ஒரு தோட்டத்துப் பையன்கள் படம்பார்க்க போகிறார்கள்
கதையாசிரியர்: தெளிவத்தை ஜோசப்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2026
பார்வையிட்டோர்: 124
(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு மாதங்களுக்கு மேலாக அல்லது இரண்டுமாதங் களாக, அல்லது இரண்டு மாதங்களுக்கு கொஞ்சம் குறைவாக இருக்கலாம்.
இடைவிடாது வீசும் காற்று, எரியும் புல்லுமலைப்பக்கம் இருந்து வருவதுபோல் விகாரமாய் வெக்கையுடன் வீசுகிறது.
பூமி வானத்தைப் பார்க்கிறது.
வானம் கண்ணாடியாகி பூமியைப் பிரதிபலிக்கிறது.
திரும்பிய திக்கெல்லாம் ஜிலு ஜிலுவென்று நீரோடிக் கொண்டு திவ்வியமாகக் கிடந்த இடம்தான்!
உச்சியில் நின்று பார்த்தால் அடிவானம் வரை பசுழை யாய் அலைஎழுப்பிக்கொண்டு கிடந்த பரம பூமிதான்!
இன்று காய்ந்து கிடக்கிறது. கரிந்து கிடக்கிறது.
பட்டணத் தெருக்கள்போல் பூமியைப் பிரதிபலிக்கிறது.
வானத்துக்கு யார்மீதோ கோபம். ஆனால் வஞ்சிக்கப்படு பவர்கள் – பாவம்! உழைப்பை நம்பி இழைத்துக் கிடக்கும் இந்தியத் தொழிலாளர்கள்.
போன மாத அரிசிக் கணக்கு சம்பளத்தை மிஞ்சி விட்ட தால் ‘மேற்கொண்டு வரவேண்டிய பாக்கி இவ்வளவு’ என்று கடனைக் கேட்டு கொண்டு சம்பளத்து வாசலில் இருந்து வெறுங்கையுடன் படிஇறங்கி வந்தவர்கள் ஏராளம்.
இரண்டு ரூபாவும் சில்லறையுடன் இறங்கி வந்தவர்கள் அதைவிட ஏராளம்.
‘இன்று சம்பளமல்லவா’ என்று ஏறியோடி வந்து நின்ற கடைக்காரர்களிடம் ஏச்சு வாங்கிக் கொண்டு இறங்கி வந்த வர்கள் ஏராளம் அல்ல. ஏறக்குறைய அத்தனைபேரும்.
இவர்களுடைய கையில் ஏதும் விழுந்தால்தானே கடைக் காரர்களுடைய கையில் ஏதாவது விழும்!
‘போனமாசச் சம்பளந்தான் அப்படிப் போச்சு காமா சோமான்று… இந்த மாசமாச்சும் ஏதாவது தேறும்னு நினைச்சா ஆளை எழுந்திருக்க விடமாட்டானுகபோலிருக்கே… காலையிலே பெறட்டுக்கு வந்தா, வேலையில்லே வீட்டுக்குப் போ, வேலையில்லே வீட்டுக்குப் போன்னுபாட்டாய்ப் பாடிக்கிட்டு….’
‘உங்களுக்கெல்லாம் இன்னைக்கு வேலைஇல்லை வீட்டுக்குப் போகலாம்’ என்று பெரிய வீட்டுக் கணக்கப்பிள்ளை கூறிய தைக் கேட்டதும் ஒருசிலர் அங்கலாய்த்தனர். வேறு சிலர் அனல் மூச்சு விட்டனர்.
அவர்தாம் என்னசெய்வார் பாவம்! தோட்ட நிர்வாகம் இல்லை என்று சொல்’ என்கிறது. அவர் சொல்கின்றார்.
‘கடவுள் நம்பிக்கை இல்லாதவனுகளும் கூடிப் போயிட் டானுக. எப்படி மழை பேயும்’
இப்படியே போனால் இந்த மாதமும் செக்குறோலில் கடன் தான் மிஞ்சுமோ என்ற வயிற்றெரிச்சல் அவருக்கு. யாரையா வது கோபித்துக்கொண்டால்தான் வயிற்றெரிச்சல் இறங்கும்.
சிட்டைத் தட்டி முடிந்தபடி முனகித் தள்ளினார்.
‘ஏம்பா உனக்கு கடவுள் பக்தி இருக்குதுல்ல, அப்புறம் ஏன் மழை பெய்யல்லே? பக்தியுள்ளவன் ஒருத்தன் இருந்தா மழை ஊத்தும்…’
ஒரு வாலிபன் அவருக்கு ‘டோஸ்’ கொடுக்கின்றான். ‘நல்லவனே இல்லேன்னு சொல்லீடாதீங்கடா, இருக்கிற வுன்ல ரெண்டொருத்தன் இங்கிருந்து வெளியாகணும் அப் பத்தான் மழை பெய்யும்…’
பெரியவரை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கூறுகின்றான் ஒருவன்.
கணக்கப்பிள்ளை கவனிக்காதவர்போல் இருந்துவிடுகிறார். ‘ஏம்பா மலையேறி வேலை செஞ்சாத்தானா உண்டி. மலையில் வேலையில்லேன்னா வீட்டுக்குப்போயி காய்கறித் தோட்டம் ஏதாச்சும் போட்டா என்ன அதுல காசு வராதா? செக்றோல்ல வந்தாத்தானா காசு…’
அவர்களை சமாதானப்படுத்தி விரட்டிவிடும் நோக்கத்தில் தன்னிடம் இல்லாத நல்லதனத்தை மூலதனமாக்கி யோசனை வழங்குகின்றார் அய்யா.
‘நீ ஏய்யா ஒரண்டை மொரட்டுத்தனமா பேசிக்கிட்டு மனுஷனுக்கு குடிக்கவே தண்ணி இல்லே. திடுதிடுன்னு விழுற இஞ்சின் காம்பு பைப்பிலேயே சொட்டு சொட்டாவழியுது நாய் நாக்குல வேர்வை வடியுறாப்புல .. காய்கறித்தோட்டம் போடுறாராம், காய்கறித் தோட்டம்…’
‘கத்தரிகண்ணு நாட்டி மூத்திரம் பேஞ்சா வளர்ந்திரும்னு நெனைப்போ அய்யாவுக்கு’
மூலைக்கொருவராக முனகத் தொடங்குகின்றனர்.
எவ்வளவு நேரம்தான் முனகிக்கொண்டு நிற்கமுடியும்.
ஒவ்வொருவராக நகர்கின்றனர் கூட்டம் கலைகின்றது. கொழுந்தாட்களுக்கு பதினைந்து நாட்களுக்கு மேவாக வேலை இல்லை.
வேலை கொடுத்தாலும் பறிப்பதற்கு மலையில் ஒன்றும் இல்லை. இரண்டிலைகளுக்கிடையில் வெடித்து நீளும் குருத்துக் கள் நீரோட்டம் போதாமையால் இலைகளுக்கடியிலேயே கருகி மொன்னையாக நிற்கின்றன.
இலைகளை நீவி நீவி பேன் பார்ப்பதுபோல் கொழுந்தாய்ந் தாலும் நாலு மரம் கிள்ளினால்தான் ஒருபிடி தேறும். பிற கெப்படி கொழுந்தாட்களுக்கு வேலை கிடைக்கும்?
புல் வெட்டும் பையன்களுக்கு இன்று வேலை கிடைத்திருக்கிறது.
முடிந்துவிட்ட இருபது நாட்களில் இன்றுடன் மூன்று நாள் வேலை கிடைத்திருக்கிறது இவர்களுக்கு.
வெய்யில் இப்படியே கொழுத்திக்கொண்டிருந்தால் இன் னும் இரண்டு நாள் வேலை கிடைக்கலாம்.
இந்த ஐந்து நாளைக்கு என்ன சம்பளம் இருக்கப்போகிறது. அரிசியைக் கழிக்கவா! டோபி, பாபரைக் கழிக்கவா! கோவில் காசைக் கழிக்கவா, சங்கத்துச் சந்தாவைக் கழிக்கவா…!
பிறகு என்ன மிஞ்சும்?
மிஞ்சுகிறதோ, கடனில் நிற்கப் போகிறதோ? யார் கண்டார்கள்.
இன்றாவது வேலை கிடைத்கதே என்ற சந்தோஷத்தில் புல்வெட்டும் பையன்களுக்கு தலைகால் புரியாத குஷி.
வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்கள்போல் சுரண்டியை தலைக்குமேல் தூக்கி ஆட்டி கோஷமிட்டபடி கூட்டமாக ஓடு கின்றனர்.
குட்டிச் சாக்கை சுரண்டிக்கு முண்டாசு கட்டி தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடி நடக்கின்றனர்.
கொடியும் கையுமாக நடக்கும் ஒரு வேகம் அந்த நடையில் தெரிகிறது.
கவ்வாத்து மலை போல் காய்ந்து கிடக்கிறது ஒத்தைக் கடை.
‘பிளேன் டீ ஒன்று போடுவமா…’
பொய்லர் முன் ஈயோட்டிக் கொண்டு நின்றவன் சிறுவர் களைப் பார்த்துக் கேட்டான்.
‘வாண்டாய்யா’ என்றபடி சிறுவர்கள் மலைக் குறுக்கில் ஏறுகின்றனர்.
காதில் வைத்திருந்த பீடித்துண்டை இடக் கையால் இழுத்து பொய்லரடியில் கிடக்கும் நெருப்பில் ஊன்றி எடுத்து உதட்டில் திணித்தபடி புல்வெட்டப் போகும் பையன்களையே பார்த்துக் கொண்டிருந்தான் டீமேக்கர்.
தேயிலை செழித்தால்தான் இது அனைத்தும் செழிப்பாகத் தோன்றும்.
ஒத்தைக் கடை செத்துப்போய் தோன்றுகிறதே இதற்கு சிறந்த உதாரணம்.
கங்காணி இன்னும் மலைக்கு வந்தாகவில்லை. பையன்களு டனேயே அவரும் வந்துவிட்டால் கங்காணி என்ற அந்தஸ்து என்ன ஆவது?
மலையிலும் புல் வளர்ந்து தொங்கவில்லை. தேயிலையே கருகிக் கொண்டிருக்கும்போது புல்மட்டும் எப்படி வளரும்.
புல்வெட்டும் பையன்கள் வந்து நிற்பதன் நோக்கம் ‘புல் லெட்டவல்ல’. ஒரு நாளாவது வேலை கொடுக்க வேண்டுமே என்பதுதான்.
சுரண்டிக்குக் கட்டிய முண்டாசு கழருகிறது.
பஃப் பஃப் என்று நான்கு பையன்கள் இழுத்து முடித்த பீடித்துண்டை ஐந்தாவது பையன் மிகவும் சுவாரஷ்யமாக இழுத்து புகைச் சுகம் கண்டுகொண்டிருந்தான்.
இந்த வயதில் என்ன பீடி வேண்டியிருக்கு என்று இந்தக் காலத்துப் பையன்களிடம் கேட்க முடியுமா!
இருட்டுக்குள் நீளும் டோர்ச் வெளிச்சம் போல் ஆகா யத்தை நோக்கி ‘பூஸ்’ சென்று புகை ஊதிக்கொண்டிருந்த ஒருவன் திடீரென்று கத்தினான். ‘அடே கீழே பாருங்கடோய் கடைக்கிட்டே’
மறுவினாடி பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் அத்தனை பையன்களும் கடையை நோக்கி பாய்ந்தனர்.
கடையின் முன்நின்று கொண்டிருந்தது ஒரு அலங்கரிக்கப்பட்ட வேன்.
பத்துமைல் தொலைவில் உள்ள பட்டணத்துத் தியேட்டரில் புதுப் படம் போட்டிருக்கின்றனர்.
புதுப்படம் என்றால் இரண்டரை மூன்று வருடங்களுக்கு முன் இந்தியாவில் ரிலீஸ் ஆன தமிழ்ப் படம். இப்போது தான் இங்கே வந்திருக்கின்றது.
அதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.
வேன் தெரியாமல் மூடிக்கொண்டிருக்கும் பெரிய போர்ட் களில் தென்னிந்திய திரைவானின் மிகப்பெரிய நட்சத்திரம் உருவிய வாளுடன் நின்றுகொண்டிருந்தது.
சேலையே கட்டாத ஒருபெண்-அவளும் மிகப் பெரிய நடிகைதான். இல்லாவிட்டால் மிகப் பெரிய நடிகருடன் இறுகிக் கொண்டு நிற்க முடியுமா? பெருந்துடைக்குமேல் ஒரு சின்ன சட்டையும், பிரேசியர் போன்ற ஒரு சின்னச் சட்டையும் போட்டுக் கொண்டு பிதுங்கும் மார்புடன் சினிமா நொடி நொடித்துக்கொண்டு நிற்க பெரிய நடிகர் அவள் பின்னால் நின்று மிகவும் ஆபாசமான முறையில் அணைத்துக்கொண்டு நிற்கின்றார்.
பாய்ந்திறங்கிய பையன்களின் பார்வைக்கு நடிகரின் முகம் தெரிந்ததுதான் தாமதம்.
‘அடே நம்மாள்டோய்’ என்றவாறு இன்னும் வேகமாக இறங்கினர்.
இறங்கி ஓடிவந்துகொண்டிருந்த பையன்களில் ஒருவன் இடது கையைத் தூக்கிப் பார்த்துக்கொண்டான்.
வண்டி மாட்டுக்கு சூடு போட்டாற்போற்போல் அவனது முன்கையில் மூன்றெழுத்து சூடுபோடப்பட்டு தோலுரித்துக் கொண்டிருந்தது.
அந்தக் கையை, அதில் தெரியும் அந்தப் பெயரை, பெரு மிதத்துடன் பார்த்துக் கொண்டவன் முஷ்டி மடக்கி உடன் ஓடிவந்துகொண்டிருந்தவனின் தாவாயில் குத்துவது போல் பாவனை செய்து வாயால் ஒலி எழுப்பிக்கொண்டான்.
‘எப்படி நம்ம அடி …’
‘பம்படி சொளத்தட்டை அடி…’
இறங்கி ஓடிவந்துகொண்டிருந்த கூட்டம் இரண்டாகியது.
‘நம்ம இருட்டடி காரர்டா’ என்றவாறு பாதிப் பையன்கள் மீண்டும் திரும்பி மலை ஏறுகின்றனர்.
குருடர்கள் யானை பார்த்தது போல் றோட்டுக்கிறங்கிய பையன்கள் போஸ்டரைப் பார்த்தனர்.
‘தொடையைப் பாருடா’ ஒருவன் முனகினான் ‘டேய் றாஸ்கல் என்னசொன்னே … அவரு லவ் பண்ற பொம்பளைடா… அவர் லவ் பண்ற அழகைத்தான் பார்க்கணும் அது போதும்’ என்றபடி வேன்காரர்கள் கொடுத்த நோட்டீசை வாங்கி, கீழே ராஜன் பிரிண்டர்ஸ் என்றிருப்பது வரை ஒரு எழுத்துவிடாமல் வெறிகொண்டு வாசித்துவிட்டு அதை எட் டாக மடித்து சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.
சுரண்டிக் கம்பால் நடிகையின் வயிற்றை வருடிப் பார்த் துக்கொண்டிருத்தவன் டிரைவர் முறைத்துப் பார்க்கவே நைசாக சுரண்டியை இழுத்துக் கொண்டான்.
சின்ன துரையின் மோட்டார் சைக்கிள் வந்து வேனிடம் நின்றது.
படம் பார்த்துக்கொண்டிருந்த போதையில் துரை வந் ததுகூட பையன்களுக்கு தெரியவில்லை.
தெரிந்ததும் திடுக்கின்று நின்றனர்.
துரை கையை ஆட்டினார். மேலே மலையில் நின்றுகொண் டிருந்த கங்காணி இறங்கி வந்தார்.
‘கங்காணி எப்ப வந்தார். எப்படி வந்தார்…… அந்தப் பக்கமாக வந்திருக்கார் போலிருக்கு’ என்று பையன்கள் எண்ணிக் கொண்டிருக்கையில் ‘இவன்களை எல்லாம் வீட்டுக் கனுப்பிப்போடு. மணி என்ன தெரியுதா’ என்று கூறிவிட்டு துரை போய்விட்டார்.
‘இன்றே பாருங்கள்’ என்று கூறிவிட்டு வானும் போய் விட்டது.
‘ஒருநாள் வேலைதானே போனா மயிராச்சி’ என்று முன கியபடி பையன்கள் கடைக்குள் நுழைந்தனர்.
இன்றுடன் மூன்று நாள் வேலை கிடைத்தது. இன்றைக்கு அநியாயமாக விரட்டுப் பட்டதால் இந்த மாதம் இருபதாம் திகதி வரை இரண்டு நாள்தான் வேலை செய்திருக்கிறோம். என்ன சம்பளம் இருக்கும் என்ற கவலை ஒருவரிடமாவது இருப்பதாகத் தெரியவில்லை.
கடைக்குள் நுழைந்தவர்கள் முதலாளியிடம் வந்தனர். ‘எப்படி முதலாளி அந்திக்கு கார் வேணுமே ஆறு மணி ஷோவுக்கு……
கூட்டத்துக்கு லீடர் போன்றவன் வேண்டுகோள் விடுத்தான்.
’12 ரூவா குடுத்துடு. ஜாம்ஜாம்னு போ யாரு வாண்டா முன்னாக.. பொட்டில வெச்சி பூட்டிக்கவா கார் வைச்கிருக் கிறேன்… அயர் ஓடத்தானே…’
‘குடுக்கறது என்னத்தை சம்பளமா போட்டிருக்கு…… எழுதிக்க வேண்டியதுதான். நாங்க ஆறு பேரும் போவோம் ன்னொரு எட்டு ரூபா குடுங்க டிக்கட்டுக்குக் காசு வேணும். இன்னைக்கு மொதநாளு கலரியை நம்ப ஏலாது…… வட்டி யையும் போட்டுக்கிடுங்க’
‘நீ லேசா சொல்லிறுவே குடுத்து வாங்கிப் பார்த்துத் தானே தெரியும்… ஒந்தோட்டத்துலேயே எத்தனைபய நமக்கு தொப்பி போட்டிருக்கான்’
‘இத்தாங்க மொதலாளி மத்தவன் கதை நமக்குவாணாம் நம்மளோட கணக்கு வழக்கு’
‘இதுவரை ஒண்ணும் ஆகலே. இந்தா இப்பவே காசு வேணுமா அந்திக்கு வாங்கிக்கலாமா’
அந்திக்கு வர்றேன். அப்ப குடுத்தாப் போதும்!… நீங்க பாட்டுக்கு பூருவா அடிக்கப் போயிறாதீங்க. போறதுன்னா சொல்வி வைச்சுட்டுப் போங்க’
ஒரே நாளில் இருபது ரூபாய் பற்றெழுதிக் கொண்டு வெளியே நடந்தான்.
சளைக்காது உழைக்கும் தோட்டத்து மக்கள்போல் வெய்யிலும் சலிக்காமல் அடித்துக் கொண்டிருந்தது.
சினிமாவுக்குப் பலியான சிறுவர்கள் லயம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர்.
வேலை கிடைக்காத மற்ற அனைவரும் சோம்பலுக்கு பலி யாகிக்கொண்டிருந்தனர்.
நேரம் ஒரு மணிக்கு சற்று முன்பின் இருக்கலாம்.
ஒத்தைக் கடையின் அதே இடத்தில் இப்போது வேறொரு வேன் வந்து நின்றது.
பெரிய பெரிய சினிமாப் போஸ்டர்கள் வேனை மூடிக் கொண்டிருந்தன.
சேலை என்ற பெயரில் மிகவும் ‘செக்ஸி’யாக ரவிக்கையின்றி ஏதோ ஒன்றை உடலைக் கடிக்கச் சுற்றிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு நிற்கும் பயில்வானும் பெயர் சொன்னால் கூட்டம் கூடும் பெரிய ஸ்டார் தான்.
இந்த சாண்டோத்தனம் எல்லாம் தமிழ் சினிமாவின் காதல்.
நாக்கில் ஜலம் ஊறிக்கொண்டு அதைச் சுற்றித் தம்மை மறந்து நிற்கின்ற இந்த ரசிகத்தனம் எல்லாம் நல்ல கலைக்கு சவால்.
சூட்டுக்கப் பலியாகிக் கொண்டிருந்த புல்வெட்டுப் பையன்களும் வேனை சுற்றித்தான் நின்று கொண்டிருந்தனர்.
கதாநாயகன் கையை விட்டால் கதாநாயகியை தாங்கள் பிடித்துக்கொள்ளும் ஆர்வம் அந்த முகங்களில் மிதந்தன.
கீழ்த்தரமான ஒரு சினிமாப் பாட்டை ஒலிபரப்பிவிட்டு வேன் கிளம்பிப் போய்விட்டது.
‘மொதலாளி எப்படிங்க? அந்திக்குப் படம் பார்க்கப் போக கார் வேணுமே…’
‘கார் கிடையாது போ’
முதலாளி ‘டக்’கென்று பதில் சொன்னார்.
‘என்னங்க முதலாளி எங்க ஆசையிலை மண்ணைப் போட்டுடாதீங்க… இன்னைக்கு போய் அவரூட்டு படத்தைப் பார்க்காட்டி உசிரோட இருந்து வேலையில்லே… ஏன் கார் இல்லேன்னுட்டீங்க …’
‘ஆறுமணி ஷோவுக்கு கார் ஏற்கெனவே புக்காயிரிச்சி. அதுதான் இல்லேன்னுட்டேன் …… பணமும் வாங்கியாச்சி பண்ணெண்டு ரூவா…’
‘நாங்க பதினைஞ்சு ரூவா தந்தா…’
‘தாராளமா காரைக் கொண்டு போவலாம் …’
‘பெறகென்ன எங்கணக்குல 25 ரூவா எழுதிக்குங்க …… கார்க் காசை எடுத்துக்கிட்டு மீதியை தாங்க சரியாக 5 1/2 மணிக்கு வருவோம் கார் ரெடியாக இருக்கணும்…’
‘ஆ ஆ …5 1/2 மணிக்கு வந்தா எப்படி. இன்னைக்குத்தான் மொத நாளுங்கிறே அதுவும் பெரியய்யா நடிச்ச படம் கொஞ்சம் முன்னாடியே போகவேண்டாம்’
சிறுவர்களுக்கு ஒரு பெருமை. அவர்களுடை பேவறிட்டை முதலாளிகூட அல்லவா ‘பெரியவர்’ என்கின்றார். ‘சரி மொதலாளி எத்தனைக்கு வரட்டும்…?’
‘ஒரு 41 மணிக்கு வந்தா நல்லது’ என்றபடி எட்டு ரூபாவை அவனிடம் நீட்டினார். நீட்டும்போது ’25’ என்று கூறிக்கொண்டார்.
‘25சை எழுதிக்குங்க’
‘இன்னும் ஒரு ரூவா தாங்க ஒரேயடியா ரெண்டு ரூபா வைப் பிடிச்சுக்கிறீங்களே … …. சம்பளத்தன்னைக்கே தந்துடுவேன்… சரியா நாலரை மறந்துடாதீங்க….’ என்றபடி நடந்தான். மற்ற சிறுவர்களும் பின்தொடர்ந்தனர். ‘காருக்கும் டிக்கட்டுக்கும் நன்னாலு ரூவா தந்துடனும்’ சிறுவர்களி டம் கூறிக்கொண்டான்,
செட் வெளியேறியதும் முதலாளி தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார்.
ஏழு ரூபாவை ஒரு கவரில் போட்டு டிரைவரிடம் கொடுத்துவிட்டுக் கூறினார் ‘4 1/2 மணிக்கு ஒரு ட்றிப் போ. அவனுகளை தியேட்டரில் விட்டதும் வந்து மத்தவன்களை கொண்டுபோ. படம் முடிஞ்ச பெறகும் ரெண்டு ட்றிப் அடி தெரியுதா……. கூட்டுல இருக்குற காசை பகல் வந்தவன்க கிட்ட குடுத்துடு’
டிரைவர் தலையை ஆட்டிக்கொண்டான்.
படம் பார்க்கப் போகும் பையன்களுடன் சேர்ந்து அவனும் பார்த்துக் கொள்வான் பையன்கள் கணக்கில்.
– தமிழமுது ஆடி, ஆவணி, புரட்டாதி 1970.
– நாமிருக்கும் நாடே… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1979, வைகறை வெளியீடு, இலங்கை.
தொடர்புள்ள சிறுகதைகள்
சாணை பிடிக்கலையோ சாணை
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
September 27, 2026
தனக்கு வந்தால்
ஸ்ரீ.தாமோதரன்
September 27, 2026
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026