மாயேமியின் மகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 6,351 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இதோ பார், அழப்படாது. சமர்த்தோல்லியோ நீ. நாதமுனி இப்பொழுது வருவான்” என்று முன்னைவிட உச்சஸ்தாயியில் வீறிட்டாள் செல்லம்மாள்.

“பார், பார். அதோ வருகிறான் பார்த்தாயா?” என்று தெருக்கோடியைக் குழந்தைக்குக் காண்பித்தாள் செல்லம்மாள்.

இரண்டு கைகளிலும் பைகளைச் சுமந்த வண்ணம் வத்து கொண்டிருந்தான் நாதமுனி, வந்து படியேறும் போதே, “ஏன் அழுவுது தங்கப் பாப்பா?” என்று ஆவவோடு கேட்டுக்கொண்டு வந்தான்.

இடுப்பிலிருந்த குழந்தையை இறக்கி விட்டு, “அப்பா, போதும் பாப்பா பட்டபாடு! நீ போனது முதலாகக் கத்தித் தீர்த்து விட்டாள். அரை மணி நேரம் கடைக்குப் போனதற்கு இந்தப் பாடாக இருக்கிறதே, இன்னும் ஊரை விட்டு போய்க் காலட்சேபம் செய்வது எப்படி?” என்று கூறினாள் அவள்.

“நீங்கள் ஊரை விட்டுப் போவானேன்?” என்று வினவியபடியே செல்லம்மாளைப் பின் தொடர்ந்து நாதமுனியும் உள்ளே சென்று பைகளை கீழே வைத்தான். “அட கடவுளே! உனக்குச் சங்கதி தெரியாதா? உங்கள் எஜமானனை நிலக்கோட்டைக்கு மாற்றியாச்சே!”

“மாற்றியாச்சா?” என்ற சொல்லுடன் அப்படியே இடிந்து நின்று போனான் நாதமுனி.

செயலற்ற அவனுடைய வேதனையைக் கண்ட செல்லம்மாள் மிகவும் இரக்கத்துடன், ”கவலைப்படாதே, நாதமுனி! என்ன பண்ணுகிறது? தாசில்தாரும் எஜமானருக்கு ரொம்ப வேண்டியவர்தானாம். அவரிடம் உன்னைப் பற்றிப் பிரத்தியேகமாக எடுத்துச் சொல்லிக் கவனிச்சுக்கச் சொல்லணும் என்று பகலெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். உன் கவலைதான் அவருக்கு. கஷ்ட நிலைமையில்…” என்று இழுத்தாள்.

நாதமுனி சட்டென்று குறுக்கிட்டான். ”கஷ்டத்தைப் பற்றி நான் என்றைக்குமே கவலைப்பட்டது கிடையாது. அம்மா! அதைப் போலச் சுகப்படனும் என்கிற ஆசையும் கிடையாது! எனக்குப் புத்தி தெரியாததற்கு முன்னும், புத்தி தெரிந்த பின்னும் கஷ்டத்திலேயே வளர்ந்து கஷ்ட காலட்சேபம் செய்து வருவதால் அதிலே வருத்தமே கிடையாது. அதை மதிக்கிறதும் இல்லை. என்ன வருத்தம்னா, தோளிலே டவாலி மாட்டின இந்த இருபத்தேழு வருஷ அனுபவத்திலே எவ்வளவு சிரஸ்தாரு, தாசிலு, கலெக்டருங்களைப் பார்த்திருப்பேன் ? அதிலே ஒருத்தராவது நம்ம எஜமான் மாதிரி புண்ணியமூர்த்தி யாருமில்லே, அம்மா. மற்றவங்களைப் போல ‘ப்யூன்’னு அதிகாரக் குரலிலே கூப்பிட்ட நாளே கிடையாது. அந்தச் சந்தோஷம்கூட எனக்கு நீடித்து இருக்கக் கூடாது என்கிறது ஆண்டவனுடைய திரு உள்ளம்! மணியாகிறது. நான் வரட்டுங்களா?” என்று கேட்கும் போது உணர்ச்சிப் பெருக்கினால் நாத்தழுதழுத்தது அவனுக்கு.


காலச்சக்கரம் உருண்டு பத்து ஆண்டுகளை நசுக்கி விட்டது. நாதமுனி நாயுடுவின் மகன் அழகிரி கான்வென்ட் படிப்பை முடித்துக் கொண்டு திரும்பும் சமயம். கான்வென்ட் தலைவிக்குப் பர்மா கிளை ஸ்தாபனத்திலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.

அதாவது யோக்கியப் பொறுப்பும் நிர்வாகத் திறமையுமுள்ள ஒரு ‘ரைட்டர்’ தமது பள்ளிக்குத் தேவையென்பதை எழுதிக் கேட்டது அக்கடிதம்.

யோசித்தாள் கான்வென்ட் தலைவி. அந்தப் பதவி வகிக்கத் தக்க தகுதி பெற்றவன் அழகிரிதான் என்பதை நிச்சயித்து அவனை அழைத்து அவனது விருப்பத்தைக் கேட்டாள், அழகிரிக்குத் தர்மசங்கடமாகி விட்டது. இந்த அரிய சந்தர்ப்பத்தை இழக்கவும் மனமில்லை. கடிதம்தோறும் தன்னை வருந்தி அழைக்கும் தந்தையின் குரலை அலட்சியம் செய்யவும் துணிவில்லை. தினறினான்; தவித்தான். கைகளைப் பிசையாமல் அவஸ்தைப் பட்டான். அவன் சங்கடத்தை உணர்த்த பள்ளித் தலைவி ஒரு யோசனை சொன்னாள்:

‘போய் வேலையை ஒப்புக் கொண்டு ஒரு மாதம் வேலை பார்த்து விட்டுப் பிறகு தந்தையை அழைத்துச் சென்று விடுவது’ என்பதுதான் அது.

அளவிலா மகிழ்வுடன் இந்த யோசனையின் படி புறப்பட்டு, பர்மாவின் கிளை ஸ்தாபனத்தின் ரைட்டராக அமர்ந்தான். அதன் பிறகு விவரங்களை விளக்கி, தந்தைக்கு விஸ்தாரமாகக் கடிதம் எழுதினான்.

அழகிரி பர்மாவுக்கு வந்து ஒரு மாதத்திலிருந்து ஒரு வருஷம் ஓடிவிட்டது. வேலையிலிருந்து ரஜா எடுக்க இயலாமலே இருந்தது. ‘இதோ வருகிறேன். அதோ வருகிறேன்’ என்ற கடிதங்கள் மட்டும் தவறாமல் கிடைத்து வந்தன வயோதிகத் தந்தைக்கு.

இப்போது நாதமுனியின் மனம் உறுதியடைந்து விட்டது. “மகனே! உனக்கு முடிந்தபோது வா. சேமச் செய்தி மட்டும் தவறாமல் எழுது. வர இயலாததற்கு வருந்தி மட்டும் எழுதாதே. முடியும் தருணம் உடனே வா. உன்னைப் பரமன் காப்பாற்றுவார்” என்று நாலு வரிகள் எழுதிப் போட்டு விட்டு நிம்மதியடைந்து விட்டது போல நினைத்துக் கொண்டான் நாதமுனி.

மேலூர் சுந்தரகுப்பன் ‘குட்டை’யருகிலிருந்த கூரைக்குச்சினுள் நாதமுனி நாயுடு இவ்வாறு புலம்பித் தவித்துக் கொண்டிருக்க, அவன் அரும் புதல்வன் அழகிரிசாமி இதொன்றையுமே அறியாமல் பர்மியச் சூழ்நிலையில் உற்சாகமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான்.

பள்ளி மாணவிகளில் பொறுக்குமணி போன்ற எழிலரசி மாயேமிக்கு அழகிரியின் நன்னடத்தை பற்றி மிகுந்த சந்தோஷம்! கடையில் உட்கார்ந்து பணத்தோடு பணம் சேர்த்துக் கொண்டிருந்த தனது தந்தையிடம் ‘ரைட்டர் அழகிரிசாமி’யின் நேர்மை மிக்க சுபாவத்தை வானளாவப் புகழ்வாள். இடை நேர உணவு வீட்டிலிருந்து வந்ததும் ரைட்டருக்கு அதில் பாதியைப் பகிர்ந்து கொடுப்பாள்.

“மாயேமி! உன் அன்புக்கு ரொம்ப நன்றி, ஆனால் நாளையிலிருந்து எனக்கு நியேதும் இம்மாதிரி தரக் கூடாது” என்று ஒரு நாள் எச்சரித்தான் அழகிரி.

அழகி மாயேமி கன்னங்கள் குழியச் சிரித்து விட்டு, “ஓ, அப்படியா! பேசாமல் நான் கொடுப்பதை நீங்கள் சாப்பிட வேண்டியது. ரொம்பப் பேசினீர்களானால் அப்புறம் சாப்பாடும்கூட எங்கள் வீட்டிலிருந்து வந்து தான் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும்” என்று கூறினாள்.

அழகிரிக்கு அவளுடைய பரிகாசமும், உபசரணையும் இனிப்பாக இருந்தாலும் அதைச் சுவைக்க அவனுக்குத் தயக்கம்.

ஊரிலே பெரிய பணக்காரரான கொபாக மகளல்லவா மாயேமி? மேலும் பர்மியப் பெண்களின் சுபாவம் அவனுக்கு ஓரளவு புரிந்து விட்டிருந்தது? களங்கமற்ற முறையில் தாராளமாக ஆண்களோடு பேசிக் குலாவுவார்கள்; உபசரிப்பார்கள். உபகாரம் செய்வார்கள். அவர்களுடைய நடத்தையில் சிறிது பழுது ஏற்பட்டாலும், தயை, தாட்சண்யமின்றி நையப் புடைத்து அனுப்பும் சுய கௌரவமும், பண்பாடும் பர்மியப் பெண்களின் பிறவிக்குணம் என்பதை நன்கு தெரிந்து கொண்டிருந்ததால் அழகிரி அவ்வாறு நடுநடுங்கினான்.

“மாயேமி, நீ இன்னமும் சிறு குழந்தை யல்ல, இதெல்லாம் நன்றாக இல்லை பார்!“

“எதெல்லாம் ரைட்டர்?” குறும்பாகச் சைகை செய்து கேட்டாள் மாயேமி.

“நீ இவ்வாறெல்லாம் என்னுடன் வம்பு செய்வதைப் பார்த்து உன் தோழிகளெல்லாம் சிரிக்கிறார்கள் பார்!” என்று கூச்சப்பட்டுக் கொண்டு சொன்னான் அழகிரி.

“சிரிக்கட்டுமே! நமது அன்பு எப்படி அவர்களுக்குத் தெரியும்!” என்று கூறிக் கலகலவென்று நகைத்தாள் மாயேமி!

ஆ! அந்த நகைப்பில்தான் என்ன பூரிப்பு! எவ்வளவு கர்வம்! எவ்வளவு நம்பிக்கை!

“மாயேமி, பரம ஏழையாச்சே நான்…உனக்குத் தகுந்தவனில்லையே….” என்றான்.

“நான் நாள் கூட ரொம்ப ரொம்ப ஏழையாக இருந்தவருடைய பெண்தான்! பணம் நிரம்ப இருக்கிறதா என்று பார்ப்பதைவிட மனம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முக்கியம், ரைட்டர்! உங்கள் நேர்மையும், ஒழுக்கமும் என்னை ஆட்கொண்டு விட்டன!”

“ஐயையோ, இதெல்லாம் என்ன மாயேமி, பெற்றோர்களுடைய இஷ்டம். சம்மதம் இதெல்லாம்….”

“பெற்றோர்களுடைய அனுமதி கிடைத்துவிட்டது! எங்களில் நாங்கள் விருப்பப்பட்ட ஆடவரை மணக்க எங்களுக்கு உரிமை உண்டு…!”

“உன் பெற்றோர் சம்மதம் மட்டும் போதாதே. என் தகப்பனார் இந்தச் சம்பந்தத்துக்கு ஒப்பமாட்டார், மாயேமி…நீ, என்னை மன்னித்து விடு…”

“அதெல்லாம் முடியாத காரியம், உடனே போய் உங்கள் தந்தையை அழைத்து வாருங்கள், நான் சம்மதம் கேட்கிறேன்…”
அழகிரி பேச்சற்று உட்கார்ந்து போனான்!

“அடடா, ரொம்பக் களைத்து விட்டீர்கள்! வாருங்கள் வீட்டுக்குப் போவோம்” என்று வற்புறுத்தித் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் மாயேமி; அவனிடம் உள்ளத்தைப் பறி கொடுத்தாள் அந்த அணங்கு!

தந்தக் குமிழியிட்ட கட்டிலில் பஞ்சணையில் இருக்கச் செய்து பாலும் பழங்களும் தந்து அன்புப் பணி செய்யும் ஏத்திழையாளின் கோரிக்கையை அவன் புறக்கணிக்க வகை தெரியாமல் தவித்தான்!

அவன் மனக்கண் முன், பட்டை நாமமும். பகவத் சிந்தனையுமே குடி கொண்ட அவன் தந்தை நாதமுனியின் முகமும் அவனுடைய அல்லல் பிழைப்பும் தாண்டவமாடின!

மாயேமியின் தந்தை நிலைமையை ஊகித்துக் கொண்டு, அழகிரிக்கு இதோபதேசம் செய்தார்!

”எனக்கு இருப்பது ஒரே பெண் மாயேமிதான்! அவளுடைய சந்தோஷமே, எங்கள் வாழ்வின் இன்பம்! மணந்தால் உன்னைத்தான் மணப்பேன் என்று இரண்டு மாதங்களாகப் பிடிவாதம் செய்கிறாள். அழகிரி! இங்குள்ள அவ்வளவு பொருளும் ஐந்து லட்ச ரூபாய் ஆஸ்தியும் இந்த என் அருமைப் பெண் மாயேமியும் உன் வாய்ச் சொல்லால் உயிர் பெற இருப்பவை! நீ சம்மதம் தராவிடில் மாயேமி என்ன ஆவாளோ? நாங்களும் இந்தச் சொத்துக்களும் என்ன ஆவோமோ?”

“நான் ஒருவனாயின் கவலையில்லை…”

“அழகிரி! நாங்கள் மனிதர்கள், எங்களுக்கும் இதயமிருக்கிறது. உன் தகப்பனாரை அழைத்து வந்துவிடு, தள்ளாத வயதில் அவர் ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்று கூறிவிட்டுத் தமது அலுவலை முன்னிட்டு அவர் அழகிரியிடம் விடைபெற்றுக் கொண்டார்!

தேவ தேவனான அந்த முக்கண் படைத்த சம்புவே-பார்வதியில் பணிவிடையையும், பக்தியையும் மெச்சி, மனமுருகி அவளைப் பத்தினியாக ஏற்றுக் கொண்ட போது மனிதனான அழகிரி எம் மாத்திரம்?

நல்ல அழகியான மாயேமி தனது உண்மைக் காதலில் வெற்றி பெற்று விட்டாள்!

இப்போதும் அவனுடைய ‘ரைட்டர்’ உத்தியோகம் இருந்தது. மாதம் தவறாமல் வாங்கிய சம்பளம் அப்படியே நாதமுனிக்கு அனுப்பப்பட்டது.

“மாயேமி, இதெல்லாம் நன்றாக இல்லை” என்று கெஞ்சிய வருஷம் ஓடி அடுத்த ஆண்டு அதே நாள் வந்ததும் மாயேமி தன் காதல் கனியைக் கண்டு விட்டாள்! பர்மியர்களுக்குரிய சந்தன நிறமும், அழகிரிசாமிக்கு உள்ள மூக்கும் விழியும் பெற்றுச் சௌந்தரிய விக்ரஹமாக இருந்தாள் – மாசியாங்!


அன்று ஏதோ வேலையாக வாசலுக்குச் சென்ற மாயேமி, தத்தித்தாளுடன் உள்ளே வேகமாக ஓடி வந்து, “பார்த்தீர்களா உங்கள் சோம்பலின் விளைவை?” என்று தந்தித்தாளை வீசிப் போட்டாள்.

தந்தியைப் படித்துப் பார்த்தான். உடனே புறப்பட்டால் நாதமுனியின் ‘முக முழி’ கிடைக்கும் என்றது தந்தியின் வாசகம்.

மாயேமியின் சிவந்த முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூடப் பயம் அழகிரிக்கு! அன்றே விமானம் மூலம் புறப்பட ஆயத்தம் செய்து விட்டு, “மாயேமி” என்றான் நாத்தழுதழுக்க.

“போதுமே உங்கள் கொஞ்சல், பாவம், முதியவர் எப்படித் தவிக்கிறாரோ? பகவான் கிருபையில் பிழைத்து விட்டால் அவரை அழைத்து வாருங்கள்! கொஞ்ச நாட்களாவது அந்தப் பெரியவருக்குச் சேவை செய்கிறேன்” என்றாள் பெண்மையின் பெருமைக்கு எடுத்துக் காட்டான மாயேமி. நிறையப் பணமும் – காசும், கிழவருக்கு என்று இரண்டு கூடை நிறையப் பழங்களும், தித்திப்பு மீட்டாய் களும் கட்டிக் கொடுத்தாள்!


புறப்பட்ட மறு நாள் இரவு நாதமுனியின் சமீபம் அமர்த்திருந்தான் அழகிரி, ஊரெல்லாம் கும்பல் கூடிச் செல்வச் சீமானாக வந்து இறங்கிவிட்ட அழகிரியைக் கண்டு அதிசயித்தார்கள். வலுவிழந்து படுக்கையிலிருந்த நாதமுனி, ”அழகிரி, வந்துட்டியா? இனி என் நெஞ்சு வேகும்!” என்று ஆனந்த கண்ணீர் பெருக்கினான்!

“அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்பா! நல்ல வைத்தியம் பார்த்தால் உடம்பு சுகமாயிடும். புறப்பட்டுப் போயிடலாம் நாம்!” என்று ஆறுதல் கூறினான் அழகிரி.

“அப்பா, ஒரு தடவை போனது போதுமடா அப்பா? ஏதோ கடவுள் புண்ணியத்திலே அரை வயிற்றுக் கஞ்சிக்கு இருக்குது. பக்தவத்சலம் மகள் இருக்கா கிளி மாதிரி. வேண்டிய சொத்து இருக்கு அவருக்கு. கலியாணம் கட்டிக்கிட்டு ஹாய்யாக இரு, அப்பா!” என்றான் நாதமுனி.

நெஞ்சிலே தெகுப்புச் சுட்டமாதிரி துடி துடித்தான் அழகிரி, தகப்பனர் இருந்த பலவீனத்தில், அவருக்கு ஆஸ்திக மதப்பற்றுதலில் – பர்மியப் பெண்ணை மணந்துகொண்டு விட்டேன் என்று கூறும் தைரியம் வரவில்லை. அவனுக்கு! படுக்கையிலிருந்தபடி பக்தவத்சலத்தினிடம் மணம் பேசினான் நாதமுனி.

உண்மையைச் சொன்னால் தந்தையின் சாபத்தைப் பெற வேண்டுமே என்ற திகில், உறவினருடைய நிர்ப்பந்தம், நாலு வருஷங்களாக அழகிரிக்குத்தான் கொடுப்பது என்று இருந்த பக்தவத்சலத்தின் பேரன்பு எல்லாமாகச் சேர்த்து அழகிரியை ஊமையனாக்கி விட்டன! நெஞ்சில் மாயேமி நர்த்தனமாடப் பல்லைக் கடித்துக் கொண்டு ‘ஆண்டாளு’வின் கழுத்தில் தாலியைக் கட்டினான் அழகிரிசாமி! அதன் பிறகு மூன்று தினங்களுக்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை.

நாதமுனிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. வயோதிகமும் பிணியும் பறந்தோடிவிட்டன. மருந்து ஒரு கையும் நிம்மதி ஒரு கையும் கொடுத்து நாதமுனியைப் படுக்கையிலிருந்து தூக்கி விட்டன.

“நான் அழகா, மாயேமி அழகா? பார் நன்றாக!” என்பது போலப் பதினெட்டு வயது யுவதியாக நின்றாள் ஆண்டாள்.

‘ஐயையோ, மாயேமி! உன் அன்பை மறக்க முடியாது’ என்று நெஞ்சு அலறியது. மாயேமியும் மாசியாங்கும் மன அரங்கில் சுற்றிச் சுழன்றார்கள். தான் போய் அங்குள்ள தனது உடைமைகளை எடுத்துச் கொண்டு மறுவாரம் வந்து விடுவதாகச் சொல்லி விட்டுப் பறந்து வந்து விட்டான் மாயேமியின் பக்கலுக்கு!

அதை மெய்யென நாதமுனி நம்பினான். அவன் ஆண்பிள்ளை. ஆண்டாள் பெண்ணல்லவா? அவள் நம்பவில்லை. தனக்குப் போட்டியாக அங்கு யாரோ இருக்கிறார்கள் என்பதை மட்டும் ஊகித்து அதை மனத்தில் வைத்து மறுகினாள். மறு வாரம், மறுமாதம், மறு வருஷமும் ஓடிவிட்டது.

வருவதாகக் கடிதம் வந்ததே தவிர ஆள் வரும் வழியாக இல்லை. கிழட்டு மாமனாருக்குப் பணிவிடை புரிந்துகொண்டு கண்ணீரும் கம்பலையுமாகக் காலங்கழித்தாள் ஆண்டாள்.

ஆண்டாளின் வேதனையும் பிள்ளையின் கள்ளத்தனமும் நாதமுனியின் உயிரைக் குடித்துவிட்டன! வேதனையை எழுத்துக்களாக வடித்து ஆண்டாள் ஒரு கடிதம் எழுதினாள் கணவனுக்கு! பதிலை எதிர்பார்த்தாள்!

ஒரு நாள் கடிதம் வரும் நேரத்தில், ஒரு பெண் வந்து சேர்த்தாள்!

“யாரது?”

”இதுதானே நாதமுனி என்பவரின் வீடு?”

“ஆமாம், நீங்கள் யார்?”

“என் பெயர் ரகுமாயி, உங்கள் கணவர் அழகிரிசாமி எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். வரும்போது உன்னை அழைத்து வரும்படி என் கணவர் மூலம் கடிதம் வந்திருக்கிறது. என்னை உனக்கு முன்பின் தெரியாததால் இந்தப் புகைப்படத்தை உனக்குக் காட்டச் சொன்னார்; கடிதமும் கொடுத்தார். அது எங்கோ தவறி விட்டிருக்கிறது” என்றாள் வந்தவள்.

புகைப்படத்தை வாங்கிப் பார்த்தாள்! தனது திருமணக் கோலத்துப் படம் அது!

கணவனிடம் சேரப்போகும் ஆவலில் பெற்றோர்களுடைய ஆட்சேபனையைக் கூடப் பொருட்படுத்தாமல் துணிந்து அவளுடன் புறப்பட்டு விட்டாள் ஆண்டாள்.

ரங்கள் விமான நிலையத்தில் இறங்கியதும் ரகுமாயி ஒரு ஹோட்டலுக்குச் சென்றாள். அங்கே ஆண்டாளை இருக்கச் சொல்லிவிட்டு நேராக ஸ்வேட்கான் பகோடாவுக்குச் சென்றாள், தம பியிடம் யாவற்றையும் கூறி இனி இல்வாழ்வில் தனக்கு இடமில்லை எடுத்துக் காட்டி, பிஷூணியாவதற்கு அனுமதி பெற்றாள். அடுத்த வினாடி அவளுடைய அழகிய கூந்தல் களையப்பட்டு— துவராடை கொடுக்கப்பட்டது!

அவளுடைய மனம் அதன் பிறகுதான் அமைதியடைந்தது. மாலையில் நாலு மணிக்கு ஆண்டாள் இருந்த விடுதிக்கு வந்தாள். அழகியாக இருந்த ரகுமாயி, சன்யாசினியாக உருமாறி வந்ததும் ‘ஐயையோ!’ என்று மிரண்டு அலறினாள் .ஆண்டாள்.

“பயப்படாதே, ஆண்டான். வா! உன் கணவரிடம் கொண்டு சேர்க்கிறேன்” என்று கூறி அவளுடன் புறப்பட்டாள்.

தாழ்வாரத்திலிருந்த சோபாவில் கவலை தோய்ந்த நிலையில் அமர்த்திருந்தான் அழகிரி.

சுட்டழகி மாயேமி காவியாடையுடன் முன்னேவர, அவள் பின்னால் வரும் ஆண்டாளையும் கண்டதும், அவன் நாடிகளில் ரத்தம் உறைந்து விட்டது! விழிகள் நிலைகுலைந்தன!

‘அஹ்ஹா!” என்று சிரித்தாள் மாயேமி.

“அழகிரி ! உண்மையான உன் உள்ளத்துக்குள் இவ்வளவு கள்ளம் எங்கு ஒளித்திருந்தது-எனக்குத் தெரியாமல்? பகவான் அருளால் நான் சிறு வயதில்…கற்ற தமிழ் மொழி இன்று என்னைக் காத்தது!

“ஆண்டாளுடைய-அவள் உங்களுக்கு எழுதிய கடிதம் கையில் கிடைத்தது. அழகிரி, என்னை மறந்து அவளை மணந்தாய்! அவளை மறந்துவிட்டு என்னைச் சீராட வந்தாய்! ஐயோ, நேர்மையின் உறைவிடம் என்று உன்னை நம்பினேனே நான்! அழகிரி, இந்த இளம் பெண்ணின் வாழ்வு மலருவதற்கு நான் இடம் தந்து விட்டேன். ஆண்டாள். இதோ பார்! உன் கணவன் உன்னை மணந்து கொண்டதே உன் கடிநத்திலிருந்துதான் தெரிந்தது! பர்மியப் பெண்களுக்குப் பிறர் வருந்தப் பார்த்துச் சகிக்கும் குணம் கிடையாது. குழந்தை மாசியாங் இருக்கிறான். வேண்டிய அளவு செல்வம் இருக்கிறது!” என்று கூறிக்கொண்டே போனாள் மாயேமி.

“மாயேமி, எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்று வெறி பிடித்துக் கூவினான் அழகிரி.

“எனக்கும் ஒன்றும் வேண்டாம்….” என்று பொருமினாள் ஆண்டாள்.

“கூடாது. உங்களிருவருக்கும் எல்லாம் வேண்டும்! எனக்கு மனத்தில் எதிலும் பற்று கிடையாது. நிராசை பரம சுகம்! ஆசைப் பட்டு அழகிரியை மணத்தேன். நிராசையுடன் இதோ பகவானுடைய அருளை நாடிச் செல்கிறேன். என்னைப் பெற்றவர்கள் இன்றோ, நாளையோ பிஷூக்களாகி விடுவார்கள்!”

தடதடவென்று படியேறி வரும் ஓசை கேட்டுத் திரும்பினாள் மாயேமி, மகளைத் துறவிக் கோலத்தில் கண்ட கொபாசு அப்படியே பிரமித்து நின்றார் ஒரு கணம்.

கொபாஸு கண்ணீர் பெருக, ”மாயேமி! போதிஸத்துவன் உனக்குச் சாந்தி அருளுக, இனி நாங்களும் உன் வழியே வந்துவிடுகிறோ ம்! ஏழையாக இருந்தோம். ஆண்டவன் செல்வமும் சுகமும் கொடுத்தான், அதை ஆண்டோம். இனி புத்த பகவான் அடிகளைத் தொழுவதே – அவனுடைய தரும் நெறிகளைப் பரப்புவதே நம் பணி, குழந்தாய்…” என்று மொழிந்தார்.

அனைத்தையும் பார்த்த ஆண்டாளின் நெஞ்சு குமுறியது! தன் நிமித்தம் வாழ்வைத் துறந்து விட்ட மாயேமியின் அடிகளில் விழுந்து, “நான் என்ன அபராதம் செய்தேன்? ஏன் என்னைத் தண்டித்து விட்டுப் போகிறீர்கள் அக்கா?” என்று வீறிட்டாள் ஆண்டாள்.

தந்தையின் வருத்தத்தைக் கண்டு கலங்காத மாயேமி, ஆண்டாளுடைய அலறலைக் கண்டு கலங்கிவிட்டாள்; கண்ணீர் வழிய, “இதோ பார் உனக்கு மாசியாங்கைக் கொடுத்திருக்கிறேன்…இந்தா,” என்று கால்களைக் கட்டிக்கொண்ட குழந்தையை எடுத்து ஆண்டாளிடம் கொடுத்தாள்.

மாயேமிக்கு முன்னதாகக் கொபாஸும், அவள் தாயும் வெளியேறி நடந்தார்கள்!

மாசியாங் தாயிடம் தாவப் பார்த்தாள்! வீறிட்டு அழுதாள்.

மாயேமி “அதோ பார், அம்மா!” என்று ஆண்டாளைக் காட்டி விட்டு நடந்தாள்.

அழகிரி ஒன்றும் தோன்றாமல் அயர்ந்து போய் அசைவற்று நின்றான்.

– 1957-06-23, கல்கி.

கு.ப.சேது அம்மாள் கு.ப.சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை. வாழ்க்கைக் குறிப்புசேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *