மலை ஏன் அமைதியாக இருக்கிறது
அந்தக் காலை வழக்கம் போல் சாம்பல் விடியலிலிருந்து மெல்ல விரிந்து ஒளிப்பூவாக மலர்ந்துக்கொண்டிருந்தது.
படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதே அவன் இன்று பெரியவர் நல்லமுத்து அய்யாவை சந்தித்து விடுவதென்று முடிவெடுத்திருந்தான். அவரை சந்தித்து தன் மனதில் உள்ள குழப்பத்திற்கு விடை காண வேண்டுமென நினைத்துக்கொண்டான்.
சிறு வயது முதலே அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது.அடுத்தவர்களின் காயங்களை வலிகளை துயரங்களை சித்ரவதைகளை தன் நினைவறையில் சேமித்து வைக்கும் பழக்கம்..அவன் தன்னுடைய முதல் சேமிப்பை கதைகளின் துன்பங்களிலிருந்துதான் தொடங்கியிருந்தான்..கதை பாத்திரங்களின் சோகங்கள் அவனை அழ வைத்தது.அது கதையென்றும் அதற்கு அழத்தேவையில்லையென்றும் அவனுடைய தாய் புரிய வைத்தாள்.அப்படியென்றால் கதை உண்மையில்லையா.கதையில் வரும் முயல்களும் மான்களும் காட்டெருமைகளும் சிங்கம் புலியால் கொல்லப்படவில்லையா என்றான்.அதற்கு வலிக்க வில்லையா என்றான்.
’’இல்லை வலிக்காது.அந்தக் கதையில் எல்லாமே பொய்யானவை’’ என்றாள்.
’’பொய் என்றால்..’’ என்று கேட்டான்.
’’எது உண்மையில்லையோ அது பொய்’’ என்றாள் அவனுடைய அம்மா.
அவன் கேள்வி கேட்பதை பார்த்து விட்டு இனி கதா பாத்திரங்கள் துன்பப்படுகிற கதைகளை சொல்வதை நிறுத்திக்கொண்டாள்.மிகவும் சந்தோஷமான கதைகளை நகைச்சுவையான கதைகளை முட்டாள்கள் மன்னர்களாக ஆட்சி செய்த கதைகளை சொன்னாள்.அவன் அழுவதிலிருந்து மாறு பட்டு சிரிக்க தொடங்கியிருந்தான்.சில புத்தி சாலித்தனமான கேள்விகளை கேட்டு வைத்தான் முட்டாள்கள் ஆட்சி செய்யும் போது மக்கள் சந்தோஷமாகவா இருந்தார்களா என்று கேட்டு வைத்தான்.
இவனுக்கு கதை சொல்லுவதை நிறுத்த நேரம் பார்த்து கொண்டிருந்தாள்.அவன் சீக்கிரமே பெரியவனாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.சில காலமாய் கதை சொல்லும் போது அவனுடைய தாய் மிகவும் சந்தோஷமாக இருந்தாள்..கதைகள் கேட்டு அழுவதிலிருந்து தன் பிள்ளை மீண்டு விட்டான் என்பதில் அந்த ஆனந்தம் இருந்தது.ஆனால் அந்த சந்தோஷம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை.
ஏனெனில் அது போன்ற துயரங்களை தினசரி நாளிதழ்களில் மற்றும் வரலாற்று புத்தகங்களும் அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தன..அதனால் பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகு அவன் முகம் இறுக்கமாக இருந்தது..அவனுடைய அம்மா அவனுக்கு கடவுளின் கதையை சொல்லத் தொடங்கினாள்.கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.சாமன்யர்களுக்கு துன்பம் தருகிறவர்கள் கடவுளின் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்று சொன்னாள்.
அவன் முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியிருந்தது.
எல்லா துயரங்களை தேடியும் கடவுள் போவார்.கஷ்டப்படுகிற ஜீவன்களுக்கு உதவுவார் என்று அவனுடைய அம்மா சொன்னாள்.அம்மா சொல்லுவதை கேட்டுகொண்டான்.ஒரு நாள் அவனுடைய பாட்டி இறந்து போனாள்.அவன் அழுதான்.அடுத்த நாள் தூங்கி எழுந்த போது பாட்டி எங்கே என்றான். அவன் அம்மா சொன்னாள் .அவள் கடவுளிடம் சென்று விட்டாள்.அப்படியென்றால் பாட்டியின் துயரங்களும் கடவுளிடம் சென்றிருக்குமா என்று கேட்டான்.அவன் அம்மா திகைத்தாள்.
ஒரு நாள் அவனுடைய தாய் அவனை கோவிலுக்கு அழைத்துச்சென்றாள். அங்கே அப்போது உபன்யாசம் நடந்துகொண்டிருந்தது.அந்தக்கூட்டத்தில் இருந்தவர் சொன்னார் .துன்பம் என்பது இறைவன் மனிதர்களுக்கு வைத்திருக்கிற சோதனை என்றார்.சில நிமிடங்களுக்குப் பிறகு துயரம் என்பது கடவுளின் பிரசாதம் என்றார்.
அன்றிலிருந்து அவன் கோவிலுக்குப் போவதை நிறுத்தி கொண்டான்.இயற்கையின் துயரங்களை விட சகமனிதன் மீது இன்னொரு மனிதன் ஆதிக்கம் செலுத்துகிற துயரங்கள் கொடூரமானவையென்றான். இத்தகைய துயரங்களை தீர்க்க மனிதர்களே வெவ்வேறு வழிகளில் போராடி இருக்கின்றனர்.
ஒவ்வொரு வயது கூடும் போதெல்லாம் அறிவு வளர்கிறது.கூடவே துணையாக சில கேள்விகளும் அவனோடு வளர்ந்தன.அந்தக் கேள்விகள் துன்பங்கள் குறித்து இருந்தன. அவன் வளர்ந்த பிறகும் துன்பங்கள் குறித்து சிந்தித்தான்.கல்லூரியில் நடந்த ஒரு கட்டுரை போட்டியில் அவன் தலைப்பு துன்பங்களின் தொடக்கமும் வளர்த்தெடுப்பும் என்ற தலைப்பில் இருந்தன.
துயரங்களின் தோற்றுவாய் குறித்து அலசியிருந்தான்.இனம் சாதி மதம் மொழி தேசம் போன்றவைகள் மனிதனுக்கு துன்பத்தை தரும் கருவியாக எப்படி மாறுகின்றன என்று ஆய்வு செய்து எழுதினான்.
சமீபகாலமாக கட்சிகள் மீது கோபமாக இருந்தான்,அரசியல் கட்சிகள் எப்படி துன்பத்தின் மீது துணியை போட்டு மூடுகின்றன. அது ஏன் துன்பமில்லாத சமூகத்தை நோக்கி ஏன் செல்லவில்லையென்று சிந்திக்க தொடங்கியிருந்தான்.அதை கேள்வி கேட்காத இந்த சமூகத்தின் மீது கோபமாக இருந்தான்.
இந்த நாட்டில் எல்லாவற்றுக்கும் காட்சியகம் இருக்கிறது.ஆனால் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காட்சியங்கள் இல்லை .மக்கி மண்ணாய் போன மனிதனின் எலும்புக்கூடுகளை காட்சிக்கு வைக்கப்போகின்றேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு நெடு நாளாக ஒரு கேள்வி இருந்தது.பாதிக்கப்பட்ட மக்கள் எல்லா துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்பதுதான்.
இந்தக்கேள்வி அவனை குடைந்துகொண்டே இருந்துக் கொண்டே இருந்தது.
இந்த நாட்டில் தர்மத்தை நிலை நாட்ட கடவுள்கள் வந்து போரை நடத்தியிருக்கிறார்கள். அசுரர்களோடு சண்டை போட்டிருக்கிறார்கள்.அந்தந்த காலகட்டத்தில் உள்ள சம்பிரதாயங்களை கடை பிடித்திருக்கிறார்கள்
அவர்கள் எல்லாம் ஏன் இந்த சாதிப் பிரச்சனையை கையில் எடுக்க வில்லை.எந்த அவதாரமும் எந்தக் கடவுளும் சாதி பொய்யென்றோ அது கொடூரமானதென்றோ ஏன் சொல்லவில்லை/அவனுக்கு குழப்பமாக இருந்தது.கீதையில் சொல்லப்பட்ட நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்ற உண்மை கடவுளின் கூற்றா அல்லது அன்றைய மனிதர்களின் திட்டமிட்ட சதியா.கடவுள்கள் ஏன் காலத்தை மீறி சிந்திக்கவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.
மக்களை அச்சுறுத்தும் கருப்பு சட்டங்களை போல இந்த கருப்பு சிந்தனைகள் மக்களின் மனதை ஆக்கிரமித்துகொண்டு இன்னும் ஒரு சிலரை பழி வாங்கிக் கொண்டு இருக்கின்றன.சாதிய சிந்தனையை விதைத்தவன் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் அதை வளர்த்தெடுத்தவர்கள் இந்த தேசம் முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள்.அவர்களுடைய நோக்கம் என்ன.ஏன் தனக்கு கிழே ஒரு அடிமையை வைத்துகொள்ள ஒவ்வொரு மனிதனும் சம்மதிக்கின்றான்.
ஓவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனை தன் சுய சிந்தனைகளால் நசுக்கிக் கொண்டிருப்பது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது..அந்த சிந்தனைகள் கதைகளாக கலாசாரமாக கொண்டாப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வரும் இந்த சமூகம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தான்.இதிலிருந்து எப்போது விடிவு காலம் வரும். யோசித்துக்கொண்டிருந்தான்.
சாதிய நோயால் பாதிக்கப்பட்ட மக்களை அத்தனை பேர்களையும் கொன்று புதிய சமூகம் உருவாக்கும் சிந்தனை கொடூரமான சிந்தனை.அது மதவாதிகளின் தீவிர வாதம் அல்லது சர்வாதிகாரிகளின் அடக்கு முறை.அது போன்ற சிந்தனை முறையில் அவனுக்கு உடன்பாடுமில்லை.மற்ற படி அது சாத்தியமுமில்லை.
உயிர்களை கொல்லும் எந்த வன்முறையையும் அவன் எதிர்த்தான்.உயிர்கள கொல்லுதல் பாவமென்னும் வள்ளுவனின் வாழ்வியல் மீது நம்பிக்கை வைத்திருந்தான்..
அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை நிலை நாட்ட போர் அவசியம் என்று போதிக்கப்பட்ட சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எப்படி அமைதியாக இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.. இது விதியே என்று கிடந்தற்குப் பின்னால் யாருடைய வஞ்சகம் ஒளிந்திருக்கிறது.அல்லது இந்த மக்கள் அடிமைகளாக இருக்கத்தான் பிறந்திருக்கிறார்களா.
எல்லா நாடுகளிலும் அடிமைத்தனத்தை எதிர்த்து ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையா.தனக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கி கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை சக மனிதனுக்குறிய எல்லா அடிப்படை உரிமைகளையும் பெறாமல் விதியே என்று வாழ்வது எந்த விதத்தில் நியாயம்.இது துயரங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதா.அவன் இது பற்றி நிறைய விவாதித்தான்,
அவன் வயது இளைஞர்கள் காதலித்துகொண்டும் சினிமா டிராமா என்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடந்து சென்றிருக்கும் போது இவனுக்கும் மட்டும் ஏன் அதிலிருந்து விலகி இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் நடுவே ரிலே ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கின்றான் என்று அவனுடைய தாய் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்..
அவனுக்கே அவன் செயல்கள் வித்தியாசமாக இருந்தது.அதை பற்றி கவலைப்படாமல் தனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதில் பயணிப்பதென்று முடிவெடுத்திருந்தான்.
காலை எழுந்திருக்கும் போது உடல் வலித்தது.நேற்று அந்த மலை மீது ஏறிச் சென்றது புது அனுபமாக இருந்தது.அவனும் சில நண்பர்களும் தூரத்தில் தெரிந்த சிறு மலை மீது ஏறி இறங்கியிருந்தார்கள்.
அவன் நண்பர்களிடம் அந்த மலை மீது ஏறப்போவதாக சொல்லும் போது அவர்கள் கேலி செய்தார்கள்.அந்த மலையிலென்ன இருக்கிறது என்று. மலையென்றால் மரங்களும் செடிகொடிகளும் இருக்கனும் .ஆனால் அந்த மலை அப்படியா இருக்கிறது. அது மொட்டை மலையாக இருக்கிறது. சொல்லப்போனால் அந்த மலை எங்கள் தாத்தாவின் தலை போல சொட்டையாக இருக்கிறது என்றான் ஒருவன்.
உன் தாத்தாவிற்கு என்ன பிறக்கும் போதே வழுக்கை தலையோடா பொறந்தார்.
நாளைக்கு நாம் போகின்றோம்.அவ்வளவுதான்..நீங்கள் வருகிறீர்கள்.வேற ஏதாவது சந்தேகம் இருக்கா.
ஒருவன் சொன்னான்.’’இனி ஒண்ணுமவன் காதிலே ஏறாது.சரி சொல்ல வேண்டியது தான். ஒரு சினிமாவுக்கு போனோம்.ஊரை சுத்தினோம்னு இல்லாம மலை ஏற போறானாம்.
நாம் சொன்னால் இவன் கேட்க மாட்டான் .சரி போவோம்.
உடனே அவன் தன் திட்டத்தை சொன்னான். வருகிறவர்கள் அனைவரும் நான் சொல்லும் பொருளை கொண்டு வர வேண்டும்.
கொம்பு கயிறு தண்ணீர் குடுவை வரும் போது நம்ம என் சிசி பூட்ஸ் போட்டுகொண்டு வர வேண்டும்.
சரியாக ஆறு மணிக்கு கிளம்ப வேண்டும்.வெயில் ஏறுவதற்கு முன் மலையின் உச்சியை அடைந்து விட வேண்டும்.இன்னொரு விஷயம் வரும் போது ஆளுக்கொரு செடி கொண்டு வர வேண்டும் .
என்ன சொல்றான் இவன் ஏண்டா.உன் திட்டம் எங்களுக்குப்புரியது.வறண்ட மலையிலே எந்த செடி வளரும்.ஒரு நாள் தண்ணீர் ஊற்றலாம். அது வேர் பிடிக்கிறவரைக்கும் யார் மலை மேல போய் ஊத்தறது.இது நடக்கிற காரியம்மா தினமும் மலை ஏற முடியுமா.
அவன் எதுவும் பேசவில்லை.நாளை காலையில் சந்திப்போம் ஆறு மணிக்கு.எல்லோரும் சைக்கிளில் வந்து விடுங்கள் அடிவாரத்தில் நம்ம கிளாஸ் மேட் வீடு இருக்கிறது.அவன் வீட்டிலே வச்சிட்டு போறோம்.
அவர்கள் சொன்னது போலவே அனைவரும் வந்தார்கள் .ஆளுக்கொரு கையில் செடிகள் இருந்தன.முதலில் சின்ன மலைப்பு ஏற்பட்டது.மலை அவர்களை அன்னியமாக பார்த்தது. அடிவாரத்திலிருந்து ஏறத்தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் மலை அவர்களோடு பேச ஆரம்பித்தது.
ஒருவன் சொன்னான் பாவம் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இப்படித்தான் இருந்திருக்கும்.ஒருவன் கூடவா நம்மை போல ஒரு மரத்தை எடுத்து வந்து நட்டிருக்கவில்லை.
காலத்திற்காக ஏற்ப சில மாற்றங்கள் காத்திருக்கும்.அது போலத்தான் இதுவும் உனக்காக நமக்காக இந்த மலை காத்திருக்கிறது.இந்த மலை மீது அதன் உடலை மறைக்க சின்ன ஆடையை நெய்கின்றோம்.கொண்டு போன செடிகளை மலை அடி வாரத்திலே நட்டார்கள். ஒரு செடி மட்டும் மலையின் உச்சிக்காக எடுத்து வைக்கப்பட்டது.
அந்தக்காலத்தில் மன்னர்கள் தங்கள் ஏறி சென்ற சிகரத்தின் மீது வென்ற நாடுகளில் கொடியை நாட்டினார்களாம்.இந்தக்காலத்திலும் அவரவர் தேசியக்கொடியை நாட்டுகிறார்கள்.நாம் இந்த மலை மீது உயிரான கொடியை நாட்டுவோம் ஒரு செடியை நட்டார்கள்.அது மரமாக வளர்ந்து என்றென்றும் காற்றில் அசைந்துக்கொண்டிருக்கும்.
முதல் நாள் கொஞ்சம் தயங்கியவர்கள் கூட அடுத்த நாள் உற்சாகமாக மலையேறினார்கள். இந்த மலையேற்றம் புதுப்புது மனிதர்களை கூட்டி வருமென நம்பினான்.
மலை எந்தப்பாதையுமின்றி நேர் குத்தாக இருந்தது.பார்த்து கால் வைக்க வேண்டும் இல்லையெனில் அது கீழே விழ வைத்து விடும் கிடு கிடு பள்ளங்களில்லை என்றாலும் உருண்டு கொண்டே வர வேண்டியதுதான்.
அந்த நண்பர்கள் குழுவின் மலைப்பயணம் அந்த வட்டாரத்தில் ஒரு பேச்சாக இருந்தது. பசங்க ஏதோ செய்ய முனைகிறார்கள்.மொட்டை மலைக்கு வாழ்வுதான் என்றனர்.
இந்த மலை ஏன் அமைதியாக இருக்கிறது.இது ஏன் எரிமலை போல சீறவில்லை.மக்கள்மீது நெருப்பை கொட்டவில்லை.அல்லது புதிரான புதிராக இல்லை.ஏன் அமைதியாக எதையோ பறி கொடுத்தார் போல இருக்கிறது.எல்லாவற்றையும் இழந்த மன்னன் போல தனித்து கிடக்கிறது.
இந்த மலையிலிருந்து எங்கிருந்து சரிந்தாலும் குதித்தாலும் சரிந்து அல்லது உருண்டுதான் வரமுடியும்.அது யாரையும் கொல்லாது.இப்படிபட்ட மலை ஏன் யாராலும் பூஜிக்கப்படவில்லை.அமைதி பூஜிக்கப்படாத தேசத்தில் ஒலிகளின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கும்.
மலையின் தலையில் நின்றுக்கொண்டு பார்த்தால் ஊர் எவ்வளவு சிறியதாக காட்சியளிக்கிறது மக்கள் எறும்புகள் போல இருக்கிறார்கள்.பெரிய வீடுகள் கூட சின்ன தீப்பெட்டி போல இருக்கிறது.மலையின் பார்வைக்கு எல்லாமே சிறியவை தான். இத்தனை பரந்த பார்வை கொண்ட மலை ஏன் அமைதியாக இருக்கிறது.
அன்று மாலை அவன் பெரியவர் நல்லமுத்துவை சந்தித்திருந்தான்.தனக்குள் எழுந்த எல்லா கேள்விகளையும் அவர் முன் போட்டான்.இது எப்படி சாத்தியம் என்பது புதிராத புதிராக இருந்தது அவனுக்கு, ஆத்திரப்படுவதற்கும் கோபப்படுவதற்கும்மான காரணிகள் இருந்துகொண்டே இருக்கும் ஒரு சமூகத்தில் யாரும் போராடாமல் ஏன் இருந்தனர் என்ற கேள்வி அவன் மனசுக்குள் இருந்துகொண்டே இருந்தது.
உலகில் அடிமை படுத்தப்பட்ட இனங்கள் தனக்கான தலைவரை தானே உற்பத்தி செய்துக்கொள்கின்றன.ஆனால் இங்கே மட்டும் அப்படி யாருமில்லை.அது ஏன்.அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
சமூகத்தின் சூழல்தான் இலக்கியத்தையும் வழி நடத்திச்செல்லும் தலைவரையும் பெற்றெடுக்கும் என்பார்கள்.இந்த அடிமை படுத்தப்பட்ட மக்களுக்காக பிறந்த தலைவர் யார்.அந்த தலைவர் கிறிஸ்து பிறக்கும் முன் யாராக இருந்தார். கிறிஸ்து பிறந்த பிறகு யாராக இருந்தார், ஏன் அவர்களால் ஒரு பெரிய சமூக புரட்சியை செய்ய முடியவில்லை.
எந்த புரட்சியையும் செய்யாத கடவுள் இருக்கிறாரா இல்லையா.விவாதத்துக்குட்பட்ட கடவுள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் நுழைந்து எப்படி இத்தனை பெரிய ஆதரவை பெற்றார்.நூற்றுக்கணாக்கன தீண்டாமைகள் இந்த நாட்டில் இருந்திருக்கின்றன. பார்த்தால் கூட தீட்டு என்கிற நம்பிக்கை எத்தனை கொடூரமானது.
எல்லா காலத்திலும் இந்தக்கொடுமை இருந்துக்கொண்டே இருக்க யார் காரணம் அல்லது எது காரணம்.இதை கடவுள்கள் கண்டு கொள்ளாத போது பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் கொதித்து எழவில்லை.போராடமல் இருக்கும் இந்த சாத்வீக குணம் அவர்களுக்குள் எப்படி வந்தது.அவனுக்கு புரியாத புதிராக இருந்தது.அவனுக்கு குழப்பம் ஏற்படும் போதெல்லாம் அவனுடைய குழப்பத்தை தெளிவிக்க பெரியவர் நல்லமுத்து இருக்கிறார்..
அவரிடம் வழக்கம் போல் எப்பொழுதும் கேள்விகளொடு செல்வது வழக்கம்.அவன் வருகின்றான் என்றால் அந்தப்பெரியவரும் தயாராக இருப்பார் கேள்விகளுக்கு பதில் சொல்ல.
அவனை வரவேற்று பேசிய நல்லமுத்து அய்யா அவனுக்கு தேநீர் கொடுத்துக்கொண்டே சொன்னார்.ஒரு காலத்தில் புத்தரை பின்பற்றி கிங்கரர்களும் அசுரர்களும் ராட்சதர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும் மனித இனத்தை சார்ந்தவர்களே ஆனால் எதிரிகள் அவர்களை இழிவு படுத்துவதற்கு அப்படிபட்ட பெயர்களை சூட்டி இருக்கின்றனர்.
இயல்பிலே நற்குண படைத்த மக்களாய் இருந்தவர்கள் அவர்கள்.அவர்கள் நிலத்தில் குடியிருக்கவும் பயிர் செய்யவும் நிலம் தந்து உதவிய மக்களை கீழ்மை படுத்தியவர்களை புத்தர்தான் கண்டித்தார்.எப்பொழுதும் அன்பும் பாசமும் உடைய மக்கள் அகிம்சையை தந்த புத்தரின் பின் சென்றார்கள்.இந்த அமைதியை அவரிடம் தான் கற்றுக்கொண்டனர்.அவர்தான் அவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தி அனைவரும் படிக்க வாய்ப்பு தந்தார்.
அவருடைய சாத்வீக குணம்தான் இந்த மக்கள் வன்முறை போராட்டத்தை கையிலெடுக்காமல் இருப்பதற்கு காரணம்.புத்தருக்குப் பிறகு மீண்டும் அவர்கள் கீழ்மை நிலையிலே வைக்கப்பட்டார்கள்.இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக போராடி வருகிறார்கள்.அவர்களுக்கு கல்வி கொடுக்க வெண்டும் என்ற குரலோடு அம்பேத்கார் புறப்பட்டார்.எல்லா குழந்தைகளுக்கும் கல்வி அடிப்படை உரிமையாக வேண்டும் என்றார்.
அதோ பார் அந்த மலை தெரிகிறதா.அந்த மலை போலத்தான் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்.அவர்கள் வலிமை அவர்களுக்கு தெரியாது.அந்த மலையை போல நகராமல் இருக்கிறார்கள்.மலையை நீ தீவிரவாதி என்பாயா.அகிம்சைவாதி என்பாயா.
தனக்கு செய்த இன்னா செயல்களையும் தீங்கினையும் மறத்தல் நன்று என்று சொன்னார் புத்தர். அந்தக்காலத்தில் புத்தரை தன் வழியாக கொண்டவர்கள் அவனவன் செய்த செயலுக்கு அவனே பொறுப்பாகின்றான்.உலகம் அறிவால் வளரும் போது அது தானாக சில நியதிகளை விட்டு விடுகிறது.புத்தர் எப்பொழுதும் வழியுறுத்துகிற கொல்லாமை அவர்கள் மனதில் ஆழ பதிந்து விட்டது.
கொல்லுதல் தர்மம்.நீ யாரை கொல்லுகிறாயோ அது ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டது என்கிற பொய்யுரைகள் அதிகமாக நிலவும் இந்தக் காலத்தில் அன்பும் கருணையும் இரக்கமும்தான் தன் பாதை என நினைக்கிறவன் கோப பட மாட்டான்.புத்த மதத்தை பின் பற்றுகிறவன் பெளத்தன் கிடையாது. அவர் வழிகளை கடைபிடிக்கிறவனே பெளத்தன்.ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் பெளத்தர்களாய் இருக்கிறார்கள் நீயும் பெளத்தனாய் இரு என்றார்.உன் கோபம் துன்ப,ம் எல்லாம் தீரும்.
புத்தர் சொன்னான் .துன்பம் இங்கேயே உள்ளது.துன்பம் உள்ள சமூகத்தின் பிரதி நிதியாக நீ இருக்கிறாய்.அதிலிருந்து விலகி நிற்க புத்தர் சில வழிகளை சொல்கிறார் என்றார். .
நீ துன்பங்களின் பற்றி அதிகமாக யோசிக்காதே.உன் அம்மா மிகவும் வருத்தப்படுகிறாள்.,இனி அதிலிருந்து எப்படி மீள்வதென்று பார்.அதே சமயம் துன்பங்கள் தான் உன்னை என்னிடம் தேடி வரச்செய்கிறது.அது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்காக சிந்திக்கவும் அதை நோக்கி உன்னை நகர்த்தவும் செய்கிறது. அதிலிருந்து விலகி நில்.ஆனால் ஓடி விடாதே.அதை கவனித்துக்கொண்டிரு நீ மலையென்று மற்றவர்களுக்கு புரியவை.நேற்று அந்த மலையை நீ சுற்றிப்பார்த்ததை போல ஒரு நாள் ஊர் மக்கள் பார்ப்பார்கள் அப்போது அவர்களுக்கு புரிந்து விடும்,
வாழ்வின் எல்லா கட்டங்களிலும் துன்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.அதை விரட்ட முடியாது.துயரங்களை அங்கீகரிக்காதே.அது வலிமையிழக்கட்டும் என்றார்.வள்ளுவனை பார்.அவரும் உன்னைப்போலத்தான் அறம் பேசியவர்.ஆனால் அவர் பெளத்தரை போல சமணரை போல அகிம்சை வாழ்வு பற்றி பேசுகிறார். கள்ளுண்ணாமை.கல்லாமை புலால் மறுப்பு இதெல்லாம் பெளத்தம் சமணம் போதித்தவை அது பற்றி பேசுகிறார். அவர் காதலையும் பேசியிருக்கிறார் படி என்றார். அவன் அவரிடம் விடை பெற்றுக்கொண்டான்.
எல்லா பாதைகளிலும் முட்கள் வழக்கம் போல வளர்ந்து இருந்தன.வாழ்க்கை எங்கும் அவமானங்கள் காத்திருந்தன இருந்தாலும் மக்கள் வழக்கம் போல எழுவதும் வேலைக்கு செல்வதுமாக இருந்தனர்.வலிகளும் கேலிகளும் எகத்தாளமும் ஏதோவொரு ரூபத்தில் வழியில் சந்திக்கக் கூடையவைகள்தான் என்பது போல மக்கள் இயல்பாக இருந்தனர்.
அவர்களுக்கு கர்ம யோகம் தெரியாது.துன்பத்தினால் மனமொடிந்து போகாமலும் இன்பங்களில் ஆசையில்லாமலும் கோபத்தையும் பயத்தையும் விட்டவனாகவும் எவன் இருக்கின்றானோ அவனே ஞானி எதையும் அறியாதவர்கள்.
அவர்கள் ஞானிகளல்ல.இங்கே அவர்கள் மீது சருகுகள் போல விழும் சடங்குகள் சம்பிராயங்கள் அவர்களை காயப்படுத்திக்கொண்டே இருக்கின்றன,அதை கடந்து செல்கிறார்கள்.அவர்கள் தாங்களு ம் மனிதர்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனால் எதையும் கேள்வி கேட்காமலிருக்கிறார்கள் அவர்களின் கடவுளை போல. ஊமையாக இருப்பது எல்லா நேரத்திலும் சரிபட்டு வருமா தெரியாது. ஆனால் அப்படித்தான் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஜாட் இன மக்கள் இட ஒதுக்கீட்டுக்காக செய்த வன்முறைகள் எத்தகையது என்பதை நாளிதழ்கள் அறிவித்தன .பொது சொத்துக்களை சூறையாடினார்கள் அவர்களால் கோடிக்கணக்கன ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டும் அரசாங்கம் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருந்தது.அந்த மக்களைப்போல இவர்கள் ஏன் வன்முறை போராட்டங்களை நடத்த வில்லை.
போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை.அவர்களின் உரிமைகளுக்கு அவர்கள்தானே போராட வேண்டும்.மாபெரும் எழுச்சியில்லாமல் எத்தனை நூற்றாண்டுகள் இப்படி கடந்து போயின. அவர்கள் சுதந்திர போராட்டத்திலிருந்து எதையாவது படித்திருக்கலாம்.ஏன் அவர்கள் அவ்வாறு பாடம் படிக்கவில்லை.வரும் வழியில் யோசித்துகொண்டே வந்தான்..
ஒரு வேளை உண்மையில் அவர்கள் அடிமைகளாகத்தான் வாழ பிறந்தார்களா. இப்படிபட்ட எல்லா கேள்விகளையும் அந்த மலையின் மீது போட்டு வைத்தான். நேற்று ஏறிய மலை அவனைபார்த்துக்கொண்டிருந்தது.அது எத்தனை உண்மைகளை பொய்களை புனைவுகளை பார்த்திருக்கும் .எல்லாம் தெரிந்தும் அது அமைதியாக இருக்கிறது.மலை அவனுக்குள் ஒரு புத்தனாக உயர்ந்தது.
ஒவ்வொரு மலையும் அதிசயம்.அது எவ்வளவு பெரியது.அது எத்தனை தலைமுறைகளை சந்தித்து இருக்கும்.மனிதர்கள் பிறப்பதற்கு முன்பு பிறந்தவை மலைகள்.சிறிதோ பெறியதோ அதனது தன்னளவில் சில ரகசியங்களை உள்ளடக்கியிருக்கலாம்.மலை நகர்ந்தால் ஊர் தாங்குமா.அதனால்தான் அது நகராமலிருக்கிறது.
அது உனக்கு பாடம் நடத்துகிறது. சிலர் அது செத்துப்போன மலை என்கிறார்கள். பக்கத்தில் எந்த மலையும் இல்லை.இது தனித்து இந்த ஊரில் இருக்கிறது. அது பயப்படவில்லை.அதற்கு தாயோ தந்தையோ இல்லை.அது உன் கேள்விகளுக்கு பதில் சொல்லும்.மலையோடு பேசு. அது உன்னிடம் பேசும் என்று ஒரு முறை பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது. உன் சந்தேகங்களுக்கு பதில் சொல்லும்.பதில் சொன்னது மலை.அன்றிலிருந்து மலையை புத்தனாக பார்த்தான்,நதியை புத்தனாக பார்த்தான்.அதன் மெளனத்திற்கு அர்த்தம் தெரிந்தது.போரிடுவது வீரமல்ல. எதிராளியை அடிப்பது வீரமல்ல.அவனை மன்னிப்பதும் அணைத்து வாழ்வதும் வீரம்.
அவனுக்கு இப்போது புரிந்தது இந்த மக்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் புத்தனாக இருக்கிறார்கள்.புத்தர்கள் அன்றைய நாளில் வாழ்கிறவர்கள். அவர்கள் கடந்த காலத்திற்கு செல்வதில்லை.எதிர் காலத்துக்கும் செல்வதில்லை எப்பொழுதும் நிகழ்காலத்திலே இருக்கிறார்கள்.அவனுக்கு புரிந்த போது எல்லாம் தெளிவாக இருந்தது.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 36