கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 8,561 
 
 

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1. ஓடி வந்தாள் ஒரு பெண்!

மது, மங்கை, மாமிசம் மூன்றையும் துறந்த மாமுனிவர் போல் வாழ்ந்து வரும் மருதநம்பியிடம் ஒரு கொடிய பழக்கம் இருந்தது. அது வேண்டாம், அவரிடமுள்ள அந்தக் கொடிய பழக்கத்தை நாம் இப்போதே தெரிந்துகொள்வது நமக்கு நல்லதல்ல!

இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து தப்ப முடியாது என்பதை அறிந்த நம்பி, நம்பிக்கை இல்லாமலேயே, தப்ப வழியில்லாமலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். மனக் கவலைகளையெல்லாம் மதிமுகம் ஒன்றைக் கண்டு மறந்திருந்தார் நம்பி. அது மணிமொழியின் முகம். மணிமொழி, நம்பியின் மகள்.

இந்த நிலவு நல்லாளை நினைத்து நினைத்துத் தன் துன்பங்களை யெல்லாம் மறந்து மகிழ்ந்து நின்றார் நம்பி.

அப்பாவையும் மகளையும் தவிர வேறு எவருமே இல்லை, அவர்கள் குடும்பத்தில்.

“மணிமொழி!” என்று அழைத்தார் அப்பா, மகளை.

“என்ன அப்பா?” என்று சிட்டு போலச் சிரித்து ஓடி வந்து நின்றாள் அந்த பட்டுமேனி நிறத்தாள்.

அவள் ஓடிவந்தபோது, அவளோடு ஒளி ஓடி வந்தது; அழகு ஆடி வந்தது; சுறுசுறுப்பு சுற்றி வந்தது.

கவலைக் கறை படியாத கரு விழிகளைத் திறந்து, “என்ன அப்பா?” என்று மீண்டும் கேட்டாள் அவள்.

நம்பி எதையோ சொல்ல வாயைத் திறந்தார். ஆனால் சொற்கள் வராததால் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

மணிமொழி, தந்தையின் முகத்தைத் தன் பக்கம் திரும்பி, “என்ன அப்பா?” என்றாள் மூன்றாவது முறையாக.

‘மணிமொழி, என்ன பெண் அம்மா, c! உன்னை உன் அப்பா கூப்பிட்டுவிட்டுத் தன் மனத்தில் உள்ளதைச் சொல்ல மனம் தடுமாறி முகத்தைத் திருப்பிக் கொள்வது இதுதானா முதல் தடவை! உடலால் வளர்ந்த நீ, உள்ளத்தால் இன்னும் வளரவில்லையே! பெண்ணை ஏமாற்ற முடியுமா என்பார்கள். சாவின் கரை ஓரத்திலே நிற்கும் உன் அப்பா உன்னை ஏமாற்றப் போகிறாரடி!”

“அப்பா, சொல்லு அப்பா, என்னை ஏன் கூப்பிட்டாய்?” என்று கேட்டாள் மணிமொழி.

“சும்மாத்தானம்மா கூப்பிட்டேன். நீ படித்துக் கொண்டிருந்தாயோ… கெடுத்து விட்டேனா?” என்று கேட்டார் நம்பி.

“இல்லை அப்பா, இப்படி அடிக்கடி நீங்கள் என்னைக் கூப்பிட்டு எதையோ சொல்ல வருவதும், முகத்தைத் திருப்பிக் கொள்வதும் அப்புறம் ‘சும்மாத்தானம்மா கூப்பிட்டேன்’ என்று சொல்வதும் எனக்குப் புது அனுபவமா என்ன? அடிக்கடி நடப்பதுதானே இது?” என்று சொல்லிவிட்டு மணிமொழி எழுந்தாள்.

“கல்யாணமாகாத பெண்… நீ என்ன நினைத்துக்கொள்வாயோ?”

“கல்யாணமாகாத பெண்ணுக்கு ஒரு நினைப்புத்தான். கல்யாணமான பெண்களுக்குத்தானப்பா பல நினைவுகள்!” என்று கூறிய மணி மொழி ஓடி வந்து இருட்டில் நின்று கொண்டு அழுதாள்!

அப்பா எத்தனை தடவை தன்னைக் கூப்பிட்டாலும், எழுந்து ஓடுவாள் மணிமொழி. ஒரு முறை கூட எழுந்து ஓட அவள் அலுத்துக் கொண்டதே கிடையாது. இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு, ‘போ அப்பா, உனக்கு வேறு வேலையே இல்லை. நான் வர மாட்டேன்’ என்று ஒரு முறைகூடச் சொன்னதில்லை. ஏனென்றால் தந்தை, தன்னிடம் எதையோ சொல்லப் பல நாட்களாக முயன்று கொண்டிருக்கிறார் என்பதும், தன்னைக் கண்டதும் தம் மனத்தில் உள்ளதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்பதும் மணிமொழி என்றோ தெரிந்து கொண்டுவிட்ட ஓர் உண்மை! அவருக்குச் சொல்ல மனம் வராத, அவர் சொல்ல மனம் தடுமாறுகிற அந்தப் பயங்கரம் என்ன என்பதை அறிந்துகொண்டே விட வேண்டும் என்ற ஆசை காரணமாகத்தான் அவர் கூப்பிட்ட நேரமெல்லாம் அயராமல் ஓடிக் கொண்டிருக்கிறாள் அவள்!

மணிமொழியால், “என்னப்பா அது? சொல்லப் போகிறீர்களா, இல்லையா? சொல்லுங்கள்” என்று, மனம் தடுமாறிநிற்கும் தந்தையிடம் கேட்டுவிடமுடியும்.

ஆனால், அடக்கம் மணிமொழியின் வாயைப் பொத்தி வைத்திருந்தது. அதைக் கேட்டால் இன்னும் அவர் துன்பம் பெருகுமோ என்று அஞ்சி, கொஞ்சியே வாழ்ந்துவந்தாள் கோழை மணிமொழி.

மணிமொழியோடு கூட எவருமே பிறக்கவில்லை. அவள் பிறந்தாள்; இறந்தாள் அவள் அன்னை, உடனே! அன்னையை இழந்த துன்பம் இன்னும் அறியாமலேயே வளர்க்கப்படுகிறாள் அவள்.

தனது திருமணம் பற்றிய ஏற்பாடுகளை எண்ணிக்கூடப் பார்க்காமல் இருக்கிறாரே தன் அப்பா என்று அவள் என்றுமே எண்ணியது கிடையாது.

கன்னிப்பருவ எழில் கொழிக்கும் அழகு குலுங்க, வீடெல்லாம் அவள் ஆடி வந்தாள்; ஓடி வந்தாள்; அந்த வீடு முழுவதும் அவள் செல்ல ஆட்சி தான்!

தமிழகத்தைச் சேர்ந்த தந்தையும் மகளும் பம்பாயைச் சேர்ந்த மாதுங்காவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன.

மணிமொழி, அன்றும் இன்றும் தந்தையிடம் எதையும் மனம் விட்டுக் கேட்காமல், என்ன வருமானம் அப்பாவுக்கு என்று கூட அறிந்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தாள். அறிய ஆசைப்பட்டாலும் புரிந்துகொள்ள முடியாது அவளால்! ஆர்வம் இருக்கலாம், ஆசை இருக்கலாம்; ஆனால் அறிந்து கொள்ளத் துணிவு வேண்டாமா?

நம்பி வெளியே போவார். அடிக்கடி போவார். அவரை அழைத்துச் செல்ல அடிக்கடி கார்கள் வரும். விலை உயர்ந்த கார்களே வரும். பெரும்பாலான நாட்களில், நடு இரவில்தான் வீடு திரும்புவார்.

கார்கள் வந்து நம்பியை அழைத்துச் செல்லாத நேரங்களில், ஒருவன் வரு வான். அவன் நன்றாகச் சுற்றிக் கட்டப்பட்ட ஒரு பெட்டியை நம்பியிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போவான். நம்பி உடனே வாடகைக் கார் ஒன்றை எடுத்துக்கொண்டு போய் அந்தப் பெட்டியை, பெட்டியை, பெட்டியிலுள்ள முகவரியில் சேர்த்துவிட்டு வருவார்.

தன் மேல் கொண்டிருக்கிற அன்பால்தான், இளையாள் என்ற பெயரில் சிற்றன்னை ஒருத்தியை அப்பா இங்கே கொண்டு வந்து நிறுத்தவில்லை என்பது மணிமொழிக்குத் தெரியும். அதனால்தான் எதைப் பற்றியும் அப்பாவிடம் கேட்காமல் வளர்ந்து வந்தாள் அவள்.

2. எவரோ கதவைத் தட்டினார்கள்!

ஒரு நாள், நடுப்பகல்… நாயும் படுக்கும் நேரம். தாங்க முடியாத இந்த வெயில் நேரத்தில், தாங்கமுடியாத குளிரால் நடுங்கிக்கொண்டு கிடந்தார் நம்பி. மயக்கம் அவருக்கு அடிக்கடி வந்தது.

மருதநம்பிப் பெரியவரே, நீங்கள் மடியப் போகிறீர்கள்! மணிமொழிக்கு ஏதாவது செய்துவிட்டுப் போங்களய்யா முன்னாலே! எக்குறையுமின்றி சாவதற்கு வாழ,மணிமொழிக்கு என்ன செய்கிறீர்கள், ஏது செய்திருக்கிறீர்கள்?

நனைந்த கண்ணிதழ்களுடன் மணிமொழி வந்து நின்றாள்.

“மருத்துவரை அழைத்து வரட்டுமா அப்பா?” என்று குனிந்து, செவியருகில் கேட்டாள் மணிமொழி.

நம்பி நிமிர்ந்து, “மகளே, அழுதாயா என்ன? வயதாகி விட்ட காரணத்தால், வந்து கொண்டிருக்கிறது காய்ச்சல் எனக்கு. விவரம் தெரிந்த பெண் நீ. அழலாமா?” என்று கேட்டுவிட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுதார்.

அப்பா அழுவதைக் கண்ட மணிமொழி துக்கம் தாங்காமல் அடுத்த அறைக்குள் ஓடிப்போய் நுழைந்து, கதவைச் சாத்திக் கொண்டு ஓவென்று வாய் விட்டு அழுதாள். இந்த நேரம் பார்த்து எவரோ கதவைத் தட்டினார்கள்.

நம்பி, போர்வையுடன் தம் உடலையும் சேர்த்துச் சுருட்டிக் கொண்டு, கட்டிலிலிருந்து முனகிக்கொண்டு எழுந்தார்.

முகத்தைத் துடைத்துக்கொண்டு, சேலையைச் சரிப்படுத்திக்கொண்டு, கதவைத் திறந்துகொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் மணிமொழி.

வந்தவள், அப்பாவைக் கட்டிக் கொண்டு, “ஏனப்பா, கதவை நான் திறக்க மாட்டேனா? வந்தவர் யார், அவருக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்க மாட்டேனா? அப்பாவுக்கு உடல் நலம் குன்றியிருக்கிறது, அப்புறம் வாருங்கள் என்று சொல்லி, நான் அவர்களை அனுப்பி வைக்க மாட்டேனா?” என்று பல கேள்விகளைக் கேட்டாள்.

“அப்படி எழுந்திருக்க முடியாத அளவுக்கு என்னம்மா வந்துவிட்டது எனக்கு? காய்ச்சல்தானே? அதனாலென்ன?” என்று தன் பெண்ணைப் பிடித்துக் கொஞ்சம் தள்ளிவிட்டுத் தானே போய்க் கதவைத் திறந்தார் நம்பி. திறந்ததும் மணிமொழி மருண்டு நின்றாள். தன் வாழ்வில் தன்னை அப்பா கொஞ்சம் பிடித்துத் தள்ளியது, அவளுக்கு இதுதான் முதல் தடவை! கன்னியவள் கலங்கி நின்றாள்.

நம்பிக்குத் தெரியும்… கதவைத் தட்டியது யார் என்பதும், கதவைத் தட்டியவன் என்ன கொண்டு வந்திருப்பான் என்பதும்!

கதவைத் திறந்ததும் ஒருவன்! அவன் கரத்திலே ஒரு பெட்டி! அவன் அந்தப் பெட்டியைச் சட்டென்று நம்பியிடம் கொடுத்தான். நம்பி அதை வாங்கிக்கொண்டதும் படீரென்று கதவைச் சாத்திக்கொண்டார். கதவைச் சாத்தியதும் கையிலிருந்த பெட்டியோடு கிடுகிடுவென்று ஆடினார் நம்பி. அவன் கண்கள் தேடின, மணிமொழியை.

மணிமொழிக்கு மனத் துன்பம் வந்தால், அவளுக்கென்று ஒரு சன்னல் இருக்கிறது. அந்தச் சன்னல் விளிம்பில் தாவி ஏறி உட்கார்ந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, தெருவில் போகிறவர்களையும் வருகிறவர்களையும் பார்த்துக் கொண்டிருப்பாள். இப்பொழுது அவள் அந்தச் சன்னல் விளிம்பில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தாள். மணிமொழியைக் கண்ட நம்பி, மனத்துன்பம் தாங்காமல், மௌனமாக அழுதுகொண்டே கையில் இருந்த பெட்டியுடன் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டார். படுத்துக் கொண்டதும் இருமத் தொடங்கினார்.

இருமல் ஓசை கேட்டதும் ஓடி வந்தாள் மணிமொழி. அப்பாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “காய்ச்சல் கடுமையாக இருந்தும் கொஞ்சம்கூட அதைப் பொருட்படுத்த மாட்டேன் என்கிறீர்கள்! நான் சொன்னால் நீங்கள் கேட்க மாட்டீர்கள். இந்தக் காய்ச்சலோடு இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் தெரியுமா? இதோ உங்கள் கையில் இருக்கிறதே பெட்டி, இந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பப் போகிறீர்கள், இல்லையா?” என்று கேட்டாள்.

கண்களை மூடிக் கொண்டார் நம்பி.

மணிமொழி, தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, “அப்பா, அந்தப் பெட்டியை இப்படிக் கொடுங்கள். அந்தப் பெட்டியை இந்த பம்பாயில் எவரிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமோ, அவரிடம் கொண்டு போய்க் கவனத்துடன் சேர்த்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கையை நீட்டினாள்.

நம்பி தன் கண்களைத் திறந்து சட்டென்று மணிமொழியின் மலர்க் கரத்தைப் பிடித்துத் தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு, சிறுபிள்ளை போல் அழுதார்.

கையை விடுவித்துக்கொண்டு அந்த அறையை விட்டே ஓடிவிட வேண்டும் என்று நினைத்தாள் மணிமொழி. அவளுடைய அந்தச் சிந்தனை செயலாவதற்கு முன் நம்பி பேசினார்: “மகளே, மனம் பொறு அம்மா! இதுவரை நான் தாங்கி வந்த மனச்சுமையை இன்று என்னால் தாங்க முடியாது. இந்தப் பெட்டியை எவரிடம் சேர்க்க வேண்டுமோ, அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்று என்மேல் உனக்கிருக்கும் அன்பால் கூறிவிட்டாய். மணமாக வேண்டியவள் நீ! உன்னை நான் பழகும் இடங்களுக்கு நானே அனுப்பினால் உன்னை நானே கொன்றவனாவேன்!”

“அப்பா, நீங்கள் உளறுகிறீர்கள்! உங்களுக்குக் காய்ச்சல் மிகுந்து விட்டது!” என்று சொல்லி அழுதாள் மணிமொழி.

மருதநம்பி, தனக்கு வரும் தாங்கமுடியாத துன்பத்தை மறைக்கப் பெட்டியைப் பக்கத்திலே வைத்துவிட்டுப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டார்.

கொஞ்ச நேரமாயிற்று.

மணிமொழி கண்களைத் துடைத்துக்கொண்டு, அந்தப் பெட்டியை எடுத்து அதன் மேல் இருந்த முகவரியைப் படித்தாள்: எஸ்.பன்னாலால், பிளாட் 3, அப்டுடேட் பில்டிங்ஸ், அந்தேரி.

மணிமொழி நனைந்த தன் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு, அந்தப் பெட்டியுடன் ஓசை சிறிதும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்!

3. மணிமொழியின் மனக் கதவுகள்

உடல் நலம் குன்றியிருந்த நம்பி, அன்று வீட்டில் இல்லை. அவர் மேசையில் ஒரு துண்டுக் கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில்…

‘மகளே, நான் வெளியே போக வேண்டும் என்று சொன்னால், நீ என்னை அனுப்பமாட்டாய். என்னைப் பற்றி உனக்கு ஏதும் தெரியாது. மகளே, என் மனம் மருண்டு கிடப்பதை நீ அறிவாய். மனம் மாறுகிறதா என்று பார்க்க நாம் இன்றைக்குச் சினிமாவுக்குப் போகலாமே! ‘மெட்ரோ’வில் ஒரு நல்ல பாடம் நடக்கிறது. போகலாம், முன்னேற்பாடுடன் இரு. நான் வருகிறேன். நீ இந்த நேரத்தில் தலைவாரிப் பூச்சூட்டிப் புதுச்சேலை உடுத்தி நிற்க சம்மதிக்க மாட்டாய். இருந்தாலும், இந்தக் கிழவனுக்காக நீ தலைவாரிப் பூ முடித்துப் புதுச் சேலை கட்டி நில்லம்மா, நான் வருகிறேன்.

உன் அப்பா.’

கடிதத்தைப் படித்த மணிமொழி கண்களை மூடிக்கொண்டாள். மூடிய கண்களையும் முட்டிக்கொண்டு கண்ணீர் கொட்டியது.

மணிமொழி, கடிதத்தைக் காப்புக்குள் செருகிக் கொண்டு, சன்னலுக்கு அருகில் வந்து, அதன் விளிம்பில் தாவி ஏறி உட்கார்ந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டு

தெருவில் போகிறவர்களையும் வருகிறவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மணிமொழியின் கண்கள் தெருவைக் கண்டாலும், மனம் அப்பாவின் எதிர்காலத்தையே எண்ணி நின்றது. ‘அப்பாவுக்கு வெறி பிடித்துவிடுமோ?” என்று அவள் எண்ணியபோது மணிமொழி, மடிக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

மணிமொழி! உன்னோடு ஒருவரும் பிறக்கவில்லையே, உனக்கு ஆறுதல் சொல்ல? நீ மற்றவரோடு மனம் விட்டாவது பழகியிருக்கிறாயா, உன் துன்பத்தை எவரிடமாவது எடுத்துச் சொல்ல? எவரோடும் நெருங்கிப் பழகாமல் ‘அப்பா அப்பா’ என்று அப்பா கால்களையே சுற்றி வந்தாய்! இப்போது யாரம்மா வந்து உனக்கு ஆறுதல் சொல்லப் போகிறார்கள்?

மனம் கொஞ்சம் அமைதியுற்றிருந்தபோது மணிமொழி நிமிர்ந்து பார்த்தாள், வெளியே வெளிச்சம் குறைந்து இருள் பரவிக்கொண்டிருந்தது. பரபரவென எழுந்தாள். முகத்தைக் கழுவினாள். சிகையைச் சிக் கெடுத்தாள். வாரி அள்ளிச் செருகி வண்ண மலர் சூடினாள்.

உடலை இறுக்கும் இரவிக்கை அணிந்து, காஞ்சிபுரம் பட்டுச் சேலையைக் கட்டிக்கொண்டாள்.

மணி ஆறு. நம்பி இன்னும் வரவில்லையே!

மறுகிக்கொண்டு நிற்கும் மணிமொழியின் செவிகளிலே, கார் ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது. ஓடினாள்; எட்டிப் பார்த்தாள்.

மேலே மஞ்சள் வண்ணமும் கீழே கறுப்பு வண்ணமும் பூசப்பட்ட வாடகைக் கார் ஒன்றில் நம்பி வந்து இறங்கினார். காரை விட்டுக் கீழே இறங்கியதும், நிற்க முடியாமல் தடுமாறினார். காரோட்டி தாங்கிக் கொண்டான்.

மணிமொழி, “அப்பா!” என்று கத்திக்கொண்டே அத்தனை படிகளையும் தாண்டி ஓடி வந்து, அப்பாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவரை அப்படியே அழைத்து வந்து சாய்வு நாற்காலியில் படுக்க வைத்தாள்.

நம்பி, முகத்திலிருந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு, “மணிமொழி, காரோட்டியிடம் கேட்டு, அவனுக்கு எவ்வளவு பணமோ அதைக் கொடுத்து அனுப்பி விடு. காரில் சிறு பெட்டிகள் ஐந்து இருக்கும். அவற்றை எண்ணி வாங்கிவை” என்றார்.

மணிமொழி, காரோட்டிக்குக் கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

நம்பி, மகளை அருகில் வரச்சொல்லிச் சாடை காட்டினார். வந்தாள்.

“எனது இந்தக் கோட்டைக் கழற்றிவிட்டுக் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா அம்மா!”

மணிமொழி, குவளையில் தண்ணீர் கொண்டு வந்தாள்: “அப்பா, என்னப்பா உங்களுக்கு?”

“எனக்கே தெரியவில்லையம்மா! மயக்கம் வந்துவிட்டது. வாடகைக் காரில் வரும்போது, மறுபடியும் எனக்குக் காரிலேயே நினைவு வந்துவிட்டது. உடனே காரை நம் டாக்டர் வீட்டிற்கு விடச் சொன்னேன். டாக்டர் என்னைச் சோதித்து விட்டு, ‘உங்கள் உடல்நிலை மிகவும் மோசமாயிருக்கிறது. போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி மருந்து தந்தார். அது கோட்டுப் பையிலேயே இருக்கிறது” என்றார் நம்பி.

மணிமொழி, கோட்டுப் பையில் இருந்த மருந்துப் புட்டியை எடுத்து அப்பாவுக்கு ஒரு வேளை மருந்தைக் கொடுத்துவிட்டுப் போர்வையை எடுத்து அவர் உடல் முழுவதும் போர்த்திவிட்டாள்.

“மணிமொழி, சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று உன்னை நான் ஏமாற்றி விட்டேன்” என்றார் நம்பி.

“அதெல்லாம் இல்லையப்பா” என்றாள் மணிமொழி. அப்பா ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்து நின்றிருந்தாள். அவர் ஏதும் பேசவில்லை. அதனால் மணிமொழியே சொன்னாள்… “அப்பா! நான் உங்களுக்குக் குழந்தை. ஆனால், உலகத்திற்குப் 17 வயதுப் பெண்! உங்களுக்கு மகன் இல்லாததால் மகன் தந்தைக்காற்றும் உதவியை நான் செய்ய வேண்டும். கேளுங்களப்பா! நீங்கள் கொண்டு வந்திருக்கும் ஐந்து பெட்டிகளையும் அந்தந்த முகவரியில் நான் சேர்த்துவிட்டு வருகிறேனப்பா.”

“மணிமொழி! மகளே!” என்று நிமிர்ந்து உட்கார்ந்து கத்தினார் நம்பி.

“அப்பா, மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு பெட்டியைச் சேர்க்கவேண்டிய இடத்தில் நான் சேர்த்துவிட்டு வரவில்லையா?”

“மகளே, ஒரு நேரத்தைப் போல் ஒரு நேரம் இருக்காது!”

“இது எனக்குக் காலம் கடந்த பாடம் அப்பா!”

“உண்மைதான் மகளே! சரி… செய், அந்தப் பெட்டியின் மேல் எவர் பெயர் இருக்கிறதோ அவரிடம்தான் பெட்டியைக் கொடுக்க வேண்டும். அவர் பெட்டியை வாங்கிக்கொள்ளும்போது, ‘இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?” என்று கேட்பார். தயங்காமல் ‘பிள்ளைகளுக்கான புதிய உடை இருக்கிறது’ என்று சொல்!” சொல்லிவிட்டுப் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டார் நம்பி. அவர் உடல் குலுங்கியது. அழுகிறாரா?

மணிமொழி, கொஞ்ச நேரத்தில் அந்த ஐந்து பெட்டிகளுடன் மாடியை விட்டுக் கீழே இறங்கி, வாடகைக்கார்கள் நிற்குமிடத்திற்குப் போய், ஒரு காரில் ஏறிக் கொண்டாள்.

“மாதுங்காவுக்குப் போ!”

மாதுங்காவில், மணிமொழி சொன்ன வீட்டிற்கு முன்னால் கார் போய் நின்றது. அவள் இறங்கினாள் ஒரு பெட்டியுடன்.

அது தனி வீடு. வீட்டின் கதவு திறந்தே கிடந்தது. உள்ளே போய், “ஐயா” என்று அழைத்தாள்.

உள்ளே இருந்து ஒருவர் வந்தார். அவருக்கு ஐம்பது வயது இருக்கும். “உங்கள் பெயர் என்ன?”

“சாந்திலால்.”

“இந்தாருங்கள்” என்று பெட்டியை அவரிடம் நீட்டினாள் மணிமொழி.

அவர் பெட்டியை வாங்கிக் கொண்டே, “இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். மணிமொழி தயங்காமல், “பிள்ளைகளுக்கான புதிய உடை இருக்கிறது” என்றாள்.

“நன்றி” என்று சொல்லிவிட்டுப் பெட்டியை வாங்கிக்கொண்டு விர்ரென்று உள்ளே சென்றுவிட்டார் அவர்!

கொஞ்ச நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்த மணிமொழி, வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டாள்.

இரண்டாவது இடம் விக்டோரியா டெர்மினசுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய சந்தில் இருந்தது. அந்தச் சந்திற்குள் வாடகைக் கார் சென்ற போது மணிமொழிக்கே கொஞ்சம் அச்சமாக இருந்தது. விளக்குகள் இருந்தும், அந்தச் சந்தில் வெளிச்சமே இல்லை. இருள் மண்டிக் கிடந்த அந்தச் சந்திற்குள் மணி மொழி 7-ம் எண்ணுள்ள வீட்டைக் கண்டுபிடித்தாள்.

அந்த வீட்டின் கதவிலேயே, ‘ராம்சந்த்’ என்னும் பெயர் எழுதப் பட்டிருந்தது. மணிமொழி கதவைத் தட்டியதும் கதவைத் திறந்துகொண்டு, முப்பது வயது மனிதன் ஒருவன் வந்து நின்றான்.

“உங்கள் பெயர்தான் ராம் சந்தா?”

“ஆமாம்.”

“உங்களுக்கு ஒரு பெட்டி கொண்டு வந்திருக்கிறேன்.”

“பெட்டியா? என்ன பெட்டி? எனக்கெதற்குப் பெட்டி? சரி, அந்தப் பெட்டியைக் கொடுங்கள், பார்க்கலாம்.”

மணிமொழி, பெட்டியை அவனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கி ஒருதரம் புரட்டிப் பார்த்து விட்டு, “இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.

மணிமொழி, “பிள்ளைகளுக்கான புதிய உடை இருக்கிறது” என்றாள்.

“நன்றி” என்று சொல்லிக்கொண்டே கதவைச் சாத்திவிட்டான் அவன். கொஞ்சம் திடுக்கிட்ட மணிமொழி சமாளித்துக்கொண்டு காரில் வந்து ஏறிக்கொண்டாள். அப்போது…

மாடிச் சன்னலிலிருந்து ராம்சந்த் மணிமொழியை உற்றுப் பார்த்தான். மணிமொழி அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே காரோட்டியிடம், “மரீன் டிரைவுக்குப் போ” என்றாள்.

மூன்றாவது இடத்தில், 40 வயது கொண்ட ஒரு பெண்ணைக் கண்டாள் மணிமொழி. அந்தப் பெண் உயர்ந்த உடையையும் நல்ல நகைகளையும் அணிந்து கொண்டிருந்தாள். அவள் பாதங்களிலே பட்டு நடையன்கள். அவள் இருப்பிடம் சிறியதாக இருந்தாலும், சன்னல்களுக்குத் திரைகள் கட்டி, வண்ண விளக்குகள் போட்டு, வட்ட மேசை, வானொலிப் பெட்டி, வண்ணப் பூந்தொட்டிகள் வைத்து அழகுபடுத்தி யிருந்தாள்.

அவள் மணிமொழியிடம் வந்து, “யார் நீ?” என்று கேட்டாள்.

“பிரபாவதி தேவி என்பது நீங்கள்தானே?” என்று கேட்டாள் மணிமொழி. ‘நீ யார்’ என்ற கேள்விக்குத் தான் யார் என்பதை மணிமொழி சொல்லவில்லை. “ஆமாம், நான்தான் பிரபாவதி” என்றாள் அவள்.

“இந்தாருங்கள் பெட்டி!” என்று தன் கையிலிருந்த பெட்டியை அவளிடம் கொடுத்தாள் மணிமொழி.

“பிள்ளைகளுக்குரிய புதிய உடைகள்தாமே இதில் இருக்கின்றன?” என்று கேட்டுக் கொண்டே மணிமொழியின் கரத்திலிருந்த பெட்டியை எடுத்துக் கொண்டாள் அவள்.

“நான் வருகிறேன்” என்று மணிமொழி திரும்பினாள்.

“நில்” என்று மணிமொழியின் தோளைப் பற்றினாள் அவள்.

“நம்பிக்கு நீங்கள் என்ன வேண்டும்?”

“அவர் என் அப்பா!?”

சொல்லி விட்டு, மணிமொழி வந்து காரில் ஏறி உட்கார்ந்து, கதவைச் சாத்திக் கொண்டாள். பிரபாவதி தேவி மணிமொழியையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

கார் புறப்பட்டது. தாஜ்மகால் ஓட்டலைத் தாண்டியது. இது நான்காவது இடம். அந்த இடம்…

ஓர் அலுவலகமாக இருந்தது. அங்கே பல ‘ஃபைல்’களும் நிறைய அட்டைப் பெட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே ஓர் அறையில் மட்டுமே விளக்கு வெளிச்சம் இருந்தது.

ஆடும் கதவுகளைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள் மணிமொழி.

அந்த அறையில், பெரிய மேசைக்குப் பின்னால், சுழல் நாற்காலியில் இளம் வயதுள்ள ஒரு மனிதன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தான். அவன் காலடி ஓசையைக் கேட்டு, எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

மணிமொழியைக் கண்டதும் எழுந்து நின்று, “வாருங்கள், உட்காருங்கள்” என்றான். மணிமொழி அவனை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு, “மன்னிக்கவும். உட்கார நேரமில்லை. இந்தாருங்கள்” என்று கையிலிருந்த பெட்டியை அவனிடம் கொடுத்தாள்.

“வழக்கமாக வருகிறவர் நம்பி தானே? நம் குழுவில் உங்களைப் போன்ற அழகான பெண்ணொருத்தி சேர்ந்திருப்பதை நான் அறியாதிருக்கிறேனே!”

இதற்கு ஏதும் மறுமொழி சொல்லாத மணிமொழி, அவன் மேசை மீதிருந்த பெயர்ப் பலகையைப் பார்த்தாள். ‘சொல்லழகன்’ என்றிருந்தது.

மணிமொழி அவனை நிமிர்ந்து நோக்கிவிட்டுத் திரும்பிச் சென்று வாடகைக் காரில் ஏறிக் கொண் டாள்.

கதவுகள், மணிமொழி தள்ளி விட்டு வந்த வேகத்தில் இன்னும் ஆடிக்கொண்டிருந்தன, மணிமொழியின் மனக்கதவுகள் ஆடிக் கொண்டிருப்பதைப் போல!

ஐந்தாவது இடம் கடைசி இடம் மலபார் ஹில்ஸ். கரத்தில் இருக்கும் ஒரே பெட்டியை மலபார் ஹில்ஸிலிருக்கும் ஒரு மாளிகையில் சேர்க்க வேண்டும்.

குறிப்பிட்ட அந்த மாளிகைக்கு முன் வாடகைக் கார் வந்து நின்றது. மணிமொழி, பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு காரை விட்டுக் கீழே இறங்கிப் பங்களாவிற்குள் நுழைந்தாள்.

முதல் கதவு மூடிக் கிடந்தது.

வெளியே இருந்த மின்சார மணியின் விசையை அமுக்கினாள். உள்ளே மணி ஒலிக்கும் ஓசை கேட்டது. ஆனால், எவரும் வரவில்லை. மணிமொழி சுற்றிலும் ஒருமுறை பார்த்தாள். எங்கும் இருள் தன் திரையை விரித்திருந்தது. மணி மொழி மலபார் ஹில்ஸூக்கு இப்போதுதான் முதல் தடவையாக வருகிறாள். சுற்றிலுமிருந்த ஓசை இல்லாத ஒரு நிலை அவளை அச்சுறுத்தியது.

மீண்டும் மணியின் விசையை அமுக்கினாள். உள்ளே மணி ஒலிக்கும் ஓசை கேட்டது. ஆனால் எவரும் வரவில்லை.

மணிமொழி திரும்பிப் போய் விடலாமா என்று பார்த்தாள். ஆனால், உள்ளே வெளிச்சம் தெரிகிறதே! மின்சார ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஒரு வீட்டிற்குள் மனிதர்கள் இல்லை என்பதை மணிமொழியால் நம்பமுடியவில்லை. பளிச்சென்று கதவைத் தள்ளினாள். கதவு திறந்துகொண்டது!

மணிமொழி உள்ளே சென்றாள். மாளிகையின் நடுக் கூடத்தில் மின்சார விளக்குகள் அனைத்தும் ஒளியிட்டுக் கொண்டிருந்தன. அந்த வெளிச்சத்தில்…

விலையுயர்ந்த சோபாக்கள், கீழே விரிக்கப்பட்டிருந்த காசுமீர் கம்பளம், சன்னல்களுக்குத் திரையிடப்பட்டிருந்த மெல்லிய பட்டுத் துணி, ஓரத்தில் ஒரு நீண்ட மேசையில், மணிப்புரி நடனமாடும் ஒரு பெண்ணின் பெரிய சிலை!

கூடத்தில் மனிதர்களே இல்லை. மணிமொழியின் முகத்தில் வேர்வைத் துளிகள் முத்தாக அரும்பி நின்றன. நிமிர்ந்து, எதிரேயிருந்த அறையைப் பார்த்தாள். உள்ளே விளக்கு வெளிச்சம் இருந்தது. கதவுகளுக்குப் பதிலாகத் திரை தொங்கியதால், அறைக்குள் எவராவது இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

மணிமொழி மெல்ல, அந்தத் திரைக்கு அருகில் சென்றாள். திரையை மெல்ல விலக்கிப் பார்த்தாள். உள்ளே…

தரையில் ஒரு மனிதர் மல்லாந்து கிடந்தார். அவர் நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, செத்துக் கிடந்தார்!

மணிமொழி, தன் காலில் நடையன்கள் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு, விழுந்து கிடந்த அந்த மனிதருக்கு அருகில் சென்றாள். அவரைப் பார்த்தாள்.

அவர் கோட்டும் கால்சட்டையும் அணிந்திருந்தார். அவருக்கு 35 வயது இருக்கும்.

மணிமொழி வெளியே ஓடி வந்து, காரில் ஏறிக்கொண்டு, “வீட்டிற்குப் போ” என்றாள்.

காரோட்டி திரும்பி, “வீடு எங்கே அம்மா?” என்று கேட்டான். அப்போது மணிமொழியின் கையில் இருந்த அந்தப் பெட்டியை அவன் பார்த்தான்.

மணிமொழி, பெட்டியை மடியில் வைத்துச் சேலைத் தலைப்பால் மூடிக்கொண்டு, “நாம் புறப்பட்ட இடத்திற்குப் போ” என்றாள்.

“சரி அம்மா” என்று சொல்லி விட்டுக் காரைத் திருப்பினான் காரோட்டி.

கார் விரைந்து சென்றுகொண்டு இருந்தபோது மணிமொழி தன் முகத்தில் அரும்பி நின்ற வேர்வையைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அவளது வாழ்க்கையில் இப்படி ஓர் அவதி, இப்படி ஓர் அச்சம் தரும் நிகழ்ச்சி, இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று அவள் எண்ணியதே இல்லை.

மலபார் ஹில்ஸில் அவள் தேடிச் சென்ற மனிதர், கேசவதாஸ் என்னும் வடநாட்டு மனிதர். கேசவதாஸ் யார், அப்பாவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, ஏன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறார், அவரைச் சுட்டுக் கொன்றது யார்… எதுவும் தெரியாது, எவரோடும் நெருங்கிப் பழகியிராத மணிமொழிக்கு!

– தொடரும்…

– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *