கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 1,637 
 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாழ்ப்பாண எக்ஸ் பிரஸ் வரும் நேரம் யாழ்ப்பாண ஸ்டேஷன் சனத்திரளில் நெளிந்தது. அங்குமிங்கும் சனக்கும்பல் தெரிந்தது. நெருக்கமடைந்தது. “கூ” ஒலி வந்த அண்மை…….. அப்போது மணியைப்பார்த்தேன். வண்டி புறப்பட இன்னும் ஆறு நிமிடங்கள் இருந்தன. டிக்கட் பெறுகையை கவுண்டரில் வைத்தேன். வண்டி புறப்பட இன்னும் ஆறு நிமிடங்கள் இருந்தன. டிக்கட் பெறுகையை கவுண்டரில் வைத்தேன். அப்பொழுது என்முன்னே….” எனக்கு ஒரு ரிக்கற் எடுத்துத் தர்ரீங்களா” என்ற குரல் ஒலி, யாழ் ஒலியாக ஒலித்தது. 

திரும்பினேன். கோமளமான் முகம்ஒன்று வசீகரமான கரங்களால், கையிலிருந்த பையுள்ளிருந்து ஒரு பத்து ரூபாவை எடுத்து நீட்டியது. பணத்தை வாங்கினேன். எங்கே போகிறீர்கள் என்றேன். 

“கோட்டைக்கு” என்றாள். ரிக்கற்றை எடுத்து அவளிடம் நீட்டினேன். நன்றி கூறி வாங்கிளாள். போய்விட்டாள், 

மணி ஒலி, எக்ஸ்பிரஸ் நகர ஆரம்பித்துவிட்டது. யான் ஏறிவிட்டேன். அப்பொழுது…. அங்கே “இதை பிடியுங்கள் தயவு செய்து…..” என்றாள். 

அது ஒரு சூட்கேஸ் 

அதை ஒரு மென்கொடி துாக்கமுடியாது துாக்கியபடி நின்று இவ்வாறு இரந்தது. உடனே பெற்றேன். அவள் ஏறவேண்டுமே! வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. உடனே எனது கையைக் கொடுத்து இழுத்து ஏற்றி விட்டேன். 

“நல்ல வேளை” அப்பாடி” சில சொற்கள் இப்படி பெருமூச்சொலியிட்டு அவள் வாயிலிருந்து பிறந்தன. ரிக்கட் கேட்ட அதே பெண்தான்….! 

என் முன் உட்கார்ந்தாள். நன்றி பல அடிக்கடி கூறினாள். வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நேரமும் ஓடிக் கொண்டிருந்தது. என் உள்ளமும் ஓடிக்கொண்டிருந்தது. 

“குனிந்த தலையில் அடர்ந்து கிடந்த கேசச் சுருள் சுழன்றது. என்னை ரசிகனாக்கியது. மார்பை இறுக்கிப்பிடித்து மூடியிருந்த வெள்ளை ஜாக்கட்டின் கையோரங்கள் மட்டும் வெளிக்குத் தெரியும்படி பக்குவமாக மூடிமறைத்துக் கொண்டிருந்தது. பச்சை நிறப் பட்டாடை. கழுத்திலே ஒரு மாலை கையிலே கடிகாரம்… அவ்வளவுதான். அவளுடலில் அணிகள்! செம்மை இதழ். முத்துப் பற்கள், ரோஜாக்கன்னம், உடுக்கு இடை, சிவப்பு வர்ண உடல்… இயற்கை அவளிடம் கொடுத்த கொடைகள்!” 

அவள் முகம் என் மனதை உருக்கியது. அவளைப் பார்த்தேன். அவளும் பார்த்தாள். அவள் எப்படிப் பார்த்தாலும் அந்தப் பார்வையில் அன்பு வழிந்தோடுவதை உணர்ந்தேன். பருவமடைந்த பெண்ணை இளமை நிறைந்த வாலிபன் பார்க்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளில் உடலைப் பொறுத்தவைகளைத் தவிர மற்றவை அத்தனையும் அவளை யான் பார்க்கும் போது எனக்கேற்பட்டன. 

ஒன்று இரண்டு மூன்று என மணிமணியாக காலம் ஓடின. அந்த மூன்று மணிக்காலமும் நூற்றி எண்பது இன்ப நிமிடங்களைத் தந்தது. உள்ளமடைந்த மாறுதல் அந்த மூன்று மணிக்காலத்தில்தானே உண்டு. ஏதோ ஓர் உலகத்திலிருந்து என்னை யாரோ எப்படியோ வேறோர் உலகுக்கு இழுத்துவந்துவிட்டார்கள். அந்தப் புது உலகம் எனக்களித்த புத்துணர்ச்சி. பூரிப்பின் எண்ணங்களுக்குப் புது மெருகு ஊட்டின. 

மாகோ ஸ்டேசனில் எக்ஸ்பிரஸ் நின்றது. கைப்பையைக் கீழே வைத்து விட்டு, உடலை நெளித்து வளைத்து அலுப்பைப் போக்கிக் கொண்டாள் அவள். அப்போது என் கண் வழி புகுந்து கருத்தில் பதிந்த அந்த அழகின் அசைவுகள் இன்பத்தை அப்படியே உதிர்த்துக் கொட்டின. மெல்ல என் பக்கம் முகத்தை திருப்பிளாள். எதிர்பாராது மின்னிய மின்னல் பார்வையைப் பறித்தெடுத்து ஓடி மறைந்த அடுத்த வினாடியில், என்னென்ன உணர்ச்சிகள் ஏற்படுமோ அத்தனையும் ஒன்று கூடவிடாது என் உள்ளத்தில் படை எடுத்தன. அவள் முகம் கயிறாயது என் உள்ளம் பம்பரமாகியது. 

சுழன்ற பம்பரம் வேகம் கூடியது. என் இதயத்திலிருந்து வியப்பு, வெட்கம் வேதனை ஒன்று கலந்து ஆட ஆரம்பித்தன. 

அவள் முறுவல் புரிந்தாள். முல்லைக்காடு அவள் வாயுள் அடங்கியிருந்தது. அற்புதம் அழகாகிவிட்டதோ! அழகு அற்புதமாகிவிட்டதோ! உறைந்து கட்டியாயிருந்த பனித்துண்டு மின்சார அடுப்பின் மேலிட்டது போல உள்ளம் கரைந்தோடியது. அழகு, பருவ வயசு, நாகரீக உடு, … நல்ல பொருத்தம். 

“உங்கள் பெயர்” 

யான் கேட்டேன் அப்பொழுது பக்கமிருந்தோரெல்லாம் உறவுடன் உறவாடிக்கிடந்தனர். 

“விநோதினி…. 

“விநோதினியா? அழகான பெயர்” 

“ஊர்?” 

“யாழ்ப்பாணம் ரவுண்” 

“எங்கே போகிறீர்கள்” 

“கோட்டைக்கு” 

“ஏன்” 

“இப்பொழுது அங்குதான் வசிக்கிறேன்.” 

அடுத்த நிமிடம் என்ன நடந்ததோ வேகமாக ஓடிக்கொண்டிருந்த ‘எக்ஸ் பிரஸ்’ தாமதித்தது, அட்டா பொல்காவலையல்லவா…..? 

வண்டி ஓடியது 

கள்ளங்கபடமில்லாது தனிமையிலே தயக்கமின்றி அழகுப்பதுமை அமைதியுடன் பிரயாணம் செய்கின்றதே ஆகா! தமிழ் மகள் தன்மையே தனிநிகரானதுதான். தனிமை அவளைக் கறை செய்ய முடியுமா? பெண்மையின் திண்மை அவளிடம் கிடந்தது. 

“ஆகா அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு முடியும் அதிஷ்ட வாலிபன் யாரோ!” அவளுடன் எதைஎதையோ கதைக்க மனம் துடிக்கிறதே ஆனால் அவளுடன் கலந்துரை செய்யும் போது அவைகளைச் சொல்லாக்க முடியவில்லையே! ஆமாம் பெண்மையின் பெருமையடையாத ஆபாச நெஞ்சங்களையும் திருத்துமோ! – வி-நோ-தி-னி…. விநோதமான பெண்தான். 

பெட்டியைத் திறந்தாள். கண்ணாடியைப் பார்த்து கேசத்தை ஒழுங்கு செய்து கொண்டாள். பவுடரை சிறிது பூசினாள்….! 

மருதானை கழித்து வண்டி ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் கணநேரமதில் கோட்டையை வண்டி பிடித்துவிடம். ஆனால் என் ஆகாயக்கோட்டை….! 

பெட்டியுள்ளிருந்து எடுத்துக் கழுத்திலணிந்தாள். அது “தாலிக்கொடி” 

ஆச்சரியமாகப் பார்த்தேன். தாலிக்கொடியுடன் அவள் வதனத்தில் கண்ட அமைதி பெருமையுடையது. ஆனால் அகம் விநோதமானது…..! 

கோட்டையில் வண்டி நின்றது. அவள் கணவன் பெட்டியை இறக்கியபடி சேமம் விசாரித்தான். அவள் கண்ணும் மொழி பேசின. ..! 

யான் இறங்கினேன். இளைஞனின் ஆசைக் கண்ணிலிருந்து காப்பாற்றும் மஞ்சள் கயிறு மகா சிறப்புடையது. தான்…… ஆனால் இன்றைய பெண் மஞ்சள் கயிறு அணிய வெட்கமடைகிறாளே….. அட பொல்லாத நாகரீகமே நீ செத்துமடி! 

ஒருமுறை காறி உழிழ்ந்தேன். அந்தச் சளியிலே என் ஆசைக் கிருமியும் பறந்தது. 

புதுமைலோலன்

வீ.கே.கந்தசாமி என்ற இயற்பெயர் கொண்ட புதுமைலோலன் சிறுகதை, நாவல்,ஆகிய துறைகளில் ஈடுபாடுகொண்டவர். சிறந்ததொரு பேச்சாளர். தாலி இவரது நாவல். இவரது சிறுகதைகளின் தொகுப்பு புதுமைலோலன் கதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அப்பே லங்கா நல்லதொரு சிறுகதை. 

– 22.06.1967

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *