கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 21, 2025
பார்வையிட்டோர்: 1,880 
 
 

(1960ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

1. மணிமேகலை பிறப்பு 

முற்காலத்திலே தென்னிந்தியாவை மூன்று தமிழ்மன்னர் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் சேர, சோழ, பாண்டியர் எனப்படுவர். அவர் களுட் சோழ அரசர்களால் ஆளப்பட்ட சோழ வளநாடு, ‘சோறுடையநாடு என ஆன்றோ ராற் புகழப்பட்ட சிறப்பினை உடையது. அந் நாட்டினூடே காவிரி என்னும் நதி பாய்ந்து அந்நாட்டை வளப்படுத்திற்று. இதனாலேயே, சோழநாட்டின் தலைப்பட்டினமும் காவிரிப்பூம் பட்டினமென, அழைக்கப்படலாயிற்று. இந்நதி, காவிரிப்பூம் பட்டினத்தின் அயலிற் கடலொடு கலக்கிறது. 

கடற்றுறையான காவிரிப்பூம்பட்டினத்தில், பல கப்பல்கள் தங்கி, ஏற்றுமதி இறக்குமதி செய்தமையால், அது பல நாடுகளின் மத்திய வாணிகத்தலமாக விளங்கிற்று. இதனால், அப் பட்டினத்தில் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் அளவிலாச் செல்வம் படைத்த மாசாத்துவான் என்னும் வணிகர் பெருமகனும் ஒருவன். அவன் புதல்வன் கோவலன்; அவன் இசை தேர்ந்த கலைஞன் ; ஆடல் பாடல்களிலும் இசையிலும் மிகவும் ஈடுபாடுடையவன். இவன், சோழநாட்டின் தலை நகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த மற்றொரு வணிகனான மாநாய்கன் என்பவனின் புதல்வி கண்ணகியை, முறைப்படி திருமணஞ் செய்தான். கோவலனுங் கண்ணகியும் பரந் தகன்ற மாளிகை யொன்றில், இனிதாக இல்லறம் நடாத்திவந்தனர். அந் நாளில், சோழநாட்டைக் கரிகாற்பெருவளத்தான் என்னும் பேரரசன் ஆட்சி புரிந்துவந்தான். 

சோழன் கரிகாலன் பல நாடுகளையும் தன் னடிப்படுத்தி நீதி தவறாது ஆட்சி புரிந்தவன். இளமையிலே மணிமுடி புனைந்து ஆட்சியேற்ற கரிகாலன், தன்னிடம் வழக்கொடு வந்த இரு பெருங்கிழவர், தன் இளமையைக் கண்டு வழக்கை உரையாது நிற்ப, தான் முதுமை வேடம் புனைந்துவந்து வழக்குக் கேட்டு, நீதியான தீர்ப்புக்கூறி அவர்கள் நாணும்வண்ணம் தன் பொய்முதுவேடம் நீக்கி இளமைகாட்டி நின்ற வன். அவன் ஆட்சிக்காலத்தில் சோழவளநாடு பலவகை வளமும் உடையதாய்ச் சிறப்புற்றிருந் தது. அவன் அவைக்களம் இன்பக்களியாட்டம் நிறைந்திருந்தது. அவனையும் அவன் அவையி லுள்ளவரையும் மகிழ்விக்க அவ்வவையில் நங்கை யர் பலர் ஆடிப்பாடினர். 

மாதவி என்பாள் இளமையும் அழகும் மிக்க ஆடல் நங்கை. அவள் ஒருநாள், கரிகாலன் அவைக்களத்தில் ஆடியும் பாடியும் தான் கற்ற கலைகளை அரங்கேற்றினாள். அவள் ஆடலிலும் பாடலிலும் மகிழ்ந்த அரசன், அவளுக்கு ஆயிரத் தெட்டுப் பொற்காசுகள் இணைத்த பொன்மாலை யொன்றைப் பரிசாக அளித்தான். 

அரங்கேற்றத்தின்போது மாதவியின் ஆடல் பாடல்களைக் கண்டுங் கேட்டும் அவற்றில் ஈடுபாடு கொண்ட கோவலன், அவ்வாடல் நங்கையுடன் பழக விரும்பினான். அதனால், அவளுக்குப் பரி சாகக் கிடைத்த பொன்மாலையை உயர்ந்த விலை கொடுத்து வாங்கி, அதனை மீண்டும் அவளுக்கே பரிசாக அளித்தான். இவ்வாறு அவளோடு தொடர்புகொண்ட கோவலன், தன் மனைவி யாகிய கண்ணகியை மறந்தான்; மாதவியை விட்டுநீங்க இயலாதவாறு அவளிடத்து அளவற்ற காதல் கொண்டான். மாதவியும் செல்வம் மிக்க வணிகனான கோவலனைத் தன் காதற்கணவனாக ஏற்றுக்கொண்டாள். இதனால், ப மனமகிழ்ந்த கோவலன், மாதவியின் பொருட்டுத் தன் செல் வம் அனைத்தையுஞ் செலவு செய்தான். இவ்வாறு அவனது பெருஞ்செல்வம் சிறிது சிறிதாகக் குறைந்தது. 

நாளடைவில் மாதவி ஓர் அழகிய பெண் மகவை ஈன்றாள். இக் குழந்தைக்கு மணிமேகலை எனப் பெயர் இட்டார்கள். மணிமேகலை பிறந்து, சில ஆண்டுகளிற் கோவலன் தன் செல்வவளம் முழுவதையும் மாதவியின் பொருட்டு இழந் தான். அதன் பின்னரும் அவன் தன் மனைவி யாகிய கண்ணகியின் அணிமணிகளை அவளிட மிருந்து பெற்று, ஒவ்வொன்றாக விற்று, செல விட்டு வந்தான். கண்ணகியும் மனமகிழ்ச்சியுடன் தன் நகைகளைக் கோவலனிடங் கொடுத்துக் கொண்டே வந்தாள். 

சோழநாட்டில் ஆண்டுதோறும் இந்திரவிழா நடைபெறுவது வழக்கம். அவ்விழா இருபத் தெட்டு நாள்கள் நிகழும். விழாவின் இறுதி நாள்களில் காவிரிநதி கடலொடு கலக்குமிடத்தில் மகளிரும் மைந்தரும் நீர்விளையாடி மகிழ்வர். இத்தகைய ஒரு விழாவிலே கோவலனும் மாதவியுங் கலந்துகொண்டனர். ஆங்கு அவ் விருவருக்கும் இசை காரணமாக ஏற்பட்ட ஊடலினாலும் விதிவசத்தினாலும், கோவலன் மாதவியைப் பிரிந்து தன் மனையை அடைந்தான். 

தன் கணவனாகிய கோவலனின் வருகையைக் கண்ட கண்ணகி, ‘மாதவிக்குக் கொடுப்பதற்கு வேண்டிய பொருளின்மை காரணமாகவே அவன் வந்தனன்’ என எண்ணி, அவனை அடைந்து தன் காற்சிலம்பைப் பெற்றுக்கொள்ளுமாறு அவனிடங் கூறினாள். அப்பொழுது கழிந்தனவற்றுக்காக மனம் வருந்திய கோவலன், அவளை நோக்கி, “நான் இச் சிலம்பை முதலாகக்கொண்டு வாணிகஞ்செய்து இழந்த செல்வமனைத்தையும் மீட்பேன்,” எனக் கூறினான். இவ்வெண்ணப் படியே கோவலனும் கண்ணகியும் பொருளீட்டுவதற்காக வழிநடந்து மதுரையை அடைந்தனர். கோவலன் கண்ணகியை மதுரையில் இடைச் சேரியிலே தங்கவைத்து, அவளது காற்சிலம்பு ஒன்றைப் பெற்று அதை விற்க மதுரைமாநகருக் குச் சென்றான். ஆங்கு, அவன் கள்வனெனப் பாண்டிய அரசனாற் கொல்லப்பட்டான். இதனை அறிந்த கண்ணகி, தன் கற்பின் மகத்துவத்தால் மதுரையை எரித்தாள். பின்னர் இறந்த தன் கணவனைத் தரிசித்து அவனுடன் துறக்கம் புகுந்தாள். 

இதனைக் கேள்வியுற்ற மாதவியும் மணிமேகலையும் மனம் வருந்திப் பெருந்துயருற்றனர். 

2. இந்திரவிழாவும் மாதவி துன்பமும் 

சோழநாட்டில் நிகழும் இந்திரவிழாவை முதன் முதலாக ஆரம்பித்தவன், தூங்கெயி லெறிந்த தொடித்தோட்செம்பியன் என்னும் சோழனாவான். இவன், பொதியமலையிலே தவஞ் செய்துகொண்டிருந்த அகத்திய முனிவர் உரைப் படி இந்திரனை வணங்கி, இந்திரவிழா நிகழும் இருபத்தெட்டு நாளும் தன் நகரில் வந்து தங்குமாறு இந்திரனை வேண்டி, அவ்வாறே வரம் பெற்றான். இவன் வானவெளியில் இயங்கிக் கொண்டிருந்த மாயக்கோட்டையாகிய தூங் கெயிலை அழித்துத் தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன் என்னும் பெயர் பெற்றான். 

இந்திரவிழாவினாற் காவிரிப்பூம்பட்டினம் வளமுற்றது; மற்றும் பலவிதத்தாலும் சோழ நாடு சிறப்படைந்திருந்தது. 

காவிரிப்பூம்பட்டினத்திலே மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என, இரு பாக்கங்கள் இருந் தன. அவையிரண்டிற்கும் நடுவே இருப்பது நாளங்காடி என்னும் இடம். அவ்விடத்திலே நாளங்காடிப்பூதம் என்னும் ஒரு பூதம் இருந்தது. இது, இந்திரனால் சோழ அரசர்களின் முன்னோ னாகிய முசுகுந்தனுக்குக் கொடுக்கப்பட்டது. 

ஒருமுறை இந்திரனது நகரை அவனது வேண்டுகோட்படி முசுகுந்தன் காவல் செய் தான். அங்கே அவுணர்கள் கூடி அம் முசுகுந்தனது கண்கள் இருளடையுமாறு அத்திரங்களை ஏவினர். அப்பொழுது ஒரு பூதந் தோன்றி, அவ்விருளை நீக்கவல்ல மந்திரத்தை முசுகுந்த னுக்கு உபதேசித்தது. அதனுதவியால் இருள் நீங்க, முசுகுந்தன் அவுணரைக் கொன்றான். பின்னர் இந்திரனால் அப்பூதம் முசுகுந்தனுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டது. அதுவே நாளங் காடிப்பூதம் எனப்படும். இந்திரவிழாவை அந் நகரார் செய்ய மறந்தால் முசுகுந்தச் சக்கர வர்த்திக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கிய நாளங் காடிப்பூதம், தன் வலிய பற்கள் வெளியே தோன்ற இடிபோன்ற முழக்கத்துடன் பல துன்பங்களைச் செய்யும். அன்றியும், காவிரிப்பூம் பட்டினத்திலே தீமை புரியும் பாவிகளைத் தன் கையிலேயுள்ள பாசத்தாற் கட்டி அடித்து உண்ணுஞ் சதுக்கப்பூதமும் அவ்விடத்தைவிட்டு நீங்கும். இதனால், சோழ அரசர்கள் அவ்விழாவை ஆண்டுதோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடாத்திவந்தனர். 

இந்திரவிழா ஆரம்பமாவதற்கு முன்பு, முர சறைவோன் முரசை யானையின் பிடரில் ஏற்றி, முதலில் ஊரை வாழ்த்துவான். பின்னர், ‘மேகம் மாதந்தோறும் மும்மழை பொழிக, அரசன் செங்கோலனாகுக, என வாழ்த்தி, ஊரவர்களை விளித்து, ”இந்திரவிழாக் காலத்தில் தேவர்கள் இந்த நகருக்கு உருக்கரந்து மனித ருடன் மனிதராக எழுந்தருளுவர். ஆதலால், அகன்ற வீதிகளையும் மன்றங்களையும் துப்புரவு செய்து புதுமணல் பரப்புங்கள். செங்கரும்பும், குலைகள் தொங்கும் வாழைகளும், கமுகங் குலைகளும் நாட்டுங்கள். கொடிச்சீலைகளை எங்கும் பறக்கவிடுங்கள். பாவைகளால் அலங்கரிக்கப் பட்ட குத்துவிளக்குகளையும் நிறைகுடங்களையும் வீடுகளின் முன் நிரை, நிரையாக வையுங்கள். தூண்களில் முத்துமாலைகளையும் மலர்மாலைகளையுந் தொங்கவிடுங்கள். அணிமணி வாயிலுக்கான வளைவுகள் புனையுங்கள். 

 “அந்தணர்களே, கோயில்களிற் பூசைகளை முறைப்படி நடாத்துங்கள். எல்லாக் கோயில்களிலும் வழிபாடுகளை நன்முறைப்படி செய்யுங்கள்.

“தரும உபதேசஞ் செய்யும் பெரியோர்களே, மன்றங்களிலும் மேடைகளிலுஞ் சென்று பிரசங்கம் புரியுங்கள். 

“சமயவாதிகளே, வித்தியாமண்டபத்தை அடைந்து வாதம்புரியுங்கள். இவ் விழாவுக்குரிய இருபத்தெட்டு நாள்களிலும் யாரிடத்தாவது பகையேனும் கோபமேனுங் கொள்ளல் வேண் டாம்” எனக் கூறி, முரசறைவான். இவ்வாறு இந்திரவிழா ஆரம்பமாகும். 

கரிகாற் பெருவளத்தானின் பின், சோழ நாட்டை ஆட்சிபுரிந்த கிள்ளிவளவனின் ஆட்சிக் காலத்தில் இந்திரப்பெருவிழா மேற்கூறியவாறு காவிரிப்பூம் பட்டினத்தில் மிகச் சிறப்பாக நிகழ் வதற்கேற்ற முயற்சிகள் நடைபெற்றன. 

இந்திரவிழாக்காலத்தில் நாடகக்கணிகையர் அரங்கில் ஆடுதல் மரபு. ஆயின், கோவலனின் இறப்பின் பின், கிள்ளிவளவன்காலத்து நிகழ்ந்த இவ் விந்திரவிழாவுக்கு நாடகக் கணிகையாகிய மாதவியோ அவள் புதல்வியாகிய மணிமேகலையோ வரவில்லை. இதனால் ஊரார் பலர் அவர்கள்மேற் பழிமொழி கூறினர். இதனையறிந்த மாதவியின் தாயாகிய சித்திராபதி, இதனை மாதவிக்கும் மணி மேகலைக்குந் தெரியச்செய்து அவர்களை அழைத்து வருமாறு மாதவியின் தோழியாகிய வசந்த மாலையை அவர்களிடம் அனுப்பினாள். 

சித்திராபதியின் கட்டளைப்படி வசந்தமாலை சென்று மாதவியும் மணிமேகலையும் இருந்த மலர் மண்டபத்தை அடைந்தாள். அங்கே தவத்தால் வாடிய உடலையுடைய மாதவி, தன் மகள் மணிமேகலையுடன் பூத்தொடுத்துக்கொண்டிருந் தாள். முன்னர் அழகும் நலமும் பொருந்திய நடிகையாயிருந்த மாதவியின் உடல்மாற்றத் தைக் கண்டு மனம் வருந்திய வசந்தமாலை, மாதவியை நோக்கி, “நீ உன் மகளுடன் இந்திர விழாவுக்கு வராது, உன் கலைத்திறனுக் கொவ்வாத புத்ததுறவியாயிருப்பது பொருந்தாது. இதுபற்றி ஊரார் கூறும் பழிமொழிகள் பல” என்று கூறினாள். 

மாதவி அதனைக்கேட்டு மனம் வருந்தியவளாய், “தோழீ, என் காதலன் முடிவுகேட்ட உடனேயே நான் இறந்திருத்தல்வேண்டும். இந் நாட்டிலுள்ள மாதர், கணவன் இறந்தவுடனே துயர் தாங்காது உயிரை விட்டுவிடுவர். அல்லது, கணவன் சிதையுடன் தம்முடலையும் தாமே விரும்பிச்சேர்த்து அழலுக்கிரையாக்குவர். இவ் விரண்டுஞ் செய்யாதவழி அடுத்துவரும் பிறப்புக் களிலே தம் கணவருடன் சேரும்பொருட்டு நோன்பியற்றுவர். ஆயின், என் காதலனின் வாழ்க்கைத் துணைவியாகிய கண்ணகி தன் கணவனின் நேர்மையற்ற கொலை கேட்ட அந்தட் சணமே சினங்கொண்டு மதுரையைத் தீக்கிரை யாக்கித் தானுந் தெய்வமாயினாள். அத் தெய்வக் கற்புடைய பத்தினியாகிய கண்ணகிக்குப் புதல்வி முறையான என்மகள் மணிமேகலை, ஒருநாளும் இழிந்த அவலவாழ்க்கை வாழாள். தன் வாழ் நாள் முழுவதையுந் தவவழியிலேயே செலவிடு வாள். ஆதலால், அவள் அங்கே வராள். அன்றியும், நான் இந் நகரிலுள்ள பௌத்த ஆசாரியரான அறவணவடிகளை வணங்கி, என் காதலனது கொலையால் ஏற்பட்ட பெருந் துன் பத்தைச் சொல்லி முறையிட்டேன். அதற்கு அவர், ‘இவ்வுலகிற் பிறந்தாரனைவரும் பெரிய துன்பத்தையே அடைவார்கள். பிறவாதவர்களே பெரிய இன்பத்தை அடைவார்கள். பற்றினாற் பிறவியும், அதனாலே துன்பமும் ஏற்படும். பற்றற்றோருக்குப் பிறவியும் இல்லை. அதனால் ஏற்படக்கூடிய துன்பமும் இல்லையாகும்’; என்ற உண்மையை உபதேசித்தருளினார். அவர் அறிவுரைகளைப் பின்பற்றி வாழ, நான் உறுதி கொண்டு விட்டதாக என் தாயாராகிய சித்திரா பதியிடமும் பழிமொழி கூறுவோரிடமுந் தெரிவி,” என்று கூறினாள். அதுகேட்ட வசந்த மாலை பெறுதற்கரிய விலைமதிப்பு வாய்ந்த மாணிக்க மணியைக் கடலில் வீழவிட்டு மீளுபவர் போல, கடுந் துன்பமடைந்து சோர்வுற்ற மனத்துடன் சித்திராபதியிடம் மீண்டு சென்றாள். 

3. மணிமேகலை உவவனம் அடைதல் 

தன் தாய்க்கும் வசந்தமாலைக்குமிடையே நிகழ்ந்த உரையாடல் முழுவதையும் பூமாலை தொடுத்துக் கொண்டிருந்த மணிமேகலை கேட்டுக் கொண்டிருந்தாள். தன் தந்தையான கோவல னுக்கும் உற்ற தாயான கண்ணகிக்கும் மதுரை யில் நேர்ந்த துயர மரணவரலாற்றை எண்ணி, அவள் கண்ணீருகுத்தாள். அவள் அழுது சிந்துங் கண்ணீரால், அவள் தொடுத்த மாலை நனைந்து கொண்டிருந்தது. அதனால், அம்மாலை தூய்மை யும் பொலிவும் அழிந்தது. தன்மகள் கண் கலங்கி அழுவதைக்கண்ட மாதவி அவளை ஆற்றி, தன் மெல்விரல்களால் அவள் கண்களைத் துடைத்தாள். பின் ஒருவாறு அவள் துயரை மாற்ற நினைந்து, கண்மணி, இம்மாலைகள் உன் கண்ணீரில் நனைந்தமையால், அவை தூய் மையை இழந்துவிட்டன. இப்போது அவை தெய்வத்துக்கு அணியப்படும் தகுதியற்றன ஆதலின், வேறு புதிய மாலை தொடுப்பதற்காக, நீ சோலைக்குச் சென்று புது மலர் பறித்து வா,” என்று கூறினாள். 

மாதவியின் உயிர்த்தோழியான சுதமதி என் பவளும் மடத்துக்குக் கொடுப்பதற்காக அங்கே மலர் தொடுத்துக்கொண்டிருந்தாள். அவள் மாதவியை நோக்கி, “மணிமேகலையைத் தனியே சோலைக்கு அனுப்பலாமா? அவளைப் புறத்தே காணின் ஆடவர் அவளை விட்டு நீங்குவாரா? ஆகையால், இவளைத் தனியே பூப்பறித்தற்கு அனுப்பலாகாது. எனது வரலாற்றை நீயறியின் இதன் உண்மையை உணர்வாய். நான் சண்பை நகரத்திலுள்ள கௌசிகன் என்னும் அந்தண னுடைய மகள். ஒருநாள், தனியே ஆராய் வின்றிச் சோலையிற் சென்று பூப்பறித்தேன். அப்பொழுது இந்திரவிழாவைக் காண்பதற்கு ஆகாயவழியே வந்த வித்தியாதரன் ஒருவன், என்னைக் கண்டு எடுத்துக்கொண்டு மேலே சென்று சிலநாள் தன்வயமாக வைத்திருந்து, பின் இந் நகரத்தே விட்டு நீங்கினான். ஆகையால், இவள் இலவந்திகைச் சோலையாகிய அரசர்க்குரிய மலர்க் காவனம் சேர்ந்தால், சோழர்குடி இளவரசர்கள் இவளைக் காணல் நேரும். உய்யான வனத் துள்ள மலர்கள் தேவர்களாலன்றி மனிதர்களால், விரும்பப்படாதன ; வண்டுகள் மொய்க்கப் படாதன. இவை வாடாத பூக்களைத் தாங்கி நிற்கும். இது, கையிலே பாசத்தையுடைய பூதங்களாற் காக்கப்படும். ஆதலால், இவ் வனத்தை அறிவுடையோர் அடையார். இவை யேயன்றிப் புத்தபிரானருளால் எப்போதும் மலர் நிறைந்துள்ள உவவனம் என்னும் ஒரு சோலையும் உண்டு. அச்சோலைக்குள் ஒரு பளிங்கு மண்டபம் இருக்கிறது. அம்மண்டபம் தன் னுள்ளே இருப்பவர்களது உருவை மட்டும் வெளிக்காட்டுமேயன்றி ஓசையை வெளிப்படுத் தாது. அம்மண்டபத்தினுள்ளே மாணிக்கசோதி பரந்த ஒரு பதும பீடம் இருக்கிறது. அப்பீடத் தில் அரும்புகளை இட்டால் அவை மலரும். பல வருடங்கள் சென்றாலும் அவை வாடா. ஏதேனும் ஒரு தெய்வத்தைத் தியானித்து மலர்களை அப்பீடத்திலே சேர்த்தால் அம்மலர்கள் அப் பீடத்தை விட்டு நீங்கி அத் தெய்வத்தின் அடிகளைச் சேரும். இது மயன் என்னும் தெய்வத் தச்சனால் ஆக்கப்பட்டது. இவ்வனத்துக்கே மணிமேகலை பூப்பறித்தற்குச் செல்லுதற்குரியள். அவளுடன் நானுந் துணையாகச் செல்வேன்,” என்று கூற மாதவியும் அதற்கிணங்கினாள். 

மணிமேகலையுஞ் சுதமதியுந் துறவிமடத்தை விட்டு வெளியேறி உவவனத்துக்குச் செல்லுந் தேர்வீதிவழியே நடந்தனர். 

இந்திரவிழா தொடங்கிவிட்டதனாற் பொது வீதிகளெங்கும் விழாக் காண்போர் நிறைந்திருந் தனர். அவ்வீதி வழியே கையிற் கோலுடனும் கமண்டலத்துடனும் வந்த ஒரு துறவியின் முன்னே ஒரு கட்குடியன் சென்று நின்று, ஒரு “ஐயா, வருக, வருக; உமது பாதங்களை வணங்கு கின்றேன். நான் சொல்வதைத் தயவுகூர்ந்து கேளும். உமது உடம்புக்குள்ளே இருக்கிற உயிர் சிறைக்கூடத்துள் அடைக்கப்பட்டிருக்கிற குற்ற வாளியைப்போல வருந்திக்கொண்டிருக்கிறது. தென்னம்பாளையிலிருந்து வடிக்கப்பட்ட இந் தக் கள்ளைச் சிறிது அருந்தும். அங்ஙனம் அருந்தி னால் வருந்திக்கொண்டிருக்கும் உமது உயிர் அவ்வருத்தமொழிந்து இன்பமடையும். நான் சொல்வது உண்மைதானா, என்பதைச் செயல் மூலம் செய்து பாரும்,” என்று கூற அவன் பின்னே சனங்கள் சிலர் வியப்புடன் சென்றனர். 

வீதியின் மற்றொரு பக்கத்தே ஒரு பித்தன் நின்றான். அவன் கந்தலான துணிகளை அணிந்திருந்தான். இலைகளையுந் தழைகளையுந் தன் உடலிலே கட்டியிருந்தான். உடல்முழுதும் சந்தனக்குழம்பு காணப்பட்டது. அலரி, எருக்கு முதலிய மலர்களை மாலையாகக் கட்டித் தன் தலையிற் சூட்டிக்கொண்டு அங்கு மிங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் ஒரு சோம்பேறிக் கூட்டம் கூடிநின்று மகிழ்ந்து கொண்டிருந்தது. 

இக்காட்சிகளையெல்லாம் பார்த்துக்கொண்டே தெருவில் மக்கள், திரள் திரளாக உலாவிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் சிலர், சக்கரங்கள் அமைத்த விளையாட்டு யானைகள் மீது ஏறிச் சவாரி செய்தனர். 

வீதிகளின் இருபுறங்களிலுமுள்ள மாளிகை களிலே தேவர்களையும் மனிதர்களையும் பலவகைப்பட்ட விலங்குகளையும் உயிரோவியமாகத் தீட்டியிருந்தனர். இக் காட்சிகள் அனைத்தையும் பார்த்து நின்றவர்கள் அனைவரும், தெருவீதி வழியே சுதமதியுடன் வரும் மணிமேகலையின் எழிலையும் அவள் தவக்கோலத்தையுங் கண்டு அத்தகைய அழகுவாய்ந்த அவளை, அப்பருவத் திலே தவச்செயலில் ஈடுபடுத்திய மாதவியைக் கடிந்து கூறினர். 

மக்கட் கூட்டத்தைக் கண்டு யாதும் உரை யாடலின்றி, சுதமதியும் மணிமேகலையும் அக் கூட்டத்தினரைக் கடந்து மெல்ல மெல்லச் சென்றர். 

4. உதயகுமாரன்மணிமேகலையைக் காணல் 

இவ்வாறு மாதவியும் சுதமதியும் மலர் வனத்தை அடைந்தனர். அங்கே குருந்தும் கொன் றையும், அசோகமும் முல்லையும், நரந்தமும் நாக மும், பிடவமும் இலவமும் எங்கும் பரந் திருந்தன. அது, கலையில் வல்ல ஓவியன் ஒருவன் வரைந்த வண்ண ஓவியம்போலக் காட்சியளித்தது. சூரியனுடைய கிரணங்களினாலே துரத்தப்பட்ட இருளெல்லாம் போய், ஒதுங்கியிருந்த அம்மலர் வனத்திலே வண்டுகள் வேங்குழலின் ஓசை போல இசை செய்தன; சிறிய வண்டுகள் யாழைப்போல முரன்றன. சூரியனது கதிர்கள் செல்லமுடி யாததும் குயில்கள் நுழைந்து செல்லும் இயல் பினையுடையதுமாகிய அவ்விளமரச் சோலை களில், மயில்கள் ஆட மந்திகள் கண்டு மகிழ்ந்தன. 

பளிங்குபோலத் தெளிந்த நீரினையுடைய பொய்கையிலே பசிய இலைகளையுடையனவாய்ப் பல தாமரைப்பூக்கள் பரந்து கிடந்தன. அவற்று ளெல்லாம் மிக்கதாய், தனித்து உயர்ந்து விளங் கிய மணம் மிகுந்த ஒரு தாமரை மலரில், அரச அன்னம் ஒன்று வீற்றிருந்தது. அப் பொய்கையின் கரையில், அரசன் முன் நின்று ஆடும் நாடக மகள் போல, அரச அன்னம் காணுமாறு ஓர் அழகிய மயில் ஆடிற்று. அவ்வாடலுக்கேற்பச் சம்பங்கோழிச் சேவலொன்று இனிய முழவு போல ஒலிசெய்தது. இவற்றுக்கியைய மரக்கிளை யொன்றிலே கரிய குயில் ஒன்று பாடிக்கொண் டிருந்தது. 

பல தேர்கள் விரைந்து தெருவில் ஓடுதலாலே தெருவினின்றும் எழுகின்ற துகள் படிய, ஒளி மழுங்கிக் காணப்படும் பெண்களின் முகம்போல, தாழையினது வெள்ளிய மகரந்தப் பொடி படி தலால் தாமரைமலர்கள் ஒளி இழந்து காணப் பட்டன. 

மலர்ந்த தாமரைமலரிலே செங்கயல் மீன் கள் தாவ, அம் மீன்களைப் பிடிப்பதற்காகச் சிச் சிலிப் பறவைகள் பாய்ந்தன. ஆயின், அம் மீன் களைப் ‘பிடிக்க முடியாமையால், இரையை இழந்து வருந்திய அப்பறவைகள் சோர்ந்து கிடந்தன. இத்தகைய அவ்வனத்தின் கண்கொள் ளாக் காட்சியழகை, மணிமேகலையும் சுதமதியும் நெடும்பொழுது கண்டு அம்மலர்வனத்தில் உலாவிக்கொண்டிருந்தனர். 

மணிமேகலையும் சுதமதியும் இவ்வாறு மலர் வனத்தில் இருந்தபோது, கடலின் நடுவே செல் லும் கப்பல், காற்றினால் அலையுண்ண அதன் நடுவே ஓங்கி நின்ற பாய்மரம் அடியோடு முறிந்து பாயிலே கட்டின கயிறு அறுபட, அக் கப்பலைச் செலுத்திச் சென்ற மாலுமி நடுநடுங்குமாறு கப்பலின் நடு இடம் பாழாகிப் பாய் பீறுண்ண, அலைகள் மிகுந்த கடலிலே செல்லுந்திசை யறி யாமல் எவ்விடத்தும் ஓடி அலைந்து திரிகின்ற கப்பலைப்போல, காலவேகம் என்னும் அரசனின் பட்டத்துயானை மதமிகுந்து கட்டுத்தறியை முறித்துக்கொண்டு அரசவீதி தேர்வீதி முதலிய வீதிகளின் வழியே ஓடிற்று. அதைக்கண்டு வெருண்ட மக்கள், தங்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாலாதிசை களிலும் பரந்து ஓடினார்கள். யானைப்பாகரும் முரசறைவோரும் அதன் பின்னே ஓடி, தம் கூக்குரலினாலும் முரசொலியாலும் ஓடும் மக்களை எச்சரித்துக்கொண்டே சென்றனர். 

சோழ அரசன் கிள்ளிவளவன் மகனாகிய உதய குமாரன் இச்செய்தியைக் கேள்வியுற்று, ஒரு குதிரைமீதேறி யானையைத் துரத்திப் பிடித்து அதன் வெறியை அடக்கி அதனைப் பாகர்வசம் ஒப்புவித்துத் தன் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் நாடகக் கணிகையர் வீதியில், ஒரு வணிகனை மாடத்தி லுள்ள பலகணிக்கூடாகக் கண்டான். அவ்வணி கன் யாழின் கோட்டைத் தழுவிக்கொண்டு ஓவியப்பாவைபோல மயங்கிக் கடுந்துயருற்றுக் காணப்பட்டான். இவ்வாறிருந்த எட்டி குமரன் என்னும் வணிகனை உதயகுமாரன் நோக்கி, “உன் துயரம் யாது, உன் மனம் இவ்வாறு சோர்வடைந்திருப்பதேன் ?” என, வினாவினான். 

எட்டிகுமாரன் உதயகுமாரனைவணங்கி, “இள வரசே, இப்பொழுதுதான் செப்பினுள்ளே வைக் கப்பட்ட நறுமலரைப்போல, தன் இயற்கை அழகைத் தவவேடம் மறைக்க, மாதவியின் புதல்வியாகிய மணிமேகலை இவ்வழியாற் செல்லக் கண்டேன். அவளைக் கண்டவுடன் அவள் தந்தையாகிய கோவலனுக்கு மதுரையில் நிகழ்ந்த கொடுந் துன்பம் நினைவிற்கு வந்தது. அது என் மனத்திண்மையை மாற்றியமையால் இந்த யாழின் பகைநரம்பிற் கையைச் செலுத்தியது. இதுவே என் மனத்துயரின் காரணம்’ என்று கூறினன். 

பலநாளாக மணிமேகலையை விரும்பிக்கொண் டிருந்த உதயகுமாரன், அவள் மலர்ச்சோலை சென்றாளென்பதை எட்டிகுமாரனால் அறிந்து மகிழ்ந்து, “மலர்ச்சோலைக்குப் போய் மணிமேகலையை என் தேரிலேற்றிக்கொண்டு வரு வேன்” என்று கூறி, ஓடுகின்ற முகிலைக் கிழித்துச் செல்லும் மதியம்போல, தேரிலேறி மலர் வனம் நோக்கிச் சென்று அதன் மதில் வாயிலை அடைந் தான். உதயகுமாரன் மலர்வனத்தின் வாயிலிலே, தேரை விட்டிறங்கித் தன்னுடன் வந்தாரை அவ் விடத்தே நிறுத்தி, தான்மட்டும் தனியே மலர் வனத்துட் சென்றான். 

இளவரசன் தேர் மலர்வனத்தை அணுகிய சமயம் அத்தேரின் மணியோசையைக் கேட்ட மணிமேகலை, “இளவரசன் உதயகுமாரன் என் மேல் மிக்க காதலுடையான் என்று சித்திரா பதியும் வசந்தமாலையும் என் அன்னையிடங் கூறி யதைக் கேட்டிருக்கிறேன். நான் கேட்ட இத் தேரொலி அவனுடைய தேரொலிபோலும். ஆகவே, இப்போது நான் என்செய்வது” என்று கூறிக் கலவரமடைந்தாள். இதனைக்கேட்டுச் சுதமதியும் மிக்க கலவரமடைந்து, அருகேயுள்ள பளிங்கு மண்டபத்துள் நுழைந்து அதன் நடுக் கூடத்தில் மறைந்திருக்கும்படி மணிமேகலைக்குக் கூறி, அவளை உள்ளே இருக்கச்செய்து, தாழ்க் கோலிட்டு, தான் சற்றுத் தொலைவில் நின்றாள். 

சிறிது தேரத்துக்குள் இளவரசன் சுதமதியை அணுகி’ “அம்மணி, நீ மணிமேகலையுடன் வந்தா யென்று அறிவேன். நீ தனியே நிற்பதேன் ? அவள் பௌத்த சங்கத்தார் இருப்பிடத்தை நீங்கி இவ்விடம் வந்ததற்குக் காரணம் யாது? அவள் காதல் என்னும் உணர்ச்சியை அறியும் பருவத்தை அடைந்துவிட்டாளா?” என்று வினாவினான். 

உதயகுமாரன் கூறியவற்றைக் கேட்டு நின்ற சுதமதி மனம் வருந்தி, “இளவரசே, இளமைப் பருவத்திலேயே முதுமைவேடம் பூண்டு, வழக் கைக் கேட்டு நீதி உரைத்த கரிகாற்பெருவளத்தா னுடைய வழித்தோன்றலே, பெண்ணாகிய நான் உமக்கு என்ன கூறமுடியும். ஆயினும், வீர இள வரசே, உம்மிடம் பேசத்துணிகின்றேன். நமது உடல், முற்பிறப்பில் நாம் செய்த வினையின் பயனாய் நமக்குக் கிடைத்தது. இப்பிறப்பில் நாம் செய்யும் வினைகளுக்குக் காரணமாய் அமைவதும் இவ்வுடலே. நாம் அணியும் ஆடை, ஆபரணங் களை நீக்கிவிடின், அது ஊன்பொதிந்த பண்ட மாகும். இது காலத்தால் அழியும் தன்மை யுடையது. நோயின் கொள்கலம்; சினத்தின் புகலிடம் ; தீமைகளின் இருப்பிடம் ; அவாக்கள் தங்குமிடம் ; ஆகையால், உடலை ஒரு பொரு ளாக மதியாது இதனை வெறுப்பீராக” என்றாள். இவள் இங்ஙனங் கூறிய வார்த்தைகள் உதய குமாரனது காதை அடையுமுன் பளிக்கறையி னுள்ளே இருந்த மணிமேகலையின் உருவம் உதய குமாரனது கண்ணுக்குத் தோன்றியது. 

5. மணிமேகலாதெய்வம் தோன்றுதல் 

தன் கண்ணுக்குத் தோன்றிய உருவம் மணி மேகலையின் வடிவமேயென்பதை உதயகுமாரன் நிச்சயித்து, அப்பளிக்கறையினுட் செல்வதற்கு நினைத்தான். ஆனால், அப் பளிக்குமண்டபத்தின் வாயில் காணப்படாமையால், அவ்வாயிலை அறிந்து கொள்வதற்காக அப்பளிக்கறையின் சுவரைக் கையினாலே தடவிக்கொண்டு அதனைச் சுற்றி வந்தான். ஆயினும், அதன் வாயிலை அறிந்து அதனுள்ளே புக அவனால் முடியவில்லை. மணிமேகலை பின்னர், சுதமதியை நோக்கி, எத்தகையவள் ? ” என்று கேட்க அவள், “மணி மேகலை தவ ஒழுக்கமுடையவள் ; குற்றஞ் செய் தவர்களைச் சபிக்கும் ஆற்றல் பெற்றவள்; ஆதலின், நீ அவளை விரும்புதல் தக்கதன்று ” என விடை கூறினாள். 

அவள் எத்தன்மையளாயினுமாகுக ; எப்படியும் நான் அவளை அடைவேன். அது நிற்க, நீ யார், மணிமேகலையுடன் வந்த காரணம் யாது? சொல்’ என, உதயகுமாரன் சுதமதியைக் கேட்க, அவள் கூறுகிறாள் ;- 

”இளவரசே, நான் சண்பை நகரத்திலுள்ள கௌசிகனென்னும் அந்தணனின் மகள். என் இளமைப்பருவத்தில் என் அன்னை இறந்துவிட, என் தந்தை என்னைப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள், ஒரு சோலையில் நான் தனியே நின்று பூக்கொய்யும் பொழுது ஆகாயவழியே சென்ற வித்தி யாதரன் ஒருவன், என்னை எடுத்துச் சென்று தன் வயமாக்கி இந்நகரில் விட்டுச் சென்றான். அதனை யறியாத என் தந்தையார் என்னைக் காணாமை யால் என்னைத் தேடி அலைந்து கன்னியாகுமரிக்கு நீராடச் செல்பவர்களுடன் கூடிச் சென்றார். அப்போது, இடையில் இந்நகரத்தில் என்னைக் கண்டார். கண்ட அவர், என் வரலாற்றை அறிந்து என் ஒழுக்கக்கேடு காரணமாக, நான் அந்தணர்க ளுடன் வாழத் தகுதியற்றுவிட்டமையால், என் மேற்கொண்ட அன்புகாரணமாகத் தானும் அவ் வந்தணர்களை விட்டுப் பிரிந்து மனைதோறும் பிச்சை எடுத்து என்னையும் உண்பித்துத் தானும் உண்டு பொழுதைக் கழிப்பாராயினர், அங்ஙன ‘மிருக்கையில் பிச்சை எடுப்பதற்கு ஒருநாட் செல் லும்போது, இளங்கன்றையுடைய ஒரு பசு முட்டி, என் தந்தையின் வயிற்றைக் கிழித்துவிட்டது. இதனால் வருத்தமுற்ற நாம், ‘கதியற்ற எம்மைப் பாதுகாப்பாருண்டா? என்று அலறி முறையிட் டோம். அப்போது மனைதோறும் பிச்சை எடுக்கும் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவரும் முழுமதி போன்ற முகத்தினையும் பொன்னிறமுள்ள சீவர ஆடையினையும் உடையவருமான சங்கதருமன் என்னும் முனிவன், விரைந்து வந்து எம் நிலை மையை அறிந்து பௌத்தசங்கத்தார் இருப்பிடம் சேர்ப்பித்து என் தந்தையின் துயரையும் நீக்கினார். அதுவுமன்றி அம்முனிவன் எனக்கறிவுறுத்தியபடி, தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அருள் வடிவமான புத்தன் பாதங்களையன்றி மற்றெதனையும் என் மனம் விரும்பாமையின் நான் பௌத்த சங்கத்தைச் சேர்ந்து, ஆண்டு இருந்த மாதவியுடன் உறைவேன் ஆயினேன். அதனால் மணிமேகலையுடன் வந்தேன்,” என்று கூறினாள். 

“இன்னும் அவளை அடையும் வழி இருக்கிறது; அதை நான் அறிவேன், சித்திராபதி மூலம் அவளை அடைதல் முடியும்” என்று கூறிக் கொண்டே. உதயகுமாரன் அவ்விடமிருந்து சென்றான். 

உதயகுமாரன் போனதும் மணிமேகலை, மண்டபத்திலிருந்து வெளியே வந்தாள். வந்து, கற்பின் தன்மையையோ, குடிமதிப்பையோ அறியாது வாழும் மற்றைய பொதுமகளிரைப் போலவே அவர் என்னையும் எளிமையாக்கக் கருது வதாகத் தோன்றுகின்றது. அங்ஙனமாயினும், என் மனம் முன்பின் தொடர்பற்று அவர்பாற் செல்கிறது. இதுதான் காதலின் தன்மையோ?” என்று சுதமதியைக் கேட்டாள். 

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் சமயம் மணிமேகலை என்ற தெய்வம் அந்நகரில் வாழும் ஒரு பெண்ணைப்போல வடிவங்கொண்டு அம்மலர்வனத்திடையேயுள்ள புத்த பீடிகையைக் கண்டு, புத்தபிரானை வணங்கியபடியே அதனை வலம் வந்துகொண்டிருந்தது. 

அந்தச் சமயத்தில், சூரியன் மேற்குத் திசையிலே மறைந்துகொண்டிருந்தது; பூரண சந்திரன் கிழக்கே உதயமாயிற்று. இவ்வாறு மறையும் சூரியனும், உதயசந்திரனும் பூமடந்தையின் காதுகளி லணியப்பட்ட பொன் தோடு போலவும், வெள்ளி வெண் தோடு போலவும் பொலிந்து காணப்பட்டன. 

அம்மாலைநேரத்தில் அன்னச்சோடுகள் தாமரைப் பூக்களிலே தாவி விளையாடின. அன்னப் பேடொன்று விளையாட்டு மிகுதியாற் களைத்து, தான் விளையாடிய தாமரைப்பூவின்மீது படுத்துக் கொண்டது. சூரியன் மறைந்ததால் தாமரைப்பூ குவிந்து சுருங்க, அன்னப்பேடு அதனுள் மறையத் தொடங்கிற்று. இதனைப்பொறாத ஆண் அன்னம் அத்தாமரைப்பூ சிதைந்தழியுமாறு அதனைக் கிழித்து தன் பேட்டை மீட்டுக்கொண்டு உயர்ந்த தென்னையினது கொழுவிய மடலின்மீது ஏறிற்று. 

அன்றிற்பேடு தன் மெல்லிய குரலிற் சேவலை அழைத்து ‘ஞாயிறு சென்று மறையும் அந்திப் பொழுதாயிற்று,’ என்பதைத் தன் சேவலுக் கறிவித்தது. பவளம்போலச் சிவந்த கால்களை யுடைய அன்னப்பறவைகள் கூட்டமாக வதியும் பரந்த இடத்திலேயுள்ள குவளைப்பூக்களை உண்ட பசுக்களது மடியிவிருந்து பொழிகின்ற இனிய பால் நிலத்தினின்றும் எழுகின்ற புழுதியை அடக்க, அவை தம் கன்றுகளை நினைந்தவண்ணம் குரல் எழுப்பிக்கொண்டு மன்றுகளை நோக்கிச் சென்றன. 

அந்தணர் செந்தீ வளர்த்தனர்; பசிய வளை யல்களை அணிந்த மகளிர் பலர் மாலைக்கால மணி விளக்கேற்றினர். யாழை வாசிக்கும் பாணர், யாழின் நரம்பை வருடி இனிய மருதப்பண்ணை எழுப்பினர். கோவலர் முல்லைப்பண்ணை வேய்ங் குழலிடத்து இசைத்தனர். இவ்வாறான நிகழ்ச்சி களோடு, போர்க்களத்திலே தன் கணவனை இழந்து தன் உறவினரிடஞ் செல்லும் ஒரு மங்கையைப் போல, சூரியனாகிய கணவனை இழந்தமையா லேற்பட்ட அளவில்லாத் துன்பத்துடனே அந்திப் பொழுதென்னும் மடந்தை அங்கே தோன்றினாள். 

சிறிது நேரத்தால் இருளாயிற்று. பூரண சந்திரன் ஒளிபரப்பிக்கொண்டு மலர்வனம் எங் கும் வெள்ளிமுலாம் பூசினான். அந்நிலவெளி யிலே மணிமேகலா தெய்வம், சுதமதியையும் மணிமேகலையையுங் கண்டு “இரவு வந்தடைந்த பின்னும் இங்கு தங்கிநிற்கிறீர்களே; நீங்கள் இங்கு நிற்பதற்குக் காரணம் யாது? என்ன துன்பம் அடைந்தீர்கள்?” என்று கேட்டது. அப் பொழுது உதயகுமாரன் அங்கு தோன்றியதை யும் அவன் கூறியவற்றையுஞ் சுதமதி விளக்க மாகக் கூறினாள். 

மணிமேகலா தெய்வம் இவற்றைக் கேட்டு, இளவரசன் மணிமேகலையிடம் ஆழ்ந்த காதல் கொண்டுள்ளான். இது புத்த அடியார்க்குரிய புனிதமான இடமாதலின் அவன் தன் காதலை யடக்கி இவ்விடமிருந்து மீண்டான். நீங்கள் இங்கிருந்து செல்லும்போது அவன் வீதியில் உங் களைக் காணாமலிருத்தல் முடியாது. ஆகையால், இம் மலர்வனத்தின் மேற்கு மதிலை யடுத்துள்ள வாசல்வழியாக நீங்கள் வெளியே சென்றால், சக்கரவாளக் கோட்டத்தை அடைவீர்கள். அது சுடுகாட்டுக் கோட்டமெனவும் அழைக்கப்படும். என, அதன் இயல்பு கூறத் தொடங்கிற்று. 

– தொடரும்…

– மணிமேகலை சரிதை, முதற் பதிப்பு: 1960, ஆறாம் வகுப்புக்குரியது, வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *