மரத்தடி மனிதர்கள்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 3,731 
 
 

தன்னுடைய ஆடு காரில் அடி பட்டதால் இறந்து விட, ஆட்டுக்காரன் மாறன் கவலையுடன் நின்று கொண்டிருந்தான். ‘இப்புடி வேகமா வந்துட்டீங்களே சாமி…. அஞ்சாயரத்துக்கு விக்கிற ஆடு வீணாப்போச்சுங்களே…’ என காரை நிறுத்தி இறங்கி வந்த ஓட்டுனரிடம் கண்ணீருடன் பேசினான்.

அப்போது பயணிகளுக்காக பேருந்து நிற்குமிடத்தில், மரத்தடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருந்த சூரன், அங்கே பேருந்திற்காக காத்திருந்த சிலரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தவன், “பத்தாயிரம் பணத்தை எடுங்க. இல்லேன்னா ஊரையே கூட்டிட்டு வந்து உங்களை போக உட மாட்டேன். ஆடு பதனஞ்சாயிரத்துக்கு போகும்…” என மிரட்டும் தொணியில் பேசினான்.

“ஏம்பா ஆடு தானாக வந்து விழுந்திருக்கு. தப்பு எங்க மேல இல்லை. ஆட்டுக்காரரே அஞ்சாயரத்துக்கு விலை போகிற ஆடுன்னு சொல்லறார். நீ சம்மந்தமே இல்லாத ஆளு வந்து பத்தாயிரம் கேட்டு பஞ்சாயத்து பண்ணறே…? இத பாரு. போனா போகுதுன்னு ரெண்டாயிரம் கொடுக்கிறேன். வாங்கீட்டு ஆட்டக்கொண்டு போயி கசாப்பு காரன் கிட்ட கொடுத்து மூணாயிரம் வாங்கிக்கச்சொல்லு. ஆட்டுக்காசு முழுசா வந்திடும். அத உட்டுப்போட்டு தேவையில்லாம பேசுனீன்னா போலீசக்கூப்பிட வேண்டியது வரும்….” என கார் ஓட்டுனர் சொன்னதும் சூரன் பின் வாங்கினான்.

“ஆட்டுக்காரனுக்கு கொஞ்சங்கூட அறிவில்ல சார். பதனைஞ்சுக்கு போகாட்டியும் ஒம்பதுக்கு கெட்டியா போகும்” என கூறிய போது, மாறன் சூரன் அருகே வந்து “அட தெள்ளவாரி மாப்பிளே… அதுவே நாயி கடிச்சு, காலு சீப்புடிச்சு, ஒடம்பு கெட்டு இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துட்டு கெடக்குது. கருப்பராயம் புண்ணியத்துல கார்ல பட்டு உசுரு போனதுனால குடுக்கிறது லாபம்னு வாங்கிக்கலாம்னு பார்த்தா, நீ காரியத்தையே கெடுத்துப்போடுவியாட்ட இருக்குது” என்று சொன்னதும் ,”சாமி கெடாயா…? சாமி குத்தம்னு சொல்லறியா….? பாருங்க‌ சார். நீங்க சாதரண ஆட்ட கொல்லுல…. சாமி ஆட்டையே கொன்னுட்டீங்க. கேக்கறத கொடுத்துட்டுப்போடுங்க… இல்லீன்னா பெரிய ஆபத்த சந்திப்பீங்க…” என பொய்யாக கூறியதை நம்பி பயந்து போன காரில் வந்த பயணி ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து மாறனிடம் கொடுக்கப் போவதைத்தடுத்த சூரன், பிடுங்குவது போல் தான் வாங்கிக்கொண்டவுடன், மாறன் கையெடுத்துக்கும்பிட கார் கிளம்பியது.

“என்ன மாப்பிள்ளே ஐயாயிரத்த  வாங்கீட்டு ரெண்டாயிரத்தக்கொடுக்கறே….?” மாறன் கேட்க, “நாம் பேசுனதாலதானே ரெண்டாயிரம் கொடுக்கிறதா சொன்னவங்க ஐயாயிரம் கொடுத்தாங்க. காசாப்புக்காரன் கிட்டானுக்கு செத்த ஆட்டக்குடுத்தீன்னா மூணாயிரம் கெடைக்கும். நோவாளி ஆட்டுக்கு இது பத்தாதா…?” சொன்னவன் மூன்றாயிரத்தை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். 

வேறு வழியில்லாமல் ‘தனக்கு நஷ்டம் ஏற்படவில்லை’ என புரிந்து சூரன் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு அடி பட்டதால் இறந்த ஆட்டைத்தூக்கி தோளில் போட்டபடி, மற்ற ஆடுகளை ஓட்டியபடி சென்றான் மாறன்.

இரவு முழுவதும் உறங்காமல் ‘பாடு படாமையே பணம் சம்பாதிக்க நிறைய வழி இருக்கிற போது நூறு, எரனூறுக்கு மம்புட்டி எடுத்து ஒடம்பு நோக வெய்யில்ல எதுக்கு பாடு படோணும்’ என யோசித்தான் சூரன்.

அன்று காலையில் வேலைக்கு போகாமல் மனைவியுடன் சண்டை போட்டபடி மீண்டும் எப்போதும் போல மரத்தடியில் வந்து நண்பனுடன் அமர்ந்து கொண்டான் சூரன். 

“மச்சா நீ நேத்து பண்ணினது சூப்பர்டா…. நீ கந்தையா லுங்கிய கட்டீட்டு போயி கேட்டதுக்கு கார்காரன் போலீஸ்க்கு போறன்னு மெரட்னாம் பாத்தியா….? அப்படி சொல்லாம கேக்கறத எடுத்து கொடுத்துட்டு போக ஒரே வழிதான் இருக்குது” என்றான் நண்பன் மங்கன்.

“சொல்லுடா மச்சா….” ஆர்வத்துடன் சூரன் கேட்டான்.

“அது தாண்டா அரசியலு…. கட்சி வேட்டி கட்டீட்டு, வெள்ளைச்சட்டைல சோக்கா போனீன்னா, கேட்ட துட்ட தட்டாம தூக்கிக் குடுத்துப் போடுவாங்க…” என்றான்.

யோசனையைக்கேட்டு குதூலமானவன் “ஆமாண்டா…. என்ற மூளைல இந்த ரோசன வரலியே… இந்த ரோசன சொன்ன உனக்கு இப்பவே நேத்து சம்பாதிச்ச பணத்துல ஒரு ஆப் வாங்கித்தாரேன் வா” என சூரன் கூறியதும் மது கடையை நோக்கி இருவரும் நடந்தனர்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *