போர் நிறுத்தம்!






போர் செய்தியை கணவன் சொன்னதிலிருந்து உறக்கம் தொலைந்து போனது ரம்யாவிற்கு. உடனே தொலைக்காட்சிகளை மாற்றி, மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். உண்மைச்செய்திகளையும், யூகச்செய்திகளையும் மன பயத்தை அதிகரிக்கும் விதமாகக்கூறிக்கொண்டிருந்தன சேனல்கள்.
‘தீவிரவாதிகளும் மனுசங்க தானே…. அவங்களுக்கும் அம்மா, அப்பா, கூடப்பொறந்தவங்கன்னு இருக்கத்தானே செய்வாங்க…. எதுக்காக இப்படி அப்பாவிகளை குருவி சுடற மாதிரி சுட்டுத்தள்ளரானுக? அமைதிப்பூங்காவா இருந்த நம்ம நாட்ல போர் வர வெச்சு அதனால பல பேரு செத்துப்போக காரணமா ஆகறாங்க. ராணுவத்துல இருக்கிறவங்களோட குடும்பம் என்ன பாடு படும்னு யாருக்காச்சும் தெரியுமா? அணு குண்டு வேற போடப்போறாங்கன்னு ஒரு டிவி நியூஸ்ல சொல்லிட்டாங்க. மனசு பதறுதே…. ஒடம்பெல்லாம் நடுங்குதே…. கணேஷ் மாதர ஒரு கணவன் எனக்கு இந்த ஜென்மத்துல கெடைச்சதே நான் போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம். கடவுளே குலதெய்வமே மாரியாத்தா அந்த பாக்கிஸ்தான் காரங்களுக்கு நீ போய் புத்தி சொல்ல மாட்டியா…? காஷ்மீர் எல்லைக்கு போயிருக்கிற என்னோட கணேஷை காப்பாத்திடு கணேசா….’ தனக்குத்தானே மன பயம் மேலோங்க பேசிக்கொண்டாள்.
வெறித்தனமான நாட்டுப்பற்று கொண்டவன் கணேசன். துணிச்சலுடன் தானாக முன் வந்து படையில் முதல் வீரனாக நிற்க விரும்பும் ராணுவ வீரன். ஒரு முறை எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் கையில் காயம்பட்டு வந்த பின் ராணுவத்துக்கே போக வேண்டாம் என மனைவி ரம்யா காலைப்பிடித்துக்கெஞ்ச “சாவுன்னு வந்தா பாக்கிஸ்தான் காரங்க சுட்டு மட்டுமில்லை, பாம்பு கடிச்சும் கூட வரலாம். இப்படியே எல்லாரும் பயந்தா நாட்டை யாரு காப்பாத்துவாங்க? தைரியமா இரு. எனக்கு ஒன்னும் ஆகாது” என நம்பிக்கையாக கூறிய போது சாந்தமாகி புறப்பட்டுச்செல்ல ஒத்துக்கொண்டாள்.
‘மற்ற பெண்களைப்போல கணவனுடன் எப்போதும் ஒன்றாக இருக்க முடியவில்லையே…. மற்றவர்களைப்போல் அதிகமாக சம்பாதிக்க முடிவதில்லையே…. நாட்டுக்காக உயிரைப்பயணம் வைத்து, உறக்கம் கெட்டு உழைக்கும் கணவனுக்கு உறவுகளில் மதிப்பு கூடவில்லையே….’ எனும் கவலை ரம்யாவின் மனதை வாட்டியது.
ஆனால் போர் சூழல் வந்த பின்பு தங்கள் வீட்டைப்பார்த்து அனைவரும் வணங்கிச்செல்வதும், தான் போகுமிடங்களில் மரியாதையும், மதிப்பும் கூடியிருப்பதைக்கண்டு பெருமிதம் ஏற்பட்டது.
“ரம்யா நீ தைரியமா இரு. எங்கள காக்க கடவுள் மாதிரி எல்லைல நிற்கிற உன்னோட கணவன கடவுள் காப்பாத்துவாரு” என பலரும் கூறிய போது ஒரு ராணுவ வீரனை திருமணம் செய்து கொண்டதற்காக முதலாகப்பெருமைப்பட்டாள்.
கணவனிடமிருந்து போன் வந்தது. “ரம்யா இப்ப தான் நீ தைரியமா இருக்கனம். இப்ப நாடு ஆபத்தான நிலைல இருக்கு. அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. முப்படைகளும் தயாரா இருக்கு. எது வேணும்னாலும் நடக்கலாம். குழந்தைகளை தைரியசாலிகளா நீ வளர்த்தனம். நம்ம ராணுவம் ரொம்ப வலிமையா இருக்கு. எனக்கு ஒன்னும் ஆகாது. ஆனாலும் கவலைப்படாதே….” சொன்னவனிடம் வார்த்தை நின்று வந்தது. அவனும் பாசத்துக்கு ஏங்குபவன் என்பது புரிந்த போது ரம்யாவிற்கு கவலை மேலோங்கியது.
“போர் வேண்டாம்னு தான் நம்ம அரசாங்கம் விரும்புது. ஆனா எதிரிகள் விடாம குண்டு போடறாங்க. அவங்களுக்கு பெரிய அடியா நாம கொடுக்கப்போறோம். அதுக்கப்புறம் எதிரிகளும் பெரிய ஏவுகணைகளை வீசத்தான் போறாங்க. விளைவு எப்படி வேணும்னாலும் இருக்கலாம். மறுபடியும் சொல்லறேன் நீ எப்பவும் விட இப்பதான் தைரியமா இருக்கனம். வெற்றி நம்ம பக்கம் தான். ஜெய்ஹிந்த்… இப்ப போனை வெச்சிடறேன்….” அலைபேசி துண்டிக்கப்பட்டதும் தனது உயிரே துண்டிக்கப்பட்டதாக எண்ணி கதறினாள். கண்கள் குளமாயின.
அப்போது பக்கத்தில் வந்து ரம்யாவின் கண்ணீரைத்துடைத்த பத்து வயது மகன் சுகன், “கவலைப்படாதம்மா. இதுதான் நாம சந்தோசப்படற நேரம். நானும் அப்பா மாதிரி ராணுவத்துல தான் வேலைக்கு சேரப்போறேன்” என்ற போது அழுகை நின்று அதிர்ச்சி மேலோங்கியது.
அவனை தன்னருகே இழுத்து மார்போடு இறுக்கமாக அணைத்த போது ‘போர் நிறுத்தத்திற்கு இரண்டு நாடுகளும் ஒப்புதல்’ எனும் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்ததும் கவலைக்கண்ணீர் ஆனந்தக்கண்ணீராக மாறியது. மனதிலிருந்த கவலைகள் எனும் எதிரிகளை மகிழ்ச்சி எனும் ஏவுகணை அடித்து தூள், தூளாக்கியதை உணர்ந்து பூரித்தாள் ரம்யா.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |