கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 2,491 
 
 

(1960ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

6. சக்கரவாளக்கோட்டம்

சக்கரவாளக்கோட்டம் பிணங்கள் சுடும் விற கடுக்கினையுடைய சுடுகாடு. அது பூம்புகார் நகரம் தோன்றியகாலத்திலேயே தோன்றியது. இதனைச் சுற்றி ஒரு பெரிய மதில் உண்டு. அம்மதிலிலே திசைக்கொன்றாக நான்கு பெரிய வாயில்கள் உள. அவ்வாயில்களுள் ஒன்று, தேவர்கள் நுழைந்து செல்வதற்குரிய செழுங்கொடிகள் கட்டப்பட்ட வாயில். மற்றொன்று, நெல் கரும்பு பொய்கை பொழில் என்பன அழகுற வரையப்பட்ட நலம் பொருந்தியது. வெண்மைநிறம் பொருந்திய சுதையாற் பூசப்பட்ட மாடத்தில் வடிவங்கள் எதுவும் எழுதப்பெறாத வெளியான இடத்தை யுடையது மூன்றாவது வாயில். நான்காவது வாயில், மடிக்கப்பட்ட சிவந்த வாயையும் சினம் பொருந்திய கண்களையும் பிறரைக் கட்டத்தக்க பாசக்கயிற்றையும் கையிற்பிடித்த சூலப்படை யையும் உடைய நீண்ட தோற்றந் தாங்கிய பூத வடிவங்களைக் காவலாக உடையது. இவ்வாறான காவலையுடைய பேய்கள் நடமாடுகின்ற அரிய இடத்தினை உடையது சக்கரவாளக்கோட்டம். 

இக் கோட்டத்தில் ஆங்காங்கே நீண்ட கிளை களையுடைய பெரிய மரங்கள் தென்படும். அம் மரங்களின் கிளைகளிலே தம்முயிரைப் பலியாகக் கொடுத்தோரின் தலைகள் பல, தொங்கிக்கொண்டிருக்கும். பலிகொடுப்போர் தம் சிகையை மரத் தில் முடிந்துவிட்டுத் தலையை அரிவாராகலின் மரங்களிலே தலைகள் அவ்வாறு காணப்படும். இவற்றின் நடுவே ஓங்கி உயர்ந்த பலிபீடத்தை யும் முன்றிலையுமுடைய காளிதேவியின் கோயில் தோன்றும். தவத்தால் மேம்பட்டோரும், அர சரும், கணவனுடன் ஒருங்கே உயிர்விட்ட கற் புடைய மகளிருமாகிய இறந்தோரின் உடலைப் புதைத்த இடங்களில் அவ்வவர் இயல்புக்கேற் றனவாகச் செங்கற்களால் செய்யப்பட்ட கோட் டங்கள் அங்கும் இங்குமாகக் காணப்படும். 

மயான தெய்வங்களுக்குப் பலியிடுதற்குரிய தூண்கள் ஓர்புறம் ; கையிலே, கோலும் உண் ணும் கலமுங் கொண்ட ஈமங்காப்போர், உண்டு துயிலும் உறைவிடங்களாகிய குடிசைகள் மற்றோர் புறம்; இவற்றுடன் ஒழுங்காகச் செல்லும் புகைக் கொடிகளாகிய தோரணங்களும் ஈமப்பந்தர்களும் எவ்விடத்தும் பரந்திருக்கும். 

உயிருடன் வாழ்வோர், தாமும் இவ்வாறே இறந்து பிணமாதல் வேண்டும் என்பதை அவர் உள்ளம் நடுங்குமாறு தெரிவிக்கும் நெய்தற்பறை களின் ஒலி ஒருபக்கம் ; துறவியர் இறந்தமையால் ஏற்பட்ட துதிமுழக்கம் மற்றோர்பக்கம் ; இல்லறத் தோர் இறந்தமையால் ஏற்பட்ட அழுகையொலி ஒருபக்கம்; பிணங்களைச் சுடுவோரது ஒலிகளும் அவற்றைத் தோண்டப்பட்ட குழிகளிலே இடு வோரது ஒலிகளும் தாழியாலே கவிப்போரது ஒலிகளும் சேர்ந்த ஒலி இன்னோர்பக்கம்; இவ்வாறான – ஒலிகளுடன் நீண்ட முகத்தையுடைய நரியின் ஊளை ஒலியும், இறப்போரை அழைக்கும் பேராந்தைகளின் குரலும், புலாலுணவைக் கொள்கின்ற கழுகுகளின் அலறலும், உணவாகத் தம் மூளையையே கடித்துண்ட ஆண்டலைப் பறவை யின் பெருமுழக்கமும் பெரிய கடலின் ஓசைபோல எப்பொழுதும் நீங்காமல் ஒலித்துக்கொண்டே யிருக்கும். 

அங்கே, தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் மற்றைய மரங்களைக்காட்டிலும் உயர்ந்து தோன்ற, கான்றி, சூரை, கள்ளி முதலியன அவற்றினடியிற் செறிந்து காணப்படும். வருந்து கின்ற பசியையுடைய கொடிய பேய்கள், முகிலைத் தீண்டவல்ல நீண்ட கிளைகளையுடைய வாகை மரங்கள் செறிந்துள்ள மன்றங்களிலே கூட்ட மாகத் திரண்டிருக்கும். வெள்ளிய நிணத்தைத் தசையுடன் உண்டு, பறவைகள் மகிழ்ச்சிகொண்டு ஆங்குள்ள விளாமரங்களிலே தங்கியிருக்கும். 

மயானத்திலிருந்து நோன்பியற்றும் காபாலிகர், தளராத ஊக்கத்துடன் வன்னி மரங்கள் அதிகமாகக் காணப்படும் மன்றங்களிலே தீ பெருக்கிச் சோறடுவர். விரதங்களைக் காக்கும் உடம்பினையுடையோர் உடைந்த தலைகளைத் தொகுத்து பெரிய மாலைகளாக்கி இலந்தைமரங் கள் கூடிய மன்றங்களிலே தொங்கவிடுவர். பிணந் தின்னும் மக்கள், வெளியான இடங்களிலிருந்து நிணங்களைப் பெரிய பானைகளிலே விருந்தாக்கிப் பலர்க்கும் கொடுப்பர். 

நெருப்பு இடப்பட்ட பானைகளும், பண்டங் கள் இடப்பட்ட உறியும், அறுந்த மாலைகளும், உடைந்த குடங்கள் முட்டிகளும், சிதறுண்ட நெல்லுப்பொரியும் அரிசி முதலியனவும் பாழ். நிலமெங்கும் பரந்து கிடக்கும். 

தவநெறியிற் செல்லும் துறவி இவன்; இவன் மிகப் பெரிய செல்வமுடையவன் ; ஈன்றணி மையையுடைய இளமகள் இவள்; இவன் இளை யான் ; இவர் அறிவுமிக்க முதியவர், எனப் பேதம் பாராட்டாது அனைவரையும் கொடுந் தொழிலையுடைய காலன் கொன்று குவிப்ப, அவ் வுடல்களைத் தீயைக் கக்கும் வாயினையுடைய சுடலை தின்னக்கண்டும், கள்ளையுண்டு அறங்களை விரும்பாது வாழுகின்ற அறிவற்ற மாந்தரும் இருக்கின்றனரே ! 

இச் சக்கரவாளக் கோட்டத்தினிடையே ஒரு முறை ‘சார்ங்கலன் ‘ என்னும் சிறுவன் தனியே வழிச்சென்றான். அப்பொழுது, ஒரு பெண் பேய் ஓர் பெண்பிணத்தின் கரிய தலையைப் பறித்துக் கையிலே ஏந்திக்கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் எழுந்து, கவைத்த அடிகளைப் பெயர்த்துத் தணியாத களிப்புடன் ஆடுகின்ற கூத்தினை; அச் சிறுவன் கண்டான். கண்டு மிகவும் பயந்து, அவ் விடத்தினின்றும் ஓடி, “என் அன்னையே இதனைப் பார் ! இம் முது மயானத்திலுள்ள கொடிய முது பேய்க்கு என் உயிரைக் கொடுத்தேன்;’ என்று கூறித் தன் தாயின் முன்னே வீழ்ந்து உயிர் விட்டான். 

கண்ணிழந்த தன் கணவனுடன் இருந்த கோதமை என்னும் பார்ப்பனப் பெண், ” எவரு மற்ற தமியனாகிய என் புத்திரனது உயிரை யுண் டது அணங்கோ? பேயோ ? நீர்த்துறைகளிலும் மன்றங்களிலும் முது மரங்களிலும் தங்கியிருந்து உயிர்களைக் காத்துவரும் சம்பாபதித் தெய்வமே ! என் மகனுயிரைக் காவாமலிருந்தாயே, இது தகுமா?” என்று கூறி, இறந்த தன் மகனது உடலாகிய உயிரற்ற யாக்கையை மார்புடன் தழுவி எடுத்துக்கொண்டு சக்கரவாளக்கோட்ட மதில் வாயிலில் நின்று புலம்பலானாள். 

இருள் மிக்க இடையாமத்தில், மதில் வாயிலி லிருந்து எழும் துன்பமிக்க அழுகையொலியைக் கேட்டு, சம்பாபதித் தெய்வம் ஆங்குத்தோன்றி, <உனக்கு நேர்ந்த துன்பம் யாது? அதனை எனக்குக் கூறுவாயாக என, வினவிற்று. அப் பொழுது பார்ப்பனிக்கும் சம்பாபதி தெய்வத்துக் கும் பின்வரும் உரையாடல் நிகழலாயிற்று. 

பார்ப்பனி: ஆருமற்றவளாகிய என்னுடைய அறியாப் பாலகன் இவ் வீமப்புறங்காட்டின் வழியே வந்தான். அணங்கோ, அன்றிப் பேயோ அவனுயிர் கொண்டது. இதோ உறங்குவான்போலக் கிடக்கின்றான். காண்பாயாக. 

சம்பாபதி: அணங்கும் பேயும் அரிய உயிரை உண்ணமாட்டா; நெருங்கிய முப்புரி நூலை யணிந்த மார்பினையுடைய சார்ங்கலன் தன் அறியாமை காரணமாகப் பயப்பட்டு ஊழ் வினையால் இறந்தனன். நீ துன்பமொழிவா யாக. 

பார்ப்பனி: என்னுடைய உயிரைப் பெற்றுக் கொண்டு என் மகனின் உயிரைத் தந் தருளுவாயானால், கண்ணற்ற என் கணவனை இவன் பாதுகாப்பான்; ஆகலின், இவன் உயிரைத்தந்து என்னுயிரை வாங்குவாயாக. 

சம்பாபதி: அரிய உயிரானது உடம்பை விட்டு நீங்கினால், தான் செய்த வினையின் வழியே சென்று வேறு பிறப்பை அடையும்; இதில் ஐயம் உண்டோ? இறந்த நின் மகனது உயிரைத் தந்து, உனது துன்பத்தைப் போக்குதல் என்னால் முடிவதொரு காரிய மன்று. நீ வருந்தாதே. 

பார்ப்பனி: ‘தேவர்கள் வரமளிக்க வல்லர்’ என அந்தணர்களது வேதம் கூறுகிறதே; அங் ஙனமாகவும் மிகப் பெருந் தெய்வமாகிய நீ, அருள் புரியாவிட்டால் யானும் என் உயிரை இவ்விடத்திலேயே விடுவேன். 

என, பார்ப்பனி கூறலும், சம்பாபதித் தெய்வம் ‘சக்கரவாளக்கோட்டத்திலே திரியும் தேவர்கள் எவரேனும் இவனுயிரைத் தர வல்லராயின் நானும் தருவேன் ; என் ஆற்றலைக் காண்பாயாக, என்று கூறி, பல்வகைத் தேவர்களையும் தேவ 

சக்கரவாளக்கோட்டம் கணங்களையும் சக்கரவாளக்கோட்டத்தில் வர வழைத்துக் கோதமைக்கு முன் நிறுத்தி ‘இவ ளுக்கு ஏற்பட்ட துயரை நீக்குவீர்களாக’ என்று கூறிற்று. 

பலவகைத் தேவர்களும் கோதமைக்கு ஏற் பட்ட துன்பத்தைக் கேட்டு, சம்பாபதி கூறிய வாறே கூற, அவள் தான் அடைந்த துன்பத்தி னின்றும் நீங்கி மகனுடலை ஈமச் சுடலையில் அடுக்கப் பட்ட விறகினையுடைய அழலில் இட்டுத் தானும் இறந்தனள். இதனால், சம்பாபதித் தெய்வத் தின் ஆற்றலையும் உலகம் உணர்ந்தது” என, மணிமேகலா தெய்வம் சுடுகாட்டுக் கோட்டத் தின் தன்மையையும் சம்பாபதித் தெய்வத்தின் மேம்பாட்டையும் கூறிக்கொண்டிருக்கும்போது சுதமதி கண்ணயர்ந்து தூங்கலானாள். இதனையே எதிர்பார்த்துக்கொண்டிருந்த மணிமேகலா தெய்வம், மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு வானிடைப் பறந்து சென்றது. இவ்வாறு பறந்து, காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து தெற்கே முப்பது யோசனை தூரம் சென்று, கடலாற் சூழப்பட்ட மணிபல்லவம் என்னும் தீவையடைந்து, அங்கே அவளைத் துயில் வைத்துவிட்டுத் திரும்பிச் சென்றது. 

7. மணிமேகலை தன் பழம்பிறப்புணர்தல் 

உவ வனத்திலிருந்து தன் அரண்மனைக்குத் திரும்பிய உதயகுமாரன், இரவு முழுவதும் மணி மேகலையையே நினைந்து நினைந்து உறக்கமின்றிப் படுக்கையிற் புரண்டுகொண்டிருந்தான்; அவளை அடைவது எவ்வாறு எனச் சிந்தித்துக்கொண்டே இரவைக் கழிக்கலானான். இவ்வாறு படுக்கையிற் கிடந்த உதயகுமாரன்முன், மணிமேகலா தெய் வந் தோன்றிற்று. அவன் திடுக்கிட்டெழுந்தான். அது அவனை அன்புடன் நோக்கி, “மன்னவன் மகனே, அரசன் தன் இயல்பினின்று மாறுவா னாயின், கிரகங்கள் தத்தம் நிலையினின்றும் மாறு படும். அவை மாறுபடின் பருவ மழை ஏற்படாது. பருவ மழை பெய்யாதுவிடின் உலகு பஞ்சத்தால் வாட உயிர்கள் இறந்துபடும். உலகிலுள்ள உயிர் கள் அனைத்தும் மன்னனது உயிர் என்னும் பழ மொழியின் மெய்ம்மை இதனால் அழிந்துவிடும். ஆகையால், தவத்துக்கென்றே தன்னை ஒப்படைத் தவளாகிய மணிமேகலையின் மீது வைத்த இழிந்த உன் எண்ணத்தைக் கைவிடு” எனக் கூறிற்று. பின்னர் அங்கு நின்று, சுதமதி துயின்றுகொண்டிருந்த மலர்வனத்தை அடைந்தது. 

மலர்வனத்தை அடைந்த மணிமேகலா தேவி சுதமதியைத் துயிலெழுப்பி, “ அஞ்சாதே, நான் தான் மணிமேகலா தெய்வம்; இந்நகரில் நிகழும் இந்திரவிழாவைக் காணுதற்காக இங்கு வந்தேன். உன் இளந்தோழி, புத்த சமய வழி சென்று அடியவ ளாகுங் காலம் வந்துவிட்டது. ஆதலால், நான் அவளை மணிபல்லவத் தீவிலே கொண்டுபோய் விட்டிருக்கின்றேன். இப்பொழுது அவள் அங்கே நல்ல பாதுகாப்புடன் இருக்கிறாள். அவள் ஆங் குத் தன் பழம்பிறப்பை உணர்வாள். உணர்ந்த பின் இன்றைக்கு ஏழாம்நாள் இங்குவந்து சேரு வாள். அவள் இங்கு வரும்போது வேறு உரு வுடனேயே வருவாள். ஆயினும், அவள் உனக்குப் புலப்படுவாள். அவள் இந்நகர்க்கு வருங்காலத்துப் பல அற்புதங்கள் நிகழும். இதற்கிடையே நீ மாதவியிடஞ் சென்று என் வரலாற்றையும் அவள் மகள் மணிமேகலைக்கு ஏற்பட்ட நல்வழியையுங் கூறு. மாதவி என்னை அறிவாள். நானே கடலின் தெய்வம், கோவலன் விருப்பப்படி என் பெயர் தான், அவள் புதல்விக்கு நாமமாக ஏற்பட்டது. குழந்தைக்கு என் பெயர் சூட்டப்பட்ட அன்றிரவு நான் மாதவிக்குக் கனவிற் காட்சி கொடுத்து அவள் புதல்வி, ‘அழகில் மிக்கவள் ஆவாள்’ என்றும், அறநங்கை ஆவாள்’ என்றும் கூறி யிருக்கிறேன் என்று கூறி வானில் எழுந்து மறைந்து போயினள். 

மணிமேகலா தெய்வம் இவ்வாறு மாயமாய் மறைந்துவிட்டமையை உணர்ந்த சுதமதி மணி மேகலையின் பிரிவால் வருந்தி, மேற்கு மதிலின் வாயில் வழியே சக்கரவாளக் கோட்டத்தை அடைந்து ஒரு பக்கத்தேயிருந்தாள் அப்பொழுது, அவ்விடத்திலுள்ள தூணிற் செதுக்கியிருந்த ஓர் உருவம் பேசுவது கேட்டுத் துணுக்குற்றாள். அது, “முற்பிறப்பிலே இரவிவன்மனது ஒப்பற்ற மகளா யிருந்தவளே, துச்சய மன்னனது தேவியே, தாரையென்னும் உன் தங்கை காட்டு யானையால் இறந்தமையைக் கேட்டு மயங்கி உயிரை விட்ட வீரையே, இப்பிறப்பில் சண்பை நகரத்துக் கெளசி கனுக்கு மகளாகத் தோன்றியவளே, சுதமதியே, இன்றைக்கு ஏழாம்நாள் முற்பிறப்பில் உன் தங்கை இலக்குமியாயும், இப்பிறப்பில் மணிமே கலையாயும் பிறந்தவள். தன் முற்பிறப்பின் வர லாற்றையும் உன பிறப்பின் வரலாற்றையும் அறிந்து நள்ளிரவில் இந்நகர்க்கு வருவாள்” எனக் கூறிற்று. இவ்வார்த்தைகள் செவிப்பட லும் சுதமதி அச்சத்தால் நடுங்கிப் பொழுது புலருமட்டும் அவ்விடத்தேயிருந்து விடியற்கால மானவுடன் மாதவியையடைந்து அவ்விரவில் நிகழ்ந்த புதுமையான நிகழ்ச்சிகள் அனைத்தை யுங் கூறினள். மகளின் பாதுகாப்பையிட்டு முன் னரே மிகவும் மனக்கலக்கமடைந்திருந்த மாதவி இதனைக்கேட்டு மேலும் மனங்கலங்கி, மாணிக் கத்தை இழந்த கருநாகம்போலப் புத்திரியின் பிரிவாற் செயலற்றிருந்தாள். சுதமதி உயிரைப் பிரிந்த உடல் போலானாள். 

மணிபல்லவத்தின கடலருகே மணலிலே துயின்றுகொண்டிருந்த மணிமேகலை தன் துயி லுணர்ந்தெழுந்தாள். முனபின்னறியாத ஒரு கடற்கரையிலே தான் தனித்திருப்பதைக் கண்டு அவளுக்குத் திகில் உண்டாயிற்று. சூரியன் நீலக் கடலின் மத்தியிலிருந்து முளைத்தெழுந்து தன் எண்ணற்ற செங்கதிர்களைப் பரப்பிக்கொண்டிருந்தான். அவற்றால், ‘தகதக’ வென்று மின் னிய கடலலைகள், மணல் நிரம்பிய கடற்கரை மீது முத்துக்களையும் பவளங்களையும் வாரிவாரி இறைத்துக்கொண்டிருந்தன. அருகேயுள்ள நீர்த் தடாகங்களில் தாமரையும் ஆம்பலும் பூத்துப் பொலிந்து காணப்பட்டன. 

‘தான் இருக்குமிடம் உவவனத்தின் ஒரு பகுதிதானா ? அல்லது சுதமதி தன்னை ஏமாற்றி முன்பின்னறியாத ஓரிடத்துக்குக் கொண்டுவந்து விட்டாளா? அல்லது மாயவித்தையோடு தோன் றிய அத் தெய்வ மடந்தை செய்த மாய வஞ் சனையா? எதுவுந் தெரியவில்லையே’ என, மணி மேகலை தன் மனத்துள் நினைந்து, ‘“நான் தனியே இருத்தற்கு அஞ்சுகிறேன். சுதமதியே, எங்கே ஒளித்தாய், எனக்கு ஏன் இத்தகைய துன்பத்தை உண்டாக்கினாய், நனவோ, இது கனவோ என நான் அறியேன், என் மனம் நடுங்கு கின்றது. நீ எங்கிருந்தாலும் எனக்கு ஒரு குரல் கொடு ; இருள் நீங்கிவிட்டது. இதோ விரைந்து வா” என்று சொல்லிக்கொண்டு மணற்றிடர் களிலும் நீர்த்துறைகளிலும் நடந்து சென்றாள். சென்று, மனித உருவோ மனிதர் உறைவிடமோ எதனையுங் கண்டாளல்லள். எங்கும் அன்னங்கள், நாரைகள், கடல் தாராக்கள் என்பன கூட்டங் கூட்டமாய்ப் போர்க்களத்தில் அணிவகுத்து நிற்கும் படைகள் போலக் கழிநிலங்களில் வரிசை வரிசையாய் நின்றன. 

மனித சஞ்சாரமற்ற தீவிலே தனியே விடப் பட்டோமோ என்ற பயத்தினால் அவள் கண்ணீர் விட்டழலானாள். அவளுக்குத் தன் தந்தை கோவலனின் நினைவு ஏற்பட்டது. ‘ மனைவியோடு வேறுநாடடைந்து வாளால் வெட்டுண்டிறந்த எந்தையே,” எனக் கூவி அழுதாள். அப்பொழுது பளபளப்பான பளிங்கினால் புனைந்தியற்றப்பட் டதும் இந்திரனால் ஆக்கப்பட்டதுமான புத்த பீடிகை அவள் கண்ணுக்குப் புலனாயிற்று. 

மணிமேகலை புத்தபீடிகையைக் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சி கொண்டாள். அவளை அறி யாமலேயே அவளது கைகள் அவள் தலைமேற் குவிந்தன. கன்னங்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீருடனும் தலைமேற் கூப்பிய கைகளுடனும் அப்பீடத்தை மும்முறை வலம்வந்து பணிந்து எழுந்தாள். இவ்வாறு எழுஞ்சமயத்து அவளது பழம்பிறப்புப்பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக அவள் உள்ளத்திற் புலனாகத் தொடங்கின : 

காயங்கரை என்னும் ஆற்றங்கரையில் இருந்து தருமோபதேசம் செய்த பிரமதருமன் என்னும் அறிஞனின் ஞாபகம் முதலில், மணி மேகலையின் நினைவுக்கு வந்தது. பிரமதருமன் காந்தார நாட்டரசனாகிய அத்திபதியின் மைத் துனன். அத்திபதி காந்தார நாட்டில் பூருவ தேசத்தில் இடவயமென்னும் நகரை இராசதானி யாகக்கொண்டு அரசியற்றி வருநாளிலே. பிரம தருமன் அவ்விடஞ் சென்று அரசனுக்குத் தரு மோபதேசம் புரிந்தான். அப்பொழுது அவன் அரசனை நோக்கி, ‘அன்றுதொடங்கி ஏழு நாளைக் குள் அந்நகரிற் பூகம்பம் உண்டாகி அந்நகரும் நாகநாட்டில் நானூறு யோசனை பரப்புள்ள பிரதேசமும் அழிந்துவிடும் என்றும், ஆதலால், உடனே அந்நகரத்தைவிட்டு வேறிடம் செல்லு மாறும்’ கூறினார். 

அத்திபதி இச்செய்தியைப் பறையறைவித்துத் தெரிவித்து நகர மக்களுடன் தானும் அவந்தி நகரம் செல்லப் புறப்பட்டான். வழியிற் காயங் கரை என்னும் ஆற்றங்கரையிற் பாடிவீடு செய்து அங்கே தங்கினான். அப்பொழுது பிரமதருமன் கூறியபடியே குறித்த நாளிற் பூகம்பம் உண்டாகி இடவய நகரம் அழிந்துபோயிற்று. அது தெரிந்த அரசனும் பிறரும் பிரமதருமனைச் சரணடைந்து, அவனை வணங்கி நின்றனர். அப்பொழுது பிரம தருமன் அவர்களுக்குத் தருமோபதேசம் புரிந் தான் ; என்னும் இந்நினைவும், அதனைத் தொடர்ந்து அரசன் முதலியோருடன் தானும் அம்முனிவனை வணங்கியமையும் அம்முனிவன் கூறியனவும் நினைவுக்குவர மணிமேகலை, “பிரம தரும, முற்பிறப்பில் நான் அசோதர நாட்டரச னாகிய இரவிவர்மனின் புத்திரியாயிருந்தேன். இரவிவர்மனுக்கும் அவன் பத்தினியாகிய அமுத பதிக்கும் புத்திரியாய் இலக்குமியென்னும் பெயர் கொண்ட நான், அத்திபதி என்னும் அரசனுக்கும் அவன் பத்தினியாகிய நீலபதிக்கும் புத்திரனாய் உதித்த இராகுலன் என்பவனை மணந்திருந்தேன். நானும் இராகுலனும் உம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினோம். இன்றிருந்து பதினாறாம் நாள் திட்டிவிடமென்னும் நச்சுப்பாம்பாற் கடியுண்டு இராகுலன் மாள்வானென்றும், நீயும் அவனுடன் தீயிற் புகுவாய் என்றும் திருவாய் மலர்ந்தருளி னீர்கள். பின்பு ‘காவிரிப்பூம் பட்டினத்திற் சென்று பிறப்பாய்’ என்றும், ‘அவ்விடத்தில் உனக்கு ஒரு துன்பம் ஏற்பட மணிமேகலா தெய் வம் நள்ளிரவில் உன்னை எடுத்துக்கொண்டு போய்க் காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கி லுள்ள ஒரு தீவில் விட்டுச்செல்லும்; ஆங்குள்ள புத்த பீடிகையை நீ தரிசித்துத் தொழுவாய் ; உடனே உன் முன்பிறப்பு நிகழ்ச்சிகள் உன் நினை வுக்கு வரும்,’ என்றும் தெரிவித்தீர்கள். அப் பொழுது நான் என் கணவனின் மறு பிறப்பை யுங் கூறுமாறு கேட்டேன். அதற்கு உன்னைக் கொண்டுசென்ற தெய்வம் மீண்டுந் தோன்றி உனக்கு அதனைப் புலப்படுத்தும் என்று கூறினீர் கள். அத்தெய்வம் இப்பொழுது’ என் முன் தோன்றுமா” என்று கூறி ஏங்கி அழுதாள். 

8. மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும் 

மணிமேகலை இவ்வாறு அழுதுகொண்டிருக் கையில், ஆகாயத்தினின்றும் இறங்கிவந்த மணி மேகலா தெய்வம், உயிர்களெல்லாம் உணர் விழந்து அறிவிழந்து அறம் அழிந்து தடுமாறும் போது இளஞ்சூரியன் தோன்றினாற்போல நீ தோன்றினாய். உன் பாதங்களைப் பணிந்தேன் ” என்று கூறி, புத்த பீடிகையைப் புத்தராகவே மதித்து வணங்கியது. 

மணிமேகலா தெய்வத்தைக் கண்ட மணி மேகலை “உன் திருவருளால் புத்தபீடிகையின் மூலம் என் முற்பிறப்பை உணர்ந்தேன். அப் பிறப்பில் என் கணவனாக இருந்த இராகுலன் எங்கே பிறந்துள்ளான்” என்று கேட்டாள். 

“இலக்குமி கேட்பாயாக: நீ உன் முற்பிறப் பில் உன் கணவன் இராகுலனோடு சோலை ஒன்றில் ஒரு நாள் கூடியிருந்தாய். அப்பொழுது உன் ஊடலைத் தீர்ப்பதற்காக அவன் உனதடியை வணங்கினான். அச்சமயம் சாதுசக்கரன் என்னும் பௌத்த முனிவன் இரத்தினத்தீவம் சென்று அங்கே தருமோபதேசம் செய்துவிட்டு மீண்டு வரும்வழியில் ஆகாயத்திலிருந்து இறங்கி உன்முன் வந்தான். நீ அவனைக் கண்டு மெய்ந்நடுங்கி மயங்கிப் பணிந்தாய். அதுகண்ட இராகுலன் ‘இங்கே வந்தவன் யார்’ என்று கோபித்துக் கேட்க, நீ அஞ்சி நடுநடுங்கி அவன் வாயைப் பொத்தி, ஆகாயத்தினின்றும் இறங்கிய அப் பெரியோனுடைய பாதங்களை வணங்கி, ‘யாங் க தேவரீருடைய அடியவர்களல்லமாயினும் அமுதும் இனிய தண்ணீருங் கொண்டு வருகிறோம். அமுது செய்தருள்க. தேவரீருடைய திருவுளப் படியே செய்யச் சித்தமாயிருக்கிறோம்’ என்று கூறினாய். உடனே அம்முனிவன், ‘தாயே, உண் பேன் கொண்டு வருக ;’ என்று கூற, நீ அம்முனி வனை உண்பித்தாய். அவ்வறத்தினாலேயே நீ இனிப் பிறவாநிலையை அடையும் பேறுபெற்றனை. உன் கணவனாயிருந்த இராகுலனே உவவனத்தில் உன்னிடம் வந்த உதயகுமாரன். அதனாலேதான் அவனுடைய மனம் உன்னை விரும்பியது. உன் மனமும் அவன்பாற் சென்றது. 

“இலக்குமி, இன்னும் கேட்பாயாக. முற் பிறப்பில் உன் தமக்கைமாராயிருந்த தாரையும் வீரையும் அங்கதேசத் தரசனாகிய துச்ச யனை மணந்தார்கள். ஒருநாள் அவர்கள் மலை வளங் காணும்பொருட்டுக் கங்கைக் கரையை அடைந்தனர். அப்பொழுது அங்கே அறவண வடிகள் வரக்கண்டு அவரை வணங்கி, ‘தேவரீர் யாவிர்! இங்கே எழுந்தருளியதேனோ ?’ என்று வினாவ அவர், ‘பாதபங்கயமலையைத் தரிசிக்க வந்தேன். ஆதிகாலத்தே புத்ததேவர் எல்லா உயிர்களும் துன்பத்தினின்று நீங்கி இன்புற்றிருக்க வேண்டுமென நினைந்து அம்மலையினின்று தரு மோபதேசம் செய்தார். அப்பொழுது அவ ருடைய பாதங்கள் தங்கப்பெற்றமையால், அம் மலை அப்பெயர் பெற்றது. அதை நீங்கள் தரி சித்து வழிபடுமின்’ என்று கூறினார். அவ்வாறே தரிசித்த புண்ணிய விசேடத்தால் தாரையும் வீரையும் முறையே, மாதவியாயும் சுதமதியா யும் பிறந்து உன்னோடு கூடினர். 

“மணிமேகலை, நீ பழம்பிறப்பை உணர்ந் தாய்; நீ உண்மையான அறத்தை அறிதற்கு முன், மற்றைய சமயங்களின் கொள்கைகளையும் அறிதல் வேண்டும். ஆனால், நீ இளம்பெண்ணா யிருப்பதால், ‘இளம்பருவத்தினள் என்று, மற்றைய சமயவாதிகள் உனக்குத் தங்கள் சமயக் கொள்கைகளை விளக்க முன்வரார்கள். ஆகை யால், நீ வேற்றுவடிவங் கொள்வது அவசியம். நீ அதற்காக நான் இரண்டு மந்திரங்களை உபதேசிப் பேன். ஒன்றினால், நீ விரும்பிய உருவம் பெற் றுக்கொள்ளலாம்; மற்றொன்றன் உதவியால், நீ ஆகாயத்திலே பறந்துசெல்லல் முடியும். இதன் பின், நீ புத்ததேவர் அருளிச்செய்த நல்லற வழியை அறிதற்குரிய நாளிலே அறிந்துகொள் வாய். இப் புத்தபீடிகையை வணங்கித் துதித்து உனது ஊர் செல்லுவாயாக.” என்று, மணிமே கலாதெய்வம் கூறிமுடித்து, இரு மந்திரங்களை யும் மணிமேகலைக்கு உபதேசித்துவிட்டு, வானில் எழுந்து ஆகாயமார்க்கமாகச் சிறிது தூரம் சென்றது. பின்னர் அது மீண்டும் நிலத்துக்கு இறங்கி வந்து “உனக்கு நான் இன்னும் ஒரு செய்தி கூறல் வேண்டும். அழியத்தக்க இவ் வுடம்பு உணவினால் நிலைபெறுவது. உணவு கிடைக்காவிடில் உடல் நிலையாதல்லவா? ஆகை யால், உணவின்றி உயிர் தங்குவதற்குரிய மந் திரத்தையும் நீ கற்றுக்கொள்ளுதல் அவசியம், எனக் கூறி, அதற்குரிய மந்திரத்தையும் மணி மேகலைக்கு அறிவுறுத்திவிட்டு ஆகாயவழியே சென்று கண்ணுக்குப் புலனாகாமல் மறைந்து விண்ணகம் மேவிற்று. 

9. மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றமை 

மணிமேகலா தெய்வம் அவ்விடம் விட்டகன்ற பின்னர், மணிமேகலை அத்தீவி லுள்ள மணற் குன்றுகளையும் பூஞ்சோலைகளையுங் குளிர்ந்த கைகளையும் பளிங்குபோன்ற நீர்த்தடா கங்களையும் பார்த்துக்கொண்டே மெல்ல மெல்ல உலாவி வந்தாள். இவ்வாறு ஒரு காவத்தூரஞ் செல்வதற்குள் அவள் முன், சாந்தசொரூபியான ஒரு பெண் எதிர்ப்பட்டாள். தருமதேவதை போன்ற அந் நங்கை, மணிமேகலையைக் கண்ட தும், ”அம்மணி, அபாயமடைந்து உடைந்த கப்பலிலிருந்து தப்பி வந்தவள்போலக் காணப் படுகிறாயே ; உன் வரலாறு யாது? நீ யார்?” என வினாவினாள். 

“அன்னையே, எனது எப்பிறப்பைப்பற்றி அறிய விரும்புகிறீர்கள்? எனது முந்திய பிறப்பில் இராகுலன் என்பவனின் மனைவியாய், இலக்குமி என்னும் பெயருடன் இருந்தேன். இப்பிறப்பிற் காவிரிப்பூம்பட்டினத்தில் நாடகக்கணிகையாகிய மாதவியின் மகளாய் மணிமேகலை யென்னும் பெயருடையேன். மணிமேகலா தெய்வம் என் னைக் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள உவவனத் தில் இருந்து இத் தீவிற் கொண்டுவந்து விட்டது. இங்குள்ள புத்த பீடிகையை வலம்வந்து வணங்கி என் முற்பிறப்பை உணர்ந்துகொண்டேன். இது என் வரலாறு. இப்போது நான், தங்கள் வர லாற்றை அறியலாமா?” என்று கேட்டாள். 

“இத் தீவினருகே இரத்தினத் தீவகத்தில் சமந்தகூடம் என்னும் ஒரு மலை உண்டு. அம்மலை யில் மிகவும் உயர்ந்து விளங்கும் உச்சியில் புத்த பெருமானது திருவடிப்படிமைகள் உள்ளன. அவற்றைத் தரிசித்து வழிபடுவோர் பிறப்பாகிய துன்பத்திலிருந்து நீங்குவர். அத் திருவடித் தடங் களை வழிபட்டபின் இத் தீவிற்கு முன்னொரு காலத்தில் வந்தேன். அன்றுதொட்டு வானவர் வேந்தனாகிய இந்திரன் ஆணைப்படி இப் புத்த பீடிகையைக் காத்துவருகிறேன். என் பெயர் தீவ திலகை. புத்ததேவராற் போதிக்கப்பட்ட தரும வழியே ஒழுகுபவர் எவராயினும் இப் புத்த பீடிகையைத் தரிசிப்பரேல் தரிசன விசேடத்தாற் பழம்பிறப்பை அறிவது நிச்சயம். அத்தன்மை யினை யுடையோர் உலகில் மிகச் சிலரே. நீ பழம் பிறப்புணர்ச்சியை அடைந்தமையால் மிகவும் பெரியை. புத்தபீடிகையின் எதிரே இருப்பது கோமுகி என்னும் பொய்கை. இது குவளையும் நெய்தலும் மயங்கிய கொழுநீர் இலஞ்சி. அப் பொய்கையினுள்ளிருந்து ஆண்டுதோறும் புத்த பிரான் பிறந்தநாளன்று, அதாவது வைகாசி மாதப் பௌர்ணமித் தினத்தன்று அமுதசுரபி என்னும் அட்சயபாத்திரம் மேலேவந்து தோன் றும். அந்த நல்லநாள் இன்றே. அது தோன்றும் வேளையும் இதுவே. அஃது முன்னொருகாலத்தில் ஆபுத்திரனென்பானிடமிருந்தது. அப்பாத்திரம் இப்பொழுது உன் கையில் வருமென்றே எண் ணுகின்றேன். அதில் இடப்படும் அன்னம் எடுக்க எடுக்க வளர்ந்துகொண்டே வரும். அது எப் பொழுதும் நிரம்பியதாகவே இருக்கும். இரவலர் எத்தனைபேரானாலும் அவர்களுக்கெல்லாம் அத னுதவியால் உணவளிக்கலாம். அதன் பூரண மான வரலாற்றை உனது நகரத்திலுள்ள அற வணவடிகளிடமிருந்து அறிந்துகொள்வாய்” என, தீவதிலகை என்னும் அக்காவற்றெய்வம் மணிமேகலைக்குக் கூறிற்று. 

தீவதிலகை அட்சயபாத்திரம் பற்றிக் கூறிய வற்றைக் கேட்ட மணிமேகலை, புத்தபீடிகையை வணங்கிய பின் தீவதிலகையுடன் கூடிக்கொண்டு கோமுகி என்னும் நீராழிக்கு மகிழ்ச்சியோடு சென்றாள். சென்று, அப்புனிதமான பொய் கையை வலம் வந்து நீர்க்கரையை அடைந்தாள். அப்பொழுது அப்பாத்திரம் அப்பொய்கைநீரினின் றெழுந்து மணிமேகலையின் கையை வந்தடைந் த்து. இவ்வருஞ் செயலைக்கண்டு மனமகிழ்ச்சியுற்ற மணிமேகலை அப்பொய்கையின் அயலிலே போதி நீழலில் உறைந்த புத்தபிரானின் திரு வடிகளை வணங்கிப் பலவாறு துதித்தாள். 

இவ்வாறு வணங்கித் துதித்த மணிமே கலையை, தீவதிலகை பார்த்து “அம்மே, பசிப் பிணி என்னும் பாவி பொல்லாதவள். அஃது யாரைப் பீடிக்கின்றதோ அவர்களது குடியின் சிறப்பையும் உயர்ச்சியையும் அழித்துவிடும். துன்பக்கடலைத் தாண்ட உதவும் கல்வியாகிய புணையை உடைத்துவிடும். நாணத்தைப் போக் கும்; அழகைச் சிதைக்கும் ; மற்றையோரது தலைவாசலில் நிற்கச்செய்யும். அப் பசிப்பிணி யைத் தீர்த்தோரது பெருமை, எண்ணிலடங்காது. முன்னொருகாலத்தில் மழையில்லாமற் போனமையாற் பசியால் வருந்திய கெளசிகமுனி வர், அதனைத் தீர்ப்பதற்கு எங்கும் அலைந்து திரிந்தும் உணவு கிடையாமல் மெலிந்து, ஈற்றில் நாயிறைச்சியைப் பெற்று, தின்னப்புகும் சமயத் தில் அவ்விறைச்சியின் ஒரு பகுதியைத் தெய்வங் களுக்குப் பலியிடுவாராயினார். அது தெரிந்த இந்திரன், உடனே எங்கும் மழையைப் பெய்யச் செய்தமையால் விளைவு பெருகியது. உயிர்கள் மகிழ்ந்து வாழ்ந்தன. ஆற்றாத மக்களின் அரிய பசியை நீக்குவோரே இவ்வுலகில் உண்மையான வாழ்வு வாழ்வோராவர். மண்திணிந்த இப் பூவுலகத்து வாழுகின்ற உயிர்களுக்கு உணவு கொடுத்தவர்கள், அவர்களுக்கு உயிர்கொடுத்த வர்களாவர். ஆதலால், பசியைப் போக்கி உயிரைக் கொடுத்தலாகிய தருமத்தைச் செய்”, என்று கூறினள். 

மணிமேகலை இதனைக் கேட்டு ‘“நான் முந்திய பிறப்பிற் சாதுசக்கரன் என்னும் முனிவனை உண் பித்த புண்ணியத்தை உடையேனாயிருந்தேன். அந்நினைவுடன் இறந்த புண்ணிய விசேடத்தாற் போலும் இன்று இப் பாத்திரம் கிடைத்ததென எண்ணுகிறேன். இது நிற்க, பசியால் வாடிய குழந்தையின் முகத்தைக் கண்டு மனமிரங்கிப் பால் சுரக்குந் தாய்போல, வயிற்றை வாட்டு கின்ற பெரும் பசி வருத்துகின்ற வருத்தத்தால் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் எங் கும் அலைந்து திரியும் ஏழைகளின் முகம் மலர இப்பாத்திரம் அமுது சுரந்தளித்தலைக் காணும் விருப்பமுடையேன்,” என்று தெரிவித்தாள். 

இவற்றைக் கேட்டு மகிழ்ந்த தீவதிலகை யுடன், மேலுஞ் சிறிதுநேரம் அளவளாவி, அப் பாத்திரத்துடன் மணிமேகலை தனது ஊருக்குச் செல்லப் புறப்பட்டாள். புறப்பட்ட மணி மேகலை, தீவதிலகையின் பாதத்தை வணங்கி, புத்தபீடிகையைத் தொழுது, வலஞ்செய்து ஆகாயவழியே செல்வதற்குரிய மந்திரத்தைச் செபித்து மேலே எழுந்து வானிற் பறந்து காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தாள். 

மகளை விட்டுப் பிரிந்த மணிமேகலையின் தாயான மாதவி, நாள்களை எண்ணிக்கொண்டே அவள் வருகைக்காகக் காத்திருந்தாள். காவிரிப் பூம்பட்டினத்தை அடைந்த மணிமேகலை, தன்னைக் காணாது வருந்திக்கொண்டிருந்த மாதவியையும் சுதமதியையுங் கண்டு வணக்கம் தெரிவித்தாள். அவர்கள் அவளை மனமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

10. மாதவியுஞ் சுதமதியுந் தம் பழம்பிறப்பறிதல் 

மணிமேகலை, தாங்கள் முற்பிறப்பில் இரவி வர்மன் புதல்வியும் துச்சயன் மனைவியுமான அமுதபதியின் புதல்வியர்களாயிருந்தமையையும், அவ்வுறவுமுறையில் மாதவியும் சுதமதியும் மணி மேகலையின் தமக்கையர்களாயிருந்தமையையும், மற்றும் முற்பிறப்புப் பற்றிய வரலாறுகளையும் சுதமதிக்கும் மாதவிக்கும் தெரிவிக்க, அவர்கள் அதுகேட்டு வியப்படைந்தனர். மேலும் தன் கையிலுள்ள அட்சயபாத்திரத்தின் இயல்பையும் வரலாற்றையுந் தெரிவித்து அதனை வணங்குமாறு பணித்தாள். அவர்கள் அவ்வாறே வணங்க, “இனி அறவணவடிகளை வணங்கி, மானுட யாக்கையாற் பெறற்கரிய தவப்பேற்றைப் பெறு வீர்களாக,” என்று கூறி, அவர்களையும் அழைத் துக்கொண்டு புத்தமடத்துத் தலைவராகிய அற வணவடிகளைத் தரிசித்தற்குச் சென்றாள். 

மடத்துத் தலைவர் நரைத்த தலையையுடைய முதியவர்; உறுதிபயக்கும் வார்த்தைகளைக் கூறும் மூதறிஞர். அவர் இருக்குமிடத்தை மணிமேகலை விசாரித்தறிந்து, அவரை அணுகி, அவர் திருவடி களை மும்முறை வணங்கி, மலர்வனத்திலே தான் உதயகுமாரனைக் கண்டதும் மணிமேகலாதெய் வந் தன்னை எடுத்துச்சென்று மணிபல்லவத்தில் வைத்ததும் அத்தீவில் உள்ள புத்தபீடிகைக் காட்சியால் இலக்குமி என்னும் பெயர்வாய்ந்த தன் பழம்பிறப்பை அறிந்துகொண்டதும், ‘முற் பிறப்பிலே தன் கணவனாயிருந்த இராகுலனே உதயகுமாரனாக வந்து பிறந்தமை ; அப்பிறப்பில் தன் தமக்கைமாரான தாரையும் வீரையும் முறையே மாதவியும் சுதமதியுமாகப் பிறந் தமை’ ஆகிய வரலாறுகளைத் தான் அறிந்து கொண்டதும், அட்சயபாத்திரம் பெற்றதும், அப் பாத்திரத்துக்குரியவனான ஆபுத்திரன் வர லாற்றை அறவணவடிகள்பால் அறியுமாறு தீவ திலகை கூறியதுமான வரலாறுகள் அனைத்தை யும் அறவணவடிகளுக்குத் தெரிவித்து நின்றாள். இவற்றைக்கேட்ட அறவணவடிகளின் முகம் ஒளி பூத்தது. அவரது உள்ளத்தில் எழுந்த மகிழ்ச் சியை அவரால் அடக்கிக்கொள்ளல் முடியவில்லை. தழுதழுத்த குரலில் அவர் பின்வருமாறு கூறினார்: 

“புத்தர்பெருமானின் பாதபங்கய மலையை வழிபட்டுத் திரும்பி வருகையில் துச்சயராசனை ஒரு சோலையிற் கண்டேன். ‘அரசே, நீயும் உன் மனைவியும் சுகமா?’ என, நலம் விசாரித்தேன். அவன் மனங்கலங்கிக் கண்ணீர் தாரை தாரை யாக வழிய அரற்றினான். புதிதாகப் பிடிக்கப் பட்ட ஒரு காட்டுயானையின் முன் வீரை சென்ற தாகவும், அவ்விலங்கு அவளைக் கொன்றுவிடவே, தங்கையை உயிருக்குயிராக நேசித்த தாரை, அவள் பிரிவை ஆற்றமாட்டாமல் உயர்ந்த ஒரு மாடத்தின் மீதேறி வீழ்ந்து உயிர் நீத்ததாகவும் அவன் கூறிப் புலம்பினான். 

“என்ன ஆச்சரியம், நாடக அரங்கத்தில் உடையை ப மாற்றி மாற்றி, மீண்டும் புதிய ஆட்களாகத் தோன்றும் நடிகர்களைப்போல நீங்கள் மீண்டும் பிறந்து புதிய உடலுடன் என் முன் காட்சியளிக்கிறீர்கள். 

“என்னிடம் தன் துன்பத்தைக் கூறிய துச்சயனுக்கு’ ‘இது பழவினைப்பயன்; இதற்கு வருந்தாதே;” என்று அவனைத் தேற்றி மீண்டேன். 

“மணிமேகலை! இந்நகரத்தில் உன்னாற் சில விசேடங்கள் நிகழும். அதன்பின்னரே நான் கூறும் தருமோபதேசம் உன் மனத்திற்குப் பொருந்தும். அமுதசுரபியாகிய அட்சயபாத் திரத்தை நீ பெற்றனை ; இதனாற் சகல உயிர்க ளுடைய பசியையும் தீர்ப்பாயாக; மனிதர்கள் தேவர்களாகிய இருபாலார்க்கும் ஒப்புகின்ற உயர்ந்த அறம், உயிர்களின் பசிப்பிணியைத் தீர்த்தலே. உன் கையிலுள்ள அட்சயபாத்திரத்துக் குரியவன் ஆபுத்திரன்; அவன் வரலாற்றையும் கூறுகிறேன் கேள்” என, அவன் வரலாற் றைக் கூறத் தொடங்கினார். 

– தொடரும்…

– மணிமேகலை சரிதை, முதற் பதிப்பு: 1960, ஆறாம் வகுப்புக்குரியது, வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *