மந்திராலோசனை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 6,510 
 
 

மந்திராலோசனை மண்டபத்தில் நெற்றியில் விரல் வைத்து தலை குனிந்து தனித்து அமர்ந்திருந்த எமதர்மனைப் பார்த்த சித்ரகுப்தனுக்குள் சின்ன திடுக், அதிர்ச்சி.

”மன்னா !” அழைத்தான்.

”என்ன ? ” நிமிர்ந்தார்.

”தங்கள் மனைவி, மக்கள், அந்தப்புரத்தில் ஏதாவது சிக்கல், பிரச்சனையா ? ”

”இல்லை.! ஏன் ? ”

”தாங்கள்…நான் வந்தது கூட கவனியாமல் நெற்றியில் கைவைத்தப்படி முகத்தில் வாட்டம், தீவிர சிந்தனையிலிருக்கிறீர்களே. அதனால் கேட்டேன் ?! ”

”மனதில் குழப்பம்!!”

”நான் அறியலாமா ? ”

”தாராளமாக. அதற்காகத்தான் அழைத்தேன். பூலோகத்தில் மகேந்திரன் என்கிற மானுடனுக்கு இன்றுடன் ஆயுசு முடிகிறது.”

”அதனாலென்ன ? ”

”அவன் மீது எவ்வாறு பாசக்கயிறு பாய்ச்சுவது என்பதுதான் என் தலையாயப் பிரச்சனை, யோசனை ? ”

”புரியவில்லை மன்னா.?!”

”நாம் மனித ஆயுசைப் பறிப்பவர்களென்றாலும்… பின்னால் நம்;மீது எந்தவித குற்றம் குறை வந்துவிடக்கூடாது என்பதற்காக நீதி நேர்மையுடன் கடமையைச் செய்பவர்கள்.!”

”ஆம் மன்னா! நூற்றுக்கு நூறு உண்மை. ”

”அது இவன் விசயத்தில் சிக்கல்.”

”சொல்லுங்கள் மன்னா.”

”மகேந்திரன் வயசானவன் கிடையாது. இள வயசு, இளைஞன். எந்தவித கெட்டப்பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகாதவன். ஆகையால் நோய், நொடி கிடையாது. உடல் ஆரோக்கியம். இப்படி இருக்கையில் இவன் மீது எப்படி பாசக்கயிற்றை வீசி உயிரைப் பறிப்பது ? ”

”நம் வழக்கப்படி…. காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம்… பஞ்சபூதங்களில் ஒன்றின் உதவியை நாடுவதுதானே ? ”

”அந்தவழிகளையும் அடியேன் சிந்தித்தாகிவிட்டது. வாயுவை ஏவி… தலையில் மரம், மட்டைகளை விழச் செய்து உயிரைப் பறிக்கலாமென்றால் தற்போது கோடைக்காலம் புயல், காற்று உருவாக்குவதற்கு வழியே இல்லை. மழை, வெள்ளத்தால் மனிதனை முடிக்கலாமென்றால்… மகேந்திரனுக்கு நன்றாக நீச்சல் தெரியும். வென்று, உயிர் பிழைத்து விடுவான். இவன் ஒரு உயிருக்காக நிலத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தி அதிக உயிர்பலிகள் செய்வது. பாவம். நம் கொள்கைக்குப் புறம்பு. நெருப்பினால் ஆளை முடிக்கலாமென்றால்… கான்கிரீட் கூரையின் கீழ் வாழ்கிறான் அதுவும் முடியாது. ஆகாய மார்க்கமாக இவன் கதையை முடிக்கலாமென்றாலும்… இவன் விமானத்தில் பயணிக்க வாய்ப்பே இல்லை. இப்படி எல்லா வழிகளும் அடைபட… இவன் உயிரை இன்று எவ்வாறு பறிப்பது ? இதுதான் என் சிக்கல், பிரச்சனை.!”

”கவலையை விடுங்கள் மன்னா. இருக்கவே இருக்கிறது….மானுடனுக்கு சாலை விபத்து. காரியத்தைக் கச்சிதமாக முடிக்கலாம்.”

”அதற்கும் வழி இல்லை சித்ரகுப்தா. இவன் சாலை விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்கிறான். வாகனத்தைச் சரியான வேகத்தில் ஓட்டிச் செல்கிறான்.”

இதைக் கேட்டதும்… சித்ரகுப்தன் முகம் விழுந்தது.

”இப்போது தெரிகிறதா என் சங்கடம்.! இன்றைக்கு இவன் உயிரைப் பறிக்க வழியைச் சொல் ? ”

சிறிது நேரம் சிந்தனை வயப்பட்ட சித்ரகுப்தன், ”கொஞ்சம் பொறுங்கள் மன்னா. நான் பூலோகம் சென்று அவன் நிலைமையை ஆராய்ந்து வருகிறேன்.” சொன்னான்.

”அப்படியேச் செய். சீக்கிரம் வா.”

”நன்றி மன்னா! விரைவில் வருகிறேன்.” வணங்கி விடைபெற்றான்.

அரை மணி நேரத்தில் திரும்பிய சித்ரகுப்தன் முகத்தில் மலர்ச்சி.

”மன்னா ! கவலையை விடுங்கள். ஆள் கதை முடிந்து விட்டது.!! ” வணங்கினான்.

”எப்படி ? ” அவனை ஏறிட்டார்.

”நாட்டில் இன்றைக்கு நிலவும் கள்ளக்காதல் கழிசடையின் தாக்கம்… மகேந்திரன் மனைவி தன் கள்ளக்காதலன், கூலிப்படைகளுடன் கணவன் உயிரை எடுக்க மந்திராலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாள். தாலிக்கயிறு பாசக்கயிறாக மாறிவிட்டது. ஆள் கண்டிப்பாய்க் காலி.!” சொன்னான்.

கேட்ட எமதர்மன் முகம் இப்போது பளிச்சென்று மலர்ந்தது.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *