைச் சந்திக்க அவனுடைய ஆசையும் ஆத்திரமும் எல்லையற்று வளர்ந்தன; எல்லையையும் கடந்தன. 

மூனறாவது சம்பவம்: அன்று மீனாட்சி, குறித்திருந்த சமயத்திற்கு ஒரு மணிநேரங் கழித்து வந்தாள். வந்து தனஞ்செயனுக்கு முன்னால் உட்கார்ந்தாள். இருவர் பேச்சும் எக்கச்சக்கமாகப் போய்விடக் கூடாதென்று இருவரும் ஜாக்கிரதையாக இருந்தனர். 

மிகவும் நேர்மையான சாதாரணப் பேச்சுக்களையே அவர்கள் பேசினர். திடீரென்று தனஞ்சயன், “உங்கள் கைக்குட்டை என்னிடம் இருப்பது நல்லதாயிற்று; இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்துப்போயிருக்கும். ஒரு நாளைக்கு நாலைந்துதடவை மீனாட்சியோடு பேசாமல் எனக்குச் சரிப்படாது. இந்தக் கைக்குட்டையோடு நான் பேசிக்கொள்கிறேன்” என்றான். 

கணப்பொழுது மௌனமாக இருந்து, பிறகு அதே முறுவலோடு, “முதல் நம்பர் பைத்தியக்காரத் தனம்”, என்றாள் மீனாட்சி. 

தனஞ்சயன், அவள் வார்த்தையைக் கேட்டும் கேளாதவன்போல, “ஒரு தடவை உன் கூந்தலிலிருந்து சில பூக்கள் உதிர்ந்து விழுந்தன. அவற்றை நான் ஜாக்கிரதையாக வைத்திருக்கிறேன். அவற்றோடு பேசுவது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. உன் உள்ளத்தைவிட அவற்றின் உள்ளம் அதிக மென்மையாக இருக்கிறது” என்றான். 

மீண்டும் அதே முறுவலோடு “பைத்தியக்காரத்தனம் நம்பர் இரண்டு” என்றாள் மீனாட்சி. 

அவன் தன் காதற் பித்தைக் கண்களால் வெளியிட்டுக்கொண்டே, “நான்தான் பைத்தியமாகி யிருக்கிறேனே. என் பைத்தியக்காரத் தனங்களை எண்ணுவதால் என்ன லாபம்? என் பைத்தியக்காரத் தனங்களை அழிக்கவும், அழிக்க முடியாதபோது மறைக்கவும் நான் எவ்வளவோ முயன்றேன்; இனி முயலும் சக்தி என்னிடம் இல்லை” என்று முடிப்பதற்குள், மீனாட்சி கோபங்கொண்ட முகத்தைக் கவனித்தான். அவன் சற்றுத் திடுக்கிட்டவனாய், “மீனாட்சி, நீ சற்றும் கலங்கவேண்டியதில்லை. முன்பு ஒரு முறை சொன்னதையே இன்று மறுபடி சொல்கிறேன். நான் யாரிடமும் வலுக்கட்டாயமாக எந்தப் பொருளையும் என்றும் வாங்கியதில்லை; வாங்கும் விருப்பமும் எனக்கு இல்லை. வலுக்கட்டாயமாக வாங்கிய பொருளுக்கு, அன்புக்கு, மதிப்பு ஏது?” என்றான். 

அவன் இதைச் சொல்லி நிறுத்தியதும் அவன் முகத்தில் களைப்பின் அடையாளங்கள் தோன்றின. அவன் சோர்ந்துபோய் நாற்காலியில் சாய்ந்தான். கணப்பொழுது இருவரும் மௌனமாக இருந்தனர். 

தனஞ்சயனுடைய சிந்தனை மீண்டும் கலைந்தது. அவன் விழித்துக்கொண்டு மறுபடி கடிகாரத்தைப் பார்த்தான். மணி 4-35. அவன் துணிவை இழக்கலானான். பரபரப்பு அதிகமாயிற்று. அவனுடைய தெளிவான கண்களில் காதற்பித்து நிரம்பியிருந்தது. அவன் கைகள் நடுங்கின. இதற்குள் முன்னால் அறைக் கதவு திறந்தது. மீனாட்சி உள்ளே நுழைந்தாள். தனஞ்சயன் அவளை நம்பிக்கையும் ஏமாற்றமும், இன்பமும் துன்பமும் கலந்த தீவிரப் பார்வையோடு பார்த்துவிட்டுத் தன் இரு கைகளையும் நீட்டினான். பதிலுக்கு மீனாட்சியும் தலைகுனிந்து தன் கரங்களை நீட்டினாள். நான்கு கைகளும் ஒன்றாகச் சேர்ந்தன. 

இருவரும் அறைக்குள் வந்து உட்கார்ந்தனர். நாற்காலியில் உட்கார்ந்த பின்னரும், மௌனத்தைக் கலைக்க ஒருவருக்கும் விருப்பமில்லை. தான் மறுபடி ஒன்றரை மாதத்துக்குப் பிறந்த வீட்டுக்குப் போவதாகவும், போவதற்கு முன்பு அவனைப் பார்க்க வந்திருப்பதாகவும் மீனாட்சி சொல்லநினைத்தாள். அவள் பேச முயன்றும் அவள் வாயிலிருந்து வார்த்தை எழவில்லை. அவள் ஏழெட்டு நிமிஷம் நேரங்கடந்து வந்ததற்காகத் தனஞ்சயன் அவளைக் குற்றம் சொல்ல விரும்பினான். அது முடியவில்லை அவள் நாற்காலியின் பிடியில் தன் விரல்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள்; ஆயினும் அவளுடைய மனமும் உடலும் ஒரு நிலையில் இல்லாமலிருப்பது அந்தத் தாளத்திலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. 

தனஞ்சயனுடைய மண்டை நரம்புகள் புடைத்தன. 

‘மீனாட்சி”. 

தனஞ்சயன் மீண்டும் பேச முயன்றான்; பேசி அந்த மௌனத்தைக் கலைக்க விரும்பினான். ஆனால் இதற்குமேல் பேச அவனால் முடியவில்லை. அவன் ஒரு யாசகனைப்போலத் துன்பங் கலந்த ஆத்திரத்தோடு தன் இரு கைகளையும் மீனாட்சியை நோக்கி விரித்தான். அவன் தன் முழு வலிவையும் திரட்டி, மீனாட்சியைக் காதற்கண்களால் இமைக்காமல் பார்க்கலானான். 

மீனாட்சியும் தன் உள்ளத்தில் மூண்ட பெரும் புயலை எதிர்க்கக் கடைசித் தடவையாக முயன்றாள்; ஆனால் அதில் தோல்வியுற்றதும், தன் ஆழ்ந்த கண்களால் தனஞ்சயனுடைய காதற்கண்களிலிருந்து பெருகிய காதல் மதுவைப் பருகலானாள். அவள் தன் இரு கைகளையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டாள். 

இருவருக்கும் இடையே இருந்த தூரம் குறைந்தது. தனஞ்சயன் மீனாட்சியை இரு கைகளாலும் தூக்கி நிறுத்தித் தானும் எழுந்தான். ஒரு விநாடி இருவரும் கண்கொட்டாமல் ஒருவரை மற்றவர் பார்த்தனர். பிறகு அவன் அவளை இழுத்துத் தன் தோள்களின் 

அணைப்பிலே சாய்த்துக்கொண்டான். அவள் முகத்தை மேலே தூக்கினாள். அவன் தன் இதழ்களை அவளுடைய இதழ்களோடு கலக்கக் கீழே குனிந்தான். அவள் தெளிவற்றதும் மதுவைப் பொழிவதுமான குரலில், “பைத்தியக்காரத்தனம் நம்பர்” என்றாள். 

அதற்குள் அவர்களுடைய இதழ்கள் கலந்தன. 

மீனாட்சி வந்த பத்து நிமிஷமே ஆகியிருக்கும். தனஞ்சயன் அவளை முத்தமிட்ட வெறியினின்றும், அவளுடைய வேர்வைத் துளிகளைக் கண்டும் அவளுடைய ஸ்பரிசத்தினாலும் உண்டான அபூர்வமான மனமகிழ்ச்சியினின்றும் விடுபடுவதற்குள்ளேயே, தபாற்காரன் ஒரு கடிதத்தைப் பெட்டியில் போட்டு விட்டுப் போனான். தனஞ்சயன் அசட்டையோடு வெளியே சென்று கடிதத்தை எடுத்து வந்தான். கோபாலனுடைய கையெழுத்தை அவன் சட்டென்று அறிந்துகொண்டான். உறையைக் கிழித்து அவன் அந்தக் கடிதத்தைப் படித்தான். அந்தக் கடிதத்தில் கடைசியில் இருந்த இந்த வரிகள் அவன் கவனத்தைக் கவர்ந்தன. 

“இங்குள்ள ஆண் பெண்கள் நம் சமூகத்தினரைப்போலப் பரஸ்பரக் கவர்ச்சியையும் வேட்கையையும் அடக்கிவைப்பதில்லை. அவர்கள் வெளிப்படையாகத் தமக்குள் கவர்ச்சியும் வேட்கையும் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். வெளியே அவர்களுடைய விளையாடல்களைப் பார்க்கும்போதெல்லாம், அசைக்க முடியாதவனும் வெல்ல முடியாதவனுமான என் தனஞ்சயனின் ஞாபகம் எனக்கு வருகிறது. உடனே இயல்பாக, “நம் நாட்டுப் பிண அமைதியில் வாழ்வதற்குப் பதிலாகத் தனஞ்சயன் இங்குள்ள வாழ்க்கையை அநுபவித்தால், எப்படி இருப்பான்? அந்த நிலையிலுங்கூட அவன் இவ்வாறே அசையாதவனாகவும் வெல்ல முடியாதவனாகவும் இருக்க முடியுமா? அவனுடைய வாழ்க்கையில் எவ்வித மாறுதலும் உண்டாகாதா?” என்று தோன்றுகிறது” 

சற்று நேரத்துக்கு முன்பு தனக்கு இருந்த வெறியையும் தான் உணர்ந்த ன்ப உணர்ச்சிகளையும் உள்ளே அழுத்தமுயன்று கொண்டே, தனஞ்சயன் இந்த வரிகளைப் படித்தான். உடனே அவன் கலகலவென்று நகைத்தான். அவனுடைய அந்த நகைப்பு விநோதமாக இருந்தது; அசட்டையும் துன்பமும் நிரம்பிக் கலக்கத்தை உண்டாக்குவதாக இருந்தது; தெய்வீக ஆனந்தத்திலே மிதப்பதுபோல இருந்தது; கலவரக்கடல் போலக் கபடமற்றதாக இருந்தது. 

– மெஹதா, குஜராத்திக் கதை மொழிபெயர்ப்பு. தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ. 

– முல்லை – 8, 9, 10, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *