மானம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 124

கோடை காலத்தின் வெப்பக் காற்று வீசிய பிற்பகல் பொழுது. சேர மன்னர்களின் தலைநகரமான வஞ்சி மாநகரத்தில் பெருமைமிகு சேர மன்னர்கள் கோலோச்சி ஆட்சி செய்த அவர்களது அரண்மனையின் வாயிலில் மேற்கூரை உள்ள இடத்தில் பெரிய ஆசனத்தில் அமர்ந்து இருந்தார் – “ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்துலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” (பெரிய திருமொழி ஆறாம் பதிகம் மூன்றாவது பாசுரம்) என்று திருநறையூர் பெருமாளைத் துதிக்கும்போது (இன்று திருநறையூர் நாச்சியார் கோயில் என்று வழங்கப்படுகிறது.) திருமங்கையாழ்வாரால் திருமால் துதிப்பாடலில் பாராட்டப்பட்ட சோழ மாமன்னர் கோச்செங்கட் சோழன், பெரிய ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். ஆழ்வாரின் வாக்குப்படி , சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்களை தமிழ் கூறும் நல்லுலகில் கட்டிய , கோச்செங்கணான் என்று வரலாறு போற்றும் சோழ மாமன்னர், தமது வீரப் பராக்கிராமத்தால் சேர மன்னர் மாவீரன் கணைக்கால் இரும்பொறையுடன் சேர நாட்டின் திருப்போர்ப்புறத்தில் போரிட்டு , சோழ நாட்டைப் போலவே வளம் மிகுந்த சேர நாட்டை தம் வசமாக்கிக் கொண்டுள்ளார். அவர் அருகே அரசருக்கு வழிகாட்டும் ஐம்பெருங் குழுவின் உறுப்பினர்களும் போர்ப்படைத் தளபதியும் தலைமை அமைச்சரும் சிறிய ஆசனங்களில் அமர்ந்து இருந்தனர்.
மன்னர் பேசியதும் நாம் பேசலாம் என்றே அங்குள்ளவர்கள் எண்ணமிட்டுக் கொண்டிருந்த நிலையில் , ஒரு காவலர் வந்து ” சோழ மாமன்னர் வாழ்க வாழ்க ” என்றார். என்ன என்பதை கேட்காமல் அவருடைய முகத்தைப் பார்த்தார்.
“மாமன்னர் அவர்களே … புலவர் பொய்கையார் தங்களை அவசரமாக காண வேண்டும் என்று வந்திருக்கிறார்.”
தலைமை அமைச்சர் முந்திரிக்கொட்டையாக “அரசர் போர் புரிந்து முடித்து ஓய்வு கொள்ளாமல் இங்கு ஆலோசனையில் இருக்கிறார். வந்த இடத்தில் புலவர் மன்னரைக் காண வேண்டிய தேவை என்ன?” என்றார்.
மன்னர் அவருடைய பேச்சைப் பொருட்படுத்தாமல் காவலரிடம் அவரை அழைத்து வாரும் என்றார்.
வாட்டசாட்டமான உடல் தோற்றமும் வெண்ணிற கேசமும் முகத்தில் வெண்ணிற தாடியும் கொண்ட பொய்கையார் அங்கு வந்தார். கோச்செங்கட் சோழன் எழுந்து நின்று அவரை வரவேற்று அவருக்கு அருகில் ஆசனத்தில் அமர வைத்தார். புலவர் பேசினார் –
“வரலாற்றுப் பெருமை வாய்ந்த சோழ குலத்து மாமன்னனே.. வாழி தங்கள் நாடும் குலமும் தழைத்தோங்குக . தங்கள் செங்கோல் ஆட்சி நீடித்து வாழ்க தங்களுக்கும் சேர மரபினருக்கும் இடையேயான பகைமை இப்படி போரில் போய் முடியும் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. மாமன்னா ! அடியேனுடைய வேண்டுகோளுக்குத் தாங்கள் செவி சாய்க்க வேண்டும். சேர மாமன்னன் கணைக்கால் இரும்பொறை , தங்களைப் போலவே வீரம் செறிந்த பரம்பரையில் உதித்தவன். மாவீரன். அவனுடைய நிலமெல்லாம் தாங்கள் வெற்றி கொண்ட போதிலும் அந்த மாவீரனை கௌரவமாக மதிப்புடன் நடத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவனுடைய வீர பராக்கிராமத்திற்கு மதிப்பு அளித்து அவனை சிறையிலிருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”
சொலல் வலம் சோர்விலன் என்பதால் பொய்கையார் மேலும் மேலும் பலபடியாக சோழ மாமன்னரிடம் நயம்பட உரைத்து நின்றதற்கு அரசன் செவிசாய்ப்பது அங்குள்ள பிரமுகர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவர்களின் முகக் குறிப்பிலிருந்து உணர்ந்த புலவர் பொருட்படுத்தாமல் மாமன்னரிடம் மன்றாடினார். மாமன்னரின் மனம் கரைந்தது.
கோச்செங்கட் சோழன் பேசினார்.. “தாங்கள் உரைப்பது சரிதான். வாருங்கள். நானே வந்து அவனை சிறையிலிருந்து விடுவிக்கிறேன்.”
பிரமுகர்கள் எழுந்து நிற்க , மாமன்னர் , புலவருடன் சென்றார். மெய்க்காப்பாளர்களும் தளபதியும் துணைத் தளபதியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மாமன்னர் போய் சேர்வதற்குள்…
வஞ்சிமாநகரின் கிழக்கே உள்ளே குணவாயில் கோட்டத்தின் நிலவறைச் சிறையில் ஓர் அறையில் அடைக்கப்பட்டிருந்தார் மாவீரன் சேர மன்னர் கணைக்கால் இரும்பொறை . மிடுக்கும் கம்பீரமும் குறையாத அவர் , சின்னஞ்சிறு சாளரம் வழியாகப் பார்த்தார். அவரது மனங்களில் எண்ணங்கள் மோதின.
“முன்னோர் கட்டிக் காத்த இந்த மண்ணை நான் போரில் தோற்று பகைவர் வசம் கொடுத்து விட்டேனே.. என் முன்னோர்களின் ஆவி என்னை மன்னிக்குமா? வாழ்க்கையும் சூதாட்டம் போல் தான் , இரவும் பகலும் போல்தான் என்பதை அறிந்தவர்கள் தானே அவர்கள்?
இந்த குணவாயில் கோட்டத்தில் தான் எங்கள் முன்னோர் இளங்கோவடிகள் , சேரன் செங்குட்டுவனின் இளவல் தவமிருந்தார். அந்த பெருமை மிக்க இடத்தில் என் சொந்த மண்ணிலேயே நான் காராக்கிரகத்தில்… ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று* என்று தானே பொய்யாமொழிப் புலவர் சொல்லிச் சென்றார். இப்படி நமக்கு மதிப்பு அளிக்காதவரின் வசமிருந்து யான் வாழ்தலின் உயிர் துறத்தல் தானே நன்று ஆம் அதைத் தான் அவர் சொல்லி இருக்கிறார்.
கம்பிக் கதவு அருகே வந்த இரும்பொறை , அங்கு தென்பட்ட சிறைக் காவலாளியிடம் “நாக்கு வறண்டு கிடக்கிறது..கொஞ்சம் தண்ணீர் கொடுப்பா … ” என்றார்.
தரேன் தரேன் என்று வெறுப்புக் குரலில் பேசிய அவன், அரசருக்குத் தண்ணீர் எடுத்து வரப் போகாமல் அங்கு வந்த மற்றொரு ஊழியரிடம் பேசத் தொடங்கினான். பேசிக் கொண்டே இருந்தான்.
இரும்பொறை , அங்கிருந்த ஓலை நறுக்கில் பாடல் ஒன்றை எழுதினார். “வில் கொடி ஏந்தி செங்கோல் ஆட்சி செய்த என் முன்னோர்களே வீர மரணமாக இல்லாமல் நான் இப்படி முடிவை அடைந்ததற்கு அடியேனை மன்னியுங்கள்.”
ஆம் சில நொடிகளில் குணவாயில் கோட்டத்துச் சிறையில் சேரமான் இரும்பொறை தன் இன்னுயிரைத் துறந்தார்.
சற்று நேரத்தில் சிறைக்கூடம் பரபரப்பாகியது. சோழ மாமன்னரும் பொய்கையாரும் அங்கு வந்தனர். அரசர், இரும்பொறை சிறை வைக்கப்பட்ட அறையைத் திறக்க ஆணையிட்டார். பொய்கையார, சேரமான் தரையில் படுத்திருப்பதைப் பார்த்தார். பதைபதைத்து அவரது நாடியைப் பார்த்தார்.
ஓலை நறுக்கை வாசித்துப் பார்த்தார் –
“பிறந்த குழந்தை இறந்து போனாலும் அது பிண்டம் போல் பிறந்தாலும் அது வீரமுடையது என்பதைக் குறிக்க வாளால் கீறிய பின்னரே அதற்கு ஈமக் கிரியை செய்யும் மரபினராகிய எங்கள் சேர மரபினன் நான் நாய் போல் கட்டி இழுத்து வரப்பட்டேன். நெஞ்சில் உரம் இல்லாமல் வயிற்றின் தீயைத் தீர்க்க தண்ணீர் கேட்டு நிற்கும் நிலைக்கு ஆளாகி விட்டேனே… இனியும் நான்…”
புலவர் தரையில் அமர்ந்தார். சேரமான் இரும்பொறையின் நெடிய உருவத்தை நகர்த்தி அவனைத் தமது மடியில் கிடத்திக் கொண்டு கண்ணீர் உகுத்தார்.
குறிப்பு –
1) ஆதாரம் – புறநானூறு பாடல் 74 – திணை பொதுவியல் துறை முதுமொழிக் காஞ்சி
2) தமிழறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய சேர மன்னர் வரலாறு என்னும் நூலில் மாமன்னர் கோச்செங்கட் சோழனுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் போர் நிகழ்ந்ததாக குறிப்பிடுகிறார். அந்த ஊர் , இப்போது கேரளத்தில் திருவார்ப்பெண் என்று உள்ளது என்று கூறியுள்ளார்.
*திருக்குறள் அதிகாரம் மானம் குறள் எண். 967
3) நா. பார்த்தசாரதி அவர்கள் , சேரர் தலைநகர் குறித்து வஞ்சி மாநகரம் என்ற வரலாற்றுப் புதினத்தைப் படைத்துள்ளார்.
4) கோச்செங்கட் சோழன் பற்றி , கௌதம நீலாம்பரன் அவர்கள், சோழ வேங்கை என்ற புதினத்தைப் படைத்துள்ளார்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
