மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!






(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30
25. சிவகாமி, என்னைச் சோதிக்காதே!
தங்கதுரை காரில் வந்து இறங்கியபோது, சிவகாமி வாசற்புறம் இளங்கோவுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். தங்கதுரை வந்தது பிடிக்காதவள்போல், இளங்கோவை வண்டியிலேயே விட்டுவிட்டு சட்டென்று எழுந்து உள்ளே சென்றாள். சிவகாமியின் அப்பா வெளியே சென்றிருந்தார். அம்மா சமையற்கட்டில் வேலையாக இருந்தாள்.

தங்கத்துரை உள்ளே வந்து சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, “சிவகாமி, மணமாகாத பெண் நீ. இப்போதே குடும்பச் சுமை உன் மீது விழுந்துவிட்டது! பணிப்பெண்ணைப் போல் எப்போது பார்த்தாலும் நீ இளங்கோவை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறாய்! அரசு கண்களை இழந்தவன். அந்தக் குருடனுக்கு அடிமையாக இருக்கவே நீ விரும்பு கிறாயா?” என்றான்.
“நாவை அடக்கிப் பேசுங்கள் தங்கதுரை! என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் உங்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. என் வாழ்வில் நீங்கள் குறுக்கிடாமல் இருந்தால், அது போதும்!” என்றாள் சிவகாமி.
“சிவகாமி, வீணாக என்னைச் சோதிக்காதே! என் சினம் எவரையும் சும்மா விடாது!” என்று மிரட்டியபடி எழுந்துபோனான் தங்கதுரை.
சிவகாமி சிந்தனை செய்தபடி அப்படியே நின்றுவிட்டாள். நீண்ட நேரம் கழித்துதான் அவளுக்கு இளங்கோவின் நினைவு வந்தது. தங்கதுரை வந்ததும், இளங்கோவை அப்படியே வண்டியில் விட்டு வந்தோமே!
சிவகாமி வெளியே ஓடிவந்து பார்த்தாள். தள்ளுவண்டி இருந்தது. ஆனால், வண்டியில் இளங்கோவைக் காணோம்!
26. எங்கே இளங்கோ?
சிவகாமி குழந்தை இளங்கோவைக் காணாமல் பதறிப்போய் பக்கத்திலிருந்த முத்தழகின் பங்களாவை நோக்கி ஓடினாள். எதிரே, முத்தழகு.
“குழந்தை இளங்கோவை பாவை கொண்டு வந்தாளா?” என்று கேட்டாள் சிவகாமி.
“இல்லை! கொஞ்சம் தாமதித்தாலும் இளங்கோவை நாம் உயிருடன் பார்ப்பது அரிது. நீ இங்கேயே இரு! நான் போய் இளங்கோவை மீட்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே காரில் போய் ஏறி உட்கார்ந்தான் முத்தழகு.
சிவகாமி காரில் எட்டிப் பார்த்தாள். முன் சீட்டில் தோல்பை ஒன்று இருந்தது. அது முத்தழகின் வீட்டு நகைகள் அடங்கிய பை என்பது சிவகாமிக்குத் தெரியும்.
“நகைப்பையை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!” என்றாள் சிவகாமி.
“தொலைபேசியில் செய்தி வந்தது. நகைப் பையை உடனே கொண்டு வந்து கொடுத்தால்தான் இளங்கோவை உயிருடன் பார்க்க முடியுமாம்! சிவகாமி, இந்த விஷயம் அண்ணன் அரசுவுக்குத் தெரிந்தால் அவர் எவ்வளவு துன்பம் கொள்வார்! நீ யாரிடமும் சொல்லிவிடாதே! முதலில் குழந்தையை மீட்போம். பிறகு உண்மையைச் சொல்லுவோம்!”
“இப்போது நீங்கள் எங்கே செல்லுகிறீர்கள்?”
“தங்கதுரையின் பங்களாவுக்கு!” என்று சொல்லிவிட்டுக் காரைக் கிளப்பினான் முத்தழகு.
சிவகாமி, கார் மறையும் வரையில் பார்த்துக்கொண்டு இருந்தாள். பிறகு தலைதெறிக்க எங்கேயோ ஓடினாள்!
27. எனக்கா இந்த முடிவு?
தங்கதுரை, மாடியிலிருந்த அறை ஒன்றில், சன்னல் வழியாகத் தொலைவில் தெரியும் கடலைப் பார்த்துக்கொண்டே உலவிக்கொண்டு இருந்தான். அவன் உள்ளத்திலே, உடலிலே படபடப்பு. முத்தழகை எதிர்பார்த்து உலவிக் கொண்டிருந்தான் அவன். முத்தழகு வந்தால் நகைப்பையும் வருமே!
எவரோ படிகளில் ஏறி வரும் ஓசை கேட்டது. வருவது யார்? முத்தழகா? நகைப் பையோடு வருகிறானா? வெறுங்கையோடு வருகிறானா?
கதவைத் திறந்துகொண்டு வந்து நின்றவர் மருதநம்பி!
மருதநம்பி அறைக்குள் வந்ததும், கதவுகளைச் சாத்திவிட்டு அங்கேயே நின்றுகொண்டார்.
“மருதநம்பிப் பெரியவரே, உங்களை நான் எங்கேயெல்லாம் தேடுவது! நீங்கள் சென்னையில் தான் இருந்து வருகிறீர்களாமே! எனக்குத் தெரியாதே!” என்றான் தங்கதுரை.
“நான் இங்கே இருப்பது உனக்குத் தெரியவேண்டிய தேவையில்லை! உன்னை எச்சரித்துவிட்டுப் போகவே வந்தேன்!” என்றார் மருதநம்பி.
“எனக்கா எச்சரிக்கை? அதுவும் உங்களிடத்திலிருந்தா?” என்று கேட்டான் தங்கதுரை. சினத்தோடல்ல, சிரிப்போடு!
“என் திருமகள் மணிமொழியின் வாழ்வில் நீ திருட்டுத்தனமாகப் புகுந்துவிட்டாய். அமைதியாக இருக்கவேண்டிய அவள் வாழ்வில் ஆறாத துன்பங்கள்! ஆதரவோடு அவள் வாழ்ந்த இடத்தை விட்டு, அவளை விரட்டிவிட்டாய் நீ! அவளை எங்கே விரட்டினாய் சொல்லு?” என்று கத்தினார் மருதநம்பி.
“மணிமொழியின் அமைதியைக் கெடுக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், ‘மணிமொழி அரசுவின் மனைவி அல்லள்’ என்பதை என் நண்பன் முத்தழகிடம் நான் என்றைக்கோ சொல்லியிருப்பேன். அரசுவும் அவன் மனைவியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட கண்ணாடி போட்ட உண்மையான புகைப்படத்தைக் கட்டிலில் கிடந்த தலையணைக்கடியில் ஒளித்து வைத்திருந்தாள் மணிமொழி. அந்தப் புகைப்படத்தை நான் கைப்பற்றிக் கொண்டு வந்து இங்கே வைத்திருக்கிறேன். அதை வைத்து அவளை மிரட்டி, மீண்டும் அவள் மூலமாக அந்த நகைப்பையைக் கடத்திவிடலாம் என்று நான் கருதினேன். ஆனால், அதற்குள் மணிமொழி, தான் அரசுவின் மனைவி அல்லள் என்றும், அரசுவின் மனைவி விமானத்திலிருந்து குதித்து இறந்துவிட்டாளென்றும் எழுதி வைத்து விட்டுப் பறந்து போய்விட்டாள். இப்போது முத்தழகு மணி மொழியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.
மணி மொழி உம்மிடம்தான் வந்து சேர்ந்திருப்பாள், நீர்தான் அவளைக் காத்து வருகிறீர் என்று நான் கருதினேன். அதுவும் இல்லையென்றாகிவிட்டது இப்போது. இருந்தாலும் பெரியவரே, மணிமொழி தப்ப வழியில்லை. நம் கூட்டத்திற்கு வந்த பிறகு தப்பிச் செல்லுவது என்பது எப்படி முடியும்? உங்களுக்குத் தெரியாததா பெரியவரே?” என்றான் தங்கதுரை.
தொடர்ந்து, “மற்றதெல்லாம் இருக்கட்டும் பெரியவரே! பெரிய ஐயா உங்களுக்கு ஒரு பெட்டி அனுப்பியிருக்கிறார்!” என்றான்.
“எனக்கா? எனக்கே பெட்டியா!” என்று அலறினார் மருதநம்பி.
“ஆமாம் பெரியவரே!” என்று சொல்லிக்கொண்டே மேசை அறையை இழுத்து, அந்தப் பெட்டியை எடுத்து மருதநம்பியிடம் நீட்டினான் தங்கதுரை.
மருதநம்பி, கரங்கள் நடுங்க அந்த அட்டைப் பெட்டியை வாங்கினார். திறந்து பார்த்தார். உள்ளே வழக்கம்போல் ஒரு நைலான் குழந்தைச் சட்டை இருந்தது. மருதநம்பி அந்தக் குழந்தைச் சட்டையை எடுத்து இரு கைகளாலும் பிரித்து, விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்.
அந்தச் சட்டையில், பூ வேலைகளுக்கு நடுவில் துப்பாக்கி ஒன்று தெரிந்ததும், மருதநம்பியின் கரங்கள் நடுங்கின. உடல் ஆடியது. மயக்கம் கொண்டு நின்றார்!
அவர் கையிலிருந்த அந்தக் குழந்தைச் சட்டை கீழே விழுந்தது. அவர் தடுமாறி, தங்கதுரைக்கு அருகில் வந்து, “தங்கதுரை, எனக்கா இந்த முடிவு? இல்லை… மடியமாட்டேன். மகள் இருக்கிறாள் எனக்கு” என்று கத்தினார்.
தங்கதுரை சிரித்துக் கொண்டே தன் கால்சட்டைப் பையிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து, மருதநம்பியைக் குறி பார்த்து, துப்பாக்கியின் விசையை அழுத்தினான்.
கீழே தொட்டிலில் படுத்துக் கிடந்த இளங்கோ, துப்பாக்கி வெடித்த ஓசையைக் கேட்டு விழித்து அழுதான். ஆனால், கொஞ்ச நேரத்திற்குள் குழந்தை இளங்கோவின் ஓசை ஒடுங்கிப் போய்விட்டது. கிழவி, குழந்தையின் வாயில் துணியை வைத்து அமுக்கி, அதன் அழுகுரலை அடக்கிவிட்டாள்!
– தொடரும்…
– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.