மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 24,465 
 
 

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30

28. தப்பிவிடு மணிமொழி!

பொன்மலையைத் தங்கதுரை வந்து பார்த்துவிட்டுப் போனதுமே, அவருடைய மனம் சிந்தனை செய்தது. பிரபாவதிதேவியைப் பெரிய ஐயா சென்னைக்கு அனுப்பியிருக்கிறார் என்றால், மிகவும் முக்கியமான செய்தி ஏதாவது இருக்கும் என்று எண்ணினார். மருதநம்பிக்கு ஒரு முடிவு கட்டிவிட்ட பெரிய ஐயா, மணிமொழிக்கும் முடிவுகட்ட ஏதாவது செய்திருப்பாரோ என்று பிரபாவதிதேவியைத் தேடி ஓடினார் பொன்மலை.

மவுன்ட்ரோடில் இருந்த இருந்த நீலமலை ஓட்டலுக்குச் சென்று எளிதில் பிரபாவதிதேவியின் அறையைக் கண்டுபிடித்து விட்டார். வெளிவே இருந்த பொத்தானை அமுக்கினார். கதவு திறந்தது. உள்ளே மணிமொழி நின்றிருந்தாள்.

பொன்மலை உள்ளே வந்து, “பிரபாவதிதேவி எங்கே?” என்று கேட்டார்.

“உள்ளே குளிக்கிறார்” என்றாள் மணிமொழி.

“நல்ல நேரத்தில்தான் நான் வந்திருக்கிறேன் மணிமொழி! உன் அப்பா பேராபத்தில் இருக்கிறார். ஓடு! நீ இனி இங்கே இருப்பது ஆபத்து! உன் அப்பா தங்கதுரையைத் தேடிக்கொண்டிருக்கிறார். நீ அவரைக் கண்டு கண்டு பிடித்து, அவரையும் கூட்டிக் கொண்டு எங்கேயாவது ஓடி விடு!” என்றார் அவர்.

“அப்பாவை நீங்கள் பார்த்தீர்களா? எப்போது, எங்கே பார்த்தீர்கள்?” என்று பதறிக் கேட்டாள் மணிமொழி.

“அதையெல்லாம் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு இப்போது நேரமில்லை. முதலில் நீ பிரபாவதிதேவி வருவதற்குள் தப்பி ஓடி விடு!” என்றார் பொன்மலை.

மணிமொழி உடனே வெளியே ஓடி, ஒரு வாடகைக் காரை நிறுத்தி, ஏறிக்கொண்டாள்.

இங்கே, பிரபாவதிதேவி குளித்துவிட்டுச் சலவை உடையுடன் வந்தவள், பொன்மலையைப் பார்த்ததும் திகைத்து, “யாரது! பொன்மலையா?” என்று கேட்டாள்.

“ஆமாம்!”

“இங்கே நான் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“எப்படியோ தெரியும். அது இருக்கட்டும். உன்னை எச்சரிக்கவே நான் இப்போது வந்தேன். மருதநம்பி தங்கதுரையைப் பார்க்கப் போயிருக்கிறார், ஓர் உண்மையை தங்கதுரையின் மூலம் பெரிய ஐயாவிடம் சொல்வதற்காக. அதைப் பெரிய ஐயா கேட்டால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது!” என்றார் பொன்மலை.

“என்ன உண்மை அது?” என்று கேட்டாள் பிரபாவதி.

“கேசவதாஸ் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரை ஒரு பெண் சுட்டுக் கொன்றுவிட்டாள். அவள் தவற விட்டுப் போன கைக்கடிகாரத்தை மருதநம்பி எடுத்து வைத்திருக்கிறார்!” என்றார் பொன்மலை.

“உண்மையாகவா?” என்று திடுக்கிட்டு அலறிய

பிரபாவதி தேவி, “எங்கே மணிமொழி?” என்று கேட்டாள்.

“மணிமொழியா? நான் அவளைப் பார்க்கவே இல்லையே!” என்றார் பொன்மலை.

பிரபாவதிதேவி ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு, கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே தலைதெறிக்க ஓடினாள். பொன்மலை மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

அந்தக் கைக்கடிகாரத்தை மருதநம்பி தங்கதுரையிடம் தருவதற்கு எடுத்துப் போயிருப்பார் என்று நினைத்து ஓடுகிறாள் பிரபாவதி. அது பொன்மலையிடமல்லவா இருக்கிறது!

‘பிரபாவதிதேவியும் தங்கதுரையும் மோதட்டுமே! அப்போது பல உண்மைகள் வெளியே வரும்’ என்பது பொன்மலையின் திட்டம்.

29. இனி வழி ஏதும் இல்லை!

தங்கதுரையின் அறையில் மருதநம்பியின் பிணம் கிடந்தது. அவர் நெஞ்சைத் துளைத்துக்கொண்டு சென்றிருந்தது ஒரு குண்டு!

தங்கதுரை கதவுகள் இரண்டையும் சாத்திவிட்டு மருதநம்பியின் பிணத்தை இழுத்தான் – அதை வெளியே கொண்டு போவதற்காக! அப்போது…

காரொன்று வெளியே வந்து நிற்கும் ஓசை கேட்டது. தங்கதுரை சன்னல் வழியாக வெளியே பார்த்தான். முத்தழகு காரை விட்டுக் கீழே இறங்கிக் கையில் பையுடன் வந்துகொண்டு இருந்தான்.

தங்கதுரை சட்டென்று கீழே கிடந்த சமுக்காளத்தில் மருதநம்பியின் பிணத்தை மறைத்து விட்டு, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு நின்றான்.

முத்தழகு, கையில் பையுடன் அறைக்குள் புயலைப்போல நுழைந்தான். எதிரே நீட்டிய துப்பாக்கியுடன் தங்கதுரை. “தங்கதுரை! என்ன இது துப்பாக்கியும் கையுமாக?” என்று கேட்டான் முத்தழகு.

“அதிருக்கட்டும், கொண்டா அந்த நகைப்பையை!” என்றான் தங்கதுரை.

முத்தழகு, தன் கையிலிருந்த நகைப்பையை மேசையின் மீது வீசி எறிந்தான். பிறகு, “எங்கே குழந்தை இளங்கோ?” என்றான்.

“சொன்னபடி நான் நடந்து கொள்வேன் முத்தழகு” என்று சொன்ன தங்கதுரை, “பாட்டி, குழந்தையைக் கொண்டு வா” என்று கத்தினான்.

சற்று நேரத்தில் குழந்தை இளங்கோவோடு அறைக்குள் வந்து நின்றாள் கிழவி. அதே நேரம், மாரி காலத்து மழையென உள்ளே நுழைந்தாள் மணிமொழி. இளங்கோவைப் பார்த்ததும், “இளங்கோ!” என்று கத்திக்கொண்டே அவனை வாங்கிக் கொள்ளக் கிழவியிடம் தாவினாள். அப்போது, சமுக்காளத்தால் மூடியிருந்த மருதநம்பியின் பிணத்தை மிதித்துக் கால்கள் தடுமாறித் தரையில் விழுந்தாள் மணிமொழி.

விழுந்த மணிமொழி எழுந்து பார்த்தாள். அப்பாவின் பிணம்! “அப்பா!” என்று அலறினாள் மணிமொழி. அந்த அலறலால் அந்த அறையே கிடுகிடுத்தது!

மருதநம்பியின் பிணத்தைப் பார்த்ததும் முத்தழகுக்கு ஆவேசம் பிறந்தது. வெறி பிடித்தவன் போல் தங்கதுரையை நெருங்கினான்.

“முத்தழகு! என் அருகில் வராதே! வந்தால் இளங்கோவைச் சுட்டுவிடுவேன்!” என்று கத்தினான் தங்கதுரை.

“இனி நீ தப்ப முடியாது தங்கதுரை!” என்று சொல்லிக் கொண்டே தங்கதுரையை நெருங்கினான் முத்தழகு.

இந்த நேரத்தில் தன் உணர்வு பெற்ற மணிமொழி, நிலைமையை உணர்ந்து, தன் துக்கத்தை மறந்து, கண்மூடிக் கண் திறப்பதற்குள் ஓடிப்போய்க் கிழவியின் இடுப்பில் இருந்த இளங்கோவைப் பறித்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

“மணிமொழி!” என்று கத்திக் கொண்டே, மணிமொழியைப் பார்த்துச் சுட்டான் தங்கதுரை.

“ஆ!” என்று அலறிக்கொண்டே விழுந்தாள், எதிரே வந்துகொண்டிருந்த பிரபாவதிதேவி. தங்கதுரையின் குறி கொஞ்சம் தவறி, எதிரே வந்து கொண்டிருந்த அவள் கழுத்தில் பாய்ந்துவிட்டது குண்டு.

இந்த நேரத்தில், சிவகாமி ஒரு போலீஸ் படையுடன் உள்ளே நுழைந்தாள்.

கையில் துப்பாக்கியுடன் தளர்ந்து ஓய்ந்து போய் நின்று கொண்டிருந்த தங்கதுரையை உதவிப் போலீஸ் கமிஷனர் கைது செய்தார்.

மற்ற எல்லாரும் வந்து பிரபாவதிதேவியைச் சுற்றி நின்று கொண்டார்கள். குழந்தையுடன் ஓடிய மணிமொழியும் திரும்பிவந்தாள். தங்கதுரையும் கையில் விலங்குடன் பிரபாவதிதேவிக்கு அருகில் வந்து நின்றுகொண்டான்.

உதவிப் போலீஸ் கமிஷனர், டைரியும் பேனாவுமாகப் பிரபாவதிதேவிக்கு அருகில் வந்து உட்கார்ந்துகொண்டு குறிப்பெடுக்கத் தயாரானார்.

பிரபாவதிதேவி, தன் கையைப் பிடித்துக்கொண்டு இருந்த மணிமொழியை விழித் துப் பார்த்து, “மணிமொழி நீ என்னை மறந்துவிடு! உனக்கு நான் பெரும் தீங்குகள் செய்து விட்டேன். பிழைத்திருக்கவும் நான் விரும்பவில்லை. என்னை நீ மறந்தால் மட்டும் போதாது; மன்னிக்கவும் வேண்டும்!” என்று சொல்லி அழுதாள்.

பின், உதவிப் போலீஸ் கமிஷனர் பக்கம் திரும்பி, “ஐயா, நான் சொல்வது அனைத்தையும் எழுதிக்கொள்ளுங்கள். என் உயிர் பிரிவதற்கு முன் உண்மைகளை எல்லாம் சொல்லி விட விரும்புகிறேன்!” என்றாள்.

“என் பெயர் பிரபாவதிதேவி. பம்பாய் மெரீன்டிரைவில் 711-வது இல்லத்தில் வாழ்ந்து வந்தேன். ஆடம்பரமாக வாழ்வதில் எனக்குச் சிறு வயதிலிருந்தே ஆசை. என் விருப்பப்படியெல்லாம் வாழ, எனக்கு நிறையப் பணம் தேவைப்பட்டது.

கேசவதாஸ் என் சகோதரர். அவரும் என்னைப் போலவே ஆடம்பரமாக வாழ்ந்தார். அதனால் அவருக்கும் பணத் தேவை அதிகம். அயல்நாடுகளிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டு வரப்படும் உயர்ந்த ரகக் கடிகாரங்களையும் விலை மதிக்கமுடியாத வைரங்களையும் கப்பல்களிலிருந்து கடத்தி, அங்கங்கே கப்பல் வந்து நிற்கும் கடற்கரை நகரங்களில் விநியோகம் செய்ய, என் திட்டப்படி கேசவதாஸ் பல ஆட்களைப் பிடித்து ஏற்பாடுகள் செய்தார்.

அயல்நாடுகளிலிருந்து எப்போது எந்தக் கப்பலில் என்ன சாமான்கள் வரும் என்ற செய்தி முதலில் வெளிநாட்டிலிருந்து எனக்குதான் கிடைக்கும். நான் அந்தச் செய்தியை, நைலான் குழந்தைச் சட்டையில் ரகசிய எழுத்துக்களில் பின்னி, ஒரு பெட்டியில் போட்டு, பெட்டி பெட்டியாகச் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பரிசுகள் அனுப்பு வதுபோல அனுப்புவது வழக்கம்!”

இதைச் சொன்னதும் கண்களை மூடிக் கொண்டாள் பிரபாவதிதேவி. ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் களைப்படைந்திருந்தவள், மெதுவாகக் கண்களைத் திறந்து மீண்டும் சொல்லத் தொடங்கினாள்.

“உயர்ந்த கடிகாரங்களும் விலைமதிக்க முடியாத வைரங்களும் பணமாக மாறி மொத்தப் பணமும் கேசவதாசுக்கு வந்துவிடும். அவர் அதை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பார். பெரிய ஐயாவுக்கு இந்தப் பணத்தில் பெரும் பங்கு போய்ச்சேரும். அந்தப் பெரிய ஐயா யார் தெரியுமா?”

பிரபாவதிதேவியின் இந்தக் கேள்விக்குச் சுற்றியிருந்தவர்களில் எவருமே பதில் சொல்ல வில்லை. பிரபாவதிதேவியே தொடர்ந்தாள்…

“அந்தப் பெரிய ஐயா நான் தான்! நான்தான் இந்தக் கொள்ளைக் கூட்டத்தைப் பெரிய ஐயா என்ற பேரில் நடத்தினேன். பெரிய ஐயா என்றால் கூட்டத்தைச் சேர்ந்த அத்தனை பேர்களும் அஞ்சுவார்கள். எனக்குப் பெரிய ஐயா ரொம்ப வேண்டியவர் என்று எல்லோரும் நினைத்தார்கள். அதனால் பெரிய ஐயா என்ற பெயரைச் சொல்லி என்னால் எல்லாரையும் மிரட்ட முடிந்தது.

குழந்தைச் சட்டைகளை அட்டைப் பெட்டிகளுள் வைத்து அனுப்பும்போது, அவை ஒழுங்காக உரியவர்களுக்குப் போய்ச் சேருகின்றனவா என்பதைப் பார்க்கச் சில வேளைகளில் பெரிய ஐயா அனுப்பியதாக நான் சொல்வது உண்டு.

மருதநம்பி நம்பிக்கையோடு நடந்துகொண்டதால் அடிக்கடி நான் அவருக்கு இந்த வேலைகளைக் கொடுத்தேன். அப்படி ஒரு தரம் சில பெட்டிகளை மருதநம்பிக்கு அனுப்பி உரியவர்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னபோது, என் விலாசமுள்ள பெட்டியை, வழக்கத்திற்கு மாறாக மணிமொழி கொண்டு வந்து தந்தாள். உடனே, அவளையும் எங்கள் கூட்டத்தில் சேர்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.

விவரம் ஏதும் அறியாத மணிமொழி, எதிர்பாராத விதமாகக் கேசவதாஸ் கொலை வழக்கில் சிக்கிக் கொண்டாள். மணிமொழி என்னை வந்து பார்ப்பதற்குச் சற்று முன்னர் தான் நான் கேசவதாஸைச் சுட்டுக் கொன்றுவிட்டு வந்திருந்தேன்.

அவர் நான் கேட்டபோதெல்லாம் எனக்குப் பணம் தரவில்லை. என்னை ஏமாற்றவும் முயன்றார். அது மட்டுமல்ல, ‘இனிமேல் நான்தான் பெரிய ஐயா’ என்றார். பொறுமை இழந்த நான் அவரைச் சுட்டு விட்டு, ஓடி வந்துவிட்டேன்!”

உதவிப் போலீஸ் கமிஷனர் தன் டைரியில் அவள் சொல்வதை ஒன்றுகூட விடாமல் எழுதிக்கொண்டே வந்தார்.

“கேசவதாஸ் கொலை வழக்கில் மணிமொழியைச் சிக்க வைத்துவிட்டு நான் தப்பித்துக் கொள்ள எண்ணினேன். மணிமொழி பம்பாயிலிருந்து போய் விட்டால், மணிமொழி ஓடி விட்டாள் என்ற செய்தி பரவும்; அவள் குற்றவாளி என்று அவள் மேல் பழி விழும் எனக் கருதி, மணிமொழியைச் சென்னைக்கு அனுப்பத் திட்டமிட்டேன். அதன்படி, அவள் சில பெட்டிகளை எடுத்துக் கொண்டு சென்னைக்குப் போகும்படி செய்தேன்.

மருதநம்பி கைது செய்யப்பட்டார். எங்கே அவர் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என அஞ்சி, மருத்துவ விடுதியிலிருந்த அவரை அங்கிருந்து தப்புவிக்கச் செய்தேன். பின்னர், அவரைத் தீர்த்துக் கட்டுவதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டேன்.

என் திட்டப்படி, ‘பெரிய ஐயா’வின் கட்டளைப்படி, தங்கதுரை மருதநம்பியைச் சுட்டுக் கொன்றுவிட்டான். ஆனால், அதே தங்கதுரை என் திட்டத்திற்கு மாறாக என்னையே சுட்டுவிட்டான்.

தீமை வென்றதாகச் சரித்திரமே இல்லையே!

என் வாழ்வில் மட்டும் எப்படித் தீமை வெல்லும்? நான் உண்மைகள் அனைத்தையும் அப்படியே சொல்லிவிட்டேன். என் கூட்டத்தைச் சேர்ந்தவர்களது பட்டியல் என் குறிப்புப் புத்தகத்தில் இருக்கிறது. இதற்கு மேலும் நான் சொல்வதற்கு ஏதும் இல்லை!” என்றாள் பிரபாவதிதேவி.

இந்த நேரத்தில் அங்கே வந்த பொன்மலை, பிரபாவதிதேவியின் கைக்கடிகாரத்தை உதவிப் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார்.

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்ததும் பிரபாவதிதேவியின் கண்கள் ஒருமுறை மின்னின. அடுத்த கணம் அவள் உயிர் பிரிந்தது.

30. சிவகாமியின் தியாகமே பெரிது!

மங்கிய மாலைப் பொழுதினிலே, மண்ணில் உட்கார்ந்திருந்த மணிமொழியின் கால்களையும் முத்தழகின் கால்களையும் கடல் அலைகள் கழுவிச் சென்றன.

முத்தழகு, மணிமொழியின் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டான். காதல் மொழிகள் கரைபுரண்டன. பின்பு, அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரம் அப்படியே மௌனமாக இருந்தவன், “மணி, அண்ணா அவர் பையனுக்கு என் நினைவாக முத்தழகு என்று பெயர் வைத்திருக்கிறார். நீ இளங்கோ என்று புளுகிவிட்டாயே!” என்றான்.

மணிமொழி மெல்லச் சிரித்துக்கொண்டே, “நீங்கள் எனக்குக் கணவராக வரப்போகிறீர்கள் என்பது எனக்கு அப்போதே தெரியும்! அதனால்தான் நான் அந்தப் பெயரைச் சொல்லவில்லை! இளங்கோவை யார் என்ன பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும், நான் இளங்கோ என்றுதான் கூப்பிடப் போகிறேன்” என்றாள்.

“நீ மட்டும் என்ன, அவனுக்கு அம்மாவாகப் போகிற சிவகாமியே அவனை இளங்கோ என்று தான் கூப்பிடுகிறாள். அதனால், எல்லாருமே அவனை இளங்கோ என்று தான் கூப்பிடுவார்கள்!” என்று சொன்ன முத்தழகு, மணிமொழியின் உதடுகளில் விரலை வைத்து, “மணிமொழி, உன் தியாகம் மிகப் பெரிது!” என்றான். இதைச் சொல்லும்போது அவன் கண்கள் கலங்கின.

“இரண்டு கண்களையும் இழந்துவிட்ட, ஒரு பையனைப் பெற்றுவிட்ட உங்கள் அண்ணனைச் சிவகாமி நாளைக்கு கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாளே, அதைவிடவா என் தியாகம் பெரிது?

சிவகாமியின் தியாகமே சிறந்தது!” சிறந்தது!” என்றாள் மணிமொழி. இதைச் சொல்லும்போது அவள் கண்களும் கலங்கின.

மணிமொழி, நாளை உனக்குத் திருமணம். தீர்க்க சுமங்கலியாக இரு. உனக்கு ஒரு குறையும் வராது. ‘மணிமொழி நீ என்னை மறந்து விடு!’ என்று உன்னிடம் உன் கணவன் சொல்லாமல் பார்த்துக் கொள். வாழ்க நீ! வளர்க நீ!

(முற்றும்)

– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *