கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 383 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கனகம், வாறியோ கோயிலுக்குப் போவம்?”

“எந்தக் கோயிலுக்கு?”

“மடுமாதர் கோயிலுக்குத் தான்”.

“என்னணை அக்கா! எங்கள் ஊருச் சனங்களெல் லாம் உந்தக் கோயிலுக் கெண்டுதான் பெட்டி படுக்கைகளோடே போகுதுகள். அவ்வளவுக்கு மடுமாதா கோயில் புகழ்பெற்றதோ?”

“ஓம்டி தங்கச்சி! எந்தக் கோயிலுக்குப் போகாவிட்டாலும் மடுமாதா கோவிலுக்குப் போன எல்லாக் குறையும் நீங்கிப்போகும்”.

“பின்னே, எல்லா ஊரிலை இருந்தும் சனங்கள் வருமே?”

“வேறேயென்ன, சாதி சமய பாகுபாடின்றி எல்லாச் சமயத்தவர்களும் எல்லாச் சாதியினரும் பெருந்தொகை யாகப் பங்கு பற்றும் ஒரே ஒரு கோயில் மடுமாதா கோயில்தான் என்று உனக்குத் தெரியாதே?”

“நானெண்டால் இதுவரையும் கேள்விப்படவில்லை.”

“அப்பப்பா! அந்தக் கோயிலுக்கு வரும் சனம் நீக்குப் போக்கில்லாமல் தான் இருக்கும். அவ்வள வுக்குப் பெருவாரியான சனம் வரும்”.

“அப்பிடியெண்டால் எல்லாச் சனமும் எங்கே தங்கிறது?”

“கோயில் காட்டுக்குள்ளே தான் இருக்குது. அதனாலே சனமெல்லாம் தாங்கள் விரும்பின மாதிரிக் கூடாரங் ரங்கள் அமைத்தும் மரங்களுக்குக்கீழும் தங்குவார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாக இருந்து சமைப்பதைப் பார்த்தால் மறக்கவே முடியாது.”

“நீங்கள் பின்னே, போகிறியளோ”

“போகாமலே உன்னை வரச் சொல்லுறன்”

“இப்ப வாறத்துக்கு வசதியில்லை”

“அதுக்கெல்லாம் நான் இருக்கிறன் நீவாவன்”

”உங்களுக்கு என்னை கூட்டிக்கொண்டுபோக விருப்பமாக இருக்கும். ஆனால் உங்கள் கணவருக்கு…”

“இஞ்சார் கனகம், மற்றவையுந்தை புருசன்மார் மாதிரி என்ரை புருசனையும் நினைக்கிறியோ? என்ரை புருசன் தங்கமானவர், அவரோடைஆலோசித்துப் போட்டுத்தான் உன்னைக்கேக்க வந்தனான்.”

“எணையக்கா என்ரை மகன் சரியான துடினக் காரனனை”

“அதுக்கெல்லாம் நானெல்லோ இருக்கிறன்”

“அப்ப பின்னை வாறனக்கா”

“சரி சரி உடுப்பெல்லாத்தையும் கட்டிக் கொண்டு எங்கள் படலையடிக்கு வாவன். கார்க்காரன் பேசப் போகிறான். நானும் போய்ச் சாமான் சக்கட்டுகள் எடுத்து ஒழுங்குபடுத்த வேணும்” வந்த காரியத்தை இவ்வாறு பேசி முடித்துக் கொண்டு அடுத்த வீட்டுக் கோகிலம் போய்விட்டாள்.

2

“இஞ்சாருங்கோ’ இந்த மரத்துக்குக் கீழே இருந்து கொள்ளுங்கோ. சமைக்கிறத்துக்கு இடம் பார்த்துக் கொண்டு வாறன்” என்று சொல்லி விட்டு இடம்பார்ப் பதற்காகக் கோவில் வீதிவழியே சென்றார் கோகிலத் தின் புருசன் நந்தி.

“கனகம், கோயிலடியைப் பார்த்தியோ? எவ்வளவு சனம்”.

“ஓமக்கா! உப்பிடிச்சனத்தை நான் சீவியத்திலும் காணமாட்டேன்”

“கனகம்! அதோபார் அந்த மரத்தடியிலை பெடியங் களும் பெட்டையளுமாய் கூடிச் சமைக்கிறதை” “எல்லாம் கலியாணம் க்ட்டாததுகளோ?’

“பின்னையென்ன, கல்லூரிக் காதலர்கள் மாதா கோயில்லை வந்து சந்தித்துத்தான் ‘புருசன் பெண்சாதி மாதிரிச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுப் போறவை”

கோகிலம் சொன்னதும் கனகம் அந்தக் காதலர் களை உற்றுப் பார்த்தாள். அங்கு மூன்று கன்னிப் பெண்களுடன் சேர்ந்து சமைப்பவனைக் கண்கொட்டா மல் உற்று நோக்கினாள். அவனைக்கண்டதும் அவ ளுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. அவளது கடந்த கால நிகழ்ச்சிகளை அது நினைவுபடுத்தியது. இவ்வளவு காலமும் அடக்கிவைத்திருந்த சம்பவங்கள் யாவும் சக் கரம் போல் சுழலத் தொடங்கின…

***

குமாரும் கனகமும் ஒரே வகுப்பு மாணவர்கள். அவர்கள் இருவரும் நாலாம் வகுப்புத்தொடக்கம் ஏச். எஸ். ஸி. வகுப்புவரை ஒன்றாகவே படித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றாகப்படித்ததினாலோ என்னவோ இருபேரின் உள்ளங்களும் ஒன்றோடொன்று இணைந்து வந்தன.

அவள் கல்லூரிக்கு வராவிட்டால் அவனுக்கு ஆத்திரமாகருக்கும்.: அவன் கல்லூரிக்கு வராது போனால் அவளுக்கு ஆத்திரமாக இருக்கும். இதனால் இருவருமே கல்லூரிக்குத் தவறாது சமூகம் கொடுத்து வந்தனர். இப்படியே இருவரும் தவறாது சமூகம்கொடுத்துக் கல்லூரியின் ஆண்டுவிழாவிலே தங் கப் பதக்கம் பெறுவதற்குக் காரணமாக ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும். அதுதான்… காதலோ?

கல்லூரி விடுவதற்கு அரைமணித்தியாலத்திற்கு முன் கல்லூரியின் பக்கம் போனால் னையோ காட்சிகளையெல்லாம் காணலாம். பிள்ளைகளை எத்தனை எத்த ஏற்றவந்த மாட்டுவண்டிகள் ஒருபக்கமும், மோட்டார். வண்டிகள் இன்னொரு பக்கமும், ‘நாற்றிசைக்கும் புறப் படுவதற்கு ஆயத்தமாக நிற்கும் ‘பஸ்” வண்டிகள் வேறொரு ஃபக்கமுமாக அலங்கரித்துக்கொண்டு நிற் கும் காட்சிகள் காண்போரைக் களிப்பூட்டவல்ல கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

நாலுமணிக்குக் கல்லூரியின் கடைசிமணி டாங்…டாங்… என்று அடித்ததும் நாலா பக்கத்திலு மிருந்து மாணவ மாணவியர் ஓடிஓடிச் சென்று தங்கள் தங்கள் வாகனங்களில் ஏறி மறைந்துவிடுவார்கள்.

வெளிமாணவர்கள் சென்றதும் அவர்களுக்குப் பின் ‘போடிங்’கிலே தங்கும் மாணவ மாணவியர் தேநீர் அருந்திவிட்டு உலாவுவதற்காகக் கல்லூரிக்கு வெளியே வரும்வரை கல்லுண்டாய் வீதியிலே காதலர்கள் காத் துக்கொண்டு நிற்பர். குமாரும், கனகம் வரும்வரை காத்து நிற்பான்.

கனகம் வந்ததும் மிக்க மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொண்டு கல்லுண்டாய் வீதியால் நடப்பான். இருவ ரும் ஒருவரை ஒருவர் கட்டுண்ட நிலையில் காதல் கதைகள் பேசிக்கொண்டு நடப்பர். சூரியன் கடலுள் மறையும் வரை கல்லுண்டாய் வீதியில் குமாரையும். கனகத்தையும் காணலாம்.

ஒருநாள்-

“கனகம் எங்கள் இருவரதும் காதல் இப்படி கல் லுண்டாய் வீதியிலே நடந்துகொண்டிருந்தால் என்னாவது?” என்று குமார் பேச்செடுத்தான்.

“குமார்! எப்படி முடிவடைய வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?”

“கல்யாணத்தில் முடிய வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.”

“அப்படியா?” ஆச்சரியத்துடன் கனகம் கேட்டாள்.

“ஏன்? ஆச்சரியப்படுகிறாய். இதோ இன்றைக்கே உன்னை மனைவியாக்கி விடுகிறேன்.” அவளது பூங்கொடி போன்ற கரங்களை வருடியவாறு அவளைத்தன் பக்கத்தில் இழுத்துக்கொண்டே சொன்னான்.

“குமார் !ஏன் அவசரப்படுகிறீர்கள்? காலம் வரும் போது கல்யாணம் செய்து கொள்வோம்” என்றாள் கனகம். அவளுக்குக் கூச்சம்.

“காலம் வரும்வரை காத்துக் கொண்டு இருக்கச் சொல்கிறாயா கனகம்?” அவளது சின்ன இடையைப் பற்றி அணைத்தான் குமார்.

“வேறு என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்?”

“கனியை வைத்துக்கொண்டு பசிக்க இருக்கச் சொல்கிறாயா?”

“குமார்!உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பசியை நீங் கள் தீர்த்துக்கொள்ளலாம், பிறகு என் கதி?”

”உனக்கென்ன வந்துவிடப் போகுது. நான்தான் உன்னை என்மனைவியாக்கிக் கொள்ளப் போகிறேன். நானிருக்க நீயேன் கவலைப்படுகிறாய், வா”

***

இரண்டு மாதங்களின் பின் ஒரு நாள்-

“அத்தான்! நாளைக்கு நான் வரமாட்டேன்”

“ஏன் உடம்புக்குச் சுகமில்லையா?”

“ஊம்… ஊம்… சொல்லமாட்டேன்” விஷயத்தைச் சொல்ல வேண்டும், சொல்லவேண்டுமென்று யோசித் துக் கொண்டிருந்த கனகம் வெட்கத்தினால் சொல்லத் தயங்கினாள்

“என்னைப்போல், வேறு யாரையும்…”

“என்ன!… உங்களைப்போல் வேறு ஒருவரையும் ‘காதலிக்கிறேனா? என்ன அநியாயம்” அழுதாள். கண்டோர் மயங்கும் கட்டழகியான கனகம் ஏக்கத்தால் வாடி நின்றாள்; அவளது கண்களிலிருந்து கண்ணீர் கரைந்தது.

“ஏன் அழுகிறாய்? உண்மையைச் சொல்லு”‘

”உங்களுக்குத் தெரிய வேண்டுமே”

“என்ன கனகம் சொல்கிறாய்?”

“நான் ஒருபிள்ளைக்குத் தாயாகிவிட்டேன் அத்தான்.”

“என்ன, தாயாகிவிட்டாயா?”

“ஆம் அத்தான்! என் அப்பா கேள்விப்பட்டால்… ஐயோ! என்னைக் கொன்றுவிடுவாரே” அவளது உதடுகள் நடுங்கின.

“கனகம்! சும்மா அழுகையை விட்டிட்டு உண் மையைச் சொல்லேன்?”

“உண்மைதான் அத்தான்.”

“உண்மையாகவா?”

“பிள்ளே…”

‘இதுக்காகவா அழுது கொட்டினாய்? பைத்தியம் இது ஒரு சின்ன விஷயம்.”

“என்ன இது ஒரு சின்ன விஷயமா?”

“அத்தான் ஆண்களுக்கு இது ஒரு சின்ன விஷய மாக இருக்கலாம். ஆனால்… பெண்களுக்கு..”

“பெண்களுக்கு மாத்திரம் என்னவாக்கும்.”

“கல்யாணம் செய்ய முன்பு கருத்தரித்ததை ஊர வர்கள் அறிந்தால் என்ன செய்வார்கள்?.பாதகி, பழி காரி, வேசை என்றெல்லவா தூற்றுவார்கள். இப்படி நடந்த பின்பு ஏறுநடையுடன் நடக்க முடியுமா?”

“ஏன் நடக்க முடியாது?”

“ஆண்களை இந்த உலகம் எப்படியும் நடக்க அனு மதிக்கும். ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்துத் தண்ணீர் கண்ட இடத்திலே கழுவுவார்கள் என்றல்லவா கூறி அவனை ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் எத் தனை தடவையும் வரவேற்று அவனை வாழ வைக்கிறது. ஆனால் பெண்களையோ ஒரே ஒரு தடவைக்கு மேல் ஒதுக்கித் தள்ளி விடுகிறது. இந்தப் பாழ்பட்ட சமூ கத்திலிருந்து நான் தப்புவதற்கு வழி……?”

கனகம் உன்னைத்தப்ப வைக்க வழி தெரியா மலா இதில் ஈடுபட்டேன்.”

“எப்படி அத்தான் என்னைத் தப்ப வைக்க.ப் போகிறீர்கள்? கல்யாணம் செய்தா?”

“என்ன!….கல்யாணமா? யாருக்கு? நான் படிக் கிறேன். நீயும் படிக்கிறாய். எப்படிக் கல்யாணம் செய்வது?’

”ஏன்? கல்யாணம் செய்யக் கூடாதா?”

“கல்யாணம் செய்தால் தொடர்ந்து படிக்க முடி யுமா? தொடர்ந்து படிக்காவிட்டால் உத்தியோகம் எடுக்க முடியுமா? உத்தியோகமாகும்வரை கல்யாணத்தைப் பற்றிப் ‘பேச்செடுக்காதே.”

‘”த்தான்! என்னத்தான் சொல்லுகிறீர்கள்? இதுக் காகத் தான் காலம் வரும்போது கல்யாணம் செய்வோம் என்று சொன்னேன்: என் சொல்லைக் கேளாமல் ‘பெண் புத்தி பின்புத்தி’ என்று சொல்விவிட்டு…”

“இதனாலென்ன குடியா முழுகிப் போய்விடும். இதையிட்டு நீ ஏன் கவலைப்படுகிறாய்?”

“அத்தான் கற்பிலே வழுக்கி விழுந்த நான் கவலைப் படாமல் என்ன செய்ய முடியும்?”

“நான் சொல்வதைக் கேட்கப் போகிறாயா …? இல்லையா…?”

“நீங்கள் சொல்வதை எப்போதாவது மறுத்திருக்கிறேனா?”

“கனகம்! அன்று எனக்கிருந்த தாபத்தைத் தீர்ப்ப தற்காக என்னென்னவோ எல்லாம் சொல்லி அப்படி நடந்துகொண்டேனே ஒழிய இப்படி நேருமென்று நான் கனவிலும் கருதவில்லை.”

“அத்தான்! சொல்வதை மறைத்துக்கொண்டு ஏதேதோ அலட்டுகிறீர்கள்.”

க்னகம் நீ தாயானதையும் நான் தகப்பனானதையும் உன் பெற்றோரும் என் பெற்றோரும் அறிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?”

”என்ன நடக்கும்?”

“எங்கள் இருவரது சந்திப்பையும் நிறுத்திவிடு வார்கள். திருமணமும் தடைப்பட்டு விடும். திருமணம் செய்து சிறப்பாக இருக்கவேண்டுமானால் நான் சொல் வது போல் நடக்கவேண்டும்.”

“அதைத்தான் மறைக்காமல் என்னிடம் சொல் லுங்களேன்?*

“கனகம் உன் வயிற்றிலே வளர்ந்துவரும் சிசுவை அழிக்கவேண்டும்.”

‘”ஆ … ! ஐயோ! என்ன கொடுமை! என் வயிற்றிலே வளர்ந்து வரும் கருவை. அழிக்கச் சொல் கிறீர்களா?”

“ஆம்!”

“அத்தான்! பிள்ளை பெறுவதற்குக் கெஈடுத்து வைக்க வேண்டும். எல்லோருக்கும் பிள்ளைச் செல்வம் சுலபமாகக் கிடைக்காதத்தான். ஒரு பிள்ளையாகுதல் பெற்று ‘மலடி’ என்ற பெயரை மாற்றுவதற்காக எத் தனை எத்தனை பெண்களெல்லாம் நேர்த்திக்கடன் செய்கிறார்கள் தெரியுமா? பிள்ளை இல்லாததால் எத்தனை பேர் மறுமணம் செய்திருக்கிறார்கள் தெரியுமா? அப் படி இருக்கக் கிடைத்த செல்வத்தை அழிக்கச் சொல் வதற்கு உங்கள் மனம் எப்டித்தான் இசைந்தது?”

“கனகம் எப்படியும் அழித்துத்தான் ஆகவேண்டும்.” ‘அத்தான் கருவை அழிக்கச் சொல்வதிலும் பார்க்க என் உயிரை மாய்க்கச் சொல்லுங்கள் செய்கிறேன்.”

கனம்! கருவை அழித்து விட்டால் அன்றுபோல் என்றுமே நாம் இருவரும் இன்பத்தை அனுபவிக்கலாம்.’

ஜன்பத்தை அனுபவிப்பதற்காகக் கருவை அழிப் பதா? நான் இறந்தாலும் கருவை அழிக்கமாட்டேன். என் வயிற்றிலே வளர்ந்துவரும் இரண்டு மாதக் கரு உயிர் உள்ளது. அந்த உயிர்க்கொலையை நான் ஒரு நாளும் செய்யேன்.”

“எது உயிர்க் கொலை?”

“சிசுக்கருவை அழிப்பதுதான்.”

“கனகம்! கல்லூரிக் காதலர்களுக்காகத்தானே கர்ப்பத்தடை மருந்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். கர்ப்பத்தடை மருந்து இல்லாவிட்டால் வழுக்கி விழுந்த மாணவிகள் எல்லாம் வளமான வாழ்க்கை நடத்த முடிந்திருக்குமா? கர்ப்பத்தடைமருந்தினாற்தானே தப்பித்துச் செல்கின்றனர்.”

“கற்பைத் தூசாக மதிப்பவர்கள்தான் கர்ப்பத் தடையை மேற்கொண்டு வேறு கணவரைத் தெரிந்தெடுக்கின்றனர். எல்லோரும் கற்பைத் தூசாக மதிப்பவர்கள் என்று நினைக்காதீர்கள். நான் கற்பைக் காப்பவள்..”

“கடைசியாக உன் முடிவு?”

“என் முடிவு என்ன, பிள்ளையைப் பெற்று வளர்ப்பதுதான்.”

“கனகம்! பிள்ளையைப் பெற்று வளர்க்கத்தான் போகிறாயா?”

“என் உயிர் இருக்கும்வரை பிள்ளையைப் பெற்று வளர்க்கத்தான் போகிறேன்”.

“ஆ! இவ்வளவு பிடிவாதமா?”

“….”

“அப்படியானால் நீயே உன் பாதையை வகுத்துக் கொள்!”

“நீயே என் உயிர். நீயில்லாமல் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறியதெல்லாம்……”

“என்னிடத்திலே மூண்ட உணர்ச்சி வேகத்தைத் தீர்ப்பதற்கென்று வைத்துக்கொள். இனிமேல் என் கண் முன்னே நில்லாதே போ…….’ குமார் இவ்வாறு பேசியபோது அவனைப் பார்த்த கனகம் குமாரின் கண்கள் இரத்தம் போல் சிவந்து தன்னைச் சுட்டெரிப் பதை உணர்ந்தாள்.

“அத்தான்! என்னைக் கல்யாணம் செய்ய மாட்டீர்களா?”

“என் சொல்லை மீறினால் கல்யாணம் செய்ய மாட்டேன்.”

“உண்மையாகச் சொல்கிறீர்களா?” என்று கேட்ட போது அவளது கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் நிலத்தில் விழுந்து சிதறின.

“ஆம்! உண்மையாகத்தான் சொல்கிறேன்”.

“அப்படியானால் நான் தனிமையாகத்தான் வாழ வேண்டுமா?”

“தனிமையாக வாழ்ந்தாலென்ன, செத்துத் தொலைந்தாலென்ன, இனிமேல் என் கண் முன்னே வராதே” என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு நகர்ந்தான் குமார்.

ஆண்கள் மிகவும் பொல்லாதவர்கள். ஆசையைக் காட்டி மோசம் செய்பவர்கள். ஆசையைத் தீர்ப்பதற் காக அன்பே, ஆரமுதே. கரும்பே, கற்கண்டே, தேனே, திரவியமே …… என்றெல்லாம் அழைப்பார்கள்.

ஆசை தீர்ந்ததும் பேயே, பிசாசே என்று ஏசுவார்கள். இப்படியான ஆண்களுடன் பழகும்போது பெண்கள் கவனமாகப் பழகவேண்டும்” என்று தனக்குள்ளே ‘நினைத்துக் குமார் போன திசையை நோக்கி நடந்தாள் கனகம். அவள் கால்கள் நடக்க மறுத்தன. கண்கள் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தன. தள்ளாடித் தள்ளாடிக் கல்லூரியை அடைந்தாள்.

இருவரது காதலும் முறிந்து இரண்டு நாட்களின் பின் கல்லூரியின் தவணை விடுமுறை விடப்பட்டது. ஒரு தவணைக்கும் இல்லாதது போல் இந்தத் தவணை லீவுக்கு மாத்திரம் எல்லாப் புத்தகங்களையும் பெட்டி படுக்கைகளையும் எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டாள். புறப்படும்போது –

“என்னடி கனகம்! இந்த முறை மாத்திரம் எல்லாச் சாமான்களையும் கொண்டு போகிறாய். ஏதாவது கல் யாணப் பேச்சுக்கீச்சு நடக்குதோ?” என்று கேலி செய்தாள் சிநேகிதிகளுள். ஒருத்தியான ராஜேஸ்.

‘போடி) ராஜேஸ்! உனக்கு எந்த நேரமும் கேலிதான்,”

“என்னடி கனகம்! ஒவ்வொரு தவணையும் வந்து வழியனுப்புகிற் உன்ரை அவரைக் காணயில்லை. இரண்டு பேருக்கும் ஏதாவது கசந்து போச்சோ?”

“சரி சரி, ‘பஸ்’ வந்துவிட்டுது. எல்லாம் பிற்பாடு. பேசுவோம். போய் வருகிறேன். வணக்கம்.’

“வணக்கம்.”

***

கந்தையா அந்த ஊரிலே படித்தவர். கட்டட வேலை செய்பவர். வயதிலும் முதியவர். அந்த ஊரிலே தாடி வைத்திருப்பவர் என்றால் அவர்தான். இதனால் அவரை எந்தப் பையன்கள் கண்டாலும் ‘தாடியப்பா’ என்று தான் அழைப்பார்கள். அவர் பையன்களைக் கண்டால் சும்மா விடமாட்டார். பையன்களைப் பிடித்து நுள்ளு நுள்ளென்று நுள்ளிவிட்டுத்தான் போவார். இதனால் அவரை ‘நுள்ளித்தின்னி’ அல்லது ‘நுள்ளியப்பா’ என் றும் கேலியாகக் கூப்பிடுவார்கள்.

அந்த ஊரிலே ‘பகிடி’க்காரன் என்றால் அவர்தான். அவர் வேலைக்குப் போய்விட்டு வீடு வரும்பொழுது அவரைக் கேலி செய்வதற்குப் பையன்கள் எல்லாம் சந்திவழியே. நிற்பார்கள். அவர் வருவதை அவரது கிழட்டுச் சயிக்கிளின் மணிச் சத்தம் அப்படியே காட்டி விடும். றாங்!……றாங்……!! என்று அவரது கறள் பிடித்த மணிச் சத்தம் கேட்டதும் ‘தாடியப்பா வாறார்’, ‘தாடி யப்பா வாறார்’ என்றும், ‘நுள்ளித்தின்னி வாறார்’ ‘நுள் ளித்தின்னி வாறார்” என்றும் சொல்லிக் கேலி செய்து விட்டு ஓடுவதில் அவர்களுக்கு அலாதிப்பிரியம்;

பையன்கள் கேலி செய்துவிட்டு ஓடுவதைக் கண்ட தும் தன்னுடைய கிழட்டுச் சைக்கிளை நிறுத்திவிட்டுப் பையன்களைக் கலைத்துக்கொண்டு ஓடாவிட்டால் அவ ருக்கு நிம்மதி இருக்காது. இது அந்த ஊர் வைரவ கோயிலடியில் தினமும் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி.

பையன்களைக் கலைத்துக்கொண்டு திரிந்த களைப் புடன் வீடு வந்து சேர்ந்தார் கந்தையா.

“பிள்ளை! என்ன ண்டைக்கு ஒரு மாதிரி இருக்கிறாய்?”

“ஒன்றுமில்லை அப்பா!”

“என்ன ஒன்றுமில்லை என்கிறாய். நானும்தான் கொஞ்ச நாளாக உன்னைப் பாத்துக்கொண்டு வாறன். உண்மையைச் சொல்லு என்ன நடந்ததென்று’

“……….”

“எனக்குத் தெரியும் என்ன நடந்ததென்று. ஊரவர்கள் அறிந்தால்… சீச்சீ! எடி மானங்கெட்டவளே! உன்னை ஏமாற்றியவன் யார் எண்டு சொல்லடி. அவனைப் பிடித்து உனக்குக் கட்டி வைக்கிறன். இல்லா விட்டால் கிடாய் வெட்டின மாதிரி வெட்டிச் சரிச்சு விடுகிறன்” ஆத்திரம் கனலாகக் கக்க உறுமினார். கந்தையா.

கந்தையா. மிகவும் நல்லவர். ஆனால் கோபம் வந்தால்… ஒருவராலுமே அடக்க முடியாது. அவருக்குச் சொல்லிவிட்டால் உடனே கல்லூரிக்குப் போய்க் கொலை செய்துவிடுவார் என்று ஏங்கிய கனகம் சொல்வதற்குத் தயங்கினாள்.

“சொல்லடி மானங்கெட்டவளே…! இல்லாவிட்டால் என்னைப் பிணமாகத்தான் காண்பாய்” என்று கூறிவிட்டு அங்கு நிற்காமலே ஓடினார்.

கந்தையா ஒருநாளும் இல்லாத, மாதிரி வேகமாகச் சைக்கிளிலே ஓடுவதைக் கண்ட சிறுவர் வழக்கம் போலக் கூப்பாடு போட்டுப் பரிகாசம் செய்தனர்.

***

“எடியே மச்சாள்! என்னடி இண்டைக்கு ஒருநாளு மில்லாத மாதிரிச் சனமெல்லாம் புளியடியிலை நிக்குதுகள்”

“கோதாரியிலை போன கதையை உனக்குத் தெரியாதே?”

“என்னடியாத்தை? என்னெண்டு சொல்லேன்ரி”

“எங்கண்டை கந்தையா வெல்லோ புளியிலை தூங்குது”

“என்ன?…… கழுத்திலை கயிறு போட்டுத் தற்கொலை செய்து போட்டாரே?”

“ஓமடியாத்தை உனக்கு விளக்கமாகச் சொன்னாத் தான் விளங்கும்” என்றாள் தையல்முத்து.

“ஏனாம் செத்தவர்?”

“மேளோடை ஏதோ சண்டையாம்”,

“அந்தப் பெட்டை நல்ல குணமான பெட்டை…” “தாலியைக்கட்டு, உனக்கிந்தப் புதினம் இன்னும் தெரியாதேர்? அதுதானே இப்ப ஊரெல்லாம் கதையாக் கிடக்குது”,

“உண்ணாணையடி மச்சாள் எனக்குந்தக் கதை ஒண்டும் தெரியாது”.

“கந்தையற்ரை மேள் பள்ளிக்கூடத்திலை இருந்து வாறபோது வயித்தில் சிசுகர்ப்பமாம்”

“என்னடியாத்தை சொல்றாய்.அவர் கந்தையற்ரை பெட்டை நல்ல தங்கமான பெட்டையெல்லே. அது எங்கேயோ கட்டுக்கதையாக இருக்க வேணும்” என்றாள். நாகமுத்து.

”சும்மா போணையாத்தை. அவன் சிற்றம்பலத் தின்ரை பெட்டையும் உப்பிடியெல்லோ போய்ப் படிச்சு
விட்டு வயித்திலை பிள்ளையோடை வந்தவள். அவள் ஏதோ குணத்திலை குறைஞ்சவளே?’

“ஓமெண்ணுது, படிக்கவெண்டு போறாளவை. பிறகு பிள்ளையும் தாயுமாய் வாறாளவை. இவளவைக்கு என்னத்துக்குப் படிப்பு?”

“ஏன்? ஒருத்தியும் படிச்சுப் பட்டம் பெற யில்லையோ? சில சனியன்கள் தான் பெடியளுந்தை பேச்சிலை மயங்கி வாழ்க்கையிலை தடக்கி விழுந்து விடுகுதுகள். இதனாலே மற்றப் பெட்டையளுக்கும் மானக்கேடென்று நினைத்துப் பாத்தாத்தானே”.

“காவாலிப் பெடியளைப் பள்ளிக்கூடங்களிலை சேர்க் கிறதாலை வாற பிழைதான் இதெல்லாம்”.

“ஏன் பெடியளிலை குறை சொல்லுவான். இவளவைக்கு என்ன எண்ணம். அவங்கள் கேட்டாப் போலை இவளவையும் எடுபட்டுவிடுகிறதோ? அவங்கள் தான் சேறு கண்ட இடத்திலை உழக்கிப்போட்டுத் தண்ணி கண்ட இடத்திலை கழுவுவாங்கள். இவளவை யும் அப்பிடி இருக்க முடியுமே?’

“ஓமடியாத்தை நீ சொல்றதும் சரிதான். ஏன் அவையிவையுந்தை கதை எங்களுக்கு. வா நாங்கள் போவம்”.

***

தகப்பன் இறந்ததும் கனகமும் இறந்திருப்பாள். ஆனால், தான் தன் காதலனுக்குச் சொல்லியதுபோல் தன் பிள்ளையைப் பெற்று வளர்த்து, தன் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதால் இறக்கவில்லை.

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் ஒன்பது முடிந் ததும் கனகம் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அக்குழந்தை தகப்பனைப் போல மிக அழகாக இருந்தது. அக்குழந்தையின் அழகைக் கண்டு துக்கத்தில் ஆழ்ந்திருந்த கனகம் சந்தோஷமடைந்தாள்.

” ட க் …… டக்……” என்று கதவில் தட்டிவிட்டு அறையின் உள்ளே நுழைந்த நர்ஸ் “இந்தப் பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கிறது?” என்றாள்.

“பாலா என்று வையுங்கள்”.

“தகப்பன் பெயர் என்ன?”

“தகப்பன் பெயர் குமார்”

“தாய் பெயர்……?”

“கனிகம்”

“தகப்பனின் உத்தியோகம் என்ன?” என்று அந்த நர்ஸ்கேட்டதும் அவளது தக்காளிப்பழம் போன்ற சிவந்த கன்னங்கள் கறுத்துவிட்டன. என்ன உத்தியோகம் என்று சொல்லலாம் எனத் தனக்குள்ளே யோசித்தாள்.

“என்ன யோசிக்கிறீர்கள்? உண்மையான உத்தியோகத்தைச் சொல்லுங்கள்?”

“உத்தியோகம் ஒன்றுமில்லை” என்று சொல்லும் போது அவளது குரல் கரகரத்தது. கண்கள் கண்ணீ ரைக் கொட்டின.”

“ஏன்? உத்தியோகம் இல்லையெண்டு சொல்லு றியள். உத்தியோகத்தை விட்டிட்டு வந்துவிட்டாரோ?”

எப்பொழுது இவளிடமிருந்து தப்பலாமென்று நினைத்துக் கொண்டிருந்த கனகத்தை அவளின் அடுக் கடுக்கான கேள்விகள் ஊசலாட வைத்தன். இருந்தும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாவிட்டால் வித்தியாச மாக நினைப்பாளே என்று மனத்துக்குள்ளே நினைத்த படி “ஆம் நர்ஸ். உத்தியோகத்தை விட்டிட்டு வந்து விட்டார்” என்றாள்.

“கனகம்! நான் கேட்டதையிட்டுக் குறை நினைக்கா தீர்கள். இது எங்கள் கடமைகளுள் ஒன்று. எத் தனையோ பெண்கள் எல்லாம் இங்கு வந்து பிள்ளையைப் பெறுகிறார்கள். தகப்பன் பெயர் என்ன என்றால் விழித்துவிட்டுத் தகப்பன் இல்லையென்று சொல்கிறார்கள். தகப்பன் பெயர் தெரியாமல் பிறக்கும் குழந்தைகள் இக்காலத்தில் ஏராளம்” என்றாள் நர்ஸ்.

“நர்ஸ்! இன்னும் எத்தனை நாட்களால் வீட்டுக்குப் போகலாம்”

“தாய் தகப்பன் இல்லாத நீங்கள் ஏன் வீட்டுக்குப் போக அவசரப்படுகிறீர்கள்?! உடம்பை நன்றாகத் திருத்திக்கொண்டு இன்னும் இரண்டு மூன்று நாட்களால் போங்களேன்”

”நர்ஸ்! நீங்கள் செய்த உதவிகளுக்கு நான் கடமைப்பட்டவள்”.

“கனகம்! நீங்கள் எதைக் கருதிச் சொல்கிறீர்கள்? நாங்கள் இங்கே இருப்பது நோயாளர்களுக்குத் தொண்டு செய்வதற்குத்தான் – நோயாளர் வருத்தப் படுவதைக் கவனிக்காது கண்ட கண்ட கதைகளை யெல்லாம் கதைத்துக்கொண்டு இருப்பதற்கல்ல. நோயா ளருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுப்பது தான் எங்கள் தொழில்”

“நர்ஸ் எல்லோருமே உங்களைப்போல் இருந்துவிட்டால்……… எந்த நோயாளருக்குமே கஷ்டமிருக்காது”.

“சரி கனகம் எனக்கு நேரமாச்சு. பிறகு வருகி றேன்” என்று சொல்லிக்கொண்டே டொக்… டொக்…. என்று ‘பூட்ஸ்’ சத்தம் ஒலிக்க நகர்ந்தாள் நர்ஸ்.

3

மரத்துக்குக் கீழே இருந்து சமைக்கும் கன்னிகளை யும் கனவானையும் கோகிலம் காட்டியதும் கனகத்தின் கடந்தகால நினைவுகள் சக்கரம் சுழல்வதுபோல் சுழலத் தொடங்கின. அந்த நினைவுகளில் கனகம் மெய்மறந் திருந்தாள். அப்போது….

“கனகம்! என்ன ஒரேயடியாக எதையோ யோசித் துக்கொண்டிருக்கிறாய்” என்று அவள் முன்னே வந்து நின்ற குமார் கேட்டான். கேட்கும்போது அவனது குரல் கரகரத்தது.

கடந்தகால நினைவுச் சக்கரத்தை நிறுத்திவிட்டுச் சுய நினைவுக்கு வந்த கனகம் “அத்தான்! நீங்களா…?” என்று அவன் காலில் வீழ்ந்தாள்.

“கனகம்! என்னை மன்னிப்பாயா?”

“யார் யாரை அத்தான் மன்னிப்பது? நீங்கள் என்னை மன்னிப்பதா? நான் உங்களை மன்னிப்பதா?’ என்றவள் “இதோ உங்கள் குழந்தை” என்று அருகில் நின்ற பாலாவைக் காட்டினாள், ஆனந்தத்துடன்.

குமார் பாலாவைத் தூக்கி “என்ரை ராசா, எங்க ளைச் சேர்க்க வந்த கண்ணு” என்று சொல்லிச் சொல்லி முத்தமிடுவதைப் பார்த்துக்கொண்டு அருகில் நின்ற கோகிலத்தின் கண்கள் ஆச்சரியத்தால் ‘அகல விரிந்தன.

– 20-09-1964, ஈழநாடு.

– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.

நா.க.தங்கரத்தினம் சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *