மருக்கொழுந்து மங்கை







(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
1. சுகந்தம்

கீழ்த்திசையில் நிலவு, அடிவானத்தை விட்டு உயரே வந்துகொண்டிருந்தது. பௌர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்களிருந்தன. நிலவின் வட்டத்தின் குறுக்கே கருமேகம் ஒன்று எழுந்துமறைத்தது. அந்த மேகத்தின் அமைப்பு, புத்தர் பிரான் அமர்ந்து நிஷ்டையில் இருப்பது போல் தோற்றமளித்தது. புத்தபிரானின் தலைக்குப் பின்னே ஒளி வட்டம் போன்ற நிலவு. அதே வேளையில், பல கடற்பற வைகள், சங்கிலித் தொடர் போல் வரிசையாக நிலவின் குறுக்கே கடந்து பறந்து சென்றபோது, புத்தர் பிரானின் கழுத்தை அலங்கரிக்கும் மாலை போல் காட்சி தந்தது. ஒரே ஒரு கணந்தான். பிறகு அந்தப் பறவைச் சங்கிலி, தூரத்தில் போய் மறைந்து விட்டது. அதையடுத்து, நிலவின் குறுக்கே புத்தரின் உருவம் போல் காட்சியளித்த மேகமும் கலைந்து விட்டது.
ஓ…! எவ்வளவு அற்புதமான காட்சி ! கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த உதயசந்திரன், அந்தக் காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றான். இனி அப்படி ஒரு காட்சி கிடைக்கவா போகிறது ? ஒரே ஒரு சந்தர்ப்பம் தான்!எவ்வளவு அபூர்வமான காட்சி !
உதயசந்திரன் சுற்று முற்றும் பார்த்தான். மேல் தளத்தில் கூட்டம் இல்லை. கப்பலைச் சார்ந்த பணியாட்கள் சிலர் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
தன்னைத் தவிர அந்த அற்புதமான காட்சி வேறு யாருக்கும் கிட்டியிராது என்று எண்ணிப் பெருமை கொண் டான். தன்னுடைய கண்கள் செய்த பாக்கியம் என்று எண்ணினான். திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது- புத்தர் பெருமானே ஆசி கூறி வழியனுப்பி வைக்கிறாரோ…. ?
கண்களை மூடியவாறு அந்தக் காட்சியை மனதில் இருத்தி ரசித்தான். உயரே ஏதோ சலசலப்புக் கேட்கவே கண்களைத் திறந்தான். வடதிசையிலிருந்து கடற் பறவை ஒன்று பறந்து வந்தது. அதனுடைய அலகில் பருத்த மீன் ஒன்றிருந்தது. பாய் மரத்தின் கிளைக் கம்பத்தில் அமர்ந்த பறவை சுற்று முற்றும் பார்த்தது. அதனுடைய பார்வை, கீழே கப்பல் தளத்தின் மீது நின்றுகொண்டிருந்த உதயசந் திரன் மீது விழுந்தது. பிறகு, அலட்சியமாகத் தென் திசை யைப் பார்த்தது. ஒரு முறை இறகுகளை விரித்துப் படபட வென்று அடித்துக்கொண்டது. அலகில் கவ்வியிருந்த மீனை ஒரு காலால் பிடித்துக் கொண்டு, அலகினால் இடப் பக்கத்து இறகினுள் வருடியது. ஒருகணம் மீனின் கனம் தாங்காமல் பறவை தடுமாறியது. ஆனால் சமாளித்துக் கொண்டு மீனை அலகில் கவ்விக் கொண்டது.
தளத்தின் மீது மாலுமிகள் சுறு சுறுப்பாயிருந்தனர். கப்பலின் விளிம்பில் கைப்பிடியைப் பற்றியவாறு நின்று கொண்டிருந்த உதயசந்திரன், பறவையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மீனின் கனத்தைத் தாங்க முடியாமல் பறவை மீனைக் கீழே போட்டு விடுமோ என்று ஐயுற்றான்.
“நல்ல வேட்டைதான். எவ்வளவு பெரிய மீன்!” என்று வியந்து கூறினான். மீனை அவன் பிடுங்கிக் கொள்ளுவான் என்று பறவை பயந்ததோ என்னவோ ? மிகுந்த அவசரத்து டன் மீனைக் கவ்வியவாறு தென் திசை நோக்கிப் பாய்ந்தது. ஓர் அம்பைப் போல் பாய்ந்து சென்ற பறவை, வெண் மேகத் தினூடே கரும் புள்ளியாகத் தெரியும்வரை உதயசந்திரன் பார்த்துக்கொண்டு நின்றான். களை பொருந்திய அவனு டைய முகத்தில் சிறிது வாட்டம் இருந்தது. கடல் கடந்து போகும் பயணத்தைப் பற்றிய எண்ணங்கள் அவன் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தன.
அந்தப் பறவை தூரத்தில் மிகச் சிறிய புள்ளியாகத் தேய்ந்து மறைந்து விட்டது. அவனுடைய பார்வை அத் திசையில் வெகு தூரத்திற்குச் சென்றது. நிலவொளியில் கடலின் விளிம்பு, வானத்தோடு இணைந்துதான் தெரிந்தது. பார்வை அத்திசையிலேயே பதிந்திருந்தது.
மனக் கண்ணில் ஒரு வயோதிகப் பௌத்த பிக்ஷ, கடற்கரையில் நின்ற வண்ணம் அவனை நோக்கிக் கையை அசைப்பது தெரிந்தது – அவரை விட்டுப் பிரிந்த போது அவன் மிகவும் நெகிழ்ந்து விட்டான். எவ்வளவோ முயன்றும் அவனால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. பிக்ஷ முகத்தில் புன்முறுவலுடன் அவனை அன்புடன் அணைத்து வழியனுப்பிய போது அவனுடைய கண்ணீர் பிரவாகமாகப் பெருகி அவருடைய பாதங்களில் விழுந்து சிதறியது. அவருடைய இனிமையான சாந்தம் தவழும் குரல் இன்னும் அவனுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“போய் வா மகனே. உலகத்தில் நீ எங்கு இருந்தாலும் இங்கு கற்றவைகளும் பெற்ற அனுபவங்களும் உனக்குத் துணையாக இருக்கும். புத்தர் பிரானின் அருள் உன்னைக் காக்கும். போய் வா….
திடீரென்று அவனுடைய சிந்தனை கலைந்தது. எங்கி ருந்தோ இனிமையான புது வாசனை வீசியது. மனதைக் கவர்ந்த அந்த நறுமணம் எத்திசையிலிருந்து வந்தது என்று கவனிக்கத் தொடங்கினான். அது, நிச்சயம் கடல் அலைகளி லிருந்து வந்திருக்க முடியாது. கப்பலின் மேல் தளத்தில் கடல் நீரின் ஈரத்தில் ஊறிப் போன பாய்மரங்களின் நெடியையும் மீறி அப்படி ஓர் அருமையான சுகந்தம் எங்கிருந்து வந்திருக்க முடியும்…?
ஈழத் தீவின் சிகிரியாக் காடுகளில் அவன் அலைந்து திரிந்தபோது பல அபூர்வ மலர்களின் வாசனைகளை அனுபவித்திருக்கிறான். ஆனால் இந்த மாதிரி ஒரு புதுமை யான மணத்தை அவன் நுகர்ந்ததில்லை. கண்களை மூடிய படி மூக்கை நன்கு உறிஞ்சி வாசனையை உள்ளுக்கு இழுத் தான்.
பெரிய அலை ஒன்று, கப்பலின் மீது மோதியது. நீர்த் துளிகள்,தளத்தின் மீது சிதறி விழுந்தன. தூவானம் அவன் மீது பட்டது. உப்புக் காற்றின் நெடி ஆட்கொண்டது. கீழே குனிந்து அலைகளைக் கவனித்தான். கடலில் கடற் கன்னிகள் இருப்பார்கள் என்றும், கப்பலின் மேல்தளத்தில் அவனைப்போன்று அழகான இளைஞன் தனித்திருந்தால் அவனைக் கவர்ந்து சென்று விடுவார்கள் என்றும் கேள்விப் பட்டிருந்தான்.
சட்டென்று திரும்பி, தளத்தைக் கவனித்தான். தான் மேல்தளத்தில் தனியாக இல்லை, தன்னோடு சில மாலுமி களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டான். தனக்கு ஏற்பட்ட பயத்தை எண்ணி உள்ளூரச் சிரித்தான்.
கடற்கன்னிகள் அப்படியே தன்னை கவர்ந்து சென் றால்தான் என்ன? கடலுக்கடியில் ஓர் அற்புத உலகம் இருக் கலாம். அங்கு என்னென்ன இன்பங்கள் கிடைக்குமோ. ஒரு வேளை, கடற் கன்னி எவளாவது கப்பலின் அருகே நீந்தி வருகிறாளோ? அவளிடமிருந்துதான் அந்த நறுமணம் வீசியதோ….
உதயசந்திரன் குனிந்து கடலை உற்றுப் பார்த்தான். தன்னுடைய கற்பனையை எண்ணிச் சிரித்தவாறே தலை நிமிர்ந்தான்.
“என்ன தம்பி சிரிக்கிறாய்?”
மூக்கடைத்த கரகரப்பான குரலைக் கேட்டு திகைப் புற்றவனாய்த் திரும்பினான். அவனருகே ஒருவன் நின்று கொண்டிருந்தான். முப்பது அல்லது முப்பத்திரண்டு வயதி ருக்கும். ஒல்லியாக இருந்தாலும் வலுவுள்ளவனாக இருந் தான். அவனுடைய முறுக்கேறிய கொடுக்கு மீசையும், சிவந் திருந்த கண்களும், அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தன. தமிழை அவன் உச்சரித்த விதத்திலிருந்து அவன் தமிழனல்லன், ஈழத் தீவைச் சேர்ந்த வன் என்பதைப் புரிந்து கொண்டான், உதயசந்திரன்.
“கீழே கடலில் எதைப் பார்த்துச் சிரித்தாய்?” என்று கொடுக்கு மீசைக்காரன் மீண்டும் கேட்டான்.
“கடற் கன்னியைப் பற்றிய நினைவு வந்தது. என் நினைவை எண்ணிச் சிரித்தேன்” என்றான் உதயசந்திரன்.
“ஓ, கன்னியின் நினைவா? இருட்டுகிற சமயமாச்சே. அதோ நிலவும் எழுந்துவிட்டது, உன் காதல் நினைவு களைத் தூண்டிவிட.”
முன்பின் தெரியாதவன் இப்படிப் பேசியது, உதய சந்திரனுக்குச் சகிக்கவில்லை. உள்ளூரக் கோபம் எழுந்தது. பதில் சொல்லாமல் பார்வையைக் கடல் அலைகளின் மீது செலுத்தினான்.
“நீயும் திரிகோண மலையில் கப்பலில் ஏறியபோது பார்த்தேன். உன்னை ஒரு பிக்ஷ, வழியனுப்பினாரே” என்றான் கொடுக்கு மீசைக்காரன்.
இதற்கும் பதில் கூறாமல் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான், உதயசந்திரன். கொடுக்கு மீசைக்காரன் விடுவதாயில்லை.
“நீ பௌத்த மடத்தைச் சேர்ந்தவனா?” என்று கேட் டான். இதற்கு ‘ஆமாம்’ என்று கூறுவதுபோல் தலையை ஆட்டினான் உதயசந்திரன்.
“எங்கே பயணம்? நாகப்பட்டினத்திற்கா, மாமல்ல புரத்திற்கா?” கொடுக்கு மீசைக்காரன் கேட்டான்.
நான் எங்கே போனால் உனக்கென்ன என்று கேட்கும் அலட்சிய பாவனையில் உதயசந்திரன் மௌனமாயிருந் தான்.
“பௌத்தர்களுக்கு அங்கெல்லாம் இப்போது எதிர்ப்பு அதிகம் இருக்கிறதாம். ஆபத்துக்கூட உண்டு என்று கேள்வி.”
இதைக் கேட்டதும் உதயசந்திரன் வியப்புடன் திரும்பினான்.
“பௌத்த மடங்களுக்கு ஆபத்து ஒன்றுமில்லையே?” என்று பரபரப்புடன் கேட்டான்.
“மடங்களுக்கும் ஆபத்து இருக்கலாம்” என்றான், மீசைக்காரன்.
“பல்லவ நாட்டில் ஆட்சி நடைபெறுகிறதா இல்லையா?”
“ஆட்சி நடந்து என்ன? மக்களே எதிர்க்கும் போது….”
”நீ யார்? உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? தமிழ் நன்றாகப் பேசுகிறாயே இலங்கையைச் சேர்ந்தவனில் லையா, நீ?”- படபடவென்று கேள்விகளை அடுக்கினான் உதயசந்திரன்.
“காஞ்சியிலே வேலை இருக்கிறது. நீ எங்கே? காஞ்சிக்குத்தானா?”
“மாமல்லபுரத்திற்கு”
“என்ன வேலையாக? வாணிபமா?”
இதற்கு உதயசந்திரன் பதில் கூறாமலிருந்தான். இதைப் பற்றியெல்லாம் இவனுக்கு என்ன கேள்வி என்பது போல் எரிச்சலுடன் கடற் பக்கமாகத் திரும்பினான். வெகு தூரத்தில் மினுக் மினுக்கென்று ஒளி தெரிந்தது. கூர்ந்து பார்த்தான். அவனால் அனுமானிக்க முடியவில்லை. திரும்பி, கொடுக்கு மீசைக்காரனிடம், “கரை நெருங்கி விட்டதா? தூரத்தில் ஏதோ ஒளி தெரிகிறதே” என்று கேட்டான்.
மீசைக்காரன் தூரத்தில் தெரிந்த ஒளியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “ஏதோ வெளிச்சம் தெரிகிறது. நாளை நண்பகலில் அல்லவா கரை சேரும். அது ஒரு கப்பலாக இருக்கும். இதோ ஒருவன் பாய்மரத்தில் ஏறுகிறானே. அது என்னவென்று பார்க்கத்தான் ஏறுகிறான்” என்றான்.
கம்பத்தின் மீது வேகமாக ஏறிக்கொண்டிருந்தவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் உதயசந்திரன். கம்பத்தின் அடியில் நின்று கொண்டிருந்த கப்பல்தலைவன், அண்ணாந்துகம்பத்தின் உச்சியைப் பார்த்துக் கொண்டிருந் தான். உச்சியில் ஏறியவன், ஒளி தெரிந்த திசையில் உற்று நோக்கிவிட்டு, “கப்பல், கப்பல்! இந்தத் திசையில் தான் வருகிறது” என்று இரைந்து கத்தினான். அலைகளின் இரைச் சலும், பாய்மரங்களின் படபடத்த ஒலியும் அவனுடைய குரலை அமுக்கின. கப்பல் தலவன், காதுகளை மேல் நோக்கிக் குவித்தபடி கம்பத்தின் உச்சியை நோக்கினான். அங்கிருந்தவன், “கப்பல், கப்பல்” என்று கூவியவாறு கை களினால் பாய்மரம் போல் அபிநயம் பிடித்துக் காட்டினான். பிறகு, கீழே இறங்கத் தொடங்கினான்.
உதயசந்திரன் பார்வையைத் திருப்பியபோது, அந்தக் கொடுக்கு மீசைக்காரனைக் காணவில்லை.
“மரியாதை தெரியாதவன் போலிருக்கிறது. சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டானே” என்று முணுமுணுத்தான். அவனருகே வந்த கப்பல் தலைவனிடம் “வேறொரு கப்பல் வருகிறதோ?” என்று கேட்டான்.
“ஆமாம். அப்படித்தான் தெரிகிறது” என்று கூறி விட்டுச் சென்றான், கப்பல் தலைவன்.
ஈரக் காற்றினால் உதயசந்திரனுக்கு மூக்கு அடைப்பது போலிருந்தது. திடீரென்று சற்று முன்பு வீசிய நறுமணம் மறுபடி வீசியது. கண்களை மூடியவாறு ரசித்தான். மீண்டும் கண்களைத் திறந்தபோது வியப்புற்றான்.
எதிரே அவனுக்கு மிக அருகாமையில் நிலவு இருந்த தைக் கண்டு துணுக்குற்றான்.
வானத்து நிலவு எப்படிக் கப்பலுக்கு வந்தது…
விழி மூடாமல் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
‘களுக்’கென்று சிரிப்பொலி கேட்டது. திகைத்தான். கண்ணெதிரே தெரிந்தது ஒரு பெண்ணின் முகம் என்று புரிந்துகொண்டபோது, அவனுக்கு வியப்பு மேலிட்டது. அவள் மீண்டும் சிரித்தாள்.
சிகிரியா மலைக் காடுகளில் அவன் திரிந்து கொண் டிருந்த காலங்களில் பறவைகளின் இனிய கூவல்களைக் கேட்டிருக்கிறான். ஆனால், இப்போது மட்டும் அந்தப் பெண்ணின் சிரிப்பொலி அவனுள்ளே இனிமை படர்ந்த புதுமையான உற்சாகத்தை எழுப்புவானேன்?
அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே எதிரே தோன்றிய பெண் ஓடி மறைந்துவிட்டாள். அவளைத் தொடர்ந்து ஓடுவதற்காக ஒரு காலையும் எடுத்து முன் வைத்தான். வைத்த நிலையிலேயே நின்றான். தன்னுடைய செயலை எண்ணி தனக்குள்ளேயே நகைத்துக் கொண் டான். சற்று நேரத்திற்கு முன் கடற் கன்னியைப் பற்றி எண்ணியதை நினைத்தான். தன்னைக் கவர்ந்து செல்லத் தான் கடற்கன்னி கப்பலுக்கு வந்தாளோ….?
கப்பலில் பயணம் செய்யும் பயணிகளில் அவளும் ஒருத்தி என்பதைப் புரிந்து கொண்டதும், அவளை மீண்டும் காண வேண்டும் என்னும் ஆவல் எழுந்தது.
கப்பலின் மேல் தளத்தில் ஆட்களின் நடமாட்டம் குறையத் தொடங்கியது. நிலவு வானத்தில் ஏற ஏற, கடல் அலைகளும் உயரத் தொடங்கின. உதயசந்திரன் அங்கிருந்து விலகி, கப்பலின் நடுத்தளத்திற்குச் சென்றான். ஆங்காங்கே தீவட்டிகள் எரிந்து கொண்டிருந்தன. அந்தப்பகுதியிலிருந்த வர்கள் அனைவருமே செல்வமிக்க வணிகர்கள் என்பதைப் புரிந்துகொண்டான். அந்தப் பகுதியில் சீனர்கள், தமிழர்கள், யவனர்கள், ஈழத்தார்கள் எல்லோருமிருந்தனர்.
நடுத்தளத்தில் சற்று நேரம் நின்றுகவனித்தான். அந்த நறுமணம் அந்தப் பகுதியில் அதிகமாக வீசியது. சற்று முன்னால் அவனுடைய பார்வையில் தென்பட்டவள் அந்தப்பகுதியில் தான் இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டான். பலகைகளினால் பல தடுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்த அந்தத் தளத்தில் அவள் எப்பகுதியில் இருக்கிறாளோ….
சற்று நேரம் அங்கு நின்று, அங்கு வீசிய நறுமணத்தை ரசித்து விட்டு, கீழ்த்தளத்திற்குச் சென்று தன்னுடைய இருப்பிடத்தில் அமர்ந்தான். கீழ்தளத்தின் நெடி, மூக்கை அரித்தது. பலவித வியாபாரச் சரக்குகள் கீழ்தளத்தின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருந்தன. கீழ்தளப் பயணிகள், அந்தச் சரக்குகளுக்கு இடையேதாம் தங்கிப் பயணம் செய்ய வேண்டும்.
உதயசந்திரனுக்குப் பசியெடுத்தது. கட்டுச் சோற்றை அவிழ்த்து உண்டு விட்டு, தன்னுடைய பயணச் சுமையைத் தலையணையாக வைத்துப் படுத்துக் கொண் டான். கீழ்த்தளத்தில் பயணம் செய்த மற்றவர்களும் படுத்து விட்டார்கள். இரண்டு மூன்று தீவட்டிகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. உதயசந்திரன் கண்களை மூடி உறங்க முயன்று கொண்டிருந்தான்.
2. சீனத்துச் சிட்டு
உதயசந்திரனுக்கு உறக்கம் வரவில்லை. பல நினைவு கள் அலைக்கழித்தன. வாழ்க்கையை இலங்கையிலேயே கழித்துவிடலாம் என்றுதான் எண்ணியிருந்தான். ஆனால் தாய்நாட்டின் நினைவு அவனை விடுவதாயில்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இதே போல்தான் கப்பலில் பயணம் செய்தான். அப்போது அவன் பத்து வயதுச் சிறுவன். மாமல்லபுரத்தில் யாருக்குமே அடங்காத துஷ்டப் பையன் என்று பெயரெடுத்துத் திரிந்தவனை, அவனுடைய பாட்டனார், கப்பலேற்றி இலங்கைத் தீவிற்கு அனுப்பி வைத்தார்.
அவனுடைய மூன்றாவது வயதிலேயே தாயார் இறந்து விட்டாள். தந்தை, பல்லவப் படையில் பணியாற் றினார். ஒரு போர்க்களத்தில் அவரும் உயிர் துறக்கவே, அவனுடைய தாயைப்பெற்ற பாட்டனார் தாம் ஆதரவா யிருந்தார்.
அவனுடைய குறும்புத்தனம் சகிக்க முடியாமலிருந் தது. பாட்டனார் செய்வதறியாது திகைத்தார். பௌத்த கடிகையில் கல்வி கற்க அனுப்பினார். அங்கு முரட்டுத்தன மான காரியங்களை சாமர்த்தியமாகச் செய்தானே தவிர, கல்வியில் ஆர்வம் இல்லை. அப்போது மாமல்லபுரத்து பௌத்த கடிகைக்கு சாந்தி தேவர் என்ற பிக்ஷ, இலங்கையி லிருந்து வந்திருந்தார்.
ஒருநாள் கடிகையில் ஓர் இளம் பிக்ஷ அவனுக்குக் கல்வி புகட்டிக் கொண்டிருந்தபோது, “இந்தத் தத்துவங் களைக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்? தத்துவங்கள் சோறு போடுமா?” என்று கேட்டான்.
பிக்ஷு திகைத்தார். வலுவான கேள்வி. பதிலைச் சிந்தித்தார். பக்கத்து அறையிலிருந்து கேட்டுக் கொண்டி ருந்த மகா ஞானியான பிக்ஷ சாந்தி தேவர், வெளியே வந்தார். கல்வி போதித்துக் கொண்டிருந்த இளம் பிக்ஷு, உதயசந்திரனின் கேள்விக்குப்பதில் கூற இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
சாந்தி தேவர்,புன்முறுவலுடன் சிறுவன் உதயசந்தி ரனை உற்று நோக்கினார். அவனுடைய சாமுத்திரிகா லக்ஷணம் அவருடைய கவனத்தை ஈர்த்தது. சற்று நேரம் அவனுடைய துறுதுறுப்பான கண்களைக் கூர்ந்துகவனித் தார்.
“எது சோறு போடும் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்.
“எது சோறு போடும் என்பது தெரியாது. ஆனால் இந்தத் தத்துவங்கள் எனக்குச் சோறு போடாது என்பது மட்டும் தெரியும்” என்றான் உதயசந்திரன்.
“எதனால் அப்படிச் சொல்கிறாய்?”
“நான் பிக்ஷுவாக ஆகப் போவதில்லை.”
சாந்தி தேவர் மெல்லச் சிரித்தார். கனிவுடன் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தார். அருகிலிருந்த இளம் பிக்ஷுவை நோக்கி, “இவனை சிகிரியா மலைக்கு அழைத்துச் செல்லட்டுமா?” என்று கேட்டார்.
“இவனை மேய்ப்பது கடினம். மகா துஷ்டன்” என்றார் இளம் பிக்ஷ.
“சிறுவன் தானே! இந்த வயதில் இப்படித்தானிருப் பான். சிகிரியா மலைக்கு வந்துவிட்டானென்றால், அந்தச் சூழ்நிலையே இவனைப் பக்குவப் படுத்திவிடும்” என்றார் சாந்திதேவர். பிறகு, உதயசந்திரனிடம், “என்னோடு மலைக்கு வருகிறாயா ?” என்று கேட்டார்.
“அது எங்கே இருக்கிறது?” என்று மிக்க ஆவலுடன் கேட்டான், உதயசந்திரன்.
“இலங்கைத் தீவில்.”
“அந்தத் தீவைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். கப்பலில்தானே போக வேண்டும்? எனக்கு கடலில் செல்ல வேண்டும் என்று ஆசை” என்றான் உதயசந்திரன்.
சாந்தி தேவரின் கண்காணிப்பில் அவன் திருந்துவான் என்று எண்ணி அவனுடைய பாட்டனார் அவனை இலங் கைக்கு அனுப்பி வைத்தார்.
சிகிரியா மலைக் குகைகளிலிருந்த புத்தபிக்ஷுக்களு டன் அவன் வாழ்ந்த பத்து ஆண்டுகளில் பலவற்றைக் கற்றான். பௌத்த தத்துவங்களையும், நடைமுறைகளையும் பயின்றான். பிக்ஷக்களின் வாழ்க்கை நியதிகளை அறிந்து கொண்டான். மிக நுட்பமான ஓர் அபூர்வப் போர்க்கலை யைக் கூட பிக்ஷக்களிடமிருந்து கற்றுத் தேர்ந்தான். பாசம் மிகுந்த தந்தையைப் போல் அவனைக் கண்காணித்த சாந்தி தேவரின் அன்பும், முயற்சியும் அவனைப் பக்குவப்படுத்தி யிருந்தன. பெளத்த மடத்தின் கட்டுப்பாடான வாழ்க்கை நெறியும், சிகிரியா மலைக் காடுகளின் பயங்கரச் சூழ்நிலை யும், அவனுடைய உள்ளத்தையும், உடலையும் வலுப்படுத் தின. பெளத்த மடம், கல்வியைப் புகட்டியது. சிகிரியா மலைக்காடுகள், துணிவையும், வலுவையும் உண்டாக்கின.
பத்து ஆண்டுகள் பௌத்த மடத்தில் வாழ்ந்த பிறகு ஒருநாள் சாந்தி தேவர் அவனிடம் கேட்டார்:
”உதயசந்திரா, பௌத்த தத்துவங்களும், மடத்துப்பணி களும் உன்னை நன்கு பக்குவப்படுத்தியிருக்கின்றன. புத்தர் L பிரானின் கருணை நிழலில் நிரந்தரமாக ஒதுங்கித் தொண்டு செய்ய உனக்கு விருப்பமா?”
பிக்ஷவின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு உதயசந்திரன் சொன்னான்:
“தத்துவம் சோறு போடுமா என்று பத்து ஆண்டு களுக்கு முன்புநான் கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது. இந்த வாழ்க்கை, கேவலம் வெறும் சோற்றை மட்டும் பிரதானமாகக் கொண்டதில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். தங்களிடம் நான் கற்றவைகளும், பெற்ற பயிற்சிகளும் என்னிடம் வீணாகி விடப் போவ தில்லை. ஆனால், என் மனம் துறவு வாழ்க்கையில் ஈடுபட வில்லை”.
சாந்தி தேவர் மிக்க பரிவுடன் அவனுடைய தோளை ஒரு கையால் அணைத்துக்கொண்டு “அவனவனுடைய பாதையை அவனவன்தான் வகுத்துக்கொள்ள வேண்டும். கற்றகல்வி துணை நிற்குமே தவிர, கல்வியே வாழ்க்கை யாகி விடாது, உன்னுடைய வழியே நீ செல்” என்று சொன்னார்.
சாந்தி தேவரின் நினைவு உதயசந்திரனைக் கண்கலங்க வைத்தது. தாய்நாட்டிலும் அவனுக்கு ஆதரவாக யாரு மில்லை. பாட்டனார் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பது தெரியவில்லை. இப்போது மாமல்ல புரத்துக் கப்பல் துறையில் அவனை எதிர்பார்த்து யாரும் இருக்கப்போவதில்லை. ஆனாலும், எதிர்காலத்தில் அவனுடைய வாழ்க்கை தாய்நாட்டில்தான் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கைதான் அவனை இழுத்துக் கொண்டு சென்றது.
கப்பலில் அடித்தளத்தின் நெடியினால் அவன் உறங்க முடியாமல் சங்கடப்பட்டான். உறக்கம் வரவில்லை யாதலால் மீண்டும் எழுந்து கப்பலின் நடுத்தளத்திற்குச் சென்றான். அங்கு கமழ்ந்து கொண்டிருந்த நறுமணத்தை யாவது ரசித்துக் கொண்டிருக்கலாமே. நடுத்தளத்திலிருந்து மேல் தளத்திற்குச் செல்லும் ஏணிப்படியில் அமர்ந்தான். அருகில் ஒரு தீவட்டி எரிந்து கொண்டிருந்தது.
நடுத்தளத்தில் இன்னும் யாரும் உறங்கவில்லை. சிலர் வம்பளந்து கொண்டிருந்தனர். சிலர் மது அருந்திக் கும்மாள மடித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். மகிழ்ச்சியின் ஆரவாரம் அந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்தது.
மதுவை ரசித்தவாறு அளவளாவிக் கொண்டிருந்த ஒரு சீனக் கனவானின் கவனம் உதயசந்திரன் மீது திரும்பியது. அந்த வேளையில் ஒருவன் அந்த இடத்தில் ஏணிப்படியின் மீது அமர்ந்திருந்தது அவருக்கு வியப்பை அளித்தது. மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தியபடியே அவனை நெருங்கினார்.
அவருக்கு ஐம்பது வயது இருக்கும். மெலிந்த உடல் தான் என்றாலும், வைரம் பாய்ந்த உடல். இடுங்கிய கண் களில் அனுபவத்தின் கூர்மை, உதடுகளில் குறுநகை. சிறு மீசை, வாயின் இரு பக்கங்களிலும் தொங்கியது. தலை மயிரைப் பின்னித் தொங்கவிட்டிருந்தார். அவரைக் கண்டதும் உதயசந்திரன் எழுந்து நின்றான்.
“தம்பி, எந்த நாட்டிற்குப் பயணம்?” என்று கேட்டார். அவர் தமிழில் பேசியதைக் கேட்டு வியப்புற்று அவரை வெறிக்கப் பார்த்தான்.
“நீ எந்த மொழிக்காரன்? பார்த்தால், தமிழ்ப் பகுதியைச் சேர்ந்தவனைப் போலிருக்கிறாய்” என்றார் அவர்.
“நான் தமிழன்தான். மாமல்லபுரம் போகிறேன். நீங்கள் தமிழ் பேசுகிறீர்களே. உங்களுக்கு சீனதேசமல்லவா?” என்றான் உதயசந்திரன்.
“தமிழும் தெரியும். காஞ்சிபுரம், மாமல்லபுரத்திலும் எனக்கு வாணிபம் உண்டு. நாகப்பட்டினத்திலும் சிலகாலம் இருந்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை யாவது காஞ்சிக்கு வந்து போவேன். நீ, இலங்கைத் தீவில் ஏறியதைப் பார்த்தேன்” என்றார் சீன வாணிபர்.
“ஆமாம். பத்து ஆண்டுகள் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்தேன். இப்போது தாய்நாடு திரும்புகிறேன்.”
“ஓ…. ! கல்வி கற்க இலங்கைக்குச் சென்றாயா? வேடிக்கைதான். உலகத்தில் பல திசைகளிலிருந்தும் கல்வி கற்பதற்காக காஞ்சியை நோக்கி செல்கிறார்கள் ! நீ, காஞ்சி யிலிருந்து இலங்கையைத் தேடிச் சென்றிருக்கிறாய்!” என்று கூறிச் சிரித்தார்.
“நான், சிறுவயதில் அடங்காத துஷ்டனாக இருந்தேன். கடல் கடந்து சென்றால், என் குணம் மாறும் என்று என் பாட்டனார் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.”
“இப்போது உன் குணம் மாறிவிட்டதா?” என்று கேட்டுச்சிரித்தார் சீன வணிகர். பிறகு, “இங்கே இந்நேரத்தில் நடைபாதையில் அமர்ந்து என்ன செய்கிறாய்?” என்றார்.
“கீழ்தளத்தில் புழுக்கம் நெடி வேறு தாங்க முடிய வில்லை. இங்கு உங்கள் பகுதியிலிருந்து புதுமையான நறு மணம் வீசுகிறது. ரசித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன்.”
“இங்கிருந்து நறுமணமா?”
“ஆமாம், உங்களுக்குத் தெரியவில்லையா? புதுமை யான ஒருவித வாசனைதான் வருகிறதே.”
“இப்போது இங்கே அருமையான இந்த மதுவின் வாசனைதான் வீசுகிறது” என்று கூறிச் சிரித்தபடியே மதுக் கிண்ணத்தை உயர்த்திக் காட்டினார் சீன வணிகர். பிறகு ஏதோ நினைவிற்கு வந்தவராய், “ஓ… இருக்கும். என் மகள் கொஞ்சம் செடிகள் கொண்டு வந்திருக்கிறாள். அவற்றின் சுகந்தமாகத்தானிருக்கும்” என்றார்.
“என்ன செடி?”
சீனர் சீன மொழியில் ஏதோ ஒரு பெயரைச் சொன்னார். உதயசந்திரன் புரிந்து கொள்ளாமல் விழித்தான்.
“இதற்கு தோனாச்செடி என்று பெயர். தமனகம் என்றும் சொல்வார்கள். தெற்கே இதற்கு மருக்கொழுந்து என்று பெயர்” என்றார் சீன வணிகர்.
“அப்படி ஒரு செடியைப் பற்றி நான் கேள்விப்பட்ட தில்லையே.”
“சில ஆண்டுகளாகத்தானே இந்தச் செடி உங்கள் நாட்டிற்கு இறக்குமதியாகிறது. இது சீனத்துச் செடி. காஞ்சி யில் கைலாசநாதர் கோவிலை அடுத்த நந்தவனத்தில் இது வளர்கிறதே.”
“நான் அதைப்பார்க்கலாமா?”
“ஓ, காட்டுகிறேன் வா” என்று கூறி உட்பக்கம் நடந்தார்.
உதயசந்திரன் அவரைத் தொடர்ந்து சென்றான். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவனைச் சந்தேகத்துடனும், வியப்புடனும் பார்த்ததைக் கவனித்துக் கொண்டான். உள்ளூர ஓர் ஆசையும் இருந்தது. மேல் தளத்தில் தோன்றிய அழகி அந்தப் பகுதியில் எங்காவது இருப்பாள் என்று எதிர்பார்த்தான்.
உட்புறத்தில் மூன்று பகுதிகளைக் கடந்து நான்காவது பகுதிக்கு வந்ததும் ஓர் அறையின் வாசலில் நின்றார் சீன வணிகர். நறுமணம் அங்கு மிகுதியாக வீசியது.
“லீனா……….” என்று கூப்பிட்டார்.
உள்ளேயிருந்து அந்த சுகந்தத்தைவிட இனிமையான ஒரு குரல் கேட்டது. சீனமொழி உதயசந்திரனுக்குத் தெரியா விட்டாலும், அந்த மொழியைத் தாங்கி வந்த குரலின் இனிமையில் லயித்தான். மறுகணம் வாசலில் முழு நிலவு தோன்றியது.
ஓ…! மேல்தளத்தில் தோன்றி மறைந்த அதே அழகி தான்!
சட்டையில்லாமல் வெறும் கச்சையை மட்டும் மார்பில் கட்டியிருந்த பெண்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன உதயசந்திரன், சட்டையணிந்த சீனப் பெண்ணைக் கண்டு வியந்து நின்றான். மேல் தளத்தில் அவளைக் கண்டபோது அவளுடைய முக விலாசத்தில் மயங்கியவன் அப்போது அவளுடைய உடையைப்பற்றிக் கவனிக்கவில்லை. இப்போது அவள் இடுப்பிற்கு மேல் சட்டையும், இடையில் ஆடையணிந்திருந்த விதமும் அவன் கவனத்தை ஈர்த்தன. அவள் ஆடையணிந்த விதமே அவளுடைய கவர்ச்சியை மிகைப்படுத்தியது.
“இவள்தான் என் மகள்” என்றார், சீன வணிகர்.
அந்தப் பெண் உதயசந்திரனைப் பார்த்ததும் தன் தந்தையிடம் சீனமொழியில் ஏதோ கூறினாள். அவர், ஓஹோ வென்று உரக்கச் சிரித்தபடியே, உதயசந்திரனிடம், “மேல் தளத்தில் நின்றவாறே தூங்கிக் கொண்டிருந்தா யாமே?” என்றார்.
“இந்தச் செடியின் மணம் அங்குவரை வீசியது. கண் களை மூடியவாறு ரசித்தபடியே நிலவொளியில் நின்று கொண்டிருந்தேன். அப்போதுதான் இவள் என் எதிரே திடீரென்று வந்து நின்றாள். கண்களை விழித்தபோது வானத்து நிலவு என் எதிரே எப்படி வந்தது என்று திகைத்து விட்டேன்” என்றான், உதயசந்திரன்.
சீன வணிகர் இதைக் கேட்டு கலகலவெனச் சிரித்தார். “தமிழ்நாட்டாருக்கு மிக்க ரசனை உண்டு” என்று கூறி விட்டுத் தம் மகளைப் பார்த்து முறுவலித்தார். அவள் நாண மடைந்தவளாய் தந்தையின் பின்னே மறைந்து கொண்டு உதயசந்திரனை நோக்கினாள்.
தனக்கும் வக்கணையாகப் பேசத் தெரிகிறதே என்று தனக்குள்ளேயே வியந்து கொண்டான், உதயசந்திரன். அழகான பெண்ணைக் கண்டவுடன் ஆணுக்குக் கற்பனை தோன்றிவிடுமோ….?
“இவளுக்கும் தமிழ் தெரியும். நீ கூறுவதை நன்கு புரிந்துகொள்வாள்” என்றார், சீனர். பிறகு, தம் மகளிடம், “நீ கொண்டு வந்திருக்கும் செடிகளைப் பார்க்க வேண்டுமாம்” என்று கூறியதும், அந்தப் பெண், “உள்ளே அழைத்து வாருங்கள்” என்றாள்.
அறையினுள்ளே மூலையில் இருபது மண் பானை களில் செடிகள் வளர்ந்திருந்ததைக் கண்ட உதயசந்திரன், குனிந்து செடிகளை முகர்ந்து பார்த்தான். “அருமையான வாசனை” என்று கூறிக் கொண்டே மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து முகர்ந்தான்.
அந்தப் பெண் ஒரு செடியிலிருந்து சில கொழுந்து களைப் பறித்து அவனிடம் நீட்டினாள். மிகுந்த மகிழ்ச்சி யோடும், பரபரப்புடனும் அவன் அவைகளை வாங்கிக் கொண்டபோது, ஒருகணம் அவனுடைய கண்களை அவளுடைய பார்வை வருடிவிட்டுப்பிரிந்தது.
“இப்போது இந்தச் செடிகளைப் பல்லவ நாட்டில் வளர்க்க வேண்டுமானால் அரசின் அனுமதி வேண்டும். இதற்கு வரி செலுத்தவும் வேண்டும். மாமல்லபுரத்தில் இறங்கும்போது இத்தனை செடிகளுக்கும் நான் சுங்கம் செலுத்த வேண்டியிருக்கும்” என்றார், சீன வணிகர்.
தன் கையிலிருந்த கொழுந்துகளை உதயசந்திரன் ஆழ்ந்து முகர்ந்து பார்த்தான். அந்தப் பெண்ணையே நறுமணமாக்கி, நெஞ்சுக்குள் செலுத்திவிடுவது போன்ற பிரமை. “மிக்க நன்றி” என்று கூறியவாறே வாசலை நோக்கி நடந்தான். அந்த இடத்திலிருந்து வெளியேறியபோது அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க விழைந்தான். அவளு டைய உடை அழகையாவது ஒருமுறை பார்த்துவிட மனம் ஏங்கியது. ஆனால் கண்ணியம் தடுக்கவே அவளைத் திரும்பிப்பாராமலேயே சீன வணிகருடன் வெளியே வந்தான்.
“தம்பி, இன்று நீ என்னுடைய விருந்தாளி. மது அருந்தி விட்டே செல்லவேண்டும்” என்றார், சீன வணிகர்.
“மதுப் பழக்கம் இல்லை” என்று மறுத்தான், உதய சந்திரன்.
“இதைப் பழக வேண்டிய அவசியம் இல்லை. நண்பர் களோடு மகிழ்ச்சியாக இருக்கும்போது பருகலாமே. எங்கள் சீனத்து மது, சிறப்பு வாய்ந்தது. உடலைக் கெடுக்காது.”
“மனதைக் கெடுக்குமே.”
“அது அருந்துபவர்களின் தன்மையைப் பொறுத்தது. அருந்துபவன், கண்ணியமானவனாயிருந்தால், அவனு டைய செயலை அது பாதிக்கப் போவதில்லை. நீகண்ணிய மானவன் தான். தைரியமாக அருந்தலாம். என்னோடு வா” என்று அழைத்தார்.
“மது, சூது இரண்டையும் பழகுவதில்லை என்று என் குருவிடம் வாக்களித்திருக்கிறேன்”
”ஓ…… வாக்கை மீறக்கூடாது. நான் உன்னை வற்புறுத்தவில்லை. உன்னுடைய பெயரைத் தெரிந்து கொள்ளவில்லையே.”
“என் பெயர் உதயசந்திர பூசான்”
“உன்னைப்போலவே உன்னுடைய பெயரும் அழகா யிருக்கிறது.” இதைக் கேட்டு உதயசந்திரன் நாணினான். “என் பெயர் கியோ சங்” என்றார் வணிகர்.
அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்ததும் கீழ்த்தளத்திற்குச் செல்ல மனமின்றி மேல் தளத் திற்குச் சென்றான். கையிலிருந்த மருக்கொழுந்தை மடியில் முடிந்து பத்திரப்படுத்தினான். சீனப் பெண்ணின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தான்.
லீனா !…. பெயரும் அழகாயிருக்கிறது. வீணா என்றிருந் தால் இன்னும் பொருத்தமாயிருக்கும். குரல், வீணையை விட இனிமையாயிருக்கிறதே ! குரல் மட்டுந்தானா….?
கண்கள் மட்டும் இடுங்கிப் போயிருக்கின்றன. ஆனால் அந்தக் கண்களில் தெரியும் குழந்தைத்தனம் எவ்வளவு கவர்ச்சியாயிருக்கிறது! அவளுடைய பார்வை யில்தான் எத்தனை உணர்ச்சி பாவனைகள்! மருக்கொழுந்து மாதிரி அவளும் மனதைக் கிறங்கத்தான் வைக்கிறாள். சீனத்துச் சிட்டு….
சீச்சி, முன்பின் தெரியாத ஒரு பெண்ணைப் பற்றி இதென்ன கற்பனை ? பண்பாடு அவனை எச்சரித்தது.
தன்னைக்கடிந்து கொண்டே மேல்தளத்திற்குச் சென்ற உதயசந்திரன், கப்பல் தலைவனும், சில மாலுமிகளும் கடற்பரப்பில் தூரத்தில் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான். பாய்மரக் கம்பத்திலிருந்து இறங்கிய ஒரு பணியாள், தலைவனிடம், “அது ஒரு கப்பல் தான். மேல் தளத்தில் தீவட்டிகளுடன் சிலர் நடமாடுவது தெரிகிறது. நாமிருக்கும் திசையை நோக்கித்தான் வருகிறது. சேர நாட்டிலிருந்து வருகிறதோ என்னவோ?” என்றான்.
“சேர நாட்டுக் கப்பலாயிருந்தால் இந்தத் திசையில் வர வேண்டியதில்லையே. நாகப்பட்டினத்திற்கோ அல்லது மாமல்லபுரத்திற்கோ அது போவதாகத் தெரியவில்லையே” என்றான், கப்பல் தலைவன்.
“கடாரத்திற்குப் போவதாயிருக்கலாம்” என்றான் ஒருவன்.
“அதற்கு இந்த வழி வர வேண்டியதில்லை. இலங்கைத் தீவிற்குத் தெற்கே அல்லவா அதற்கு வழி. இப்படிச் சுற்றி வளைத்துக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லையே. அதைக் கண்காணித்துவாருங்கள்” என்று கட்டளையிட்டு விட்டு, கீழ் தளத்திற்குப் போகத் திரும்பிய தலைவனிடம் “போர்க் கலம் ஏதாவது இருக்குமோ?” என்று கேட்டான், உதயசந்திரன்.
“நிலவொளியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. விடிந்தால் தெரியும். போர்க் கலமாயிருந்தால் பயமில்லை” என்றான்,தலைவன்.
“ஏன் அப்படி?’
“கொள்ளைக் கப்பலாக இருந்தால் தான் சங்கடம்.” “ஓ…. கடலிலும் கொள்ளைக்காரர்கள் உண்டா?” “அவர்கள் இல்லாத இடம் ஏது? தேவர் லோகத்தில் கூட இருப்பார்கள்.
“ஒரு வேளை அது கொள்ளைக் கப்பலாயிருந்தால்?”
“இந்தக் கப்பலில் ஏற்றப்பட்டிருக்கும் சரக்குகள் அனைத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டியது தான். வணிகர்கள் வயிறு எரிவார்கள்.”
“கொள்ளையடிக்க அனுமதிக்கலாமா? நாம் எதிர்க்கலாம்.”
“எதிர்த்தால் உயிர்களுக்கு மட்டுமா ஆபத்து; இந்தக் கப்பலையே மூழ்கடித்து விட்டுப் போய் விடுவார்கள். இ இப்போதே அதைப் பற்றிக் கவலைப்படுவானேன். ஒரு வேளை அதுவும் ஒரு வாணிபக் கப்பலாக இருக்கலாம். வழிதவறி வருகிறதோ என்னவோ, பொறுத்திருந்து காலை யில் பார்க்கலாம்” என்று கூறிவிட்டுக் கப்பல் தலைவன் விரைந்து படிகளில் இறங்கிக் கீழே போய்விட்டான்.
உதயசந்திரன் சற்று நேரம் அங்கேயே நின்று தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
3. பாலைவனத்து மிலேச்சர்கள்
கப்பலின் மேல்தளத்தில் விளிம்புக் கைப்பிடியைப் பற்றியவாறு உலவிக் கொண்டிருந்த உதயசந்திரன், சற்று தூரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைக் கண்டான். திரும்பி நடக்க முனைந்தபோது, “என்ன தம்பி, உறக்கம் வரவில்லையா?” என்ற குரலைக் கேட்டு நின்றான். மூக்கடைத்த கரகரப்பான ஒலியிலிருந்து, கேள்வி கேட்டவன், சற்று நேரத்திற்கு முன்பு அவனிடம் பேசிய கொடுக்கு மீசைக்காரன் என்பதைத் தெரிந்து கொண்டான்.
“இப்படி உட்காரேன், தம்பி,” என்றான் மீசைக்காரன்.
உதயசந்திரன் சற்றுத் தயங்கினான். கொஞ்சநேரம் பேசிப் பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணி, அவர் களுக்கு அருகே அமர்ந்தான்.
“மருக்கொழுந்து வைத்திருக்கிறாயா? மணம் நாசி யைத் துளைக்கிறதே” என்றான் மீசைக்காரன்.
“ஒரு சீன நண்பர் கொடுத்தார்” என்றான், உதயசந் திரன்.
“இந்தச் செடி சீனத்திலிருந்து எங்கள் இலங்கைத் தீவிற் கும் வந்துவிட்டது. இரவில் இந்த மணம் ரம்மியமா யிருக்கும்” என்றான், மீசைக்காரன். பிறகு, உதயசந்திரனுக்குத் தன் அருகிலிருந்த மற்ற இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான்.
ஒருவனைச் சுட்டிக்காட்டி, “இவன் பெயர் சுகததாசா. இலங்கைத் தீவிலேயே இவன்தான் சிறந்த வில்லாளி. நாங்கள் மூவரும் காஞ்சியில் நடைபெறப்போகும் வீரப் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் போகிறோம்” என்றான்.
வில்லாளியை உற்றுப் பார்த்தான், உதயசந்திரன். சுகததாசாவின் உருவம் மனதைக் கவர்வதாயில்லை. ஒல்லியாக இருந்தான். கன்னங்களில் குழி விழுந்திருந்தன. கண்களில் மட்டும் நல்ல ஒளி இருந்தது. பார்வையே நெஞ்சை ஊடுருவுவது போலிருந்தது.
மீசைக்காரன்,மற்றொருவனைச் சுட்டிக்காட்டி, “இவன் பெயர், களுபந்தா. மற்போரில் வல்லவன்” என்றான்.
உதயசந்திரனின் கவனம் களுபந்தாவின் மீது நிலைத்தது. களுபந்தாவின் உருவம் வாட்டசாட்டமா யிருந்தது. புஜங்கள் உருண்டு, திரண்டு பருத்திருந்தன. மீசை யைக் குறுகலாக அரிந்திருந்தான். அது உதட்டிற்கு மேல் ஏதோ கரியை அப்பியது போலிருந்தது.
உதயசந்திரன், மீசைக்காரனிடம் திரும்பி, “நீ, எதில் திறமைசாலி?” என்று கேட்டான்.
அப்போது சுகததாசா குறுக்கிட்டு, “இவன் வாள் வீச்சில் மகாசூரன்” என்றான்.
“உன் பெயரைச் சொல்லவில்லையே” என்றான் உதயசந்திரன்.
“என் பெயர் தேவசோமா. உன் பெயர் ?” என்று கேட் டான், மீசைக்காரன்.
“என் பெயர் உதயசந்திர பூசான்” என்றான், உதயசந் திரன். பிறகு, “ஈழத்துக்காரர்களாயிருந்தும் தமிழ் நன்றாகப் பேசுகிறார்களே” என்று வியந்தான்.
“தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கும் பல வணிகர்களுடன் எங்களுக்குத் தொடர்பு உண்டு. அவர்கள் மூலமாகத் தெரிந்து கொண்ட மொழிதான்” என்றான், தேவ சோமா.
“மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடை பெறுமே, அந்தப் போட்டிக்கா போகிறீர்கள்?”
“அதே தான். நீகாஞ்சிக்கு வந்தால் பார்க்கலாமே.” ‘ஆசைதான். சந்தர்ப்பம் கிட்டினால் போய்ப் பார்ப்பேன்.”
“ஒரு வீரனுக்கு ஏற்ற உடலமைப்பும், கம்பீரமும் உனக்கு இருக்கின்றன. பௌத்த மடத்தில் சேர்ந்து மொட் டையடித்து, பிக்ஷ வாக வாழ்வதைவிட, வீரனாக வாழ்க் கையை நடத்தலாமே.’
“பௌத்த மடத்தில் சேரப் போவதாக நான் கூறவில் லையே” என்றான் உதயசந்திரன்.
“கப்பலில் உன்னை வழியனுப்ப ஒரு பிக்ஷு வந்தாரே, அதனால், நீ மடத்தைச் சார்ந்தவன் என்று நினைத்தேன். காஞ்சியில் போர்ப்படைப் பயிற்சிக்கு என்று ஒரு கடிகை உண்டே, அதில் நீ சேரலாமே” என்றான், தேவசோமா.
“அரசின் மேற்பார்வையில் போர்ப் பயிற்சிக்கென்று ஒரு கடிகை உண்டு. என்னுடைய முப்பாட்டனார் அதன் தலைவராக இருந்திருக்கிறார்” என்றான், உதயசந்திரன் பெருமையுடன்.
“ஓ! நீயும் ஒரு வீரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா? தம்பி. வீர வாழ்க்கையை விட்டுவிட்டு அஹிம்சையைப் போதித்து வீரத்தையும், துணிவையும் மழுங்க வைத்து விடும் பௌத்தமடங்களில் போய் முடங்கிவிடாதே.”
“ஏன்? பௌத்த மடத்தில் சேர்ந்தால்தான் என்ன கேடு வந்துவிடப்போகிறது?”
“தம்பி, பௌத்தசமயத்தின் அஹிம்சாக் கொள்கை யினால் தனிப்பட்டவனின் வீரம் மட்டுந்தான் மழுங்கும் என்பதில்லை; ஒரு நாடே வீரத்தை இழந்து சோம்பிவிடும். ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும், சுதந்திரத்திற்கும் தேவை வீரமும், வேகமும்தாம். அஹிம்சைக் கொள்கையின் ஆதிக் கத்தில் ஒருநாடு இவற்றை இழக்குமானால், வெறிபிடித்த வெளிநாட்டவர்கள் சுலபமாகப் படையெடுத்து வர ஏதுவாகிவிடும். புத்தரின் கொள்கைகளைத் தீவிரமாக வடக்கே இருந்த அசோக மன்னர் கையாண்டதன் விளை வாகப் பாரதம், தன்னுடைய வீரத்தையும் வேகத்தையும் இழந்து சங்கடப்படப் போகிறது என்று அஞ்சுகிறேன்” என்றான் தேவசோமா.
உதயசந்திரன் பதிலேதும் கூறாமல் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். பௌத்த பிக்ஷக்களின் தொடர் பால் தன்னுடைய துஷ்டத்தனம் மட்டுப்பட்டு விட்டதை எண்ணிப்பார்த்தான். தன்னுள்ளிருந்த வெறியும் வேகமும் குறைந்திருந்தமை நல்லதா கெடுதலா என்பதைச் சிந்தித்தான்.
ஒரு நாடு,தன்னுடைய சுதந்திரத்தையும், கலாச்சாரத் தையும் இழந்துவிடாமலிருக்க வேண்டுமானால் அந்த நாட்டு மக்களுக்குக் கொஞ்சமாவது வெறித்தனமும், வேகமும் இருக்க வேண்டியது அவசியந்தானே…. ஓ! பௌத்ததத்துவங்களும், நெறிமுறைகளும் உதயசந்திரனை ஓரளவிற்குச் சாந்தமாக்கிவிட்டனவே. மடத்தை விட்டு விலகி காஞ்சிக்குத் திரும்புவது கூட நன்மைக்குத் தானோ…
சுகததாசா குறுக்கிட்டுச் சொன்னான்.
“இவனுடைய மனப்போக்கு எப்படி இருக்கிறதோ. உடல் மட்டும் வீரத்திற்குத் தகுதியாக இருந்துவிட்டால் போதுமா? தம்பிக்குக் காவியுடையில்தான் விருப்பம் என்றால், கையில் வாளேந்தி என்ன பயன்?”
இதைக் கேட்டு உதயசந்திரன் மெல்லச் சிரித்தான்.
“பௌத்த மடத்திலிருந்து விலகித்தானே தாய்நாடு திரும்புகிறேன்.என் நாடு என்னை எப்படிப்பயன்படுத்திக் கொள்ளப்போகிறதோ!” என்றான்.
“நாம் புறப்பட்டு வந்துவிட்டோம். காஞ்சியில் போட்டி நிச்சயமாக நடைபெறுமா?” என்று கேட்டான், களுபந்தா.
“நடைபெறும் என்றுதானே ஜெயவிக்கிரமா சொன் னார். அவர் வாணிபத்திற்காக காஞ்சிக்குப் போய்விட்டு நம் மன்னரைச் சந்தித்தபோது போட்டிக்கு வேண்டிய ஆயத்தங் கள் காஞ்சியில் நடைபெறுவதாகக் கூறினாரே?” என்றான் தேவசோமா.
“போட்டி நடைபெறுவதில் என்ன பிரச்சினை?” உதய சந்திரன் கேட்டான்.
“பல்லவச் சக்ரவர்த்தி கங்க நாட்டரசனை எதிர்த்துப் போருக்குப் போயிருக்கிறார். பல்லவ நாட்டில் இப்போது மகாராணியாரின் ஆட்சி நடைபெறுகிறதாம். மக்களுக்கு அவளுடைய ஆட்சியில் திருப்தி இல்லையாம்.’
“போட்டி இல்லாவிட்டால்தான் என்ன? காஞ்சி யிலும் மாமல்லத்திலும் நாம் பார்த்து ரசிக்கவேண்டிய இடங்கள் எத்தனையோ உண்டே. எனக்கு ஒரு ஆசை உண்டு; காஞ்சியிலேயே வாழ்ந்து, அங்கேயே உயிரை விட வேண்டும் என்று” என்றான், சுகததாசா.
“ஆசைப்பட்டு என்ன செய்ய? கொடுத்துவைக்க வேண்டாமா. நாம் பிறக்கும்போதே காஞ்சியில் பிறந்தி ருக்கக் கூடாதா? இலங்கை தீவில் பிறந்துவிட்டோமே” என்றான் களுபந்தா.
“எனக்கு இந்தத் தம்பியைப் பார்த்துப் பொறாமையா யிருக்கிறது. பல்லவ நாட்டில் வாழப்போகிறான்” என்று கூறிப் பெருமூச்சுவிட்டான் சுகததாசா.
“வேண்டுமானால் ஒன்று செய், காஞ்சிமாநகரில் உயிரை விட்டுவிடு. நாங்கள் உன்னை அங்கேயே புதைத்து விடுகிறோம். ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் காஞ்சியில் பிறக்க வாய்ப்புக் கிட்டும்” என்றான் தேவசோமா.
இதைக் கேட்டு எல்லாரும் உரக்கச் சிரித்தார்கள். அப்போது பெரிய அலை ஒன்று உயரே எழும்பி, கப்பலில் மோதியது. அலையின் தூவானம், இவர்கள் மீது விழுந்தது.
“கீழே போய்விடுவோம். நடுஜாமம் இருக்கும். ஈரக் காற்றில் வெகு நேரமிருந்தால் உடலைப் பாதிக்கும்” என்று கூறியவாறே தேவசோமா எழுந்தான். மற்றவர்களும் அவனைத் தொடர்ந்து கீழ்த் தளத்திற்குச் சென்றனர்.
கீழ்த்தளத்தில் படுத்த பிறகும் உதயசந்திரன் வெகு நேரம் உறங்கவில்லை. பலநினைவுகள். இடைஇடையே, சீனத்து அழகியின் உருவமும் தோன்றிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட விடியப்போகும் நேரத்தில் சற்றுக் கண்ணயர்ந்தான். திடீரென்று ஏதோ சலசலப்புத் தோன்றவேகண் விழித் தான். சுற்றும் முற்றும் பார்த்தான். கீழ்த்தளத்தில் யாருமே இல்லை. பரபரப்புடன் எழுந்து மேல் தளத்திற்குச் சென் றான். நன்கு விடிந்திருந்தது. மேல்தளத்தில் பலர் கூடி யிருந்தனர். எல்லாருடைய முகங்களிலும் பயமும், கவலை யும் குடி கொண்டிருந்தன. அவர்களுடைய பார்வை நோக்கி யிருந்த திக்கில் ஒரு பாய்மரக் கப்பல் மிக நெருங்கி நின்று கொண்டிருந்தது. அதன் தளத்தில் பாரதத்தின் வடமேற்கி லுள்ள பாலைவனத்தைச் சார்ந்த பல அராபிய இனத்தவர் கள் வாளேந்தி நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடையே ஓர் அழகிய இளைஞனும் நின்றுகொண்டிருந்தான். தலை முடியை மழுங்கச் சிரைத்து மொட்டைத் தலையுடனிருந் தான். அராபிய இனத்தைச் சார்ந்தவனாகத் தெரியவில்லை.
அராபியர்களில் ஒரு தடியன், அந்த இளைஞனிடம் ஏதோ கூறினான். உடனே அந்த இளைஞன், இந்தக் கப்பலை நோக்கி உரக்கக் கத்தினான். அலைகளின் இரைச் சலையும் மீறி அவன் குரல் ஒலித்தது.
“உங்கள் கப்பலில் முத்து, பவளம், தங்கம் ஏதாவது இருக்கிறதா?”
“இல்லை, பொதிகளில் அடைத்த வாணிபச் சரக்குகள் தாமிருக்கின்றன” என்று பதில் கொடுத்தான், கப்பல் தலைவன்.
“நாங்கள் வந்து பார்க்கப் போகிறோம். தடுத்தீர் களானால், உங்கள் கப்பலையே தீ வைத்து மூழ்கடித்து விடுவோம்” என்றான் அந்த இளைஞன்.
அப்போது அந்தக் கொள்ளைக் கப்பலிலிருந்து மூன்று மரப் பாலங்கள் இந்த வணிகக் கப்பலின் தளத்தின் மீது இறக்கப்பட்டன. மரப் பாலங்களிலிருந்த பெரிய இரும்புக் கொக்கிகள், வணிகக் கப்பலின் விளிம்பை வலுவாகப் பற்றிக் கொண்டன. எல்லாரும் திகைப்புடன் பார்த்தவாறு சிலைகளாக நின்றனர்.
பாலத்தின் வழியே மூன்று அராபியர்கள், வாளேந்தி வந்தார்கள். கூட்வே மொட்டைத் தலை இளைஞனையும் அழைத்து வந்தனர். அவன் மொழி பெயர்ப்பாளனாக இருந் தான். வணிகக் கப்பலின் தலைவன், அவர்களை அழைத் துச் சென்று, கப்பலின் எல்லாப் பகுதிகளையும் காட்டி னான். வாணிபச்சரக்குகளிருந்த பொதிகளில் அராபியர்கள், வாட்களினால் குத்திப் பார்த்தார்கள். கப்பலில் எல்லாப் பகுதிகளையும் பார்த்துவிட்டுத் தங்கள் கப்பலுக்குத் திரும்பினார்கள். சற்று நேரத்தில் மொட்டைத்தலை இளைஞ னின் குரல் உரக்க ஒலித்தது-
“உங்கள் கப்பலைப் போக அனுமதிக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை, தங்கத்தைவிட மதிப்புவாய்ந்த ஒரு பொருள் உங்கள் கப்பலில் இருக்கிறது. அதை மட்டும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டால், நீங்கள் போகலாம்.”
யாருக்கும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்த இளைஞன் எதைக் குறிப்பிடு கிறான் என்பதே புரியவில்லை. அந்த இளைஞன் மீண்டும் பேசினான்.
“இந்தக் காட்டுமிராண்டிகள் எந்தக் கொடுமையையும் செய்வார்கள். இவர்கள் இப்போது கேட்பது உங்கள் கப்பலில் பயணம் செய்யும் சீனத்துப் பெண்ணைத்தான்.”
இதைக் கேட்டதும் திடுக்கிட்டனர். கியோசங், “ஐயோ” என்று அலறியவாறு நடுத்தளத்திற்கு ஓடினார். தமிழ்மொழி புரியாத சில வணிகர்களுக்குக் கப்பல் தலைவன் நிலைமையை விளக்கினான். “பாலைவனத்தைச் சார்ந்த இனத்தவர்களோ என்னவோ, இவர்களை எதிர்த்துப் பயனில்லை” என்றான். கொள்ளைக் கப்பலிலிருந்து அந்த இளைஞன் மீண்டும் பேசினான்.
“உங்களுக்கு வேறு வழியில்லை. இவர்களுக்கு நாகரி கம்கிடையாது. வெறியர்கள். நானும் இவர்களிடம் அடிமை போல் அகப்பட்டுவிட்டேன். உங்களையும் காப்பாற்றி என்னையும் காப்பாற்ற உங்களால் முடியுமா ? இங்கே அறுபது பேர் இருக்கிறார்கள்.”
வணிகக் கப்பலின் தலைவன், செய்வதறியாது திகைத் தான். அருகில் நின்ற ஒரு சீன வணிகரிடம் சீன மொழியில் “என்ன செய்வது ?” என்று கேட்டான். அந்த வணிகர் பயத் தினால் நடுங்கிக் கொண்டிருந்தார். “கியோசங் எங்கே?” என்று கேட்டார்.
“கீழே மகளிடம் போய்விட்டார். இதற்கு என்ன வழி?”
“பலருடைய உயிர்களுக்காக ஒரு உயிரைப் பலி கொடுப்பதில் தவறில்லை. கொள்ளைக்காரர்கள் கேட் பதைக் கொடுத்துவிட வேண்டியதுதான்” என்றார் சீன வணிகர்.
கப்பல் தலைவன், அருகில் நின்ற ஒரு யவன வணிகரி டம், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சீனப் பெண்ணைக் கேட்கிறார்களே” என்று யவன மொழியில் கேட்டான்.
அந்த யவன வணிகர், பீதியினால் முகம் வெளுத்து நின்றார்.
“கொள்ளைக்காரர்கள் கேட்பதைக் கொடுத்துவிட வேண்டியதுதான். வேறு வழி என்ன? ஒரு பெண்ணிற்காக அத்தனை பேரும் சாக முடியுமா?” என்றார்.
கியோசங்கைச் சந்திப்பதற்காகக் கப்பல் தலைவன் நடுத்தளத்திற்குப் போகத் திரும்பிய உடன் அவனுடைய கையைப் பற்றி நிறுத்தினான், உதயசந்திரன். “என்ன முடிவு செய்தீர்கள்? எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான்.
சீன வணிகரும், யவன வணிகரும் கூறிய யோசனை யைக் கப்பல் தலைவன் சொன்னதும் உதயசந்திரன், எரிமலையாக வெடித்தான்.
“வெட்கமில்லை? உயிரைக் காத்துக் கொள்ள இவ் வளவு ஈனத்தனமாகவா நடந்துகொள்ள வேண்டும் ? இந்த யோசனையைச் சொன்னவர்களின் மகளையோ,மனைவி யையோ கேட்டிருந்தால் அவர்களுடைய மனம் எப்படித் துடித்திருக்கும்? நம் உடலில் இரத்தம்தானே ஓடுகிறது. மானமுள்ளவர்கள் என் பக்கம் நில்லுங்கள். இந்தக் கொள்ளையர்களைப்பந்தாடி விடலாம். சம்மதமா?” என்று அங்கே குழுமி நின்ற மாலுமிகளைப் பார்த்துக் கேட்டான்.
அவர்களில் சிலர் பயத்தினால் தலையைக் குனிந்து கொண்டனர். சிலர் தயார் என்று சம்மதம் தெரிவித்தனர்.
“அவர்கள் பாலைவனத்தைச் சார்ந்த முட்டாள் நாடோடிகள். பயங்கரமானவர்கள்” என்று கப்பல் தலை வன் எச்சரித்தான்.
உதயசந்திரன் உரத்த குரலில் கொள்ளைக் கப்பலில் இருந்த இளைஞனைப்பார்த்து, “நாங்கள் மறுத்தால் என்ன செய்வார்கள்?” என்று கேட்டான்.
“கப்பலோடு நீங்கள் அனைவரும் அழிந்து விடுவீர் கள்” என்றான் இளைஞன்.
“நாங்கள் பணியப் போவதில்லை என்று சொல்.”
”நன்றாக யோசித்து விட்டுச் சொல்லுங்கள். இந்த மிலேச்சர்கள் பண்பற்ற ஈனர்கள். மகாமூடர்கள்.”
உதயசந்திரன், தேவசோமாவைப்பார்த்தான். அவன் “பணிய வேண்டாம். எதிர்த்து நிற்கலாம்” என்றான்.
இதற்குள் கப்பலின் தளத்திலிருந்து சிலருடைய அழு குரல் கேட்டது. உதயசந்திரன் கப்பல் தலைவனிடம், “நீங்கள் முதலில் கீழே போய் அவர்களைத் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். முக்கியமாக அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறுங்கள், சீக்கிரம் போங்கள்” என்றான்.
கொள்ளைக் கப்பலிலிருந்து அந்த இளைஞனின் குரல் மீண்டும் கேட்டது.
“இந்தக் காட்டுமிராண்டிகளிடம் என்ன சொல்ல? நீ சொன்னதைச் சொல்லட்டுமா?”
“நீ எங்களுக்கு உதவியாக நிற்பாயா ?” என்று உதய சந்திரன் கேட்டான்.
“எனக்கு ஆயுதம் தாங்கிப் பழக்கமில்லை. நான் எப்படி உதவ முடியும்?”
“ஒரு உதவி செய். எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு.”
“எப்படி?”
“நாங்கள் எங்கள் ஆயுதங்களுடன் தயாராகிக் கொள் கிறோம். கொள்ளைக்காரர்களிடம், அந்தப் பெண்ணைச் சம்மதிக்க வைக்க முயற்சி நடைபெறுவதாகச் சொல்லிக் கொஞ்சம் காலத்தைக் கடத்து.”
“சீக்கிரம் தயாராகுங்கள்” என்று கூறிவிட்டு அந்த இளைஞன் கொள்ளையர்களிடம் திரும்பி ஏதோ கூறினான்.
உதயசந்திரன் தன்னருகில் கூடி நின்றவர்களிடம், “பயப்படுகிறவர்கள் கீழே போய்விடுங்கள். போர் செய்யும் துணிவுள்ளவர்கள் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தயாராகுங்கள். சீக்கிரம்” என்றான்.
தேவசோமாவும் மற்றவர்களும் கீழ்த் தளத்திற்கு விரைந்து சென்று தங்கள் பயணச் சுமைக்குள் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மேல் தளத்திற்கு வந்தனர்.
வில்லேந்தி வந்த சுகததாசாவிடம் “உன்னுடைய திறமை இப்போதுதான் உண்மையிலேயே பயன்படப் போகிறது. பாய்மரக் கம்பத்தின் மீது ஏறிக்கொள். கொள் ளையர்கள் பாலத்தின் மீது வரும்போதே உன்னுடைய அம்புகள் பாயவேண்டும்” என்றான் உதயசந்திரன்.
சுகததாசா, பாய்மரக் கம்பத்தின் மீது ஏறத் தொடங்கி னான். தேவசோமாவிடம், “மூன்று பாலங்களின் வழியாக வும் வருவார்கள். நாம் மூன்று பிரிவாக நின்று மூன்று இடங்களிலும் தாக்க வேண்டும்” என்றான் உதயசந்திரன்.
களுபந்தா,ஓர் இரும்பு உலக்கையைக் கையில் ஏந்திய படி நின்றான். துணிவு மிக்க சில மாலுமிகள், அரிவாள் களையும், மரக்கட்டைகளையும் இரும்புத் தடிகளையும் ஏந்தியிருந்தார்கள். கப்பல் தலைவன், ஒரு வாளுடன் உதயசந்திரனை நெருங்கி நின்றான். உதயசந்திரன் ஒருமுறை தன்னைச் சுற்றி நோட்டம்விட்டான். பிறகு கொள்ளைக் கப்பலை நோக்கி உரத்த குரலில், “கொள்ளைக்காரர்களை வரச்சொல்” என்று கூவினான்.
“தயாராகிவிட்டீர்களா?” என்று கேட்டான் மொட்டைத்தலை இளைஞன்.
“தயார்தான்” என்றான், உதயசந்திரன்.
இளைஞன்,கொள்ளைக்கார அராபியர்களிடம் எதோ கூறவே, அராபியர்கள் பேய்க் கூச்சலிட்டவாறே வாட் களை ஓங்கியபடி மூன்று பாலங்கள் வழியாகவும் பாய்ந்து வந்தனர்.
அப்போதுதான், உதயசந்திரன் ஆயுதம் ஏதும் இல்லா மல் நின்று கொண்டிருந்ததை உணர்ந்தான், தேவசோமா.
“ஐயோ, உன்னிடம் ஆயுதம் இல்லையே” என்று பதற்றத்துடன் கூவினான்.
“என் கைகளே எனக்கு ஆயுதங்கள்” என்று உதயசந் திரன் கூறிக்கொண்டிருந்தபோது, பாலத்தின் நடுவே பெரும் குழப்பம் தோன்றியது.
பாலங்களின் மீது கொள்ளையர்கள் ஓடிவந்தபோது சுகததாசாவின் அம்புகள் பாயத் தொடங்கின. ஓர் அம்பு கூட வீணாகாமல் மிகக் கச்சிதமாகத் தாக்கின. அம்புகள் மூன்று பாலங்களின் மீதும் சரமாரியாகப் பொழிந்தன. சுகததாசாவின் வில் திறமையைக் கண்டு உதயசந்திரன் பிரமித்து நின்றான். அராபியர்கள் பாலத்தைக் கடப்பதற்குள் அவர்களில் பதினெட்டு பேர் பாலத்திலேயே அம்படி பட்டுச் சாய்ந்தனர். பாலத்தின் நடுவே குழப்பம் தோன்றி யது. பாலங்களில் செத்து விழுந்தவர்களை மிதித்துக் கொண்டு பின்னால் வந்த அராபியர்கள் ஓடிவந்தனர். சற்று நேரத்தில் உதயசந்திரன் நின்று கொண்டிருந்த தளம் ஒரு போர்க்களம் போல் ஆகிவிட்டது.
பீதியடைந்த பயணிகள் வீறிட்டலறினார்கள். தேவ சோமா, இரு கைகளிலும் வாட்களை ஏந்திப் பாய்ந்தான். கணநேரத்தில் ஆறு அராபியர்களின் தலைகளைத் துண்டித்து விட்டான். வணிகக் கப்பலின் மாலுமிகளில் மூவர் அராபியரின் தாக்குதலுக்கு இரையாகிக் கடலுக்குள் வீழ்ந் தனர். தன்னை ஒரே சமயத்தில் தாக்க வந்த அராபியர்களை வெட்டிச் சாய்த்து விட்டுத் திரும்பிய தேவசோமா, ஓர் அதிசயக் காட்சியைக் கண்டு பிரமித்தான்-
கையில் ஆயுதம் ஏதுமின்றி உதயசந்திரன் மூன்று முரட்டு அராபியர்களை ஒரே சமயத்தில் வீழ்த்திய அதிசயத் தைக் கண்டு பிரமிப்படைந்தான். இன்னும் இரண்டு அராபி யர்கள் வெறிக்கூச்சலிட்டபடி உதயசந்திரன் மீது பாய்ந்த போது, உதயசந்திரன், அவர்களுடைய வாள் வீச்சின் கதியிலிருந்து மின்னல் வேகத்தில் விலகித் தப்பினான். மறுகணம், ஓர் அராபியனிடமிருந்த வாள், தெறித்துத் தூரப் போய் விழுந்தது. என்ன நடந்தது என்று அந்த அராபியன் உணர்ந்து கொள்வதற்குள் உதயசந்திரனின் கால் மேலே எழும்பி மற்றொரு அராபியனின் மண்டையைத் தாக்கியது. அடிபட்ட அராபியன் மண்டை பிளந்து கீழே விழுந்து துடித்தான். மறுகணம் உதயசந்திரனின் கை, வாளை இழந்து நின்ற அராபியனின் கழுத்தில் பதிந்தது.
ஓ…! மிகுந்த வேகத்துடன் ஒரு கூரிய வாள் இறங்குவது போலல்லவா உதயசந்திரனின் மணிக்கட்டு, அராபியனின் கழுத்தில் இறங்கிவிட்டது.
தேவசோமா தன் கண்களையே நம்ப முடியாமல் உதயசந்திரனின் திறமையைக் கண்டு வியப்பிலாழ்ந்தான்.
திடீரென்று கப்பலின் நடுத்தளத்தில் மரண ஓலம் கேட்கவே, உதயசந்திரன் திடுக்கிட்டான். “தேவசோமா, இங்கேயே பார்த்துக் கொள். நான் கீழே போய்க் கவனிக் கிறேன்” என்று கூறிவிட்டு, படிகளில் பாய்ந்து இறங்கினான்.
கப்பலின் நடுத்தளத்திற்குள் புகுந்து விட்ட இரண்டு அராபியர்கள், எதிர்ப்பட்ட இரண்டு சீன வணிகர்களையும், மூன்று யவன வணிகர்களையும் குத்திக் கொன்று விட்டு மற்ற பயணிகளையும் தாக்கப்பாய்ந்தார்கள். உதயசந்திரன் பயங்கரமாகக் கூவிக்கொண்டு அவர்கள் மீது பாய்ந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் ஓர் அராபியன் துடிதுடித்துக் கீழே சாய்ந்தான். மற்றொருவன் வாளை ஓங்கிய போது உதயசந்திரன், ஆள் உயரத்திற்கு மேலே எழும்பி, ஒரு காலினால் அராபியனுடைய தொண்டையைத் தாக்கினான். அராபியன் கதறியபடியே கீழே மல்லாந்து சாய்ந்தான். அவனுடைய உடலை மிதித்துத் தாண்டிக் கொண்டு உட்பக்கம் பாய்ந்தான், உதயசந்திரன்.
லீனா இருந்த பகுதியிலிருந்து அவள் அலறியதைக் கேட்டு அங்கே விரைந்தான். உள்ளே ஒரு கொழுத்த அராபி யன், லீனாவைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வரமுயன்று கொண்டிருந்தான். அவனுடைய காலடியில் கியோசங் வெட்டுண்டு கிடந்தார். அந்த அராபிய வெறி யனை உதயசந்திரன் மறித்துக் கொண்டான்.
அராபியன் ஒரு கையினால் லீனாவைப் பற்றியவாறே வாளை ஓங்கியபடி உதயசந்திரன் மீது பாய்ந்தான். உதயசந்திரன் லாவகமாக விலகினான். அராபியனின் வாள், ஒரு மரத் தடுக்கில் பாய்ந்து பதிந்தது. அதை அவன் உருவி எடுப் பதற்குள் அவனுடைய கழுத்தில் உதயசந்திரனின் கை இறங்கியது. ஒரு மிருகத்தைப் போல அலறிக்கொண்டு அராபியன் ஒரு மரத்தூண் மீது சாய்ந்தான். அவனிட மிருந்து விடுபட்ட லீனா, கீழே கிடந்த தந்தையை நோக்கி ஓடினாள். தூணில் மோதிச் சாய்ந்த அராபியன் மீண்டும் எழுவதற்குள் உதயசந்திரன் ஒரு கையினால் அவனுடைய முகத்தைத் தாக்கவே மண்டை ஓடு சிதறி, முகம் கூழாகிவிட்டது. மண்டைக்குள்ளிருந்து வெளியே சிதறிய மூளை,நாலாபுறமும் சிதறியது.
லீனா, தந்தையின் உடல் மீது விழுந்து கதறினாள். உதயசந்திரன் மனம் நெகிழ்ந்து நின்றான். அவனுடைய கண்களும் கலங்கின. ஆனால் கண் கலங்கி நிற்கும் நேரமா அது!
உதயசந்திரன் மேல் தளத்திற்கு விரைந்தான். அராபி யர்கள் பின் வாங்கித் தங்களுடைய கப்பலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். பாலங்களின் வழியாக அவர்களைத் துரத்திக் கொண்டு தேவசோமாவும், களுபந்தாவும் சில மாலுமிகளும் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.
கொள்ளையர்களின் கப்பல் தளத்தின் மீதே அராபி யர்கள் தாக்கப்பட்டு கடலில் எறியப்படுவதைக் கண்ட உதயசந்திரன், ஆபத்து விலகி விட்டதை உணர்ந்தான். லீனாவைத் தேற்றும் பொருட்டு நடுத் தளத்திற்கு விரைந்தான்.
லீனா அழுது கொண்டிருந்தாள். உதயசந்திரனைக் கண்டதும் அவளுடைய துக்கம் பெருகியது. அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியாமல் அவனும் கண் கலங்கி நின்றான்.
– தொடரும்…
– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.
– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க... |