தீட்டு ரொட்டி
கதையாசிரியர்: தெளிவத்தை ஜோசப்
தின/வார இதழ்: சிரித்திரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2026
பார்வையிட்டோர்: 145
(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழு வழுவென்று வான் முட்ட நின்ற கருப்பந்தைல மரங்களினூடே கருஞ்சாரையாய் ஒளிந்தும் மறைந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது அந்தத் தார் றோட்டு.
இருபுறமும் பரந்து கிடக்கும் பசுந் தேயிலை, மெலிந்த அந்தப் பாதையை மேலும் மெலிவாகக் காட்டிக் கொண்டிருந்தது.
தோட்டத்து லொறி உரசி உரசி பாதையோரத் தேயிலை முள்ளாய் நீட்டிக் கொண்டிருக்கிறது. பாதையை இன்னும் அரை அடி அகலப்படுத்தினால் ஓரத்து தேயிலை உரசுப்படாது என்பது உண்மைதான் என்றாலும் வெட்டப்படும் தேயிலையால் நட்டப்படுவது ஆயிரக் கணக்கில் என்பது வெள்ளைக்காரனின் பொருளாதார மூளைக்குப் பெரிய விஷயமல்ல.
கூடையும் தலையுமாக மலையில் நிற்கும் காய்மார்களுக்கு குட்டிச் சாக்கும் தலையுமாக பகல் சாப்பாடு கொண்டு போகும் சிறிசுகள். குட்டிச் சாக்கிற்குள் இருப்பது பெரும் பான்மையாகக் கருகச் சுட்ட ரொட்டியும், கறுப்புச் சாராயப் போத்தல் நிறைய வெறுந் தேனீருந்தான்.
மலைக்குத் ‘தண்ணி’ கொண்டு போகும் சிறுவர் சிறுமியர் அனைவரும் போய் விட்டனர். மிகவும் பிந்திவிட்ட ‘லெட்சுமிக் குட்டி’ தலையில் தொங்கும் குட்டிச் சாக்கை முதுகுடன் அணைத்துப் பிடித்த வண்ணம் ஓடினாள்.
‘தடக் தடக்’ கென்று குட்டிச் சாக்கு ஆடும்போது தளும்பி ஊற்றும் தேனீரின் சூடு முதுகைத் தடவும்போது நடப்பாள்.
அம்மாவின் கோப முகம் மனதைத் தடவும் போது ஓடுவாள்.
ஓட்டம் கூடக்கூடக் குட்டிச் சாக்கின் ஆட்டம் கூடியது ஆட்டம் கூடக்கூட குட்டிச் சாக்கைத் தொங்க வைக்கும் கயிறு வலுவிழக்கிறது.
ஓடிக் கொண்டே உச்சந் தலையில் உறுத்திய கயிற்றை இலேசாக அசைத்தாள்.
ஏற்கனவே வலுவிழந்திருந்த கயிறு உயிரிழந்தது.
குட்டிச் சாக்கு பாதையில் கிடந்தது.
தேயிலைச் சாயம் றோட்டில் ஓடியது. ரொட்டி எல்லாம் ஒரே போத்தல் ஓடு நுணுங்கி ஒட்டிக் கிடந்தது.
ஓ வென்று கதறினாள் லெட்சுமி. ஆயா கொன்று விடுவாளே என்ற பயம்.
‘ஏம்புள்ளே போட்டு ஒடச்சிட்டியோ ……?’
உடைந்த போத்தலையும், ஊறிக் கிடந்த ரொட்டியை யும் வெறித்து நோக்கியபடி. மலைத்துப் போய் நிற்கும் லெட்சுமியைக் கேட்டாள் எதிரே வந்த சோதி.
‘ஆமாண்டி…… எங்காயா கொன்னுடுமே’ என்று விக்கலும் விம்மலுமாகக் கூறிய லெட்சுமியைப் பரிதாபமாகப் பார்த்தாள் சோதி.
‘நீ ஒங்காயாவுக்குத் தண்ணி கொடுத்துட்டு வந்துட்டி யாடி?”
‘இல்லே புள்ளே, எங்கக்கா மலையுல விழுந்து லொறி யில போட்டுக் கொண்டு போயிட்டாங்களாம்…… அதான் திரும்பிட்டேன். தண்ணி எல்லாம் அப்படியே இருக்கு நீ லயத்துக்கு வர்ரீயா…’
‘ஆமா மலைக்குப் போய் என்ன செய்ய?’
‘ஒங்க ஆயா அந்திக்கு வந்து கொன்னுடுமே…
‘நானு வீட்டுல இருந்தாத்தானே அடிக்கும் . எங்குட் டாச்சும் ஓடிப் போயிட்டேன்னா?”
‘ஓடிப் போகப் போறியா……’
வெள்ளரிப் பிஞ்சில் வெட்டு விழுந்தாற்போல் தெறித்து நின்றது அந்தச் சொல்.
‘ஓடிப் போறியா……!’
‘ஆமா! ஆமா!! எங்க ஆயா வரயிலே வீட்டுல இருக்க மாட்டேன்’
‘ஓடிப்போய் என்ன செய்வே?’
‘எங்குட்டாச்சும் போய் செத்துப் போவேன்’
திக்கென்றது சோதிக்கு.
‘ஓங்க ஆயா அடிப்பாங்கன்னு தானே ஓடிப்போவேன், செத்துப் போவேன்கிறே .. அடி வாங்காமல் இருக்க நான் ஒண்ணு சொல்லவா?”
‘என்னது….?’
அடியிலிருந்து தப்பிக்கும் நப்பாசை லெட்சுமிக் குட்டியை விடவில்லை.
‘என் குட்டிச் சாக்குல இருக்குற தண்ணியைக் கொண்டு போய் கொடுத்திடேன்’
‘என்னது……?’
பாம்பை மிதித்தவள் போல் பதறிப் போனாள் லெட்சுமி.
‘எங்காயாவுக்குத் தெரிஞ்சா வெட்டிப் போட்டுடும்’.
‘தெரிஞ்சாத்தானே…’ மிகச் சாவதானமாகக் கூறினாள் சோதி.
‘எப்படித் தெரியும் நானும் நீயும் சொல்லாட்டி’ லெட்சுமி தயங்கவே சோதி தைரியமூட்டுகின்றாள்.
‘நீ பயமில்லாமெ கொண்டு போ புள்ளே… ஒப்புறாணை நான் சொல்ல மாட்டேன்’
அந்த நேர இக்கட்டைச் சமாளித்தால் போதும் என் றிருந்த லெட்சுமியும் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டாள்.
குட்டிச் சாக்குத் தலைமாறியது.
இரு சிறுசுகளும் எதிர் எதிர்த் திசையில் விரைந்தனர்.
‘அம்மா…… அம்மோவ்… அக்கா மலையில விழுந்திருச்சாம்’.
ஒப்பாரி வைத்தபடி வீட்டுக்குள் ஓடினாள் சோதி.
‘சரிதான் வாடா கண்ணு அக்காவுக்கு ஒண்ணும் ஆயிடலை.. இதோ படுத்திருக்கு தேத்தண்ணிக் குட்டிச் சாக்கு எங்கம்மா…..?’
சோதிக்குத் திக்கென்றது. சமாளித்துக் கொண்டாள்.
‘அம்மா…… அம்மோவ்……’
சிறுமி கண்ணைக் கசக்கிக் கொள்ளுகின்றாள்.
‘என்னம்மா நடந்துச்சி……’
தாய் பதறுகின்றாள்.
‘அக்கா விழுந்துறுச்சேன்னு ஓடியாந்தேனா குட்டிச் சாக்கு நழுவிக் கீழே விழுந்து…..’
‘போனா போவட்டு அழாதேடா ராஜா, கால்ல கையில போட்டுக்கிறாம வந்தியே…… அதே அந்த ஏழுமலையான் புண்ணியம்’
லெட்சுமியின் அப்பா நாட்டுக்கு நடந்து கொண்டிருக்கின்றார்.
நாலுமணி பிந்திவிட்டதென்றால் நாட்டுக்குப் போகாமல் இருக்கமுடியாது அவரால்.
ஊற்றும் மழையாயிருந்தாலும் ‘உக்குவா’ ஊற்றும் தண்ணீரைச் சுவைக்காவிட்டால் அவருக்குத் தூக்கம் வராது.
‘என்ன கங்காணி கூட்டம்… லவுடாஸ் பீக்கரு சத்தம் கேட்டுது…’
எதிரே வந்துகொண்டிருந்தவர் கேட்டார்.
‘வெட்டிப் பயலுக தெரியாதா! சாதிகள் இல்லேடி பாப்பான்னு யாரோ பாடினாராம்…… இவுக அதை எடுத் துக் கூறுகிறாக. ‘சாதி கீதின்னு நமக்குள் நாமளே அடிச்சுக்கக் கூடாது. எல்லோரும் ஒரே சாதி’ அப்படி இப்படின்னு என்னன்னமோ பேசுறானுக சின்னச் சாதி பயலுக……ஒத்துமை அது இதுன்னு சொல்லித் தங்களுடைய கீழ் சாதிக் தெரியாமயா பள்ளு குறையை மறைக்கப் பாக்கிறானுக. தெரியாமயா பறை பதினெட்டுன்னு பிரிச்சு வைச்சிருக்கு…’
அவர் நடந்து விட்டார் நாடு நோக்கி.
ஓடிக்கும் போதே தெறித்து விழுமளவுக்கு முறுகச் சுட்ட ரொட்டி. பொன்னிறத்தில் மொறு மொறுவென்று.
கொண்டு வந்தவள் சோதி. கூட நின்றது லெட்சுமி. இடம் லெட்சுமியின் இஸ்தோப்பு.
‘ரெண்டு பேரும் சாப்பிடுவோம்…… எங்கம்மாத்தான் குடுத்தாங்க…… உனக்கும் கொடுக்கச் சொல்லி…’
புடும்போதே நாவூறிற்று லெட்சுமிக்கு.
ஒரு துண்டு ஒடித்து வாயில் வைக்கப் போகையில் பளார் என்று முதுகில் விழுந்த அறையால் ரொட்டித் துண்டு எகிறிப் போய் விழுந்தது.
‘நீ நாசமாப் போக…… ஏன்டி என் வயித்துல பிறந்துட்டு மானத்தை வாங்குறே… சனியனே, கொஞ்சமாச்சும் சூடு சொறணை இருக்கா ஒனக்கு’
பத்திரகாளியாய் நிற்கும் தாயைக் கண்டதும் பதறிப் போனாள் லெட்சுமி. ஆயா இப்போது வருவாள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
‘அந்தச் செறுக்கி வீட்டுலே இருந்து கொண்டாந்து நீ வாயில வைக்கலாமாடி, பறை பள்ளு நொளை நூத்தெட்டும் ஒனக்கு ஒண்ணுதானா நாற நாயே……’
கன்னத்திலும் முதுகிலுமாக மகளைப் பிய்த்து வாங்கி விட்டாள் அந்த மேல் சாதித் தாய்.
மலையிலிருந்து விரட்டப்பட்ட ஆத்திரம் வேறு.
‘இரு ஒங்கப்பா வரட்டும். அந்தப் பறச் செறுக்கி யோட சேராதே சேர தேன்னு எத்தனை வாட்டி சொல்றது வரட்டும்! லெட்டிப் பொதைக்கச் சொல்றேன்’
‘இல்லாயா தெரியாமச் செஞ்சுட்டேன்’ என்று நடுங்கியவாறு மூலையோடு மூலையாய் முடங்கிக் கொண்டு நின்றாள் லெட்சுமி.
‘நான் வாயில் லைக்காத அந்த வீட்டு ரொட்டிக்காக என்னை இப்படி கெளுத்துக் கட்டுகிறாயே! அன்று ஒரு ரொட்டியையும் தின்று தேத்தண்ணியையும் குடிச்சியே அது…’
இல்லாத ஒன்றை இருட்டில் தேடும் அந்தத் தாயையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் லெட்சுமி.
– சிரித்திரன், சித்திரை 1970.
– நாமிருக்கும் நாடே… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1979, வைகறை வெளியீடு, இலங்கை.
தொடர்புள்ள சிறுகதைகள்
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026
வேண்டுகோள்
மா.வீ.தியாகராசன்
September 27, 2026
பாட்டி சொன்ன கதை
தெளிவத்தை ஜோசப்
September 27, 2026