மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 9,752 
 
 

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

19. அதிர்ச்சியைத் தரும்; அப்புறம் ஆனந்தத்தைத் தடும்!

சிவகாமியைத் தனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று, தங்கதுரை முத்தழகிடம் கேட்டுக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நடுப்பகல் நேரம்.

முத்தழகின் அப்பா, அவர் அறையில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்துகொண்டு இருந்தார். அவருக்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து, பேரன் இளங்கோவுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டு இருந்தாள் முத்தழகின் அம்மா. முத்தழகு, கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து ஏதோ ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு இருந்தான். மணிமொழி சாப்பிட்டுவிட்டுச் சமையலறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது தபால்காரன் உள்ளே நுழைவது அவளுக்குத் தெரிந்தது.

மணிமொழி நேராக வாயிலுக்குச் சென்றாள். தபால்காரன், மணிமொழியின் கையில் இரண்டு கவர்களைக் கொடுத்து விட்டுப் போனான். ஒரு கவரில் இருந்த முகவரியைப் படித்தாள் மணிமொழி. மெ.தில்லைநாயகம் மெ.தில்லைநாயகம் அவர்கள், ஏரிக்கரைத் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை.

‘மாமனாருக்கு வந்திருக்கும் கடிதம்! சரி, இன்னொரு கடிதம் யாருக்கு?”

அ.மணிமொழி, மே/பா தில்லைநாயகம் அவர்கள், ஏரிக்கரைத் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை என்றிருந்தது கவரிலிருந்த முகவரி.

தனக்குத்தான் கடிதம் என்பதை அறிந்ததும் மணிமொழி திடுக்கிட்டாள்.

‘அப்பா எழுதியிருப்பாரா? இல்லை. அப்பாவுக்கு நான் இங்கே தங்கியிருப்பது தெரியாதே! இந்த முகவரியே அப்பாவுக்குத் அப்பாவுக்குத் தெரியாதே! தெரிந்தவர்கள் யாராவது எழுதியிருப்பார்களா? இருக்கமுடியாது. தெரிந்தவர்கள் எழுதினால் மணிமொழி என்றுதான் எழுதுவார்கள். மிகத் தெரிந்தவர்களாக இருந்தால் மருதநம்பி என்ற அப்பா பெயரில் முதல் எழுத்தைச் சேர்த்து, ம.மணிமொழி என்றல்லவா எழுதுவார்கள்! இங்கே அ.மணிமொழி என்றல்லவா இருக்கிறது! இந்த ‘அ’ என்பது யாரைக் குறிக்கிறது?” – சிந்தித்த மணிமொழிக்குத் திடீரென்று விடை கிடைத்தது.

அ என்பது அரசு என்ற பெயரின் முதல் எழுத்து. மணிமொழி அரசுவின் மனைவி. ஆக, இறந்துபோன அந்த மணிமொழிக்கு வந்திருக்கும் கடிதம் இது.

விலாசம் இருக்கிறதா என்று அந்த கவரைத் திருப்பிப் பார்த்தாள். ‘ஆ’ என்று அவள் வாய் திறந்தது. அவள் கையிலிருந்த கவர் கீழே விழுந்தது.

அனுப்பியோன்: தி.அரசு, பக்ராநங்கல் அணைக்கட்டு, கிழக்கு பஞ்சாப்.

படபடவென்று கண் இமைகளும் மனமும் அடித்துக்கொள்ள, கையிலிருந்த மற்றொரு கவரையும் திருப்பிப் பார்த்தாள் மணிமொழி. அதை அனுப்பியதும் அரசுதான்.

ஒரு முடிவுக்கு வந்த மணிமொழி, மணிமொழி என்ற விலாசமிட்டுக் கீழே கிடந்த கவரை எடுத்துத் தன் சோளிக்குள் வைத்துக்கொண்டு, மற்றொரு கவரை எடுத்துக் கொண்டு நேராகத் தில்லை நாயகம் இருந்த அறைக்குள் நுழைந்து, அங்கே மாமியார் மங்கையிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு விர்ரென்று வெளியே வந்தாள்.

நேராகத் தோட்டத்திற்கு வந்தவள், சுற்றிலும் நோட்டமிட்டுத் தன்னை எவரும் பார்க்கவில்லை என்று தெரிந்ததும், தன் சோளிக்குள்ளிருந்த அந்த கவரை எடுத்துப் பிரித்துப் படித்தாள். முதல் வரியைப் படித்ததுமே அவள் கண்கள் கலங்கின.

‘மறக்கமுடியாத மணிமொழிக்கு, எப்படி இந்தக் கடிதத்தைத் தொடங்குவது, எப்படி முடிப்பது, என்ன எழுதுவது என்பதே எனக்குத் தெரியவில்லை!

நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன் என்பது இந்தக் கடிதத்தை நான் எழுதுவதிலிருந்தே உனக்குத் தெரியும். இந்தச் செய்தி உனக்கு முதலில் அதிர்ச்சியைத் தரும், அப்புறம் ஆனந்தத்தைத் தரும். உடனே ஓடிப்போய் நெற்றியில் பெரிய திலகம் இட்டுக்கொள்வாய். வெள்ளைச் சேலையை உரிந்து எறிந்துவிட்டுப் பட்டுப் புடவையைக் கட்டிக் கொள்வாய்!’

இதைப் படித்ததும், அப்படியே கண்களை மூடிக்கொண்டாள் மணிமொழி. மூடிய அவள் விழிகளிலிருந்து கண்ணீர் கொட்டியது.

‘நீங்கள் இறந்த பிறகு ஒருக்கணமும் இந்த உலகத்தில் இருக்கமாட்டேன்!” என்று என்னிடம் நீ அடிக்கடி சொல்வாயே! எனக்கு நினைவு வந்ததும் நீ இருக்கிறாயா, இல்லையா என்பதைத்தான் முதலில் விசாரித்தேன். பஞ்சாப் அரசினர் உன்னைப் பத்திரமாக என் அப்பா அம்மாவிடம் அனுப்பி வைத்துவிட்டதாகத் தெரிந்தது.

மணிமொழி, உன் அப்பா இறந்த பிறகு, எனக்காக நீ வாழ்ந்தாய். நான் இறந்ததாகக் கேள்விப்பட்டாலும் நம் குழந்தைக்காக நீ வாழ்வாய் என்பது எனக்குத் தெரியும்.

கோமதி, கோமதி என்று உன் சொந்தப் பெயரைச் சொல்லி அழைக்க எனக்கு ஆசையாக இருக்கிறது. கோமதி என்பது உன் அப்பா வைத்த பெயர். மணிமொழி என்பது நான் வைத்த பெயர். மணிமொழி, உடனே ஓடி வந்து உன் மடியில் படுத்துக்கொண்டு, ‘கோமதி… கோமதி!” என்று கத்த வேண்டும் போலிருக்கிறது. காரணத்தைக் கடிதத்தின் கடைசியில் சொல்கிறேன்.

கல்யாணம் ஆவதற்குமுன் நீ கன்னிப் பெண் கோமதியாக இருந்தாய். இப்போது நீ கல்யாணமாகிக் குழந்தையும் பெற்ற மணிமொழி! நீ கல்யாணமாகாத கன்னிப்பெண் கோமதியாகவே இருந்திருக்கலாம்! காரணம்? கடிதத்தின் கடைசியிலே சொல்கிறேன்.

நான் உன்னை ‘மணிமொழி, மணிமொழி’ என்று அழைக்கும் போது, ‘உங்களுக்கு ஏன் இந்த மணிமொழி என்ற பெயரில் இவ்வளவு மயக்கம்?” என்று கேட்பாய். உன்னுடைய இந்தக் கேள்விக்கு அன்றும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை, இன்றும் பதில் சொல்ல முடிய வில்லை.

மணிமொழி, என்னை நீ பிரிந்து இரண்டு மாதங்கள் இருக்கும் என்று எண்ணுகிறேன். இப்படியே காலமெல்லாம் என்னை நீ பிரிந்து இருந்து விட்டால், நான் எவ்வளவோ மகிழ்ச்சி உடையவனாக இருப்பேன்! காரணம்? கடிதத்தின் கடைசியிலே சொல்கிறேன் மணிமொழி!’

இதைப் படித்ததும், மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள் மணிமொழி. தன்னைத் தேற்றிக் கொண்டு மீண்டும் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள்.

‘நம் குழந்தை தன் அப்பாவை இழக்கவில்லை. ஆனால், நீ உன் கணவனை இழந்துவிட்டாய் மணிமொழி! காரணம்? கடிதத்தின் கடைசியிலே சொல்கிறேன் மணிமொழி.’

இதற்குமேல் மணிமொழியால் படிக்க முடியவில்லை. கடிதத்தை அப்படியே மடித்துச் சோளிக்குள் வைத்துக்கொண்டு மேலே மாடியைப் பார்த்தாள். மாடிச் சன்னல் வழியாக, முத்தழகு மணிமொழியையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

மணிமொழி உடனே தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். மெல்லத் தலையைக் குனிந்து கொண்டே உள்ளே வந்து, தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டு படுக்கையில் வந்து விழுந்தாள். நீண்ட நேரம் அப்படியே கட்டிலில் விழுந்து கிடந்த மணிமொழி, சோளிக்குள் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள்.

‘தமிழகத்திலே பிறந்த நீ, தமிழகத்திலேயே இருக்கிறாய் இன்று. ஆனால், நான் கிழக்குப் பஞ்சாபிலே ஓர் அரசினர் மருத்துவ விடுதியில் கிடக்கிறேன். நான் இப்படி மருத்துவ விடுதியிலே கிடப்பதால்தான், இந்தக் கடிதத்தை என் வாயால் சொல்லி, சொல்லியதை டைப் அடிக்கச் செய்து, கடிதத்தின் கடைசியில் என் கையெழுத்தை மட்டும் போட்டிருக்கிறேன். இதனால் விபத்தில் நான் என் கையையே இழந்து விட்டேன் என்று கருதிவிடாதே! அதுதான் என் கைப்பட கையெழுத்துப் போட்டிருக்கிறேனே!’

மணிமொழி, தொடர்ந்து கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள்.

‘குழந்தையை உன் அப்பா பார்க்கவில்லை. என் அப்பாவாவது தன் பேரனைப் பார்த்தாரே! குழந்தையைப் பார்த்த என் அம்மாவும் என் அப்பாவும் என்ன சொன்னார்கள்? என் தம்பி முத்தழகு உன்னிடம் பிரியமாக நடந்துகொள்கிறானா?”

இதைப் படித்ததும் அப்படியே திரும்பிக் குப்புறப் படுத்துக்கொண்டு குமுறிக் குமுறி அழுதாள் மணிமொழி.

‘பாவை நல்லவள். உன்னை அவள் நன்றாக உபசரிப்பாள். அத்தை மகள் சிவகாமி அடிக்கடி வருகிறாளா? அவளைக் கொஞ்சம் கவனித்துக்கொள், மணிமொழி. உன்னைப் போல அடக்கம் உள்ளவளல்லள் அவள். சுதந்திரப் பறவை. அவளைக் கட்டுப்படுத்த எவருமே இல்லை. ஆனால், அவள் நல்லவளாக வாய்ப்புண்டு. அவளை நினைக்கும்போது எனக்குக் கண்கள் கலங்குகின்றன மணிமொழி!

கட்டடத்தைக் கட்ட எனக்குத் தெரியும். வாழ்க்கைக் கட்டடத்தைக் கட்ட வழியில்லாமல் தவிக்கிறேனே! தண்ணீரைத் தேக்கும் அணைக்கட்டை எனக்குக் கட்டத் தெரியும். உன் கண்ணீரைத் தேக்கும் அணைக்கட்டைக் கட்ட எனக்கு வாய்ப்பு இல்லாது போயிற்றே மணிமொழி!

பக்ராநங்கல் அணைக்கட்டைக் கட்டிப் பஞ்சாபைச் செழிக்க வைக்கவேண்டும் என்று பாடுபட்ட எத்தனையோ பேரில் நானும் ஒருவன். என் தலைமையில் ஒரு பெரிய குழு ஒரு பெரும் பாறையை உடைக்கும் வேலையில் இறங்கியது. பாறைக்குப் பக்கத்திலே கரைபுரண்டு ஓடும் ஆறு. கொஞ்சம் தவறினாலும் ஆற்றிலேதான் விழ வேண்டும். தண்ணீரின் வேகம், விழுந்தவனை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று எவருக்குமே தெரியாது! இந்த ஆபத்தான சூழ் நிலையில்தான், குறுக்கே நந்தி மாதிரி இருந்த அந்தப் பெரும் பாறையை உடைக்கும் வேலையில் நாங்கள் இறங்கினோம். நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காதபோது, திடீரென்று பாறை படாரென்று வெடித்தது. நாங்கள் தூக்கி எறியப்பட்டோம்!”

இதைப் படித்தபோது மணிமொழியின் கரங்கள் நடுங்கின!

மணிமொழி தொடர்ந்து கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள்..

‘நாங்கள் மூவரும் தூக்கி எறியப்பட்டோமல்லவா? மற்ற இருவரும் எங்கே போய் விழுந்தார்கள், என்ன ஆனார்கள் என்பது எனக்குத் தெரியாது! எனக்கு உணர்ச்சி வந்துவிட்டதாக நான் நினைத்த நேரத்தில், விழிகளைத் திறக்க முயன்றேன். முடியவில்லை மணிமொழி!

நான் கைகளால் தொட்டுப் பார்த்ததில், ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடப்பதைப் போலிருந்தது. அப்போது ஒரு குரல் சொல்லிற்று… “ஐயா, இப்போது நீங்கள் ஓர் ஏழைச் சலவைத் தொழிலாளியின் எளிய வீட்டில் இருக்கிறீர்கள். இந்த இடம் பங்ராநங்கல் அணைக்கட்டிலிருந்து 9 மைல் தூரத்தில், ஆற்றோரத்தில் இருக்கிறது. நான், என் மனைவி, மூன்று பேர்தாம் இந்த வீட்டில். ஐயா, சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் ஒரு கட்டையின்மேல் நீங்கள் மிதந்து வந்தீர்கள். கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த நாங்கள் உங்களைத் தூக்கி வந்து காப்பாற்றி, எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தோம். உங்கள் மண்டை லேசாகப் பிளந்திருக்கிறது! வைத்தியர் மருந்து போட்டுக் கட்டியிருக்கிறார். தங்கள் உடம்பில் பல இடங்களில் காயம். உங்களைப் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை! யாரிடம் விசாரிப்பது என்றும் புரியவில்லை. நீங்கள் யார்? உங்கள் வீடு எங்கே இருக்கிறது? சொன்னால் கொண்டு போய் விட்டு விடுகிறோம்.”

நான் அவனுக்குப் பதில் சொல்ல வாயைத் திறந்தேன். ஆனால், மறுபடியும் நினைவை இழந்துவிட்டேன்.

மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு, எனக்கு உணர்வு வந்த போது நான் சர்க்கார் ஆஸ்பத்திரி ஒன்றில் இருப்பதை உணர்ந்தேன். என்னைச் சுற்றிலும் என்னோடு வேலை செய்யும் நண்பர்கள் இருந்தார்கள் என்பதை அவர்களது குரல்களின் மூலம் உணர்ந்தேன். ‘தூக்கி எறியப்பட்ட உங்கள் மூன்று பேரில் உன்னைத் தவிர மற்ற இருவரும் கரையோரத்திலே அடிபட்டுச் செத்துக் கிடந்தார்கள். அவர்களை எடுத்து அடக்கம் செய்துவிட்டோம். உன்னை மட்டும் காணோம். நீ ஆற்றோடு போய்விட்டாய் என்று முடிவு செய்தோம். பஞ்சாப் அரசினர், நீ இறந்து போனாய் என்று முடிவு செய்து, உன் மனைவிக்கும், பெற்றோருக்கும் செய்தி தந்து, உன் மனைவியையும் குழந்தையையும் உன் பெற்றோரிடம் அனுப்பி விட்டார்கள். அதற்குப் பிறகு பல நாட்கள் கழித்துதான், நீ இங்கிருந்து 9 மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறாய் என்று தெரிந்தது. உடனே உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தோம்’ என்று அவர்கள் சொன்னார்கள்.

கடைசியில் சொல்கிறேன், கடைசியில் சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வந்தேனே, இதோ சொல்லி விட்டேன்… நான் பார்வையை இழந்துவிட்டேன் மணிமொழி! இன்னும் பத்து தினங்களில் கண்டிப்பாக நான் அங்கு இருப்பேன்!

உன் காதலன், தி.அரசு.’

கடிதத்தைப் படித்து முடித்ததும் ஓவென்று வாய்விட்டு அழப் போனாள் மணிமொழி. அப்போது, படபடவென்று வெளியே பல பேர் சேர்ந்தாற் போல் கதவைத் தட்டினார்கள். மணிமொழி அசையவில்லை. அப்படியே கட்டிலில் கிடந்தாள். வெளியே மாமனார், மாமியார், முத்தழகு, பாவை, டாக்டர், சிவகாமி, சிவகாமியின் அப்பா, சிவகாமியின் அம்மா எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

“அண்ணி… அண்ணி!” என்று முத்தழகு கத்திக் கத்திக் கதவைத் தட்டினான். உள்ளே ஓவென்று மணிமொழி வாய் விட்டு அழுவது கேட்டது.

20. அண்ணியைவிட அழகி ஓருத்தி உண்டா?

சில தினங்களுக்குப் பிறகு முத்தழகு, அத்தை வீட்டிற்குள் நுழைந்தான். முன்னால் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த சிவகாமியின் அப்பா, “என்னடா முத்தழகு, அண்ணனிடமிருந்து தந்தி வந்து விட்டதா?” என்று கேட்டார்.

“வந்துவிட்டது மாமா. வியாழக்கிழமை காலையில் 6 6 மணிக்கு வரும் விமானத்தில் வருகிறார். நாங்களெல்லாம் விமான நிலையத்துக்குப் போகிறோம். நீங்களும் வந்து விடுங்கள் மாமா!” என்ற முத்தழகு, “சிவகாமி எங்கே?” என்று கேட்டான்.

“அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. தன் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறாள்” என்றார் சிவகாமியின் அப்பா.

உள்ளே சென்றான் முத்தழகு. சிவகாமியின் படுக்கை அறைக் கதவு சும்மா சாத்தியிருந்தது. அதைத் திறக்கலாமா, வேண்டாமா என்று எண்ணிய முத்தழகு, திறக்கக்கூடாது என்று முடிவு செய்து சமையலறைக்கு வந்தான்.

சிவகாமியின் அம்மா முத்தழகைப் பார்த்ததும், “வா தம்பி, அபூர்வமாக இருக்கிறதே! என்ன விசேஷம்?” என்று கேட்டாள்.

“ஒன்றுமில்லை அத்தை, சிவகாமியைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன். தூங்கிக்கொண்டு இருக்கிறாள்” என்றான் முத்தழகு.

“தூங்கினால் என்ன, எழுப்பு! நீ எழுப்புவதற்கு என்ன, போ தம்பி, போய் எழுப்பு!” என்றாள் சிவகாமியின் அம்மா.

“சரி அத்தை” என்று சொல்லிவிட்டு வந்து, சிவகாமி தூங்கும் அறைக் கதவை மெல் லத் திறந்து பார்த்தான் முத்தழகு. சிவகாமி அலங்கோலமாகப் படுக்கையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். முத்தழகு அவள் அருகில் சென்று, ‘சிவகாமி, சிவகாமி!” என்றான். அவள் எழுந்திருக்க வில்லை. மெல்ல அவள் தோளைத் தொட்டு, “சிவகாமி!” என்றான்.

சிவகாமி திடுக்கிட்டு எழுந்து தன் ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டு, கண் விழித்துப் பார்த்தாள்.

“என்ன அத்தான், நீங்களா? நான் யாரோ என்று பயந்து போனேன்!” என்று சோம்பல் முறித்தாள்.

“சிவகாமி, உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்!”

“பெரிய அத்தான் வரப் போகிறாரே, அது பற்றியா? இல்லை, நம்முடைய கல்யாண விஷயம் பற்றியா?”

“கல்யாண விஷயமா?”

“ஆமாம் அத்தான், உங்களுக்கும் எனக்கும் கல்யாணம்!?”

“நல்ல கதை! எனக்கும் கல்யாணம் நடக்கப்போகிறது, உனக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது! ஆனால், எனக்குப் பெண் வேறு; உனக்கு மாப்பிள்ளை வேறு!”

“அத்தான்! நீங்கள் விளையாடுகிறீர்கள்!” என்று சிணுங்கினாள் சிவகாமி.

“விளையாடவில்லை. சரி, எழுந்து புடவையை மாற்றிக் கொண்டு வா! கொஞ்சம் வெளியே போய் வருவோம்.” என்றான் முத்தழகு.

“இருங்கள் அத்தான், இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்” என்று சிவகாமி வெளியே போனாள்.

முத்தழகு அவளின் படுக்கையில் கிடந்த ஆங்கில புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். அது பேராசிரியர் ‘ஸ்மைல்ஸ்’ எழுதிய ‘கடமை’ என்ற புத்தகம்.

‘நன்கு கற்றவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய இந்தப் புத்தகத்தைச் சிவகாமி படிக்கிறாளே! அப்படியானால், அவள் அறிவு ஒளி பெற்று வருகிறதா? சிவகாமி இம்மாதிரி ஒரு புத்தகத்தைப் படிக்கும் பண்பினள் என்பதை எண்ணிக்கூடப் பார்க்கவில்லையே நான்!’ என்று எண்ணிக்கொண்டே புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினான் முத்தழகு.

அதனுள்ளிருந்து ஒரு புகைப்படம் தரையில் விழுந்தது. அது அண்ணன் அரசுவின் படம்!

அதற்குள் யாரோ வரும் காலடி ஓசை கேட்க, புகைப்படத்தை எடுத்த இடத்திலேயே வைத்துப் புத்தகத்தை மூடி, இருந்த இடத்தில் வைத்து விட்டான் முத்தழகு.

வந்தது சிவகாமிதான்.

அவளைப் பார்த்ததும், “சிவகாமி, நீ மாறிவிட்டாய்!” என்றான் முத்தழகு. இதைச் சொல்லும்போது, திடீரென்று முத்தழகின் கண்கள் இரண்டும் கலங்கிவிட்டன. அதை அவள் அறியாதவாறு சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“உண்மைதான் அத்தான்! நான் கூச்சம் என்பதே ஒரு சிறிதும் இல்லாதவள் என்று நீங்கள் என்னை அடிக்கடி சொல்வீர்கள். ஆனால், நான் உங்களைத் தவிர, என் அப்பா அம்மாவைத் தவிர, மற்றவர்களிடமெல்லாம் பெரும் அடக்கமுள்ள பெண்ணாகத்தான் நடந்து வருகிறேன். முன்பு நீங்கள் கண்ட சிவகாமி வேறு; இப்போது நீங்கள் காணுகிற சிவகாமி வேறு! ஆளைக் கொட்டும் தேளாக இருந்த நான், மீண்டும் அன்பு காட்டும் அணிலாக மாறிவிட்டேன் அத்தான்!” என்றாள் சிவகாமி. இதைச் சொல்லிவிட்டு அவளும் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கண்களிலும் கண்ணீர்!

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு இருவரும் வெளியே வந்தார்கள்.

சிவகாமிக்கு நன்றாகக் கார் ஓட்டத் தெரியும். அதனால், காரேஜுக்குப் போய் அவளே காரை எடுத்துக்கொண்டு வந்தாள். சிவகாமிக்குப் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான் முத்தழகு. கார் புறப்பட்டது.

வாயிலுக்கு வந்ததும் டக் கென்று காரை நிறுத்தினாள் சிவகாமி!

அங்கே நெற்றியில் பெரும் திலகமிட்டுப் பச்சைப் பட்டுப் புடவை உடுத்தி வெள்ளைச் சோளி அணிந்து புத்தம் புது மலர் போல் ஒளியுடன் நின்று கொண்டிருந்தாள் மணிமொழி!

வாயிலில் வனதேவதை போல் நின்றுகொண்டு இருந்த அண்ணியைக் கண்டதும் முத்தழகு திடுக்கிட்டான். காரை விட்டுக் கீழே இறங்கி, “என்ன அண்ணி, இந்த நேரத்தில் இங்கே..?” என்று கேட்டான்.

“அவர் வியாழக்கிழமையன்று வர இருப்பதை இங்கு எல்லாருக்கும் சொல்லிவிட்டுப் போகலா மென்று வந்தேன்” என்றாள் மணிமொழி.

முத்தழகு இங்கே இருப்பான் என மணிமொழி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அதனால் அவள் முத்தழகைப் பார்த்ததும், கொஞ்சம் பயந்தாள்.

“வேறொன்றும் இல்லையே அண்ணி?”

“இல்லை, நான் உள்ளே போய்ச் சொல்லிவிட்டுப் போகிறேன். நீங்கள் புறப்படுங்கள்!”

“சரி அண்ணி” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிச் சிவகாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கதவைச் சாத்திக் கொண்டான் முத்தழகு.

கார் புறப்பட்டது.

நுங்கம்பாக்கத்தைத் தாண்டியதும், “அத்தான், எங்கே போகட்டும்?” என்று கேட்டாள் சிவகாமி.

“உனக்கு எந்தக் கடற்கரை பிடிக்கிறதோ, அங்கே போ” என்றான் முத்தழகு.

“எனக்கு அடையாறு கடற்கரைதான் பிடிக்கும்!”

“சரி, அங்கேயே போ!”

கார் விரைந்தது.

கடற்கரை வந்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, “அத்தான்! இறங்குங்கள்” என்று சொல்லிக் கொண்டே சிவகாமி கீழே இறங்கினாள்.

இருவரும், மேலதிகாரிகள் தங்களுக்கென்று கடற்கரையோரமாகக் கட்டிவிட்டிருக்கும் சிறு வீடுகளைத் தாண்டி, மணல் ஓரத்திலிருந்த ஒரு மரத்தடியில் வந்து உட்கார்ந்தார்கள்.

“சிவகாமி, மனம்விட்டு உன்னிடம் சில விஷயங்களைச் சொல்லலாமென்றிருக்கிறேன்.”

“சொல்லுங்கள் அத்தான்!”

“உன் திருமணம் பற்றிப் பேசப்போகிறேன். நீ கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதுதானே?”

“கண்டிப்பாக. ஆனால் யாரை என்பதுதான் தெரியவில்லை. நான் சன்னியாசினியாக வாழ விரும்பவில்லை. கல்யாணம் செய்துகொண்டு கணவனோடு வாழவே ஆசைப்படுகிறேன். ஆனால், அந்தக் கணவனும் என்னோடு, என் தாய் தந்தையரோடே இருக்கவேண்டும். இதுதான் என் ஆசை.”

“இது நடக்கக்கூடியதுதானே சிவகாமி! நீ பணக்காரி. ஆகையால், உன்னைக் கல்யாணம் செய்துகொள்பவன் உன் பக்கத்திலேயே இருப்பானே!”

இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தான் முத்தழகு.

பிறகு, “நீ யாரைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் சொல்லட்டுமா?” என்று கேட்டான்.

“அத்தான்! நீங்கள் பெண் உரிமையைப் பறிக்கிறீர்கள். படித்தவர்களாகிய நீங்களே இப்படிச் செய்யலாமா? ‘யாரைக் கல்யாணம் செய்து கொள்ள நீ விரும்புகிறாய்?’ என்று கேளுங்கள். அது நாகரிகம்!” என்றாள் சிவகாமி.

“அதற்கு நீ என்ன பதில் சொல்வாய் என்று எனக்குத் தெரியும் சிவகாமி!”

“இல்லை அத்தான்! உங்களுக்குத் தெரியாது. என் பதிலைக் கேட்டால் நீங்கள் திடுக்கிடுவீர்கள்!”

“அப்படியா? சரி, பதில் சொல்லி என்னைத் திடுக்கிட வை பார்க்கலாம். யாரைக் கல்யாணம் செய்து கொள்ள நீ விரும்புகிறாய்?” என்று கேட்டான் முத்தழகு.

“உங்கள் சகோதரரை! பெரிய அத்தானை!”

இந்த எதிர்பாராத பதிலைக் கேட்டதும், உண்மையிலேயே திடுக்கிட்டான் முத்தழகு.

“சிவகாமி! என்ன சொல்கிறாய்?”

“அத்தான், நான்தான் சொன்னேனே, என் பதிலைக் கேட்டால் நீங்கள் திடுக்கிடுவீர்கள் என்று!”

“உன் பதில் உண்மையானதா சிவகாமி?”

“அத்தான், பெண்கள் சத்தியம் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். இருந்தாலும் நான் சொல்கிறேன்… சத்தியமாகப் பெரிய அத்தானைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.”

“சிவகாமி, இது சாத்தியமா?”

“அத்தான், ஒருத்திக்கு ஓர் ஆசை பிறக்கும்போது, அது நிறைவேறுமா நிறைவேறாதா என்று எண்ணிப் பார்ப்பது இல்லை. ஆசை என்பது உடனே பிறப்பது; ஆராய்ச்சி என்பது அப்புறம் ஏற்படுவது. நான் ஆசைப்பட்டதோடு நிற்கிறேன். இன்னும் ஆராய்ச்சிக்கு வரவில்லை!”

இதைக் கேட்டதும் முத்தழகு தலையைக் குனிந்து கொண்டு மணலில் கிறுக்கிக் கொண்டு இருந்தான்.

சிவகாமி கையை நீட்டி முத்தழகின் பையிலிருந்த கைக் குட்டையை எடுத்து முத்தழகின் நெற்றியைத் துடைத்து விட்டு, மீண்டும் அதை முத்தழகின் பையிலேயே வைத்தாள்.

முத்தழகு சிவகாமியை நிமிர்ந்து பார்த்தான். பின்பு அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்து, “உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன் சிவகாமி” என்றான்.

“இப்போது?” என்று கேட்டுக்கொண்டே முத்தழகின் தலையில் கிடந்த இலையைத் தள்ளினாள் சிவகாமி.

“உன்னை இப்போதுதான் முழுதாகப் புரிந்துகொண்டேன் சிவகாமி” என்றான் முத்தழகு.

“அப்படியா? முன்பு என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைத்திருந்தீர்கள்? இப்போது என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“முன்பு கைக்குழந்தை என்று கருதினேன். இப்போது கற்றறிந்தவள் என்று கருதுகிறேன்.”

“எப்படியோ, கைக்குழந்தை என்று சொல்லி அன்று என்னைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தீர்கள். கற்றறிந்தவள் என்று சொல்லி இன்று என்னைக் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறீர்கள்!”

“அன்று மறுத்தேன்; இன்று மறுக்கவில்லை!”

“அத்தான்..!”

“சிவகாமி, உன்னை நான் ஏற்றுக்கொள்வதற்கு என் வாக்கு ஒன்று தடையாக இருக்கிறது!”

“இல்லை அத்தான், பெரிய அத்தானைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்.”

“அவருக்குப் பார்வை இல்லையே!”

“அந்தக் கண்கள்தாம் அவர் என்னைக் கல்யாணம் செய்து கொள்வதற்குத் தடையாக இருந்தன என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“சிவகாமி!”

“அத்தான், நான் அழகாய் இல்லை என்பதால்தான் என்னைப் பெரிய அத்தானும் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தார். நீங்களும் மறுத்தீர்கள்!”

“சிவகாமி…!”

“இப்போது கண்கள் இல்லாத பெரிய அத்தான் என்னை மணப்பார்; மறுக்கமாட்டார்!”

“சிவகாமி, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?”

“இல்லை அத்தான்! இப்போதுதான் பைத்தியம் தெளிந்திருக்கிறது.”

“சிவகாமி, அண்ணனுக்குக் கல்யாணமாகிவிட்டது!’

“அதனாலென்ன…இரண்டாவது கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் இல்லையா?”

“அது சட்டப்படி குற்றம்.”

“சட்டத்திற்கு அப்பால் வாழுகிறவர்கள் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே அத்தான்!”

“அண்ணன் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தால்..?”

“நீங்கள் இருக்கிறீர்களே!”

இதைக் கேட்டதும் அப்படியே கண்களை மூடிக்கொண்டு மணலில் மல்லாந்து படுத்தான் முத்தழகு. அவன் கடைவிழிகளில் நீர் கசிந்தது.

சிவகாமி எதிரே விரிந்து கிடந்த கடலைப் பார்த்தாள். கடல் கலங்கிக் கிடந்தது, அவள் கண்களைப் போல… அவள் கருத்தைப் போல!

நீண்ட நேரம் அப்படியே உட்கார்ந்திருந்த சிவகாமி, மணலில் மல்லாந்து கிடக்கும் முத்தழகைப் பார்த்தாள்.

தன் சேலைத் தலைப்பால் முத்தழகின் நெற்றியில் அரும்பி நின்ற வேர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, “அத்தான், வெயில் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. வீட்டிற்குப் போகலாமா?” என்று கேட்டாள்.

முத்தழகு எழுந்து உட்கார்ந்து கொண்டு, “சிவகாமி, திடீரென்று இதைச் சொல்வதற்கு என்னை நீ பொறுத்துக் கொள். உன்னை என் நண்பன் தங்க துரைக்குக் கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று நான் வாக்கு கொடுத்திருக்கிறேன்!”

“இந்த வாக்குதான் என்னை நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளத் தடையாக இருக்கிறது என்றீர்களா? ஆனால், நீங்கள் வாக்கு கொடுத்திருக்கவே மாட்டீர்கள். உங்களை எனக்குத் தெரியாதா? என் கருத்தைத் தெரிந்துகொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருப்பீர்கள். இப்பொழுதுதான் தெரிந்து கொண்டு விட்டீர்களே! போகலாமா?” என்று எழுந்தாள் சிவகாமி.

“இரு சிவகாமி, போகலாம்” என்று, எழுந்த சிவகாமியைக் கையைப் பிடித்து உட்கார வைத்தான் முத்தழகு.

இது, சிவகாமிக்கு வியப்பைத் தந்தது. அவள் உட்கார்ந்தாள்.

“சிவகாமி, அண்ணி உன் வீட்டிற்கு வந்தார்களே, எதற்கு?”

“அதுதான் சொன்னார்களே, பெரிய அத்தான் வரப்போவதை என் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிவிட்டுப் போவதற்காக வந்தேன் என்று.”

“எனக்கென்னவோ அதில் நம்பிக்கை இல்லை சிவகாமி!”

“ஏன்? உங்கள் அண்ணியை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?”

“சந்தேகிக்கவில்லை. அவர்களை நினைக்கும்போது எனக்கு…”

“என்ன உங்களுக்கு?”

“அண்ணி நெற்றியில் பெரும் திலகமிட்டுப் பச்சைப் பட்டுப் புடவை உடுத்தி வெள்ளைச் சோளி அணிந்து நிற்கிற அழகைப் பார்க்க அண்ணனுக்குக் கொடுத்து வைக்கவில்லையே!” என்றான் முத்தழகு.

“உண்மைதான் அத்தான்! உங்கள் அண்ணியைவிட அழகி ஒருத்தி உண்டோ?” என்றாள் சிவகாமி.

முத்தழகு கைகளிலிருந்த மணலைத் தட்டிவிட்டு எழுந்து நின்று, “வெயில் வந்துவிட்டது. எழுந்திரு சிவகாமி, வீட்டிற்குப் போகலாம்” என்று தன் கையை நீட்டினான். அவன் கையைப் பிடித்துக்கொண்டு சிவகாமி எழுந்தாள். இருவரும் நடந்தார்கள்.

முத்தழகு, “உண்மைதான் சிவகாமி, நீ சொன்னது! ஆனால், அதை நான் சொல்லலாமோ, கூடாதோ? இருந்தாலும் உன்னிடம் சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. ‘அண்ணியைவிட அழகி ஒருத்தி உண்டோ?’ என்ற வினாவுக்கு ‘இல்லை’ என்பதுதான் விடை” என்றான்.

தொடர்ந்து, “சிவகாமி, என் வாழ்வில் நான் உன்னிடம் மனம் திறந்து பேசியதைப் போல, இதுவரை வேறு எவரிடமும் பேசியதில்லை. இப்போது இன்னொன்றையும் துணிந்து உன்னிடம் சொல்லலாமா என்று நினைக்கிறேன். நீ என்னிடம் துணிந்து சொன்னதைப் போல!” என்று சொல்லிவிட்டு, சிவகாமியின் முகத்தைப் பார்த்தான் முத்தழகு.

“சொல்லுங்கள் அத்தான்” என்றாள் சிவகாமி.

“நீ எப்படி அண்ணனைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்கிறாயோ, அதைப் போல…”

“உம்… சொல்லுங்கள்.!”

“நான் அண்ணியைக் கல்யாணம் செய்துகொள்ளலாமா என்று பார்க்கிறேன்.” இதைச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான் முத்தழகு.

சிவகாமி சிரித்தாள். “அத்தான், ஒரு தமிழன் இரண்டு தமிழச்சிகளைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் சட்டத்தில் இல்லாவிட்டாலும், பழக்கத்தில் இன்னும் இருக்கிறது. ஆனால், திருமணமான ஒரு பெண்ணை, அவளின் கணவன் இருக்கும்போதே வேறு ஒருவர் கல்யாணம் செய்து கொள்வது என்பது…”

“கல்யாணமான என் அண்ணனை நீ கல்யாணம் செய்து கொள்ளலாம்; கல்யாணமான என் அண்ணியை நான் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாதா? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது!” என்று கத்தினான் முத்தழகு. அதே நேரத்தில் அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

சிவகாமி எதுவும் பேசாமல், காரின் பின் கதவைத் திறந்து ஏறி உட்கார்ந்து, கதவைச் சாத்திக் கொண்டாள். அதைப் பார்த்ததும் முத்தழகுக்கு…

மணிமொழியை அழைத்து வர விமான நிலையத்திற்குப் போனதும், மணிமொழி சிரித்துக் கொண்டே முன் பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு தனக்கருகில் வந்து உட்கார்ந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டதும், ‘அண்ணி, பின்னால் உட்கார்ந்து கொண்டால் உங்களுக்குச் சௌகரியமாக இருக்குமே’ என்று சொன்னதும், ‘ஆகட்டும்’ என்று மணிமொழி இறங்கிப் பின் கதவைத் திறந்து உட்கார்ந்து கொண்டதும் நினைவுக்கு வந்தது.

‘மணிமொழியைப் பின்னால் போய் உட்காரும்படி நான் சொன்னேன். ஆனால், நான் ஏதும் சொல்லாமலிருக்கும் போது சிவகாமி அவளாகவே பின்னால் போய் உட்கார்ந்து விட்டாளே’ என்று எண்ணிய முத்தழகு, தன் கைக்குட்டையை எடுத்து நெற்றியில் அரும்பி நின்ற வேர்வையைத் துடைத்து விட்டுக்கொண்டு, காரைக் கிளப்பினான். கார் பறந்தது.

21. மணிமொழி மயங்கினாள்!

‘விடிந்தால் வியாழக்கிழமை. காலை ஆறு மணிக்கெல்லாம் விமானம் வந்துவிடும். அரசு வந்துவிடுவார்…’

இரவு மணி ஒன்று. மணி மொழி தூங்கவே இல்லை அவள் மனம் என்னென்னவோ எண்ணியது.

‘நான் அரசுவின் மனைவி இல்லை. ஆனால், அவர் இந்த வீட்டிற்கு வந்துவிட்டால், நான் அவருடைய மனைவி போல நடிக்கவேண்டும். அப்படி நடிக்கப்போய், உண்மையிலேயே நான் அவர் மனைவியாகிவிட்டால்…”

மணிமொழி எழுந்து, படுக்கையை விட்டுத் தள்ளி, அறையுள் உலவினாள்.

‘அல்லது, என் குரலையும் பேச்சையும் கேட்டு, எனக்கு எதுவும் தெரியாததை அறிந்து, நீ என் மனைவி இல்லை என்று அரசு என்னைத் தள்ளி விட்டால்…’

மணிமொழி கதவைத் திறந்தாள். கூடத்தில் எவரும் இல்லை. தோட்டத்திற்கு வந்தாள்.

நல்ல நிலவு. எங்கும் வெளிச்சம்! எந்தச் சப்போட்டா மரத்தடியில் உட்கார்ந்து, மணி மொழிக்கு அரசு எழுதிய கடிதத்தை அவள் படித்தாளோ, அதே மரத்தடிக்கு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டாள் மணிமொழி.

‘நானும் இவர்களோடு சேர்ந்து, விடிந்ததும் விமான நிலையத்திற்குப் போனால், அரசு விமானத்தை விட்டு இறங்கியதும் என்னைக் கட்டிக் கொண்டு அழுவார்; கதறுவார்! என்னை அவர் கட்டிக்கொள்ளும் பொழுது நான் சும்மா இருப்பதா? அவரோடு சேர்ந்து என்னால் அழ முடியுமா? அரசுவின் மனைவியாக நடித்து எத்தனை நாட்களுக்கு நான் காலம் தள்ள முடியும்?”

இந்த நேரத்தில் மணி மொழிக்கு, முத்தழகின் மாடிச் சன்னல் அறையைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நிமிர்ந்து பார்த்தாள். முத்தழகின் அறை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மாடிச் சன்னல் வழியாக முத்தழகு மணிமொழியைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணிமொழி திடுக்கிட்டாள்.

மெல்லத் தலையைக் குனிந்துகொண்டே உள்ளே வந்து, தன் அறைக்குள் நுழைந்து, கதவைச் சும்மா சாத்தி வைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தாள்.

இவ்வளவு நெருக்கடியான வேதனை நிலை அவள் வாழ்வில் ஏற்பட்டதே இல்லை. மணிமொழி மிக மயக்கம் கொண்டிருந்ததால் அறைக் கதவைத் தாழிட மறந்து போனாளா? அல்லது, முத்தழகு வருவான் என்றுதான் கதவைச் சும்மா சாத்தி வைத்திருக்கிறாளா?

மரத்தடியைவிட்டு மணிமொழி எழுந்து போனதை முத்தழகு பார்த்தான். எந்த முடிவுக்கும் அவன் வரவில்லை. விளக்கு வெளிச்சத்தில் அறையில் கொஞ்ச நேரம் உலவினான். பிறகு மெல்ல மாடிப்படிகளில் இறங்கிக் கீழே கூடத்திற்கு வந்தான். ஓசைப்படாமல் மணிமொழியின் அறைக் கதவுக்கு அருகில் வந்து நின்று, “அண்ணி… அண்ணி” என்றபடி கதவில் கை வைத்தான். கதவு திறந்து கொண்டது.

முத்தழகு அறைக்குள் வந்து சுவிட்சைப் போட்டான். விளக்கு எரிந்தது. படுக்கையில் மணிமொழி இல்லை. அறையில் மணிமொழி இல்லை.

‘மறுபடியும் தோட்டத்திற்குப் போய்விட்டாளோ!’ என்று எண்ணி விளக்கை அணைக்கப் போன முத்தழகின் கண்களுக்குத் தலையணையின் மேல் ஒரு கடிதம் மடித்து வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது.

அதைத் தாவி எடுத்துப் படித்தான் முத்தழகு.

‘என் கனிவுமிக்க காதலருக்கு, என் முழுமதி முத்தழகு அத்தானுக்கு…’ என்று தொடங்கியது கடிதம். ஐந்து பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தின் இறுதி வரியைப் பார்த்தான்.

‘உங்கள் காதலி, கல்யாண மாகாத மணிமொழி’ என்று இருந்தது.

பரபரப்பான முத்தழகு, கட்டிலில் உட்கார்ந்து கடிதத்தை நிதானமாகப் படிக்கத் தொடங்கினான்.

“அத்தான், நீங்கள் என்னை ‘அண்ணி’ என்றழைத்திட்ட போதெல்லாம் நான் எத்தகைய வேதனை கொண்டேன் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நான் கல்யாணமாகாதவள். கன்னிப்பெண்ணுக்குக் குழந்தையா என்று கேட்காதீர்கள். குழந்தை உங்கள் அண்ணனுடைய குழந்தைதான். ஆனால், நான் உங்கள் அண்ணனின் மனைவி அல்லள்.

நான் பம்பாயில் வாழ்ந்தவள். எனக்கு அம்மா இல்லை. அப்பா இருக்கிறார். பம்பாய் மலபார் ஹில்ஸில் சுடப்பட்ட கேசவதாஸ் வழக்குச் சம்பந்தமாகத் தலைமறைவாக இருக்கிறார். அதற்கு முன் என்னைச் சென்னைக்குத் திடீரென்று விமானத்தில் ஏற்றிவிட்டார்.

விமானத்தில் உங்கள் உண்மையான அண்ணியையும் அவள் மடியிலிருந்த குழந்தையையும் நான் பார்த்தேன். உங்கள் உண்மையான அண்ணியின் பெயரும் மணிமொழிதான். இதுவரை ஏற்பட்டிருக்கிற இந்த மயக்கங்களுக்கெல்லாம் காரணம், மணிமொழி மணிமொழி என்ற பெயர்தான்…” என்று விரிவாக விரிவாக அத்தனை விஷயங்களையும் ஒன்றுவிடாமல் எழுதியிருந்தாள் மணிமொழி.

இறுதியில், “தங்கதுரையை நம்பாதீர்கள். அவன் உங்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே வில்லன்தான். தங்கதுரையால் சிவகாமி இதுவரை கெட வில்லை. இனியும் கெடாமலிருக்கும்படி தாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்கதுரை இனி சிவகாமி வீட்டிற்கோ, உங்கள் வீட்டிற்கோ வராமலிருப்பது நல்லது. பாம்பு வந்தால், அது பிறரைக் கடிப்பதும் உண்டு; அடிபட்டுச் சாவதும் உண்டு. இதைத் தாங்கள் அறியாதவர்களா அத்தான்?” என்று முடித்திருந்தாள்.

கடிதத்தை மடித்துப் பையில் வைத்துக்கொண்டு, விளக்கை அணைத்துவிட்டுக் கதவைச் சாத்திவிட்டுக் கூடத்தைத் தாண்டித் தோட்டத்திற்கு வந்தான் முத்தழகு.

அங்கே… எவருமே இல்லை.

முத்தழகு தோட்டமெங்கும் சுற்றிப் பார்த்தான். எங்கும், எவரும் இல்லை! நிலவு வெளிச்சத்தில் நின்று மீண்டும் மணிமொழி எழுதிய கடிதத்தைப் படித்தான்.

‘அத்தான்! நான் போகிறேன். எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வந்த நான், எவரிடமும் சொல்லிக் கொள்ளாமலே போகிறேன். வந்ததும் உங்களைக் கண்டேன். போகும்போதும் உங்களைக் கண்டேன். அது போதும் எனக்கு.

உங்கள் காதலி, கல்யாணமாகாத மணிமொழி.’

கடிதத்தைப் படித்ததும், அப்படியே கண்களை மூடிக் கொண்டான் முத்தழகு.

‘முத்தழகு, மணிமொழியைப் போன்ற ஒரு பெண் உனக்கு வேண்டும் என்று நினைத்தாய். அவளே உனக்குக் கிடைத்து விட்டாள், கல்யாணமாகாத கன்னிப் பெண்ணாக! ஓடு, ஓடு! மணிமொழியைத் தேடு! மணமகனாக அவளை நாடு!”

– தொடரும்…

– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *