பேய் விடுதி..!





(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10

சனிக்கிழமை. கல்லுாரி விடுப்பு நாள்.
ஓட்டம், விளையாட்டு என்று உடற்பயிற்சி செய்பவர்களெல்லாம் தங்கள் தங்கள் வேலைகளை வழக்கம் போல் செய்து கொண்டிருந்தார்கள்.
மற்ற மாணவிகளெல்லாம் வழக்கத்திற்கு மாறாக நேரம் கழித்து சோம்பலாக எழுந்தார்கள்.
தினம் அதிகாலையில் எழுந்து புருபுருவென்று பல் விளக்கி, கரிசனமாய்ப் படிக்க உட்காரும் மாணவிகள் எவரையும் காணோம்.
அவர்களும்… ஏழு. ஏழரை மணிக்கு மேல்தான் சாவகாசமாக எழுந்து வந்து பல் விளக்கி விடுமுறை நாளை அனுபவித்தார்கள்.
சரியாய் 8.00 மணிக்கெல்லாம் ….விடுதிக்கு வெளியே…
“மல்லிப்பூ….! மல்லிப்பூ …!” கூவிக் கொண்டு தலையில் கூடையைச் சுமந்தபடி அஞ்சலை வந்தாள்.
இவள் சத்தம் கேட்பதற்காகவே காத்திருந்தவர்கள் போல் மாணவிகள் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.
பேகம், ஆர்த்தி இருவரும் மாடி வராண்டாவில் நின்று அவர்களைப் பார்த்தார்கள்.
இதில் ரீட்டாதான் முதன்மையாக ஓடினாள். பார்த்த பேகத்திற்குள் படீர் யோசனை.
உற்றுக்கவனித்தாள்.
ரீட்டா… பூ வாங்குவதற்கு வாங்குவதற்கு முன் அவசரமாக எதையோ அஞ்சலையிடம் வாங்கி சுடிதாருக்குள் நுழைத்தாள்.
பேகத்திற்குப் புரிந்து விட்டது. கஞ்சா!
அடுத்தடுத்து மாணவிகள் ஓட… பூக்காரியைச் சுற்றி கும்பல்.
‘கையும் களவுமாக திருடன்!’ – பேகத்திற்கு உடன் என்ன செய்வதென்று புரியவில்லை.
சிறிது நேரம் மனதுக்குள் யோசனை. சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்தாள்.
மாடிப்படி ஓரம் ஒதுங்கி மொட்டை மாடிக்குப் போகிற பாதி வழியில் நின்று செல் போன் எடுத்தாள். எத்தனையோ எண்களை அழுத்தி காதுக்குள் வைத்தாள்.
“சதீஷ்! நான் விக்னு பேசறேன்.”
“சொல்டா.”
“ரெண்டு கான்ஸ்டபிள்களோட உடனே விடுதிக்கு வரனும்.”
“என்ன விசயம்?“
“இங்கே மாணவிகளுக்கு பூக்காரிக்கிட்டே இருந்து கஞ்சா பொட்டலம் கைமாறிக்கிட்டிருக்கு.”
“உண்மையாவா?!”
“ஆமாம். நான் நான் கண்ணால பார்த்தேன். இங்கே கலாட்டா செய்யாம கைது செய்துகிட்டுப் போகனும். இது சல்லி வேர். அடுத்து வேர்களைப் பிடிக்கிறதெல்லாம் உங்க திறமை.” சேதி சொல்லி வைத்தான்.
அடுத்து ஐந்தாவது நிமிடத்தில்..
பூக்கூடை பாதி விற்பனையாகி முடிவதற்குள்ளேயே போலீஸ் ஜீப் விடுதி காம்பௌண்டிற்குள் நுழைந்தது.
அஞ்சலை உட்பட சம்பந்தப்பட்ட மாணவிகள் மிரண்டார்கள். சதீஷ் இரண்டு கான்டபிள்களோடு இறங்கி அஞ்சலையைக் கைப்பிடிக்க…ஒரு கான்ஸ்டபிள் பூக்கூடையைத் தட்டி விட்டான். பூக்களின் அடியிலிருந்து பொட்டலங்கள் சிதறின.
ஏதோ கலாட்டா என்று உணர்ந்த வார்டன் ஓடி வந்து பார்த்து திகைத்தாள்.
பூக்காரியை ஜீப்பில் ஏற்றி புறப்பட…. விடுதியே ஸ்தம்பித்தது.
எல்லாரும் மிரண்டு, அரண்டு, முகங்கள் இருண்டு அறைகளில் குறுகுறுவென்று அமர்ந்திருந்தார்கள்.
ஆர்த்திக்கும் இது அதிர்ச்சி ஆச்சரியமாக இருந்தது.
‘பேகம்தான் செய்திருக்கிறாள்!’ என்பது அவளுக்குப் புரிந்தது. ஆளை ஓரக்கண்ணால் பார்த்தால்கூட காட்டிக் கொடுத்தது போலாகும் என்று பயந்து விக்னுவை நிமிர்ந்துகூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.
போலீஸ் வேன் விடுதி காம்பௌண்டைத் தாண்டி சிறிது துாரம் சென்று பிராதான சாலையில் சென்றது.
எப்போதும் அஞ்சலையை விடுதிக்குள் விட்டு தன் கண்காணிப்பில் அவள் பாதுகாப்பிற்காக விடுதி சாலை பிரதான சந்திப்பிலேயே நிற்கும் கண்ணியப்பன் ஜீப் தாண்டியதும்…அவசரமாக தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைபேசி எடுத்தான்.
“தலைவா! நம்ம அஞ்சலையைப் போலீஸ் புடிச்சிக்கிட்டுப் போவுது.” தகவல் சொன்னான்.
“எந்த போலீஸ் ஸ்டேசன்?”
“சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன்தான். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்!”
“அவன் மோசமான ஆளாய் ஆச்சே. இந்த சாமி படம் வந்ததிலேர்ந்து ஒவ்வொரு போலீஸ்காரனும் நான் போலீஸ் இல்லே. பொறுக்கின்னு சொல்ல ஆசைப்படுறான். கவலையை விடு. அவளை நான் ஜாமீன்ல கொண்டுவர நான் ஏற்பாடு பண்றேன். இத்தினி நாளா கஷ்டம் இல்லாமத்தானே வியாபாரம் நடந்துச்சு. இன்னைக்கு என்ன பிரச்சனை?” எதிர்முனை கேட்டது.
“தெரியலை தலைவா!” இவன் பதில் சொன்னான்.
“என்னன்னு முடிஞ்சா கண்டுபிடிச்சு வா.” அணைந்தது. கண்ணியப்பன் கைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டு அங்கிருந்தபடியே விடுதியை நோட்டம் விட்டான்.
ஆர்த்தி எதுவும் பேசாமல் அறையைவிட்டு கீழே வந்தாள்.
அவள்…தன்னிடம் ஏதோ பேச விருப்பப்படுகிறாள்! உணர்ந்த பேகமும் அவளைத் தொடர்ந்து கீழே வந்தாள்.
இருவரும் மைதானத்திற்கு வந்ததும்…
“நீதான் செய்ஞ்சியா?” ஆர்த்தி கேட்டாள்.
“ம்ம்…”
“கண்டுபிடிச்சா பின் விளைவுகள் உனக்கு ஆபத்தா இருக்குமே யோசனைப் பண்ணிப் பார்த்தியா?”
“அந்த அளவுக்கெல்லாம் ஆபத்து வராது… ஆர்த்தி”.
“அங்கே பார். வார்டன் கோபமா வர்றாங்க. எல்லாரையும் கூப்பிட்டு இங்கே கஞ்சா பழக்கம் உண்டான்னு கேட்டு தாளிக்கப் போறாங்க.”
“இங்கே நடக்கிறதெல்லாம் அவுங்களுக்குத் தெரியாதா?”
“அரசல்புரசலா எல்லா அநியாயமும் தெரியும். கட்டுப்பெட்டியாய் வீட்டுல வளர்ந்த பெண்கள் இங்கே கொஞ்சம் ஜாலியா அனுபவிச்சுட்டுப் போகட்டும்ன்னு ஓரளவுக்குக் கட்டுப் பாட்டோட எதையும் கண்டுக்கிறதில்லே. ஆனா… இந்த கஞ்சா, டேட்டிங் போற விசயம் மட்டும் அவுங்களுக்கு நிச்சம் தெரியாது.”
“இங்கே டேட்டிங்கெல்லாம் போறாங்களா?” பேகம் அரண்டு போய் ஆர்த்தியைப் பார்த்தான்.
“ம்ம்…” அவள் மெல்ல தலையசைத்தாள்.
‘உனக்குத் தெரியுமா?..” விக்னு திரும்பவும் கேட்டான்.
“தெரியும்.” – பதிலை அழுத்தம் திருத்தமாக மெல்ல சொன்னாள்.
“தப்பில்லையா?“
“எனக்கு இது அறவே பிடிக்காத விசயம், தப்பா இருந்தாலும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க. விஞ்ஞான வளர்ச்சி இப்போ பெண்களுக்கு எதுவும் ஆகாதுங்குற பயம் விட்டுப் போச்சு. விளைவு ?… ஒரு காலத்துல ஆண்கள் மட்டுமே அனுபவிச்ச சுகங்களை இப்போ பெண்களும் அனுபவிக்கிறாங்க.”
“இது தப்பில்லையா?”
“பெண் கட்டுப்பாடா இருந்தாலும் அவளுக்குக் கற்புள்ள புருசன் கிடைக்கிறதில்லே. இப்போ நீயும் சரி இல்லே. நானும் சரி இல்லே. சமம்”.
‘ஆர்த்தியா இப்படி பேசுவது?!’ – விக்னுவால் நம்ப முடியவில்லை.
வாயைப் பிளந்து அவளைப் பார்த்தான்.
“வா. மேலே போய் வார்டன் என்ன கத்தறாங்க பார்ப்போம்.” சொல்லி நடந்தாள்.
இவர்கள் கட்டிடத்தைத் தொடவும்…. வார்டன் வந்த வேகத்திலேயே, கோபமாக திரும்பி அறைக்குப் போவதற்கும் சரியாக இருந்தது.
இவர்கள் தங்கள் அறைக்குள் நுழைந்தார்கள்.
மயான அமைதி!
“வார்டன் என்ன சொல்லிட்டுப் போறாங்க?” ஆர்த்தி கேட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
“கஞ்சா இங்கே யார் உபயோகப்படுத்துறாங்க. யார் வாங்கினாங்கன்னு கேட்டு காட்டுக் கத்தல் கத்தினாங்க. அதுக்குள்ளே இங்கே யாரோ ஒருத்தி இங்கே நாங்க யாரும் உபயோகப்படுத்தலை மேடம். அஞ்சலை தொழில் அது போலிருக்கு. எங்களுக்குத் தெரியாது. இன்னைக்குத்தான் தெரியும். சொன்னோம்.” சொன்னாள் நிரஜா.
“அப்புறம்..?”
“ஓ.கே. நீங்க சொல்றது சரி. இனி இது சம்பந்தமா போலீஸ் விசாரணை அது இதுன்னு எந்த பிரச்சனையும் வராம் நான் பார்த்துக்கிறேன். நீங்க பயப்படாம இருங்க. அதைவிட இன்னொரு முக்கியமான விசயம். இதுவரைக்கும் யாராவது அதைத் தொட்டிருந்தால் விட்டுடுங்க. மன்னிக்கிறேன். விடமுடியாதுன்னு தெரிஞ்சா இந்த விடுதிக்குக் கெட்ட பேர் வராம இந்த நிமிசமே காலி பண்ணிடுங்கன்னு கடுமையாய்ச் சொன்னாள். அப்படி யாரும் இங்கே இல்லே மேடம்ன்னு சொன்னதும் நல்லதுன்னு போய்ட்டாங்க”. சொன்ன நிரஜா, “அஞ்சலை விசயம் இன்னைக்கு எப்படி வெளிச்சத்துக்கு வந்துது?” கேட்டு எல்லாரையும் பார்த்தாள்.
“அவளுக்குப் போட்டி வியாபாரி, வேண்டப்படாத ஆள் யாராவது போட்டுக் கொடுத்திருப்பாங்க. நமக்கு அதைப்பத்தி கவலை இல்லே. இனி நாம ஒழுங்கா இருக்கனும். இதுதான் நாம செய்ய வேண்டிய காரியம்.” மீனா அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
மீனாவின் பேச்சு, முற்றுப்புள்ளி..ஆர்த்திக்கும் பேகத்திற்கும் பால் வார்த்தாற் போல் இருந்தது,
இந்த சம்பவத்திற்குப் பிறகு….
அன்றைக்கு விடுதி எந்த வித விடுப்பு களியாட்டமுமில்லாமல் அமைதியாக இருந்தது.
மாணவிகள் துணிகள் துவைப்பது, பாடம் படிப்பது, எழுதுவது என்று ரொம்ப பொறுப்பாய் தங்கள் வேலைகளைச் செய்தார்கள்.
பேகத்திற்கும் இருக்கப் பிடிக்காமல் மாலை வருவதாக ஆர்த்தியிடம் சொல்லிவிட்டு அறைக்குப் புறப்பட்டான்.
அறையில் போய் பர்தா அங்கியைக் கழற்றிவிட்டு நிம்மதியாகப் படுத்து உறங்கினான்.
மாலை நாலு மணிக்கு எழுந்து அப்படியே அருகிலுள்ள பூங்கா பக்கம் உலவச் சென்றான்.
கல்லுாரி மாணவ மாணவிகள் கூட்டம் கூட்டமாய், ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்தார்கள்.
காதலர்களாய் நெருக்கமாய் முகத்தை முகம் வெகு அருகில் வைத்து ரொம்ப மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். தேவை இல்லா வெட்டி சிரிப்பு, மயக்கம், கிறக்கம்.
சில ஜோடிகள் இந்த உலகத்திலேயே இல்லை. ஒருத்தர் மடியில் ஒருத்தர் தலை வைத்து…உலகமே தங்கள் காலடியில் போலிருந்தார். ‘இதில் எத்தனைக் காதல் ஜெயிக்கும் தோற்கும் ?‘ விக்னு மனசுக்குள் கணக்குப் போட்டான்.
‘அம்மா அப்பா எதிர்ப்பென்று எத்தனையோ சிக்கல்களில் ஜெயிப்பது கஷ்டம். அதை அதை தவிர்த்து இப்படி உல்லாசமாக இருப்பவர்கள் வேறு. கல்லுாரி…படிப்பைவிட்டு வெளியே வந்தால் வேலையில்லா திண்டாட்டம், நடைமுறை சிக்கல், வாழ்க்கை சிக்கல் என்று ஏகப்பட்ட பிரச்சனைகள்!’ அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது,
பூங்காவை விட்டு வெளியே வந்தான்.
‘இந்த பேய் பிசாசு பிரச்சனை எப்படி?’ அவனுக்குள் ஓடியது. அறைக்கு நடந்தான். அப்படியே நண்பனைப் பார்க்க ஆசை வந்தது. வழியில் வந்த வாடகைக்காரை நிறுத்தி ஏறினான். உள்ளே பின்னிருக்கையில் மீனா ஒரு அழகான இளைஞன். ஆளுக்கொரு மூலையில் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். மீனா முகத்தில் ரொம்ப வாட்டம். பேகமாய் இல்லாதததால் அவளுக்கு இவனை அடையாளம் தெரியவில்லை.
‘இவளும் டேட்டிங் போகிறாளா? அதனால்தான் அடிக்கடி பிரா மாற்றி தன் இளமையை எடுப்பாக்கிக் காட்ட விழைகிறாளா?’
‘வறுமை படிப்புத் தேவைக்குப் பணம் தேட இப்படி செய்கிறாளா இல்லை உல்லாசத்திற்கா? யாரிவன் எங்கே செல்கிறார்கள்? இவர்களுக்குள் என்ன பிரச்சனை? மீனாவிற்கு முகவாட்டம்!‘
நல்ல வேளையாக இவன் ஓட்டலில் இறங்குவதற்குள்ளாகவே அவள் இடையில் அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் இறங்கினாள்.
விக்னு கொஞ்சம் திருப்தி பட்டவனாய் ஓட்டலில் இறங்கினான்.
அத்தியாயம் – 11
சிவசுந்தரத்துக்கு அஞ்சலைக்கு ஜாமீன் கிடைக்காததில் ஆத்திரம். ஒரு வருடத்திற்கு ஜாமீன்கூட கிடைக்காத அளவிற்கு கஞ்சா கேசில் புக் செய்து அவளை சிறையில் அடைத்த சதீஷ் மேல் அவருக்கு ரொம்ப கோபம். அறையில் அப்படியும் இப்படியும் அலைந்தார்.
கண்ணியப்பன் மெல்ல கதவைத் திறந்து உள்ளே வந்தான்.
“என்ன ரெண்டு நாளா ஆளைக் காணோம்?” உறுமினார்.
“நீங்க சொன்ன வேலைக்காக அலைஞ்சேன் தலைவா!”
“விடுதியில யார் போட்டுக் கொடுத்தது?”
“என் கண்ணுக்குத் தெரிஞ்சு அங்கே யாரும் தெரியலை தலைவா”.
“பின்னே எப்படி அஞ்சலை விசயம் வெளியே தெரிஞ்சுது….?”
“தெரியலை தலைவா”.
“நம் எதிரி எவனாவது போட்டுக் கொடுத்துட்டானா?”
“அதான் சந்தேகம். யாருக்கும் தெரியாம அவனுங்களை நோட்டமிட்டேன் தலைவா. அவனுங்க தன் வேலை உண்டு வித்து உண்டுன்னு இருக்கானுங்க. அஞ்சலை எப்படி மாட்டினாள்ன்னு எனக்கு ஒரே குழப்பம். சரி. அவளையே போய் கேட்போம்ன்னு நேத்திக்கு அவளைப் போய் மத்திய சிறையில பார்த்தேன். எப்படி சிங்கி மாட்டினேன்னு அவளையே கேட்டேன். அதுக்கு அவ ரொம்ப யோசிச்சு…. புள்ளைங்களால ஒன்னும் இதுவரை தொந்தரவு இல்லே. ரொம்ப தங்கம். ஒரு வார காலமா புதுசா ஒரு முக்காடு குட்டி வந்திருக்கா ஒரு வேளை அவளால் பிரச்சனை வந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்றா.” அவன் அஞ்சலையிடம் கேட்டு வந்த விசயத்தைச் சொன்னான்.
“அவ யாருன்னு விசாரிச்சியா?“
“விசாரிச்சேன் எசமான். எவளோ புதுசா வேலைக்குச் சேர்ந்தவளாம். வாடகைக்கு அறை இடம் கிடைக்கிறவரை வார்டன்கிட்ட சொல்லி தன் தோழி அறையில தங்கி இருக்காளாம்.”
“ஓகோ…! எங்கே வேலை செய்யிறாளாம்?“
“அது தெரியலை. காலையில புள்ளைங்களோட கிளம்பிப் போறவ சாயந்தரம்தான் திரும்புறா.”
“அப்படின்னா ரொம்ப வசதி. அவளைப் போட்டுத் தள்ளு.”
“வேணாம் தலைவா. வார்டன்கிட்ட ஒரு போன் பண்ணி படிக்கிற புள்ளைங்களுக்குத்தானே விடுதியில இடம். வேலை செய்யிறவளுக்கு என்ன…? துரத்திவிடுன்னு சொன்னாலே போதும். ஆள் அங்கே இருந்து அம்பேல். நமக்கு ரூட் கிளியர் கொலை இல்லாம, வீணா ஒரு உயிர் கொல்லாமல், வழக்கமா நம்ம வியாபாரத்தை நடத்தலாம் தலைவா.”
“போலீசைப் பத்தி உனக்குத் தெரியாது. அவனுங்களுக்கு ஒரு துரும்பு கெடைச்சா போதும் மரத்தைச் சாய்ச்சு அடி வேரையும் தோண்டி… நோண்டி நொங்கெடுத்துடுவானுங்க. நம்மைப் போட்டுக் கொடுத்த ஆள் இருக்கக்கூடாது. நான் சொல்றதைச் செய். போட்டுத் தள்ளு”.
அதற்கு மேல் கண்ணியப்பனுக்கு அவரை எதிர்த்துப் பேச தைரியம் இல்லை.
“சரி தலைவா!” தலையாட்டிவிட்டு வெளியே வந்தான்.
“காதலி கிடைக்காத ஆத்திரம். சந்தோஷ் சென்னைக்குப் போய் சுபாஷிணியைக் கொலை செய்து விட்டு நல்ல பிள்ளையாக ஊர் ஊராக அலைகிறானா?” சப் இன்ஸ்பெக்டர் சதீஷுக்குள் இப்படியும் யோசனை ஓடியது.
‘அப்படியானால் கணேஷ்?’ தனக்குள்ளேயே கேள்வி எழுப்பினார்.
‘கணேஷ், சந்தோஷ் இவர்களில் யார் கொலையாளி, குற்றவாளி?’ அவருக்குக் குழப்பியது.
‘ஒருவேளை விடுதியில் ஒருத்தி சொன்னது போல சுபாஷிணி சும்மா ஏதாவது ஒரு பெயரைக் கிறுக்கி வைத்திருக்காலாமா?‘ பலமாக சிந்தித்தார்.
பின் மெல்ல எழுந்து வெளியே வந்து… நிர்மல் பர்மாச்சுட்டிக்கல் கம்பெனிக்குப் போன் செய்தார்.
“நான் மானேஜர் பேசறேன்!” எதிர் முனையில் குரல் கேட்டது.
“நான் சென்னையிலேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் பேசறேன்.”
“விசயம் சொல்லுங்க சார்?”
“உங்க கம்பெனியில பட்டுக்கோட்டையிலேர்ந்து சந்தோஷ்ங்குறவர் வேலை செய்யிறாரான்னு தெரியனும்.”
“எந்த சந்தோஷ்?”
“வி.சந்தோஷ்!”
“ஆங்… இங்கேதான் மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ்வா இருக்கார்.“
“அவரைச் சந்திக்கனுமே?”
“ஏதாவது பிரச்சனை… டாக்டரை அடிச்சுட்டாரா?”
“அப்படிப்பட்ட ஆளா?”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லே. ஆனா…ஒரு தடவை அப்படி நடந்திருக்கு. சென்னையில ஒரு டாக்டர்கிட்ட இவர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி ஒரு மணி நேரம் கால் கடுக்க நின்னிருக்கார். அந்த ஆள் பாட்டுக்க இவரை மறந்துட்டு நோயாளிங்களையேப் பார்த்துக்கிட்டு இருந்திருக்கார். ஒரு கட்டத்துக்கு மேல் நம்ப ஆளுக்குப் பொறுக்க முடியலை. தடாலடியாய் உள்ளே நுழைஞ்சி, ‘நீ பாட்டுக்க உன் தொழிலைப் பார்த்துக்கிட்டிருந்தா நான் எப்படி அடுத்த டாக்டருங்களைப் பார்த்து என் தொழிலைப் கவனிக்கிறது…?’ன்னு கேட்டு ஒரே அப்பு அப்பியிருக்கார். அது கொஞ்சம் பிரச்சனையாகி இப்போ ஆள் ரொம்ப நல்ல மாதிரி.”
“அவர்கிட்ட செல் இருக்கா?”
“நம்பரே தர்றேன்!” கொடுத்தார்.
சதீஷ் குறித்துக் கொண்டு அந்த எண்களை அழுத்தினார்.
எடுத்த அவன் எண்களைப் பார்த்து..’எந்த டாக்டர் முண்டம்…?’ என்கிற குழப்பத்துடன்….
“ஹலோ..!” சொன்னான்.
“நான் சதீஷ் சப்-இன்ஸ்பெக்டர்!”
“என்ன சார்?“ அவனுக்குள் உதறல்.
“நான் உடனே உன்னைப் பார்க்கனும்“
“எதுக்கு….?”
“நீ டாக்டரை அடிச்ச விசயமா நான் விசாரிச்சு கேசை முடிக்கிறேன். நீ வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுத்தாப் போதும்.”
”ஓ.கே. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் சார். எந்த போலீஸ் ஸ்டேசன் சார்?”
சொன்னார்.
“எங்கேயிருந்து பேசறே ?” கேட்டார்.
“சென்னையிலேர்ந்துதான் சார்.”
“அப்போ உடனே வா..” வைத்தார்.
அவன் அரை மணி நேரத்தில் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினான்.
ஆள் இருபத்தைந்து வயதில் நல்ல வாட்ட சாட்டமாக இருந்தான்.
“நீங்க வரச்சொன்ன சந்தோஷ் நான் தான் சார்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்தான்.
சதீஷுக்கு ஆள் முகத்தைப் பார்த்ததும் திருப்தி இல்லை. இருந்தாலும் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்? என்கிற போலீஸ் புத்தியில்…
“நான் சுத்தி வளைக்காம விசயத்துக்கு வர்றேன். நீயும் சரியாய் உண்மையைச் சொல்லனும். சுபாஷிணி யார்?” எடுத்த எடுப்பிலேயேக் கேட்டார்.
பெயரைக் கேட்டதுமே அவன் முகம் இருண்டது. தலையைக் குனிந்து தரையைப் பார்த்தான்.
“உன் காதலி அப்படித்தானே?!“
“அ…ஆமாம் சார்!”
“அவள் செத்துப் போன விசயம் தெரியுமா?”
“தெரியும் சார்!“
“எப்படி? “
“ஒரு நாள் அவளை விடுதியில பார்க்க போனேன் சார். வாசல்ல ஒரே கூட்டம். உள்ளே போலீஸ் ஜீப். ஆம்புலன்ஸெல்லாம் நின்னுது. என்னன்னு கேட்டேன். ஒரு பொண்ணு தற்கொலை பண்ணி செத்துப் போச்சு சொன்னாங்க. யார்ன்னு கேட்டேன். பட்டுக்கோட்டையிலேர்ந்து சுபாஷிணின்னு சொன்னாங்க. உடலைப் பார்த்தேன். அழுகை ஆத்திரம் திரும்பிட்டேன்.” கண் கலங்கினான்.
“நீ அவளைக் கொன்னு நல்ல பிள்ளையாய் வந்து நிலமை என்னன்னு பார்த்துப் போக வந்திருக்கே. சரியா?”
“லாஜக்கெல்லாம் இடிக்கிறாப்போல. எப்படி சார் உங்க கற்பனை?…” கண்ணீரை அடக்கிக் கொண்டு பார்த்தான்.
“புரியலை…” அவர் இவனைப் பார்த்தார்.
“நான் விடுதிக்கு வந்து எப்படி…?”
“நீ எதுக்கு சொந்த ஊருக்குப் போய் தங்காம பக்கத்துல உள்ள பட்டுக்கோட்டையில அறை எடுத்து தங்கி இருக்கே ?”
“எனக்கு அங்கே போனா நானும் அவளும் காதலிச்சதெல்லாம் ஞாபகத்துக்கு வருது. அதனால போகப் பிடிக்கலை சார்.”
“தப்பு. ஊர்ல இருந்தா உன் கொலை வெறியை அப்பா அம்மா தடுப்பாங்க. மனசு மாறிடும்ன்னு பயந்து நீ அவளை கொல்லனுங்குறதுக்காகவே திட்டம் போட்டு அறை எடுத்துத் தங்கி இருக்கேன்னு நான் நினைக்கிறேன்.”
“நீங்க நெனைக்கிறபடியெல்லாம் என்னால நடக்க முடியாது சார். நான் சொன்னதுதான் சார் உண்மையான காரணம்.”
“சரி. கணேஷ்ங்குறது யாரு?”
“தெரியலை சார்!“
சதீஷ் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்.
“அவன்தான் என் சுபாஷிணியைக் கொன்னவனா சார்?” இவன் கொஞ்சம் டென்ஷனாக கேட்டான்.
“இருக்கலாம்.“
“அவன் எங்கே சார் இருக்கான்?” சந்தோசத்துக்கு ரத்த நாளங்களெல்லாம் முகத்துக்கு வந்தது.
“தெரியலை!“
“‘ஏன் சார் கொன்னான்?”
“தெரியலை!“
“கர்ப்பமா சார்?”
“இல்லே.”
“கற்பழிப்பு?”
“கெடையாது.”
“பின்னே ஏன் சார் கொன்னான்?”
“அது தெரியத்தான் கொலைக்காரனைத் தேடிக்கிட்டிருக்கேன். நீங்க போகலாம். தேவைப்பட்டா அழைப்பேன். வரனும்.”
“வர்றேன் சார்!” தொய்வுடன் எழுந்து நடந்தான்.
‘சும்மா இருந்தவனைக் கிளப்பி விட்டு விட்டோமோ. இவன் போய் கணேசை தேடிக் கண்டுபிடித்து கொலையாளி ஆவானா?!’ சப் இன்ஸ்பெக்டர் சதீசுக்குள் தோன்றியது.
அத்தியாயம் – 12
விக்னு பேகமாய் மாறி தற்போது அறையை விட்டு கிளம்பும் போதே இன்று இரவு எப்படியாவது அந்த பேய் ரகசியத்தைக் கண்டு பிடித்துவிட வேண்டும் என்கிற முடிவில் புறப்பட்டான்.
இந்த ஆர்வம் இவனுடைய சின்ன வயதின் பாதிப்பு.
எட்டுப் பத்து வயதுக்குக் குறைவாய் இருக்கும் போதே அத்தை தாத்தா பாட்டிகளெல்லாம் இவனை மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு பேய் பிசாசு கதைகளை விலாவாரியாய் சொல்வார்கள். அவர்கள் சொல்லவில்லையென்றாலும் படித்து முடித்து பொழுது சாய்ந்துவிட்டால் அவர்களை வற்புருத்தி சொல்ல வைத்து அவர்கள் மடியில் அமர்ந்து பயமும் ஆர்வமும் கலக்க.. ரொம்ப உன்னிப்பாய்க் கேட்பான்.
“காட்டேரி, முனியெல்லாம் ராத்திரியில கருப்பாய் வேலியைச் சடசடன்னு முறிச்சுப் போகும். பேயும் கருப்பாய்தான் இருக்கும். மனுச் ஆவி மட்டும். வேட்டியை இழுத்துப் போர்த்தி வெள்ளைத் துணியில முக்காடு போட்டாப் போல, பஞ்சுப் பொதி, மேகக் கூட்டம் போல வெள்ளையாய் நடந்து வரும். செத்த உடலை கொண்டு சுடுகாட்டுல பொதைச்சாலும், எரிச்சாலும் அது அந்த இடத்திலேர்ந்து புறப்பட்டு அவிட்டமாய் நடந்து ஊருக்குள் வரும். இந்த அவிட்டம் பேய் பிசாசு நடமாட்டமெல்லாம் நாய்ங்க கண்களுக்குத்தான் நல்லாத் தெரியும். அதைப் பார்த்ததும் ஓ ன்னு ஊளையிட்டு அழும். ஆந்தைங்களும் அலறும்.” சொல்வார்கள்.
“பனந்தோப்புங்கள்ல கொள்ளிவாய்ப்பிசாசுங்க கூட்டமா வரிசையாய் பந்தம் பிடிச்சுக்கிட்டு கால் இல்லாம கை இல்லாம ஏன் உடம்பே இல்லாம நடந்து போவும். எரியற பொணம் குறக்களி புடிச்சு சடார்ன்னு எழுந்து உட்காரும்.. இதுக்காகவே காத்திருக்கும் வெட்டியான் பின் பக்கம் போய் அது பொடரியில பொடரியில மண்வெட்டி மண்வெட்டி காம்பு, இரும்பு உலக்கையால ஓங்கி போடுவான். அது ஈஈஈ.. ங்குற அலறலோட சுருளும். அப்புறம் விறகெல்லாம் அதன் மேல போட்டு எரிப்பான்.”
“பாட்டி எரியற அந்த பொணம் எழுந்து உட்காந்திருக்கும் போது வெட்டியானுக்குப் பயமா இருக்காதா…? ஏன் பின் பக்கம் போய் அடிக்கிறான்?“ இடையில் இவன் கேள்வி கேட்பான்.
“நமக்கு பயமா இருக்கும். ஆனா வெட்டியானுக்கு அந்த பயம் கெடையாது. ஏன்னா அவன் பிதாமகன். பிதான்னா சிவன். அவர் சுடுகாட்டுலதான் இருப்பார். சிவன் உடம்பெல்லாம் சுடுகாட்டு சாம்பலைத்தான் பூ சி இருப்பார். வெட்டியான் சுடுகாட்டுல பொறந்தான். பிணங்களை எரிக்கும். புதைக்கும் தொழில். ஆதனால பயங்கிடையாது. முன்னாடி போய் அடிச்சான்னா அது அவனை அடிச்சிடும். அதனால இவன் பின் பக்கம் போய் அடிப்பான்.”
“திரும்பிப் பார்க்காதா?”
“பார்க்காது.”
அதிலிருந்து இவனுக்கு இரவில் ஒன்னுக்குப் போக வெளியில் செல்ல பயம். ஊரில் யார் செத்து இழவு விழுந்தாலும் இவனுக்குக் குலை நடுக்கம். இழவு வீட்டில் பறை சத்தம் கேட்டால் காதைப் பொத்திக் கொள்வான். இரவு துாக்கம் பிடிக்காது. ஊரின் எங்காவது ஒரு மூலையில் நாய் ஓலமிட்டால் பயந்து நடுங்கிப் போய் அருகில் படுத்திருக்கும் அப்பாவை இறுகக் கட்டிக் கொள்வான். பய நாட்களில் அவனுக்கு அப்பாவோடுதான் படுக்கை.
இப்படி இறுகப்பிடிக்கும் போது அப்பாவுக்குக் கோபம் வரும்.
“பேய் பிசாசு கதைங்களையெல்லாம் சின்னபுள்ளைங்ககிட்ட சொல்லாதீங்க ராத்திரியில பயப்படுவாங்கன்னு சொன்னா அந்த கிழங்களுக்கு அறிவே கெடையாது. அவுங்க சொல்லாம விட்டாலும் நீயும் அவுங்க நச்சரிச்சு கேட்டு இப்போ பயந்து சாகறே. சின்ன புள்ளைங்க பயந்துகிட்டே கதை கேட்கிறதென்பது ஒரு சுவாரஸ்யமான விசயம்தான். அதுக்காக இப்படியா பயப்படுறது?!” சொல்வார்.
அதோடு மட்டுமில்லாமல், “விக்னு ! பேய், பிசாசு, காட்டேரி, முனியெல்லாம் உண்மை இல்லே. உயிர் என்கிற ஆத்மா காத்தோடு காத்தாய்க் கலந்து மேலே போயிடும். இந்த பேய் பிசாசுங்குறது மனிதர்கள் கட்டி பொய். அது அடிச்சு ரத்தம் கக்கி சாகிறதெல்லாம் சும்மா டூப். திடீர் பய வெளிப்பாடுகளில் நடக்கும் நிகழ்ச்சி தைரியம் சொல்வார்.
இவனும் சும்மா விடமாட்டான்.
“அப்போ ராத்திரியில ரத்தம் கக்கி சாகிறதெல்லாம் பொய்யா?” கேட்பான்.
“நிசம்தான். ஆனா உண்மை வேற. அவனுக்கு உன்னை மாதிரி சின்ன புள்ளையாய் இருக்கும் போது கதை கேட்ட தாக்கம். ராத்திரியில போகும்போது பேய் பிசாசு இருக்கு அடிச்சுடும்ங்குற பயத்திலேயே போவான். ஆள் வர்றதைப் பார்த்து கீரியோ எலியோ சர சரன்னு மறையும். இவனுக்குப் பேய்தான்ங்குற பயம் இன்னும் கூடி ரத்தக் கொதிப்பு அதிகமாகி வாயாலேயும் மூக்காலேயும் ரத்தம் வந்து அதே இடத்துல சாவு. பார்க்கிற ஊர் மக்களுக்கு என்ன தெரியும் ? உடனே பேய் அடிச்சுச்சு. பிசாசு கடிச்சுடுச்சுன்னு புரளி”.
“ராத்திரி நேரம் கொள்ளிவாய்ப் பிசாசு பிசாசு பொறப்பட்டுப் போறதெல்லாம் ஓரளவுக்கு நெசம். ஆனா அதுலேயும் உண்மை வேற. ராத்திரி நேரங்கள்ல மரமெல்லாம் குறிப்பாய் பனைமரங்கள் பாஸ்பரஸை வெளி விடும். இந்த பாஸ்பரஸ்ங்குறது காத்துப் பட்டாலே பத்திக்கும். அது தீப்பந்தமாய் போய் அணையும். பார்க்கிற கண்களுக்கு வெறும் தீப்பந்தம் மட்டும் போனா எப்படி இருக்கும் ? பிசாசு பிடிச்சுப் போகுதுன்னு கதை கட்டி விட்டுட்டாங்க. இந்த விசயமெல்லாம் நீ பின்னால படிப்பே.“
“அடுத்து எரியற பொணம் திடீர்ன்னு எழுந்து உட்கார்றது உண்மை. காரணம். எரியும் போது உடல்ல உள்ள தண்ணியெல்லாம் சுண்டிப் போனதும் உடல் ஒரு விறைப்புத் தன்மை வரும். அப்போ பொணம் எழுந்து உட்காரும். வெட்டியான் மண்டையில ஒன்னு போட்டு படுக்க வைச்சு எரிய வைப்பான். இதையும் நீ புத்தகத்துல படிப்பே” சொன்னார்.
அவர் சொன்னது போலவே ஏழாவது எட்டாவது படிக்கும் போது அறிவியல் பாடத்தில் அதையெல்லாம் படித்தான். ஆசிரியர்களும் இந்த பாடங்களை நன்றாக விலக்கிச் சொல்லி, “பயப்படாதீங்கடா !” தைரியம் சொன்னார்கள். அப்போதிருந்து இவனுக்குள்ளிலிருந்து பயம் விலக ஆரம்பித்தது. முற்றிலும் விலக வேறொரு சம்பவம்.
அப்போது இவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அந்த காலக்கட்டம் வீட்டில் விவசாயம்தான் பிரதான தொழில். வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் வேலையெல்லாம் அடுத்தவர் தொந்தரவு இல்லாமல் அப்பாதான் இரவு நேரங்களில் செய்வார்.
ஒரு நாள் ராத்திரி பதினோரு மணி. பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது அப்பா கையில் டார்ச் விளக்குடன் எங்கிருந்தோ வந்து முளைத்து, “என்கூட கிளம்பு !“ அழைத்தார்.
“எங்கே?”
“வயலுக்குத் தண்ணிப் பாய்ச்ச.”
“ராத்திரியில அங்கெல்லாம் புள்ளையை அழைச்சுப் போகாதீங்க பயப்படுவான்.” விழித்துக் கொண்டிருந்த அம்மா சொன்னாள்.
“நீ சும்மா இருடி.” அவளை அதட்டிய அப்பா, “நீ கிளம்பு” சொன்னார்.
வழி இல்லாமல் கிளம்பினான்.
“இருட்டு… குளிரா இருக்கு போர்த்திக்கோ” ஒரு போர்வையும் போர்த்தி அவரும் போர்த்திக் கொண்டு கிளம்பினார்.
“வழியில் பயப்படாதே! தண்ணித் தட்டுப்பாட்டினால் தாண்டவராயனும் எனக்குப் போட்டியாய் தண்ணிப் பாய்ச்ச வர்றான். நான் அவனை ஏமாத்தி வாய்க்கால்ல தண்ணி கொண்டு வர்றேன். நீ மடையில உட்கார்ந்து நம்ம வாய்க்கால் கவணையை வேற எவனாவது வெட்டிப் போகாம பார்த்துக்கனும்.” அழைத்துப் போனார்.
இவனுக்கு வயலை நெருங்க நெருங்கத்தான் பயம் வந்தது. காரணம் சுடுகாட்டு தலைமாட்டில்தான் அந்த வயல். திடலில் பிணம் புதைத்த மேடுகள், எரித்த கரிகள், மனித மண்டை ஓடு, எலும்புகள், பாடை, மரம் மட்டைகள் என்று கிடக்கும். பேய் பிசாசு பற்றி ஓரளவு பயம் தெளிந்தாலும் இறந்தவர்களைப் புதைத்த இடமல்லவா. இவனுக்கு பகலில் அந்த வயலுக்குப் போகவே அச்சம். திடலில் போக மாட்டான். வரப்பில் நடந்து போவான்.
இப்போது அப்பா இருக்கும் தைரியம். அவர் சுடுகாட்டையே பற்றிக் கவலைப்படாமல் அந்த திடல் மேலேயே போனார். இவனும் சென்றான். வயலுக்குச் சென்றதும் அப்பா பேட்டரி விளக்கை இவன் கையில் பிடித்துக் கொள்ளச் செய்து வாய்க்காலில் இறங்கி சுடுகாட்டு திடலிலேயே மண் எடுத்து வாய்க்காலின் குறுக்கே கவணை போட்டு வயலுக்கு மடையையும் வெட்டி விட்டு வரப்பில் மண்வெட்டியைக் கொத்தி வைத்து விட்டு மடையைப் பார்த்தார். தண்ணீரின் ஒட்டம் மெல்ல ஊர்ந்தது.
“விக்னு! தாண்டவராயன் தன் மடையைத் திறந்து விட்டிருக்கான் போலிருக்கு. நான் போய் பார்த்திட்டு உடனே திரும்பறேன். நீ இங்கேயே உட்கார்ந்து நம்ப வாய்க்கால் கவணையை எவனும் வெட்டிப் போகாம பார்த்துக்கோ. பயப்பட வேணாம். சுடுகாட்டுப் பொணம் எழுந்து வராது. அப்படியே எழுந்து வந்தாலும் வரப்புல மண்வெட்டி இருக்கு கையில டார்ச் விளக்கு இருக்கு இரும்பைக் கண்டு எதுவும் நெருங்காது. நான் சட்டுன்னு திரும்பிடுறேன்.” கிளம்பிவிட்டார்.
இருந்த துணையான அப்பாவும் கிளம்பி விட்டார் என்கிற போதுதான் இவன் சுடுகாட்டுப் பொணம் பேய் பிசாசெல்லாம் எழுந்து நம்மைச் சாவடிக்கப் போகுது பயந்தான். இரும்பு இருந்தால் எதுவும் நெருங்காது சொன்னது தெரிய மண்வெட்டியை இறுகப் பிடித்தான். வரட்டும் ! வெட்டியான் போல போட்டுத் தள்ளுவோம் நினைத்தான் கை விளக்கு வெளிச்சம் வேறு அவனுக்குள் இன்னும் கொஞ்சம் துணிச்சலை அளித்தது. அப்பா வரும் வரை அவன் விளக்கை அணைக்கவே இல்லை. எந்த பிணம் எழுந்து வரும் ? என்று சுடுகாட்டு மேடுகள் மீதே டார்ச் அடித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஐந்து கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள மாதாக் கோயில் மணி பன்னிரண்டு ஒன்றும் அடித்தது. இப்போதாவது வருமா ? பார்த்தான். மேடையில் எந்த அசைவும் இல்லை. அப்படியேத்தான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் சலக் புலக்கென்று அப்பாதான் வயல் தண்ணீரில் நடந்து வந்தார்.
அன்றிருந்து இவனுக்குப் பேய் பிசாசு காட்டேரி மூட்டேரியெல்லாம் தூசு. சுடுகாட்டு மண்டையோடுகள் எலும்புத் துண்டுகளெல்லாம் சாதாரணம். மண்டை ஓட்டை எடுத்து வந்து அதை குச்சியில் நட்டு காற்றில் ஆட…. மற்றவர்களை மிரள வைத்திருக்கிறான். அதற்குள் எலியை விட்டு நகர்த்தி இருக்கிறான்.
அந்த துணிச்சல் இன்றைக்கு எப்படியும் விடுதி மொட்டை மாடி மர்மத்தைக் கண்டு பிடித்துவிட வேண்டும். துணிந்தான்.
இரவு பதினொன்றைத் தாண்டிய நேரம் படுக்கையை விட்டு எழாமலேயே எல்லாரும் துாங்கி விட்டார்களா என்று கவனித்தான். ஆர்த்த, மீனா, நிரஜா, மாலாவிடமிருந்து மெலிதாக குறட்டையொலி வந்தது,
அறைக்கதவைத் திறந்து வந்து அடைத்து ஓசை எழுப்பாமல் படி ஏறி மொட்டை மாடிக்குச் சென்றான். மேலே இருட்டாய் இருந்தாலும் மைதானத்தின் விளக்கு வெளிச்சங்கள் மெலிதாக அடித்தது. போய் ஆர்த்தி காட்டிய சுபாஷிணி இறந்து கிடந்த இடத்தைக் கவனித்தான். வெளியே வெளிச்சம் தெரியாத அளவிற்கு தன் கையில் கொண்டு வந்த பென்டார்ச்சால் அடித்துப் பார்த்தான். ஒன்றும் தென்படவிவல்லை. இந்த இடத்தில் இருந்து ஆவி புறப்பட்டால் படி வழியேதான் கீழே செல்ல வேண்டும் கணித்து படியும் அவள் இறந்து கிடந்த இடமும் ஒரு சேர தெரியும்படி ஒரு மூலையில் அமர்ந்தான்.
காற்று சிலு சிலுவென்ற அடித்தது. சிறிது நேரத்தில் துாரத்தில் மணிக்கூண்டு பன்னிரண்டும் அடித்தது. அதே சமயம்…….சுபாஷிணி இறந்து கிடந்த இடத்திலிருந்து பெண்ணொருத்தி கழுத்து நெரிபடும் போது ஏற்படும் சத்தம் கேட்க….இவனுக்குள் குலையே நடுங்கியது. ஐந்து நிமிடம் அந்த சத்தம் தொடர்ந்து கேட்டது. இவன் உடல் தொப்பலாக நனை…சத்தம் வந்த இடத்தையே உற்றுப் பார்த்தான். அங்கிருந்து எந்த ஆவியும் கிளம்பிவில்லை. எதுவும் வெள்ளையாய், காலில்லாமல் புறப்பட்டு வரவில்லை. சத்தம் நின்றும் அடுத்து பேய் புறப்படுமோ கிலியில் இவனாலும் எழுந்து சென்று பார்க்க துணிவில்லை. மெல்ல நடந்து அந்த இடத்தைப் போய் பார்த்தான். இடம் எந்தவித மாற்றமுமில்லாமல் அப்படியே இருந்தது. அங்கு நின்றபடியே கீழே கண்களை சுழல விட்டான். ஒரு கருப்பு உருவம். வார்டன் இருப்பிடம் நோக்கி சென்றது.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |