மாமியாரின் அன்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 35 
 
 

மாணிக்கம் கருத்தான, பொறுப்பான இளைஞன். பிளஸ் டூ முடித்த பின்னர் கல்லூரிக்குப் போக வேண்டியவன், கல்லூரிக்குப் போகாமல் , சுயதொழிலில் இறங்கினான். ஓரளவு வெற்றி பெற்றான். வருவாயும் பெற்றான். அவன் , இளைய வயதில் சுய தொழிலுக்குச் சென்றதற்குக் காரணம் – அவனுடைய தந்தையார் பரமசிவம் , மிகப்பெரிய ஜவுளி நிறுவனத்தில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். அதன் உரிமையாளர் பரமசிவத்தின் நண்பர் என்பதால் அங்கு வேலை செய்வது பிடித்துப் போய் வேலை பார்த்து வந்தார். உரிமையாளர், திடீரென அகால மரணம் அடைந்ததால், வெளிநாட்டில் இருக்கும் அவரது வாரிசுகள் நிறுவனத்தை கை மாற்றிக் கொடுத்து விட்டு விமானம் ஏறி வெளிநாடு போய் விட்டனர். புதிய நிர்வாகம், பழைய ஆட்களை அனுப்பி விட்டது. அப்போது அப்பாவுக்கு ஆறுதல் கூறிய மாணிக்கம் சுயதொழில் என்னும் ஹோதாவில் துணிச்சலுடன் குதித்தான். என்னதான் அந்த சுயதொழில் என்கிற உங்கள் மனக்குரல் எனக்கு கேட்கிறது. வீடு கட்ட கடன் வாங்கி பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு கட்டித் தர தகுந்த ஆட்கள் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து , மாணிக்கம், அவர்களுக்காக வீடு கட்டித் தரும் பணியில் துணிந்து இறங்கினான். குறுகிய காலத்தில் நம்பிக்கைக்குரிய ஒப்பந்தக்காரராக நற்பெயர் பெற்றான்.

காலத்தை வீணாக்காமல், வருகிற புராஜெக்ட்டை எல்லாம் ஏற்றுக் கொண்டு பழுது சொல்ல முடியாமல் முடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் மாணிக்கம். அப்படியாக , அவனுடைய கிளையன்ட் ஆக வந்தவர் பூவனம் கிராமத்தின் தலைக்கட்டு கார்மேகம். நகரத்திற்கு மாணிக்கத்தை தேடி வந்து பார்த்து வேலை கொடுத்தார். அவர், சிதிலமடைந்த மூதாதையர் வீட்டை இடிக்காமல் மாற்றியமைத்துக் கொடுக்கும் பணியை அவனிடம் கொடுத்தார். அதனை ஏற்ற மாணிக்கம் , குறுகிய கால அளவில் பழைய வீட்டை புதிது போல் மாற்றியமைத்துக் கொடுத்தான்.

சில மாதங்கள் கழித்து, கார்மேகம் , மாணிக்கத்தை கிராமத்தில் உள்ள அந்தப் புதிய வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ஒரு நாள் மாலை . அவரது வீட்டிற்குச் சென்றான் மாணிக்கம். மாடியில் ஊஞ்சலில் அமர்ந்து இருந்த கார்மேகம் முகம் மலர அவனை வரவேற்றார். எதிரில் இருந்த மர நாற்காலியில் அவனை அமரும்படி கூறினார். அவரே பேச்சைத் தொடங்கட்டும் என்று மாணிக்கம் காத்திருந்த வேளையில், அவரது மனைவியும் மகளும் அங்கு வந்தனர்.

கனமான உடல்வாகு கொண்ட அவருடைய மனைவி சரஸ்வதி, எளிய சேலை அணிந்திருந்தார். இளமை மாறாத முகம். இந்த வயதிலும் பின்னிய நீண்ட கூந்தலை முன்னால் போட்டிருந்தார். அவருடைய ஒல்லியான வார்ப்பாக சூரிதார் அணிந்த அவரது மகள் எழிலரசியின் வதனம் அவனை வசீகரித்தது. அவர்களை அவன் அளவெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் சரஸ்வதியின் கம்பீரக் குரல் ஒலிக்க , அவன் பார்வையை கார்மேகம் பக்கம் திருப்பினான்.

“என்ன அவர் கிட்ட சொல்லிட்டிங்களா?”

கார்மேகம் “இப்ப தான் வந்தாரு … நீயே சொல்லேன்”

“சரியான ஆளு.. பேருதான் ஊர் தலைக்கட்டு..“ என்று கூறி விட்டு மாணிக்கத்தைப் பார்த்தார் சரஸ்வதி.

“சுத்தி வளைக்காமல் வந்துடறேன் பா … ஒன்னை மாப்பிள்ளையாக்கிறதா முடிவு பண்ணி இருக்கோம்” என்றார் சரஸ்வதி.

மாணிக்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. இத்தனை வசதி படைத்தவர்கள் , என்னையா தேர்ந்தெடுப்பார்கள்? சுதாரித்துக் கொண்டு மெல்லிய குரலில் “மேடம் எங்க அப்பா அம்மா கிட்ட கேட்கணும்… அது தவிர என்னுடைய தங்கைக்கு திருமணம் முடிக்கல இன்னும் … “

சரஸ்வதி பேசினார் “அதுக்கு என்ன.. நீங்க கல்யாணம் பண்ணிகிட்டு அண்ணனும் அண்ணியுமா நின்னு ஜாம் ஜாம்ன்னு தங்கச்சி திருமணத்தை நடத்துங்க… பொண்ணு கேட்டு தான் போறது வழக்கம். முறை.. இருந்தாலும் பராவாயில்ல.. நாளைக்கு ஒங்க அப்பா அம்மாவை வந்து நாங்க பார்த்துடறோம். சுப காரியம் தள்ளிப் போட கூடாது இல்ல”

மாணிக்கம் அவர்களிடம் விடை பெற்றுச் சென்றான்.

மறுநாள் மாலை நேரத்தில் சரஸ்வதி கணவர் கார்மேகத்துடன் அவனது வீட்டுக்கு வந்தார். அவர் , தம்முடைய நயமான பேச்சால் மாணிக்கத்தின் பெற்றோர் மனங்களை வென்று திருமணத்திற்கு இசைவு பெற்றார். மேலும் , திருமணத்திற்குப் பின், மாப்பிள்ளை எங்கள் வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் உங்களை வந்து பார்த்துக் கொள்வார். உங்கள் மகளின் திருமணத்தை நடத்தி வைப்பார் என்று பேசி அதற்கும் மாணிக்கத்தின் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றார்.

ஒரு சுபதினத்தில் மாணிக்கத்திற்கும் எழிலரசிக்கும் திருமணமானது, அவன் கட்டிக் கொடுத்த கார்மேகத்தின் மூதாதையர் வீட்டில் நடைபெற்றது.

மாணிக்கம் கார்மேகத்தின் வீட்டில் இருந்து தொழில் பார்க்கச் சென்று வந்தான். அப்பா அம்மாவையும் தினமும் போய் பார்த்து அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டு வந்தான். அவனுடைய மாமனாரும் மாமியாரும் அவனிடம் மிகுந்த மரியாதை காட்டி வந்ததால் பணியாட்களும் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டனர், எல்லாவற்றுக்கும் மேலாக, எழிலரசி அவன் மீது பொழிந்த காதலில் அவன் கட்டுண்டு இருந்தான்.


அன்றொரு நாள். எழிலரசியின் பிறந்த நாள். இன்றாவது வீட்டிலேயே இருங்கள் என்று மனைவி கேட்டுக்கொண்டதால் வீட்டிலேயே இருப்பது என்று முடிவு செய்து அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த நேரம். மனைவி கோயிலுக்குப் போகலாம் வாங்க என்று அழைத்தாள்.

காலை ஒன்பது மணி. அந்த ஊரில் உள்ள பொன்னி அம்மன் கோயிலுக்கு நால்வரும் சென்றனர். அம்மனை தரிசித்து , அன்னதானம் அளித்து முடித்து நால்வரும் நடந்தே வீட்டை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தனர். வழியில் இருந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவன் அவர்களுக்குள் பேசுவது போல் இவர்களுக்கு கேட்கும்படி உரக்க பேசினான்.

மற்றவர்கள் நகைத்துக் கொண்டிருந்தனர்.

“பெரிய வீட்டுக்கு வீட்டோட மாப்ளயா போயிட்டே.. மாமியார் பெண்டாட்டி உடுப்பு எல்லாம் துவைச்சு கொடுக்கற நடமாடும் வாஷிங் மெஷின் நீதானே… என்ன அந்த நாள் உடுப்பையும் துவைக்கணும் நல்லா சமைக்க கத்துக்கிட்டியா முன் எல்லாம் சொல்வாங்களே அது போல கையில ஒரு கூஜா வெச்சுக்கோ”

சரஸ்வதி நின்றார். கார்மேகம் , “பேசிட்டு போகட்டும் வா” என்று மனைவியின் கரங்களைப் பிடித்தார். மாணிக்கமும் “போகலாம் வாங்க அத்தை” என்றான். கணவன் பிடியை விட்டு விட்டு வேகமாக டீக்கடையை நோக்கி நடந்த சரஸ்வதி, வாய்க்கொழுப்பில் பேசிய நபரையும் அவனுடைய கூட்டாளிகளையும் நையப் புடைத்தார். ஓடினார்கள். ஓடியவர்களை விரட்டி விரட்டி அடித்தார். மொத்து வாங்கிய பின்னரும் தகாத வார்த்தை பேசியவன் “நான் யார் தெரியுமா” என்றான். அதனால் அவனை மேலும் அதிகமாக அடித்தார் சரஸ்வதி. தன்னுடைய மாப்பிள்ளையைப் பற்றி வம்பு பேசியவர்களை சரஸ்வதி விளாசிய சம்பவம் ஊரெங்கும் பரவியது.


ஒரு நாள் . மதிய நேரம். செஞ்சியில் ஒரு கட்டிட கட்டுமானத்தை கையில் எடுத்துக் கொண்டிருந்த மாணிக்கம் முதல் மாடியைப் பார்வையிடும் சமயத்தில் அவனது கைபேசி ஒலித்தது.

“யோவ். நீதானே கார்மேகத்தோட மருமகன்?“

“ரொம்ப மரியாதையோட பேசறிய யார் தம்பி நீ?”

“என் பேரைத்தான் ட்ரூ காலர் ல பார்த்து இருப்ப இல்ல.. இதோ பார் ஒண்டியா திண்டிவனத்துக்கு வந்த ஒன் மாமியாரை நாங்க கடத்திடோம்”

“இந்த நம்பர் ஜிபேல இருக்கா ஒங்க ஆஸ்பத்திரி செலவுக்கு ஏதாவது அமவுன்ட் அனுப்பட்டுமா”

“யோவ் மென்ட்டல் நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசறே? திண்டிவனம் பஸ் ஸ்டான்டிலிருந்து காஞ்சிபுரம் போற ரூட்ல இருக்கிற ஒரு பழைய கல்யாண மண்டபத்துல அதான் ராசி கல்யாண மண்டபத்துல நாங்க இருக்கோம் .ஐம்பது இலட்சம் ரூபா ரொக்கமா ரெடி பண்ணி எங்க கிட்ட கொடுத்துட்டு ஒன் அத்தையை காப்பாத்திக்கோ”

“நீங்க எத்தனை பேருப்பா இந்த கடத்தல் குழுவுல?”

“நாங்க அஞ்சு பேரு … அதை எதுக்கு கேட்கறே?”

“முதல்ல நீங்க அஞ்சு பேரும் அந்த அம்மா கிட்டேந்து ஒங்கள காப்பாத்திக்கற வழியைப் பாருங்க”

“என்னய்யா பேசற… ஆ ஆ ஆ…”

எதிர்முனையில் பேசியவனின் போன் கீழே விழுந்திருக்கும் என்று மாணிக்கம் நினைத்தான்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *