மந்திரக்கோல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 5,875 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்வி, பேருந்தை விட்டிறங்கி தன் வீடு இருக்கும் சந்தினுள் நுழைந்ததுமே அவளைப் பரபரப்பும் பதட்டமும் பற்றிக் கொண்டன.

வீட்டின் சிறு இரும்பு ‘கேட்’டைத் தள்ளினாள். – ‘குப்’பென்ற காற்று விசிறலில் ‘பாராசூட்’டாய் நைலக்ஸ் சேலை ஒன்று ஒயிலாய்ப் பறந்து வந்து அவளது தலையில் கவிழ்ந்தது.

‘சனியன் – சேலையைக் காயப்போட்டா, கூடவே ஒரு க்ளிப் செருகணுங்கற அறிவே கிடையாது…’

மகளை முணங்கலாய்த் திட்டியபடி குரல் கொடுத்தாள்.

“ஏய் வனஜா…”

“அம்மா..”

12 வயது மகளின் தலை, நயக்கமாய் நீண்டது.

“கதவையும் தாழ் போடலியா கழுத…. அத்தனை அஜாக்ரதை எவனோ நுழைஞ்சு மென்னியத் திருகினான்னா தெரியும்…”

“கேட் சத்தம் கேட்கவுந்தாம்மா திறந்தேன்.”

“நகரு – வாசலை மறிச்சு நின்னு பேசாத!”

“பால் காச்சிட்டேன். காஃபி கலக்கவா?”

“பாக்கெட்டைத்தாறுமாறா வெட்டி பாதிப்பாலை மேடையில் மெழுகியிருப்பே – கூறு கெட்டவ. முதல்ல காஞ்ச துணிகளை எடுத்துத் தொலை – அங்கே பறந்ததுபோக எத்தனை மீதமிருக்கோ?”

மகள் தப்பினால் போதும் என்பதாய்த் தாவி படியேறினாள்.

காஃபி கலந்து பிளாஸ்க்கில் ஊற்றி, தனக்கு ஒரு கோப்பையுடன் அமர்ந்தவளின் முதுகு ‘விண்’ணெனத் தெறித்தது.

பகல் முழுதும் சிறு சேலை கடையில் புடவைகளை விரித்தும் மடித்தும் வைத்து, கணக்கு சரிபார்த்து. வீடு திரும்பினால் ஒய்வுண்டா? இங்கும் வேலை. ஆயிரம் கை பூதமாய் அவளை இங்கும் அங்குமாய்க் கிள்ளிப் பிடுங்கும்.

பெரும்பாலான இரவுகள் படுக்கையில் துணைக்கிருப்பது தலைவலிதான்!

மகளை, இளைய மகனை அதட்டியபடி சமைந்து, ஈழுலி, படுக்கை உதறி அதில் விழுகையில் மறுநாள் விடியவே வேண்டாமென்று மனசு ஏங்கும்.

இரண்டு மாதம் முன்புவரை செல்வியும் வீட்டோடு இருந்து மளிகை, மார்க்கெட், வீட்டு வேலை. சமையல், பட்ஜெட் என்று இருந்தவள் தான். விலைவாசி ஏற்றம், வளரும் பிள்ளைகளின் தேவை என்று தேவைகளுக்கு ஈடுதர வேலைக்குப் போகும் நிர்ப்பந்தம் –

‘தட்சணா பொடீக்’ என்ற பெயரில் வடக்கத்தியப் பெண் தொடங்கியிருந்த நாகரீகத் துணிக்கடையில் வேலை, வரவேற்பு, பில் போடுவது, சுத்தம், பராமரிப்பு – அத்தனைக்கும் சேர்த்து சம்பளமாய் ரூபாய் ஆயிரத்து முந்நூறு.

முதல் மாதம் கூடவே இருந்து வேலை பழக்கித் தந்த முதலாளியம்மாளை கடந்த ஒருவாரமாய்க் காணவில்லை. பத்துக்கு பதினைந்து அடிஅளவே உள்ள கடை என்பதால் செல்வி ஓரளவு நின்று சமாளித்தாள். மாலை ஐந்திற்குப் பொறுப்பெடுக்க வேறு ஒரு இளைஞன் வருவான். காலை ஒன்பதரைக்குக் கடைத் திறப்பது இவள்தான்.

சிரமங்கள் இருந்தாலும் மாதம் பிறக்கையில் மொடமொடப்பான நோட்டுக்கள் கையை நிறைக்க, தெம்பு ஊறியது. ரேஷன், வாடகை, பள்ளி செலவுகளுக்கு தடுமாறாமல் எண்ணி நீட்ட முடிந்த நிம்மதி.

ஆனால், உடம்பு ஒத்துழைக்கவில்லை. அதன் அயர்ச்சியில் பிள்ளைகளிடம் ஆத்திரப்பட்டாள்.. அதில் வீட்டின் நிம்மதி விரிசல்படுகிறதோ?

காஃபி கோப்பையை ஜன்னல் விளிம்பில் வைத்துவிட்டு கண்களை மூடினாள் – அசதி கண்களை இழுத்துச் செருகியது.

‘இப்ப தலைசாய்ஞ்சா, காலைல தலை போயிடும்’ முணுமுணுப்புடன் இரவு சமையலுக்காய் எழுந்தாள்.

இடையிடையே கூச்சலிட்டாள். ‘துணியை இன்னுமா மடிச்சு முடியலை? நாளைக்காவது அதை இஸ்திரி போடுடீ’ என்று,

‘டிரம்மில் தண்ணி நிரப்பியாச்சா?’ – மிளகாயை அரிந்தபடி டிரம்முள் எட்டிப் பார்த்தவளுக்குள் எரிச்சல் பாய்ந்தது.

“சனி… சனியன்… பாதிகூட நிரப்பாம… எங்கே அவ?” கடித்த பற்களுக்கிடையே மகளைத் தேடினாள்.

“”அவ்… அவ்வளவுதாம்மா வந்ததே…” பயந்து குழறினாள் சிறுமி.

வீடு நுழைந்து சூழலைக் கண்ட கணவன்

“ஏன் செல்லி, ஏன் சதா குட்டியைக் காயறே? சொல்றதை நயமாச் சொல்லேன்” என்றான் சலிப்பாய்.

“என் கஷ்டம் எனக்கு – இதிலென்ன நயம்?”

“குழந்தைதானே? அன்பாச் சொன்னா அவளும் திகைக்காம யோசிச்சுச் செய்வா…”

சொன்னவன் தானும் பரபரப்பாய் உதவ – அன்றைய பாடு முடிந்தது.

***

மறுநாள் காலை எழும்போது தலைவலி மிச்சமிருந்தது. “ஒழுங்கா செயலா எழுந்தாலே ஒரு நாள் ஓட்டறதுக்குள்ள பிஞ்சிடும் – இன்னிக்குச் செத்தேன்” அரற்றலுடன் குளிர் நீரை வாரி முகத்தில் அடித்துக் கழுவினாள்.

“ஒருநாள் லீவு வேணா போடேன்”

“அந்தம்மா ஊரிலே இல்லீங்க. நானும் சங்கர் பையனுமாத்தான் கடை நடத்தணும். அவன் கல்லூரியிலே படிக்கிறவன். சாயங்காலம் நாலு மணி நேரந்தான் அவன் பொறுப்பு. காலையில் நான் போகலைன்னா கடை மூடித்தான் கிடக்கணும். ”

“பெரிய சேலைக்கடல்-200சேலைகளை வைச்சிக்கிட்டு தினம் ரெண்டு வாடிக்கையாளருக்குப் புரட்டிப் புரட்டிக் காட்டறது…”

“ஆமா…ஆனால், உங்களை மாதிரி ஆபீஸ் காகிதத்தைப் புரட்டி அதிலேயே சரிஞ்சுக் கிடக்க முடியாதே.”

பேச்சில் கொடூரம் கனத்தது.

“நான் ஏதாச்சும் செய்யட்டுமாம்மா?”- கோழிக் குஞ்சாய்ப் பம்மிக் கேட்ட மகளை உறுத்து விழித்தாள்.

“ரெண்டுன்னா நாலாய்க் கிழிக்கிற கெட்டிக்காரி நீ. கண் முன்னாடி வராம ஒழி போ” மூச்சும் சீறியது.

“நாய், பூனைகூட சுத்தமாச் சாப்பிடுது. பன்னிப்பிறப்பு பெருக்கிப் பெருக்கி முதுகு உடையுது எனக்கு” என்று சிதறி சாப்பிட்ட மகனை அறைந்து தள்ளினாள்.

***

அனைவரையும் சாட்டையாய் சொடுக்கிவிட்டு அவதியாய் பேருந்தில் ஏறி, ஓடி கடையினுள் நுழைகையில் மணி பத்தரை. கடை வாசலில் குதிரை வாலும். இந்தியுமாய் சிறு பெண்கள் கூட்டம் – கதவு திறந்துதான் இருந்தது.

‘சங்கர் பாவம்.. கல்லூரிக்கே போகலையா?’ யோசித்தபடி படியேறினாள்.

‘குட்மார்னிங் செல்வி. ” –

மிருதுவான புன்னகையுடன் வரவேற்றது முதலாளி அம்மாதான்!

“குட்… குட்மார்னிங் மேடம். சாரி… லேட்டாயிடுச்சு.”

“பரவாயில்லை. அந்த கவிஸ் ஆர்கென்டி எடுத்து வாங்க”

பேச்சு, இனிமையும் இயல்புமாய் வந்தது. அதில் இவளது பதைப்பு சற்றே மங்கியது. வாடிக்கையாளர்களின் ரசனை அறிந்து துணி ரகங்களைப் பிரித்துப் போட்டாள்.

அவர்களும் வெறுமே உதட்டைப் பிதுக்காமல் சில சேலைகளையும் இரவு உடைகளையும் போணி செய்ய “அடிக்கடி வாங்க மேடம். அடுத்த வாரம் வேறு சில புது மாடல் உடைகள் வருது” என்று தெம்பாய்ப் புளுகினாள்.

அவர்கள் போகவும், “செல்வி! நம்ப ஷோ-கேஸ் இன்னும் சுவர்ச்சியாய் இருக்கலாம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு புது மாறுதல் செய்யுங்களேன். பார்க்கவும் கவர்ச்சி, வியாபாரமும் கூடும் இல்லையா?”

இந்தி, ஆங்கிலக் கலவையில் பேசினாள்.

“சரி மேடம்” செல்வி தலையாட்டினாள்.

‘ஏது இன்னும் திட்டு வரவில்லை? சிரித்தபடியே நக்கலாய்க் கத்தி செருகுவாளே?’ உள்ளே நமநமத்தது.

“தவிர, நீங்கள் ஒன்பதரைக்கு வந்தாத்தான் கடையைச் சீர் செய்து நிம்மதியாய் வேலை தொடங்கமுடியும். சங்கரும் படிக்கிற பையனில்லையா? வேறு வழியில்லை.”

குரலின் மென்மை குறையவேயில்லை. விழிகளின் சிநேகம் விலகவேயில்லை.

“நிச்சயமாய் செய்றேன் மேடம். மன்னிக்கணும். இன்னைக்கு எங்கள் வீட்டிலே…”.

“பரவாயில்லை. எனக்குப் புரிகிறது. என் மாமனாருக்கு மாரடைப்பு. நீங்கள் இருக்கிற தைரியத்திலே ‘டக்’குன்னு கிளம்பிட்டேன். இப்போ அவருக்குப் பரவாயில்லை. காலையிலேதான் மும்பையில் இருந்து வந்தேன். அலுப்புதான். இப்போ வீடு போயிட்டு, மதியம் வரேன். சரியா?”

அவள் தோளைத் தட்டியபடி மேடம் படி இறங்கினாள்.

“கணக்கெல்லாம் தெளிவா, விரிவாய் எழுதியிருக்கீங்க செல்வி. குழப்பமே வராது” – புன்னகையுடன் வந்தது பாராட்டு.

செல்விக்கு ‘நயம்’ புரிந்தது.

வந்தவள் கடுமையாய்க் கண்டித்திருந்தால் வாடி சுருண்டிருக்கும் இவள் முகம். நொந்து வெந்திருக்கும் மனம். நோவில் தானே உப்பைதி அரவி நாள் முழுக்க நீவி குமைந்திருக்கும். பதறி, வேலையைக் கூட உதறியிருக்கக்கூடும்.

இதமான பேச்சு, உற்சாகத்தை மீட்டுத் தரும் மந்திரக்கோலாய், மேலே உந்தி ஏற்றும் நெம்புகோலாய் உதவக்கூடும் என்பது விளங்கியது.

சுறுசுறுப்பாய்க் கடையை ஒழுங்குபடுத்தினாள். ‘ஷோ-கேஸை’ எப்படி மாற்றி அடுக்கலாம் என்ற யோசனையுடன் மஞ்சள் துணி கொண்டு கண்ணாடிகளைப் பளபள என்று துடைத்துத் தேய்த்தபோது மனதிலும் தெளிவு.

– ராணி, பிப்ரவரி 16, 1997.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *