மண்ணைத்தின்று…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2026
பார்வையிட்டோர்: 122 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ஜன்னலோரமாக அமர்ந்திருக்கின்றான். அந் திப் பொழுது நீட்டிவிடும் அழகான நிழல், ஓடும் ரயிலில் விழுந்து எழுந்து மடிகின்றது. உயரமான கட்டிடங்கள், பாதையோரத்து பாலத்தின் இரும்புக் கம்பிப் பின்னல்கள், முண்டும் முடிச்சுமான பாறைகள், ஆகியவற்றின் நிழல்கள் அந்தந்த உருவங்களுடன் அவன் மேல் பட்டுத் தெறிக்கை யில் அவன் சற்றே தனது சாய்மானத்தை நிமிர்த்தி உள் வாங்கி மீண்டும் சாய்ந்து கொள்ளுகின்றான். அவைகளைக் கடக்கும் போது, புகைவண்டியின் சீரான ஒலியில் ஏற்படும் மாற்றமும், அறைந்து விடுவது போல் ஓடி வந்து அவன் மேல் விழுந்து எழுந்து ஓடும் நிழலின் துடிப்பும் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தி மறைகிறது. 

தூங்கிக் கொண்டிருக்கின்றார் எதிர் ஆசனக்காரர். நிழல் மட்டுமல்ல, அசலே வந்து மோதினாலும் அவர் பயப் படுவதாகக் காணோம். 

விழித்துக் கொண்டிருக்கும் மனிதன் பயந்தாங்கொள்ளி தான்! 

முன் சீட்டுக்காரரின் மடியில் இருந்த பேப்பர், பிடி நழுவி அவன் காலின்மேல் விழுந்தது. அதை எடுத்து அவர் மடியில் போட்டான். மடியில் விழுந்ததை கை பிடித்துக் கொண்டது. கண்கள் மட்டும் மூடியே இருக்கின்றன. 

தூக்கம்! 

மனதிற்குள் சிரித்துக் கொண்டான். 

‘மண்ணைத் தின்று…..’ என்பது மட்டுமே அவன் கண்ணில் பட்டது. மற்றவைகள் அவருடைய கை மறைவி லும் மடிப்பின் மறுபக்கமும் மறைந்திருக்கின்றன. 

பேப்பராபீசில் வேலை செய்யும் அவனுக்கு மற்றவரிகள் கண்ணில் படாவிட்டாலும் மனதில் படுகின்றன. 

‘மண்ணைத் தின்று மடிகிறார்கள் மலைநாட்டு மக்கள்’ 

ஒரு தொழிற் சங்கத் தலைவரின் கோபாவேசமான அறிக்கை அது. மிகவும் சக்திவாய்ந்த அந்தத் தலைவரின் படம் — கையைத் தூக்கி ஆட்டியபடி ஆக்ரோஷமாக நிற்கும் அந்த முகம், மடிப்பில் அகப்பட்டு பரிதாபமாகத் தோன்றுகின்றது. 

முகத்தின் மறுபாதி, மடிப்பின் கீழ், தூங்கும் அந்த மனிதரின் மடிக்குள் தூங்குகிறது, 

‘இன்னும் கொஞ்சம் அஜஸ்ட் பண்ணி, மடிப்புக்குள் மாட்டாமல் படத்தைப் போட்டிருக்கலாம். அல்லது வேறு சின்னப் படமாகப் பார்த்துப் போட்டிருக்கலாம்’ அவன் நினைத்துக் கொண்டான். 

அவர்கள் அவசரத்தில் தேடிய போது இந்த ‘புளொக்’ தான் கிடைத்திருக்கும் அதற்கென்ன செய்வது! 

அறிக்கையும் கோபாவேசமானது! அதற்கேற்றாற்போல் கோபாவேசமான ஒரு பட த்தையும் போட்டால் தான் அறிக்கை விட்டவருக்கும் மதிப்பு பத்திரிகைக்கும் சுகம்! 

தோட்டத்து மக்கள் பட்டினியால் சாகின்றார்களாம்! அதைத்தான் ‘மண்ணைத்தின்று மடிகின்றார்கள் மலை நாட்டு மக்கள்’ என்று அடுக்கு மொழியில் அழகாகக் கூறியிருக் கின்றார் தலைவர் அறிக்கையல்லவா தலைப்பு அழகாகவும் அமைய வேண்டும். 

அவனும் தோட்டத்துக்குத்தான் போகின்றான். 

அங்குள்ள நிலைமைகளை அறிந்து கொண்டு வந்து அறிக்கை விட அல்ல. அவன் என்ன பெரிய சங்கத்துக்காரனா அதை எல்லாம் செய்து பெயரும் புகழும், சேர்க்க. 

கேவலம் அவன் ஒரு சாதாரண கிளார்க். கீழேயுமில் லாமல், மேலேயும் இல்லாமல் இடையில் கிடந்து அடிபடும் பரிதாபத்திற்குரிய கூட்டத்தின் ஒரு அங்கம். எப்போது லீவு கிடைக்கும் என்று காத்துக் கிடந்து ஓடிப்போய் அம்மாவை, அப்பாவை, தம்பி, தங்கைகளை, அமைதியான அந்த மண்ணை, அதன் சூழல்களை, பார்த்து மகிழத் துடிப்பவன். 

பஸ்ஸின், கோச்சின், யந்திரங்களின், ராட்சச ஓசை யில் அல்லாமல், பறவைகளின் இனிய ஒலியுடன் மரங்க ளின் தலைகளில் தழுவியோடும் அமைதியான காலைப் பொழுதைக் காணும் அனுபவே அவனுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. 

இரவோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விட்டால், மறுநாள் பொழுது புலர்வது தோட்டத்தில் தான்! 

பனி முத்துக் கோர்க்கும் தேயிலையின் தலைகளில், பச்சை ரத்தம் பாய்ச்சிக் கொண்டு, மலை இடுக்கு வழியே தலை நீட்டும் சூரியனைகாத்துக் கிடந்து காண்பதே புதுமை. 

நாளை விடியப் போவதும் பொழுது தான்! 

இந்த மக்களின் வாழ்வு! 

நாளையே இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் விடியலாம். 

திடீரென்று குளிர் காற்று வீசுகிறது. குளிர்காற்றென் றால் கொழும்பில் வீசுமே ஒரு சில இரவுகளில், அதல்ல! 

தோலில் படுவது போலிருந்தாலும் எலும்பின் குருத் துக்களை சுண்டிவிடும் பயங்கரமான குளிர். தட தடவென்று ஜன்னல்கள் மூடப்படுகின்றன. 

அவன் அவனுடைய ஜன்னலை மூடவில்லை. குபு குபு வென்று நுழையும் குளிர் காற்று மிகவும் அசௌகர்யத் தைத்தான் ஊட்டுகிறது என்றாலும் அந்த அசௌகர்யத்தை ஏற்றுக் கொண்டு உடல் சிலிர்ப்பதில் ஒரு ற்சாகம் தென்படுகிறது. 

தூங்கிக் கிடந்தவரின் கண்கள் லேசாகத் திறந்தாலும், அரை திறந்த இடுக்கில் தெறித்த அந்தப் பார்வையின் கூர்மை ‘ஜன்னலை மூடப் போகின்றாயா இல்லையா’ என்கி றது. உள்ளேயும் நாலைந்து ‘சிமிலர்’ பார்வைகள். 

பெரும் பான்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டுமல்லவா! 

ஜன்னல் மூடப்படுகின்றது. 

மலைநாடு வந்தவுடன், இயற்கையிலேயே ஒருதிடீர் மாற்றம் தெரிந்து விடுகின்றது. 

சுட்டெறிக்கும் சூரியனிலே மாற்றம்! 

வீசும் காற்றிலே வித்தியாசம்! 

ஓடும் தண்ணீரிலே ஒரு வேற்றுமை! 

இயற்கையை விட்டு அ ரசியலுக்கு வந்தால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்கள் மாற்றம். 

உழைப்பவர்களுக்குத் தான் முதல் இடம் என்பார்கள். இங்கே உழைப்பவர்களுக்குத் தான் முதல் உதை! 

தொழிலாளர்கள் தான் இந்த நாட்டின் மூச்சு என்பார்கள். இங்கே தொழிலாளர்கள் மூச்சே விடக் கூடாது! 

அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் சேலையை நன்றாக இழுத்து கழுத்தை மூடிக் கொள்ளுகின்றாள். சேலையில் மலர்ந்திருந்த சிவப்பு நிறப் பூக்கள் அவனைப் பார்த்துச் சிரிக்கின்றன. 

‘அழகாய் இருக்கின்றன’ என்று மனதுக்குள்ளாக சான்றிதழ் வழங்கியபடி கண்ணாடிக்குள்ளாக வெளியே ஓடும் காட்சிகளை ரசிக்கின்றான். 

அவனும் ஒரு பூவைப் பார்த்துச் சிரித்திருக்கின்றான். அது முன்பு எப்போதோ! 

அப்பாவின் நல்ல தனத்தை மனதில் கொண்டு அவரு டைய மகன் என்பதற்காக இவனை ஆபீசில் வேலை பழக துரை அனுமதித்திருந்தாரே அப்போது. 

தோட்டத்து ஆபீசில் வேலை பழக துரை இடம் கொடுத்ததே பெரிய அதிசயம். தோட்டத்துக் கிளாக்கர் மார் ஏழு மணிக்கு ஆபீசில் இருக்க வேண்டும். பகல் சாப் பாட்டுக்கு ஒரு மணி நேரம் போக, அந்திக்கு ஏழு மணி போல் ஆபீசை விட்டு இறங்கி விடலாம். 

எவர் எவரையோ பிடித்து, துரை பெரிய மனதுபண்ணி போனால் போகிறதென்று, சம்பளம் இல்லாமல் வேலை பழகப் போட்டிருக்கிறார். 

லயத்துக் கரைகளில் புகை கிளம்பும் முன்பதாகவே இவன் கிளம்பி விடுவான். இவனுக்கு முன்பாக யாராவது ஒரு கிளாக்கர் ஆபீசுக்கு வந்து விட்டார் என்றால் ‘தம்பி நீ சரிவரமாட்டாய்’ என்று சொல்லாமல் விடமாட்டார். 

அவருக்கு பெரிய கிளார்க் சொல்லுவதை அவரும் இன்னொரு ருத்தருக்குச் சொல்லியாக வேண்டாமா! அதில்தானே இருக் கிறது இந்த கிளாக்கர் தனத்தின் திருப்தியும், மகிழ்வும். 

இவைகளுக்குப் பயந்து கொண்டு இவன்தான் ஆபீசில் முதல் ஆளாய் நிற்பது வழக்கம். 

அப்படிக் கிளம்பியவன், அவர்கள் வீட்டுக்கு மேலுள்ள லயத்தைக் கடந்து ஆபீஸ் போகும் பாதையில் நடக்கை யில் அவள் முன்னால் போய்க் கொண்டிருந்தாள். 

தலைத் துணியும், கூடையும் மறைத்தது போக எஞ்சித் தெரிந்த பின்ழைகு எடுப்பாகவுமே இருந்தது. இடுப்பில் ஏறவேண்டிய படங்கும் கயிறும் கூடைக்குள் கிடப்பதால் எட்டி அடி வைக்க அவள் கால் விலகும் போது ஏற்படு கின்ற அசைவு அவனுக்கு விருந்தாக அமைந்தது. 

அவள் யார், பெயரென்ன, யாருடைய பெண் என்ப தெல்லாம் அவனுக்குத் தெரியாதல்ல. 

முன்னால் நடந்து அவனுக்கு அழகு காட்டிக் கொண்டி ருந்தவள் பெறட்டுக் களத்துக்குச் செல்லும் பாதையில் பிரிந்து நடந்தாள். 

அடுத்த நாள் லயத்தைத் தாண்டும் போதே நேற்று கண்ட அழகின் நினைவு எழுந்தது. நினைவு பொறி விடும் முன்பதாக அவள் முன்னே நடந்து கொண்டிருந்தாள். அதே சேலை. அதே கூடை. அதே அசைவு. அதே அழகு! 

அடுத்த நாள், அடுத்த நாள், அடுத்த நாள் என்று எத்தனை நாள் தான் பின்னாலேயே போவது! பின்னழகை மட்டுமே காண்பது! 

ஒரு நாள் சற்று வேகமாக நடந்து, பெறட்டுக் களத் துப் பாதையில் அவள் பிரியுமுன் அவளை முந்திக் கொண்டு திரும்பிப் பார்த்தான். சிரித்தான். 

‘அய்யாமகன்’ எனும் அடக்கம் அவன் சிரிப்பில் தெரிந்தது. 

அப்படியே நாலைந்து நாள் போன பின்பு ஒரு நாள் ‘நேத்தென்ன இருபத்தேழு றத்தல் மட்டும் தானா’ என்று கேட்டான். 

‘நீ மலையில் கொழுந்தெடுத்தாலும், பெறட்டுக் களத் தில் நிறுத்தாலும், ஆபீசில் அய்யாகிட்டே எல்லாம் வந்து தான் ஆகணும்’ என்னும் பெருமையும், ‘உன்னைப் பற்றி நான் தனியான அக்கறை எடுத்துக் கவனிக்கின்றேன்’ என்பதை தெளிவு படுத்தும் ஆர்வமும் அந்தக் குரலில் தெரிந்தன. 

அவள் திடுக்கிட்டாலும் சிரித்துக் கொண்டே கூறினாள் ‘நேத்து எனக்கு நல்ல சொகம் இல்லே அதுதான்’ 

‘சொகமில்லியா! ஏன்? என்ன செய்யிது……?’ என்று துடித்துப் போய்க் கேட்டான் அவன். 

‘ஒன்றுமில்லை சும்மாதான்’ என்று நடந்து விட்டாள் அவள். 

‘வேலை பழகி முடித்து, கிளாக்கராகி, படிப்படியாக முன்னேறி நானும் ஒருநாள் இவன் போலவே பெரிய கிளார்க்காகி, கார் பங்களாவோடே இருப்பேன்’ என்று கோட்டை கட்டும் வயது அவனுடையது. 

எல்லோருமே கிளாக்கராகி, பெரிய கிளாக்காகி கார் பங்களாவுடன் இருந்து விட்டால் இந்த இரண்டுங் கெட் டான் கிளாக்கர் கூட்டம் என்னாவது! அதன் பாரம்பரிய அசட்டுத்தனம் என்னாவது! 

அதை எல்லாம் தூக்கி நிறுக்கும் வயதல்ல அவனுடையது. 

அவளுக்கு சம்பளத்தன்றைக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கூறுவான். அரிசி மாவு கழிவுகளைக் கூறுவான் அவளும் தனக்குத் தெரியாத ஆனால் தெரிய வேண்டிய ஆபீஸ் விவகாரங்களை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாள். 

இருவரும் ஒளிவு மறைவாக மனம்விட்டுப் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஒரு தடவை ‘உன்னை நான் காதலிக்கின்றேன்’ என்று கூறிவிட்டு அவன் பட்ட பாடு. 

‘நீங்களா! என்னையா!’ என்றவள் சிரித்தாளே ஒரு சிரிப்பு. அதில் அவளுடைய வேதனை, கேலி இரண்டும் பின்னிக் கிடந்தது. 

‘நீங்க படிச்சவுக. ஆபீசுல வேலை பாக்குறவுக. உங்களுக்கு நான் புத்தி சொல்றதா கோவிச்சுக்கிறக் கூடாது நான் கூலிக்காரி. எங்கப்பன் வாசல் கூட்டியாயிருந்தாலும் மானம் மருவாதியில் உட்டுக் குடுக்காது. எங்கயாச்சும் தோட்டக் காட்டுல ஒரு கண்டாக்கோ, கணக்குப் புள்ளையோ, கிளாக்கரோ, மாஸ்டரோ, சுப்பர்வைசரோ, டீமேக்கரோ ஒரு கூலிக் காரியை கல்யாணம் பண்ணிக் கிட்டு வாழ்றதா கேள்விப்பட்டிருக்கீங்களா? அப்புடியாம் இப்புடியாம், அவ ஒரு மாதிரி இருக்காளாம், அய்யாவை தோட்டம் விட்டுப் போகச் சொல்லியாச்சாம், வேறு யாருக்கோ அவளை சேத்து வைச்சுட்டாங்களாம். அப்படீங் குற கதைகளைன்னா நெறையக் கேட்டிருப்பீங்க…… நாமளும் அப்படி ஆகணுமாங்க……’ அவள் அழுது விட்டாள். அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. 

‘நானும் பெரிய கிளார்க்கராகி கார் பங்களாவோட…’ என்று மனக் கோட்டை கட்டினானே இதுவும் அப்படித் தான். பெரிய கிளார்க் ஆவது இருக்கட்டும். வெறும் கிளார்க் வேலையாவது கிடைத்ததா! வேலை பழகி முடிந்த தும் சர்டிபிக்கேட்டை கையில் கொடுத்து ‘வேலை இருந் தால் சொல்லு சிபார்சு செய்வேன்’ என்று கூறி அனுப்பி விட் டார் துரை. வேலை எத்தனையோ இருந்தது. ஆனால் அவ னுக்குக் கிடைகவில்லை. 

பக்கத்துச் சீலையைப் பார்த்தான். அவள் ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கிப் போய் விட்டிருக்க வேண்டும். 

பத்திரிகை ஆபீஸில் சேர்ந்த பிறகு பல தடவை தோட்டத்துக்குப் போயிருக்கின்றான். அவளையும் பார்த்தி ருக்கின்றான். 

இடுப்பில் ஒரு பிள்ளையும் உதட்டில் அதே சிரிப்புமாக ‘அய்யா எப்படி இருக்கீங்க’ என்று கேட்பாள். அவளுடைய உயர்ந்த தன்மை அவனை மௌனியாக்கி விடும். 

நரம் பட்டணங்களில் என்றால் வயதின் கோளாறும், பின் துடிப்பும், ரத்தத்தின் வேகமும் ஒன்றாகி அந்த வயதில் யாரை வேண்டுமானாலும் காதலிக்கத் தூண்டும். பிறகு யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழும் மனப் பக்குவம் இங்குள்ள ஆண், பெண் இருவருக்கும் உண்டு. 

ஆனால் இந்தக் கூலிக் காரியோ காதல் என்பது கேவலம் வெறும் வாலிப விளையாட்டல்ல என்பதை எப்ப டிக் காட்டி விட்டாள்! பெண்மைக்கு இலக்கணம் கற்பித் காட்டி விட்டாளே அவள். 

ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது நன்றாக இருட்டி விட்டது, காய் கறிச் சந்தை இருட்டில் கருகிப் போய்க் கிடக்கிறது. 

பழுத்த கோசா இலை, அழுகிப் போன கிழங்கு, பழ வகை இத்தியாதிகளைப் பொறுக்கித் தின்னும் கால் வளைந்த காளையைக் காணவில்லை. அது எங்கும் வெளியே போவ தில்லை, சந்தை கூடிக் கலைந்ததும் இலை தழைகளை, வயிராற உண்டு விட்டு அங்கேயே ஒரு மூலையில் படுத்து அசை போட்டுக் கொண்டிருக்குமேயொழிய மேலேறிப் போவ தில்லை. இப்போது அதைக் கூடக் காணவில்லை. 

தான் போய்ச் சேர வேண்டிய தோட்டத்தைப் பார்த் தான். மலை உச்சியில் மினுக் மினுக்கென்று நாலைந்து வெளிச்சம் தெரிகிறது. 

தோட்டத்து மனிதர்களில் பாதிப் பேரை விழுங்கி விட்டு, உண்ட களைப்புத்தீர படுத்திருக்கும் ராட்சஷக் கூட்டம் போல் கறுப்பு நிறத்தில் எழுந்து மடிந்து கிடக் கின்றன மலைகள். 

தோட்டத்துச் சிறுவர்கள் பழுத்த கோசா இலை இத்தியாதிகளை அடுக்கி அள்ளிக் கொண்டு தோட்டம் நோக்கி ஓடுகின்றனர், சந்தையில் நிற்கும் மாட்டைக் காணாததன் பொருள் இப்போது புரிகிறது. மனிதனுடன் போட்டி போட முடியாத ஜீவன் எங்கே ஓடிற்றோ! 

மாடு தின்பதை இவர்கள் சுண்டித் தின்னும் நிலை வந்து விட்டது. மாடு போல் உழைப்பவர்கள் அல்லவா! 

பயணக் களைப்புத்தீர முகத் ைத அலம்பிக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்துடன் நகைக் கடைக்குள் நுழைந் தான். நகைக் கடை முதலாளி அவனுக்கு மிகவும் வேண் டியவர். 

உள்ளே நுழைந்தவன் ‘டக்’ கென நின்றான். 

‘இந்தாங்க மொதலாளி இதை வச்சுகிட்டு என்னமாச்சும் தாங்க……’ 

‘நேத்தே தான் சொன்னனேப்பா…… அவ்வளவு தான் குடுக்கலாம்… அதோட ர சீது கிசீது ஒன்றும் பேசப் புடாது அடைவுக்கு நகை வாங்காதேன்னு சட்டம் போட் டிருக்கான். துண்டு குடுத்தேன்னா மாட்டிக்கிறுவேன். நீயாச்சேன்னு தான் அதையும் தர்றேன் இல்லேன்னா இந்த யாவாரமே நமக்கு வாணா முன்னு இருந்திடுவேன்… இந்தா நாப்பது ரூபா. சரியா நாலாவது கெழமை அதா வது பத்துக்கு முந்தி வந்து வட்டியோட பணத்தைக் குடுத் துட்டு நகையை எடுத்துக் கிட்டுப் போயிறு. பதிமூணாம் தேதி வந்தியின்ன நகை இருக்காது…… இந்தா நாப்பது… என்னப்பா அத்தனை அவசரம்……’ 

‘என்ன அவசரமுன்னா கேட்டீங்க… நாலுநாளா ஒண்ணுமில்லே… இரண்டு நாளா வெறும் மரவள்ளிக் கீரையை சுண்டித் திண்ணுட்டுத் தண்ணியைக் குடிச்சாச்சு. வேறெ சாமானும் இல்லே, எல்லாம் வச்சாச்சு அதுதான் இதைத் தூக்கிக் கிட்டு ஓடியாந்தேன். நேத்தும் இல்லேன் னுட்டீங்க சின்னப் புள்ளைங்க தேயிலைக் கொட்டையை ஒடைச்சி தின்னுட்டு வாந்தி எடுத்துத் தொலையுதுக……’ 

‘சரி சரி ஓடு… ஏதாச்சும் வாங்கிக் கொண்டு போய் குடு’

‘என்னமாச்சும் கெடைக்குதோ என்னமோங்க… ஒரு றாத்தல் பாண் கெடைச்சாலே பெரிய அதிஸ்டமுங்க……’ 

அவன் வெளியே ஓடுகின்றான். 

முகம் அலம்பப் போனவன் திடுக்கிட்டு வெளியேறினான். அவன் கொடுத்த நகை எப்படியும் இருநூறு ரூபாய் பெறும். அதற்கு ரசீதில்லாமல் வெறும் நாற்பது ரூபாய் கொடுத்து விட்டு பத்தாம் திகதி பிந்தினால் நகை கிடைக்கா தென்றால் என்ன பொருள்! 

பத்தாம் திகதிக்கு முந்தியோ அல்லது பிந்தியோ நாற்பது ரூபாய் தேடிக் கொடுத்துவிட்டு நகையைத் திருப் பும் சக்தி அவனிடம் கிடையாது. ஆகவே இருநூறு பெறு மதியான நகை நாற்பதே ரூபாய்க்குக் கிடைத்து விட்டது. 

வீடு எரியும் போது பிடுங்கிக் கொண்டது லாபம் என்னும் கதைதான். 

இவன் கடையில் முகம் கமுவுவதே பாவம் என்று வெளியேறி விட்டான். 

இந்த நிலைக்காக அவன் திருப்தி கொண்டான். மகிழ்ச் சியடைந்தான். 

இவர்களைப் பட்டினி போடுவது ஒரு வழிக்கு நல்லது. பட்டினியால் ஏற்படும் சாவு, காலராவால் ஏற்படுவது போல் பட்டாளம் பட்டாளமாய் இருக்காது. ஒருவர் இருவர் பட்டினியால் சாகலாம். அப்போது மற்றவர்கள் விழித்துக் கொள்வார்கள். 

வயிறு நிறைந்து விட்டால் இவர்கள் தூங்கிப் போவார் கள். வயிறு பட்டினியால் துடித்தால் தூக்கம் வராது. பட் டினிப் பட்டாளம் படையாகத் திரண்டெழும் தங்களைப் பட்டினி போட்டவர்களை நோக்கி. 

விளைவு! 

பிரான்ஸ்தான். புரட்சிதான். இரத்த ஆறுதான்! 

‘மண்ணு திங்கிறதை மனுஷன் தின்னா என்ன ஓய்’ கடைத் தெருவில் பெரும் புரட்சி யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவனை இருவர் முந்திக் கொண்டு நடந்தனர். 

இரை தேடும் புலியின் வேகம் அவர்களுடைய நடையில் தெரிந்தது. 

‘தோட்டத்துக் குட்டி ரெண்ணு மூணுமேலே சந்தியில நிக்குதுடா……’ 

சுரீரென்றது அவனுக்கு. 

நாகரீகம் என்ற நச்சுக் காற்றால் சீரழியாது, ஒதுங்கி வாழ்ந்து, பண்பாட்டைக் காத்துக் கொண்டிருந்த ஒரு சமூ கத்தை இப்படிச் சீரழியும் அளவுக்கு விரட்டுபவர்களை என்ன செய்தாலும் தகும். 

அவனுடைய ரத்தம் சூடேறிக் கொதித்தது. 

மண்ணைத் தின்றாவது பட்டினியைப் போக்சிக் கொள்ள இவர்கள் துணிந்து விட்டால் பிறகு போராட்டம் எப்படிக் கிளம்பும்! 

இந்த நிலைக்கு இவர்கள் போன பிறகும் மண்ணைத்தின்று மடிகின்றார்கள் மலை நாட்டு மக்கள் என்று சங்கங்கள் பேப் பரில் எழுதிக் கொண்டிருப்பதால் என்ன பயன்! என்ன பொருள்! 

எல்லோர் மேலும் அவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. இவர்களை சரியான முறையில் நடத்திச் சென்று போராடி வெற்றி காண ஒருவன் கிடையாதா…… இவர்கள் என்ன மேய்ப்பனற்ற மந்தையா! 

அவனும் சந்திக்கு வந்து விட்டான். 

அவனை முந்திக்கொண்டு வந்த இருவரில் ஒருவன் ஒருத்தி யுடன் மறைந்து விட்டான். மற்றவன் இப்போது தான் ஒருத்தியின் இடுப்பைக் கோர்த்து அணைத்தபடி இழுத்துக் கொண்டு நடக்கிறான். 

ஒட்டிய வயிறு அவளுடைய மார்பைப் பெரிதாகக் காட்டுகிறது. 

அவளை அடையாளம் கண்டு கொண்டவன் துடித்துப் போனான். அவனுடைய தலையில் யாரோ முரட்டு இரும்பால் அடிப்பது போல் அது தெறிக்கிறது. 

அவளே தான்! பெண்மைக்கு இலக்கணம் சொன்ன அவளே தான். மண்ணைத் தின்றாவது உயிர் வாழத் துணிந்திருக்கின்றாள். 

இதை இப்படியே விட்டால்……! 

கடவுளே இந்தக் கூட்டத்தைக் காப்பாற்று என்று அவனுடைய ஆத்மா அழுதது. 

மண்ணைத் தின்று வாழ்வதை விட போராடி மாள்வது மேல் என்பதை அவர்களுக்கு சன்னஞ் சன்னமாய் உணர்த்த வேண்டும். ரத்தத்தில் ஊற வைக்க வேண்டும். 

அதன் பிறகு பத்திரிகை ஆபீஸ் அவனுடைய சேவையைப் பெறவேயில்லை. 

நாளை விடிவதும் நாளை மறுநாள் விடிவதும் வெறும் பொழுதாக இருக்கலாம். ஆனால் அடுத்து விடிவது இந்த உழைத்து ஏமாந்தவர்களின் வாழ்வு தான்! 

– மாணிக்கம், 1974.

– நாமிருக்கும் நாடே… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1979, வைகறை வெளியீடு, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *