மாரியின் குற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2025
பார்வையிட்டோர்: 1,333 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருச்சி சென்டிரல் ஜெயிலில்தான் முதல் முதலாக எனக்கு அவனுடைய பரிசயம் கிடைத்தது. நானும் ஒரு கைதி; அவனும் ஒரு கைதி. கைதிக்குக் கைதி என்ன பிரமாதமான வித்தியாசம்? எங்கள் எல்லாருக்கும் மேலே சிறை அதிகாரிகள் இருந் தார்கள். அப்படியிருக்க, நாங்கள் எல்லாரும் ஒன்று தானே? ஒன்றோ இல்லையோ, நாங்கள் ஒருவருடன் ஒருவர் அப்படித்தான் பழகினோம்; பழகும்படி நேர்ந்தது. 

என் குற்றம் என்னவென்றால், அந்த ‘அரை நிர்வாணப் பக்கிரி’ காந்தி இல்லையா, அவருடைய உபதேசங்களால் மனம் ‘பேதளித்து’ மாட்சிமை தங்கிய மன்னர்பிரானின் சட்டத்தை, ‘தெரிந்து, வேண்டுமென்றே’ மீறியதுதான். ஒழுங்கான விசாரணைக்குப்பின் பத்திரமான சிறைக்கு வந்து சேர்ந்த மாரிமுத்துவின் குற்றமோ, வேறுவிதமானது. 

அவன் யாரோ ஒரு மனிதருடைய கால் எலும்பில் தனது பலத்தைப் பரீட்சை பார்த்துவிட்டான். மனத்தத்துவ ரீதியில் அதன் காரணம் என்னவோ பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், சட்ட தான் அந்தக் காரணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மதியூகமுள்ள மேதாவிகள் தயாரித்துள்ள சட்டம் என்ற சமாசாரம் ஒன்று உலகத்தில் உண்டு என்ற விஷயமே அவனுக்குத் தெரியாது. அந்தச் சட்டம் ஒவ்வொன்றும் எந்த மனிதன் மீது பாய்ந்து  
கௌவலாம் என்று எந்த நேரமும் தருணம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவரத்தையும் அவன் அறியான். ஆனால் சம்பந்தப்பட்ட கால் எலும்பை முறிக்கும் விஷயத்தில் அவன் தெரிந்தே தீர்மான மாகத்தான் செய்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவன் அந்தக் காரியத்தைச் செய்தவுடனே, சட்டம் அவனைக் கைப்பற்றிவிட்டது; பலன்தான் சிறை. 

புதிதாக வரும் கைதிகளை முதலில் ‘குவாரன்டைன்’ என்ற தனி இடத்தில் கொஞ்ச நாள் வைத்திருப்பார்கள். அந்தக் குவாரன்டைனில் தான் நான் முதல் முதலாக மாரிமுத்துவைச் சந்தித் தேன். அன்று எனக்கும் ஒரு வார்டருக்கும் ஒரு தகராறு ஏற்பட்டது. அதில் இந்த மாரிமுத்து என் கட்சியாக இருந்தான். அதிலிருந்தே எனக்கும் அவனிடம் சற்றுப் பற்றுதல் ஏற்பட்டது. தான் ஒரு சக்கிலி என்று அவன் கூறினான். மகாத்மாவோ ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார். ஆகையால், மாரிமுத்துவின் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் விசேஷ அக்கறையும் உண்டாயிற்று. 

கொஞ்ச நாளில் அவன் என்னைத் தன் விசேஷ குருநாதராக வரித்துவிட்டான். மாரிமுத்துவைச் சிஷ்யனாகப் பெறுவதென்றால், அதை அற்ப சங்கதியாக யாரும் கருத முடியாது. ஏனென்றால், நல்ல தேகக் கட்டும், வீரப் பார்வையும், துடித்த பேச்சும் அவனுக்கு உண்டு. என்னத்துக்கு இவ்வளவு வர்ணனை? ‘வைவா வில்லா’ என்ற இங்கிலீஷ் சினிமாப் படத்தில் ‘வாலஸ் பீரி’யைப் பார்த்திருக் கிறீர்களா? பார்த்திருந்தால் மாரிமுத்துவைப் பார்க்கத் தேவையே இல்லை; அதே அச்சு எங்கள் மாரிமுத்து. எனவே, சிறைச் சாலையிலுள்ள எல்லாருக்குமே பொதுவாக என்னிடம் ஒரு தனி மதிப்பு ஏற்பட்டு விட்டது. 

மேலும், மாரிமுத்துவின் உதவியும், ஒத்தாசையும் எனக்கு இன்றியமையா தவை ஆகிவிட்டன. ஆரம்பத்தில் திருட்டுத்தனமான பொருள்களை உபயோகிக்க, நான் மறுத்தேன். காலக் கிரமத்தில் மாரிமுத்துவின் பிடிவாத வேண்டுகோளும் என் நாவின் ரசிகத் தன்மையும் சேர்ந்துகொண்டு திருட்டுத்தனமான தின்பண்டங்களில் என் மனத்தை இழுத்துவிட்டன. இந்தப் பிரகாரமாகக் கொஞ்சகாலம் கழிந்தது. 

ஒரு நாள் மாரிமுத்துவுக்குத் திடீரென்று என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. கவலை பாய்ந்த பார்வை யுடன் தலையை ஒருபுறமாகச் சாய்த்துக்கொண்டு. “சாமி, உங்களுக்கு வீடு வாசல் இல்லையா? சம்சாரம், குழந்தை குட்டிகள் இல்லையா?” என்று கேட்டான். 

நான் புன்னகை புரிந்தேன். அது மலர்களிலோ, வான நட்சத்திரங்களிலோ, காணும் புன்னகை அல்ல; பாய்ந்தோடும் வெள்ளப் புனலின் சுழிகளில் தோன் றும் புன்னகை. என் புன்னகைக்குப் பின்னே கிளர்ந்த உணர்ச்சிப் பெருக்கை அவன் என்ன, யாருமே அறிந்திருக்க முடியாது. 

இருந்தாலும் கம்பீரமான குரலில், “எனக்கு வீடும் வாசலும் இல்லாவிட்டால், நான் இங்கே வந்திருப்பது என்ன பெரிய காரியம்? தியாகந்தான் ஆகுமா?” என்று சொன்னேன். 

எனது கருத்தை அவன் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. 

“அப்படியானால். அவர்கள் கஷ்டப்பட மாட்டார் களா?” என்றான் மாரி. 

“படத்தான் படுவார்கள்.” 

“ஆனால் சாமி” என்று சற்றுத் தளர்ந்த குரலில் கூப்பிட்ட மாரி, வீடு வாசலைப்பற்றி நாம் இப்போது நினைக்கலாமா? அது அசட்டுத்தனம்” என்று நிதான மாகச் சொன்னான். 

“அசட்டுத் தனந்தான். அதோடு மனத்துக்குச் சங்கடமும் உண்டாகும். 

மாரிமுத்து சிறிது நேரம் மௌனமாகச் சிந்தித்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு மிக மெல்லிய குரலில், “சாமி, இன்று மாலை ஒரு தேங்காய் கொண்டு வருகிறேன். ஓர் ஆளைச் சரிசெய்து வைத்திருக் கிறேன்” என்றான். 

“தேங்காயை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? பிள்ளையார் இருந்தால் அவருக்கு உடைக்க லாம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். 

“பிள்ளையார் வேண்டுமா? வேண்டுமானால் நாளைக்குத் தருவிக்கிறேன்” என்று வெகு தீவிரமாகக் கேட்டான் மாரி. 

“இல்லை யப்பா; வேடிக்கைக்குச் சொன்னேன்.” “என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். சாமி” என்ற மாரி, மேலே பேச எனக்கு எதுவும் தோன்று முன் போய் விட்டான். 

சொன்னபடியே மாரிமுத்து மாலையில் வந்து சேர்ந்தான். கொண்டுவந்தது தேங்காய் அல்ல; அரைப்படி வெங்காயத்தைக் கொண்டுவந்திருந்தான். 

அதை என்னிடம் கொடுத்துக்கொண்டே, “முட்டாள் பயல், சாமி. இந்த வார்டர் பசங்களை நீங்கள் நம்பவே கூடாது. அவர்கள் அத்தனை பேரும் மோசக் காரர்கள். இத்தனை நாளும் எங்களுக்கு உடந்தை யாக இருந்த வார்டரே இன்று அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டான். என் பேரைக்கூட இழுத்து விடுவானோ என்னவோ? பயமாக இருக்கிறது. சூப்பரிண்டு துரை தங்கமானவர்தான் என்றாலும், மகா கோபக்காரர். அவர் முன்னே அந்தப் பயல் என் பேரையும் பிதற்றிவிட்டானானால் வில்லங்கந்தான்” என்று முணு முணுத்தான் மாரி. 

“உன் பேரும் வெளிவந்தால், அவர்கள் உன்னை என்ன செய்வார்கள்?” என்று கேட்டேன். 

“என்னை வெளி வேலைக்கு அழைத்துப்போக மாட் டார்கள் ஆனால், இன்று நான் கட்டாயம் வெளியே போக வேண்டும். 

மாரிமுத்து சொற்ப காலத் தண்டனையடைந்த கைதி. அப்படிப்பட்ட கைதிகளைப் பொதுவாக வெளி வேலைக்கு அழைத்துப்போக மாட்டார்கள். என்றாலும் மாரியின் விஷயத்தில் சூப்பரிண்டுக்கு மிகவும் திருப்தி. அதனால், அவனை மாத்திரம் வெளி வேலைக்கு அழைத்துச் செல்ல விசேஷ அநுமதி கொடுத்திருந்தார். 

வெளி வேலை என்றால், கைதிகள் சம்பந்தப்பட்ட மட்டில் அது சாமான்ய விஷயமல்ல. சற்றுக் கவிதை உள்ளம் படைத்தவர்களாக இருந்தால், பரந்த உலகத்தைக் கண்நிறைய மறுபடியும் ஒரு முறை தட்டுத் தடங்கலின்றிப் பார்த்துக் களிப்ப தொன்றே பெரும் பாக்கியம் அல்லவா? அது போக, எப்படிப்பட்ட வாழ்க்கையையும் சாரமுடையதாகச் செய்யக்கூடிய புகையிலை, பொடி, பீடி ஆகிய சாமான்கள் சிறைக்குள் வருவதற்கும் வெளி வேலை மிக ஏற்ற சாதனமாகும். இதெல்லாம் எனக்குத் தெரிந்ததுதான். 

என்றாலும் நான் அவனைப் பார்த்து, ”வெளி வேலைக்குப் போகாவிட்டால் என்ன மோசம்? இன்னும் பதினைந்து நாட்களில் விடுதலை அடைந்து விடுகிறாய். அப்புறம் ஜோராக உன் இஷ்டப்படி வெளியில் எங்கே வேண்டுமானாலும் கையை வீசிக் கொண்டு போகலாம். இந்தப் பதினைந்து நாளை உள்ளுக்குள்ளே கழிப்பது பெரிய காரியமா?’ என்று கேட்டேன். 

”பதினைந்து நாள்!” என்று அழுத்தந் திருத்த மாகப் பல்லைக் கடித்துக்கொண்டே உச்சரித்த மாரி, “பதினைந்து நாள்!- ஒன்றுமில்லை-பரவா யில்லை- என்று சொல்லி எழுந்தான். அப்படி எழுந்தவன், மேலும் பேசலானான்; குரல் வலுத்தது: “ஆனால் சாமி, ஒரு சமாசாரம் உங்களிடம் சொல்ல வேண்டு மென்று எனக்கு வெகு நாளாக ஆவல்” என்றான். 

“என்ன சமாசாரம்?” என்று நான் தலையை அசைத்தேன். 

“நான் டம்பம் பேசுகிற வழக்கமில்லை, சாமி. என் சம்சாரம் நல்ல அழகாயிருப்பாள். விடுதலை யானதும் அவளை நீங்கள் பார்க்க வேண்டும், சாமி” என்றான். 

இருக்கலாம். முட்டாள் புருஷர் அத்தனைபேர் மனைவிகளும் அழகிகள்தான். சந்தேகப் புருஷர் அத்தனைபேர் மனைவிகள் மீதும் எப்போதும் பிறர் வலைபோட்டுக் கொண்டிருப்பது போலத்தான் அது. ஆனால், மாரியின் கதை எங்கே? 

“சமாசாரத்தைச் சொல்” என்றேன். 

அதைத்தான் சொல்ல வாயெடுத்தேன். அவசரப் படுகிறீர்களே” என்ற மாரி, கனைத்து ஒரு பெருமூச்சு விட்டு, “அவள் மிக அழகி. என்னிடம் அவளுக்கு ரொம்பப் பிரியம். அவளால் எனக்கு எத்தனையோ வசதி! ஜோடு தைப்பது என்றால் அது ஜோக் இல்லை, சாமி. பல்லும் விரலும் எவ்வளவு: கெட்டியாக இருக்கவேண்டும், தெரியுமா? அவள் எனக்கு எத்தனை ஒத்தாசை செய்வாள்! யாருக்கும் தெரியாது. எங்கள் ஜாதிப் பெண் எதுவும் அப்படி இருக்காது, சாமி. அவள் டவுன் மனுஷி. அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும். அவள் ரொம்பவும் கெட்டிக்காரி” என்ற மாரி, நின்றுவிட்டான். 

சிறிதுநேரம் கழித்து, “இன்னொரு சமயம் சொல்லுகிறேன் சாமி என்று மொட்டையாகச் சொல்லி, வாய் பேசாமல் நடந்து விட்டான். 

‘இவன் கதை என்ன? ஏன் இப்படி நீட்டி முழக் கித் தயங்கிக்கொண்டே பேசுகிறான்?’ என்று நான் ஆச்சரியத்தோடு யோசித்துக்கொண்டிருந்தேன். 

ஆனால், சில நிமிஷ நேரத்தில் மாரி திரும்பவும் வந்து சேர்ந்தான். 

“என்மேல் கோபமா, சாமி” என்றான். நான் சிரித்தேன். 

“என் சமாசரத்தைச் சொல்லிவிடுகிறன், சாமி” என்ற அவன், “அப்படி ஒன்றும் பிரமாதமில்லை. சுருக்கமான சங்கதிதான்” என்றான். 

“அப்படியானால் ஏன் இப்படி என்ன என்னவோ ஊரை வளைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்றேன். 

அவன் புருவத்தை நெளித்துக்கொண்டு, மூலைப் பார்வையோடு சொல்லலானான்: “உம்! நான் இங்கே இருக்கிறேன். சாமி. அவள் எப்படி இருக்கிறாளோ? என்ன தவிக்கிறாளோ? நீங்கள் சர்க்காரோடு சண்டை. போட்டு இங்கே வந்திருக்கிறீர்கள். நான் ஏன் ஜெயிலுக்கு வந்தேன்? அவள் மனசு வருந்தலாமா? இதில் சர்க்காருக்கு என்ன லாபம், சாமி? எதற்குச் சோறு போடுகிறார்கள்? துணி கொடுக்கிறார்கள்? என்ன கட்டிடம்? இந்த மாதிரியான கட்டிடம் வெளி யில் எங்களுக்குக் கிடைக்குமா? இந்தச் செல் வெல்லாம் செய்கிறார்களே! இந்தச் சர்க்காருக்கு, ஏன் சாமி, ஒன்றும் விளங்கவில்லை? என்னை இங்கே வைத்திருக்கிறார்களே, இதனால் அந்த ஆளின் நொண்டி சுகமாகிவிடுமா?” 

மாரி தன் பேச்சை முடிக்கவில்லை. அவன் கண் களில் நீர் ததும்பியது. சுருதி கூட்டிய ஒரு வீணையின் தந்திகளைச் சங்கீத நிபுணன் ஒருவன் மீட்டினால் எப்படி அதிருமோ அப்படி அதிர்ந்தன அவன் உதடுகள். 

“அசட்டுத்தனமாகப் பேசாதே. நீ என்ன குழந்தையா?” என்ற நான், “இப்படியெல்லாம் பேசிக் குருட்டு யோசனை செய்துகொண் டிருப்பதால், என்ன நன்மை? பதினைந்து நாளில் ஊருக்குப் போய் விடப் போகிறாய். அவ்வளவுதானே” என்று ஆறுதல் சொன்னேன். 

என் ஆறுதல் பயன்படவில்லை. அவனையும் அறியாமல் விம்மி விம்மி அழலானான். அப்போதும் தான் சொல்லவந்த கதையை முடிக்காமலே போய் விட்டான். 

ஒவ்வொரு நாளும் மாலை ‘லாக் அப்’புக்குச் சிறிது முன் என் அறைக்கு வந்து செல்லும் மரி அன்று மாலை என்னவோ வரவில்லை. 

வழக்கப்படி எங்களைப் பத்திரப்படுத்துவதற்காக, சாவிக்கொத்தை ஜல் ஜல் என்று சப்தித்துக்கொண்டு வார்டர் வந்து சேர்ந்தான். ஒவ்வொரு கதவாகத் தடார் தடார் என்று சாத்திப் பூட்டுகிற நடமாடும் யந்திரம் போன்ற வார்டர், கடைசியில் என் அறைக்கு முன்னும் தோன்றினான். 

“சலாம், சாமி!’ 

வார்டர் தினந்தோறும் என் சம்மந்தப்பட்ட மட்டில் சலாம் வைப்பது வழக்கம். 

நானும் பதில் சலாம் வைத்தேன். 

“சூப்பரிண்டு துரைக்கு உங்கள் மாரிமேல் ரொம்ப வும் கோபம் சாமி” என்று சொல்லிய வார்டர், “காலை யில் விவரம் சொல்லுகிறேன்” என்று முடித்து அடுத்த கதவுக்குப் போய்விட்டான். 

‘மாரியின் கதை என்ன? வெங்காயத் திருட்டு விஷயத்திலா சூப்பரிண்டுக்குக் கோபம்? என் பேரும் என்னவாவது அம்பலத்துக்கு வந்துவிடுமோ?” என்றெல்லாம் யோசித்துக்கொண்டே, முரட்டுச்சணல் பாயை விரித்துப் படுத்தேன். 

என் அறையின் இரும்புக் கம்பிகளை யாரோ ‘தட தட’ என்று தட்டும் சத்தம் கேட்டது. ‘சீ, மாரி சீ,மாரி முத்துவின் விசித்திரமான போக்கைப்பற்றி நெடு நேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டதால், யாரோ கதவை தட்டுவதுபோல் உண்டான ஒரு தோற்றந்தான்’ என்று முதலில் எண்ணினேன். ஆனால் அந்தச் சத்தம் ஓயவே இல்லை. தலையை நிமர்த்திச் சத்தம் வருகிற இடத்தைப் பார்த்தேன்; உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரையில், கான்விக்ட் வார்டர்களுக்கு உரிய வெண்மையான உடையில் மாரிமுத்து நின்று கொண்டிருந்தான். 

நான் எழுந்து அருகில் போனதும், ‘உரக்கப் பேசக்கூடாது’ என்று எனக்கு மாரிமுத்து சமிக்ஞை செய்தான். அதன்பின் அவன் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டுச் சொட்டாகச் சிந்தியது. “தங்க ளிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்… என்னை மறந்துவிடாதீர்கள். இதோ, இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்று ரகசியமாக வாயோடு வாய் பேசிக்கொண்டே என் அறைக்குள் எதையோ விட்டெறிந்தான். அதைத் திரும்பிப் பார்ப்பதற்குள்ளாக அந்தக் கட்டுமஸ்தான மாரிமுத்துவின் உருவம் மறைந்துவிட்டது. 

இந்தச் சம்பவம் நடந்து அரை மணி நேரந்தான் கழிந்திருக்கும். உடனே சிறைச்சாலை அதிகாரி களுக்குள் ஏதோ பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண் டிருந்தார்கள். என்னைப் போன்ற கைதிகள் பலர் வெகு உற்சாகமாக அரட்டை யடித்துக்கொண் டிருக்கும் சத்தமும் என் காதில் விழுந்தது. 

சிறிது நேரம் சென்றதும், அதிகாரிகள் எல்லாக் கைதிகளையும் எண்ணிப் பார்த்தார்கள். எல்லோரை யும் திறந்துவிட்டு வரிசையாக நிறுத்திவைத்து, உற்று உற்றுப் பார்த்துக்கொண்டே வந்தார்கள். திரும்பவும் ஒரு முறை எண்ணினார்கள். பிறகு அவரவர்களை அவரவர்களுடைய அறைகளில் அடைத்து மூடிவிட்டுப் போனார்கள். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பவும் வந்து எண்ணி எண்ணிப் பார்த்தார்கள். அவர்களுடைய சந்தேகம் மூன்று மணி நேரம் கழித்து, ஒரு வகையாகத் தெளிந்தது; ரு எவனோ ஒரு கைதியைக் காணவில்லை! சில அதிகாரி கள் ‘இது வீண் சந்தேகம்’ என்றும், ‘கணக்குச் சரி தான்’ என்றும் சொன்னார்கள். ஆகவே, எல்லோரு மாகச் சேர்ந்து கைதிகளின் பதிவுப் புஸ்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். இதற்கு ஓர் அரை மணி நேரம் பிடித்தது – கடைசியாக, சந்தேகப் பட்டது உண்மையாயிற்று; அதாவது, “எவனோ ஒரு கைதியை நிச்சயமாகக் காணவில்லை!” என்று எல்லா அதிகாரிகளும் ஏகோபித்துக் கண்டு பிடித்தார்கள்! எனக்கு மட்டும் ஆரம்பத்திலேயே ‘விஷயம் இன்னது தான்’ என்று புலப்பட்டுவிட்டது. காணாமல்போன பேர்வழி மாரிமுத்துவைத் தவிர வேறுயாராக இருக்க முடியும்? என்றாலும் நான் ஒன்றும் தெரியாதவன் போலவே நடந்து கொண்டேன். 

‘ஆம், அவன்தான்;’ அந்த மாரிமுத்துதான் எப்படியோ தப்பி ஓடிவிட்டான். அவனைப் பயங்கரக் குற்றவாளி என்கிற ஜாபிதாவில் சேர்த்துத் திரும்ப வும் பிடித்துச் சிறையில் அடைக்க அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டார்கள். 

மாரி என் அறைக்குள் விட்டெறிந்த சாமானை மறுநாள் காலையில் பார்த்தேன். கையால் பின்னிய அழகான பல வர்ணச் சின்ன நூல் பை அது. அதைத் திறந்து பார்த்தேன். அதற்குள் ஒரு கடிதத் துண்டு இருந்தது. அதில் பென்சிலால் ஒரு சிறு குழந்தை எழுதுவதைப்போல் 

கிறுக்கி எழுதியிருந்த எழுத்தைப் பார்த்தேன். சிறிது சிரமப்பட்டுப் படித்தேன்: 

“இப்போது நான் ஒரு காந்திப் பெண். நம் நகரத்தில் மறியல் செய்கிற காந்தி மனிதர்களுக் கெல்லாம் பாதரட்சை கொடுத்து வருகிறேன். ஆகா! இப்போதுமட்டும் நீ என்னுடன் இருந்தால்!- இன்னொரு விஷயம்; உன்னிடம் கால் முறிபட்டவன் என்னைத் தொந்தரவுபடுத்திக்கொண்டே இருக்கிறான். நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக் கிறேன்” என்பது அந்தக் கடிதத்தின் சுருக்கம். 

சில நாட்கள் கழிந்ததும், சிறைச்சாலைக்கு ஒரு புதிய கைதி வந்தார். அவர் கிட்டத்தட்ட என்னைப் போன்றவர்; இளைஞர். முகத்தில் ஓர் அலாதியான களை இருந்தது. முதல் முதலில் அவரைப் பார்த்ததும் மிகுந்த புத்திசாலி என்றும் இளகிய இருதயம் உடையவர் என்றும் எனக்குத் தோன்றிற்று.ஆகவே அவருடன் மிகுந்த நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டு ஓய்வு நேரத்தில் முக்கால் பாகத்தை அவருடனேயே கழித்துவந்தேன். என்ன இருந்தாலுங்கூட, அந்தச் சக்கிலி மாரியிடம் எனக்கு ஏற்பட்ட சந்தோஷம் இந்தப் புதிய நண்பரிடம் உண்டாகவில்லை என்றே சொல்லவேண்டும். 

இப்படியாக ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் காலை நானும் என் புதிய நண்பரும் வழக்கம்போல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒருவன், “ஸார், கடைசியாக அந்தப் பயலைப் பிடித்து விட்டார்கள்” என்றான். “யாரை, மாரிமுத்துவையா?” என்றேன். 

“ஆமாம் ஸார், அந்தப் பயலைத்தான்!” என்று அவன் ஊர்ஜிதம் செய்தான். திரும்பவும் நான். ”அவனை இப்போது எங்கே வைத்திருக்கிறார்கள்? இங்கே கொண்டுவந்து விட்டார்களா அல்லது வேறு எங்கேயாவது வைத்திருக்கிறார்களா?’ என்று கேட்ட தற்கு, “இங்கேதான் இருக்கிறான்; சிவப்புக் குல்லாய்க் காரர்களை வைக்கிற இடத்தில் அவனையும் வைத்துப் பூட்டியிருக்கிறார்கள்” என்றான் அந்தப் பேர்வழி. நான் உடனே பரபரவென்று சிவப்புக்குல்லாய்க் கைதிகள் இருக்கிற இடத்தை நோக்கிப் போனேன். என்னுடன் என் புதிய நண்பரும் வந்தார். குறிப் பிட்ட அறையைத் தேடிப் பிடித்தேன். மாரிமுத்து என்னைக் கண்டவுடன் ஒரே துள்ளாகத் துள்ளிக் குதித்து என்னிடம் வந்தான். அவன் வந்த வேகத்தைப் பார்த்தால் இரும்புக் கதவைத் துகள் துகளாக உடைத்தெறிந்து என்னிடம் வந்து விடுவான்போல் இருந்தது. ஆனால் மறு நிமிஷம் அவன் முகத்தில் ஒரு பெரும் மாறுதல் தென்பட்டது. கால்கள் தயங்கின; முன்னே வைத்த காலைப் பின்னே இழுத்தான். எதையோ – என் பின்புறத்தில் தென் பட்ட ஏதோ ஒன்றை – உற்று நோக்கிக்கொண் டிருந்தான். ஆத்திரமும் கோபக்குறியும் ஒன்றாகச் சேர்ந்து அவன் முகத்திலே விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தன. எதைப் பார்த்து இவ்வளவு கோபப்படுகிறான் என்று பின்னால் திரும்பிப் பார்த் தேன். அங்கே ஒன்றுமே இல்லை. என்னுடன் வந்த புதிய நண்பர்தான் என் பின்புறத்தில் நின்றுகொண்டிருந்தார். மாரியைப் பார்த்தேன். 

அதற்குள்ளாக ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு, “அடே பயலே! நீ கூடவா இங்கே இருக்கிறாய்?- நான் அப்போதே நினைத்தேன்; நீ ஒரு சண்டாளன், கொலை காரன்! என்றைக்காவது ஒரு நாள் இந்த மாதிரியான நிலைமைக்கு வந்துவிடுவாய் என்று ஏற்கனவே நினைத் தேன். அது சரியாய்ப் போச்சு; – ஏண்டா, உன் கால் சரியாகப் போய்விட்டால்போல் தெரிகிறதே. அப்படி யிருந்தும் என் பிராணனை ஏன் இப்படியெல் லாம் வாங்கித் தொலைக்கிறார்கள்?” என்றான். நான் வாய்க்குள்ளாகவே, ‘காலம் மாறிவிட்டது. கண்ணுக் குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும் பழிவாங்கும் வழக்கம் இனி நிலையாது’ என்று சொல்லிக் கொண்டேன். 

“நான் இயக்கத்தில் சேர்ந்துவிட்டேன். அதனால் தான் என்னை இங்கே கொண்டுவந்து விட்டார்கள்” என்று ஒரு சம்பந்தமும் இல்லாமல் என் புது நண்பர் சொன்னார். 

“ஏண்டா, இன்னொருவனுக்குச் சொந்தமான ஒரு பெண்ணிடமிருந்து ஒரு ஜோடி செருப்பு வாங்கு வதற்காக இயக்கத்தில் சேர்ந்து நீயும் ஒரு காந்தி மனிதன் ஆகிவிட்டாயா? அப்படியானால், அந்த இயக் கம் நாசமாய்ப் போக! அந்தக் காந்தியின் – சேச் சே, அவர் மகாத்மா; அவரைப்பற்றி ஒன்றுமே சொல்லக் கூடாது” என்றான் மாரி. எனக்கு இன்னது சொல்வ தென்று புரியவில்லை. 

“மாரிமுத்து!” என்றேன். 

“அப்புறம் பேசிக்கொள்ளலாம், சாமி” என்று எனக்குக் கொஞ்சங்கூட இடம் கொடுக்காமல் மாரி பேசி விட்டான். அவன் கோபம் இன்னும் தணிய வில்லை. சட்டென்று நானும் அந்த இடத்தை விட்டு அகன்றேன். 

சிறிது நேரம் கழித்துப் புது நண்பர் என் அறைக்கு வந்தார். நான் அவரிடம் ஒரு விதமாக நடந்துகொண்டதைக் கண்ட அவர், “கோபு. நீங்கள் என்னைத் தவறுதலாக நினைக்கிறீர்கள். நான் நடந்த விஷயத்தைத் தெரிவிக்கிறேன். அந்தப் பயல் என்னைப்பற்றித் தாறுமாறாக 

நினைத்துக்கொண் டிருக்கிறான் என்று என்னைச் சமாதானப்படுத்தினார். 

“சரி, இந்த வளர்த்தலெல்லாம் எதற்கு? சட் டென்று விஷயத்தைச் சொல்லுங்கள்” என்று கடு கடுத்துக் கூறினேன். 

“இவன் அந்தப் பெண்ணின்பேரில் பைத்தியம் பிடித்து அலைகிறான். இவன்தான் மயங்கிக்கிடக் கிறானே ஒழிய, அவள் அவ்வளவு விசேஷமாக, மயக்க வல்ல அழகியல்ல; ஒரே ஒரு சின்னக் குற்றந்தான் இவ்வளவுக்கும் காரணம். அந்தப் பெண் இருக் கிறாளே, அவள் மிகவும் குறும்பு பிடித்தவள். இந்த ஜன்மத்தில் தனக்குக் கிடைக்க முடியாதவைகளை யெல்லாம் அடைந்துவிட அவள் ஆசைப்படுகிறாள். இவனுக்கு அவளிடம் மோகம். இவன் மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்குச் சிறை குறுக்கே நிற்கிறது. அவளுக்காக வேண்டி இவன் யாரையாவது அடிக் கிறான்; அவளாலேதான் இப்போது சிறைச்சாலையை மீண்டும் அடைந்து தவிக்கிறான். இவன் அகப்பட்டுக் கொண்டதற்கு அவள் தான் காரணம். ஒளிந்துகொள் வதற்கு இவனுக்கு இடந்தர அவள் மறுத்துவிட்டாள். இவன் இத்துடன் நிற்கமாட்டான். அவளைத் திருப்தி செய்வதற்கு இன்னும் ஏதாவது செய்துகொண்டுதான் இருப்பான். அது கடைசியில் கோர்ட்டுக்கு வந்து நிற்க வேண்டிய விஷயமாகவே முடியும்…” 

இப்படி சுற்றி வளைத்து என்னவோ சொல்லிக் கொண்டிருந்த போதிலும், அவர் சொன்னது ஏதோ ஓரளவு உண்மைக்குப் பொருத்தமாக இருப்பதாகவே நான் நினைத்தேன். அவர் மேலும் சொல்ல ஆரம் பித்தார்: 

“மறதி என்பது எல்லோருக்கும் பொது. உண் மையில் நான் ஒரு மோட்டார்க்கார் ஓட்டுகிறவன். ஒரு நாள் என் எஜமானரின் மோட்டாரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு எஜமானர் இறங்கிச் சென்றதும், நானும் சிறிது பராக்குப் பார்த்துக்கொண் டிருந்தேன். பிறகு மோட்டாரில் யாரோ வந்து ஏறினார்கள். என் எஜமானர் தான் ஏறியிருப்பார் என்று நினைத்து நான் மோட்டாரில் வந்து உட்கார்ந்து ஓட்ட ஆரம்பித்தேன். மோட்டார் வெகு தூரம் சென்றபோதிலும், மோட் டாரில் எனக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவர் என் எஜமானர் அல்ல, ஒரு பெண் தான் உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டுக் கொண்டேவந்தாள் என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் ஓட்டின மோட்டாரின் லொட லொடத்த சத்தம், அந்தப் பெண் போட்ட சப்தத்தை அமுக்கிக் கொண்டே வந்திருக்கிறது. இப்படி நெடுந்தூரம் சென்றபின், நான் திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டு மோட்டாரை நிறுத்தினேன். அந்தப் பட்டிக்காட்டுப் பெண் வேடிக்கை பார்ப்பதற்காக அந்த மோட்டாரில் ஏறி உட்கார்ந்ததாகவும், அதைக் கண்டவுடன் வேண்டுமென்றே மோட்டாரை நான் ஓட்டிக்கொண்டு வந்துவிட்டதாகவும் என்னை அவள் கோபித்துக் கொண்டாள். நான் எவ்வளவோ சொல்லியும், என்னை அவள் நம்பவில்லை. மிகவும் கேவலமான ஜனங்களைப்போல, என்னைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள். எவ்வளவோ சொல்லிச் சொல்லிப் பார்த்தும், என்னைச் சிறிதுகூட நம்பாததால், நான் மோட்டாரை எடுத்துக்கொண்டு திரும்பவும் என் எஜமானர் இருந்த இடத்துக்குப் போய் விட்டேன். 

“மறுநாள் அந்தக் கிராமத்துச் சக்கிலியைப் பார்த்தேன். அவன் என்னைக் கண்டதும் திடீரென்று என்மேல் பாய்ந்து என்னைத் தாக்கினான். அதனால் என் கணுக்கால் முறிந்து எலும்பு நழுவிவிட்டது. மோட்டார் சம்பவம் என்னை அறியாமலே நடந்த தென்பது ஊரார் அனைவருக்கும் தெரியும். அதனால் தான், இவனுக்குத் தண்டனை கிடைத்தது. நடந்த விஷயம் இவ்வளவுதான்” என்று நண்பர் முடித்தார். 

இப்போது அந்தப் பெண்ணைப்பற்றிக் கற்பனை செய் து பார்த்தான். இந்த நண்பருக்கு ஒரு விதம். மாரிக்கு ஒரு விதம் இப்படி இரண்டு விதமாகக் காட்சி அளிக்கும் அவள் ஒரு விசித்திரப் பிறவியாகத்தான் இருக்கவேண்டும்! எனக்கு மாரி பரிசளித்துச் சென்ற பை ஞாபகம் வந்தது. அது அவனுக்கு அவள் அனுப் பியதாகத்தான் இருக்கவேண்டும். கடிதத்தை மறந்து பையோடு என்னிடம் போட்டுச் சென்றிருக்கிறான்! 

நான் வாய்திறக்காமல் தலையை அசைத்துக் கொண்டே, “சரி, இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?” என்று அந்த நூல்பையிலிருந்த துண்டுக் கடிதத்தை நண்பர் கையில் கொடுத்தேன். 

அவர் என் முகத்தைப் பார்த்துக்கொண்டே அந்தக் கடிதத்தை வாங்கினார். கடிதத்தைப் படித்து விட்டு, வாய் விட்டு ஒரு சிரிப்புச் சிரித்து, “ஓ! அந்தப் பெண் தன்னைப் பெரிய ரம்பை என்று நினைத்துக் கொண்டாள்போல் இருக்கிறது. அவள் இந்த இயக் கத்துக்கு ஆதரவாயிருந்தாள். நான் இதில் சேர்ந் தேன். எல்லோரையும்போல் நானும் ஒரு ஜோடி செருப்பு அவளைக் கேட்டது வாஸ்தவந்தான். அவள் எனக்குக் கொடுக்க மறுத்துவிட்டாள். நான் அதைப் பொருட்படுத்தவே இல்லை. திரும்ப நான் எத்தனையோ தடவைகள், அவளை வீதியில் சந்தித்திருக்கிறேன். நான் என்னவோ அவளை ரம்பை என்று நினைத்துக் கொண்டுதான் சகலமும் செய்து வருவதாக அவள் கனவு காண்கிறாள்போல் இருக்கிறது. சுத்த முட்டாள் பெண் ! இது எதில் போய் முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சட்டம் என்ற ஒன்று இருக் கிறது” என்று நண்பர் தமக்குத்தாமே பேசினார். 

ஆம், எப்போதும்போல்தான் சட்டம் இப் போதும் இருந்துகொண்டிருக்கிறது. அந்தப் பெண்ணும் இருக்கிறாள். ஆனால், மாரிமுத்துவின் கதி என்ன?- எனக்கு ஒன்றுமே புரியவில்லை! மாரியின் விஷயம் என்ன என்று யார் சொல்ல முடியும்?

– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.

தி.ஜ.ரங்கநாதன் தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *