மனம் தளராமை
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 105

நாரத முனிவர் ஓர் அடர்ந்த காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒருவர் தன்னைச் சுற்றி எறும்புப் புற்றுகள் கட்டிக் கொண்டிருக்கும் அளவிற்குக் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்ததைக் கண்டார். கண் விழித்த தவசி , நாரதரைக் கண்டு வணக்கம் தெரவித்து
“சுவாமி . தாங்கள் கடவுளைக் காணும் போது எனக்கு எப்போது பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று கேட்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார் பணிவுடன். நாரதர், தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தார்.
நாரதர் , அந்த வனத்தில் வேறொரு இடத்திற்கு வந்த போது அங்கு நடுத்தர வயது நபர் , பாட்டு பாடிக் கொண்டு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்.
அவர், நாரதரைக் கைகூப்பி வணங்கினார் –
“ஐயா, பெரியவரே தாங்களைக் கடவுளைத் தரிசிக்கும் போது எனக்கு இந்தப் பிறவி சுழலிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று கேட்டு வர முடியுமா?“ என்றார். நாரதரும் சரி என்று தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தார்.
சில நாட்கள் கழித்து நாரதர் அதே வனத்திற்கு வந்தார். தவம் செய்தவர், நாரதரைக் கண்டு ஆவலுடன் ஓடோடி வந்தார்.
“சுவாமி இறைவன் என்னைப் பற்றி கூறியது என்ன?”
ஆர்வம் பொங்க வினவினார். நாரத முனிவர் பதில் அளித்தார் –
“அதுவாப்பா? இன்னும் நான்கைந்து பிறவிகள் எடுத்து பின்னரே உனக்கு முக்தி என்று இறைவன் கூறினார் அப்பா”
தவம் செய்த நபரின் முகம் மாறியது . கால்களால் புற்றுகளை உதைத்தார். ” இது என்ன கொடுமை என்னைச் சுற்றி எறும்புப் புற்றுகள் வளரும் அளவிற்கு கடுந்தவம் புரிந்த பின்னரும் கடவுளுக்கு என் மேல் இரக்கம் வரவில்லையா ” என்று அழுது புலம்பத் தொடங்கினார்.
மேலே நடந்து சென்ற நாரத முனிவர் , முன்பு பார்த்த மற்றொரு நபரைக் கண்டார்.
“வணக்கம் ஐயா..“ என்று முகம் மலர வணக்கம் தெரிவித்த நபர் , “ ஐயா , இறைவனிம் கேட்க முடிந்ததா? இறைவன் என்னைப் பற்றி ஏதேனும் கூறியருளினாரா தங்களிடம் ? “
பணிவுடன் கேட்டார் அவர்.
நாரதர் சொன்னார் –
“குழந்தாய் இந்தப் புளிய மரத்தைப் பார் . இதில் உள்ள கிளைகள் அளவுக்கு பல பிறவிகள் எடுத்த பின்னரே உனக்கு விடுதலை என்று கடவுள் கூறி விட்டாரப்பா”
அந்த நபர் மகிழ்ச்சியில் ஆடத் தொடங்கி விட்டார்.
“மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஐயன்மீர்… அத்தனை ஜென்மங்களுக்குப் பிறகு , அத்தனை குறுகிய காலத்தில் எனக்கு முக்தி நிச்சயம் என்று கடவுளின் ஏட்டில் உள்ளதே அடியேனுக்கு மகிழ்ச்சி தங்களுக்கு நன்றிகள்… இறைவனின் அருளுக்கும் நன்றி”
என்று அந்த நபர் மகிழ்ச்சியில் கூத்தாடினார். அத்தனை பிறவிகளுக்காக காத்திருக்கிறேன் என்ற அந்த நபரின் விடாமுயற்சி மனதைக் கண்டு வியந்தார் நாரத முனிவர். .
அப்போது அசரீரீயாக இறைவன் குரல் அந்த வனத்தில் ஒலித்தது.
“என் புதல்வனே… உனக்கு இந்தக் கணமே உனக்கு விடுதலையைத் தருகிறேன்”
அந்த நபர் கைகைளைக் கூப்பி நின்றார்.
(குறிப்பு: 1914 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக , கொல்கத்தாவில் வெளியிடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஆங்கில நூலான Raja Yoga or Conquering the Internal Nature என்ற நூலில் சுவாமி கூறிய கதையின் தமிழ் வடிவம் இது. இந்த நூலுக்கு சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா தேவி அவர்கள் முன்னுரை எழுதி உள்ளார்கள் )
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
