பைத்தியங்கள்
இரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விட்டது.
இதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி.
காலனியில் இச்செய்தி தீ போல் பரவி,கிணற்றை சுற்றி கூட்டம் கூடியது.
கிணற்றில் எந்த சத்தமும் கேட்கவில்லை. கிணற்று நீரில் எவ்வித அசைவும் இல்லை.
தாய்மார்கள் தங்களது குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.
கிணற்றில் விழுந்த குழந்தை இறந்திருக்கும் என்றார் ஒருவர்.
இறந்துவிட்டால் பிணம்மிதக்குமே என்றார் மற்றொருவர்.
குழந்தை விழுந்ததை நீ பார்த்தாயா என்று கந்தபழனியை அதட்டினார் ஒருவர்.
ஆம் என்பதுபோல தலையாட்டினான் கந்தபழனி.
அப்போ குழந்தை எங்கே என்று கேட்டார் மற்றொருவர்.
வானம் பார்த்து கைகாட்டினான் கந்தபழனி.
கந்தபழனியை கண்டு சிரித்தது நிலாக்குழந்தை.
சத்தமிட்டு சிரிக்கத்துவங்கினான் கந்தபழனி.
பைத்தியம் பேச்சைக்கேட்டு பைத்தியமானோமே என்று நொந்தவாறு வீடு திரும்பினர் மற்ற பைத்தியங்கள்.
– Tuesday, March 18, 2008
![]() |
நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க... |