சில நம்பிக்கைகள்
கதையாசிரியர்: ரா.நீலமேகம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
இணைய வெளியீடு: November 13, 2026 முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 12

சுந்தரராமன் ரயில் நிலையத்திற்கு வரும்போது மணி ஏழு ஐம்பது ஆகிவிட்டது. இன்னும் பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பி விடும். ‘ பரவாயில்லை. அதற்குள் ரிசர்வ் செய்த கம்பார்ட்மெண்டில் ஏறிவிடலாம்.’ தனக்குள் சொல்லிக் கொண்டே அவர் ஏறப்போகும் பெட்டியை தேடி நடைமேடையில் வேகமாக நடந்து சென்றார். அடுத்த ஒரு நிமிடம் நடந்திருப்பார். அவர் முன் பதிவு செய்த பெட்டியில் ஏறி தனக்கு ஒதுக்கிய இடத்தில் அமர்ந்தார். கையில் ஒரே ஒரு பைதான். அதிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு பையை மேலே வைத்தார். ஜன்னல் ஓரம் உள்ள இடத்தில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். கிட்டத்தட்ட சுந்தரராமன் வயதுதான் இருக்கும் அவருக்கும்.
கண்ணங்குடியில் வசிக்கும் சுந்தரராமன் தான் கடந்து வந்த வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நிலைக்கு வந்தவர். பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தந்தையை இழந்தார். எப்படியோ அதை ஒரு வழியாக முடித்து விட்டு, மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் படிக்க முடியாத சூழ்நிலை வீட்டில் இருந்ததால், ஏதாவது வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்து வேலை தேடி வந்தார். அவருடைய தந்தை மின்சார உபகரணங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்ததாலும், அவரிடம் நேரம் கிடைத்த போது மின்சார வேலைகள் தொடர்பாக கற்றுக் கொண்டார். இந்த அறிவை பயன்படுத்தி ஒரு மின் சாதனங்கள் விற்பனை செய்யும் பெரிய கடையில் வேலை கிடைத்தது.
“நீ வேணும்னா படிப்பா, நான் ஏதாவது கஷ்டப்பட்டு சம்பாதிச்சு பணம் தரேன் உனக்கு” என்று சொன்ன அம்மாவிடம் நீ இப்பவே மூணு நாலு வீட்டுல வேலை செஞ்சுட்டு வரும்போதே எவ்வளவு களைச்சுப் போறேங்கறது எனக்குத்தான் தெரியும். அதனால நான் இப்ப வேலைக்குப் போறேன். அப்பா கிட்ட எவ்வளவு கத்துக்கிட்டேனோ அதுக்கேத்த மாதிரி கொஞ்சம் ரிப்பேர் வேலையை செய்றேன். கொஞ்சம் பணம் வரட்டும் வீட்டுக்கு. படிப்பு எப்ப வேணும்னாலும் படிச்சுக்கலாம் ” என்று கூறி மேற்கூறிய வேலையில் சேர்ந்தார்.
சுந்தரராமன் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்த பல விஷயங்களில் ஒன்று என்னவெனில் பலரிடம் அதீத நம்பிக்கை வைத்து அவர்களுக்காக வேலை செய்து பின்னர் எந்த பயனும் இல்லாமல் அவர்களால் ஒதுக்கப்பட்ட தன் தந்தையின் வருத்தங்களை. அவர் சுந்தரராமனிடம் சொல்லாவிட்டாலும் இவர் புரிந்து கொண்டு தன் அம்மாவிடம் மெதுவாக கேட்டு அறிவார். அதனால் எதை நம்புவது, யாரை உண்மை என்று நம்பி அந்த வேலையை செய்வது என்பதில் சிறிய குழப்பம் அவருக்கு அவ்வப்போது தோன்றும். இருப்பினும் சிலரை நம்பி நேரம் விரையம் ஆன அனுபவங்கள் உண்டு.
சுந்தரராமன் வேலைக்கு சேர்ந்த மின் சாதனங்கள் விற்பனையகத்தில் அவருக்கு பணி செய்வது கஷ்டமாக தெரியவில்லை. ஏனெனில் அந்த சிறுவயதிலேயே மின்சார உபகரணங்கள் தொடர்பான அறிவு அவருக்கு அதிகமாக இருந்தது சக ஊழியர்களை ஆச்சரியப் படுத்தியது. சில சிறு சிறு பழுதுகள் கடையில் உள்ள ‘ஸ்விட்ச்’ ‘ ப்ளக்’ இவைகளில் ஏற்பட்டால் உடனே ‘ சுந்தர், இதை கொஞ்சம் பாருப்பா, ஏதோ மக்கர் செய்யுது ‘ என்று சொல்லி இவரைக் கூப்பிடுவார்கள்.
அங்கு ஒருவர் பழனிவேல் என்று நடுத்தர வயதில் வேலை செய்து வந்தவர், சுந்தர்ராமனுடன் மிகவும் அன்பாகவும், கிட்டத்தட்ட ஒரு தந்தை தன் மகனிடம் பழகுவது போல பழகி வந்தார். அவர் சுந்தரராமனுக்கு நிறைய அறிவுரைகள், சில சுயசரிதைகள் பற்றிய விளக்கங்கள் இவைகளை ஓய்வு நேரத்தில் சொல்லி வருவார். பழனிவேல் சுந்தரராமனின் குடும்பத்தை பற்றி அறிந்தவுடன் ” நீ இந்த வயசுல புத்தியோட உங்க அம்மாவுக்காக செஞ்சதே அருமையான விஷயம்ப்பா. ஆனால் உனக்கு நல்ல புத்தி, படிக்கிற ஆர்வம் இருக்கறதால நீ நம்ம ஊர்ல இருக்கிற மாலை கல்லூரி வகுப்புல போய் சேந்துடு. ஒண்ணும் அவசரம் இல்லே. யோசிச்சு அம்மா கிட்டேயும் பேசி அவங்க பர்மிஷனையும் வாங்கிட்டு சேர்ந்து படிடா ராஜா! நல்லா வருவே நீ” என்று ஒரு நாள் உபதேசித்தார்.
அடுத்த மாதமே சுந்தரராமன், பழனிவேல் கூறிய கல்லூரி படிப்பு மாலை வகுப்புகளில் சேர்ந்தார். அதற்கும் முன்பணமாக ஆறு மாதங்களுக்கு தேவையானதை கட்டி விட்டார். ” தம்பி சுந்தர், எனக்கு வாரிசெல்லாம் இல்லை. ஒரு உதவியா படிக்கிற பிள்ளைக்கு அதுவும் உனக்கு செய்யறதிலே ரொம்ப மகிழ்ச்சி. அதனாலே தயங்காமல் மேல்கொண்டு படிப்பை பாரு. நீ நல்லா இருக்கும் போது என் நினைவு வந்ததுன்னா திருப்பி கொடு. நான் சந்தோஷமா வாங்கிக்கறேன்.” என்று சிரித்தபடி கூறி சுந்தரராமன் கல்லூரி படிப்பை தொடங்கி வைத்தார்.
சுந்தரராமன் தனக்கு மிகவும் பிடித்த இயற்பியல் படித்தார். நல்ல விதமாக அடுத்த மூன்று வருடங்களில் முடிக்க முடியாவிட்டாலும் நான்கு வருடங்களில் பட்டம் வாங்கினார். இதனிடையே அவருடைய வேலைத் திறன் கண்டு அந்த விற்பனையகத்தின் மேலடுக்கு நிறுவனர்கள், சுந்தரராமனுக்கு பதவி உயர்வு கொடுத்தனர். இதனால் அவர் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் வேறு வேலை தேடவில்லை. அதே சமயம் இவரின் அதிகரித்த வருமானத்தால் அவர் அம்மாவுக்கு ஓய்வு கிடைத்தது. முக்கியமான இரண்டு வீடுகளுக்கு மட்டும் பணிகள் செய்து வந்தார்.
பட்டம் பெறுவதற்கு முன்னரே சுந்தரராமன் மின்சார வேலைகள் அனைத்தையும் இடையிடையே தொழில் கல்வி மூலம் கற்றுத் தேர்ந்தார். “என்னடா, எப்போ பாத்தாலும் இங்கே கிளாஸ் இருக்கு, இன்னிக்கு அந்த கிளாஸ் இருக்குன்னு போய்ட்டே இருக்கியே, எங்களோட சினிமா, பிக்னிக் இதுக்கெல்லாம் எப்பதான் வருவேடா ” என்று பள்ளி நண்பர்கள் அடிக்கடி கேட்பார்கள். அதற்கெல்லாம் ஒரே ஒரு பதில் ” நான் அந்த நிலையில் இருக்கும் நேரம் இல்லைடா இப்போ. என் பாதையை தீர்மானம் கரெக்டா செய்யற வரைக்கும் அந்த விஷயத்துக்கெல்லாம் என் மனசுல இடமில்லைடா. சாரி” என்று சுந்தரராமன் கறாராக சொல்லி விடுவார்.
சுந்தரராமன் பட்டம் வாங்கியதைப் பார்த்து பூரிப்படைந்தார் அவர் அன்னை. அதன் பின்னர் ஒரு வருடம் மகிழ்ச்சியாக இருந்தவர் ஒரு நாள் காலமானார். மிகுந்த சோகத்துடன் சோர்ந்து போயிருந்த சுந்தரராமனை மீண்டும் பழனிவேல் அவருடைய தனித்திறமையை நினைவூட்டி ஊக்கம் தந்ததால், அவர் தன் தந்தை வீட்டுக்கு முன்புறம் வைத்திருந்த கடையை சீர்படுத்தி அதே தொழிலைத் தொடங்கினார். கையில் வைத்திருந்த பணம் போக கடனாகத் தன் கடை முதலாளியிடம் வாங்கினார். அவரிடம் விவரம் கூறி ஒரு வருடத்தில் திரும்ப தரும் உறுதியைக் கொடுத்தார். அதே போல ஒரு வருட காலத்தில் கடனை அடைக்கும் வகையில் அவர் நேரம் நன்றாக அமைந்தது. இடையிடையே பழனிவேல் சுந்தரராமனுக்கு சரியான வழிகாட்டுதலாக இருந்து வந்தார். ஆனால் கூடவே சில நேரங்களில் தேவையற்ற விஷயங்கள் நடக்குமே, அது போல பழனிவேல் கடவுளடி சேர்ந்தார் திடீரென ஒரு நாள்.
சுந்தரராமனுக்கு தாங்க முடியாத துக்கம். ஒரு கை ஒடிந்ததைப் போல் உணர்ந்தார். இருப்பினும் துணிவை கூட்டி தன் அன்றாட பணிகளை செய்து வந்தார். வேலைகள் நடுவே நண்பர்கள் மூலம் அறிமுகமான ரொம்பவும் வசதியற்ற ஆனால் ஆடைகள் விற்பனைக் கடையில் பணி புரிந்து வரும் திலகவதியை மணந்தார். வயது முப்பத்தைந்து நெருங்கி விட்டது. திருமணம் தேவையா என்று எண்ணியவரை திலகவதியின் வசீகரத்தோற்றம், நடத்தை முறைகள் மாற்றியது. இருவரும் மனம் ஒத்து எளிமையான முறையில் மணம் புரிந்து கொண்டனர்.
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் கடையை விரிவாக்கி, மேலும் வேறு நல்ல நிலையடைய எவ்வளவோ முயற்சிகள் செய்தார். சிலரிடம் சுந்தரராமன் வைத்த நம்பிக்கை பலனின்றி போய், அரை மனதுடன் நம்பிய சிலர் உதவிக்கு வந்தனர். சிலர் கடைசிவரை உதவுகிறேன் என்று கூறி காலை வாரி விட்டனர். பல்வேறு வகைகளில் சுந்தரராமன் நொந்து போய், வேறு வழியின்றி வீட்டின் பேரில் வங்கியில் கடன் வாங்கி கடையில் சில மாற்றங்கள் செய்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் இல்லை. சாதனங்கள் பழுது பார்க்கும் வேலை மட்டுமே அதிகமாக வந்தன. அவர் கொள்முதல் செய்து வைத்திருந்த சிறுசிறு மின் பொருட்கள் அவர் நினைத்த அளவுக்கு போணியாகவில்லை. தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இவரின் கடை பற்றி சொல்லி விட்டு வருவார். ஆனால் பலன் பூஜ்யமாகத்தான் இருக்கும்.
இதனிடையே சுந்தரராமன்,திலகவதி தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆதித்யா என்று அவனுக்கு பெயர் சூட்டினார் சுந்தரராமன். அவன் பிறந்த நேரமோ என்னவோ வியாபாரம் இவருக்கு கொஞ்சம் கூடியது. காலம் விரைந்தது.
எத்தனையோ ஏமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள், வீண் போன நம்பிக்கைகள் இவை அனைத்தும் சுந்தரராமன், திலகவதி தம்பதியருக்கு இருந்து வந்த போதிலும் எதிர் நீச்சல் போட்டே வாழ்ந்து ஆதித்யாவை நன்கு வளர்ந்து, நல்ல முறையில் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கி விட்டனர்.அதன் பின்னர் அவனை மேலே படிக்க வைக்க வேண்டும், அதுவும் வெளிநாட்டில் முதுகலை பட்டம் பெற வேண்டும் என்று சுந்தரராமன் எண்ணினார். அதை திலகவதியிடம் வெளிப்படுத்த அவளும் ” எனக்கும் அந்த ஆசை இருக்குங்க. ஆனா அவ்வளவு பணத்துக்கு நாம எங்க போறது? இன்னும் நாம கடனிலதான் வாழ்க்கை நடத்தறோம். அதான் உங்க கிட்ட சொல்லாம மனசுக்குள்ள அடக்கிட்டேன்” என்றாள்.
” ஏதாவது தயார் செய்யலாங்கற நம்பிக்கை இருக்கு எனக்கு. பாக்கலாம். வீட்டு லோன்ல கிட்டத்தட்ட மூணுல ஒரு பங்கு கட்டினதால பேங்க் ஏதாவது கன்ஸிடர் பண்ணி டாப் அப் லோன் போல தருவாங்களான்னு கேக்கணும். அதைத் தவிர என் நண்பன் அபிராம் மல்லியூரில் இருக்கான். அவனைக் கேட்டு பாக்கறேன். நார்மலா இதுக்கெல்லாம் உதவி செய்ற ஆளு அவன்.” என்று சுந்தரராமன் கூறிவிட்டு அது தொடர்பான முயற்சிகள் எடுத்து வந்தார்.
சுந்தரராமன் அடுத்த நாள் தன் நண்பர் அபிராமைத் தொடர்பு கொண்டு அவருடைய தேவையைத் தெரியப்படுத்தினார். இரண்டு நாட்களில் உறுதியாக சொல்வதாக அபிராம் கூறவே ஏதோ ஒரு நம்பிக்கையுடன் சுந்தரராமன் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால் அந்த இரண்டு நாட்கள் வாரமாகி, மாதங்கள் ஆகிவிட்டன. சுந்தரராமன் கூப்பிடும் போதெல்லாம் அபிராம் “கொஞ்சம் பிஸி சுந்தர், நானே கூப்பிடுறேன்”, ” நான் வெளியே ஒரு மீட்டிங்ல இருக்கேன். ஆஃபீஸ் வந்து உன்னோட பேசறேன் “, ” அடுத்த வாரம் நிச்சயம் கன்ஃபர்ம் பண்றேன் ” என்றெல்லாம் கூறி இப்போது சுந்தரராமனை நேரில் வந்து பேச அழைத்திருக்கிறார். இவரும் நம்பிக்கையுடன் பயணம் செய்கிறார்.
“நீங்க மல்லியூர் போறீங்களா சார்?” என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் சுந்தரராமனைக் கேட்டார்.
சுந்தரராமன் சட்டென்று பழையதெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவர் நடப்பு உலகுக்கு வந்தார். ” ஆமாம் சார், மல்லியூர்தான் போறேன். நீங்க?” என்று அவரைக் கேட்டார்.
“நானும் மல்லியூர்தான். அங்கே ஒரு முக்கியமான வேலை. ரெண்டு நாட்கள் இருப்பேன். என் பேரு வேதமூர்த்தி. நான் எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூஷன்களுக்கு கன்ஸல்டன்டா இருக்கேன். நான் வசிக்கும் ஊர் மூங்கில்குளத்தூர். இங்கே கண்ணங்குடில ஒரு காலேஜ்ல வேலை இருந்தது. அதை முடிச்சுட்டு மல்லியூர் கிளம்பிட்டேன்.நீங்க என்ன செய்யறீங்க? கண்ணங்குடிலதான் இருக்கீங்களா?”என்று வேதமூர்த்தி கேட்டார்.
சுந்தரராமன் ” ஆமாம் சார், எனக்கு கண்ணங்குடிதான் சொந்த ஊர். என் பேரு சுந்தரராமன். நான் இங்கே எலக்ட்ரிகல் பார்ட்ஸ் பிஸினஸ் பண்றேன். அதைத் தவிர எலக்ட்ரிகல் ரிப்பேர் ஒர்க்ஸ் எல்லாமும் செய்றேன்.” என்று கூறி விட்டு” நீங்க காலேஜ் கன்ஸல்டன்ட்னு சொல்றீங்களே, மேல் படிப்புக்காக என் மகன் வெளிநாடு போகணும்னு நினைக்கறான். அது பத்தி உங்க அட்வைஸ் என்ன?” என்று கேட்டு ஆதித்யா இப்போது படித்து முடித்த விவரத்தையும் மேற்கொண்டு அவன் என்ன, எங்கே படிக்க வேண்டும் என்று நினைக்கிறான் என்பது பற்றியும் வேதமூர்த்தியிடம் கூறினார்.
வேதமூர்த்தி அதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு” சுந்தரராமன் உங்கள் பையன் படிக்க நினைக்கற கோர்ஸ் அருமையானது. அதேபோல் அவன் செலக்ட் பண்ணிருக்கற வெளிநாட்டு யுனிவர்சிட்டியும் பெஸ்ட் சாய்ஸ். ஆனால் உங்களுக்கு செலவு ரொம்ப வரும். அதுக்கு நீங்க ரெடியா இருக்கீங்களா? ஃபண்ட் இருக்கா?” என்று கேட்டார்.
” அவ்வளவு வசதியான ஆள் இல்லை சார் நான். ரொம்ப சிரமப்பட்டு இப்போ ஒரு சுமாரான நிலைக்கு வந்திருக்கேன். அந்த படிப்புக்காக வேண்டிய பணத்துல பத்து பர்சென்ட்தான் எங்கிட்ட இருக்கு. பாக்கி எல்லாம் கடன் வாங்கிதான் கடமையை செய்யணும். என் நண்பன் கிட்ட கேட்டிருக்கேன். என்னை நேர்ல வரச்சொன்னான். அவனைப் பாக்கதான் மல்லியூர் போய்ட்டு இருக்கேன்.” என்றார் சுந்தரராமன்.
உடனே வேதமூர்த்தி ” சரி, நீங்க ட்ரை பண்றபடி பண்ணிட்டு இருங்க. உங்க பையன் நல்ல ரேங்க் வாங்கிருப்பான்னு நினைக்கிறேன். க்ரேட் லிஸ்ட் இருக்கா உங்க கிட்ட?” என்று கேட்டார்.
சுந்தரராமன்” இதோ இருக்கு சார், செல் ஃபோன்ல வச்சிருக்கேன் ” என்று கூறி ஆதித்யாவின் மார்க் விவரங்களைக் காட்டினார்.
” ஓ, இவன் நல்லா பண்ணிருக்கான். எக்ஸலென்டா மார்க் ஸ்கோர் செஞ்சிருக்கான்.எனக்கு ரொம்பவும் நெருக்கமான எஜுகேஷனல் ட்ரஸ்ட் இருக்காங்க. அந்த ட்ரஸ்ட் சீனியர் கமிட்டி மெம்பர், இப்போ அவருதான் செக்ரட்டரியா இருக்காரு.பேரு விநாயகம். அவருக்கு இதை ஃபார்வேர்ட் பண்ணிட்டு ஒரு வார்த்தை பேசிடறேன். அவரு நிச்சயம் உதவுவார்னு நம்பறேன். ஆனால் நான் மல்லியூர் போய் அவருக்கு ஃபோன் செஞ்சு விவரத்தை சொல்லிட்டு இதை அனுப்பிடறேன். உங்க ஃபோன் நம்பரையும் அவருக்கு கொடுத்துட்டு உங்களுக்கு விவரம் சொல்றேன். இது மட்டும் ஓகே ஆயிடுச்சுன்னா நீங்க ஜஸ்ட் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும்தான் பே பண்ணும்படியா இருக்கும். பாக்கி எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க.அவங்களுக்கு நாலு வருஷம் கழிச்சு திரும்ப தர ஆரம்பிச்சா போதும். இப்பவே அதுக்கு உண்டான ஷெட்யூல் போட்டு கொடுத்துடுவாங்க. பாக்கலாம்.நல்லபடியா நடக்கட்டும். ஆனால் இப்ப என்னால எதுவுமே அஷ்யூர் பண்ண முடியாது. ரெண்டு மூணு நாள் டைம் எடுத்துப்பேன்.பொறுமையா இருங்க. நிச்சயம் உங்களை கூப்பிடுவேன்.” என்று வேதமூர்த்தி ஒரே மூச்சில் பேசி முடித்தார்.
சுந்தரராமனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த தகவல்களை வேதமூர்த்தி கூறிய போது. ‘ தெய்வமே இது நடக்க நீதான் அருள் புரியணும் ‘ என்று மனதில் வேண்டிவிட்டு, தன் கைபேசி எண், வீட்டு முகவரி, மின்னஞ்சல் தொடர்பு எல்லாவற்றையும் வேதமூர்த்திக்கு பகிர்ந்தார்.அவருடைய கைபேசி எண்ணையும் தன்னுடைய முக்கியமான தொடர்பு எண்களின் கீழ் சேர்த்துக் கொண்டார்.
இதன் பின்னர் அந்த பயணத்தின் போது பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் உரையாடி நேரத்தைக் கழித்தார்கள். மதியம் ஒண்ணரை மணிக்கு மல்லியூர் அடைந்தனர். இருவரும் விடை பெற்றனர்.
ரயில் நிலையத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபிராம் வீட்டுக்கு சுந்தரராமன் வரும்போது மணி மூன்றாகி விட்டது. ஏனெனில் சுந்தரராமன் வெளியில் ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்து விட்டு பிறகு வந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது.
அபிராம் மிகவும் உற்சாகமாக சுந்தரராமனை வரவேற்று உபசரித்து அவர் மதிய உணவு வெளியே சாப்பிட்டு விட்டு வந்ததை குற்றம் கூறியபடி இருந்தார். ” சரி, சுந்தர், உன் ரூம் இதுதான், ட்ராவல் பண்ணிட்டு வந்த களைப்பு இருக்கும். ரெஸ்ட் எடுத்துக்கோ. நாம ஈவினிங் உட்கார்ந்து பேசலாம். உனக்கு ஏதாவது தேவைப்பட்டதுன்னா, தனராஜ் இருக்கான். அவன் கிட்ட சொல்லிட்டு போறேன். ஒரு அர்ஜென்ட் ஒர்க். முடிச்சுட்டு சீக்கிரமே வந்துடுவேன்” என்று கூறி விட்டு வெளியேறினார்.
“சரி, அபிராம், நீ போய்ட்டு வா. நான் வெயிட் பண்றேன்.தேங்க்ஸ்” என்று பதிலளித்தார் சுந்தரராமன்.
அபிராம் சென்றவுடன் அறைக்கு தனராஜ் வந்து ” ஐயா, உங்களுக்கு என்ன வேணுமோ என்னைக் கூப்பிடுங்க. நான் இங்கேதான் இருப்பேன். இப்ப ஏதாவது வேண்டுமா ஐயா, காஃபி, கூல் ட்ரிங்க்ஸ் இல்லேன்னா மோர் இப்படி! நீங்க சாப்ட்டுட்டீங்களா?” என்று சுந்தரராமனைக் கேட்டான்.
சுந்தரராமன் அவனிடம்” ரொம்ப நன்றிப்பா. நான் வெளியே சாப்டுட்டு வந்துட்டேன். எனக்கு கொஞ்சம் மோர் மட்டும் கொடு. லைட்டா லெமன் பிழிஞ்சு கொஞ்சமா உப்பு போட்டு தருவியா?” என்று கேட்டார்.
” ஓ, தாராளமா தரலாம் ஐயா. இன்னும் அஞ்சு நிமிஷத்துல கொண்டு வரேன் ” என்று கூறி வெளிச்சென்றான் தனராஜ்.
சற்று நேரத்தில் அவன் கொண்டு வந்து கொடுத்த மோரைக் குடித்து விட்டு சுந்தரராமன் மாடிப்பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு தன் அறைக்கு சென்று ஓய்வெடுத்தார். பயணக் களைப்பால் கண்ணயர்ந்து விட்டார்.
மாலை ஆறு மணி அளவில் விழித்த சுந்தரராமன் முகம் கழுவி உடை மாற்றி நடு கூடத்திற்கு வந்தார். அங்கே அபிராம் தன் மகன் ரிஷியுடன் பேசிக் கொண்டிருந்தார். ரிஷி ஆதித்யாவை விட ஐந்து வயது பெரியவன். கட்டிடக்கலை இளங்கலை, முதுகலை இரண்டுமே வெளிநாட்டில் படித்தவன். அபிராம் அசையாச்சொத்து வணிகம் செய்து வருகிறார். பெரிய இடங்களில் செல்வாக்கு, நிறைந்த பணப்புழக்கம் எல்லாம் உண்டு.
சுந்தரராமனைக் கண்டதும் சிரித்த முகத்துடன் ரிஷி ” ஹலோ, அன்கிள், அப்பா சொன்னார். நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருந்ததால் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு இருந்துட்டேன். எப்படி இருக்கீங்க, வீட்ல ஆண்ட்டி, ஆதி எல்லோரும் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டான்.
” எல்லாரும் ஓகேப்பா. உன்னைப்பாத்து அஞ்சாறு வருஷத்துக்கு மேல் ஆகுதுன்னு நினைக்கிறேன். அப்பா பிஸினஸுக்கு உதவியா நீ இருக்கேன்னு கேள்விப்பட்டேன். சந்தோஷம். ” என்றார் சுந்தரராமன்.
” நீங்களும் அப்பாவும் பேசிட்டு இருங்க அன்கிள், நான் கொஞ்சம் அர்ஜென்ட்டா பிஸினஸ் வேலையா மரப்புறம் வரைக்கும் போக வேண்டியிருக்கு. திரும்பி வந்து பேசறேன்.” என்று கூறியபடி ரிஷி வெளியே கிளம்பினான்.
இதனிடையே தனராஜ் காஃபி கொண்டு வந்தான். அபிராம் ” காஃபி சாப்பிடு சுந்தர். உன் தேவை என்னன்னு எனக்கு புரிந்தது. நான் போனவாரம் ஒரு பெரிய ப்ராஜெக்ட்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கேன். இதுக்கு முந்தைய கமெர்ஸியல் காம்ப்ளெக்ஸ் முடிஞ்சு இரண்டு மாசம் ஆச்சு. இன்னும் ஃபுல்லா புக்கிங் ஆகலை. அதை ப்ரமோட் பண்ணிருக்கோம். இன்னும் இருபது நாள் இல்லை மேக்ஸிமம் ஒரு மாசத்துல நல்ல புக்கிங் வந்துடும். எல்லாமே நிச்சயம் விற்பனை ஆகிடும். ஆனா இப்போ உடனே ஆகாது. அதனால் இப்போ இம்மீடியட்டா உனக்கு, நீ கேட்ட அமௌண்ட்ல பாதிதான் தரமுடியும். இன்னும் ஒரு மாசத்துக்கு மேல மீதி கொடுக்கற நிலைல நான் இருப்பேன். உனக்கு இது ஓகேயாகுமா? என்னைத் தவறாக எடுத்துக்காதே” என்று சுந்தரராமனிடம் விளக்கினார்.
சுந்தரராமனுக்குத் தெரியும், அவரால் இந்த பாதி பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று. மீதி பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற பெரிய கவலை தன் முன்னே இருக்கிறது என்பதையும் உணர்ந்தார். ஆனாலும் ” அபிராம், நிச்சயமா இதை வச்சு என் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. ஆதித்யா அட்மிஷன் காஸ்ட், மற்ற செலவு எல்லாத்துக்குமே நிறைய வேணும். என் வீட்டு அடகுக் கடன் இன்னும் முழுசாக முடியலை. இருந்தாலும் நீ கொடுக்கறதை நான் மறுக்க மனசு இல்லை இப்போ. நான் ஊருக்கு போய் மீதி பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமான்னு பாத்துட்டு உனக்கு சொல்றேன். நீ என் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிடு.” என்றார் சுந்தரராமன்.
கூடவே ” எங்கே ரிஷி அம்மா ராஜி அப்புறம் ரிஷி ஒய்ஃப் மேகலா இவங்களைக் காணோம்” என்று கேட்டார். ” அவங்க ஒரு மேரேஜுக்கு அட்டெண்ட் செய்ய வெளியூர் போயிருக்காங்க” என்று சொல்லிவிட்டு ” சரி நீ எனக்கு சொன்னவுடன் நான் அனுப்பறேன் பணம். நீ வேணும்னா வேற ஏதாவது ஏற்பாடு செய்யும்போது இரண்டு மாசத்துல திருப்பி தர மாதிரி சொல்லி வாங்கிக்க. நான் அதுக்கப்புறம் மீதி பணத்தை அனுப்பிடறேன். உன் இஷ்டம் ” என்று சொன்னார் அபிராம்.
” சரிப்பா, நான் கிளம்பறேன். எனக்கு நிறைய வேலை இருக்கு இது சம்பந்தமா.அதனாலே இப்பவே புறப்படறேன் ” என்று கூறி சுந்தரராமன் பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
” சுந்தர், இப்போ ட்ரெயின் ஏதும் இல்லையேப்பா. தங்கிட்டு காலைல போயேன் ” என்ற அபிராமிடம்” இல்லை அபி, நான் ஏதாவது பஸ்ஸைப் பிடித்து போய்டறேன். இங்கே தங்கி என் நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை.” என்று கூறி சுந்தரராமன் விறு விறு வென்று படியிறங்கி சாலையில் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
வெளிச்சாலையில் இருந்த ஒரு ஆட்டோவைப்பிடித்து பேரூந்து நிலையம் வந்த சுந்தரராமன் கண்ணங்குடி வழியாகச் செல்லும் ஒரு பேரூந்தில் ஏறி ஊர் வந்து சேரும்போது விடிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. அங்கிருந்து வீட்டை அரைமணி நேரத்தில் அடைந்தார்.
மறுநாள் காலை திலகவதி, ஆதித்யா இருவரிடமும் தான் போய் வந்த விவரங்கள் பற்றியும், பயணத்தின் போது ரயிலில் சந்தித்துப் பேசிய வேதமூர்த்தி மற்றும் அவர் கொடுத்த சில நம்பிக்கைகள் பற்றி, அவரிடம் ஆதித்யா கல்வி விவரங்கள், மின்னஞ்சல் முகவரி இவைகளை பகிர்ந்தது அனைத்தையும் சுந்தரராமன் விளக்கினார். அதே நேரத்தில்” அவர் நல்ல மனிதர். ரொம்ப பிஸியாக இருப்பவர். அவர் நம்ம விஷயத்தை ஞாபகம் வச்சிட்டு செய்வாருன்னு எதிர் பாக்க முடியாது திலகா. அபி பாதி தரேன்னு இருக்கான். நான் இன்னிக்கு மதியம் போய் பழைய முதலாளி கிட்ட ஏதாவது பணம் கிடைக்கற சான்ஸ் இருக்கா பாத்துட்டு வரேன்.உனக்கு சேரணும்னா இன்னும் எத்தனை நாளைக்குள் பணம் கட்டணும் ஆதி?” என்று ஆதித்யாவைக் கேட்டார்.
” இன்னும் பத்து நாள் இருக்குப்பா. ஆனால் வீக் எண்ட், அந்த ஊர் ஹாலிடே ஒரு நாள் இதை விட்டா கரெக்டா ஏழுநாள் இருக்குப்பா. அப்பா, பாருங்க, எல்லாம் சரியா நம்மால செய்ய முடிஞ்சா நான் சேர்ந்து படிக்கிறேன். இல்லேன்னா கவலையே படாதீங்க அப்பா. இங்கயே ஏதாவது பாத்துக்கலாம். நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ், ஸ்ட்ரெயின் பண்ணிட்டு உடம்பைக் கெடுத்துக்க வேண்டாம்ப்பா.” என்று ஆதி உறுதியாக சொன்னான்.
” பாக்கலாம் டா. கடைசி வரை முயற்சி செய்யலாம். எல்லாமே ஒரு நம்பிக்கைதான். நடந்தா நல்லது.” என்று கூறிவிட்டு கடைப்பக்கம் சென்றார் சுந்தரராமன்.
அடுத்த நான்கு நாட்களில் சுந்தரராமனுக்கு எதிர் பார்த்த அளவுக்கு உதவிகளோ அல்லது நல்ல செய்தியோ கிடைக்கவில்லை. வெவ்வேறு வகையான காரணங்கள்தான் எல்லோரும் சொல்லி வந்தார்கள்.
ஐந்தாம் நாள் காலை உணவு முடித்து சுந்தரராமன் மறுபடியும் பழைய முதலாளி வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து கிளம்பியவரை அவர் கைபேசியில் வந்த அழைப்பு தடுத்து நிறுத்தியது. மறுமுனையில்” ஹலோ மிஸ்டர் சுந்தரராமன், அயாம் வேதமூர்த்தி ஸ்பீக்கிங், ஞாபகம் இருக்கா, ட்ரெயின் ஃப்ரெண்ட். உடனே உங்க பையன் ஆதித்யாவை இமெயில் பாக்க சொல்லுங்க. என் வேலையை முடிச்சிட்டு அந்த ஸ்பான்ஸர் பீப்பிளை கான்டாக்ட் பண்ணி எல்லாம் ரெடி செய்ய ரெண்டு நாள் அதிகமா ஆயிடுச்சு. சாரி, நீங்க கவலையோடு இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். உங்க பையனுக்கு எல்லாம் ரெடி. ஜஸ்ட் அந்த மெயிலைப் பாத்து அதுல கொடுத்துள்ளபடி செய்யச் சொல்லங்க. இன்னும் ரெண்டு நாளுக்குள் அட்மிஷன் லெட்டர் வந்துடும். கவலைப்படாதீங்க” என்று வேதமூர்த்தி இடைவெளியின்றி பேசிவிட்டு ” ஆதித்யா கிட்ட ஃபோனைக் கொடுங்க” என்றார்.
சந்தோஷம் தளும்ப சுந்தரராமன் ” ஏய், ஆதி, வேதமூர்த்தி சார் லைன்ல, உன்னோட பேசணுங்கறாரு. நல்ல விஷயம்தான். சீக்கிரம் வா” என்று சத்தம் போட்டு கூப்பிட்டார். ஆதித்யா வேகமாய் ஓடி வந்து கைபேசியை வாங்கி ” குட் மார்னிங் சார், ஆதி ஸ்பீக்கிங்” என்று கூறி விட்டு அவர் சொன்னவைகளை கவனமாகக் கேட்டுக் கொண்டே ” ஓகே சார், சரி சார், ” என்று கூறி விட்டு உடனே தன் மடிக்கணினியில் வந்த மின்னஞ்சல் பார்த்து அதில் கூறியிருக்கும் விவரங்களை அவருக்கு படித்துக் காண்பித்தான். அவர் எதை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லி அவனுக்கு வழிகாட்டி விட்டு ” கங்க்ராஜுலேஷன்ஸ் ” என்றார். ” உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார் ” என்று மகிழ்ச்சியுடன் ஆதித்யா கூறினான். பின்னர் வேதமூர்த்தி சிறிது நேரம் சுந்தரராமனிடம் பேசி விட்டு மீண்டும் ஒரு நாள் கழித்து கூப்பிடுவதாகச் சொல்லி பேச்சை முடித்தார்.
அதன் பின் ஆதித்யா, வேதமூர்த்தி சொன்னதை மனதில் வைத்து அதேபோல் அந்த பல்கலைக்கழகம் கேட்டவைகளைப் பூர்த்தி செய்து, வேண்டிய ஆவணங்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் ஒரு மணி நேரத்தில் அனுப்பி விட்டான்.
திலகவதி மிகவும் சந்தோஷமாக ” இன்னிக்குதான் நமக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாள். ஆதி, உனக்கு புரிஞ்சுதா, உங்கப்பா தெரிஞ்சவங்க, ரொம்ப நாள் பழகினவங்க, இவங்க கிட்ட எல்லாம் உதவியை எதிர்பார்த்து நம்பிக்கையா இருந்தா, அதெல்லாம் நடக்காம திடீர்னு ஒருநாள் ஒருத்தர்
பயணத்தில அறிமுகமாகி அவர் மூலமா அதிகப் பணம் செலவு இல்லாமல் வேலை நடக்குது பாரு, இதாண்டா உலகம்” என்றாள்.
ஆதித்யா உடனே அப்பாவைப் பார்த்து ” ஏம்ப்பா எதை நம்பறது, யாரை நம்பறது, நம்பிக்கையே வைக்காமல் நம்மை மட்டுமே நம்பி வாழ்க்கையை வெற்றிகரமா எதிர் கொள்ள முடியுமா?நம்பிட்டு பின்னால ஏமாற்றம் வந்தா அதை எப்படி சமாளிப்பீங்க? ஒரே குழப்பமா இருக்கேப்பா.” என்று கேட்டான்.
சுந்தரராமன் சொன்னார். ” ஆதி, நம்பிக்கை என்பது இருக்கணும்டா. அது இல்லாமல் லைஃப் எந்த ஜீவராசிக்கும் இல்லை. பஸ், ட்ரெயின், ப்ளேன் இதுல எல்லாம் போறோம். யார் அதை இயக்கப் போறாங்க, அவரு இதுவரைக்கும் விபத்து இல்லாமல் ஓட்டிருக்காரா, அவருக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு இருக்கா இதை எல்லாத்தையும் ஒவ்வொருத்தரும் செக் பண்ணிட்டுதான் வண்டில ஏறுறாங்களா? நம்பிக்கயில தான். நண்பர்களைக் கேட்போம் உதவிக்கு என்பது ஒரு நம்பிக்கை. நம்மோட நம்பிக்கை எல்லாமே அதன்படியே நடக்கணும்னு எதிர்பார்க்கிறதுதான் அதீதமான நம்பிக்கை. அது தேவையில்லை. அதேபோல் உன்னை மட்டுமே நம்பி நீ வாழ்ந்துடலாம்னு நினைக்கறதும் அதிகப்படிதான். அது நடக்காது. தினசரி வாழ்வில் ஏதாவது ஒரு செயலுக்காவது நீ யாரையாவது அல்லது எதையாவது நம்பும் சூழ்நிலையில்தான் எல்லோரும் இருக்காங்க.சில நம்பிக்கைகள் வீண் போகும்.சில நம்பிக்கைகள் வெற்றியா முடியும். தப்பு இல்லை. யாரையும் குறை கூற முடியாது. ஏன்னா அவனும் நம்மைப் போல்தான். அவனுக்கு எதுல நம்பிக்கை இருக்கோ அதில் பிடியா இருப்பான். அதனால் உனக்கு குழப்பமே வேண்டாம். எதையோ நம்பி அல்லது யாரையோ நம்பி ஒரு வேலையை செய்றே. வெற்றி ஆகலை. இல்லை நம்பிக்கை வச்ச ஆறு கவுத்துட்டான். கவலையை விடு. அது ஏமாற்றம்தான். உன் முயற்சி தோல்வி. அல்லது இந்தப் படியைக் கடந்து அடுத்த படிதான் உனக்கு சூட்டபிள்னு நினைச்சு உன்னை மாத்திக்கோ. அங்கே ஏதாவது நம்பிக்கை நல்லதைக் கொடுக்கும். இதுதான் நான் கத்துகிட்ட படிப்பினை.புரிஞ்சுதா? சரி, நல்ல சேதி கிடைச்சிருக்கு. இன்னிக்கு சாயந்திரம் எல்லோரும் ராஜகணபதி கோவிலுக்கு போய்ட்டு வரலாம் ” என்றார்.
“ஓகே, நிச்சயம். ” என்று ஆதித்யாவும் திலகவதியும் ஒருசேர பதிலளித்தனர்.
“இது என் நம்பிக்கை. சில பேர் ஹோட்டலுக்கு போய், சிலர் எங்கேயோ டூர் போய் இப்படி சந்தோஷத்தை கொண்டாடுவாங்க. ஸோ, நம்பிக்கைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதேபோல் எல்லா நம்பிக்கைகளும் வெற்றி ஆவதில்லை.அதுல தெளிவா இருக்கணும். இரவு தூங்கும்போது காலையில் சூரிய உதயம் பார்ப்போம் அப்படீன்னு நம்பிக்கையுடன் தூங்கறோமா இல்லையா? அது போலத்தான் சில நம்பிக்கைகள் நம் உடலில் இரத்தத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கு.” என்று முடித்தார் சுந்தரராமன்.
![]() |
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மலர்கள்
எஸ்.சங்கீதா
November 13, 2026
தபால்கார அப்துல்காதர்
எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
November 13, 2026
புளி மூடு
நாஞ்சில்நாடன்
November 10, 2026
