மன்னிப்பு
கதையாசிரியர்: நா.க.தங்கரத்தினம்
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 376
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எல்லோருக்குமே காலம் ஒரேமாதிரி இருப்ப தில்லை. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும், மேடும் பள் ளமும் ஏற்படத்தான் செய்கின்றன. அன்னம் மாத்திரம் இதற்கு விதிவிலக்கல்ல.
அன்னம்… அன்னமும் செல்வக் குடும்பத்திலே பிறந்து, செல்வந்தர் ஒருவரைத் திருமணம் செய்து, மாடி வீட்டிலே பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி, பார்ப்போர் வியக்கும் முறையிலே சீமாட்டியாக வாழ்ந் தவள்தான். மாமியென்றும் மச்சாளென்றும், ஆச்சி யென்றும் அக்காளென்றும் உறவு கொண்டாடி அவ ளின் மிச்சச் சோறு தின்று வளர்ந்தோர் எத்தனையோ பேர். அத்தனை பேரும் பேயென்றும் பிசாசென்றும் கூறுமளவுக்கு அவள் வாழ்க்கை மாறிவிட்டது!
மாடி வீட்டிலே பஞ்சு மெத்தையில் படுத்துறங்கிய வள் படுக்கப் பாயின்றி, இருக்க வீடின்றி, உண்ண உணவின்றி, நடைபாதையின் ஓரத்திலே படுத்திருக்கும் பிச்சைக்காரக் கும்பலோடு சேர்ந்துவிட்டாள்.
அன்று அன்னம் மாத்திரம் எல்லோருக்கும் முன்பு எழும்பிவிட்டாள். எல்லோருமே கால்களையும் கைகளை யும் முடக்கிக்கொண்டும் பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டும் படுத்திருந்தனர். எல்லோருக்கும் முன்பு தான் தன் தொழிலை ஆரம்பித்துவிடவேண்டும் என்பதனாலோ என்னவோ, அதிகாலையிலேயே அவள் தன் பிச்சைப் பத்திரங்களை எடுத்துக்கொண்டும் பொல்லை ஊன்றிக்கொண்டும் எழும்பினாள். திடீரென அவளது மடியிலிருந்து “கலீர் கலீர்” என்ற சத்தத்துடன் முதல் நாள் சேர்த்த நாணயங்கள் எல்லாம் கீழே விழுந்தன. ‘கண்ணுக்குத் தெரிந்த நாணயங்கள் எல்லாவற்றையும் தடவி எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
அன்று அவள் போன் வீடுகளிலெல்லாம் அவளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. பணம் நிறையச் சேர்ந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் எல்லாக் காசுகளையும் எண்ணிக்கொண்டு, தாண்டித் தாண்டிச் சென்றாள், கிழவி. நிறையப் பணம் சேர்ந்த பெருமகிழ்ச்சியினால் வாடிக்கையாகச் செல்லும் பாதையைக் கூட மறந்து பரமானந்தர் வீதி வழியாகச் சென்றாள். அந்த வீதி அவளுக்குப் புதிய பாதையாதலால் கதவுகளில் தட்டு வதற்குப் பயமாக இருந்தது. எனினும், ஒரு குறிப் பிட்ட வீட்டுக் கதவில் இருந்த பொத்தானை அழுத்தி னாள். ரீங்!…ரீங்!!….என்றது மணி.
மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் ஓடிவந்தாள் பவானி. பவானி அழகிகளுள் அழகி. கயல் போன்ற கண்கள். அம்பு விழிகள், கதுகதுப்பான கண்ணாடிக் கன்னங்கள், வில் போன்று வளைந்த – மை தீட்டிய புருவங்கள், சிவந்த நெற்றியில் குங்குமப் பொட்டு, சுருண்டு நெளிந்து கன்னத்தை முத்தமிடும் மயிர்த் தளிர்கள், கொவ்வையிதழ், முத்துப் போன்ற பற்கள், பொன்னகையைப் பழிக்கும் புன்னகை.
வந்ததும் ஏசிக் கலைத்துவிடுவாள் என்றுதான் நினைத்தாள் கிழவி – காற்றுப்போன பலூன் போல் சுருங்கிய சரீரம்; நரைத்த தலைமயிர், சுருங்கிய நெற்றி யிலே திருநீற்றுப் பூச்சு, பூஞ்சணம் பிடித்த கண்கள், கறுப்புக் காவி படிந்த இரண்டு மூன்று பற்கள், வலக் கையிலே பொல் இடக்கையிலே பிச்சையெடுக்கும் பாத்திரங்கள் – பயந்து, நடுங்கி, ஒடுங்கிப் பாவிபோல் நின்றாள்.
கிழவியைக் கண்டதும், மிக்க ஆவலுடன். “யார் நீங்கள்? என்ன வேண்டும்?” என்றாள் பவானி. அம்மா! நான் பரம ஏழை. பிச்சை தாருங்கள் அம்மா!” என்று கைகால் நடுநடுங்கத் தாழ்ந்த குரலில் கேட்டாள் கிழவி. கிழவியைப் பார்த்தவுடனே கிழவி பெரிய இடத்திலே பிறந்து, செல்வச் சீமாட்டியாக வாழ்ந்து, காலத்தின் கோலத்தால் பிச்சைக்காரியாக மாறியிருக்கிறாள் என்பது : பவானிக்குப் புரிந்து விட்டது.
“தாயே! உள்ளே வாருங்கள்” – கிழவிக்கு ஆச்சரியம் வந்துவிட்டது. “தாயே! உள்ளே வாருங்கள்” என்று கூறுகிறாளே. ‘தாய்’ என்று என்னைக் கூப்பிடுவதற்கு இவ வள் மனம் எப்படி இசைந்தது? ஒருவேளை இவளது ‘தாய்’ இறந்துவிட்டாளோ, அல்லது என்னை இவளுக்கு முன்னரே தெரியுமோ?”. என்று தனக்குள்ளே நினைத் துக்கொண்டு நிற்கும்பொழுது; “தாயே! ஏன் தயங்கு கிறீர்கள்? இந்த வீடு உங்கள் சொந்த வீடு மாதிரி. வாருங்கள் உள்ளே.” பவானியின் வற்புறுத்தலைக் கிழவியால் மீற முடியவில்லை. கிழவி உள்ளே போனாள்.
“தாயே! உந்தக் கதிரையில் இருங்கள்! இதோ வருகிறேன்” என்று அன்பு ததும்பக் கூறிவிட்டுச் சிட்டுக் குருவிபோல் ஓடினாள் பவானி.
பவானி குசினிப்பக்கம் செல்வதைக் கண்ட கிழவிக் குப் பவானியின் செயல்கள் ஒன்றுமே புரியவில்லை. சுற்று முற்றும் பார்த்தாள். ரீப்போவில் வைக்கப்பட் டிருந்த பெண் ஒருத்தியின் சிலை அவள் கவனத்தைக் கவர்ந்தது. அச்சிலையை அவள் முன்பு பார்த்ததாக ஞாபகம். அந்தச் சிலையையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆச்சி எனது நண்பர் ஒருவர் வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவரைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். அவரைக் கூட்டி வரும்வரை அவ வோடு இருந்து கதையுங்கோ. அவவுக்குப் பாட்டிகள் என்றால் அதிக விருப்பம். நான் வரும்வரை கதைத் துக்கொண்டிருங்கோ” என்று கூறிவிட்டுப் பவானியின் கணவன் கலாதரன் நடையைக் கட்டினான்.
கலாதரன் கதவைச் சாத்திவிட்டு வெளியே போவ தற்கும் பவானி காப்பியை ஏந்திக் கொண்டு கிழவியின் அருகில் வருவதற்கும் .சரியாக இருந்தது. கிழவியின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன.
“தாயே! இந்தக் காப்பியைச் சாப்பிடுங்கள், என்று கிழவியின் கையில் கொடுத்துவிட்டு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள் பவானி:
கிழவியைப் பற்றிக் கேட்க வேண்டும்; கிழவியின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை அறியவேண்டு மென்று பவானியின் உள்ளம் துடித்தது.
“தாயே! உங்களைப் பார்க்கப் பெரிய இடத்துப் பெண் போலவும், படித்த பெண் போலவும் தெரிகிறதே.”
“அம்மா! உன்னைப் போன்ற பண்புள்ள பெண்மணிகளை நான் இதுவரை கண்டதேயில்லை. நீ இப்படி நடந்துகொள்வதற்கு?…”
“காரணத்தைத் தான் கேட்கிறீர்கள் போல் தெரிகி றது. அதை மாத்திரம் கேட்காதீர்கள். அதைச் சொல்ல என்நா மறுக்கிறது”.
“சொல்ல முடியாத காரியம் ஏதாவது நடந்துவிட்டதா?”
“என் தாய் இறந்துவிட்டாள், எனக்காகத்தான் இறந்துவிட்டாள்”.
“உங்களுக்காக உங்கள் தாய் இறப்பதற்குக் காரணம்?”
“என் அப்பா நான் விரும்பாத ஒருவரை எனக்குத் திருமணம் செய்து வைத்ததுதான் காரணம்.”
“அப்படியானால் நீயேன் அதற்கு உடன்பட்டாய்?”
“என் தந்தையின் பெயரைக் காப்பாற்ற… அது இருக்கட்டும், தயவுசெய்து எனது விஷயத்தை நிறுத்தி விட்டுத் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீதங்களைச் சொல்கிறீர்களா?” என்று பவானி கேட்டதும், கிழவிக்குப் பெரும் வேதனையாக இருந்தது.
*எனது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை நான் எப்படிக் கூறுவேன்! அதைக் கூறும்படி எத்தனையோ பேர் என்னை வற்புறுத்தினர். நான் இதுவரை ஒரு வருக்குமே கூறியதில்லை நீ தாயை இழந்ததனாலோ என்னவோ என்னையும் உன் தாயைப் போலவே கருது கிறாய். உன்னை மருமகளாகப் பெற்றவள் பாக்கியசா லியாகத்தான் இருக்கவேண்டும். நீ எனக்கு மருமக ளாகக் கிடைத்திருந்தால்…” என்று இழுத்துக்கொண்டே தனது வரலாற்றைக் கூற ஆரம்பிக்கும்போதே. கிழ வியின் மங்கிப்போன கண்கள் குளமாகிவிட்டன. கண் ணீரைத் தன் அழுக்குப் படிந்த சேலைத் தலைப்பினால் துடைத்து விட்டுக்கொண்டு, நாலு வருடமாகப் பிச்சை யெடுத்து வயிறு வளர்த்துவரும் கதையை ஆரம்பித்தாள்.
2
அன்று எங்களூரிலே அழகி-படித்தவள் யாரும் இருகிறார்களா என்று யாரையாவது கேட்டால் தெய் வேந்திரனின் மகள் ‘அன்னம்’ என்று கூசாமல் கூறிவிடுவார்கள். அத்தகைய பெருமை பெற்ற என்னை என் அத்தான் முறையான ஒருவர் திருமணம் செய் தார். அவர் தாலி கட்டியதிலிருந்து நானும் அவரும் ஒருவரை ஒருவர் பிரியாது சந்தோஷமாக வாழ்ந் தோம். நான் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தேன். அவரும் அப்படித்தான்.
மாடி வீட்டிலே, சகல சௌகரியங்களுடனும் பார்ப். போர் பொறாமை கொள்ளும் வகையில், எங்கள் வாழ்க் கையில் ஓராண்டு உருண்டோடியது. ஆனால், கொஞ் சிக்குலாவ – மழலை மொழி கேட்க. எங்களுக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற கவலை எங்களை வாட்டி வதைத் தது. வேண்டாத வரமில்லை. கோவிலெல்லாம் கையெ டுத்துக் கும்பிட்டோம். வெள்ளிக்கிழமை என்றால், எங் களைக் கந்தசுவாமி கோவிலில்தான் காணலாம்.
‘மலடி’ என்றபெயரை நீக்கக் கந்தனருளால், மகன் பிறந்தான். அவனுக்கு எங்களூரிலே இருந்த மதிப்பு அப்பப்பா! சொல்லவே முடியாது. அழகான எனக்கு அழகானவன்தான் பிறந்தான். எங்கள் வீதியில் யார் போனாலும் அழகா! அழகா!! என்று கூப் பிட்டு அவனைத் தூக்கி முத்தமிட்டுவிட்டுத்தான் போவார்கள்.
அவனுக்கு ஐந்து வயது நிரம்பியபோது, அவன் தந்தைக்கு ஆயுள் முடிந்து விட்டது. அவர் போய் ஒரு வாரங்கூட ஆகவில்லை – அவரின் அன்புருவம் என்னை விட்டு அகலவில்லை. அதற்கிடையில் எனக்கு மறு திரு மணப் பேச்சு நடைபெற்றது… இந்த வழக்கம் எப் பொழுதுதான் மாறுமோ?….
சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்ற ‘புரோக்கர்’ மாரிட மிருந்து தப்பவே முடியாது. சந்தர்ப்பம் கிட்டும் போதே பணத்தைச் சம்பாதித்து விடவேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த புரோக்கர் முரு குப்பிள்ளையும் வல்லிபுரமும் எனது வீட்டுப் பக்கம் தலை காட்டினர்.
“அன்னம் உனக்கும் வயது சொற்பம். உனது பிள்ளைக்கும் ஐந்து வயதுதான் ஆகிறது இந்தச் சின்ன வயதிலே இன்னும் எத்தனையோ பிள்ளைகளைப் பெற்றுச் சீரும் சிறப்புமாக வாழவேண்டியவள் நீ. அதை விட்டு விட்டுச் செத்துப்போன கணவனை நினைத்துக் கண்ணீ ரும் கம்பலையுமாகக் காலத்தைக் கழிக்கப் போகிறாயா?” என்று பேச்சை ஆரம்பித்தார் முருகுப் பிள்ளை.
“ஐயா! பெரியவரே பணம் தேவையானால் கேளுங் கள் தருகிறேன். இதை மாத்திரம் சொல்லாதீர்கள். நான் சிறுவயதிலே கணவனை இழந்தது உண்மைதான். ஆனால் மறுமணம் செய்ய நான் விரும்பவில்லை. என் கண்வர் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக இதோ என் மகன் இருக்கிறான். என் மகனை வளர்த்துப் படிக்க வைப்பது என் கடமை. அது என் ஆசையுங்கூட.”
“அன்னம்! இந்தச் சிறு வயதிலே நீ மறுமணம் செய்யாது தனிமையாக இருந்தால்… ஊரவர்கள் சந்தே கிப்பார்கள். அதனால் நீ தற்கொலை செய்யவேண்டி நேரிடும்.”
”ஊரவர்கள் சந்தேகித்தால் என்ன? நான் சரியாக இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? ஊரவர்க ளுக்காக நான் என் வாழ்க்கையை நாசப்படுத்துவதா? ஒருத்தி ஒருவனுக்குத்தான் உரியவள். அவன் போய் விட்டால்…பிறகு மண்ணுக்குத்தான் அவளை மணக்க உரிமையுண்டு’-என்று ஆத்திரம் பொங்கக் கூறினேன். இதைக் கேட்டதும் புரோக்கர் முருகுப்பிள்ளையும் வல்லிபுரமும் போய்விட்டார்கள்.
“நீங்கள் மறுமணம் செய்யவில்லையா?” என்று கேட் டாள் பவானி.
“இல்லை”
“உங்கள் மகன் எங்கே?”
“என் மகன் அவனை நினைத்தாலே உடலெல்லாம் நெருப்பாக எரிகிறது. அவனும் என்னைவிட்டுப் பிரிந்து விட்டான். பிரிவு என்பதே பொறுக்க முடியாத ஒன்று அதுவும் மகனை விட்டுத் தாய் பிரிவதென்றால்…அதை எவரால் பொறுக்கமுடியும்? அந்தப் பிரிவும் என்னைப்.’ பொறுத்தவரையில் ஏற்படத்தான் செய்தது.”
“அந்தப் பிரிவு எப்படித்தாயே ஏற்பட்டது”
“சின்னஞ் சிறு வயதிலிருந்து என் இரத்தத்தை எல்லாம். பிழிந்து பர்லாகக் கொடுத்து, என் மகனை வளர்த்தேன். அவனும் நாளொரு வண்ணமும் பொழு தொரு மேனியுமாக வளர்ந்து வந்தான். அவனை நன்றா கப் படிப்பித்துப் ‘பட்டதாரி’யாக்க வேண்டுமென்று என்னுள்ளம் துடித்தது. அவனைப் படிப்பித்தேன். அவ னும் நன்றாகப் படித்தான். ஒவ்வொரு வகுப்பிலும் முதலாவதாகவும் வந்தான். அவனைக் கல்லூரியிலே எல் லோரும் போற்றிப் புகழ்ந்தனர். பரிசுகளும் கொடுத் தனர். என் மகன் ‘பட்டதாரி’ யாக வந்து என்னைக் காப்பாற்றுவான் என்று என் வீடு வாசல் எல்லாவற் றையுமே விற்றுப் படிப்பித்தேன். வீடு போய்விட்டது; பணம் போய்விட்டது; மகனும் போய்விட்டான்.”
“எங்கே?”
“இறந்துவிட்டான்”
“காரணம்?”
என்மகன் மற்றப் பிள்ளைகளைப்போல் தாய் சொல் லைத் தட்டுபவனல்ல. நல்லவன் என்று எல்லோராலும் போற்றப்பட்டவன். அவன் அழகில் மயங்கி, அவனைத் திருமணம் செய்துவிட வேண்டுமென்று என்னை மாமி, மாமி என்று முறை கொண்டாடியவர்கள் எத்தனையேர், பேர்.
“எல்லோருடைய விருப்பத்துக்கும் மாறாக, அவன் படித்த கல்லூரியிலே அவனுக்குக் காதலி உண்டாகி விட்டாள். அவனுடன் படித்த கள்ளி ஒருத்தி அவனை மயக்கி விட்டாள்.
“அக் கல்லூரியிலே மாணவர் சங்கம்’ ஒன்று இருந் ததாம். அச்சங்கத்திற்கு என்மகனைத் தலைவராகவும் அவளைக் காரியதரிசியாகவும் தெரிவு செய்தார்களாம். ‘அதற்குப் பின்புதான் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம்.” என்றாள் கிழவி. கிழவி கதையைச் சொல்லும் போதே பவானியின் முகத்தில் ஏக்கம் தோன்றி மறைந்தது.
“என் மகன் தலைவராக இருக்கும்போது அவள் சங்க அறிக்கைகளை என் மகனுக்குக் காட்டுவாளாம். என் மகன் அவற்றைத் திருப்பி எழுதிக் கொடுப்பானாம், என் மகனின் திறமையைக் கண்ட அவள் ஒரு நாள் என் மகனை ” அத்தான்! உங்களை எனக்குப் பிடித்துவிட்டது. உங்களை மணந்து கொள்ள என் மனம் துடிக்கிறது. நீங்கள் இல்லாமல் நான் வாழ முடியாது” என்றாளாம்.
கல்லூரியிலே ‘காதல்’ என்றால் மாணவர்கள் சும்மா இருப்பார்களா? கல்லூரிச் சுவர்கள் எல்லாம் என் மகன் பெயரும் அவள் பெயரும் காட்சியளித்தன. பெயர்கள் மாத்திரமல்ல, கேலிச் சித்திரங்களும் கண்களைக் கூச வைத்தன.
“அத்தான்! உங்களையும் – என்னையும் பற்றிச் சுவர் களிலே என்னென்ன எழுதியிருக்கிறார்கள், பார்த்தீர்களா?”
“பார்த்தேன்”
“இனி நீங்கள் தான் எனக்கு உரியவர். என்னை மறந்துவிடாதீர்கள். மறந்தால் என்னை உயிருடன் காணமாட்டீர்கள்”, என்று கூறிய அவளின் சொல்லை நம்பினான் என் மகன்.
“அவளே எனக்குரியல்ள். அவளைத்தான் நான் திரு மணம் செய்வேன். அவள் இல்லாவிட்டால் நான் உயிடன் இருக்கமாட்டேன்.” என்றான் என்னிடம்.
“மகனே! உன்விருப்பம் தான் என் விருப்பம்,” என்று கூறிவிட்டேன் நான். எனது ‘“விருப்பத்தைப் பெற்றவன் அவளுடன் நெருங்கிப் பழகத் தொடங்கி னான். எங்கள் வீட்டிலிருந்த இதே போன்ற சிலை ஒன் றையும் அவளிடம் கொடுத்தான்,” என்று கிழவி சொன்னதும் புவானியின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் நிலத்தில் விழுந்து சிதறின.
“இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதில்லை என்று ‘சத்தியம்’ செய்தனர். ‘கல்லூரி வாழ்வு முடிந்த தும் இவர்களது காதல் வாழ்வும் பிரிந்தது. “பள்ளிக் காதல் படலை மட்டும்” என்பார்களே; அதேபோல் இவர் கள் இருவரது காதலையும் பிரித்து விட்டார் அப் பெண் ணின் தந்தை. கல்லூரியை விட்டதும் இருவருக்கும் சந்திக்கவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
“ஆண்டுகள் பல உருண்டோடின. அவளுக்குத் திரு மணம் நடந்த செய்தி என் மகனுக்கு எட்டியது. “அத் தான் என்னை மன்னித்து விடுங்கள். என் அப்பாவின் வற்புறுத்தலுக்காகவும் அவர் மானத்தைக் காப்பாற்ற வும் என் வாழ்வை இன்னொருவருக்கு அர்ப்பணித்து விட்டேன்” என்று அவள் எழுதிய கடிதம் அவனுக்குக் கிடைத்தது. அவ்வளவுதான்.
“ஓடினான்… என்னைப் பிரிந்து – பிறந்த மண்ணைப் பிரிந்து, வாழ்வையே துறக்கும் நோக்கமாக ஓடினான்”…
“பிறகு என்ன நடந்தது?” என்று கேட்கும்போதே பவானியின் குரல் அடைத்துவிட்டது. அவள் கண்கள்’ குளமாகி, கண்ணீர் ஆறாக ஓடியது. கைகள் நடுங்கின. கால்கள் பதறின.
பிறகு ஓடியவன் ஓடியதுதான், “திரும்பவேயில்லை.”
“எங்கு ஓடினார்?” என்று அவள் கேட்டதற்குக் கார ணம் உண்டு. அவன் தன் காதலன் தான? அந்த நிகழ்ச் சிகள் தன் வாழ்க்கையில் நடந்தவைதானா என்பதை அறிவதற்கு அவள் உள்ளம் அவாவியது. அவன் பெயர் என்னவென் று கேட்பதற்கு வாயெடுக்கும் போது அவள் மகன் | நந்தகுமார்’ நித்திரைவிட்டு எழுந்து அழும் சத்தம் கேட்டு “நந்தா?” என்று கூப்பிட்டாள் பவானி.
“நந்தா! நல்ல அருமையான பெயர் எதற்காக இந் தப் பெயரை உன் மகனுக்கு வைத்திருக்கிறாய்?”
‘நினைவிற்காக”
“யார் நினைவிற்காக?”
“என் அன்புக்குரிய ஒருவரின் நினைவிற்காக”
“அப்படியா?”
“நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?”
“என் மகனின் பெயரும் நந்தகுமார்தான்”
“அப்படியானால் அவர் படித்த கல்லூரி…?”
“மத்திய கல்லூரி.”
“மாமி! உங்கள் மகனைக் காதலித்த கள்ளி நான் தான். காதலித்த நான் கல்யாணம் செய்யாமற் கைவிட்டேன். என்னால்தான் உங்கள் மகன் உங்களை விட்டுப் பிரிந்து விட்டார். என்னை மன்னித்து விடுங்கள் மாமி…என்னை மன்னித்து விடுங்கள்” அன்னக் கிழவியின் காலில் விழுந்து கதறிக் கதறி அழுதாள் பவானி.
07-03-1965, தினகரன்.
![]() |
சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க... |
