மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!






(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
7. வந்தவுடன் பூட்டைத் திறக்கிறானே!
அரசுவின் அப்பா பெயர், அதாவது மணிமொழியின் மாமனாரின் பெயர் தில்லைநாயகம். தில்லைநாயகத்தின் மனைவி பெயர் மங்கை. மணிமொழி வந்திருக்கும் செய்தி கேட்டுப் பக்கத்து வீட்டிலிருந்த சிவகாமி வந்தாள்.

சிவகாமி, அரசுவுக்கு அத்தை மகள். அதாவது தில்லைநாயகத்தின் தங்கை மகள். இந்தச் சிவகாமியைத்தான் அரசுவுக்குச் செய்துவிட வேண்டும் என்ற முயற்சி நடந்தது. முற்றும் தோல்வி பெற்றது அந்த முயற்சி!
சிவகாமி நாகரிக நங்கை. நாகரிகம் என்ற பெயரால் அநாகரிகப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டிருப்பவள். தேள் ஒரு தடவை தான் கொட்டும். அந்த ஒரு தடவை கொட்டுதலையே பொறுக்க முடியாது. சிவகாமியும் அந்த இனத்தைச் சேர்ந்தவள்தான். அவள் ஒரு முறை பிறருக்குத் தீங்குசெய்தால், அதைத் தாங்கிக் கொள்வது கடினம்!
சிவகாமி ஒரு விடுதலைப் பறவை. தாய் தந்தையருக்குத் தனியருத்தியாகப் பிறந்த செல்வி. இதனால் அவளுக்கு சலுகைகள், வாய்ப்புகள், வசதிகள் ஏராளம்.
சிவகாமி, மணிமொழியும் முத்தழகும் இருந்த அறைக்குள் நுழையும்போது மணிமொழி தன் உடைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள். முத்தழகு அறிவு நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான்.
“அத்தான், நான் அக்காளைப் பார்க்க வந்திருக்கிறேன்!” என்றாள் சிவகாமி.
முத்தழகு திரும்பி, “இதோ இருக்கிறார்கள் பாரேன்” என்று சொல்லிவிட்டு, மணிமொழியைப் பார்த்து, “அண்ணி, இவள் என் அத்தை மகள், சிவகாமி. உங்களைப் பார்க்க வந்திருக்கிறாள். கூச்சம் என்பதே சிறிதும் இல்லாத ஒரு பெண் என்றால், எங்கள் சிவகாமியைத் தவிர வேறு பெண்ணே கிடையாது!” என்றான்.
“அத்தான், அக்காளுக்கு என்னைப் பற்றி முதலில் சொல்லும்போது கொஞ்சம் நன்றாகச் சொல்லக் கூடாதா?” என்றாள் சிவகாமி.

இந்த நேரத்தில் மாமியார் அந்தப் பக்கம் வந்து, “மணிமொழி, குழந்தை பால் குடிக்கும்போது சட்டையிலெல்லாம் பாலைக் கொட்டிக்கொண்டு விட்டது. குழந்தைக்கு வேறு சட்டை போடு” என்று குழந்தையை மணிமொழியிடம் கொடுத்தாள்.
மணிமொழி குழந்தையை வாங்கிக் கொண்டாள். “குழந்தையைக் கவனியுங்கள் அக்கா, நான் அப்புறம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சிவகாமி போய் விட்டாள். மணிமொழி குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு அப்படியே நின்றாள்.
“என்ன அண்ணி, குழந்தைக்குச் சட்டை மாற்றவில்லையா?” என்று கேட்டான் முத்தழகு.
“பெட்டிச் சாவியை எங்கோ தொலைத்து விட்டேன். அதுதான் நிற்கிறேன்” என்றாள் மணிமொழி.
“நான் தேடிப் பார்க்கிறேன். சாவி காரில் கிடந்தாலும் கிடக்கும்” என்று சொல்லிவிட்டு வெளியே போனான் முத்தழகு. மணிமொழி அப்படியே குழந்தையோடு தூணில் சாய்ந்து கொண்டாள்.
‘குழந்தையின் தாய், பெட்டிச் சாவியை என்னிடம் தரவில்லை. அவள் சாவியுடனேயே குதித்து விட்டாள். பெட்டியைப் பற்றியே ஏதும் சொல்லாதவள், சாவியைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது!’ என்று எண்ணியது மணிமொழியின் மனம்.
முத்தழகு வந்தான். “அண்ணி, எங்கும் சாவியைக் காணோம். என்ன செய்வதென்று புரியவில்லை!” என்று சொல்லிவிட்டுப் பெட்டிக்கருகில் போய், பூட்டைப் பிடித்துப் பார்த்தான். பெரும் பூட்டுதான்!
“பூட்டை உடைப்பதைத் தவிர வேறு வழி இல்லை!” என்றாள் மணிமொழி. அதே நேரம், புது அச்சமொன்று அவள் மனத்தில் பிறந்தது. ‘பெட்டிக்குள் என்னென்ன இருக்குமோ! குழந்தை இளங்கோவின் உடைகள் இருக்கும். சரி, மாண்டுபோன குழந்தையின் தாயின் உடைகளும் இருக்குமே!’
இந்த நேரத்தில் வெளியே காரொன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது. முத்தழகு சன்னல் வழியே வெளியே பார்த்தான். மணிமொழியும் பார்த்தாள். காரிலிருந்து சிவகாமி இறங்கினாள். அவளுக்குப் பின்னால் ஒருவன் இறங்கினான். 22 வயதிருக்கும். தலைமயிர் சுருட்டை. அரும்பு மீசை.
சிவகாமியும் அவனும் முத்தழகும் மணிமொழியும் இருக்கும் அறைக்கு வந்தார்கள்.
முத்தழகு அந்த வாலிபனைப் பார்த்ததும், “தங்கதுரை! நல்ல நேரத்தில் வந்து சேர்ந்தாய். இந்தா, இந்தப் பெட்டியைத் திறந்து கொடு!” என்று மணி மொழியின் பெட்டியைக் காட்டினான்.

தங்கதுரை பெட்டிக்கருகில் சென்று, அந்தப் பூட்டைப் பிடித்துப் பார்த்தான். முத்தழகு மணிமொழியைப் பார்த்து, “அண்ணி, இவன் பெயர் தங்கதுரை. என் நண்பன். சிவகாமியின் குடும்பத்திற்கு வேண்டியவன். எந்தப் பூட்டையும் எளிதில் உடைத்து விடுவான்!” என்றான்.
இதைக் கேட்டதும் மணிமொழி, சிவகாமி, தங்கதுரை எல்லாருமே சிரித்தார்கள்.
சிரிப்பு அலை அடங்கியதும், “முத்தழகு, ஏதாவது ஒரு கம்பி இருந்தால் கொண்டு வா! இதெல்லாம் சின்ன பூட்டாயிற்றே, இதையெல்லாம் நீயே திறக்கக் கற்றுக்கொள்ள வேண்டாமோ?” என்றான் தங்கதுரை.
இதைக் கேட்டதும், மறுபடியும் எல்லாரும் ஒருமுறை சிரித்தார்கள். முத்தழகு ஓடிப்போய் கம்பி ஒன்றைக் கொண்டு வந்தான்.
தங்கதுரை அதை வாங்கி, அதன் நுனியை வளைத்துத் திருகி சாவி மாதிரி செய்து சிறிது நேரத்தில் பூட்டைத் திறந்துவிட்டான். பின்பு, மணிமொழியைப் பார்த்து, “நீங்கள் கிழக்குப் பஞ்சாபிலிருந்துதானே வந்தீர்கள்?” என்று கேட்டான்.
இந்தக் கேள்வியை மணிமொழி எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் தேற்றிக்கொண்டு, “ஆமாம்” என்றாள். இன்னும் இவர் என்ன கேள்விகளைக் கேட்பாரோ என்று அச்சம் மிகக் கொண்டாள்.
“நீங்கள் பயணம் செய்த விமானம் விபத்திலிருந்து தப்பியதாகச் செய்தி படித்தேன்” என்றான் தங்கதுரை. “ஆமாம். நல்லவேளையாக, அண்ணியும் இளங்கோவும் தப்பினார்கள்!” என்றான் முத்தழகு.
மணிமொழி, தலையைக் கொஞ்சம் அசைத்து, அசட்டுச் சிரிப்பொன்றால் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
“சரி, அண்ணி குழந்தைக்குச் சட்டையை மாற்றிக்கொண்டு வரட்டும். நாம் வெளியே பேசிக்கொண்டு இருப்போம், வாருங்கள்” என்று எல்லோரையும் வெளியே அழைத்துச் சென்றான் முத்தழகு.
முத்தழகின் இந்தச் செயல் மணி மொழிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் போனதும், இளங்கோவைக் கட்டிலில் வைத்துவிட்டு, அவசரமாகப் பெட்டியைத் திறந்தாள்.
மேலாகக் கண்ணாடி போட்ட ஒரு புகைப்படம் இருந்தது. அதைப் பார்த்ததும் மணிமொழி திடுக்கிட்டாள். அவள் ரத்தம் அப்படியே உறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. சிந்தனை இழந்து நின்ற அவள், சில விநாடிகளுக்குள் ஒரு முடிவுக்கு வந்து, குழந்தைச் சட்டை ஒன்றை மட்டும் மட்டும் எடுத்துக்கொண்டு பெட்டியை மூடிவிட்டாள்.
கட்டிலிலிருந்த இளங்கோவைத் தூக்கி, துண்டால் அவன் உடம்பின் ஈரத்தைத் துடைத்துப் புதுச் சட்டையைப் போட்டு, எல்லாரும் இருந்த இடத்திற்கு எடுத்து வந்தாள்.
குழந்தையை மாமியாரிடம் கொடுத்தாள். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த மாமனார், சிவகாமியிடம், “மணிமொழியும் இளங்கோவும் வந்து சேர்ந்ததை உன் அப்பா அம்மா வந்ததும் சொல்லிவிடம்மா” என்றார்.
“ஆகட்டும் மாமா” என்றாள் சிவகாமி.
கொஞ்ச நேரத்தில் சிவகாமியும் தங்கதுரையும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பிப் போனார்கள்.
மணிமொழி! இந்தத் தங்கதுரையும், சிவகாமியும் உன் வாழ்க்கையில் புதிதாக வந்து குறுக்கிட்டிருக்கிறார்கள். சிவகாமி கூச்சமில்லாமல் எல்லோரோடும் பழகுகிறாள். தங்கதுரை பூட்டைச் சுலபமாகத் திறக்கிறான். இவர்களைப் பற்றி நீ ஒரு முடிவுக்கு வா! இவர்கள் இருவரும் எதையும் செய்யக் கூடியவர்கள்!
8. இரும்புக் கை!
வந்து இரண்டு நாட்களானதும் மணிமொழிக்கு அந்த ஆறு பெட்டிகளைப் பற்றிய கவலை பிறந்தது. எப்படியும் அவற்றை அவரவர்களிடம் சேர்த்தாக வேண்டுமே!
என்ன செய்யலாம், எப்படிப் பெட்டிகளை வெளியே கொண்டு போவது, ஒவ்வொரு பெட்டியாக ஒவ்வொரு தடவையும் வெளியே கொண்டு போய்க் கொடுப்பதா, அல்லது, ஆறு பெட்டிகளையும் ஒரே தடவையில் கொண்டு போய் எல்லாரிடமும் சேர்த்துவிட்டு வருவதா? மணிமொழி குழம்பிக் கொண்டே இருந்தாள்.
மூன்றாவது நாள்… மாலை நேரம். மாமியார் தன் பேரனோடு கதை கேட்கப் போயிருந்தாள் கோயிலுக்கு. மாமனார் தன் நண்பர்களைக் கண்டுவர வெளியே போயிருந்தார். முத்தழகு டென்னிஸ் மட்டையுடன் போய்விட்டான். வேலைக்காரியைத் தவிர வேறு எவருமே இல்லை. இவர்களெல்லாம் எப்போது திரும்பி வருவார்கள் என்பது தெரியவில்லை. வேலைக்காரியைக் கேட்டால் தெரியுமே?
அவள் பெயர் பாவை. நல்லவள். அவளை யாரும் வேலைக்காரி என எண்ணாமல், குடும்ப அங்கத்தினர்களில் ஒருத்தியாகவே கருதினார்கள்.
“பாவை, இளையவர் எப்போது திரும்பி வருவார்?”
“மட்டை அடிக்க அல்லவா போயிருக்கிறார்? மட்டையடி முடிந்தவுடன் வந்துவிட முடியுமா? அப்புறம் அரட்டை வேறு அடிக்க வேண்டுமே! எப்படியும் ஒன்பது மணி ஆகும் அக்கா அவர் வர!” என்றாள் பாவை.
மாமியாரும் மாமனாரும் இப்போதைக்குத் திரும்பிவர மாட்டார்கள் என்பது மணிமொழிக்கே தெரியும்.
“பாவை, நான் கொஞ்சம் வெளியே போய் என் உயிர்த் தோழி ஒருத்தியைப் பார்த்துவிட்டு வருகிறேன். அவர்களெல்லாம் வருவதற்குள் நான் வந்துவிடுகிறேன்” என்றாள் மணிமொழி.
“போய் வாருங்கள் அக்கா!”
அறைக்குள் வந்தாள். இரண்டு பெட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டாள். அதோடு, பெட்டியில் இருந்த கறுப்புக் கண்ணாடியையும் எடுத்துக் கொண்டாள். கிளம்பினாள். வெளியே வந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை அறிந்ததும் தலைப்புச் சேலையை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டாள். கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டாள். இப்போது அவளைப் பார்க்க வங்கப் பெண் போலவே இருந்தது!
மணிமொழி வெளியே வரும் போது நன்றாக இருட்டி விட்டது. மணிமொழி சாலையின் ஓரமாகவே நடந்தாள்.
கார் ஒன்று வந்தது. அது வாடகைக் கார். மணிமொழி அதை நிறுத்தி, காரில் ஏறிக்கொண்டு, “மயிலாப்பூர் குளத்துக்கருகில் போ” என்றாள்.
கார் திரும்பியது. புறப்பட்டது. மயிலாப்பூர் குளம் வந்தது. கார் நின்றது. மணிமொழி காரை விட்டுக் கீழே இறங்கி, “இங்கேயே இரு, இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த இரண்டு பெட்டிகளுடன் தெருவின் பெயர்களைப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.
அவள் தேடி வந்த தெருவுக்குச் சென்று, தேடி வந்த வீட்டு வாசற்படியில் ஏறி, சாத்தியிருந்த கதவைத் தட்டினாள். கதவு திறந்தது. கதவைத் திறந்தது ஒரு பெரியவர். அவர் மணிமொழியைப் பார்த்ததும், “இதோ, இந்த வீட்டின் கதவு எண்ணை மறுபடியும் ஒரு முறை பாருங்கள். இந்த வீட்டிற்குத்தானே வந்தீர்கள்?” என்று கேட்டார்.
மணிமொழி கதவின் எண்ணை ஒரு தரம் பார்த்துவிட்டு, “ஆமாம். இந்த வீட்டிற்குதான் வந்தேன்” என்றாள்.
“உள்ளே வாருங்கள்” என்றார் அந்தப் பெரியவர். மணிமொழி உள்ளே போனாள்.
“நீங்கள்தானே பொன்மலை?” என்று கேட்டாள் மணிமொழி.
“ஆமாம்” என்றார் பெரியவர்.
“நான் பம்பாயிலிருந்து வருகிறேன். நாளையே நான் மறுபடியும் பம்பாய் செல்ல வேண்டும். மருதநம்பியின் மகள் நான். என் அப்பா இந்தப் பெட்டியை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்” என்று சொல்லி, அவர் பெயர் எழுதியிருந்த அட்டைப் பெட்டியைக் கொடுத்தாள்.
பின்பு, “நான் வருகிறேன், இன்னொரு பெட்டி இருக்கிறது. இதைக் கொடுக்க வேண்டும்” என்றாள்.
“சரி” என்றார் பெரியவர்.
மணிமொழி வெளியே வந்தாள்.
அடுத்து அவள் சென்ற இடம் வேப்பேரி. அவள் தேடிப்போன வீட்டின் கதவுகளனைத்தும் திறந்தே கிடந்தன. மணிமொழி சென்று, கூடத்தில் நின்றாள். அப்போது பக்கத்து அறைக் கதவைத் திறந்து கொண்டு ஒரு மனிதர் வந்தார். அவருக்கு 35 வயது இருக்கும்.
“இங்கே திருமுகம் என்று…”
“நான்தான் திருமுகம்.”
“அப்படியா? உங்களுக்குப் பம்பாயிலிருந்து நான் ஒரு பெட்டி கொண்டு வந்திருக்கிறேன்.”
“அப்படியா? பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது?”
“பிள்ளைகளுக்கான உடை!”
“அப்படியா? கொடுங்கள் அதை” என்று கையை நீட்டினார் திருமுகம். அப்போது திடீரென்று இரும்புக் கை ஒன்று வந்து அந்தப் பெட்டியைப் பறித்தது. அந்தக் கை… அந்த மூன்றாவது இரும்புக் கை யாருடையது?
மணிமொழி அச்சத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
போலீஸ்!
மணிமொழிக்கு உடலெல்லாம் சில்லிட்டுவிட்டது! அவள் தன் உணர்வை இழந்து மயக்கம் கொள்ளும் நிலையில் இருந்தாள். அவள் இதயம், அமைதியான இரவில் கடிகாரம் ஓசையிடுவதைப் போல் ஓசையிட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்தப் பெட்டியை வாங்கித் பார்த்தார். அதில் ஒரு நைலான் சட்டை இருந்தது. ஆமாம், பெட்டியில் ஒரு குழந்தைக்கான சின்ன நைலான் சட்டை இருந்தது. வேறு எதுவுமே இல்லை அந்தப் பெட்டியில்.
திருமுகம் இன்ஸ்பெக்டரைப் பார்த்து மெல்லச் சிரித்தார். மணி மொழியும் தன்னைச் சற்று சமாளித்துக் கொண்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“பொறுத்துக்கொள்ள வேண்டும்! உங்கள் இருவரையும் தவறாகப் புரிந்து கொண்டதற்கு நீங்கள் என்னைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் இன்ஸ்பெக்டர்.
“அதனாலென்ன, உங்கள் கடமையை நீங்கள் செய்கிறீர்கள். பொதுமக்களாகிய நாங்கள், உங்கள் விருப்பப்படி நடந்துகொண்டால் தானே எங்களுக்கும் நலன் உண்டாகும்” என்றார் திருமுகம்.
“ஒரு பெண், இந்தப் பெண்ணைப் பெண்ணைப் போலத் தலையில் தலைப்புச் சேலையைப் போட்டுக்கொண்டு எங்களை எல்லாம் ஏமாற்றி வருகிறாள். ஆகையால் தலையில் தலைப்புச் சேலையைப் போட்டுக்கொண்டு போகிற இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் துன்பம் ஏற்படுகிறது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
“அதனாலென்ன, உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போய்விட்டதே என்பதை நினைக்கும்போது தான் எனக்குத் துன்பம் ஏற்படுகிறது!” என்றார் திருமுகம்.
இதைக் கேட்டதும் கொஞ்சம் குறிப்போடு திருமுகத்தைப் பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர், “எப்படி இருந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றே தீருவேன்!” என்றார்.
இதைக் கேட்டு மணிமொழியும் திருமுகமும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கலந்துகொண்டார்.

சிரிப்பு அடங்கியதும் திருமுகத்தின் குரல் கொஞ்சம் மாறியது. கொஞ்சம் கடுமை கலந்த குரலில், “இன்ஸ்பெக்டர், இந்த முறை என் வீட்டிற்குள் வந்து ஒரு பெண்ணின் முன்னால் என்னை அவமானப்படுத்தியதை நான் பொருட்படுத்த வில்லை. ஆனால், மீண்டும் இது மாதிரி வந்து அவமானப்படுத்தாமல் இருக்க வேண்டும்” என்றார்.
“இல்லை, இனித் தேவை இல்லாமல் நான் வரமாட்டேன். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று சிரித்துக் கொண்டே தலைத் தொப்பியைச் சரி செய்துகொண்டு வெளியே போய்விட்டார் இன்ஸ்பெக்டர்.
“என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு என்றுமே நான் பயந்ததில்லை” என்றாள் மணிமொழி.
“இன்று நடந்ததில் ஏதும் இல்லை. இனிமேலதான் நாம் விழிப்புடன் நடந்து கொள்ளவேண்டும். உட்காருங்கள்” என்றார் திருமுகம்.
“நாமா? விழிப்புடனா?” அஞ்சிய அவள், “நான் கிளம்புகிறேன். எல்லாவற்றையும் போட்டது போட்டபடியே வந்திருக்கிறேன். நான் போய் பம்பாய் பயணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். உங்களுக்கு மறுபடியும் பெட்டி தர வேண்டிய கடமை எனக்குக் கிடைத்தால் நான் வருகிறேன்” என்று விடைபெற்றுக் கிளம்பிச் சென்றாள்.
அவள் சென்ற கார் மறைந்ததும் திருமுகம் கதவைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்து, அந்த நைலான் குழந்தைச் சட்டையை எடுத்து, இரண்டு கைகளாலும் விரித்துப் பிடித்து வெளிச்சத்தில் பார்த்தார்.
நைலான் குழந்தைச் சட்டையில் பூ வேலை நிறையச் செய்யப்பட்டிருந்தது. அந்தச் சட்டையில், பூ வேலைகளுக்கிடையே ஐந்தாறு எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அந்த எழுத்துக்களைக் கூர்ந்து ஒருமுறை படித்த திருமுகம், முக மலர்ச்சியோடு அந்தச் சட்டையை பெட்டிக்குள் வைத்து மூடினார்.
ஐயா, திருட்டு முகமுடையவரே! செல்வங்களுக்குள் பெருஞ்செல்வம் குழந்தைச் செல்வம்தானய்யா! பாவம் என்பதையே செய்யத் தெரியாத பச்சிளம் குழந்தையின் சட்டையில் உங்கள் கள்ளச் செயல்களையெல்லாம் கடிதம்போல் எழுதிக்கொள்கிறீர்கள். இது நீங்கள் குழந்தை உலகத்தையே குழி தோண்டிப் புதைப்பதாக ஆகுமே ஐயா!
9. பாவை பார்க்கவில்லை!
வாடகைக் கார் விரைந்து சென்றுகொண்டிருந்தது. மணிமொழியின் மனம் அச்சத்தாலும் அறியாமையாலும் குழம்பிக் கிடந்தது. வெளியே கிடந்த இருளைப் போக்க எத்தனையோ விளக்குகள். அவள் மனத்திலுள்ள இருளைப் போக்க ஒரு விளக்குக் கூட இல்லையே!
காரோட்டி பின்னால் திரும்பிப் பார்த்து, “எங்கேயம்மா இறங்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். மணிமொழி வெளியே எட்டிப் பார்த்தாள். அப்போதுதான் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டோம் என்பது அவளுக்குத் தெரிந்தது.
“இங்கேதானப்பா நான் இறங்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே மணிமொழி கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினாள். மீட்டரைப் பார்த்தாள். கைப் பையைத் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தாள். தலைச் சேலையைச் சரிப்படுத்திக்கொண்டு சாலை ஓரமாகவே நடந்தாள்.
பங்களா நெருங்கியது. ‘மாமியார் வந்திருப்பாரோ, மாமனார் வந்திருப்பாரோ, முத்தழகு வந்திருப்பாரோ, பாவை ஏதாவது சொல்லியிருப்பாளோ?” என்றெல்லாம் எண்ணிக் குழம்பியது மணிமொழியின் மனம்.
பங்களா வந்தது. கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கைப் பைக்குள் வைத்துக்கொண்டு பங்களாவுக்குள் நுழைந்தாள் மணிமொழி. கார் இருக்கிறதா என்று பார்த்தாள். இல்லை. ஆக, முத்தழகு இன்னும் வரவில்லை. பங்களா அமைதியாக இருந்ததால், மாமியாரும் மாமனாரும்கூட வரவில்லை என்பதும் புரிந்தது.
மணிமொழி சமையற்கட்டுக்குள் போனாள். பாவை, மணிமொழியைப் பார்த்ததும், பார்த்ததும், “இன்னும் சமையல் வேலை முடியவில்லை அக்கா. பகலில் ஒருமுறை சமைத்து, இரவிலும் ஒரு முறை சமைக்க வேண்டியிருக்கிறது. இந்த வீட்டில் இருப்பது மூன்று பேர்தாம். உங்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக வருத்தப் படப்போகிறீர்கள். நீங்கள் இப்போதுதானே வந்திருக்கிறீர்கள்! இந்த மூன்று பேரும் மூன்று விதமாகச் சாப்பிடுவார்கள். ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்குப் பிடிக்காது! யார் மீதும் நான் குற்றம் சொல்லவில்லை. எவ்வளவு வேலைகள் இருக்கின்றன என்பதற்காகச் சொன்னேன்” என்றாள் பாவை பல்லைக் காட்டிக்கொண்டு.

“எவ்வளவு வேலைகள் இருந்தால் என்ன? நான் வந்துவிட்டேன். இருக்கிற வேலைகள் எல்லாவற்றையும் நாம் இருவருமாகப் பார்ப்போம்!” என்றாள் மணிமொழி.
“நீங்கள் சொல்லிவிட்டீர்கள் சுலபமாக. நீங்கள் இந்த வீட்டில் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்கலாமா? இவ்வளவு இளம் வயதில் கணவனை இழந்துவிட்ட நீங்கள், வீட்டு வேலைகளை வேறு செய்து துன்பப்பட வேண்டுமா?
நீங்கள் குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அது ஒன்று போதும். இளங்கோ வந்தது முதல் பாட்டியிடம் ஒட்டிக் கொண்டு விட மாட்டேன் என்கிறான். அதுவும் ஒரு வழியில் நல்லதுதான். உங்களுக்கும் ஓய்வு கிடைக்கும்” என்றாள் பாவை.
மணிமொழி மௌனமாகத் திரும்பி நடந்து, தன் அறைக்கு வந்து கதவைத் தாழிட்டுவிட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
அவள் இரு விழிகளிலும் கண்ணீர் கொட்டி வழிந்தது.
‘இளங்கோ வந்தது முதல் பாட்டியிடம் ஒட்டிக்கொண்டு விடமாட்டேன் என்கிறான்’ என்று பாவை சொல்லியதைக் கேட்டதும், விமானத்தில் குழந்தையின் தாய் சொன்னாளே, அது மணிமொழியின் நினைவிற்கு வந்துவிட்டது.
‘நான் சாகப்போகிறேன் மணி மொழி! இந்தக் குழந்தைக்கு இனி நீதான் தாய். இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போ! ஆனால், என் மாமியார் வீட்டுக்கு மட்டும் போகாதே! இந்தக் குழந்தை இனி உன் குழந்தை உனக்கு திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் இது உன் குழந்தையாகவே இருக்கட்டும். இந்த உதவியை நீ எனக்குச் செய்ய வேண்டும் என்று உன்னிடம் நான் கெஞ்சிக் கேட்கவில்லை. இந்த உதவியைச் செய்து தர வேண்டிய நிலைக்கு, இந்தக் குழந்தைக்குத் தாயாக வேண்டிய நிலைக்கு நீ வந்துவிட்டாய்!’
மணிமொழியின் மனம் அழுதுகொண்டே யோசித்தது. இந்த நேரத்தில் யாரோ கதவைத் தட்டியதைப் போலிருந்தது.
மணிமொழி சட்டென்று கண்களைத் துடைத்துவிட்டு, சேலையைச் சரிசெய்துகொண்டு மெல்லக் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். வெளியே எவரும் இல்லை!
மணிமொழி சமையலறைக்கு வந்து பாவையிடம், “பாவை இன்னும் யாரும் வரவில்லையா?” என்று கேட்டாள்.
“வரவில்லையே அக்கா! அது சரி, உங்கள் உயிர்த்தோழி ஒருத்தியைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்னீர்களே, பார்த்தீர்களா?” என்று கேட்டாள் பாவை.
“போனேன். ஆனால், அவள் எங்கேயோ வெளியே போய்விட்டாளாம். பார்க்க முடியவில்லை. நேரமாகிவிட்டதே என்று திரும்பி விட்டேன்!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் தன் அறைக்கு வந்தாள் மணிமொழி. கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டாள்.
‘இன்னும் நான்கு பெட்டிகளையும் சேர்க்க வேண்டியவர்களிடம் சேர்த்துவிட்டால், ஒரு பெரிய தொல்லை விட்டது!’ என்று எண்ணிய மணிமொழி, அந்த நான்கு பெட்டிகளும் இருக்கின்றனவா என்று கட்டிலுக்கு அடியில் பார்த்தாள். எதுவுமே இல்லை! தூக்கிவாரிப் போட்டது
அறை முழுவதும் தேடினாள். பெட்டிகள் எங்கேயும் இல்லை. அவளுடைய இதயத் துடிப்பு மிகுந்தது. உடலெல்லாம் வியர்த்தது.
பரபரப்படைந்தவளாக, சமையலறைக்கு வந்து, “பாவை, என் அறைக்கு யாராவது வந்தார்களா?” என்று கேட்டாள் மணிமொழி.
“உங்கள் அறைக்கு யாரும் போகவில்லையே அக்கா! நீங்கள் போன பிறகு நான் ஒருத்திதானே இந்த வீட்டில் இருக்கிறேன்” என்றவள், சட்டென்று நினைவுக்கு வந்தவளாக,
“ஆமாம், மறந்து போனேனே! தங்கதுரை வந்தார். அவர் வந்துபோய் அரைமணி நேரத்திற்கு மேலாகிறதே! அவர் முத்தழகைத் தேடிக்கொண்டு வந்தார். முத்தழகு பந்தடிக்கப் போய் விட்டார் என்றேன். உடனே அவர் போய்விட்டார்!”
“தங்கதுரை காரிலா வந்தார்?”
“ஆமாம், காரில்தான் வந்தார்.”
“அவரை மறுபடியும் பார்க்கவே இல்லையா?” என்று கேட்டாள் மணிமொழி.
“இல்லை அக்கா, என் வேலைகளைக் கவனிக்க சமையற்கட்டுக்கு வந்துவிட்டேன். இந்த வீட்டில்தான் 24 மணி நேரமும் சமையல் கட்டிலேயே இருக்கவேண்டியிருக்கிறதே!” என்றாள் பாவை.
திரும்பத் தன் அறைக்கு வந்து, கட்டிலில் உட்கார்ந்த மணிமொழியின் மனம் எண்ணியது…
‘தங்கதுரை வந்தபோது வந்தபோது பாவை சமையலறைக்குள் இருந்திருக்கிறாள். உள்ளே வந்த தங்கதுரை, பாவையைத் தவிர வீட்டில் வேறு எவரும் இல்லை என்பதை அறிந்துகொண்டு, இந்த அறைக்குள் அறைக்குள் புகுந்து, அந்த நான்கு பெட்டிகளையும் எடுத்துச் சென்று விட்டிருக்கிறார். ஆமாம், தங்கதுரை தான் அந்த நான்கு பெட்டிகளையும் எடுத்துச் சென்றிருக்கிறார். அதில் ஐயமே இல்லை.’
மணிமொழி, மக்காக இருந்த நீ மகா புத்திசாலியாகிவிட்டாயே! அழகு மட்டுமே இருந்த உன்னிடம், இப்போது அறிவும் வந்துவிட்டதே! எப்படியோ பெண்ணே… அழகோடும் அறிவோடும் மட்டுமல்ல, ஆயுளோடும் நீ இருக்கவேண்டும்!
– தொடரும்…
– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.