மாலவல்லியின் தியாகம்






(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
இருபத்திரண்டாவது அத்தியாயம்
சந்தகரின் குழப்பம்
காவிரிப்பூம் பட்டினத்தில் வைகை மாலை இருந்த வீதியில் ஒரு மனிதர் ஒவ்வொரு மானிகையையும் பார்த்தவண்ணமே வந்து வைகைமாலையின் வீட்டு வாசலில் தயங்கி நின்றார். துல்லியமான வெள்ளை வஸ்திரம்: நெற்றியில் பளீரென்று துலங்கும் விபூதிப் பட்டை; அதனிடையே அகன்ற குங்குமப் பொட்டு; ஏதோ போதையில் ஆழ்ந்தவை போன்ற கண்கள்: ருட்டையான தாடி; திரி திரியாகத் தோளில் விழுந்திருக்கும் கேசத்தோடு கூடிய பரட்டைத்தலை; இவைதான் அந்த மனிதரின் அங்க லட்சணங்கள். அவருடைய முகமும் கண்களும் ஒருபுறம் அவரை முரட்டு மனிதராகவும், இன்னொரு புறம் அடக்கமான புத்திசாலி போன்றும் எடுத்துக் காட்டின. பொதுவாகப் பார்க்கப் போனால் அவரைப் பார்ப்பவர்களில் ஒரு சாரார் அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைக்கலாம், அல்லது வெறுப்பும் பயமும் கொள்ளலாம் என்று நினைக்கும் வண்ணம் தானிருந்தது அவரது உருவம். அந்த வீட்டு வாசலில் நெடு நேரம் நின்ற அந்த மனிதர் ஏதோ தீர்மானதிறுக்கு வந்தவர் அந்த வீட்டுக்குள் சென்று இடை தமியில் நின்றுகொண்டே ‘அம்மா’ என்று குரல் கொடுத்தார். உள்ளே இருந்து ‘யார்?’ என்று கேட்டுக் கொண்டே சுதமதி வெளியே வந்தாள்.

அந்த மனிதர் சுதமதியைப் பார்த்ததும் தயங்கியபடியே, “இதுதானே வைகைமாலையின் வீடு…” என்று கேட்டார்.
”ஆம்” என்றாள் சுதமதி.
அவர் சிறிதுதயக்கத்தோடு, “தாங்கள் தான் வைகைமாலையோ?” என்றார்.
“இல்லை-அவள் என் தங்கை-தாங்கள் யாரோ?” என்று வினவினாள்.
“நான் குடந்தைக்குச் சமீபமாக உள்ள கோடீச்சுவரத்தைச் சேர்ந்தவன்….” என்றார்.
”கோடீச்சுவரத்தைச் சேர்ந்தவரா? அப்படி யென்றால் தங்களுக்கு அவ்வூரிலுள்ள சோதிடர் சந்தகரைத் தெரிந்திருக்க வேண்டுமே?” என்றாள்.
“அந்தச் சந்தகன்தான் நான்” என்றார் அந்த மனிதர் அமைதியாக.
“ரொம்ப சந்தோஷம், தங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களை நெடுநாட்களாகச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு. தாங்கள் பூதுகருக்கு நெருங்கிய நண்பரல்லவா?” என்றாள் சுதமதி.
“நெருங்கிய நண்பர் தான். அவரைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன்…” என்றார் அவர்.
”அவர் இங்கு இல்லை. நான்கு நாட்களுக்கு முன்புதான் எங்கோ போனார். தங்களைப் பார்த்தால் மிகவும் தெய்வ பக்தியுள்ளவர் போல் தோன்றுகிறது. தங்களுடைய நெருங்கிய நண்பரான அவர் ஏன் இப்படி இருக்கிறாரோ, தெரியவில்லை!” என்றாள் சுதமதி ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே.
“அவருடைய கொள்கை யெல்லாம் எனக்கும்தான் பிடிக்க வில்லை. ‘ஏனோ அந்த மனிதரிடம் எனக்கு ஒரு பற்றுதல். அவர் எங்கே போயிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.
“அவர் எங்கே போயிருக்கிரோ. எனக்குத் தெரியாது. ஒரு வேளை வைகை மாலையிடம் சொல்லி விட்டுப் போயிருக்கலாம்” என்று அவள் சொல்லிவிட்டு உள்ளே செல்லத் திரும்பும் போது வைகைமாலை உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தாள்.

வைகை மாலையைக் கண்டதும் சுதமதி, “உன்னைக் கூப்பிடலா மென்றுதான் நினைத்தேன், நீயே வந்து விட்டாய். இவர் கோடீச்சுவரத்தி லிருந்து வந்திருக்கிறார். அடிக்கடி அவர்தான் சொல்லியிருக்கிறாரே. சோதிடர் சந்தகர் என்று, அவர் இவர் தான். பூதுகனைத் தேடிக் கொண்டுதான் வந்திருக்கிறார். அவர் எங்கே போயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?” என்றாள்.
வைகைமாலை மிகப் பணிவோடு சந்தகரை வணங்கி விட்டு, “அவர் எங்கே போயிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. எங்கோ வெளியூர் செல்ல வேண்டிய அவசர வேலை இருப்பதாகச் சொல்லிச் சென்றார்” என்றாள்.
“எந்த ஊருக்குப் போயிருக்கிறா ரென்பது தெரியாது போலிருக்கிறது. அந்த மனிதர்தான் போகிற இடத்தைச் சொல்லாமலேயே மனத்துக்குத் திகிலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விடுகிறார். பத்து நாட்களுக்கு முன் எங்கோ வெளியூர் சென்று விட்டு வருவதாக என்னிடம் சொல்லி விட்டுக் கிளம்பியவர் தான். இரண்டு நாட்களுக்கு முன் தான் அவர் இங்கு காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்திருக்கிறார் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. நான் இங்கே வந்து பார்க்கும்போது இங்கும் அந்த மனிதர் இல்லை யென்றால்…”
“நீங்கள் தான் பெரிய சோதிடராயிற்றே. அந்த மனிதர் எங்கே இருப்பார் என்பதை உங்கள் சோதிட சாஸ்திரம் சொல்லி விடாதா?”
“சோதிடர்கள் என்றால் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே சோதிடத்தின் மூலமாக அறிந்து கொண்டு விடுவார்கள் என்று நினைப்பது பிசகு. அப்படி யெல்லா வற்றையுமே தெரிந்து கொண்டு விடுவதானால் அவன் மனிதப் பிறவியே இல்லை: தெய்வ அம்சம்தான். நான் சோதிடன் தான். ஆனால் சொந்த விஷயங்களுக்காகச் சோதிடம் பார்ப்பதில்லை. அதிலும் பூதுகருக்கு இவ்விஷயங்களி லெல்லாம் நம்பிக்கையில்லை. நம்பிக்கை இல்லாத ஒரு மனிதர் விஷயமாக நான் சோதிடக் கலையைப் பயன்படுத்துவதும் இல்லை” என்றார் சந்தகர்.
“அதுதான் சரியான வழி” என்றாள் சுதமதி. ”ஊருக்கெல்லாம் வைத்தியம் செய்யும் வைத்தியன் தன் உடல் நலத்துக்காகத் தன் மருத்தையே உபயோகப் படுத்துவதில்லை. அதிருக்கட்டும்; தங்களுக்குச் சிறிது நேரம் இங்கே இருந்து பேச அவகாசமுண்டா?” என்று கேட்டாள்.
“ஏன்?”
“உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதி லிருந்து தங்களிடம் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டு மென்று ஆவல்” என்றாள் சுதமதி.
“சோதிடம் சம்பந்தமாகவா?” என்றார் சந்தகர்.
“ஆமாம்” என்றாள் சுதமதி. உடனே சந்தகர் தம் எக்கில் செருகியிருந்த ஒரு சிறு துணிப் பையை எடுத்துக் கொண்டே கீழே தரையில் அமர்ந்து துணிப் பையைப் பிரித்து அதிலிருந்த சோழிகளைக் கீழே கொட்டினார். சுதமதி அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு, “முக்கியமாக உங்களை நான் கேட்க நினைப்பது…” என்று சொல்லிக்கொண்டு வரும்போதே சந்தகர் இடைமறித்து, ”அதையெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன உங்களுக்கு நடக்க வேண்டும், அதற்கென்ன பரிகாரம் செய்யவேண்டு மென்பதெல்லாம் நானே சொல்லுகிறேன். பாருங்கள்'” என்று சொல்லிப் பையிலிருந்து கொட்டிய சோழிகளைக் கைகொண்ட வரையில் வைத்து, எடுத்துக் குலுக்கி நிமிர்ந்திருக்கும் சோழிகளை ஒருபுறமாகவும், கவிழ்ந்திருக்கும் சோழிகளை ஒருபுறமாகவும் பிரித்து எண்ணி வைத்தார். பிறகு, “நீங்கள் நினைப்பது வெளியூர் சென்றிருக்கும் ஒரு மனிதரைப் பற்றி. அதுவும் கடல்கடந்து சென்ற ஒரு மனிதரைப் பற்றி நினைத்திருக்கிறீர்கள். அவர் எங்கே இருக்கிறார், எப்பொழுது வருவார் என்ற கவலைதான் உங்களுக்கு. இல்லையா?” என்றார்.
சுதமதி மிகவும் ஆர்வமும் சந்தோஷமும் கொண்டவளாய், “ஆமாம். அந்தக் கவலைதான் எனக்கு. அவர் சிங்களம் சென்று மூன்று வருஷங்களாகி விட்டன. குதிரை வியாபாரம் செய்பவர். வியாபாரத்துக்காக முந்நூறு குதிரைகள் கொண்டு சென்றார். சீக்கிரம் திரும்பி வருவதாகத்தான் போனார். வருடங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவரை எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் ஒடிந்து விட்டது. வாழ்க்கையே வெறுத்து விட்டது. சிங்களத்திலிருந்து அடிக்கடி வரும் முத்து வியாபாரியை நான் விசாரித்ததில் அவர் கொண்டு சென்ற குதிரைகள் எல்லாவற்றையும் அங்குள்ள சிங்கள அரசரிடமே விற்று விட்டுப் பெருத்த செல்வந்தரானதோடு அந்த அரசருக்கே உற்ற நண்பராகிப் பௌத்த சமயத்திலும் சேர்ந்துவிட்டார் என்று சொல்லுகிறார்கள். அவர் தம்முடைய செல்வத்தினால் சிங்களத் தீவில் அனுராதபுரத்துக்குச் சமீபமாக உள்ள மகாமேகத் தோட்டத்தில் புத்தருக்கு ஆலயம் ஒன்று கட்டி யிருப்பதாகவும் சொன்னார். அவர் புத்த சமயத்தில் சேர்ந்தது பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் என்னை இப்படி அடியோடு மறத் திருக்க வேண்டாம்; நான் கூட அந்த முத்து வியாபாரியின் மூலமாக அவருக்கு ஒரு ஓலை எழுதி அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டிய தெல்லாம், அவர் திரும்பி வருவாரா? எப்பொழுது? அல்லது அவர் திரும்பி வரவே மாட்டாரா? எனக்குள்ள சிறிது நம்பிக்கையையும் விட்டு விடலாமா என்பது தான்” என்றாள்.
சந்தகர் சிரித்துக் கொண்டே, “தாங்கள் பேச வேண்டாம். எல்லாவற்றையும் நானே சொல்லுகிறேன் என்று சொன்னேனே? விவரங்களை யெல்லாம் நீங்களே சொல்லி விட்டால் பிறகு நான் என்ன சோதிடன்? போகட்டும். ஏதோ தெரியாமல் சொல்லி விட்டீர்கள். இதோ அவரைப் பற்றி மற்ற விவரங்களைச் சொல்லுகிறேன்” என்று சொல்லி மறுபடியும் சோழியைக் குவித்து அதிலிருந்து இரண்டு பிடி சோழியை எடுத்துக் குலுக்கித் தனித் தனியாக வைத்துப் பிரித்து எண்ணினார். பிறகு, ”அந்த மனிதர் சௌக்கிய மாகத்தான் இருக்கிறார். அவர் புத்தமதத்தில் சேர்ந்து விட் டாரே தவிர இன்னும் துறவியாகி விடவில்லை. துறவியாகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் துறவியாக முடியாது. ஏனென்றால் இதோ பாருங்கள். இதோ இந்தச் சோழியை எண்ணுங்கள். ஏழு. அதாவது சப்தம் கேந்திரம், ஒன்று-சூரியன்; இரண்டு-சந்திரன்; மூன்று- செவ்வாய்; நான்கு- புதன்: ஐந்து-குரு : ஆறு-சுக்கிரன். சுக்கிரன் பலமாக நிற்கிறன். இப்படி சுக்கிரன் பலமாக நின்றால் அவன் காதல் கொண்ட பெண்ணை மறப்பது துர்லபம். ஆமாம், துறவி உடைக்குள் புகுந்தாலும் அந்த நெஞ்சு மங்கையை மறந்து விடாது..”
“மங்கையை மறக்காது என்றால் ! என்னைத்தானே. அல்லது வேறு யாரை யாவது..?” என்று சுதமதி மிகுந்த கவலையோடு கேட்டாள்.
“வேறு யாராவதா? வேறு யார் இருக்கப் போகிறார்கள்? இதோ அதையும் பார்த்துச் சொல்கிறேன்” என்று சொல்லி மறுபடியும் சோழியை யள்ளி வைத்து எண்ணிப் பார்த்து விட்டு, “கவலையே பட வேண்டாம். அது நீங்களேதான். கொஞ்ச நாட்களில் அந்த மனிதர் தாமே திரும்புவார் பாருங்கள். எல்லாம் பராசக்தியின் அருள் இருக்கிறது” என்றார் சந்தகர் ஒரே முடிவாக.
சுதமதி ஆறுதல் அடைந்தவளாக, “சிறிது நாட்களில் என்றால் எத்தனை நாட்களில்?” என்று கேட்டாள்.
சந்தகர் சிறிது அலுப்பு அடைந்தவர் போல், “எவ்வளவு நாட்களா? அதையும் பார்த்துச் சொல்லுகிறேன்” என்று கூறி, சோழியைக் குலுக்கிப் போட்டு எண்ணினார். “மூன்று மாதத்துக்குள் திரும்பிவிட வேண்டிய அறிகுறிகள் தென்படும். ஆனால் ஐந்து மாதத்துக்குள் திரும்பி வந்து விடுவார்” என்றார்.
சுதமதி மன நிம்மதி அடைந்தவளாக, “அப்படியாவது உங்கள் வாக்குப் பலிக்கட்டும்” என்றாள்.
இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த வைகைமாலை, “அக்காளின் மணவாளர் எங்கிருக்கிறார், எப்பொழுது வருவார் என்று சொன்னீர்கள். நான் கேட்டால்கூட ‘அவர்’ எங்கே இருக்கிறார் எப்பொழுது வருவார் என்று உங்களால் சொல்ல முடியாதா?” என்றாள்.
சந்தகர் சிறிது யோசனை செய்துவிட்டு, “சரி பூதுகன் விஷயமாக நான் சோதிடம் பார்ப்பதில்லை யென்று வைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் வேண்டிக் கொள்வதனால் உங்களுக்காக வேண்டுமானால் பார்க்கிறேன்” என்று சொல்லிச் சோழியைக் குலுக்கிப்போட்டு எண்ணிப் பார்த்து விட்டு ஏதோ திகைப்படைந்தவர் போல் யோசனையில் ஆழ்ந்தார்.
அவர் முகத்தில் ஏற்பட்ட கலவரக் குறியை அறிந்த வைகைமாலை பயம் அடைந்தவளாய், “என்ன யோசிக்கிறீர்கள்?”என்று கேட்டாள்.
சந்தகர் தம்மைச் சமாளித்துக் கொண்டவராக, “ஜெகன்மாதா கொஞ்சம் யோசிப்பதற்கு இடம் வைத்து விட்டாள். சில சமயங்களில் சோழிகள் சிக்கலாக வரும். அப்பொழுது கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். பூதுகன் வடதிசை போயிருக்கிறார். சௌக்கியமாகத்தான் இருக்கிறார். கூடிய சீக்கிரம் திரும்பி வந்து விடுவார்” என்று. சொல்லி விட்டுச் சோழிகளை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார். பிறகு, “நான் கொஞ்சம் அவசரமாகச் செல்ல வேண்டும். பிறகு வருகிறேன்” என்று கூறி எழுந்தார்.
“திடீரென்று நீங்கள் இப்படிக் கிளம்பியது விநோதமா யிருக்கிறது. இந்த வீட்டிலேயே நீங்கள் இன்று விருந்து சாப்பிட வேண்டும் என்று எங்கள் ஆவல்” என்றாள் சுதமதி.
“விருந்தா? அதற்கு இது நேரமில்லை. நல்ல சமயத்தில் விருந்து வைக்கச்சொல்லி நான் சாப்பிடுகிறேன். இப்பொழுது நான் அவசரமாகச் செல்ல வேண்டும். அதிருக்கட்டும், சிங்களத்திலிருந்து ஒரு முத்து வியாபாரி வருவதாகச் சொன்னீர்களே, அவன் யார்? அவன் பெயர் என்ன?” என்று கேட்டார் சந்தகர்.
“அவர் மரூர்ப்பாக்கத்தில் கடை வைத்திருக்கிறார். குணசிங்கர் என்பது அவருடைய பெயர்” என்றாள்.
“சரி, உங்களுடைய மணவாளரைச் சீக்கிரம் இங்கு வந்து சேருவதற்குரிய சில விஷயங்களை அவரிடம் சொல்லி அனுப்பினால் நலமாக இருக்கும் என்று தான் கேட்டேன். சரி! நான் போய் வருகிறேன்” என்று சொல்லி எழுந்தார். சுதமதி அவருக்குச் சந்தோஷத்தோடு விடை கொடுத்து அனுப்பினாள். ஆனால் வைகைமாலையின் முகத்தில் மட்டும் ஏதோ சிறிது கலக்கம் நிறைந்திருந்தது. அவள் தயக்கத்தோடும் குழப்பத்தோடும் அவருக்கு விடையளிப்பவள் போல் கைகுவித்து வணக்கம் செய்தாள்.
அவசரமாகப் புறப்பட்ட சந்தகர். வைகைமாலையின் முகத்தில் தோன்றியிருந்த கலவரத்தைக் கண்டதும் சிறிது தயங்கி, “கவலைப்பட வேண்டாம். பூதுகன் வட திசையில் காஞ்சீபுரத்துக்குச் சமீபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அத்திசையில் இருக்கிறார் என்று தெரிந்ததும் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு விட்டது. ஆகையால்தான் இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டேன்” என்று கூறினார்.
வைகைமாலையின் முகத்தில் சிறிது தெளிவு ஏற்பட்டது. அவள், “சந்தோஷம்! அவர் எங்கேனும் சுகமாக இருக்க வேண்டுமென்றுதான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றாள்.
“எல்லாவற்றுக்கும் பராசக்தியின் பேரருள் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார் சந்தகர்.
அவர் விசையால் உந்தப்பட்ட பொம்மைபோல் எங்கு செல்கிறோம் என்று அறியாமல் மரூர்ப்பாக்கத்துக்கு வந்தபோது சுதமதி சொல்லிய குணசிங்கன் என்னும் சிங்கள தேசத்து முத்து வியாபாரியைப் பற்றிய நினைவு அவருக்கு வந்தது. அவர் ஏதோ தீர்மானத்துக்கு வந்தவர்போல் அந்த முத்து வியாபாரியின் கடையை நோக்கி வேகமாக நடந்தார்.
கடைவீதியில் அதிகக் கூட்டம் இல்லை. இந்திர விழா நடந்து மூன்று நாட்களாகி விட்டன. வியாபாரத்தின் விரு விருப்பு கொஞ்சம் தளர்ந்திருந்தது. கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த வியாபாரிகள் தங்களுக்குப் பக்கத்திலுள்ள வியாபாரிகளோடு விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் பேசிப் பொழுதைக் கழிக்க நேரம் கிடைத்தது. குணசிங்கனின் கடையை அடைந்தபோது அவன் பக்கத்துக் கடைக்காரனோடு ஏதோ தர்க்கம் செய்து கொண்டிருந்தான். அவனுடைய சம்பாஷணை சந்தகரின் கவனத்தைக் கவர்ந்து விடவே அங்கிருக்கும் முத்துக் குவியல்களைக் கவனிப்பவர்போல் சம்பாஷணையில் கவனம் செலுத்தலானார்.
சிங்களத்திலிருந்து வந்திருக்கும் குணசிங்கன் புத்த மதத்தில் மிகுந்த பற்றுள்ளவன். புத்த மதத்தைப் பற்றி யாரேனும் தாழ்மையாகப் பேசினால் அவனுக்குப் பொறுக்காது. அதிலும் காவிரிப்பூம் பட்டின புத்த விஹாரத்தில் நடந்த கொலையின் காரணமாக, புத்த மதத்துக்கு விரோதமாக இருந்த பிற மதவாதிகள், அம்மதத்தையே மிகவும் ஏளனமாகப் பேசத் தலைப்பட்டனர். “புத்த பிக்ஷுணிகளும் புத்தபிக்குகளும் வேலியே பயிரை மேய்வதுபோல் தகாத மார்க்கங்களில் இறங்கலாமா?” என்று கேட்டார் பக்கத்துக் கடை வியாபாரி.
“ததாகதர் ஒரு பிக்ஷுகூட இல்லாத இடத்தில் பிக்ஷுணிகள் வசிக்கக்கூடாது என்று சொன்னதற்குக் காரணம் வேறு. பெண்களாகிய பிக்ஷுணிகளின் சீலம் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் பிக்ஷுக்களின் பார்வையில் இருப்பது நல்லது என்ற நோக்கத்தில் அவர் சொன்னார்…” என்றான் குணசிங்கள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சந்தகர் திடீரென்று அவர்கள் சம்பாணையில் கலந்து கொள்கிறவர் போல், “இப்படிப்பட்ட ஊழல்கள் எல்லா மதத்திலும் தான் உள்ளன. போலி வேடம் தரித்தவர்கள் எங்குதான் இல்லை? அவர்களால் ஏற்படும் ஊழல்களை ஒரு உன்னதமான மதத்தின் பேரிலேயோ அந்த மதத்தை ஸ்தாபித்த மகா புருஷர்கள் பேரிலேயோ சாட்டுவது அழகாகாது. இனி இத்தகைய ஊழல்கள் நடைபெறாத வண்ணம் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பளிப்பது தான் நல்லது” என்றார்.
தங்கள் சம்பாஷணைக்கு இடையே புகுந்த மனிதரை முத்து வியாபாரியும் அவன் கடைக்குப் பக்கத்துக் கடையிலுள்ளவனும் வியப்போடு பார்த்தனர். முத்து வியாபாரி குணசிங்கனுக்குச் சந்தகரின் வார்த்தைகள் ஆறுதலளித்தன. விபூதிப்பட்டையும், குங்குமப்பொட்டும் தீர்க்கமாக அணித்து வந்திருக்கும் சந்தகரின் வார்த்தைகள் அந்தப் பக்கத்துக் கடை வியாபாரிக்கு மிகுந்த ஆச்சர்யத்தை யளித்தன. இப்படிப்பட்ட கோலத்தில் இருப்பவர் புத்தமதத்துக்கு ஆதரவாகப் பேசுவது அவனுக்குச் சிறிது ஆச்சர்யத்தை யளித்தது. இருப்பினும் சந்தகரின் தாடியும் அவர் அணிந்து கொண்டிருக்கும் விபூதி முதலான சின்னங்களும் அவரிடம் சிறிது மரியாதை காட்டும் வண்ணமாகத் தானிருந்தன.
அவன் சந்தகரைப் பார்த்து, “நான் ஒரு மதத்தைச் சேர்ந்தவனாயினும், பிற மதத்தை வெறுக்க வேண்டு மென்ற நோக்கம் கொண்டவனல்ல. ஆனாலும் இந்த புத்த மதத்தினரின் போக்கு எனக்கு வரவரப் பிடிக்கவில்லை. உங்களைப் பார்த்தால் வெளியூர் மனிதர் போலத் தோன்றுகிறது. அதிலும் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகவும் காணப்படுகிறீர்கள். உங்களுக்கு இந்த ஊரில் அதிலும் புத்த விஹாரத்தில் நடந்த கொலையைப்பற்றி அதிகம் தெரிந்திருக்காது” என்றான்.
”ஏதோ கொஞ்சம் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த விஹாரத்தில் பிக்ஷுணிக் கோலத்திலிருந்த பெண் தான் இந்தக் கொலைக்குக் காரணமாக இருப்பாளோ என்று பலர் சந்தேகிப்பதாகவும் அறிந்தேன். ஒரு பெண்ணைக் காணோம் என்ற வுடனேயே அவள் மீது பழி சுமத்துவது அவ்வளவு நீதி ஆகாது. ஒரு அழகான பெண் மீது எத்தனையோ பேர்களுக்குக் கண்ணிருக்கும், அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போவதற்காக யாரேனும் முயற்சித்திருக்கலாம். அந்தப் பிக்ஷுணியைக் கடத்திச் செல்ல நினைத்தவர்கள் அந்தப் பிக்ஷுவைக் கொலை செய்திருக்கலாம்….” என்றார் சந்தகர்.
“நீங்கள் சொல்வதும் சரிதான். அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்” என்றான் முத்துக் கடை வியாபாரி.
“பிக்ஷுணி மாத்திரம் காணாமல் போயிருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஒரு பிக்ஷுவும் கண் மறைவாகி விட்டாரென்றால் அதைப் பற்றி நாம் என்ன சொல்வது?” என்றான் பக்கத்துக் கடைக்காரன்.
”ஓகோ! புத்த பிக்ஷுவையும் காணோமா! அப்பொழுது இதில் ஏதோ ரகசியம் இருக்கத்தாள் வேண்டும். அந்த புத்த பிக்ஷு யார்? அவர் எந்த ஊரைச் சேர்த்தவர் என்பது ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார் சந்தகர்.
“கொலையுண்ட பிக்ஷு காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவராம். காணாமல்போன பிக்ஷு தஞ்சையைச் சேர்ந்தவராம். அவர் தஞ்சை மன்னர் சேனாதிபதியாக இருந்து திடீரென்று துறவறத்தில் புகுந்தவராம்” என்றான் முத்து வியாபாரி.
”ஓகோ! கலங்கமாலரையரா! அவர் ஒரு புத்த துறவியாகி விட்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். பாவம்! இப்படிப்பட்ட மனிதர்கள் துறவறத்தை ஏற்பதென்றால் ஏன் அம்மதத்தில் ஊழல் ஏற்படாது?” என்றார் சந்தகர்.
பக்கத்துக் கடை வியாபாரி சந்தகர் தமக்கு அநுகூலமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டே, “அப்படிச் சொல்லுங்கள். அரசாங்க அதிகாரவர்க்கத்தி லுள்ளவர்கள் பயிற்சியில்லாமல் கூட தர்ம விதிகளை அறிந்தவர்கள் போல் துறவறம் மேற்கொண்டு விடலாம். அதைப் பற்றித்தான் அந்த நாஸ்திக வாதம் பேசும் பூதுகன் கூட அடித்துப் பேசி வாதம் செய்தான்” என்றான்.
பூதுகன் என்ற பெயரைக் கேட்டதும் சந்தகர் சிறிது திகைப்படைந்தவராகப் பரபரப்போடு அந்த வியாபாரியின் முகத்தைப் பார்த்தார். அந்தச் சமயம் அந்தக் கடை வாசல் அருகே கம்பீரமாக வந்து நின்ற குதிரையிலிருந்து ஒரு வாலிபன் இறங்கிக் குதிரை கடிவாளவாரை அதன் முதுகின் மேலேயே போட்டு விட்டுக் கடையை நோக்கி வந்தான்.
இருபத்திமூன்றாவது அத்தியாயம்
கங்க நாட்டு இளவரசன்
கடைக்குச் சமீபமாக வந்து நின்ற வாலிபனைக் கண்டதும் வணக்கத்துடனே எழுந்து நின்று வரவேற்றான் அந்த முத்து வியாபாரி குணசிங்கன். அவன் அந்தக் கடையின் உள்ளே நுழைந்தபோது அங்கிருந்த ஆசனம் ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டான்.
அந்த வாலிபன் அங்கு வந்தது, அதுவரையில் அங்கு நடந்த சம்பாஷணைக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலாகி விட்டது. பூதுகனின் பெயரைக் கேட்டதும் சிறிது ஆச்சரியம் அடைந்து நின்ற சந்தகர் மேலும் பூதுகனைப் பற்றி அவர்கள் ஏதேனும் பேசுவார்களோ என்று எதிர்பார்த்ததற்கு மாறாகத் திடீரென்று ஒரு வாலிபன் தோன்றி அவர்கள் சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி வைத்ததை நினைத்துச் சிறிது ஆயாசம் அடைந்தார். இருப்பினும் அவ் வாலிபனின் கவர்ச்சிகரமான உருவமும் அவனுக்கு நடந்த உபசாரமும் அவர் மனத்தில் சிறிது வியப்பை ஏற்படுத்தவே, அவருக்கு அவ் வாலிபனைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்ள வேண்டு மென்ற சிரத்தை ஏற்பட்டு விட்டது.

பக்கத்துக் கடை வியாபாரி அந்த வாலிபன் முத்துக் கடையில் வந்து உட்கார்ந்ததும், இந்தச் சமயத்தில் இடையூறாக உரையாடுவது உசிதமில்லை என்று நினைப்பவன் போல் வேறு திசையில் தன் கவனத்தைச் செலுத்தலானான். வியாபாரம் நடக்கும் ஒரு கடையில் அனாவசியமாக அறிமுகமில்லாத தாம் நிற்பது லக்ஷணமல்ல என்பதைச் சந்தகர் உணர்த்திருந்தார். இருப்பினும் அந்த முத்து வியாபாரியிடம் முக்கியமாக ஏதோ பேச நிலைத்ததாலும், புதிதாக வந்த அந்த வாலிபனைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டதாலும் அந்த இடத்தை விட்டுச் செல்ல மனமில்லாதவராக அங்கு குவிக்கப்பட்டிருந்த முத்துக்களில் தம் கவனத்தைச் செலுத்துகிறவர் போல் நின்றார். குதிரையில் வந்த அந்த அழகிய வாலிபன், “குணசிங்கரே! குடந்தைக்குச் சமீபமாக உள்ள கோடீச்சுவரத்திலிருந்து சந்தகர் என்ற சோதிடர் இவ்வூருக்கு வந்திருக்கிறாராமே? உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
அந்த வாலிபன் தம்மைப் பற்றி விசாரிப்பதைக் கேட்டதும் சந்தகருக்கு ஏற்பட்ட வியப்பும் திகைப்பும் அதிகமாகி விட்டன. இருப்பினும் அவர் அந்தச் சமயம் தம்மை யார் என்று வெளிக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அங்கு குவிக்கப்பட்டிருக்கும் முத்தில் ஒரு கை எடுத்து அவைகளை விரலால் புரட்டிப் புரட்டி பரிசீலனை செய்பவர் போலப் பார்த்து கொண்டிருந்தார்.
“கோடீச்சுவரத்திலிருந்து சோதிடர் வந்திருக்கிறாரா? எனக்குத் தெரியாதே! பக்கத்துக் கடைக்காரரை வேண்டுமானால் விசாரிக்கிறேன்” என்றான் முத்து வியாபாரி.
“வேறு ஒருவரையும் விசாரிக்க வேண்டாம். உமக்குத் தெரியுமா என்று தான் கேட்டேன். உமக்குத் தெரியா விட்டால் பாதகமில்லை. நானே அதை விசாரித்து அறிந்து கொள்கிறேன்” என்றான் அந்த வாலிபன்.
“உங்களுக்கு எதற்காக அந்த சோதிடரைப் பற்றித் தெரிய வேண்டும்?” என்றான் முத்து வியாபாரி.
“நல்ல சோதிடர் என்றால் பார்க்கத் தோன்றாதா? முக்கியமாகச் சில விவரங்கள் அவரை விசாரிக்க வேண்டும்” என்றான் அந்த வாலிபன்.
“உங்களுக்குச் சோதிடத்தில் இவ்வளவு பற்றுதல் இருக்குமென்றுதான் நான் நினைக்கவில்லை. நீங்கள் ஜைன சமயத்தைச் சேர்நதவர்கள். உலகில் மனிதன் தன்னுடைய கர்ம விதியிலிருந்து பேதைமை புத்தியினால் ஏதேதோ செய்து மீண்டு வருவதாக நினைப்பது பற்றி மகாவீரர் எள்ளி நகையாடி இருக்கிறார், ‘நம்முடைய வினையைத் தவத்தால் வெல்வதை விட வேறு வழிகளில் நம் வினையை வென்று விட்டோம்’ என்று நினைப்பது மடமையாகும் என்று அவரே சொல்லி இருக்கிறார். எங்கள் ததாகதரும் ‘பேதை மனிதன் மடமை நிறைந்த சில கொள்கைகளிலிருந்து விலகினால் அந்த அளவுக்கு அவன் மேதையாகிறான்’ என்று சொல்லியிருக்கிறார். இதை யெல்லாம் நான் உங்களுக்குச் சொலலித் தெரிய வேண்டாம். சோதிடர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். தங்கள் வினைப் பயனை மீறி எதுவும் செய்ய முடியாத அவர்கள் பிறருடைய வினைப் பயனைத் தீர்த்துவிடப் போகிறார்களா?” என்று கேட்டான் வியாபாரி.
இதுவரையில் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சந்தசர் சையிலிருந்த முத்துக் களை அலட்சியமாகக் குவியலில் போட்டு, “புத்தர்பிரான், மகாவீரர் இவர்களுடைய அமுத மொழிகளைக் கேட்டு அதன்படியே ஒவ்வொருவரும் நடப்பதானல் இந்த உலகமே சுவர்க்கமாகி விடும். இந்த மனித குலத்தைக் கடைத்தேற்றுவதற்காக அவர்கள் பல அரிய வழிகளை வகுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் மனிதன் அவர்கள் விட்டுப்போன அரிய வழிகளைக் கடைத்தேற்றுகிறவன் போல் தன்னுடைய கயநலத்தை அனுசரித்துத் தனக்கேற்ப ஒரு மாாக்கத்தை அமைத்துக் கொள்கிறான். சோதிட சாஸ்திரம் பொய்யானதல்ல, அவைகளும் சிறந்த ஞானிகளால் உருவாக்கப் பட்டவைதான். இந்த நாட்டில் புராதனமாகத் தோன்றிய வேதத்தின் ஓர் அங்கமாகவே நிற்கிறது சோதிட சாஸ்திரம். தனி மனிதனின் இன்ப துன்பத்துக்காக மாத்திரம் அந்த சாஸ்திரம் ஏற்பட்டதில்லை.
”இந்தப் பரந்த உலகின் கிரக சஞ்சாரங்களின் பலனாக அப்போதைக்கப்போது ஏற்படும் மாறுதலைக் கணக்கெடுத்துக் காட்டுகிறது சோதிட சாஸ்திரம். தமக்கு ஒளியளிக்கும் சூரியனும் சந்திரனும் அலட்சியம் செய்துவிடக் கூடியவர்களல்ல. இவற்றைப்போல் மற்ற கிரகங்களும் அலட்சியம் செய்து விடக்கூடியவை அல்ல. இரவு, பகல், மழை, காற்று, நெருப்பு இவைகளெல்லாம் அந்த கிரக சஞ்சார பலன்களினால் ஏற்பட்டு இந்த உலகத்துக்கு தன்மையையோ தீமையையோ செய்கின்றன என்பது மறைக்க முடியாத உண்மையாகும். இந்த உலகில் சிறு நன்மை தீமைகள் கூட அந்த கிரக ரீதியின் பலனாகத்தான் ஏற்படுகின்றன வென்பதை நல்ல புத்திசாலிகளிடம் போய்க் கேட்டால்தான் சொல்லுவார்கள். விதியை வெல்ல வேண்டு மென்று எண்ணும் மனிதன்கூடத் தெய்வ வலிமையையும் அதற்கு அடங்கியுள்ள கிரசு வலிமையையும் அலட்சியம் செய்வதில்லை. மனிதன் பிறக்கும்போதே இக் கிரகங்களின் குண தோஷத்தோடு சிருஷ்டிக்கப்பட்டவனாகி விடுகிறன் என்பது தான் தம் முன்னோரின் கருத்து. ஆகையால் தம் மன ஆறுதலுக்காக ஒரு சோதிடரைக் காண விரும்பிய ஒருவரிடம் இத்தகைய வார்த்தைகள் சொல்லாதீர்கள்” என்றார்.
சந்தகரின் வார்த்தைகளைக் கேட்ட அவ் வாலிபன் சிறிது முகமலர்ச்சியுற்றவனாக அவரைப் பார்த்துக் கொண்டே, “தாங்கள் சொல்வதுதான் உண்மை. தாங்களும் சோதிட சாஸ்திரத்தில் வல்லவர்களென்று தெரிகிறது”என்றான்.
“எனக்கு அந்த சாஸ்திரத்தில் பயிற்சியும் இல்லை. தாங்கள் சொல்லியபடி கோடீச்சுவரத்துச் சந்தகர் இந்த சாஸ்திரத்தில் மிகுந்த தேர்ச்சியுள்ளவரென்று தான் நானும் கேள்வியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்.
“அப்படியென்றால் அவர் இருக்கும் இடம் தெரியுமா தங்களுக்கு?” என்று கேட்டான் அவ் வாலிபன்.
“தெரியும். என்னோடு வந்தீர்களானால், அவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்.
அந்த வாலிபன் ஆர்வத்தோடு எழுந்து, ”சரி வாருங்கள். போகலாம்” என்று அழைத்தான்.
அந்தச் சமயம் சந்தகர் அந்த முத்து வியாபாரியோடு பேசிச் சில விவரங்கள் அறியத்தான் வந்திருந்தார். ஆயினும் அந்த வாலிபனின் வேண்டுகோளைத் தட்ட முடியாதவராகி அவனோடு புறப்படச் சித்தமானார்.
அந்த வாலிபன் குதிரையிலேறி அமராமல் அதன் லகானைக் கையில் பற்றிய படியே சந்தகரைப் பின் தொடர்ந்து நடந்தான். சிறிது தூரம் சென்றதும் சந்தகர் அந்த வாலிபனைப் பார்த்து, “இப்பொழுது நாம் எங்கு செல்லலாம்?” என்று கேட்டார்.
அவருடைய வார்த்தையைக் கேட்ட அந்த வாலிபன் திகைப்படைந்தவனாக, “எங்கு செல்லலாமென்றல்?…நாம் சோதிடர் சந்தகரைப் பார்க்கத்தானே போகிறேம்?….” என்றான்.
”ஆமாம். நீங்கள் குறிப்பிடும் சந்தகர் நான்தான். அவ்விடத்தில் என்னை யாரென்று காட்டிக் கொள்ளப் பிரியப் படவில்லை. நாம் ஒரு தனியான இடத்திலிருந்து பேசினால் நலம். உங்கள் மனத்தில் உள்ளதைத் தாராளமாகக் கேட்கலாம்-நானும் தாராளமாகப் பதில் சொல்லலாம். அதனால்தான் எங்கே போகலாம் என்று கேட்டேன்” என்றார்.
அந்த வாலிபன் ஆச்சர்யம் அடைத்தவனாக, “உங்களை ஆச்சர்யத்தின்மேல் முதலில் பார்த்தபோதே அப்படித்தான் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் சொல்வதும் சரிதான். நாம் எங்கேனும் தனிமையான இடத்தில் இருந்து பேசுவதுதான் நலம். எங்கள் நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கும் பட்டு வியாபாரி தங்கியிருக்கும் இடத்துக்குப் போவோம். அங்குதான் நான் இந்த ஊருக்கு வந்தால் தங்குவது வழக்கம்” என்றான்.
“சரிதான், தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?” என்றார் சந்தகர்.
“நான் கங்கபாடியைச் சேர்ந்தவன், ஒரு சாதாரணப் போர்வீரன்” என்றான் அவ் வாலிபன்.
“தங்களைப் பார்த்தால் ஒரு சாதாரணப் போர்வீரராக எனக்குத் தோன்றவில்லை. ஒரு சாதாரணப் போர்வீரருக்கு அந்த முத்து வியாபாரி அவ்வளவு மரியாதையும் உபசாரமும் காட்ட வேண்டிய அவசியம் இல்லையல்லவா?” என்றார் சந்தகர்.
”இல்லை. நான் ஒரு சாதாரணப் போர் வீரன்தான். என் பெயர் வீரவிடங்கன், ஒரு முத்து வியாபாரி செய்த உபசாரத்திலிருந்து என்னைப்பற்றித் தாங்கள் வேறு விதமாகத் தீர்மானித்துவிடக் கூடாது. எப்பொழுதுமே வியாபாரிகள் தங்களிடம் அதிகமாக வியாபாரம் செய்பவர்களை மிகவும் குழைவோடு உபாரிப்பார்கள்” என்றான்.
“…எனக்கு அது தெரியும். முத்து வியாபாரியின் உபசாரத்தைக் கொண்டு மாத்திரம் உங்களை நான் தீர்மானித்து விடவில்லை, ஒரு சோதிடரின் முதல் பாடம் தம்மிடம் சோதிடம் கேட்க வந்தவர்களின் சாமுத்திரிகா இலட்சணங்களையும் அறித்து கொள்வது தான். நான் தங்கள் சாமுத்திரிகா இலட்சணங்களை மாத்திரம் அறிந்து கொள்ள வில்லை; தங்கள் குதிரையின் சாமுத்திரிகா இலட்சணங் களையும் அறிந்து கொண்டேன். சில சமயம் ராஜகுமாரர்கள் கூடத் தங்களைப் போர் வீரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறார்கள். நம்முடைய நாட்டில் ராஜபரம்பரைப் பண்பாடே அதுதான், ஒரு சிறந்த போர்வீரனாகத் திகழ்பவன்தான் ஒரு அரசகுமாரனாகவோ அரசனாகவோ திகழ முடியும். நீங்கள் சொல்லியபடி இன்று சாதாரணமான போர்வீரனாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஒரு அரசராகக் கூடிய சாமுத்திரிதா லட்சணங்கள் உங்களிடம் அமைந்திருக்கின்றன” என்றார் சத்தகர்.
வீரவிடங்கள் சிரித்துக் கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்த வண்ணம் நடந்தான். அவன் மிகவும் அடக்கமான குரலில், “கோடீச்சுவரத்துச் சோதிடரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று அவரை நேரில் பார்த்ததிலிருந்து அவர் மிகவும் திறமைசாலிதா னென்பதையும் அறித்து கொண்டேன். தங்கள் வாக்குப் பலிதமடையுமானால் தங்கள் ஆசீர்வாதப்படி எதிர்காலத்தில் நான் ஒரு மன்னனாகத் திகழும் பாக்கியம் பெற்றவனாகிறேன்” என்றான்.
சிறிது நேரத்தில் அவர்கள் மருவூர்ப்பாக்கத்தில் பல தேசத்து வியாபாரிகளும் தங்குவதற்காகச் சிறு சிறு விடுதிகள் அமைக்கப்பட்டிருந்த விடுதி யொன்றுக் குச் சமீபமாக வந்தனர். தன் குதிரையை அங்கு நடப்பட்டிருந்த கொம்பில் பிணைத்துக் கட்டி விட்டுச் சந்தகரை அழைத்துக் கொண்டு விடுதியில் நுழைந்தான் அவ் வாலிபன். அவ்விடுதியில் இருந்த பணியாள் ஒருவன் அவர்களைக் கண்டதும் எழுந்து வணக்கம் செலுத்தினான். வீரவிடங்கன் அந்தப் பணியாளை வெளியே செல்லும்படியாகக் கண்ஜாடை காட்டவும் அவன் சிரங் குனிந்து வணங்கிவிட்டு வெளியே சென்றான்.
அந்த அறையில் அமருவதற்காக அழகான ரத்தினக் கம்பளம் ஒன்று விரிக்கப் பட்டிருந்தது. சுவரோரமாகப் பட்டு வியாபாரி கொண்டு வந்து நிறைத்திருக்கும் பட்டு, நூல், துணி முதலான வைகள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட் டிருந்தன, இவை தவிர அவ்வறையில் விசேஷமாக எதுவும் இல்லையென்று சொல்லலாம்.
வீரவிடங்கன் அங்கிருந்த இரண்டு திண்டுகளை எடுத்துப் போட்டு அதில் சாய்ந்துகொண்டு சந்தகரையும் உட்காரும்படி வேண்டிக் கொண்டான்.
சந்தகர் அவன் எதிரில் உட்கார்ந்து தன் எக்கில் செருகியிருந்த சோழிப் பையை எடுத்து எதிரே வைத்துக்கொண்டார், பிறகு, “சோதிடர்களிடம் எப்பொழுதுமே பொய் சொல்லக் கூடாது. சோதிடம் கேட்க வருகிறவர்கள் பொய்யோடு வந்தால் சோதிடர்கள் சொல்லும் பலனும் பொய்யாகத்தான் இருக்கும். வைத்தியர்களிடம் எப்படி உண்மையான உடல் நிலையைச் சொல்லுகிறோமோ அப்படித்தான் சோதிடர்களிடமும் உண்மையான நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். உங்களை ஒரு ராஜகுமாரனென்று சொல்லும்போது அதை நீங்கள் இல்லையென்று மறுத்தால் அப்பொழுது நான் பொய்யனாகி விடுகிறேன். அந்த சாஸ்திரமே பொய்யாகிவிடுகிறது. அதை நான் எதற்காகச் சொல்லுகிறே னென்றால் அந்த சாஸ்திரத்தை உண்மை யென்று மறித்துத் தாங்கள் என்னிடம் சோதிடம் கேட்க வருகிறீர்கள். அப்படி இருக்கும்போது நீங்களும் உண்மையோடு வந்தால்தான் அந்த சாஸ்திரமும் உண்மையானதாகும். இப்பொழுது நீங்கள் உங்கள் சந்தேகத்தைக் கேட்பதற்கு முன்னால் உங்கள் உண்மை நிலையை எனக்குச் சொல்லிவிட வேண்டும்” என்றார் சந்தகர்.
வீரவிடங்கன் தயங்கியபடியே ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். சந்தகர் கேள்வி அவனுக்கு ஒருவிதத்தில் சங்கடத்தை ஏற்படுத்தியது. தான் அவரிடம் சோதிடம் கேட் போய் இவ்வளவு விபரீதமான முறையில் அகப்பட்டுக் கொள்ள நேரும் என்று அவன் நினைக்கவில்லை. என்ன செய்வது? இவ்வளவுக்குப் பின்னும் உண்மையை மறைப்பது எப்படி? அவன் சிரித்துக் கொண்டே. “நீங்கள் மிகவும் தந்திரக்காரர். எப்படியோ என்னிடமிருந்து உண்மையைக் கறந்து விட்டீர்களே, நான் கங்க தேசத்து இளவரசன். என் பெயர் பிருதிவீபதி. என்னை இக் காவிரிப் பூம் பட்டினத்தில் இன்னாரென்று சிலருக்குத்தான் தெரியும். அனேகருக்கு என்னை இன்னாரென்று தெரியாது. சில காரணங்களால் என்னுடைய பெயரை நான் மறைக்கத்தான் வேண்டியிருக்கிறது” என்றான்.
“இருக்கலாம். சிவ சமயங்களில் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதோ பாருங்கள். இந்த முத்து வியாபாரி எதிரில் நான்தான் கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகர் என்று காட்டிக்கொண்டேனா? இப்படித்தான் என்னுடைய நண்பன் பூதுகனும் அனேக இடங்களில் தன்னைக் காட்டிக் கொள்ளாமலேயே நடந்து கொள்வான்” என்றார் சந்தகர்.
பூதுகன் என்ற பெயரைக் கேட்டதும் வீரவிடங்கன் என்ற பெயரில் மறைந்திருந்த பிருதிவீபதி சிறிது ஆச்சர்யம் அடைந்தவனாக. “பூதுகரா! அவர் உங்களுடைய நண்பரா!..” என்றான்.
“ஆமாம். மிகவும் அந்தரங்கமான நண்பன். அவனை உங்களுக்குத் தெரியுமா?” என்றார் சந்தகர்.
”நன்றாகத் தெரியும், நான் அவரோடு அதிகமாகப் பழகியதில்லை. பழகிய சிறிது நேரத்தில் எனக்கு மிகவும் அந்தரங்கமான நண்பராகி விட்டார். அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பார்க்க வேண்டுமென்ற துடிப்புத்தான் எனக்கு” என்றான் அவ் வாலிபன்.
“அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் தான் நான் இந்தக் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்தேன். அவன் இங்கு இல்லையென்று நன்றாகத் தெரிந்து விட்டது. ஒரு வேளை காஞ்சீபுரத்தில் இருக்கலாமோ என்ற சந்தேகம். நான் கூடக் காஞ்சீபுரம் போகலாமென்று நினைக்கிறேன். உங்களுக்கும் அவனுக்கும் நட்பு ஏற்பட்டது எப்படி?” என்றார்.
“எல்லாம் தெய்வாதீனமாகத்தான் ஏற்பட்டது. அதைச் சொன்னால்தான் புரியும். ஒருநாள் அவர் கடற்கரையில் ஒரு பௌத்த பிக்ஷுவோடு மல்யுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அவர்களின் சண்டைக்கு நடுவிலே நான் புகுந்து சமாதானம் செய்து அந்த பௌத்த பிக்ஷவை உயிரோடு விட்டு விட ஏற்பாடு செய்தேன். அவர் மல்யுத்தம் செய்வதில் இவ்வளவு சமர்த்தராக, இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.”
“அவன் இந்த விஷயத்தில் மாத்திரம் தீரன் என்று சொல்ல முடியாது. உடல் வலுவிலும் புத்திவலுவிலும் மிகச் சிறந்தவன். உண்மையிலேயே க்ஷத்திரியனாகப் பிறக்க வேண்டிய அவன் அந்தணனாகப் பிறந்து விட்டான்” என்றார் சந்தகர்.
”அவர் அந்தணரா? நாஸ்திக வாதம் செய்வதில் தேர்ந்தவராக இருக்கிறாரே” என்றான் பிருதிவீபதி.
”ஆம்; அதுதான் அவனிடம் உள்ள பெரியகுறை. அதிலும் அவனிடம் உள்ள சில நற்குணங்கள் தான் நாம் போற்றக் கூடியவை. தெய்வம் இல்லையென்று அவன் சொன்னாலும் சத்தியத்தையும் உண்மையையும் தெய்வமாகவே போற்றிட் பாதுகாப்பான். நல்ல தியாக புத்தியுடையவன். கெடுதல்களைக் கண்டால் மனம் வெறுப்பவன். இத்தகைய உத்தம குணமுள்ள அவன் பெரிய நாஸ்திகவாதியா யிருந்தாலும் நம்முடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரியவனாகிறான்” என்று கூறினார் சந்தகர்.
”ஆம்! நான் அவரோடு பழகியது குறைவாக இருந்தாலும் சத்தியசந்தர் என்றும் நேர்மையான குணம் படைத்தவரென்றும் தீமையைக் கண்டு சகிக்காதவரென்றும் தெரிந்துகொண்டேன். அத்தகைய மனிதரின் நட்பு கிடைத்தது பெரும் பாக்கியம்தான் என்று நான் கருதுகிறேன். நான் மிகக் குழப்பமாக இருக்கும் தருணம் எனக்கொரு அரிய நண்பரின் உதவி இல்லாமல் போய் விட்டதே என்றுதான் வருந்துகிறேன். விதி தான் சரியான சந்தர்ப்பத்தில் என்னையும் அவரையும் பிரித்திருக்க வேண்டும்” என்றான் பிருதிவீபதி.
”நீங்கள் சொல்வதி லிருந்து உங்களுடைய நிலையில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாக எனக்குத் தெரிகிறது. ஏதோ உங்கள் மனத்தை வருத்துகிறது. உங்களைப் போன்ற அரசகுமாரர்களுக்கு என்ன மன விசாரம் இருக்குமென்று தான் எனக்குத் தெரிய வில்லை! ஏதோ விதி வந்துதான் உங்களையும் பூதுசனையும் நல்ல சமயத்தில் பிரித்ததாக வருத்தப்படுகிறீர்கள். அப்படி என்ன நடந்தது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் சந்தகர்.
“சில நாட்களுக்கு முன் சம்பாதி வனபுத்த சேதியத்தில் ஒரு புத்தபீக்ஷு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கலா மென்று நினைக்கிறேன்.”
“தெரியும், அந்தக் கொலைக்கும் உங்களுக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?”
“எனக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை. ஆனால் வேருெருவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் உண்டென்று பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் சந்தேகப்படும் பேர்வழியும் தலைமறைவாக இருக்கிறார். அதைப் பற்றி உங்களிடம் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் ஆவல்” என்றான்.
சந்தகர் சிரித்துக் கொண்டே, ”அந்தக் கொலைக்குக் காரணம் ஒரு பெண்ணக இருக்கும் என்று சந்தேகிக்கிறார்களா?'” என்று கேட்டார்.
”ஆமாம். ஆனால் அந்தப் பெண் செய்திருப்பாள் என்று நான் நம்பவில்லை. பூதுகரும் நம்பவில்லை.”
“ஓகோ ! பூதுகனுக்கும் அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியுமா?” என்று கேட்டார் சந்தகர்.
“தெரியும், அந்தப் பெண் பூதுகனின் காதலியாகிய வைகைமாலைக்கு அந்தரங்கமான தோழி. அந்தப் பெண்ணின் நல்ல குணங்கள் அவருக்கு நன்றாகத் தெரியும். அதோடு, அவர் புத்த பிக்ஷுவோடு சண்டை செய்யும்போது நான் அந்தப் பெண்ணோடு தனிமையில் அந்தக் கடற்கரையில் இருந்தேன்..” என்றான்.
“சரிதான்- நீங்கள் அந்தப் பெண்ணோடு தனிமையில் கடற்கரையில் இருந்தீர்களா? ஒரு புத்த பிக்ஷுணி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பெண்-அழகு-ஹும்— அப்படியென்றால், அந்தப் பெண்ணுக்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.”
”ஆமாம்! அந்தப் பெண்ணைதான் காதலிக்கிறேன் ! அவளும் என்னிடம் அன்பு வைத்துள்ளாள். ஆனால்…” என்று தயங்கினான்.
“ஆனால் அவள் இருந்த நிலையும் அவளுக்குள்ள கட்டுப்பாடுகளும் அதற்கு இடந்தரவில்லை போலிருக்கிறது. பாவம்! ஒரு துறவு நிலையிலுள்ள ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் சிறிது சங்கடம் தான்” என்றார் சந்தகர்,
“தாங்கள் மிகவும் சாமர்த்தியசாலி. தாங்கள் இவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருப்பீர்களென்று நான் நினைக்கவில்லை ”’ என்றான் பிருதிவீபதி.
“இவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்று தாங்கள் மெச்சிக் கொள்ளலாம். ஆனால் அதற்குமேல் எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லித் தான் இனிமேல் தெரிய வேண்டும்” என்றார் சந்தகர்.
“தாங்கள் பெரிய சோதிடதான் ராயிற்றே?” என்று சொல்லி அவர் முகத்தைப் பார்த்தான்.
“பெரிய சோதிடன்தான். ஆனால் பெரிய சோதிடர்கள் கூட இந்தக் கலியுகத்தில் கிரகங்கள் தங்கள் கணக்கை ஏமாற்றி விடும் என்பதை யறிந்து தொழிலை விட்டு விட்டார்கள். திரேதா, துவாபர யுகங்களில்தான் கிரகங்கள் மனிதனின் கணக்குக்குக் கட்டுப்பட்ட வைகளாயிருந்தன. சத்தியமும், தருமமும் அழிந்த இந்தக் கலியுகத்தில் அவைகள் மனிதருக்குக் கட்டுப் பட்டவையல்ல. அதற்கொரு கதை உண்டு!'” என்றார் சந்தகர்.
இருப்பதினாலாவது அத்தியாயம்
சாந்தியிடையே சலசலப்பு
சந்தகர் கதை சொல்ல ஆரம்பித்தார். “கலியுக ஆரம்பத்தில் சோமசர்மா என்று ஒரு அந்தணன் இருந்தான். அவன் சோதிட சாஸ்திரத்தில் மிகவும் தேர்ந்தவன். அவன் வாக்கு பலித்ததினால் நல்ல வருமானம் இருந்தும் நெடுநாள் வரையில் குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது. அவன் பல வருஷங்கள் தவம் இருந்த பிறகு அவனுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஒன்றுமில்லாதவனுக்கு ஒரு பெண் குழந்தை யாவது பிறந்ததே யென்று அந்தக் குழந்தையைச் செல்வமாக வளர்த்து வந்தான். அந்தப் பெண்ணுக்கு விவாகம் செய்து வைத்தான்.
ஆனால் அவள் மங்கைப் பருவம் பெற்ற நேரம் கெட்ட நேரமாக இருந்ததால் அவள் புருஷனோடு ஓர் இரவு தான் வாழ்க்கை நடத்த முடியுமென்றும், அன்றே அவள் புருஷன் இறந்து, அவள் விதவையாகி விடுவாளென்றும் சோதிட சாஸ்திரத்தின் மூலம் அறிந்தான். அன்று அந்தப் பெண்ணின் கணவன் மனைவியோடு இன்பமாகக் காலங் கழிக்க மாமனார் வீட்டுக்கு வந்திருந்தான். சோதிடனாகிய அந்த அந்தணனுக்கு மனத்தில் திகில் ஏற்பட்டது. அவன் தன் பெண்ணைக் கூப்பிட்டு அன்று அவளுக்கு ஏற்பட இருக்கும் விதியைப் பற்றிச் சொல்லி அழுதான். அந்தப் பெண் மிகவும் மன வருத்தம் அடைந்தவளாக எப்படியாவது தன் கணவனை எமன் வாயிலிருந்து காப்பாற்றிவிட முடியாதா என்று எண்ணினாள்.

அன்று இரவு நடுநிசியில் அவள் கணவன் ஏரிக்கரைக்குச் சென்று உலவி விட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினான். அந்தப் பெண் மனத்தில் பயங்கொண்டவளாக ஏரிக்கரைக்குப் போகவேண்டா மென்று தடுத்தாள். ஆனால் அவள் சொல்லைக் கேளாது அவன் புறப்பட்டு விட்டான். கணவனின் உயிரைப் பாதுகாக்க நினைத்த அந்தப் பெண்ணும் அவனுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து போய் ஏரிக்கரையின் ஒரு மரத்தின் பின்னால் நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் தொடங்கினாள். அந்த வாலிபன் தாகத்தினால் தண்ணீர் அருந்த ஏரியில் இறங்கிய சமயம் முதலை ஒன்று வந்து அவன் கால்களைக் கவ்விக் கொண்டது. அதைப் பார்த்த அந்த வாலிபன் மிகவும் நயமான மொழியில், ‘முதலையே! உன்னுடைய வயிற்றுக்கு ஆகாரமாக்கிக் கொள்ள வேண்டுமென்று என்னைப் பிடித்தாய், அதில் பிசகொன்று மில்லை. தருமப்படி உனக்கு நான் ஆகாரமாக வேண்டியவன்தான். ஆனால் உனக்குச் சிறிது இரக்க மிருக்குமானால் என்னுடைய வேண்டுகோளை மட்டும் சற்றுக் கேளு. நான் புதிதாக மணமானவன், என்னுடைய மனைவியோடு ஒரு சில மணி நேரம் கூட நான் இன்பமாகக் கழிக்கவில்லை. அவளிடம் ஏரிக்கரை வரையில் போய் வருகிறேன் என்று சொல்லி வந்தவன் இங்கு உன் பிடியில் அகப்பட்டுக் கொண்டு விட்டேன். ஆதலால் நீ என்னைக் கொஞ்சம் விட்டால் நாள் போய் என் மனைவியிடம் சொல்லி அவளுக்கும் சிறிது ஆறுதல் சொல்லிவிட்டு உன்னிடம் திரும்பி வந்து விடுகிறேன். மறுபடியும் நீ என்னை ஆகாரமாக்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்.
முதலை சிரித்தது, “அடேடே! இப்படிப்பட்ட தரும குணம் உள்ளவனா நீ. முதலை வாயில் சிக்கிய எந்த மனிதனும் தப்பித்துக் கொள்ள நினைப்பானே தவிர அதற்கு ஆகாரமாக நினைக்க மாட் டான்” என்றது முதலை.
“என்னை நீ தவறாக நினைக்கிறாய். நான் வாக்குத் தவறமாட்டேன். நான் அப்படி வாக்குத் தவறினால் நீ எத்தகைய கொடூரமான பாவத்தை அனுபவிக்க வேண்டுமென்று சொல்கிறாயோ, நான் அத்தகைய பாபத்தை அனுபவிக்கக் கடவேன்” என்றான் அவ்வாலிபன்.
அந்த முதலை யோசித்துச் சிறிது மன இரக்கம் கொண்டு, “சரி! உன் வார்த்தைகளை நம்பி உன்னை விட்டு விடுகிறேன். நீ சொல்லியபடி திரும்பி விட்டால் எவன் ஒருவன் சாப்பிடும் போதே எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை அணைக்கிருனோ, அவன் அடைய வேண்டிய பாபத்தை நீ அடைவாய்” என்று கூறியது. அந்த வாலிபனும் முதலையின் வார்த்தையை அங்கீகரித்துச் சீக்கிரமே திரும்புவதாகச் சொன்னதால் அதுவும் அவனை விட்டு விட்டது. மரத்தடியில் ஒளிந்து கொண்டிருந்த அவன் மனைவி அங்கு நடந்த விஷயங்களை அறிந்து அவனுக்கு முன்னதாகவே வீடு சென்று அவன் வருகைக்காகக் காத்திருந்தாள். அந்த அந்தண வாலிபன் நேராகத் தன் மனைவி யிடம் சென்று அவளுக்கு ஆறுதல் கூறி விட்டு முதலைக்குக் கொடுத்த வாக்குறுதியைச் சொல்லி அதை நிறைவேற்ற ஏரிக்கரைக்குக் கிளம்பினான்.
அவன் மனைவி அவன் செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் தனது வேண்டுகோளுக்கு இணங்கி, இருண்ட இந்த நேரத்தில் ஒரு விளக்கையும் எடுத்துச் செல்லும்படி வேண்டினாள், அவனும் அதற்கு இணங்கி ஒரு விளக்கையும் எடுத்துக் கொண்டு ஏரிக்கரைக்குச் சென்றான். அவன் மனைவி ஒரு சிறு கூடையை எடுத்துக் கொண்டு அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து முன்பு ஒளித்திருந்த மரத்துக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள். அந்த வாலிபன் மறுபடியும் ஏரியில் இறங்கித் தன்னைப் பிடித்து உண்ணும்படி முதலையை வேண்டிக் கொண்டான். அந்த முதலையும் அவள் வாக்குறுதி தவறாமல் வந்ததை யெண்ணி வியந்து அவனுடைய கால்களைக் கௌவி மெதுவாக விழுங்கத் தொடங்கியது. அந்த வாலிபன் கரையில் வைத்திருந்த தீபம் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. முதலை அந்த வாலிபனை விழுங்க நினைக்கும் தருணம் அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த கூடையைத் தீபத்தின்மீது கவிழ்த்தாள். கரையிலிருந்த விளக்கு அணையவும் வாலிபனின் காலைப் பிடித்திருந்த முதலை சட்டென்று அவன் கால்களை விட்டு விட்டது. இதைக் கண்டதும் அந்த வாலிபன் ஆச்சரியமடைந்தவனாய், “முதலையே! ஏன் என் காலை விட்டு விட்டாய்?” என்று கேட்டான்.
“அப்பா! உனக்கொரு தருமம் எனக்கொரு தருமம் இல்லை. நான் உன்னை ஆகாரமாகச் சாப்பிடும் போது திடீரென்று இந்த விளக்கு அணைந்தது. அதனால் ஏற்படும் பாவத்தை நான் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்? அதனால்தான் உன்னைப் புசிக்க விரும்ப வில்லை. விட்டு விட்டேன். நீ போகலாம்” என்றது. வாலிபன் எவ்வளவோ வேண்டிக் கொண்டும் முதலை அவனை ஆகாரமாக்கிக் கொள்ள மறுத்தது. வாலிபன் என்ன செய்வான்? மறுபடியும் வீட்டை அடைந்தான். ஏரிக்கரையிலிருந்து முன்னதாகவே வந்திருந்த மனைவி அவனைச் சந்தோஷத்தோடு வரவேற்றாள். அவன் நடத்த விவரங்களை யெல்லாம் மனைவியிடம் சொன்னான். அவன் மனைவியும் அவன் உயிரை மீட்ட தந்திரத்தை அவனிடம் சொன்னாள். இருவரும் சந்தோஷமாக இரவைக் கழித்தனர். தன்னுடைய மாப்பிள்ளை சோதிட சாஸ்திரப்படி. இரவு இறந்திருப்பான் என்று முடிவு கட்டிய அந்தணன் பிரேதத்தை எடுக்க வேண்டிய சாமக்கிரியைகளை யெல்லாம் செய்துவைத்திருந்தான். ஆனால் அவன் எதிர்பாராத வண்ணம் அவனுடைய மகளும் மருமகனும் சந்தோஷத்தோடு வந்து அவனை வணங்கவே அவன் வியப்பு அடைந்தான். அவனுடைய மகள் விதியை எப்படி வென்றாள் என்பதைச் சொன்னாள். உடனே அவன் தன் தவறுதலை உணர்ந்து இந்தக் கலிகாலத்தில் சோதிடம் பலிக்காது என்று முடிவு கட்டிச் சோதிட சம்பந்தமான சுவடி முதலியவைகளையெல்லாம் மருமகனுக்காகக் கட்டி வைத்திருந்த பாடையில் வைத்துக் கட்டிக் கொண்டு போய்க் கொளுத்தினான்” என்று சந்தகர் சொல்லி, “ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சோதிடம் கேட்டுக் காலத்தை வீணாக்குவதைவிட முயற்சியின் மூலம் உங்கள் மனத்துக்கு ஆறுதல் தேடிக் கொள்ளும் வழியைக் கவனிக்க வேண்டியதுதான். நீங்கள் என்ன உதவி வேண்டினாலும் அதைச் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறேன்!” என்றார்.
பிருதிவீபதி சிரித்துக் கொண்டே, “நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரராக இருப்பீர்கள் என்று நினைக்கவேயில்லை. நான் முதலில் மாலவல்லி எங்கே இருக்கிறாள் என்பதைத் தெரித்து கொள்ள வேண்டும். அதோடு அவள் குற்றமற்றவள் என்பதை உலகத்துக்கு நிரூபிக்க வேண்டும்” என்றான்.
“ஓகோ! உங்கள் காதலியின் பெயர் மாலவல்லியோ? மிகவும் அழகான பெயர். நீங்கள் கொஞ்சம்கூடக் கவலைப் பட வேண்டாம். நான் கூப்பிட்ட இடத்துக்கு என்னோடு வாருங்கள். போதும். உங்கள் மாலவல்லியைத் தேடித் தருகிறேன்” என்றார் சந்தகர்.
“நான் உங்களோடு வேண்டுமானலும் வருகிறேன். ஆனால் நான்தான் கங்க தேசத்து இளவரசன் பிருதிவீபதி என்று ஒருவருக்கும் தெரியக் கூடாது. உங்கள் நண்பர் பூதுகரைச் சந்திக்க நேர்ந்தால் கூட அவரிடம் நீங்கள் சொல்லிவிடக் கூடாது” என்றான்.
“நான் சொல்ல மாட்டேன். ஆனால் பிறர் சொல்லாமலேயே எல்லாவற்றை யும் தெரிந்து கொள்ளும் சாமர்த்தியம் பூதுகனுக்கு உண்டு என்பதை மாத்திரம் நீங்கள் மறந்து போய்விட வேண்டாம்” என்றார் சந்தகர்.
பூம்புகாரிலிருந்து காஞ்சியை நோக்கிக் கங்கதேசத்து இளவரசன் பிருதிலிபதியும் கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகரும் இரண் குதிரைகளின் மீது ஏறி அமர்த்து பிரயாணம் செய்தனர். வழியில் இருவரும் ஏதோ பேசிக் கொண்டே சென்றனர். பேச்சுவாக்கில் பிருதிவீபதி, சத்தகரிடம், “உங்களுடைய அழைப்பின்பேரில் நான் காஞ்சிக்குப் புறப்பட்டேனே தவிர போவதில் எவ்வளவோ சங்கடங்கள் இருக்கின்றன. காஞ்சியில் எல்லோரையும் எனக்குத் தெரியும். சுங்க தேசத்து அரசகுமாரனாகிய நான் அரண்மனையில் விருந்தாளியாக இருக்க நேரும். நம்முடைய இஷ்டம்போல் பல இடங்களையும் சென்று பார்ப்பதில் சிறிது கஷ்டம் ஏற்படும் என்று நினைக்கிறேன்” என்றான்.
“நீங்கள் அரண்மனை விருந்தினராக இருப்பதாலும் சில சாதகங்கள் இருக் கின்றன. அரசாங்கத்தில் பூதுகனைப் பற்றிய உண்மைகள் தெளிவானாலும் ஆகலாம். நாம் இருவரும் ஒரு குறிப் பிட்ட இடத்தில் சந்திப்பதாக வைத்துக் கொண்டாள் நான் வெளியே ஊரில் சுற்றுவேன், நீங்கள் அரண்மனையி லிருந்தே உளவு தெரிந்துகொள்ளலாம். இப்படிச்செய்வதினால் காஞ்சியில் பூதுகன் இருக்குமிடம், அவன் இருக்கும் நிலை. உங்கள் காதலி மாலவல்லி இருக்கும் இடம் பற்றிய விவரங்களெல்லாம் தெரியலாம்” என்றன்.
“நீங்கள் சொல்வதும் சரிதான். முக்கியமாக மாலவல்லியைப் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் காஞ்சிக்குச் செல்ல வேண்டு மென்று எனக்குத் தோன்றியதுண்டு. ஏனென்றால் சம்பாதி வனத்துப் புத்த விஹாரத்தில் கொல்லப்பட்ட ரவிதாசன் என்பவன் காஞ்சியைச் சேர்ந்தவன். மாலவல்லியும் காஞ்சியைச் சேர்ந்தவள்.அவள் அரண்மனையில் முக்கியமான பாடகியாக இருந்தாள்.”
“அப்படியா! பாவம்! அப்படிப் பட்டவள் ஏன் பிக்ஷுணிக் கோலம் பூண வேண்டும்? ஏன் காஞ்சியை விட்டுக் காவிரிப்பூம் பட்டினம் வரவேண்டும்?'” என்று கேட்டார் சந்தகர்.
“அதற்கு எவ்வளவோ காரணங்கள் உண்டு, முக்கியமாக அவளுடைய பேரழகும் குணமும்தான் அவள் வாழ்க்கைக்கு இடையூறாக முளைத்தன. எந்நேரத்திலும் அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆடம்பர வாழ்க்கையிலிருந்து அவள் விடுதலை பெற நினைத்துத்தான் துறவற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாள். இன்று வரையில் அவளுடைய மனம் இன்ப சுகங்களைக் கருதாமல் துறவற மார்க்கத்தில் தான் மிகவும் பற்றுதல் உள்ளதாக இருக்கிறது” என்றான்.
“அவள் மனம் துறவற மார்க்கத்தில் பற்றுள்ளதாக இருக்கிறதென்றால் ஏன் உங்களோடு மாத்திரம் ரகசியத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார் சந்தகர்.
சந்தகர் இப்படியொரு கேள்வி கேட்பாரென்று பிருதிவீபதி எதிர்பார்த்ததுதான். அதற்குப் பதில் சொல்லவும் அவன் சித்தமாக இருந்தான். ”எனக்கும் அவளுக்கும் ரகசியத் தொடர்பு உண்டு என்பது உண்மையே, அவள் துறவு மார்க்கத்தில் புகுவதற்கு முன்னால் அவள் என்மீது அளவற்ற ஆசை வைத்திருந்தாள். அவள் ஒரு புத்த பீக்ஷுணியானபின் என்மீது வைத்துள்ள ஆசையையும் தியாகம் செய்யச் சித்தமாயிருக்கிறாள் என்ற ரகசியம் எனக்குத் தான் தெரியும். அவள் தன் ஆசையை எப்படியோ துறந்து விட்டாள். நான் அவள் மீது வைத்திருந்த மோகத்தைத் தான் என்னால் துறக்க முடியவில்லை” என்று கூறினான்.
சந்தகர் சிரித்துக் கொண்டே, “வேடிக்கையாயிருக்கிறதே? முதலில் உங்களிடம் ஆசை வைத்த பெண்ணுக்கு ஏன் திடீ ரென்று உலக வாழ்வில் ஒரு வெறுப்பு ஏற்பட்டு உங்களுடைய அன்பையும் நிராகரிக்கும் விபரீத நிலை வரவேண்டும்?” என்று கேட்டார்.
”இந்த உலகத்தில் அன்பு, அழகு இவைகளுக்கு எதிரிடையாக இருக்கிறது, குலம், அந்தஸ்து, மதம் இவைகள், அவள் ஒரு சாதாரண அரண்மனைக் கணிகை. நான் ஒரு அரச குமாரன், அவள் ஒரு மதத்தைச் சேர்ந்தவன், நான் ஒரு மதத்தைச் சேர்ந்தவன். அவளிடம். நான் ஒரு அரசகுமாரன் என்ற அதிகாரத்தில் அவளை என் மோக விளையாட்டுக் கருவிபோல் உபயோகித்துக் கொள்ளலாமே தவிர அவளை என்னுடைய மனைவி என்ற நிலையில் உயர்த்திவிட முடியாது. அவளை என்னுடைய மனைவி என்ற நிலை யில் உயர்த்திவிட நான் நினைத்தாலும் என்னுடைய அரச பரம்பரைச் சட்ட திட்டங்கள் அதற்கு இடம்அளிக்கவில்லை. இதை, உணர்த்து கொண்ட அவள் மனைவியாகும் அருகதையற்ற நிலையில் என்னோடு தொடர்பு வைத்துக் கொள்வதை அறுத்துக் கொள்ள நினைத்தாள். ஆனால் என் மனம் அவளை எளிதாக விட்டுவிடுவதாகத் துணியவில்லை. என்னுடைய தகப்பனார் இருக்கும் வரையில் என்னுடைய மனைவியின் அந்தஸ்தில் அவளை வைப்பது கடினம்தான். ஆனால் அவர் இறந்தபிறகு என் செய்கை யாருக்குப் பிடிக்கா விட்டாலும், நான் துணிந்து அவளை மனைவியாக்கிக் கொண்டு விடலாம் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை உத்தேசித்து அவளுக்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்லி அவள் மனத்தைத் திருப்பலாமென்று நினைத்தேன். அவள் புத்த சேதியத்திலிருந்து திடீரென்று காணாமல் போனதிலிருந்து அவளுக்கும் அங்கு முக்கியமாக என்னுடைய அன்புப் பிணைப்பி லிருந்து விடுபட்டு எங்கேனும் தலை மறைவாக வாழ எண்ணியே விட்டாள் என்றுதான் நான் நினைக்கிறேன். முக்கியமாசு, இதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. பல்லவ சக்கரவர்த்தி நந்திவர்மனின் நட்பும் உறவும் எங்களுக்கு இருந்து கொண்டு வருகிறது. அவருடைய ஒன்றுவிட்ட சகோதரனான சிம்மவர்மன் தன்னுடைய ஒரே சகோதரியாகிய அமுதவல்லி என்பவளை எனக்கு மனைவியாக்கி விட வேண்டுமென நினைக்கி்றான், பல்லவ மன்னரும் அவ் விஷயத்தில் ஆர்வம் காட்டி என் தந்தையாரின் சம்மதத்தைப் பெற்றிருக்கிறர். இந் நிலையில் நான் வேறொரு பெண்ணிடம் அதிலும் அரண்மனை ஊழியம் செய்யும் ஒரு கணிகையிடம் காதல் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தால் என் தகப்பனார் மிகவும் விபரீதமாகக் கோபப்படுவார், அதோடு பல்லவ சக்கரவர்த்தியின் கோபத்தையும் நாங்கள் சம்பாதித்துக் கொள்ள நேரும். இதையெல்லாம். அறிந்த மாலவல்லி என்னுடைய நலனைக் கருதி என் மீது வைத்த அன்பைத் துறக்கச் சித்தமாகி விட்டாள். அதோடு சாதாரண அரண்மனைக் கணிகையாயிருந்த அவளைத் தன்னுடைய காம வலையில் சிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தான் சிம்மவர்மன், இத்தகைய பேராபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தினாலும் அவள் துறவறத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. அதற்கு புத்த சமயம்தான் இடம் அளித்தது” என்று சொல்லி நிறுத்தினான் பிருதிவீபதி.
“நீங்கள் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உன்னதமான மதத்தை உலகில் நிறுவக் காரணமா யிருந்த மகாவீரரின் முக்கியமான நோக்கம். இவ்வுலகில் சாதி மதங்களை அகற்றி ஜீவன்களை யெல்லாம், சமம் என்று கருத வேண்டும் என்பதுதான். அந்த மகா புருஷரின் சித்தாந்தங்களைக் கைக் கொண்டவர்கள் என்று சொல்லும் உம் தந்தையைப் போன்றவர்கள் இவ் விஷயத்தில் சாதி, சமய அந்தஸ்துகளைப் பார்ப்பதுதான் மிகவும் விநோதமாயிருக்கிறது” என்றார் சந்தகர்.
“அதை எண்ணித்தான் நானும் வருந்துகிறேன். பொதுவாக நினைக்கப் போனால் சமயம் என்ற பிரிவுகளே இல்லாமல் எல்லாச் சமயப் பெரியோர்களின் நல்ல உபதேசங்களையும் பின்பற்றி உலகில் மனிதனாக வாழ வேண்டுமென்ற நோக்கத்தில் வாழ்ந்தால் இவ்வுலகமே சுவர்க்கமாகி விடும் என்று நான் நினைக்கிறேன்” என்றான் பிருதிவீபதி.
“இதை யெல்லாம் கண்டு தெளிந்து தான் பூதுகன் ஒரு நாஸ்திகனாகி விட்டானோ என்னவோ?” என்றார் சந்தகர்.
“போகட்டும். நாம் இப்படியே மெதுவாகச் சென்றால் இன்றைக்குள் காஞ்சியை அடைவது சிரமமாக இருக்கும். குதிரையைச் சிறிது துரிதமாகவே விட வேண்டியதுதான்” என்றான் பிருதிவீபதி.
”ஆம்! இரவு நெருங்குவதற்கு முன் காஞ்சியை அடைந்து விடுவதுதான் நல்லது” என்று கூறிக் குதிரையைத் தட்டிவிட்டார் சந்தகர்.
குதிரைகள் அதிவேகமாகத்தான் வந்து கொண்டிருந்தன. ஆனால் மாலை பொழுது கழிந்து எங்கும் இருள் நிறைந்து விட்டது. அவர்கள் இருவரும் இரவுக்குள் காஞ்சியை அடைந்து விடலாம் என்று நினைத்தது நிறைவேறாது என்று கண்டு கொண்டனர். அப்பொழுது அவர்கள் வந்து கொண்டிருந்த இடம் மலைப் பிரதேசம். எங்கும் இருள் கவிந்திருந்தது. ஆங்காங்கு சிறு சிறு குன்றுகளைக் கடந்து அவர்கள் செல்ல வேண்டியதாயிற்று. இந்தச் சமயம் பிருதிவீபதியை விடச் சந்தகர் மிகவும் களைப்படைந்திருந்தார். அவர் அதிகம் குதிரையேறிப் பழகாதவர். அவர் மெதுவாகப் பிருதிவீபதியைப் பார்த்து, “இன்னும் பத்து கல் தூரமாவது இருக்கும் காஞ்சி, இந்த இரவில் நாம் இங்கு எங்கேயாவது தங்கிச் சிரம பரிகாரம் செய்து கொண்டு விடியற் காலையில் புறப்படுவது தான் நல்லதா யிருக்கும் என்று நினைக்கிறேன். நான் மிகக் களைப்படைந்திருக்கிறேன். என் குதிரையும் மிகக் களைப்படைந்திருக்கிறது. உங்களைப் போலல்ல நான். உங்கள் குதிரையைப் போலல்ல என் குதிரை. இன்னும் சிறிது தூரம் பிரயாணம் செய்தால் அது நம்முடைய வார்த்தைகளைக் கேட்காமல் படுத்துக் கொண்டாலும் படுத்துக் கொண்டு விடும். அதிகமாக ஜீவ ஹிம்சை செய்ய எனக்கு விருப்பமில்லை என்பதை ஜைன சமயத்தைச் சேர்ந்த உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்றார்,
பிருதிவீபதி ‘களுக்’கென்று சிரித்தான். “குத்தலாகப் பேசுவதில் நீங்கள் ரொம்ப சாமர்த்தியசாலி. நானும் ஜீவஹிம்சை செய்வதில் விருப்பமில்லாதவன்தான். அதோ சிறிது தூரத்தில் விளக்கு வெளிச்சம் தெரிவது போலிருக்கிறது. அங்கு போனால் நாம் தங்குவதற்குக் கொஞ்சம் சௌகரியம் இருக்கலாம்” என்று சொல்லிச் சிறிது தூரத்தில் விளக்கின் ஒளி தெரிந்த இடத்தை நோக்கிக் குதிரையைச் செலுத்தினான்.
அவர்கள் அவ்விடத்தை அடைந்த போது சிறு சிறு குன்றுகளில் குடையப்பட்ட குகைக்குள்ளிருந்துதான் அந்த வெளிச்சம் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டனர். இப்படிப்பட்ட இடங் களில் துறவிகள்தான் வசிக்கக்கூடும் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். எப்படியோ அந்த இரவுப்பொழுதை அங்கே கழிப்பதற்கு அது மிகவும் சௌகரியமான இடமாகத்தான் அவர்களுக்குப் பட்டது. அவர்கள் குதிரைகளிலிருந்து கீழே இறங்கி அங்கிருந்த மரத்தில் அவைகளைக் கட்டிவிட்டுச் சமீபத்திலிருந்த மலைக் குகையை நெருங்கினர். அக் குகையின் உள்ளிருந்து வந்த விளக்கின் ஒளி அவர்கள் அந்த மலைக் குகைக்குள் போக அனுகூலமாக இருந்தது. அவர்கள் குகைக்குள் நுழைந்ததும் நேர் எதிராகக் குடை நிழற் கீழ் அமர்ந்திருக்கும் மகா வீரரின் உருவமும் அவ்வுருவத்துக்கு இருபுறங்களிலும் ஜைனமதாச்சாரியார்கள் இருவர் நிஷ்டையில் அமர்ந்திருப்பது போன்ற உருவமும் செதுக்கப்பட்டிருந்தன. அவ்வுருவங்களுக்கெதிராக அக் குகையின் மேல் தளத்தில் வட்டமான கமலம் போன்ற சக்கரம் ஒன்று செதுக்கப் பட்டிருந்தது. பக்கத்துச் சுவர்களிலே சாந்துகள் பூசப்பட்டு சமண சமய கதைகளைச் சித்திரிக்கும் வர்ண ஓவியங்கள் கண்கவரும் வண்ணம் வரையப்பட்டிருந்தன. அங்கிருந்த சிலா உருவங்களுக்குச் சமீபமாகக் கருங்ல் ஸ்தம்பத்தில் அமைக்கப்பட்ட தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. இதைத் தவிர அங்கு மனிதர்கள் இருப்பதற்குரிய அடையாளமே இல்லை. பிருதிவீபதி அங்கிருந்த சிலா உருவங்களுக்குத் தன் வணக்கத்தைச் செலுத்தி விட்டு, “நல்ல பாதுகாப்பான இடத்துக்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறோம்'” என்றான் சந்தகரைப் பார்த்து.
”ஆமாம்! இந்த உடலைமாத்திரமல்ல, இந்த உள்ளத்தையும் பாதுகாக்கும் இடத்துக்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறோம்” என்றார் சந்தகர்.
“இந்த பரமேஷ்டிகளின் உருவம் நம் மனத்தை உருக்கவில்லையா?” என்று கேட்டான் பிருதிவீபதி.
“ஆம். மனத்தை உருக்கத்தான் செய்கிறது. நாம் இந்த இடத்தில் இருக்கும் போது இந்த நிலை. வேறொரு இடத்தில் சௌந்தர்யம் உள்ள ஆரணங்குகளைக் கண்டு விட்டாலும் மனம் இப்படித்தான் உருகுகிறது. இதுதான் மனிதனுடைய மன நிலை” என்றார் சந்தகர்.
பிருதிவீபதி சிரித்துக் கொண்டே, “நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே” என்றான்.
“சரி இந்தக் குகைக்குள் எவ்வித மனித சஞ்சாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் இத் தீபங்கள் பிரகாசிப்பதிலிருந்து இங்கு யாரோ வத்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாய்த் தெரிகிறது. இங்கு யார் இருக்கப் போகிறார்கள்? யாரேனும் ஜைன சன்னியாசிகள் தான் இப்படிப் பட்ட இடங்களில் வசிப்பார்கள். எல்லாவற்றுக்கும் நாம் இங்கேயே படுத்துறங்கி விட்டு விடியற்காலையில் எழுந்து செல்வது நலமென்று நினைக்கிறேன்” என்றார்,
“அதுதான் நல்லது” என்று சொல்லிய வண்ணம் தன் உடலில் போர்த்தப்பட்டிருந்த பட்டு உத்தரீயத்தை எடுத்துத் தரையில் விரித்தான் பிருதிவீபதி. சந்தகர் தம் வெள்ளை வஸ்திரத்தை ஒரு புறம் விரித்துப் படுத்துக் கொண்டார். அத்தச் சமயம் இவர்களிருவருக்கும் இரவு போஜனத்தைப் பற்றிய கவலையே இல்லை. சந்தகருக்குப் பிரயாணத்தினால் ஏற்பட்ட அலுப்பினால் படுத்த உடனேயே தூக்கம் வந்து விட்டது. பிருதிவீபதிக்கோ தூக்கம் வரவில்லை அவன் மனம் பலவிதமாகச் சுழன்றது, அன்று காலை அவன் சந்தகரைச் சந்தித்ததிலிருந்து சந்தகரின் குண விசேஷங்களை யெண்ணி எண்ணி வியப்படைந்தான். எல்லா வகையிலும் சந்தகர் பூதுகனுக்கு ஏற்ற தோழர் என்றுதான் கருதினான். சந்தகரைப் போலவும் பூதுகனைப் போலவும் இரண்டு புத்திசாலியான நண்பர்கள் சேர்ந்தால் இந்த உலகத்தையே ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்று எண்ணினான். அவன் தூங்காமல் புரண்டு புரண்டு படுக்கும் போது, வெளியே சிறிது தூரத்திலிருந்து ஏதோ சத்தம் வருவதைக்கேட்டு எழுந்து உட்கார்ந்து கவனித்தான். யாரோ நான்கைந்து பேர்கள் ‘கசமுச’ என்று பேசிக் கூச்சல் போடுவதுபோல் அவனுக்குத் தெரிந்தது. அந்தக் கூச்சலிடையே பெண்ணொருத்தி அழுவது போன்றும், அலறுவது போன்றும் சத்தம் கேட்டது. அதற்குமேலும் அவன் தாமதிக்க விரும்ப வில்லை. ‘என்ன கலவரமோ? யாருக்கு என்ன ஆபத்தோ?’ என்றெண்ணியவனாகப் பரபரப்போடு சமீபத்தில் படுத்துக் கொண்டிருந்த சந்தகரைத் தட்டி எழுப்பினான். சந்தகர் திகைப்புற்று எழுந்து, ”என்ன?” என்று கேட்டார்.
பிருதிவீபதி சிறிது தூரத்தில் ஏதோ கலவரம் நடப்பதை அவருக்குச் சொல்லி அரைகுறை தூக்கத்திலிருந்த அவரையும் அழைத்துக்கொண்டு அக்குகையிலிருந்து வெளியே வந்தான். அவன் வெளியே வந்தபோது சற்றுத் தூரத்தில் கையில் தீப்பந்தங்களுடன் ஐந்தாறு பேர்கள் கூட்டமாக நின்றுகொண்டு ஏதோ கலவரம் செய்வதை அறிந்தான். அவர்களிடையே ஒரு பெண் இருப்பதும் அவனுக்குத் தெளிவாகத் தெரித்தது. தூக்கக் கலக்கத்திலிருந்த சந்தகரும் கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து சிறிது விருவிருப்புடையவரானார்,
சத்தகரும் பிருதிவீபதியும் கலவரம் நடந்த இடத்தைநோக்கிச் செல்ல நினைக்கையில் அக்கூட்டத்திலிருந்த ஒருவன், ‘ஐயோ! ஐயோ!’ என்று அலறிக் கொண்டே நின்ற பெண்ணின் கைகளைப் பிடித்து இழுத்து அவளைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போவதையும், அவனிடமிருந்து அவளை மீட்க நினைத்த ஒருவரை மற்றுமுள்ள இருவர் அடித்துத் தள்ளிவிட்டுப் போனதையும் பார்த்தனர். பிருதிவீபதி அவசரமாகப் போய் மரத்திலிருந்த குதிரையை அவிழ்த்து அதன்மேல் ஏறி உட்கார்ந்து துரிதமாக செலுத்தத் தொடங்கினான்.
– தொடரும்…
– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.
– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.