மரணத்தின் விலை
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 3
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தொண்ணூறுகளில் எழுதிய என் கதைகளைப் படித்திருப்பீர்கள். 1972-ல் எனது முதல் சிறுகதை செம்மலரில் பிரசுரமாயிற்று. 1980க்கு முந்தைய வருடங்களில் எனது மொழி நடையும், கருத்தேர்வும் எவ்வாறு இருந்திருக்கும் என்று அறிய ஆராய விரும்புகிறவர்களுக்காக… இச்சிறுகதை.
1978-ல் எழுதப்பட்ட கதை. எமர்ஜென்ஸிக்குப் பிந்தைய தேர்தல் நாளின் அனுபவம். ஓர் எழுத்தை கூட மாற்றாமல் அப்படியே…”
அவன் ஒரு பிரச்சனையைத் தீர்த்த நிம்மதியுடன் வீதிக்கு வந்தான்.
இறுக்கத்துக்குள் புழுங்கியே கிடந்த இதயத்தில் ஒரு நெகிழ்வு நிகழ்ந்தது. இளந்தென்றலான நினைவுகள் சுகமாக தழுவின. ‘அப்பாடா, ஒரு வழி கெடைச்சுப் போச்சு…”
சட்டையின் காலரை மேலே இழுத்துவிட்டுக்கொண்டு வீதியில் நின்று நிமிர்ந்து பார்த்தான். உலகத்தையே அலட்சியப்படுத்திவிட்டாற் போன்ற ஒரு வெற்றிப் பெருமிதம் கண்களில் சுடராக ஒளிர்ந்து மின்னியது. எப்போதும் சற்றுக் கூனியே நடக்கின்ற அவன், வழக்கத்திற்கு முற்றிலும் மாறுதலாக நெஞ்சை முன்பாக நிமிர்த் தினான். ஆம்! எல்லாமே மாறித்தான் போச்சு.
வருங்கால துக்கத்தையெல்லாம் குத்தகை எடுக்கப் போறவன் போல, கறுப்பு அங்கி, கறுப்புத் தொப்பி அணிந்து கொண்டவாறு… பி.ஏ. முடித்ததற்கான பட்டம் வாங்கிய அன்றுகூட இவ்வளவு சந்தோஷம் பொங்கி வழியவில்லை… ஆனால் இன்று…?
‘நாளை இன்னேரம் நா எப்படியிருப்பேன்…?’ என்று நினைக்கும் போது மனம் நிம்மதியின் பனியில் குளிர்ந்தது. அதே நேரத்தில்… ஒரு பயங்கரமான பீதியும் அருவருப்பும் இதயத்தை ஜில்லிட வைத்து ‘ஆம்… நாளை… ஏதோ ஒரு தெருவின் ஓரத்தில் பிணமாகக் கிடப்பேன்…!’
தமது சொந்தக்கிராமத்தில்… தனி மரங்களாகிப் போன பிள்ளைகளால் கைவிடப்பட்டு… பட்டினி கிடந்த ஒரு கிழவன், பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துவிட்டுச் செத்துக் கிடந்த காட்சி அவனது கற்பனைக்கு ஊற்றுக் கண்ணாக அமைந்தது.
தெருவில்… கண்கள் செத்து விழித்து நிற்க, கோணிப் போன வாயில் நுரை பொங்கி உறைந்து கிடக்க… முகத்தில் ஈக்கள் மொய்க்க தெருவில் போவோர் வருவோர் அருவருப்போடு முகத்தைச் சுளிக்குமளவுக்கு அலங்கோல மாக, பரிதாபமான அனாதைப் பிணமாக தன்னையே நினைத்துப் பார்த்தபோது…
அவன் உடல் குலுங்கியது; முகத்தில் குப்பென்று வேர்த்தது; மனம் திக்கென்று ஸ்தம்பித்து அதிர்ந்து போயிற்று. அப்படியே சில்லிட்டுப் போய்விட்டான். அழுக்காகிப்போன ‘கர்சீப்’ பால் முகத்தைத் துடைத்துக் கொண்டவாறே சிரித்தான். ‘இதென்ன அசட்டுத்தனமான பயம்…? ஹூம்… எதுக்காக நேற்று பூராவும் அலைஞ் சேனோ… அது இப்ப சமீபிக்கிறப்போ… திடும்னு பயந்தா எப்படி? நோ… நோ…நா… பயப்படக்கூடாது. கூடவே கூடாது… பயந்து, அதனாலே ஆகப்போறது? நத்திங்.’
எதேச்சையாக முகத்தைத் தடவினான். ஒன்றரை மாதமாக கண்டிக்காமல் விடப்பட்ட ரோமம், சுதந்திரமாக வளர்ந்து, சரசரத்தது. வீதியின் ஓரத்திலிருந்த கடை வரிசையை கவனித்தான். எதையோ தேடினான். பார்பர் ஷாப்!
கால்கள் இயங்கின. ஸ்லிப்பர் தேய்ந்தது, ‘அறுந்து விடுவேன்’ என்று மிரட்டியது. அவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டான். ‘நான்தான் ‘லைப்’பையே அறுக்கப் போகிறேனே’ என்று வேதனை கலந்த பரிகாசத்துடன் நினைத்துக் கொண்டான். சாகிறது சாக போறோம்… கொஞ்சம் நல்லா சாவோமே!
பார்பர் ஷாப்பிற்குள் நுழைந்தான். சேர் காலியாக வில்லை.வெயிட் பண்ண வேண்டும். பரவாயில்லை. என்ன அவசரம்…?
பலகையில் உட்கார்ந்தான். சுற்றிலும் கலர்கலராக படங்கள்! அங்கே பெண்கள் லட்சுமி சரஸ்வதி என்று புனிதப்படுத்தப்பட்டு பத்தியை சுவாசித்தனர். அதே நேரத் தில் கிளர்ச்சியூட்டும் காம உணர்ச்சி களிப்புகளுடன் நிர்வாணப்படுத்தப்பட்டும் தொங்கினர்!
“என்ன சார் ஷேவிங்கா, கட்டிங்கா?”
“ஷேவிங் மட்டுந்தான்…”
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இதோ முடிச்சிடுறேன்.”
“பரவாலே…”
மேஜையின் விளிம்பில் கிடந்த பத்திரிகையை எடுத்து விரித்தான். பற்றற்ற தன்மையுடன் மேய்ந்தான். ‘ஹெட்டிங்’ கறுப்பெழுத்துக்களாக கொறித்தான்.
திடும்மென்று அவனுள் ஒரு பரபரப்பு; அந்தச் செய்தி, அவனது பற்றற்ற தன்மையை சிதறடித்து ஆர்வத்தை ஈர்த்தது. பரபரப்பான ஆவலுடன் வாசித்தான்.
“வேலைவாய்ப்பை பெருக்குவதற்காக கடந்த ஆண்டில் பல பத்துக்கோடி ரூபாய் அரசால் செலவிடப்பட்டுள்ளது. வேலையின்மைச் சவாலை முறியடித்து உள்ளோம்” என தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி முழங்கியிருக்கிறார்.
அவனது கண்கலில் பாஸ்பரஸ் தீப்பிடித்துக்கொண்டது போன்று திடீரென ஆவேசாக்கினி பளிச்சிட்டது. மனதில் பொங்கிய ஆக்ரோஷத்தில் கைகள் நடுங்கின. உள்ளங்கை வியர்த்தது.
‘அயோக்கிய ராஸ்கல்ஸ்! வேலை வாய்ப்புக்காக கோடி கோடியா கொட்டுனாங்களாம்… படித்த பட்டதாரிகளின் வாழ்க்கையில் ஒளியேத்த தீயை வைச்சாங்களாம்!” வெறுப்பு முட்டியது.
பிரளமாய் பொங்கிக் குமுறிய உணர்ச்சியில் பத்திரி கையை கிழிக்கப் போனவன் திடுக்கிட்டு பிரக்ஞையுற்று நிறுத்திக் கொண்டான். ஆனாலும் அவன் உதடுகள் துடித்தன.
‘இவங்களுக்கு ஓட்டா போடணும், திருட்டு ராஸ் கல்ஸ்… வேற ‘எதாச்சும்’ தான் போடணும்’ என்று உரக்கவே முணுமுணுத்தான்.
உணர்ச்சி மயமாகி நின்ற அவனை பார்பர் ஏளனம் கலந்த அமைதியுடன் பார்த்தான்.
பத்திரிகையை கையாலாகாத்தனமான எரிச்சலுடன் வீசி எறிந்தான். கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். கோபாவேச உணர்ச்சியில் முகம் கறுத்து விகாரமாக தோன்றியது. கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டான். சிரமப்பட்டு உணர்ச்சிகளை சமனப்படுத்திக் கொண்டான்.
பல நாட்களாக எண்ணெய் மறந்துபோய் காய்ந்து சாம்பல் நிறமாகிப்போன தலைமயிரைத் தடவிக் கோதினான். கல்லூரி நாட்களில் ஒழுங்காக கத்தரித்து, அழகுபடுத்தப்பட்டு, கருமையின் மினுமினுப்புடன் திகழ்ந்த தனது பழைய தலைமயிரை… பழைய கனவைப் போல நினைத்துக் கொண்டான். மனதுள் ஒரு சோகமான சூன்யம் கவ்வியது.
தலைமயிர் மட்டுமா…? வாழ்க்கையே நிலைமாறிப் போச்சு… நிலைகுலைஞ்சு போச்சே! நிலையையே அழிக்கப்போகுதே!
மறுபடியும் கண்ணாடியில் பார்த்தான். நிறம்மாறி, அவனது வாழ்க்கையைப்போல் கிழியத் தயாராகிப்போன ஷர்ட் அழுக்கடைந்துபோன நாலுமுழ வேட்டி; கறுத்துச் சுருங்கிப்போன முகம்; பலநாள் பட்டினியில் வாடிக் களை செத்துக் கிடந்தது; கண்களின் அடியில் ஒரு நிழல் படிந் திருந்தது; கிழட்டு மனிதனுக்குப் போல கன்னச் சதை ஒடுங்கி, எலும்பு தெரிந்தது.
கல்லூரி நாட்களில் பொழுதுக்கு நூறு தடவை பவுடர் போட்டு அழகு பார்த்தது இதே முகத்தைத்தானே! கிரா மத்தில் கூலிவேலை பார்த்து கஞ்சி ஊத்திய அம்மா, இதே முகத்தில் சற்று வாட்டம் தெரிந்தாலும் கவலையில் ஆடிப் போவாளே!
இதே முகத்தின் வசீகரத்தில் மயங்கி… சுற்றிச் சுற்றி வந்து கேலி செய்து வம்புக்கிழுத்து விளையாடுவாளே… அந்த சுப்புலட்சுமி ஓ… அது எத்தனை பசுமையான நாட்கள்…! எளிமை வாய்ந்ததாக இருந்தாலும், இனிமை ததும்பி வாழ்ந்த அமைதியான செழுமையான நாட்களல்லவா…!
ஆ… எல்லாம் ஒரு கனவைப் போல மாயமாய் மறைந்து விட்டதே! வாழ்வின் அருமைகள் யாவும் தொலைதூரக் காட்சியாக ஒதுங்கி ஓட,சூன்யமும் சோகமும் சூழ்ந்து கொண்டதே!
இதெல்லாம் எப்படி நிகழ்ந்தன…? அட இழவே… எனக்கு ஒரு வேலை மட்டும் கிடைத்திருந்தால்…?
பிரச்னைகள் சூழ்ந்த ஒரு கடின வாழ்க்கையையாவது பற்றிக் கொண்டிருக்கலாமே! ஆனால் இப்படி… சாவே ஒரு பிரச்னையாகி, வாழ்க்கை ஒரு கனவாகிப் போயிருக் காதே…!
“சார்… சார்… சார்… சார்…”
சுரீரென்று சுடப்பட்டவனாக பிரக்ஞையுற்றான்.
“வாங்க சார்.”
“ஓ… இதோ.’
சேரில் சாய்ந்தான் ‘குஷன்’ மெத்தென்று குளிர்ந்தது. பல நாளாக அலைந்த அலுப்பில் வலித்த குறுக்கெலும்பு, ‘சொடக்கு’ எடுத்துவிட்டாற் போல சுகத்தை அனுபவித்தது.
கன்னத்தில் சோப்பு நுரை மென்மையாகத் தடவப் பட்டது. அதன் குளுமையும் மணமும் மனதை மயக்கியது. அந்த சோப்பு நுரை, மயிலிறகால் தடவியது போன்ற ஒரு மெத்தென்ற சுகம். நாளைக்குச் சாவை ஆவலுடன் தழுவப் போகிறவன்… உலக வாழ்க்கையிலிருந்து ஒரு விமோசன மாக மரணத்தின்+காலடியில் வீழப்போகிறவன். இந்த சுகத்தில் மெய் மறக்கிறான். என்ன விந்தை!
அவனும் அந்த சுகானுபவத்தை பரிகாசமாக நினைத்துக் தொண்டான். ‘ஓ… வாழ்க்கை என்பது எத்தனை வலிமையானது, வனப்பானது’ என்று ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டான்.
பார்பர், கத்தியை ஒளியேற்றிக் கொண்டார். உள்ளங் கையில் ஒரு துண்டுக் காகிதத்தை வைத்துக் கொண்டு சோப்பு நுரையை வழிக்க ஆரம்பித்தார்.
அந்தச்சுகத்தில் அவன் மயங்கினான். நினைவுகள் ஆர்ப்பரித்தன. துயரமும் அவமானமும் கொந்தளிக்கும் அந்தக் கொடிய நினைவுகள்! கடந்த கால வாழ்க்கையின் காட்சிகள்!
பி.ஏ. படிப்பதற்குள்ளாகவே நிலம் நீச்சு எல்லா வற்றையும் விற்ற கையோடு உயிரையும் விட்ட தந்தை; காலம் பூராவையும் உழைப்பிலும், வறுமையிலும் வாழ்வைக் கரைத்த அம்மாவின் வைராக்கியத்தில் படிப்பை முடித்தது;
ஓயாத அப்ளிகேஷன் பாணங்கள்; அடிக்கடி ‘இண் டர்வ்யூ’ யாத்திரைகள்; அபத்தமான (பெரிய) மனிதர்களை யெல்லாம் மதித்து கெஞ்சித் திரிந்தது; வேலை ஒன்று கிடைக்காதா என்ற நம்பிக்கையில் காலத்தைக் கரைத்தது; வயோதிக அம்மாவின் உழைப்பில் உயிர் வாழ்கிறோமே என்ற ஓயாத உள் மனவதைப்புக்கு ஆளாகி தவித்தது;
‘பட்டணத்துலே வேலை கிடைச்சிடும், அப்புறம் மூணு முடிச்சு… பட்டணத்துலே சினிமா… டிராமா… பீச்…
நாலாந்தர இலக்கிய ஏடுகளைப் படித்துவிட்டு குழந்தைத்தனமான கனவுகளுடன் தம்மைச் சுற்றிச் சுற்றி வந்த சுப்புலட்சுமியின் பேதமை! நிஜவாழ்க்கையின் தரிசனத்தை சந்தித்து அவள் திணறிப் போனது….
முன் பின் பாராத ஒரு அந்நியனுக்கு அவளை நிச்சயித்து வீட்டில் நிர்ப்பந்தித்தது… இவனிடம் வந்து அழுது புலம்பி கண்ணீரைப் பெருக்கியபோது கையறு நிலையில் வெறும் பொம்மையாய் நின்றது…
ஒருநாள் கல்யாண முழக்கம் கேட்டது… அன்று அவ மதிப்பாலும், நிர்மூலமாகிப்போன காதலாலும்… மூளிப் பட்டுப் போன மூளையுடன் பித்துப்பிடித்தவனாக திரிந்தது…
அந்தக் கொடிய நிலையில் காய்ச்சல் என்று படுத்து, மருந்துக்கும் வழியின்றி உணவுக்கும் கதியற்று, கால மெல்லாம் ஆசையுடன் உழைத்த அம்மா, அவலமாய், செத்த கொடுமை…
மிஞ்சி நின்ற வீட்டையும் கடன் விழுங்கி ஏப்பமிட்டு, அவனை, கிராமத்திலிருந்த சகல உறவையும் அறுத்து விரட்டிய கொடூரம்…
நகரத்தில் வேலைக்காக ஒரு வாய் உணவுக்காய் அலைந்து திரிந்தது… ஒரு சர்வர் வேலையாவது கிடைக் காதா என்று சகாரா ஒட்டகமாக வாழ்க்கைத் தாகத்துடன் ஏறி இறங்கிய எண்ணற்ற படிகள்…
ஏமாற்றமே மூச்சாகி… பசியே உணவாகி வெறுமையே வீடாகி தாகமே நீராகி தவித்த சமீபத்து நடைபிணத்து வாழ்வு நாட்கள்… அப்பப்பா!
உச்சகட்ட சோதனையாக… அன்று பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்தவனை ‘சந்தேகக் கேஸ்’ என்று இருபது முப்பது பேருடன் இவனையும் இழுத்துச் சென்றது… ஸ்டேஷனில் இங்கிலீஸில் கேள்வி கேட்டதற்காக பூட்ஸ் கால்களால் உதைப்பட்டு, வெறிகொண்ட பிராணிகளால் கடித்துக் குதறப்பட்ட கொடிய அவமானம்! இனியும் எதுக்காக வாழணும் என்ற கேள்வி வழிமறித்து நின்றது. மிதமிஞ்சிப் போன கசப்பில்- சூன்யமாகிப் போன எதிர்கால இருட் டில்- விரக்தியின் எல்லையையும் கடந்து தற்கொலை செய்ய முடிவு செய்தது. அதற்கும் வழியின்றி தவித்த சிகரக் கொடுமை!
கடலில் விழுந்து சாக முடியாது. நீச்சல் தெரியும்! தூக்குப் போட சாகசமும் இடமும் வேண்டும்… வலுவான கயிறும் வேண்டும்… விஷம் வாங்க காசும் வேண்டும்… எங்கு செல்வது, காசுக்கு எங்கே போவது?
விஷம் வாங்கக்கூட வழியற்று இரண்டு நாட்கள் வெறுமையாகிக் கரைந்தது… இறுதியில் ஒரு யோசனை முளைத்தது… எத்தனை அற்புதமான யோசனை…!
மிச்சமிருந்த ரத்தத்தை ‘தானம்’ செய்து, காசு வாங்கிய வாறு வெளியே தெருவில் நின்று இதோ பார்பர் ஷாப்பில்… அடப் பாவமே… எல்லாம்தான் விலையுயர்ந்து விட்டது என்றாலும், மரணம் கூடவா, இந்த விலை?
“சார்… முடிச்சாச்சு.”
நினைவுச் சேற்றிலிருந்து மெல்ல எழுந்தான்…
“எவ்வளவுங்க?”
“முக்கா ரூவா சார்!”
“இந்தாங்க…” ஒரு ரூபாய் தாளை நீட்டினான். வெளியேற ஆரம்பித்தான்.
“சார்… வித்தியாசமான கனிவுடன் பார்பர் கூப்பிட் டார். அவன் நின்றான்.
“என்னங்க…” என்று திரும்பினான் அவன்.
‘நானும் அப்பவே பிடிச்சு உங்க முகத்தைப் பார்த்து கிட்டுத் தானிருக்கிறேன்… என்னவோ மாதிரியிருக்கீகளே…”
இன்னும் மனிதாபிமானம் உயிர் வாழ்கிறதா? பிரமிப் புடன் நிமிர்ந்தவன் கண்ணில் வாழ்க்கையின் மீதுள்ள தீராக் காதல் ஒளிர்ந்தது. ஆனால் மறுகணமே அடங்கிப் போயிற்று.
“ஒன்னுமில்லீங்க…”
“கேட்டா வருத்தப்படமாட்டீங்களே… எந்த ஊரு, சாருக்கு?”
“வெளியூரு…”
“இங்கே ஏதாச்சும் ‘ஜாப்’லே இருங்கீங்களா?”
“இல்லே… வேலையிலே இல்லே…” என்றவன் சோர் வுடன் தலையை உலுக்கிக் கொண்டான். தன்னுடைய நிலைமையின் பரிதாபத்தை சுருக்கமாகக் கூறினான்- தற்கொலை முயற்சியைத் தவிர.
“ச்சூச்சூம்… அடே… அடப்பாவமே…!” என்று அடிக்கடி தம்முடைய அனுதாபத்தை பரிவுடன் வெளிப்படுத்திக் கொண்டார் பார்பர்.
“அப்போ பி.ஏ. முடிச்சுட்டீங்க…”
“ஆமா…”
“பார்த்தீங்களா சார் இந்த நாட்டை. இப்படி கோடிக் கணக்கான பேர்களை உயிரில்லாத சவங்களாக அலைய வுட்டுட்டு, ஆளுங்கட்சி அடிக்கிற தமுக்கைக் கேட்டீகளா? ம்ஹ்ம்… நல்வாழ்வை நோக்கி… முன்னேற்றத்தை நோக்கி… நாடு நிக்குது… மணல் கயிறாகுது, வானம் வில்லாகுதுன்னு முழங்கோ முழங்கோன்னு முச்சந்திக்கு முச்சந்தி நாறடிக்கிறாங்க…”
ம்… என்ன செய்றது நல்லவனுக்கு காலமேது?” என்று தமது கசப்பான படிப்பினையை வெறுப்புடன் ஒப்புக்கொண்ட பார்பர்,
“சார்… ஒரு வேலை இருக்கு… பாக்குறீகளா?”
“என்னவேலை?” அவனது இதயத்தின் கதவுகள் விருட்டென்று திறந்து புயலே நுழைந்துவிட்டாற் போன்ற தோர் பரவசம்! கண்ணில் ஒரு பிரகாசம்! வழுகிச் சென்றோடிய வாழ்க்கை அவனைத் தமது தலையில் தூக்கி வைத்துக் கொண்டதோ?
“வாங்க… பக்கத்துலேதான் அந்தக் கட்சி ஆபீஸ். அவங்க தான் உங்களை மாதிரி படிச்சவங்களாப் பார்த்து தேடிக் கிட்டிருக்கானுங்க! ‘மேலே’ருந்து வேணுங்கிற மட்டும் பணம் வருது; வேலை செய்யத்தான் ஆளுகயில்லை. அதனாலேதான் 150 ரூபா சம்பளம், ‘படி’ தர்ரோம்னு படிச்சவங்களைப் பார்த்து வலை போடுறானுக…”
“என்ன வேலை?”
“பிரச்சார வேலை சார்…” என்ற பார்பர், ஒரு முடிவுக்கு வந்தவனாக பேசினார்; “எதுக்கும் எங்கூட வாங்க. உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்… அப்புறம் உங்கபாடு… அவங்க பாடு…! எனக்கும் இது பிடிக்கலை தான். இருந்தாலும் நீங்க சொல்ற கதையைப் பார்த்தா ரொம்பக் கொடுமையாயிருக்கு… வாங்கசார்…” என்று பார்பர் கடைப்பையனிடம் சொல்லிவிட்டு தெருவில் நடந்தார். இவன் தொடர்ந்தான்.
அவனது ‘அண்டர்வேர்’ பைக்குள் கிடந்த பொருள் கனத்தது. மூட்டைப்பூச்சி கொல்லி மருந்து! அவன் அதைத் தடவிக் கொண்டான். சற்று முன்வரை அவன் மனதில் நிலைத்திருந்த நிர்ச்சலனம் தகர ஆரம்பித்துவிட்டது. வாழ்க்கை அவனை ஊசலாடச் செய்தது. அவன் மனதுள் ஒரு பிரளயத்தின் ஆரவாரம்! சட்டென்று ஒதுக்கி விடக்கூடிய அளவுக்கு வாழ்க்கை என்பது அற்ப மல்லவே! அற்புதமல்லவா!!
பார்பர், அந்தக் கட்டடத்திற்குள் நுழைந்தார். மாடிக்குச் செல்லும் வழியில் ஏறினார். அங்கே ஒரு அறையில் மின்விசிறி சுழலும் சப்தம் மென்மையாக ஒலித்தது.
அந்த அறைக் கதவைத் தட்டினார். உள்ளிருந்து கதர் வேட்டி கதர் சட்டைக்குள் ஒளிந்திருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் வெளியே வந்தார்.
“என்ன ரங்கசாமியா? என்ன இந்தப் பக்கம்…’
“ஒண்ணுமில்லே சார்… இவரு நம்ம ப்ரண்ட். வெளியூர்.”
‘அப்படியா’அளவெடுக்கும் நோக்கில் அவனை ஏற இறங்கப் பார்த்தார் அந்தக் கதர்.
“இவர் பி.ஏ. முடிச்சிருக்கார். வேறே எந்தப்படிப்பும் இல்லே… வேலை தேடி திரியுறார், பாவம்… அதான் உங்களைத் தேடி வந்தேன்.”
“அதுக்கு நா என்ன செய்யணும்?”
“என்ன செய்வீகளோ, உங்கபாடு… நா கடைக்குப் போறேன்.”
பார்பர் போய்விட்டார். இவனுக்கு கண்களாலேயே நம்பிக்கையை வழங்கிவிட்டு!
கதரைப் பார்த்தான் அவன். ‘வாங்க… உள்ளே வாங்க’ என்றவர் உள்ளே போய் படுக்கையில் அமர்ந்தார். அவனுக்கு நாற்காலியைக் காட்டினார். அவனும் அமர்ந்தான். மனதுள் நினைவுப் பேரலைகளின் கூச்சல்! செத்துக் கிடந்த ஆசைகள் நம்பிக்கையுடன் உயிர் பெற்று பேயாடத் தொடங்கின…
சுவர்களில்… உயிர்விட்ட- உயிர் வாழும்- தலைவர் வாழும்-தலைவர் களின் படங்கள்! ஒரு சில மத்திய மந்திரிகளின் போட் டோக்கள்!
சம்பிரதாயமான கேள்விகள் முடிந்தன… அப்புறம் கதர், வேலையை விசாரிக்க ஆரம்பித்தார்…
“உங்களுக்கு நூத்தைம்பதுரூபா சம்பளம். எங்க போனாலும் செலவுக்கு படியும் உண்டு… தங்க வசதியும் பண்ணித்தர்ரோம்…”
“வேலை?”
“‘நம்ப பத்திரிகைகளிலே, ரேடியோவ்லே கெடைக்குற புள்ளி விபரங்களை சேகரிக்கணும். நாட்டு மக்களுக்காக நம்ம சர்க்கார் எவ்வளவோ செய்ஞ்சிருக்கு… எவ்வளவோ திட்டங்கள் போட்டிருக்கு. அதையெல்லாம் கிராமங் கள்லே நீங்க பிரச்சாரம் பண்ணனும்… எதிர்க்கட்சிக் காரங்க பண்ற அட்டூழியங்களை எல்லாம் காத்துலே பறக்கிற மாதிரி மேடைகள்லே பேசணும், கிராம ஜனங் களுக்கிட்டே நேரடியாகவும் போய் பிரச்சாரம் செய்யணும்…”
கதர் இன்னும் பேசிக் கொண்டுதானிருக்கிறார். கைகளை ஆட்டிக் கொண்டும், படங்களில் உள்ள தலை வர்களைக் காட்டியும், இல்லாத பொல்லாத பெருமை களையும் அளந்து கொண்டிருந்தார். அவனுக்கோ கொதிப்பு ஏற்பட்டது.
பார்பர் ஷாப்பில் பத்திரிகை படிக்கும் போது மத்திய மந்திரியின் பொய் முழக்கத்தைப் படித்துவிட்டு உணர்ச்சி வசப்பட்டது நினைவுக்கு வந்தது. ‘அதே பொய்யை அந்த மாதிரியான இன்னும் ஏராளமான பொய்களை ஊர் பூராவும் போய் சொல்லணும்… ஜனங்கள் நம்புற மாதிரி சொல்லணும். கொஞ்ச நேரத்துக்கு முந்தி நா எதைக் கண்டு சீறிச் சினந்து வெறி கொண்டேனோ… அதுக்கே நா சேவகனாக மாறணும்… இது எனக்கே நா செய்ற துரோகமில்லையா, மக்களுக்கு நான் செய்ற அநியாயமான துரோகமல்லவா?’
பேசிக் கொண்டிருந்த கதர் புரியாத குழப்பத்துடன் அவனது முகத்தைப் பார்த்தார். அவன் விருட்டென்று எழுந்தான்.
“போறேங்க… குட்பை…” என்று சலாம் போட்டுவிட்டு வெளியேறியவனை ஒரு புதிரைப் போல – கதர் பார்த்தார்.
அவனது நடையில் வேகமிருந்தது. மனதில் ஆரவாரக் கூச்சல் எல்லாம் அடங்கிப் போய்விட்டது. இதயத்தின் கதவுகள் இறுக்கமாக மூடிக் கொண்டன.
அவனது நெஞ்சுள் ஒரு இறுக்கமான வைராக்கியம் சூல் கொண்டு விட்டது. போர்க் குணத்தின் விழிப்பு அவனது சிந்தனையில் ஒளியைப் பாய்ச்சியது.
“எல்லாத்தையும் விட வாழ்க்கை உன்னதமானது தான். ஆனால் வாழ்றதுக்கு வேறெ வழிகள் எல்லாம் அடைபட்ட சூழ்நிலையிலே… இந்த மாதிரியான துரோகத்தை விட மரணம் சிறப்பானது தான்.”
அண்டர்வேர் பையுள் கிடந்ததை ஆசையுடன் தொட்டுக் கொண்டான். கடற்கரையை நோக்கிநடந்தான்…
– ஆகஸ்ட் 1978, சிகரம்.
– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
வளர்கவி
September 18, 2026
இந்திரா
நீர்வை பொன்னையன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026
