பிரம்புபதேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரம்பு வாத்தியாருக்கு தலைகால் புரியாத சந்தோஷத் தத்தளிப்பு, இன்றைக்கு. பெருமிதமும், பூரிப்புமாய் மனம் காற்றடைத்த பலூனாய் மிதந்தது அந்தரத்தில். ஒரே கொந்தளிப்பு. 

‘இந்த உத்தியோகம் இத்தனை அருமையானதா? இவ் வளவு அற்புதமா? இதுக்கு இம்புட்டுப் பிரயோசனமா? இத்தனை மவுசு, மரியாதையா?’ 

வியப்பிலும் மகிழ்ச்சியிலும் அவருக்கு மூச்சுத் திணறியது. கறுத்த முகத்தில் ஒரு விசேஷ வெளிச்சம். உதட்டு வரிகள் அழிந்து போகிற அளவுக்கு பூ மலர்ச்சி. 

‘ஆசிரியர் உத்யோகம் உன்னதமானது’ என்பதை பலபல விதங்களில் விளக்கி, பள்ளி ஆண்டு விழா மேடைகளில் பேசிய அனுபவம் நிறைய. 

“அகரம் கற்றுக்கொடுத்து சிறுவர்களை சிகரம் ஏற்றுக்கிற ஆசிரியர்கள், பிள்ளைகளின் மூன்றாவது கண். ஞானக்கண். பிள்ளைகளின் பிறவிக் கண்களுக்கு முழு வெளிச்சமும், அர்த்தமும் வழங்குவதே. இந்த மூன்றாவது கண்தான். இந்த ஞானக்கண்தான், பிள்ளைகளுக்கு மொழிச்சாளரத்தை விரியத் திறந்து பிரபஞ்சத்தையே உணர வைக்கிறது.” 

என்றெல்லாம் ‘தாம் தூம்’மென்று விளாசித் தள்ளுவார். அதெல்லாம்… படித்தறிந்த ஒரு விஞ்ஞானத் தகவலை எடுத்து விடுகிற வாய் வித்தைதான். மனம் உணர்ந்த அனுபவ உணர்ச்சிகளை வார்த்தையாக்குகிற மன ஒட்டுதல் அதிலெல்லாம் இருந்ததில்லை. 

ஆனால், இன்றைய அனுபவமே வேறு. தனி தினுசு. தன்னைத்தானே தரிசித்துவிட்ட பரவசம். தனது உத்யோக அருமையே வடிவம் கொண்டு முன் வந்து, வணங்கி சால்வை அணிவித்த பரவசத் தரிசனம். 

அடுப்பங்கரைப் பக்கம் திரும்பி, மனைவியை கர்வமாய்ப் பார்த்தார். 

“உப்புக்கல்லுக்குப் பெறாத மனுசரய்யா நீரு. ஓமக்கும் வாத்தியார் வேலை போட்டு ஒருத்தன் குடுத்துருக் கான்னா… அவனும் ஒரு துப்புக்கெட்ட கேணயனாத் தான் இருப்பான்…” என்று வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் வாயை அள்ளிவிடுகிற பெஞ்சாதியை பெருமிதமும், பூரிப்புமாய் நிமிர்ந்து பார்த்தார். அவரது விரிந்த உதடுகளில் அந்திநேரச் சின்ன வெயில். 

“என்னமோ… வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்ச தோன்னு ஏளனமா பேசுனீயே… பாத்தீயா ஐயோவோட பெருமையை?” என்று எக்கா… மாய் கேட்கிற அவரது கண்கள். 

அவளும் இவருக்குச் சளைத்தவளா? பார்வையால் ஒரு வெட்டு வெட்டி, முகத்தை ஒரு நொடிப்பு நொடித்தாள். “ரொம்பவும் பீத்திக்கிடாதீக. உம்ம பவுசு எனக்குத்தானே தெரியும்? கந்தசாமி பாவம், கண்டானா என்ன? அவன் ஒரு அப்புராணிப்பய” என்று பாஷையில்லாமல் மடக்கிய அவளது கண்கள். 

பிரம்பு வாத்தியார் மடியில் மடித்துக் கிடந்த நீலக்கலர் உல்லன் சால்வையை ஒரு மழலையை வருடுகிற பாசத்தில் தடவிக் கொடுத்தார். சால்வையின் முள்முள்ளான இனிய ஸ்பரிசம், உள்ளங்கை வழியாக மன ஆழத்தில் சுகமாய் இறங்கிப் பரவியது. 

பத்து வரைக்கும் படித்து முடித்துவிட்டு, வேலை வெட்டி எதுவும் கிடைக்க வழியில்லாமல், வேலை வாங்க பணவசதியுமில்லாமல் ஊரைச் சுற்றித் திரிந்த கந்தசாமி, வறுமைப் பிடுங்கல் தாளாமல் அம்மா வயிற்றெரிச்சலில் திட்டித் தீர்க்க… வாலிபப்பிள்ளை கோபித்துக் கொண்டு எங்கோ ஓடிப்போய்விட்டான். ‘அங்கே, இங்கே’ என்று இலக்கில்லாமல் திரித்துவிட்டு, திரும்பிவரக் காசில்லாமல் தத்தளித்தபோது… அவன் இருந்த இடம் திருச்சி. பட்டாளத்துக்கு ஆள் எடுக்கிற இடத்தில் புகலில்லாமல் ஒதுங்கி வரிசையில் நிற்க, செலக்ட் ஆகிவிட்டான். 

ட்ரெயினிங் பீரியட் முடிந்த பிறகும் ஆறுமாசம் ஜம்முவில் இருந்துவிட்டு ரெண்டு மாச லீவில் நேற்றுத் தான் ஊர் வந்து சேர்ந்தான். கரும்பச்சை காக்கியில் ட்ரெஸ்ஸும், தொப்பியும் மாட்டி, வினோதமான பெட்டி படுக்கையோடு பஸ்ஸில் வந்து இறங்கிய அவனைக் கண்டு, அடையாளம் தெரியாமல் தவித்தது, கிராமம். 

இன்றைக்கு என்னடாவென்றால்… பிரம்பு வாத்தியார் வீட்டுக்குள் வந்து “வணக்கம் சார்” என்றான். வாத்தி யாருக்கு ஏகக் குழப்பம். யாரென்று நிதானம் பிடிபட வில்லை. கண்ணாடியை ஏற்றி விட்டுக்கொண்டு அண்ணாந்து பார்த்தார். பரிச்சயமான குரலாக முகமாக இருக்கிறதே என்கிற தவிப்பு வேறு… 

“சார், என்னைத் தெரியலியா…? நாந்தான்.” 

அவர் முகத்தில் சட்டென்று ஒரு வெளிச்சப் பரவல். நிதானம் பிடிபட்டுவிட்ட மகிழ்ச்சி. 

“அடடே… நம்ம பழைய ஸ்டூடண்ட் கந்தசாமி இல்லே? ராக்கம்மா மகன்தானே? 

“ஆமா… சார்!” 

“மிலிட்டரியிலே இருக்கிறதாகச் சொன்னாகளே…?” 

“நேத்துத்தான் சார்… வந்தேன்.” 

“லீவ்லேயா?” 

“ஆமா சார். ரெண்டு மாச லீவ்.” 

“ரொம்ப சந்தோஷம். உக்காரு இப்படி.” 

“பரவாலே சார்.” 

“அட உக்காரப்பா. நம்ம ஓல்டு ஸ்டூடண்ட் நல்ல பொசி ஷன்லே இருக்கிறதைப் பாக்குறத்துக்கு எம்புட்டுச் சந்தோஷமாயிருக்கு?” 

“சார்… இன்னிக்கு நா இப்படி ஒரு உருப்படியான நிலையிலே இருக்கிறதுக்கே… நீங்களும் உங்க பிரம்பும் தான் சார்… முழுக்காரணம்.” 

“என்னப்பா சொல்றே, கந்தசாமி?” 

“ஆமா சார். நாலாங்கிளாஸ்லே நா சேர்ந்த புதுசு. பள்ளிக்கோடமே போகமாட்டேன்னு எங்கம்மாகிட்டே ஒரே பிடிசாதனை பண்ணுனேன். அம்மாவும் எம் புட்டோ… என்னக் ‘கெஞ்சு, கெஞ்சு’ன்னு கெஞ்சிப்பாத்தா. நா முடியாதுன்னுட்டு ஆத்துக்காட்லே சுத்திக் கிட்டிருந்தேன்…’ 

“அப்படியா?” 

“அப்பத்தான்… நீங்க ஒரு நா… சாயங்கால நேரத்துலே ஆத்துலே வைச்சு என்னைப் பாத்தீக ‘ஏண்டா ஸ்கூலுக்கு வரலே’ன்னு ஒரு அதட்டு அதட்டுனீக. உங்ககிட்டே பிரம்படி பட்ட அனுபவம் எனக்கு அம்புட்டுத்தான். பதறிப்போய் டவுசரை நனைச்சிட்டேன்.” 

வாத்தியாருக்கு சிரிப்பாணி அள்ளிக்கொண்டு வந்தது. வெகுளித்தனமாய் கந்தசாமி சொல்லச் சொல்ல, இவருள் விரிகிற காட்சிப்படலம். பிடிபட்ட குருவிக் குஞ்சாய் தவித்து விழிக்கிற ஒரு சிறுவன்… நடுக்கத்தில் ஒன்னுக்கிருந்து நனைந்து துவள்கிற டவுசர்… 

அணி அணியாய் பொத்துக்கொண்டு வெடித்த சிரிப்பு. மனம் விட்டுச் சிரித்தார். கந்தசாமி லஜ்ஜை தாளாமல் நெளிவதைக் கண்டு சிரிப்பை சிரமப்பட்டு அடக்கினார். அடக்க அடக்க… சிதறிச் சிதறி விழுந்த சில்லறைச் சப்தமாய் கரைந்து தணிந்தது. 

கந்தசாமி தொடர்ந்தான்: 

“அப்ப நீங்க சொன்னீங்க: ‘ஏலேய், எம்பிரம்பைப் பத்தித் தெரியுமாடா, ஒனக்கு? நாளையிலேயிருந்து ஒழுங்கு மரியாதையாய் ஸ்கூலுக்கு வரணும். இல்லே… பிரம்பு பிஞ்சு போகும்’னு சொல்லிட்டுப் போயிட்டீக… மறுநாளே ஸ்கூலுக்கு வந்துட்டேன்.” 

“அடடே…அப்படியா சங்கதி?” 

“ஆமா சார். அன்னிக்கு பிரம்பைக் காட்டி நீங்க அதட்டுப் போடலேன்னா… ஆத்துக்காட்லே சுத்தித்திரிஞ்சு, ஆட்டுக்குட்டி மேய்ச்சிக்கிட்டு, எதிர்காலத்தையே நாசம் பண்ணியிருப்பேன். படிச்சு முடிச்சு, உருண்டு புரண்டு நா இன்னிக்கு ஒரு உத்தியோகத்துக்கு வர முடிஞ்சதுன்னா… அதுக்கு நீங்கதான் சார் காரணம்!” 

“ஆமாம்… நீ படிக்கிறப்ப, அந்த செட்லேயே நீதானே பஸ்ட்ரேங்கா இருந்தீயே?” 

“ஆமா சார். உங்க பிரம்புக்கு பயந்துக்கிட்டு ஸ்கூலுக்கு வந்தேன். அந்தப் பயத்துலேயே நல்லா படிச்சுட்டேன்.” 

ஆள் பார்க்க வாட்டசாட்டமாய் லட்சணமாயிருந்தான். டிப்டாப்பாக டிரஸ் பண்ணியிருந்தான். 

ஜம்முவில் இவர் ஞாபகமாய் ஒரு உல்லன் சால்வையை வாங்கினானாம். மார்கழி, தைப்பனிக்குக் கதகதப்பா யிருக்கும் என்று நினைத்தானாம். நன்றி உணர்ச்சியுள்ள நல்ல பயல். 

சால்வையை வழங்குகிறபோது, முத்துமுத்தாய் ஒரு விஷயம் சொன்னான் “உங்க அருமையை நீங்க தெரிஞ் சிருக்கீகளோ… இல்லையோ சார்… உங்க அருமையாலே முன்னுக்கு வந்த எங்களுக்குத்தான் சார், அதோட அற்புதமும், மகிமையும் தெரியும்.” 

இது… நூற்றிலொரு வார்த்தை. சத்தியமான நிஜம். இந்த நிமிஷம் வரைக்கும் இந்த உத்தியோகத்திற்கு இப்படியோர் மவுசு உண்டு என்று மனசால் உணர்ந்ததேயில்லை அவர். கந்தசாமி சொல்லச் சொல்ல, இவருள் ஏதோ திரண்டு வந்து நெஞ்சுக்குள் அடைத்தது. ஒருவகையான மூச்சுத்திணறல். கண்ணோரங்களில் மன நெகிழ்வின் கசிவு. நரம்புகளின் ஊடே ஓடிப் பாய்ந்த பரவச உணர்ச்சி. 

ஏதோ…ஒரு மாயக்கரம் நீண்டு வந்து கிரீடம் தூக்கி தலையில் வைத்த மாதிரியானதோர் மனப்பிரமை. சுகமான மயக்கமூட்டுகிற மாயப்பிரமை. 

பட்டாளத்தான் கந்தசாமி போய் ரொம்ப நேரமாகி விட்டது. இன்னும் அந்த பிரம்மையிலிருந்து விலகமுடிய வில்லை. விலக மனமில்லை. தேனின் பிசுபிசுப்புக்குள் சிக்குண்ட எறும்பாக அவர். 

செவிக்குள் அவனது வார்த்தைகள். விசுவாசமும், நன்றி உணர்ச்சியுமான ஈர வார்த்தைகள். ‘சம்பளத்துக்கு மாரடிக்கிற உத்யோகம் மட்டுமில்லை. அதற்கும் மேலான மேன்மைகள் உள்ள சிருஷ்டிப்புத் தொழில்… ஞானப் பிரம்மத் தொழில்…’ என்று உணர்த்துகிற- இவருக்கே இவரை உணர்த்துகிற- வார்த்தைகள். 

அந்த லயிப்பிலேயே புரண்டு மயங்கி மனசுக்குள் முகம் காட்டுகிற ஓர் எண்ணம். 

‘அவன் கிரீடம் சூட்டிப் பாராட்டுனது, என்னையா… என்னோட பிரம்பையா?’ 

அந்த எண்ணம் வந்தவுடன், தன்னுள் தானாய்க் குழைந்த மனநிலையில் பெருமை பொங்க முறுவலித்துக் கொண்டார். 

‘நிஜம் தான். நா வேற பிரம்பு வேறன்னு பிரிச்சுப் பார்க்க முடியுமா… என்ன?’ 

பரமசிவம் வாத்தியார் அந்தக்கால இ.எஸ்.எல்.சி. அதாவது, எட்டு. டீச்சர் ட்ரெயினிங்கில் (பணம் கட்டாமல்) இடமும், முடித்தவுடன் (லஞ்சம் கொடுக்காமல், உத்தியோகமும் அட்டியில்லாமல் கிடைத்த காலம் அது. 

வாத்தியார் உத்தியோகத்தில் வஞ்சகமில்லாமல் பாடு பட்டார். நூறு ரூபாய், நூற்றைம்பது ரூபாய்ச் சம்பளத்தில் நொம்பலப்பட்ட காலம் நிறைய்ய. கிழிந்த பனியனை சட்டையைப் போட்டு மறைத்துக்கொள்கிற வாழ்க்கை. கிழிசலை மடிப்புக்குள் தள்ளி துண்டை தோளில் போட்டு சமாளித்த அனுபவம். 

‘வக்கத்தவனுக்கு வாத்தியார் உத்தியோகம்’ என்ற சொலவடை புழக்கத்திலிருந்த காலத்தில்… வறுமை அவலத்தின் சகல அவமானங்களையும் தாங்கிக் கொண்டே, வகுப்பில் நேர்மையும் ஆர்வமுமாய் உழைத்தவர், பரமசிவம் வாத்தியார். 

வறுமைப்பட்ட வாழ்க்கை பந்தாட, கடைகளில்- தெருக்களில்- சம்சாரிகளிடம் இவர் நடித்த நடிப்பு, போலிப் புன்னகை, கைமாத்துக்கு அலைகிற அவமானம், நேர்கிற மனக்காயம் எல்லாம் நிறம்மாறி அவர் கையிலி ருக்கும் பிரம்பில் வந்து நிற்கும். 

போக்கிடமற்ற உள் குமுறலும், புகலிடமற்ற ஊமைக் கோபங்களும் அவரை கடுகடுத்த முகமும், கண்டிப்பு மான ஆளாக ஆக்கிவிடும். 

‘அடியாத மாடு பணியாது’ என்று சொலவடையில் அவருக்கு ரொம்ப விசுவாசம், ஆழ்ந்த நம்பிக்கை. பிரம்பும், கையுமாய் வகுப்பில் உயிர் கரைந்து செயல்படுவார். பிரம்பு வேறு, அவர் வேறு என்று பிரித்துப் பார்க்க வழி யிருக்காது. அவருக்கு முளைத்த மூன்றாவது கைமாதிரி, பிரம்பு. 

பிரம்பை தாராளமாகவே பிரயோகிப்பார். ‘பிரம்புதான் பிள்ளைகளுக்குப் போதி மரம்’ என்று நம்புவார். பிரம்பின் நுனியை ஒரு உதறு உதறிவிட்டு சுளீரென்று விளாசினால்… அந்தச் சத்தம் பாதி ஊருக்குக் கேட்கும். அடிபட்டவன் கதறுகிற கதறலில், அடுத்தவன் ஒன்னுக்கு இருந்து விடுவான். அடிபட்டவன் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டான், தீப்பட்டமாதிரி வலிக்கிற அந்த வேதனையை… 

நாலாப்பைத் தாண்டிப்போன சகல பிள்ளைகளும் இந்தப் பிரம்படியிலிருந்து தப்பித்துப் போனதில்லை. அப்படி யாரேனும் போயிருந்தால்… அது உலகின் பத்தாவது அதிசயம். 

இவரது பிரம்படி ரொம்பப் பிரபல்யம். பள்ளியில் மட்டுமல்ல, ஊர்மடத்தில் இழவு வீடுகளில் குடிநீர் கிணற்ற டியில் இப்படி மனுச மக்கள் கூடுகிற இடமெல்லாம், இது பற்றிய பேச்சு நிச்சயம். 

பிரம்பால் வந்த வினை ஜாஸ்தி. வம்பு தும்புகளுக்குப் பஞ்சமேயில்லை. அடிபட்ட பிள்ளையை பெற்றவர்கள் மனம் கொதித்துப் போய் வந்து, சண்டை போட்டு நாற வசவு வைத கதைகள் அநேகம். அதற்கெல்லாம் அசறுகிறவர் கிடையாது, பரமசிவம் வாத்தியார். 

“வாத்தியார் அடிச்சவுடனே சண்டைக்குத் தாய் தகப்பன்மார் வரலாமா, சார்? அறிவிருந்தா… வருவாகளா? இந்தத் தாய், தகப்பன்மார் அவுக புள்ளைகளை அடிக்கவே மாட்டாகளா? பூப்போட்டு பாராட்டுவாகளோ? வாத்தியார் அடிச்சிட்டா மட்டும், புள்ளே கொறைஞ்சு போவானோ? போங்க சார்?” என்று அலட்சியமாகப் பேசுவார். அதோடு, தர்க்கரீதியாகவும் வாதாடுவார். 

“இப்படிப்பட்ட தாய் தகப்பன்மார்களாலேதான் புள்ளைக கெட்டழிஞ்சு யாருக்கும் பயன்படாம நாசமாயி டுதுக. புள்ளைக முன்னாலே வாத்தியாரை மானக்கேடா பேசுனா… அந்தப் பய வாத்தியாரை மதிப்பானா? படிப்பை மதிப்பானா? படிக்காம புத்தி கெட்டுப்போய் ஆடுகாலித் தனமாய் அலையிறபய நாளைக்கு தாய்தகப்பனை மட்டும் மதிப்பானா? ஊர் உலகத்தை மதிப்பானா? தர்ம நாயத்தை மதிப்பானா?” 

ஆக… சகலர் வாய்களிலும் விழுந்து புரண்டு, பரமசிவம் வாத்தியார்… நீரோடு உருண்டு வருகிற கூழாங்கல் மாதிரி, பரமுவாத்தியாராகத் தேய்ந்து… பிரம்பு பிரபல்யத்தினால் ‘பிரம்பு வாத்தியார்’ என்றாகிவிட்டார். சக ஆசிரியர்கள் கூட அவரைப் ‘பிரம்பு சார்!’ என்று தான் கூப்பிடுவார்கள். 

“அலோ பிரம்பு சார், ஆர்ப்பாட்டத்துக்குப் போனீகளா?” 

“என்ன பிரம்பு சார், மறியலுக்கு உங்க பேரைக்குடுக்கப் போறீகளா, சார்?” 

“பட்ஜெட்லே நமக்கு என்னமும் உண்டா, பிரம்பு சார்?” 

இப்படித்தான்… ஒரு தடவை, பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷனுக்காக ஏ.இ.ஓ. (உதவிக் கல்வி அலுவலர்) வந்திருந்தார். தங்கமான மனிதர். சுத்தமான நேர்மை. வேலைகளில் கறார். தனி உபச்சாரம் எதிர்பார்க்க மாட்டார். மென்மையானவரும் கூட. 

சக தோழர்களாக ஆசிரியர்களை மதித்துமிருதுவாக நடத்துவார். 

சுருங்கச் சொன்னால்… இ.ஓ.க்களில் அவர் ஓர் அத்திப்பூ. 

அவர் வந்திருந்த சமயத்தில், ஹெச்.எம். ஒவ்வொரு காரியத்துக்கும் “பிரம்பு சார், பிரம்பு சார்” என்று அடிக் கொரு தடவை கூப்பிட்டுக் கொண்டிருந்தார். 

அந்தப் பெயரின் வித்தியாசத் தொனி, ஆபீஸரை உறுத்த, அது பற்றிக் கேட்டார். ஹெச்.எம். தர்மசங்கடமாய் நெளிந் தார். அதை இதைச் சொல்லிச் சமாளித்துப் பார்த்தார். 

ஆபீஸர் விடுவதாக இல்லை. உள்ளதைச் சொல்லும் படியாகிவிட்டது. 

முழுக் கதையையும் கேட்டுவிட்டு, மென்மையாய் முறுவலித்தார். பிரம்பு சாரை கனிவோடு பார்த்து மிருதுவான குரலில் கூறினார்: 

“உங்க கொள்கைக்கு உங்க அளவுலே வலுவான அனு பவம் காரணமாயிருக்கலாம். ஆனா, என்னோட ஒப்பீனியன் என்னன்னா… நடத்துற பாடங்கள்லே நமக்கு நல்ல தெளிவும், நடத்துற முறையிலே தன்னம்பிக்கையும் இருந்தா… ஒரு நல்ல ஆசிரியருக்கு பிரம்போட உதவி எந்த நேரத்துலேயும் தேவைப்படாது. பிரம்பும், மிரட்டலும் சர்க்கஸ் மிருகங்களுக்குத்தான் அவசியம். புள்ளைகளுக்கு அவசியமேயில்லை.” 

ஏ.இ.ஒ. போன பிறகு பிரம்பு வாத்தியார் ரொம்ப ஆவேசமாய் மறுத்துப்பேசினார், ஹெச்.எம்.மிடம். 

“இவரு கிடக்காரு… இவருக்கு அனுபவம் பத்தாது, சார்… ஏட்டுச் சுரைக்காயை நம்மகிட்டே குழம்பு வைக்கக் குடுக் கிறாரு. நானுந்தான் டீச்சர் ட்ரெயினிங்க்லே படிச்சேன். அங்கேயும் சைக்கலாஜிக் பிரிவுலே இதே சுரைக்காயைத்தான் நமக்கு சொல்லிக்குடுத்தாக. ஆனா, நடப்புக்கு ஒத்துவரல்லியே…” 

அவருக்குப் பிரம்பு மேலுள்ள காதல் குன்றவேயில்லை. ‘அடியைப் போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான்’ என்ற சொலவடையை உண்டாக்கிய மாமனிதரைத் தேடிக் கொண்டிருக்கிறார், வாயில் சீனி அள்ளிப்போட. 

இதோ பட்டாளத்துக் கந்தசாமி, பிரம்புக்கு கிரீடம் சூட்டிவிட்டுப் போகிறான். அவன் பரிசாக வழங்கிவிட்டுப் போன உல்லன் சால்வை. கருநீல நிறத்தில் ஆகாயம் போல சால்வை. வெள்ளிமேகக் கோடாக ரெண்டு பார்டர். 

பத்தாவது தடவையாக விரித்துப் பார்க்கிறார். பிடி படாத பெருமை. பொங்கிப் பொங்கிப் வழிகிற பூரிப்பு. தலைகால் புரியாத சந்தோஷத் தத்தளிப்பு. 

இது, அவர் கொள்கைக்குக் கிடைத்த விருது. வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம். அவரையே அவருக்கு உணர்த்திய உன்னதம். 

வீட்டு வாசலில் வேற்றுப் பிள்ளைகளின் நிழல். ஒன்றி ரண்டு இளவட்டங்கள். பெண்கள். மணியைப் பார்த்தார். பன்னிரண்டு நெருங்கியது. ஞாயிற்றுக்கிழமை. மதிய நாடகம், டி.வி.யில். அதை ‘ஆன்’ பண்ணினார். கஞ்சிக்கு வழியில்லாத ஏழைகளை பரிகாசம் பண்ணுகிற ‘காம்ப் ளான் பாய்’ பாணி விளம்பரங்கள். 

சால்வையை பெருமையாக போர்த்திக் கொண்டு வெளியேறினார். நாலு பேரிடம் காட்டணும். ஏது சால்வை என்று விசாரித்தால்… நிறையச் சொல்லணும். 

மனசுக்குள் ததும்பல். பூரிப்பில் மிதக்கிற அவருள் அலை அலையாக நினைவுகள். இவரிடம் பிரம்படி வாங் கிப் படித்து முன்னேறியவர்கள். டாக்டர், இஞ்ஜினீயர், வழக்கறிஞர், தொழிலதிபர், சென்னை வண்ணாரப் பேட்டையில் பலசரக்குக் கடை முதலாளிகள் என்று வரிசை வரிசையாய் முகங்கள். 

இவரால் உருவாக்கப்பட்டவர்கள். இவரது பிரம்புப தேசத்தில் ஞானம் பெற்று வசப்பட்டவர்கள். ஒழுங்கு நிலைக்கு வந்து உயர்ந்து போனவர்கள். 

கந்தசாமி புகழ்ந்த புகழ்ச்சியில்… அவருள் புதைந்து கிடந்த சாதனைகளெல்லாம் உயிர் பெற்று ஊர்வலம் வர, ஊர் மடத்திற்கு வந்தார். அங்கு எப்பவும் ஒரு கூட்டம். சமுத்திரம் மாதிரி வற்றவே வற்றாது. 

அந்தச் சூழலுக்கே உறுத்தலான அந்நியமாய் அந்தச் சால்வை ஒளி வீசி, கவனங்களை ஈர்த்தது. 

“என்ன சார், மார்கழி மாசம்னு நெனைச்சீகளா? ஆடி மாசத்துலே உல்லன் சால்வையை மூடிக்கிட்டு வாரிகளே?” 

இது போதாதா? இவர் அள்ளிவிட ஆரம்பித்துவிட்டார். அவருள் ததும்புகிற பெருமிதம். முகமெல்லாம் பூரிப்பின் மின்னல். எல்லாம் வார்த்தைகளாகி… 

காலைக்கரண்டு. மதிய வரைக்கும் த்ரீபேஸ் கரண்டு. கூலிக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, குளித்து முடித்து, ஈரக்கைலியும் துண்டுமாய் வந்தான், சின்னச்சாமி. தோளி லிருந்து மண்வெட்டியை கால்மாட்டில் வைத்து விட்டு, நின்ற நிலையில் வாத்தியார் பேச்சில் உன்னிப்பானான். 

அவன் பாதமெல்லாம் நீரில் ஊறி நனைந்து வரிவரியாக ஓடிக்கிடந்தது. கணுக்காலுக்குக் கீழே ரத்த ஓட்டமே அற்றுப்போன மாதிரி, வெளுத்துக்கிடந்தது. 

பிரம்பின் அருமை. பட்டாளத்தான் கந்தசாமியிலிருந்து, டாக்டர், வக்கீல் என்று வண்ணாரப்பேட்டை கடை முதலாளி வரைக்கும் வந்துவிட்டார், வாத்தியார். மெய்மறந்து பேசிக்கொண்டிருந்தார். 

ஒரு பீடியை பற்றவைத்து குச்சியை எறிந்த சின்னச்சாமி, சமயம் பார்த்து பேச்சில் கலந்துகொண்டான். 

“எங்கய்யாவுக்கு நா ஒத்தைப்புள்ளை. என்ன பாடுபட் டாச்சும் என்னைப் பெரிய படிப்பு படிக்க வைக்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை. வாய்க்கு வாய் அந்த ஆசையைச் சொல்லிக்கிட்டேயிருப்பாரு. நானும் நல்லாத்தான் படிச்சேன். நாலாப்புக்கு வந்து சேந்தேன். நாலாப்புலே சார்தான் வாத்தியாரு. பிரம்பை வைச்சு அடின்னா… அடி, அப்படி அடிப்பாரு. எடுத்ததுக்கெல்லாம் அடிதான். என்ன ஏதுன்னு விசாரிப்பே கிடையாது. ரெண்டு பயக சண்டை போட்டா… ரெண்டு பேருக்கும் அடிதான். சாணி பிதுங்கிப் போகும்…” 

எல்லாருக்கும் கதை கேட்கிற ஆசை. வாத்தியாரும் சின்னச்சாமியையே பார்த்தார். 

“அப்படித்தான் ஒரு நா. பின் பெஞ்சுலே சம்பத்து உக் கார்ந்திருந்தான். முன்பெஞ்சுலே நா. என்னைக் கிள்ளிக் கிள்ளி வைச்சான். ‘சும்மாயிருடா’ன்னேன். பாடம் நடத்திக்கிட்டிருந்த சாரு, ‘என்ன சத்தம்’னு பிரம்பை எடுத்தாரு. அம்புட்டுத்தான். என் உடம்பு பூராவும் இடி மின்னல். சுரீர் சுரீர்னு பிரம்படி. துள்ளத் துடிக்க அலறிக் கிட்டு அன்னிக்கு ஓடிப்போய் மம்பட்டியை தூக்குனவன் தான்… இந்தா… கூலிக்காரனா இன்னிக்கு மம்பட்டிப் பொழப்புதான். என்னை மாதிரி ஓடிப்போன பயக எத்தினி பேரோ?” 

விளையாட்டும் சிரிப்புமாய் வேடிக்கையாய்ப் பேசினான், சின்னச்சாமி. எல்லோரும் ‘சிரியோ, சிரி’யென்று சிரித்து உருண்டார்கள். மடம் முழுக்க சிரிப்பாணி. 

வாத்தியாரும் சிரித்து வைத்தார், ஆளோடு ஆளாய். உயிரில்லாத சிரிப்பு. அசட்டுச் சிரிப்பு. உள்ளுக்குள் சின்னச்சாமியின் அனுபவம், ஊசியாகப் பாய்ந்து குத்தி யது. ஆசிரியமனம் குற்ற உணர்வில் கூசியது. 

வேடிக்கையும் கூத்துமாய் பேசினாலும், விஷயம் இதுதானே? 

‘படிப்புக்கனவை உதறிப் போட்டு கூலிக்காரனா நா மாறுனதுக்கு ஒரு பிரம்புதான் காரணம். இப்படிப் பல பேரு படிக்க முடியாம பதறி ஓடுனதுக்கும் ஒம்மோட பிரம்புதான் காரணம்.” 

இதைத்தானே… சொல்லாமல் சொல்கிறான், சின்னச் சாமி? 

அப்போ…. பட்டாளத்தான் கந்தசாமி சொல்றது? 

எது நிஜம்? கந்தசாமியா, சின்னச்சாமியா? ரெண்டுமே நிஜம்தானா? 

பிரம்புக்குப் பணிந்து உருப்பட்ட கந்தசாமிகள் ஒரு சிலராகவும், பயந்து வெருண்டோடிய சின்னச்சாமிகள் பலராகவும் இருக்குமோ…? 

காற்றுப்போன பலூனாக சப்பென்று துவண்டு, மண்ணில் விழுந்தது, அவரது மனம். குற்ற உணர்வின் முள் உறுத்தல். 

“படிக்க விடாம பயமுறுத்தித் தொரத்தியடிச்ச பாவீ” என்று மவுனக் கதறலாக அலறுகிற சின்னச்சாமிகளின் குற்றச்சாட்டுகள். 

மனச்சாட்சி வேதனை தாளாமல் மவுனஅலறலாய் அலறுகிறது. 

அன்றைக்கு, அந்த ஏ.இ.ஓ. சொன்ன ஒப்பீனியன்… “தெளிவும் தன்னம்பிக்கையும் உள்ள நல்ல ஆசிரியருக்கு பிரம்பு எதுக்கு?” 

அப்போ எங்கிட்ட தெளிவில்லையா? தன்னம்பிக்கை யில்லையா? நேர்மை மிக்க அவருக்குள் கேள்விகள். தன்னைத்தானே விசாரித்துக் குடைகிற கேள்விகள்… 

இப்போது- 

சால்வை முள்முள்ளாக உறுத்துகிறது. வேக்காடாகப் புழுங்கி வியர்க்கிறது. சால்வையின் சுமை தாளாமல் அவர் திணறினார். 

திங்கட்கிழமை வழக்கம் போல நாலாப்புக்குள் நுழைந்தார். மேஜையில் கிடந்த பிரம்பை ஒடித்து, குப்பைக் காகிதச் சுருள்களோடு சேர்ந்து, பள்ளி ஜன்னல் வெளியே வீசியெறிந்தார், பரமசிவம் வாத்தியார். 

– 1994, புதிய ஆசிரியன் பொங்கல் மலர்.

– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *