மறுபக்கம்
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இவளுக்கு எரிச்சலாக இருக்கிறது.-
இரைச்சல் அப்படி. அது எப்பொழுதுமே பிடிக்காது. சத்தம் அதிகமாகத்தான் இருக்கிறது.
பத்து வயது பத்மினி எழுப்பும் சத்தம். பாடம் படிக்கிறாளோ?
என்ன வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும். சத்தம் போட்டுப் படிப்பது சகஜம். ஆனால் அதில் ஒழுங்கும் லயமும் இருக்க வேண்டும்.
சத்தத்தை சாகித்யமாக, சங்கீதமாகப் பாவிக்கும் சுபாவம் இவளுக்கு.
என்னவோ அபஸ்வரம் போல்-
அற்றார்க்கு…
அற்றார்க்கு ஒன்று…
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான்…
ஆற்றாதா…ஆற்றாதான் செல்வம்.
அவை, அலைகள், அடுக்கடுக்காக ஒலிகள், ஒத்து இசையாத ஒலிக் கூறுகள்.
இவளுக்கு எரிச்சல் மண்டுகிறது.
பிரித்து வைத்த புத்தகத்தில் பார்வைதான் பதிந்திருக்கிறது. மனம் படியவில்லை.
தேடிப் பிடித்து எடுத்து வந்த மன தத்துவப் புத்தகம் இது ஆழ்ந்தது படிக்காவிட்டால் அட்சரம் கூட பதியாது.
இவள் மனதத்துவம் படித்தவள் பெண் மனம். பெண்ணுரிமை என்று எந்தத் தலைப்பு வெளி வந்தாலும் படித்து விடுவது முதல் வேலை.
சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பட்டதாரியான தொடக்கத்திலிருந்தே விரிவுரையாளர், பணி இவளுக்கு. விஷயமறிந்தவள் என்ற பாராட்டு உண்டு.
அற்றார்க்கு..அற்றார்க்கு என்று அடுத்த வீட்டுச் சுட்டிப் பெண் அலறிக் கொண்டிருக்கிறாள்.
கீறல் விழுந்த இசைத் தட்டைப் போல என்பது பழைய உவமை. ஆனாலும் அதைத் தான் பளிச் சென்று இவள் நினைத்துக் கொண்டாள்.
அடுக்கு மாடி வீட்டில் இவள் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கும் பத்மினி உருவேற்றிக் கொண்டிருக்கும் இடத்திற்கும் தூரம் அதிகமில்லை. ஒரு சிறிய தடுப்பு தான் இடைவெளி.
அந்தக் குட்டியை அழைத்து சத்தத்தை நிறுத்தச் சொல்ல வேண்டும்… இல்லாவிட்டால் இப்போதைக்கு இவளால்,
உரத்த குரலில் அவளை இவள் அழைத்தாள்.
“கூப்பிட்டீங்களா; அக்கா!” பத்மினி அடக்கமாக எதிரில் நின்றாள்.
“ஆமா, என்ன சத்தம் ஒரேயடியா?”
“மனனம் செய்துக்கிட்டிருக்கிறேன்!”
“திடீரென்று என்னடி மனப் பாடம்?” “திருக்குறள் மனனப் போட்டியிலே டீச்சர் கலந்துக்கச் சொன்னாங்க அதனாலே
“இந்த மாதிரி கூச்சல் போட்டால் பரிசா கிடைக்கும்? அர்த்தம் புரிஞ்சி படிக்கணும்… அர்த்தம் புரிஞ்சி மனனம் செய்யணும்…” என்றாள் இவள்.
”மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா போதும்னு டீச்சர் சொன்னாங்க.” என்று இழுத்தாள் குட்டி பத்மினி.
“அப்படித்தான் சொல்லுவாங்க…ஏன்னா அவங்களுக்கே அர்த்தம் தெரியிறதில்லே.. அவங்களெல்லாம் பாடமா சொல்லித் தர்றாங்க!” என்று இவள் எரிந்தாள்.
மருள மருள இவளைப் பார்த்தாள் பத்மினி
“அக்கா, நீங்களே அர்த்தம் சொல்லிக் குடுங்க…” கையடக்கமான திருக்குறளை இவளிடம் நீட்டினாள் சிறுமி.
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம்’ என்ற அந்தக் குறளைப் படித்தாள்.
இரண்டு முறை… மூன்று முறை… அதற்கும் மேல், திரும்பத் திரும்ப.
இவள் நெஞ்சை ஏதோ அழுத்துவது போல் இருந்தது. “பளிச்சென்று அர்த்தம் சொல்ல வரவில்லை.
“சரி, பப்பி- நீ போய் மனனம் செய்!” என்றாள் இவள் உடைந்த தொனியில்
“அர்த்தம் சொல்லலையே, நீங்க.!”
“ஏழைகளுக்கு உதவி செய்யணும். இல்லாதவங்களுக்கு ஏதாவது கொடுத்து உதவணும்”
ஒப்புக்காக இரண்டு வார்த்தை சொல்லும் பாவனையில், ஆனால் சற்று பரப்பரப்புடன். அந்தச் சிறுமியை இவள் அனுப்பிவிட்டு ஓய்ந்து போனாள்.
புத்தகம் படிக்கும் உத்வேகம் பொடித்து விட்டது.
பத்மினியின் பாராயணச் சத்தம் இப்போது இல்லை ஒருவேளை அவள் இவளுக்குப் பயந்து போயிருக்கலாம். சத்தமெல்லாம் இப்பொழுது இவளைச் சுற்றித்தான். உள்ளம் முழுவதும் ஓயாத இரைச்சல்.
பத்மினியை வலிய அழைத்து அவள் உற்சாகத்தை அழித்துவிட்டது போன்ற குற்ற உணர்வு இவளுக்கு. அவள் மீது பிரியம் அதிகம்.
இவளுக்கு முறைப்படி நடக்க வேண்டியவை நடந்திருந்தால் அவள் வயதில் ஒரு மகளோ. மகனோ இருக்க வேண்டும். இன்னும் மூத்த வயதில்கூட பிள்ளைகள் இருந்திருக்கலாம்.
இவள் வயது அப்படி படிப்பை முடித்து பதினைந்து வருடத்திற்கு மேல் ஆகிறது. வயதைப் பற்றி இவள் சிந்தித்ததாகவே தெரியவில்லை.
பத்மினி இவளைப் பலவிதமாக அழைத்துப் பார்த்திருக்கிறாள் பல வருடங்களில்.
மம்மி… ஆண்ட்டி மேடம்
அதெல்லாம் கூடாது என்று இவள் தடுத்த பிறகு ‘அக்கா’ என்றே அழைக்கிறாள்.
அவளுக்கு அர்த்தம் சொல்ல முற்பட்டு அர்த்தம் புரியாத குழப்பத்தை வாங்கிக் கட்டிக் கொண்ட மனக் குமைச்சல் இவளுக்கு.
தப்பித்க்து கொள்வதற்காக ஏதோ ஒப்புக்குச் சொல்லி அனுப்பி வைத்தாள் இவள் என்பதுதான் உண்மை. அதற்குப் பொருள் சொல்லிப் புரிய வைக்கும் அளவுக்கு பத்மினிக்கு வயது இல்லை. விளக்கம் கூறுவதற்கு உன் மனத் தில் உறுதியும் பக்குவமும் இல்லை என்று உணர்வுகள் இவளை உறுத்தின.
மனனம் இப்பொழுது இவள் நெஞ்சுக்குள் தான்.
அற்றார்க்கு ஒன்று எனும் குறள் மனக்குரலாக ஒலிக்கிறது. எதிரொலிக்கிறது.
பாதியைச் சொல்லி பத்மினியை அனுப்பிவிட்டு மீதியை பாரமாகச் சுமந்து கொண்டு திணறுகிறாள் இவள் வறியவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவ வேண்டும்
சரிதான்!
அப்படி உதவாதவருடைய செல்வம் பயனற்றது. எப்படி?
அழகி ஒருத்தி மணவாழ்க்கை இல்லாமல் தனியாக வாழ்ந்து முதுமை அடைந்ததைப் போல.
அந்த மறுபக்கம் மூச்சுத் திணறத் திணற இவளை வெள்ளத்தில் அழுத்தி மூழ்கடிப்பதுபோல் நெருக்குகிறது.
இவள் அழகி, நிரம்பப் படித்தவள். செல்வச் செழிப்புள்ள பெண்.
இருபது தொடங்கி பல வருடம் இவளை வரித்துக் கொள்ள பலர் முன் வந்தார்கள், அவ்வப்போது. பதினைந்து வருடத்துப் பாரதம் அது.
அதன் படலங்களை, காண்டங்களை இவள் மூடி மூடிவைத்தாள். படிப்பின் முனைப்பா?
அதெல்லாம் பழையவை.
அந்த பாரதத்தின் பாயிரத்தைப் பிரித்து வைத்து விட்டுப் போய் விட்டாள் குட்டி பத்மினி.
இரண்டொரு நாள் முறிந்து போயின. இவள் மனம், தளர்ந்திருந்தது.
“அக்கா!”
பத்மினி அழைத்தபடி வந்தாள்
“என்ன பப்பி?”
மனனப் போட்டியில் தனக்குப் பரிசு கிடைத்திருப் பதைச் சொன்னாள். பரிசுப் பொருட்களைக் காட்டி ஆசிபெற வந்திருக்கிறாள்.
இவளுக்குச் சற்று வியப்பு. அர்த்தம் புரியாமல் உரு வேற்றி ஒப்பித்து பரிசையும் தட்டிக் கொண்டு வந்து விட்டாளே, பத்மினி!
அவளை அருகில் அழைத்தாள் இவள்.
“ரொம்ப மகிழ்ச்சி பப்பி… கன்கிராட்ஸ்.” என்றவாறு அவளை அணைத்து தலையை வருடினாள், பாசத்தோடு. அடுத்த வினாடி கண்களில் பனி மூட்டம் இமைகளில் ஈரம்.
“அக்கா ஏன் அழறீங்க?” என்றாள் பத்மினி.
“அழலே பப்பி… நீ பரிசு வாங்கினதிலே எனக்கும் ஆனந்தம்… அந்த ஆனந்தத்திலேதான்…”
இவள் தழுதழுத்தாள்.
பப்பியை அனுப்பி வைத்தாள்.
அதற்குப் பிறகு இவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அர்த்தம் தெரியாமலே பரிசு வாங்கி விட்டேன் என்று சொல்வதற்காக பத்மினி வந்து போனாள்?
வாழ்க்கையின் அர்த்தமும், தத்துவமும் தெரிந்திருந்தும் தோற்றுப் போய் உட்கார்ந்திருக்கிறாயே என்று யார் யாரோ குரல் எழுப்புவது போல் குமுறல் இவளுக்கு.
‘மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று’ என்ற குறள் அடியின் அடியை இவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழகும் இளமையும் ஒடுங்கிய தனிமையையும் முதுமையையும் கற்பனை செய்து பார்க்கவே குலைநடுக்கமாக இருக்கிறது இவளுக்கு.
உடைந்து போனவள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள். இவள் உள்ளத்தில் இப்பொழுது ஒரு புதிய, மெல்லிய சிந்தனைக் கோடு.
– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க... |