மனத்திருடர்கள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 3,430
‘பணம் உள்ள வீட்டை பூட்டி வைக்கும் நாம், நம் மனம் உள்ள வீட்டை பூட்டி வைக்க மறந்து விடுகிறோம். பணத்திருடர்களை விட மனத்திருடர்கள் அபாயமானவர்கள்...!’ எனும் சத்தியம் மிக்க, தான் படித்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்த தத்துவ வரிகள் ராகவனை மிகவும் சிந்திக்க வைத்தது.
வயிற்றுப்பசிக்கு பிச்சை கேட்பவர்களை ‘சீ தூரப்போ….’ என மிரட்டி விடுகிறோம். கதவை உடைத்து வறுமையைப்போக்க நம் வீட்டில் உள்ள பணத்தைத்திருடுகிறவன் கையில் கிடைத்தால் அடித்து, உதைத்து காவலரிடம் பிடித்துக்கொடுத்து தண்டனை கூட வாங்கிக்கொடுத்து விடுகிறோம். ஆனால் நம்முடன் நட்பாக பழகி கைமாற்றலாகப் பணம் கேட்பவர்களுக்கு யோசிக்காமல் நம் சேமிப்பைக்கொடுத்து விடுகிறோம். இப்படி பல பேருடன் நட்பாகப்பழகி அவர்களுடைய மனங்களைக்கொள்ளையடித்து பின் அவர்களது சேமிப்புகளை அவர்களாகவே கொடுக்கும்படி பெற்றுக்கொண்டு, தங்களது தேவைகளைப்பூர்த்தி செய்து கொண்டு, நட்பையே முறித்துக்கொண்டு பெற்றதை திரும்பக்கொடுக்காமல் இருப்பவர்களும் மனத்திருடர்களின் வகையினர் தான் என்பதாகப்புரிந்து கொண்டான்.

‘இன்னும் சிலர் சம வயதுள்ள எதிர்பாலினத்தினரை வசப்படுத்தி, அவர்கள் விருப்பம்போல் நடந்து, அவர்களது மனதில் இடம்பிடித்து, பின் தங்களது விருப்பம்போல் அவர்களை நடக்கச்செய்து, அதாவது அவர்களை மொத்தமாகத்திருடுவதும் மனத்திருட்டு வகைதான். இந்தத்திருடர்களோடு ஒப்பிடும் போது பணம், பொருள் திருடுகிறவர்கள் மேலானவர்கள்’ என நினைத்தான்.
‘தத்துவங்களும், கதைகளும், நாவலும் நமக்கு வழிகாட்டக்கூடியவை. அதை எழுதியவர்கள் தெய்வப்பிறப்புகள். பல வருடங்கள் வாழ்ந்து கற்க வேண்டிய வாழ்க்கைப்பாடத்தை ஒரு சில நிமிடங்களில் கற்றுக்கொடுத்து விடுகின்றனரே… சில வரிகளில் சிந்திக்க வைத்து விடுகின்றனரே….!’ என எழுத்தாளர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லிக்கொண்டான்.
சில வருடங்களுக்கு முன் தனது பக்கத்து வீட்டிற்கு வாடகைக்கு குடி வந்த ஒரு நடுத்தர வயது பெண் தனது மனைவி ராகவியுடன் பழக்கம் ஏற்படுத்தி, சாம்பார், சட்னி, காபி பொடி என பறிமாறி, காலையில் நடைபயணம் மேற்கொண்டு, தன்னை பரிசுத்தமாகக்காட்டி, நம்பிக்கையேற்படுத்தி, முன்பு தாங்கள் வசதியாக வாழ்ந்ததாகவும், தற்போது தொழில் நஷ்டம் வந்ததாகவும், உறவினர் வீட்டு திருமணத்துக்கு அணிந்து செல்ல ஒரு நாளைக்கு நகையை கைமாற்றாக கேட்டதும் எதார்த்தமாக மனைவி கொடுத்திட, பத்து பவுன் நகையுடன் அப்பெண் குடியிருந்த வீட்டிலிருந்த தனது சில பொருட்களை இரவு நேரத்தில் எடுத்துக்கொண்டு வீட்டைக்காலி செய்து வேறு ஊருக்குச்சென்று விட, பின்னர் மனைவி அழுதபடி இவ்விசயத்தைச் சொல்லக் கேட்டு தானும் வருந்தியதும் இதே மனத்திருட்டு நிலையுள்ளவர்கள் செயலென தற்போது புரிந்தது ராகவனுக்கு.
தனது சகோதரிக்கு தாங்கள் கொடுத்தது போக பல கோடிகள் பெறுமானம் கொண்ட சொத்துக்களுக்கு அவளது ஒரே பெண் வாரிசு என்பதை கல்லூரியில் உடன் படிக்கும் ஒருவன் தெரிந்து கொண்டு அவளுக்கு வேலைக்காரன் போல சேவை செய்து, தேவைக்கு உதவி செய்து அவளுடைய மனதில் இடம்பிடித்து அவளை பெற்றோருக்குத் தெரியாமல் மணந்து கொண்டதும் மனத்திருடர்கள் குணம் தான் என தன் மனைவியிடம் கூறி, இனிமேல் இப்படிப்பட்டவர்களிடம் ஊரிலும், உறவிலும் நம்மை ஏமாற்ற வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென புரிய வைத்தான்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
