மாலாவின் கல்யாணம்





மாலா நாளைக்கு காலைல உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்களாம். இந்த மாப்பிள்ளையாவது நல்ல படியா அமையணும். போன தடவை மாதிரி மாப்பிள்ளை வீட்டுகாரங்கள காக்க வச்சுடாதே. அவங்கள மாதிரி இவங்களும் கோபபட்டு உன்னை வேணாம்னு சொல்லிட போறங்க. அதனால நீ இன்னைக்கே ஆபீஸ்ல லீவு சொல்லிடு, என்றாள் மாலாவின் அம்மா மரகதம்.
“அம்மா மாசத்துல பொண்ணு பார்க்கறேன்ட்டு இரண்டு மாப்பிள்ளை வர்றாங்க, பார்க்கிறாங்க, எதுவும் சொல்லாம தரகர் கிட்ட சொல்லி அனுப்புறோம்ன்னு சொல்லிட்டு போயிடறாங்க. என்னால ஒரு மாசத்துல இரண்டு நாள் லீவு போட முடியாது. இது வரைக்கும் ஏழு மாப்பிள்ளை வந்து பார்த்துட்டு போயிட்டாங்க. அதனால இனிமேல் மாசத்துக்கு ஒரு நாள் தான் லீவு எடுக்க முடியும், அதுவும் இந்த மாசம் லீவு முடிஞ்சு போச்சு. இந்த மாப்பிள்ளையை ஞாயிற்றுக்கிழமை வரச் சொல்லுங்க” என்றாள் மாலா
“என்ன நீ, இப்படி பேசறே..? நம்ம வசதியை பார்த்து விட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதே குதிரை கொம்பா இருக்கு..! நாம இந்த கண்டிஷன் போட்ட எந்த மாப்பிள்ளையும் வர மாட்டான்” என்றாள் மரகதம்.
“நம்ம வசதியை பார்த்து விட்டு தானே வர்றாங்க?, அப்போ நாம சொல்ற மாதிரி வந்தா தான், நமக்கு சரிப்பட்டு வருவாங்க. வர மாப்பிள்ளை வீட்டார் இஷ்டம் இருந்தா வரட்டும், தரகர் கிட்ட நானே போன் பண்ணி சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டே அலுவலகம் கிளம்பி போனாள் மாலா.
மதியம் உணவு இடைவேளையில் தன் அம்மாவுக்கு போன் செய்தாள் மாலா.
“அம்மா நான் காலையில ஆபீஸ்க்கு வந்ததும் தரகர் கிட்ட போன் பண்ணி சொன்னேன், முதலில் அவர் தயங்கினார், அப்புறமா சரி சொல்லி பார்க்கிறேன் என்று கூறினார். கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் தரகர் என்னிடம் பேசினார். தரகர் நேரா மாப்பிள்ளை யிடமே பேசியிருக்கிறார், அவரும் நான் சொன்னது சரிதான் எனவும், தனக்கும் அந்த பிரச்சினை உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை வந்து பெண் பார்ப்பதில் தனக்கு மிகவும் சந்தோஷம்” என்று கூறியதாக தரகர் கூறினார். கவலைப்படாதே, இந்த முறை எனக்கு மாப்பிள்ளை அமைந்து விடுவார் என்றாள் மாலா.
மாலா கூறியபடியே மாப்பிள்ளை வீட்டார் ஞாயிற்றுக்கிழமை வந்து பெண்ணை பார்த்து விட்டு, பெண்ணை பிடித்திருப்ப தாக கூறி “உங்களால் என்ன செய்ய முடியுமோ..! அதைச் செய்யுங்கள், எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை, கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் வீட்டிலும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம். ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் கல்யாணத்திற்கு நல்ல நாள் பாருங்கள்” என்று கூறி விட்டு சென்றனர்.
மாலாவின் அம்மா மரகதம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.
![]() |
என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க... |