மிருதங்கம்
கதையாசிரியர்: ராஜராஜ சோழன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 75

நான் படிக்க முடியாமல் தவறவிட்ட ஒரு புத்தகத்தின் கதையை சொல்ல போகிறேன் என்று தான் நினைக்கிறேன். அந்த புத்தகத்தை பற்றி கேட்டதிலிருந்து. ஒரு புத்தகம் ஒவ்வொருவர் கை மாறி மாறி கடந்து செல்கிறது மற்றும் யாரை எல்லாம் தொட்டு செல்கிறதோ அவர்களின் கதையாகவும் மற்றும் புத்தகத்தின் கதையாகவும் கூட இருக்கலாம்.
எனக்கு அவ்வப்பொழுது விஜி சார் சில புத்தகங்களை வாங்கி கொடுப்பது உண்டு. அதற்கு எப்போதும் தாமதமாக தான் நான் பணம் தருவேன். அவர் மறந்து விடுவார் என்று தான் நினைக்கிறேன். சில புத்தகங்களை பரிசாகவும் கொடுப்பார். நான் பணம் தர வேண்டாம். அவர் கொடுக்கும் போதே இது உங்களுக்கு தான் என்று கூறுவார்.
சில புத்தகங்களை வாசிப்பது உண்டு. சில புத்தகங்களை அதன் பெயர் காரணமாகவோ அல்லது அட்டை படத்தினாலோ அல்லது தெரியாத ஆசிரியராக இருப்பதால் என்னவோ அல்லது பதிப்பகம் மற்றும் புத்தக வடிவமைப்பு காரணமாவே புத்தகத்தின் மீது ஒரு வித அலட்சியம் வந்து விடும். நான் என்னவோ பெரிய எழுத்தாளர் போலவும் பல புத்தகங்கள் எழுதியது போலவும் எண்ணிக் கொண்டு படிப்பது இல்லை.
அப்படி ஒரு முறை எனக்கு விஜி சார் நண்பர் கார்த்திக் மூலமாக ஒரு புத்தகம் கொடுத்து அனுப்பினார். புத்தகத்தின் பெயர் சனிமூலை. எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. மன்னிக்கவும். நான் படிக்கவில்லை. படித்து இருந்தால் நன்றாக நினைவு இருக்கும் என்று எண்ணுகிறேன். சிறுவாணி வாசகர் வட்டம் வெளியிட்டது என்பது மட்டும் சரியாக தெரியும். எப்போதும் விஜி சார் தனக்கு வந்த புத்தகம் அல்லது வாங்கிய புத்தகத்தை யாருக்காவது கொடுக்க எடுத்து வைத்து விடுவார். அவராகவே ஒரு அனுமானத்தில் அல்லது வாங்கி படிப்பவர் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகம் கொடுப்பார். நேராக பார்த்து கொடுக்க முடியாவிட்டாலும் கூட இருப்பவர் யாரோ ஒருவர் மூலமாக கொடுத்து அனுப்புவார். பெரும்பாலும் கார்த்திக் தான் கொண்டு வந்து தருவார்.
எனக்கு கொடுத்த புத்தகத்தின் மீது விருப்பம் இருக்காது. கார்த்திக்கும் ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார். கார்த்திக்கு கொடுத்த புத்தகத்தின் மீது
தான் ஆர்வம் செல்லும் ஆனாலும் ஆர்வத்தை காட்டி கொள்ள மாட்டேன். கேட்டால் உடனே அவரும் கொடுத்து விடுவார். ஆனாலும் கேட்க மாட்டேன். அப்படி கேட்பதில் ஒரு சிக்கல் உள்ளது. அவர் விரைவாக இயந்திரம் போல் படிக்கக் கூடியவர். நான் மெதுவாக தான் படிப்பேன். குரங்கு மரத்திற்கு மரம் தாவி எந்த மரத்திலும் தங்காமல் இருப்பது போல். எல்லா புத்தகத்தையும் மாறி மாறி தான் படிப்பேன். அவர் ஒரு வாரம் தான் பார்ப்பார். அதற்கு பின்பு கேட்க தொடங்கி விடுவார்.
இந்த கதையின் புத்தகத்திற்கு வருவோம்.
இந்த புத்தகத்தை பார்த்தவுடன் எப்படியும் இப்போதைக்கு படிக்க போவது இல்லை. கோர்ட்டில் காத்திருக்கும் கேஸ்கள் போன்று பல புத்தகங்கள் படிக்க படாமல் சிறைப்பட்டு இருப்பது போன்று இருந்தது. இந்த புத்தகத்திற்காவது விடுதலை கொடுக்கலாம் என்று மனம் வந்தது. இந்த மனம் எல்லா புத்தகங்களுக்கும் வருவது இல்லை. அதனால் முயற்சி செய்கிறேன்.
எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். படித்து முடித்த புத்தகத்தை யாரிடமாவது படிக்க உடனே கொடுத்து விடுவார். திருப்பி எல்லாம் கேட்க மாட்டார்.
எனக்கு அப்படி எல்லாம் பெரிய மனது ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் வைத்து கொள்வது தான் பழக்கம்.
நான் இந்த புத்தகத்தை மட்டும் சோமு சாருக்கு கொடுத்தேன். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் ஒரு பள்ளி ஆசிரியர். வரலாற்று பாடம் எடுக்க கூடியவர். புத்தகமும் படிக்க கூடியவர். அவரும் நானும் பேருந்தில் வேலைக்கு செல்வது வழக்கம். எப்போதும் எனக்கு சீட்டு போட்டு வைத்து இருப்பார். இயல்பாகவே அவருக்கு உதவும் குணம் உண்டு. அவ்வப்போது ஏதாவது சாப்பிட கொடுப்பார். எனக்கு மட்டும் அல்ல. எங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் கொடுப்பார். முக்கியமானது அவர் நன்றாக பாடுவார். எனக்கு ஒரு பழக்கம் உள்ளது. சிறிய புத்தகத்தை பரிசு கொடுக்க வாங்கி வைத்து யாருக்காவது பரிசாக கொடுப்பேன். எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கும். ஒரு முறை ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் புத்தகம் படித்தேன். கதை என்னை பல நாட்கள் தூங்க விடவில்லை. அதில் வரும் டாக்டர் கே
எந்த பலனும் எதிர்பாராமல் இரவு பகலாக யானைகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் மருத்துவம் பார்ப்பார். இரத்தமும் சதையுமாக இந்த மண்ணில் வாழ்ந்த மாமனிதர். அவரை நினைக்கும் போது எல்லாம் நான் என்னை சாதாரணமாக எண்ணி கொள்வேன். நாம் செய்யும் வேலை எல்லாம் தூசு தான். இந்த புத்தகத்தை தான் சோமு சாருக்கு பரிசாக கொடுத்தேன். அட்டை படத்தில் ஒரு அழகான கம்பீரமான யானை தன் துதிக்கையை வளைத்து கொண்டு இருக்கும். அவர் சிரித்து கொண்டே வாங்கி கொண்டார். அதில் எனக்கும் ஒரு சுயநலம் உண்டு. நாம் படித்த புத்தகம் பள்ளி குழந்தைக்கு போய் சேர வேண்டும் என்பதற்காகவும் கொடுத்தேன். அடுத்த நாளே அவர் கூறினார். இந்த புத்தகம் நன்றாக இருந்தது. யானையைப் பற்றி புத்தகம் என்றார். என் மனைவியும் படித்து விட்டார். அவரும் நன்றாக இருந்தது என்றார். இது ஒரு நல்ல புத்தகம் யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும் என்றாள் என்றார்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவருக்கு வேறு புத்தகம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். ஏனோ மறந்து போனேன். பல நாட்களுக்கு பிறகு தான் விஜி சார் கொடுத்த புத்தகத்தை கொடுத்தேன். வாங்கி வைத்து கொண்டார். புத்தகத்தின் தலைப்பை பார்த்தவுடன் சிரித்து கொண்டார்.
எப்போதும் பல கதைகள் பற்றி பேசுவோம் பேருந்து பயணத்தில். அந்த புத்தகத்தை பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. நானும் மறந்து போனேன். ஒன்றும் கேட்டு கொள்ளவில்லை. ஆனால் அதனை பற்றி கேட்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் மறந்து விட்டேன்.
பல நாட்களுக்கு பிறகு ஒரு நாள் காலை பேருந்து பயணத்தில் சோமு சார் சனிமூலை புத்தகம் படித்து முடித்து விட்டேன் என்றார். ஆனால் அதை பற்றி எதுவும் கூறாமல் வேறு செய்திக்கு சென்று விட்டார்.
எனக்கு ஆர்வம் தாங்க வில்லை. அதை பற்றி கேட்கலாம் என்றால். அவர் அடுத்த செய்தியினை பற்றி பேச தொடங்கி விட்டார்.
அன்றாட செய்திகளை மிகவும் சுவாரசியமாக கூறுவார். ஒரு செய்தி என்று ஆரம்பித்தார்.
ஒரு திருட்டு சம்பவம். இது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் மறந்து போய் இருப்போம். சம்பந்த பட்டவர்கள் நினைத்து கொண்டு இருப்பார்கள்.
ஒருவர் தன் ஆட்டோவை தொலைத்து விட்டார். தவறு, ஆட்டோ திருடு போய் விட்டது. வழக்கமாக நம்ம காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால். எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் காவல் துறை ஒன்று இரண்டு சம்பவத்தை விட்டு விடுவதும் ஒன்று. அப்படி விட்ட ஒரு சம்பவத்தில் இதுவும் ஒன்று.
காத்திருந்து அலுத்து போனவர்கள். களத்தில் இறங்கினார்கள். ஆட்டோ ஓட்டுனரின் மகன் மற்றும் அவர்களின் நண்பர்கள். ஆட்டோ தொலைந்து போன இடத்திலிருந்து CCTV footage துணையுடன் தேடினார்கள் விடை கிடைத்தது. எல்லா CCTV யையும் நன்றாக ஆராய்ந்து திருடனை கண்டுபிடித்து விட்டார்கள். யார் அந்த கருப்பு ஆடு என்ற எல்லா விவரத்தையும் காவல் துறையிடம் கொடுத்து விட்டார்கள். வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண் உட்பட. பிரபலமான திருடன், டீசல் மணிதான் திருடியது என்று உறுதி ஆன பின்னும் அவனை காவல் துறை பிடிக்காமல் இருக்கிறார்கள். இப்போது தொலைக்காட்சியிலும் இந்த செய்தி வைரலாகி விட்டது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. என்ன கொடுமை என்றார்.
இந்த சம்பவத்தை கூறி முடித்தவுடன் அடுத்து புத்தகத்தை பற்றி ஏதாவது கூறுவார் விஜி சார் கேட்டால் கூறலாம் என்று ஆர்வமாக இருந்தேன். ஆனால் கூறவில்லை. காற்றின் தாலாட்டில் கொஞ்சம் தூங்கி விட்டார். பேருந்து ஆடி அசைந்து சென்றது. நானும் மறந்து போனேன். பஸ் ஸ்டாண்டில் இறங்கியவுடன் அந்த புத்தகத்தை பற்றி கூற தொடங்கினார்.
நீங்க படிக்க கொடுத்த புத்தகம் பயனுள்ளதாக இருந்தது. அதில் பல தகவல்கள் இருந்தது. நல்ல புத்தகம். முதல் நூறு பக்கம் கொஞ்சம் மெதுவாக படிக்க முடிந்தது. அதன் பிறகு சிரமம் இல்லாமல் படித்தேன். அதில் ஒரு தகவல் என்று ஒரு கதை கூறினார்.
ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் தியாகராஜ பாகவதர் பாட தொடங்கும் போது அவருக்காக மிருதங்கம் வாசிக்க வந்தவர் வாசிக்க முடியாது என்று மறுத்து விட்டார். அப்போது பாகவதருக்கு சிறு வயது என்ன
செய்வது என்று தெரியவில்லை. சாதி பாகுபாடு இருந்த காலம். பாகவதரின் சாதி பொருட்டு ஏற்பட்ட எதிர்ப்பு. இசை கலைஞர்கள் யாரும் இசைக்க மாட்டோம் என்று இசைக்காமல் சென்று விட்டார்கள். அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ஆஸ்த்தான வித்வானாக இருந்தவர் மிருதங்கம் வாசிப்பவர்.
அப்போது அவர் யாரும் இல்லையென்றால் என்ன நான் உங்களுக்காக வாசிக்கிறேன் என்று முன் வந்தார். பாகவதருக்காக மிருதங்கம் வாசித்தார். அந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இந்த புத்தகத்தில் உள்ள புதுக்கோட்டை மிருதங்க வித்வானை பற்றி படிக்கும் போது எனக்கு என்னுடன் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் சீராளன் தான் ஞாபகத்திற்கு வந்தார். ஏனென்றால் அந்த வித்வான் தான் சீராளனின் தாத்தா. இதை பற்றி சீராளனிடம் உடனே கூறினேன். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். உங்களுக்கு மட்டும் எப்படி இந்த புத்தகங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கிறது என்று வியந்து போனார்.
இதனை சோமு சார் என்னிடம் கூறியவுடன் மெய்சிலிர்த்து போனேன்.
எங்கோ படித்தது ஞாபகம் வந்தது புத்தகம் தனக்கான மனிதர்களை தேடி கண்டுபிடித்து தன்னுடைய பக்கங்களை படித்துக் கொள்ளும்.